எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?


வள் பெயர் கோன்னி. வயது பதினைந்து. கூச்சத்துடன் கொக்கரித்தபடியே சட்டெனக் கழுத்தைத் திருப்பிக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டோ, மற்றவர்களின் முகத்தைப் பார்த்தோ தன்னுடையதைச் சரிபார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும் கவனித்த, எல்லாவற்றைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்த, கூடவே தன் முகத்தைப் பார்த்துக்கொள்வதற்கான எந்தக் காரணமும் இப்போது இல்லாத அம்மா இது குறித்து கோன்னியைத் திட்டுவாள். “அப்படி வாயைப் பொளந்துக்கிட்டு உன்னையே பாத்துக்கிறதை நிறுத்து. நீ என்ன பெரிய அழகின்னு நெனைப்போ?” என்பாள்.

புருவத்தை உயர்த்தி அம்மாவின் இந்த வழக்கமான புகார்களைப் புறக்கணித்தபடியே, இப்போது செய்துகொண்டிருப்பதைப் போலவே, அம்மாவை ஊடுருவி நிழலாகத் தெரியும் தன்னுடைய உருவத்தைப் பார்த்துக் கொள்வாள் கோன்னி. தான் அழகானவள் என்பது அவளுக்குத் தெரியும், அது போதும். ஆல்பத்திலிருந்த பழைய புகைப்படங்களை நம்பினால், ஒரு காலத்தில் அம்மாவும் அழகாகத்தான் இருந்திருக்கிறாள் என்றாலும், இப்போது அவளுடைய அழகெல்லாம் போய்விட்டிருந்தது என்பதால்தான் எப்போதும் கோன்னியை குறைசொல்லிக் கொண்டேயிருக்கிறாள்.

“அக்காவப் போல உன்னோட அறையையும் சுத்தமா வெச்சிக்கிட்டா என்னவாம்? தலைமுடிய என்ன பண்ணி வெச்சிருக்க—நாத்தமடிக்குது? ஹேர் ஸ்ப்ரேயா போட்ட? அந்தக் குப்பையெல்லாம் அக்கா பயன்படுத்தவே மாட்டா.”

கோன்னியின் அக்கா ஜூனுக்கு இருபத்துநான்கு வயது, இன்னமும் இவர்களோடுதான் இருக்கிறாள். கோன்னி படிக்கும் பள்ளியில் காரியதரிசியாக வேலை செய்கிறாள். போதாக்குறைக்கு இவள் இருக்கும் அதே கட்டிடத்திலேயே. சாதாரணமாகவும், எப்போதும் மாற்றமேயில்லாமல் ஒரே மாதிரியானவளாகவும், கட்டை குட்டையாகவும் இருந்ததால், அம்மாவும் அம்மாவின் சகோதரிகளும் அவளை எல்லா நேரமும் புகழ்ந்து தள்ளுவதைக் கேட்டாக வேண்டியிருந்தது. ஜூன் அதைச் செய்தாள், ஜூன் இதைச் செய்தாள், பணம் சேமித்தாள், வீட்டைச் சுத்தம் செய்தாள், சமைத்தாள், ஆனால் கோன்னி எதையும் செய்வதில்லை, அவளால் குப்பையான பகல்கனவுகளை மட்டுமே காண முடியும். அப்பா பெரும்பாலான நேரத்தை வேலையில்தான் கழிப்பார். வீட்டுக்கு வந்ததும் இரவு உணவு தயாராக இருக்கவேண்டும், இரவு உணவு சாப்பிடும்போது செய்தித்தாளைப் படிப்பார், இரவு உணவைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப்போய் விடுவார். அவர்கள் யாரோடும் பெரும்பாலும் பேசமாட்டார் என்றாலும், அவரின் குனிந்த தலைக்குமேல், அம்மா கோன்னியை ஏதாவது குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கும்போது, அம்மாவும் செத்துப்போய் தானும் செத்துப்போய் இதெல்லாம் ஒரு முடிவுக்கு வந்துவிடவேண்டும் என்று விரும்புவாள் கோன்னி. “அவ பேசும்போது சிலநேரம் எனக்கு வாந்தியே வந்துடும்,” என்று நண்பர்களிடம் புகார் சொல்லுவாள். மூச்சுவிடாமல் உச்சஸ்தாயியில் ஆச்சரியம் தொனிக்கும் குரலில் அவள் எதையும் உள்ளார்த்தமாகச் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அழுத்தந்திருத்தமாகப் பேசுவது போலவே இருக்கும்.

இதில் ஒரு நல்ல விஷயமும் இருந்தது: தன்னைப் போலவே சாதாரணமாக எப்போதும் மாற்றமில்லாமல், ஒரே மாதிரியாக இருந்த பெண் தோழிகளோடு எல்லா இடத்துக்கும் ஜூன் போனாள் என்பதால் தானும் அதுபோலவே செய்யவேண்டும் என்று கோன்னி சொன்னபோது அம்மா தடையேதும் சொல்லவில்லை. கோன்னியின் நெருங்கிய தோழியின் அப்பா டவுனிலிருந்து மூன்று மைல் தொலைவில் இருந்த திறந்தவெளி விற்பனை வளாகத்துக்கு அவர்களைக் காரில் அழைத்துக்கொண்டு போய்விடுவார். கடைகளை வேடிக்கை பார்க்கவோ, சினிமாவுக்குப் போகவோ எதை வேண்டுமானாலும் அவர்கள் செய்யலாம். இரவு பதினோரு மணிக்குத் திரும்ப அழைத்துக்கொண்டு போவதற்கு வரும்போது என்ன செய்தார்கள் என்று கேட்கவேமாட்டார்.

அரைக்கால் சட்டையும், நடைபாதையை உராயும் தட்டையான செருப்பும், மெலிந்த மணிக்கட்டில் தளர்வான ப்ரேஸ்லெட்டும் போட்டுக்கொண்டு வளாகம் முழுவதும் அவர்கள் திரிந்தது வழக்கமான காட்சியாக இருந்திருக்கவேண்டும்; அவர்கள் ஆர்வத்தைத் தூண்டுவது போலவோ, வேடிக்கையாகவோ இருப்பவர்களைப் பார்த்தால் ஒருவர்மீது ஒருவர் சாய்ந்துகொண்டு குசுகுசுத்தபடி ரகசியமாகச் சிரிப்பார்கள். எல்லோரையும் இன்னொருமுறை திரும்பிப் பார்க்கவைக்கும் நீண்ட ஆழ்ந்த பொன்வண்ணக் கூந்தல் கோன்னிக்கு. ஒரு பாதியைத் தலைக்குமேலே உப்பினாற்போல இழுத்துக் கட்டி, மறுபாதியை முதுகில் தவழவிட்டிருப்பாள். அவள் வீட்டிலிருக்கும்போது ஒரு மாதிரியாகவும், வீட்டிலில்லாதபோது வேறு மாதிரியாகவும் இருக்கும், தலைவழியாக அணிந்துகொள்ளும் மேலாடை ஒன்றை அணிந்திருந்தாள். அவளைப் பற்றிய எல்லாமே இரண்டு விதமாக இருந்தது, வீட்டிற்காக ஒன்று, வீடல்லாத வேறு இடமாக இருந்தால் மற்றொன்று: அவளுடைய நடை ஒன்று குழந்தையினுடையதைப் போலத் துள்ளலுடன் இருக்கும் அல்லது தலைக்குள் பாடலொன்றைக் கேட்டபடி தளர்வாக நடப்பதைப் போல இருக்கும். அவள் வாய் பெரும்பாலான நேரத்தில் வெளுத்து கள்ளப் புன்முறுவலோடு இருக்கும், மாலையில் வெளியே போகும்போது பளீரென்ற மென்சிகப்பு வண்ணத்தில் ஒளிரும்; அவள் சிரிப்பு வீட்டில் இருக்கும்போது இழிவாகவும் இழுத்தாற்போலும் இருக்கும் “ஹாஹாஹா, ரொம்ப வேடிக்கையாதான் இருக்கு”; மற்றெல்லா இடத்திலும் அவள் கையில் அணிந்திருக்கும் கிணிகிணியென்று ஒலிக்கும் தளர்ந்த ப்ரேஸ்லெட்டைப் போல மேல் ஸ்தாயியிலும் வலிமை பொருந்தியும் இருக்கும்.

சில நாட்கள் பொருட்கள் வாங்கவோ சினிமாவுக்கோ போவார்கள்; வேறு சில நாட்கள் பரபரப்பாக இருக்கும் நெடுஞ்சாலையில் வாகனங்களைச் சமாளித்துக் கடந்து, கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் செல்லும் ட்ரைவ்-இன் உணவகத்துக்குப் போவார்கள். அந்த உணவகம் பாட்டிலின் வடிவத்தில், உண்மையான பாட்டிலைவிட கொஞ்சம் தட்டையாகவும் பருத்தும் இருந்தது. அதன் மூடியில் சிரித்தபடியே கையில் ஹாம்பர்கர் ஒன்றைக் கையில் உயர்த்திப் பிடித்திருக்கும் பையன் ஒருவனின் சுழலும் பொம்மை இருந்தது. ஒரு கோடைக்கால இரவில், மூச்சைப் பிடித்துக்கொண்டு தைரியமாகச் சாலையைக் கடக்க ஓடியபோது, காரொன்றின் ஜன்னல் திறந்து உள்ளிருந்த நபர் காருக்குள் ஏறுமாறு சைகை காட்டினார். அது வேறு யாருமில்லை, பள்ளியில் இருந்த அவர்களுக்குப் பிடிக்காத உயர்நிலை வகுப்பு மாணவன் ஒருவன்தான். அவனை சட்டைசெய்யாது கடந்ததில் இருவருக்கும் மகிழ்ச்சி. சாலையில் உலாவிக்கொண்டும், நிறுத்தப்பட்டும் இருந்த கார்களுக்கு நடுவே ஒரு புதிர்ப் பாதையைக் கடப்பதுபோலப் புகுந்துசென்று, பளிச்சென்ற விளக்குகள் எரியும், ஈக்கள் மொய்க்கும் உணவகத்தை அடைந்தார்கள். இருட்டிலிருந்து எழுந்து உயர்ந்து நின்று அவர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்த புகலிடத்தையும் அருளாசியையும் வழங்கும் புனிதக் கட்டிடம் ஒன்றுக்குள் நுழைவதுபோல அவர்களின் முகத்தில் ஒருவித நிறைவும், எதிர்பார்ப்பும் கலந்திருந்தது. எல்லாவற்றையும் நன்மையுள்ளதாக மாற்றும் இசையைக் கேட்டபடியே, மெல்லிய தோள்கள் கிளர்ச்சியில் விறைத்திருக்க, கணுக்கால்களைக் குறுக்கே போட்டபடி மேசையில் உட்கார்ந்திருந்தனர். இசை எந்நேரமும் பின்னணியில் ஒலித்தபடியே இருந்தது, சர்ச்சில் ஒலிப்பது போலவே. அது நம்பிக்கை தரக் கூடியதாகவும் இருந்தது.

அவர்களிடம் பேசுவதற்கு எட்டி என்ற பையன் உள்ளே வந்தான். முக்காலியில் பின்புறமாகப் பார்த்தபடியே அமர்ந்து சடாரென்று அரைவட்டங்களில் சுழன்றான், நிறுத்திவிட்டு மறுபடியும் பின்னாடி திரும்பினான். சிறிது நேரம் கழித்து சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று கோன்னியிடம் கேட்டான். வேண்டும் என்று சொல்லிவிட்டு அவனோடு வெளியே போகும்போது தோழியின் கையில் தட்டி — அந்த நேரத்தில் துணிச்சலும் ஏளனமும் கலந்த பாவனையை முகத்தில் வரவழைத்துக் கொண்டாள் தோழி — சாலைக்கு அந்தப் பக்கம் பதினோரு மணிக்குச் சந்திப்பதாகச் சொன்னாள் கோன்னி. “அவள அப்படியே விட்டுட்டு வர்றதுக்கு கஷ்டமா இருக்கு,” என்று அக்கறையோடு கோன்னி சொன்னபோது, அவள் நீண்ட நேரம் தனியாக இருக்கமாட்டாள் என்று அந்தப் பையன் சொன்னான். அவனுடைய காரை நோக்கிச் செல்லும் வழியில் கோன்னியால் சுற்றிலும் இருந்த கார்களின் முன்புறக் கண்ணாடியின்மீதும், முகங்களின்மீதும் கண்களைப் படரவிடாமல் இருக்கமுடியவில்லை. அவள் முகம் களிப்பில் பளபளத்ததற்கு எட்டியோ, இந்த இடமோ காரணமில்லை. ஒருவேளை இசையாக இருக்கலாம். வெறுமனே உயிரோடு இருக்கும் ஆனந்தத்திற்காகவே தோளை மேலே உயர்த்தி மூச்சை உள்ளிழுத்த கணத்திலேதான், தன்னிடமிருந்து சில அடி தூரத்தில் இருந்த அந்த முகத்தைப் பார்த்தாள். மடங்கும் கூரையைக் கொண்ட பழையதான தங்கநிறக் காரொன்றில் இருந்தான் தாறுமாறான கருமையான முடியுடைய அந்தப் பையன். அவளை உற்று நோக்கிய அவனுடைய இதழ்கள் புன்னகையில் விரிந்தன. கண்களைச் சுருக்கி அவனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை கோன்னியால். அவனும் அவளைப் பார்த்தபடியே இருந்தான். ஒரு விரலை ஆட்டியபடி சிரித்துக்கொண்டே, “உன்னை அடையப் போகிறேன் பேபி,” என்றான். எட்டி கவனிப்பதற்கு முன்னால் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் கோன்னி.

உணவகம் ஒன்றில் ஹாம்பர்கர்கள் சாப்பிட்டபடியும் வேர்த்து வடிந்து கொண்டேயிருந்த மெழுகுக் குவளைகளில் கோக் குடித்தபடியும் சுமார் ஒரு மைல் தூரத்தில் இருந்த பாதையொன்றிலுமென அவனுடன் மூன்று மணிநேரத்தைக் கழித்தாள். பதினோரு மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும்போது திரும்பவும் அவளை விற்பனை வளாகத்தில் கொண்டுபோய் அவன் விட்டபோது, சினிமா தியேட்டர் மட்டுமே திறந்திருந்தது. அவளுடைய தோழி ஒரு பையனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கோன்னி வந்ததும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டனர். “படம் எப்படி இருந்துச்சு?” என்று கேட்டாள் கோன்னி. “உனக்கு இது தெரிஞ்சே ஆகணும்,” என்றாள் அந்தப் பெண். தூக்கத்துடனும் பூரிப்புடனும் அந்தப் பெண்ணுடைய அப்பாவின் காரில் திரும்பிச் சென்றனர். இருட்டாக இருந்த விற்பனை வளாகத்தின் காலியான கார் நிறுத்துமிடத்தையும் மங்கலாகப் பேயைப்போல இருந்த அறிவிப்புப் பலகைகளையும் எதிரில் இருந்த ட்ரைவ்-இன் உணவகத்தில் கார்கள் இன்னமும் இருப்புக் கொள்ளாமல் வட்டமடித்தபடியே இருப்பதையும் திரும்பிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை கோன்னியால். இத்தனை தொலைவில் இசை அவள் காதில் விழவில்லை.

மறுநாள் காலையில், படம் எப்படி இருந்தது என்று ஜூன் கேட்டபோது, “ஏதோ இருந்துச்சு,” என்றாள் கோன்னி.

அது கோடை விடுமுறை, வாரத்தில் பலமுறை கோன்னியும் அந்தப் பெண்ணும் அவ்வப்போது மற்றுமொரு பெண்ணுமாக ஒன்றாக வெளியே போனார்கள். மீதி நேரமெல்லாம் அம்மாவை இடைஞ்சல் செய்துகொண்டும் தான் சந்தித்திருந்த பையன்களைப் பற்றிக் கனவு கண்டுகொண்டும் வீட்டில்தான் கழித்தாள் கோன்னி. ஆனால் எல்லாப் பையன்களும் பின்னால் நகர்ந்துபோய் ஒரே முகம் கொண்டவர்களாகக் கரைந்துபோய், ஒருமுகமாகக் கூட இல்லை, ஒரு எண்ணமாக, ஒரு உணர்வாக, தொடர்ந்து பரபரப்பாக இடித்துக்கொண்டே இருக்கும் இசையுடனும் ஜூலை இரவின் ஈரத்தன்மையுள்ள காற்றுடனும் கலந்த கலவையாக இருந்தனர். கோன்னி செய்வதற்கு புதுப்புது வேலைகளையோ அல்லது “அந்தப் பெட்டிங்கர் பொண்ணு எப்படி இருக்கா?” என்பதுபோலத் திடீரெனக் கேட்டபடியோ அம்மாதான் ஒளிநிறைந்த பகலுக்கு அவளை மீண்டும் இழுத்துக்கொண்டு வந்தாள்.

“ஓ அவளா, அந்த முட்டாளா,” என்று படபடப்புடன் சொல்வாள் கோன்னி. எப்போதும் தனக்கும் அதுபோன்ற பெண்களுக்கும் இடையே தடிமனான தெளிவான எல்லைக்கோடு ஒன்றைப் போட்டுக்கொண்டு விடுவாள். எளிமையும் கனிவும் கொண்ட அம்மாவும் அதை நம்பிவிடுவாள். அம்மா மிகவும் எளிமையானவள், அவளை ஏமாற்றுவது கொஞ்சம் குரூரமானதோ என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வாள் கோன்னி. பழைய ரப்பர் செருப்பு தரையில் உராய வீடுமுழுவதும் நடந்தபடி தொலைபேசியில் ஒரு சகோதரியிடம் இன்னொருத்தியைப் பற்றிப் புகார் சொல்லுவாள் அம்மா. இன்னொருத்தி அழைத்ததும் இருவரும் சேர்ந்துகொண்டு மூன்றாமவளைப் பற்றி புகார் சொல்வார்கள். ஜூனைப் பற்றிப் பேசும்போது அம்மாவின் குரலில் பெருமை தொனிக்கும். கோன்னியைப் பற்றிப் பேசும்போது அப்படி இருக்காது. இதனால் அவளுக்குக் கோன்னியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை. உண்மையில் ஜூனைவிட அழகாக இருந்ததால் அம்மாவுக்குத் தன்னைத்தான் பிடிக்கும் என்று கோன்னி நினைத்துக்கொண்டாள். ஆனால் ஒருவரையொருவர் எரிச்சலூட்டிக் கொள்வதுபோலப் பாசாங்கு செய்துகொண்டு கொஞ்சமும் பிரயோஜனமில்லாத விஷயத்துக்காக மல்லுக்கட்டினார்கள் என்ற உணர்வே நின்றது. இருவரும் ஒன்றாகக் காஃபி அருந்தும்போது நண்பர்களைப்போல இருப்பார்கள். ஆனால் திடீரென ஏதாவது கிளம்பி—தலைக்குமேலே ரீங்கரித்துக்கொண்டே பறக்கும் ஈயைப்போல ஒரு எரிச்சல்—அவர்களுடைய இருவரின் முகமும் வெறுப்பில் இறுகும்.

ஒரு ஞாயிறன்று பதினோரு மணிக்குத்தான் எழுந்தாள் கோன்னி – சர்ச்சுக்குப் போவது பற்றி ஒருத்தரும் கவலைப்படவில்லை — நாள் முழுவதும் வெயிலில் காயப்போடலாம் என்று தலைக்குக் குளித்திருந்தாள். அவளுடைய பெற்றோரும் அக்காவும் சித்தியின் வீட்டுக்குப் பார்பிக்யூ மதிய உணவுக்குப் போவதாக இருந்தது. வரப் பிரியமில்லை என்பதை அம்மாவுக்குத் தெரிவிப்பதற்காக கண்ணை மேலும் கீழுமாக உருட்டினாள் கோன்னி. “அப்படின்னா வீட்லயே தனியாக் கிட,” கடுகடுத்தாள் அம்மா. கொல்லைப்புறத்திலிருந்த தோட்ட நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி மற்றவர்கள் காரில் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் கோன்னி. அமைதியானவராகச் சொட்டைத்தலையுடன் இருந்த அப்பா காரை வெளியே எடுப்பதற்காகக் கூன்போட்டுக்கொண்டு பின்னால் திரும்பியபடி உட்கார்ந்திருந்தார். காரின் முன்கண்ணாடி வழியே தெரிந்த அம்மாவின் முகத்தில் கோபம் கொஞ்சமும் குறையவில்லை. பார்பிக்யூ என்றாலே அலறியபடி அங்குமிங்கும் ஓடும் குழந்தைகளும் ஈக்களும்தான் இருக்கும் என்பது தெரியாதவளைப் போல அலங்கரித்துக் கொண்டு பின் சீட்டில் பாவமாக உட்கார்ந்திருந்தாள் ஜூன்.

கண்ணை மூடிக்கொண்டு வெயிலில் உட்கார்ந்தபடி தன்னைச் சூழ்ந்திருக்கும் கதகதப்பில் உணர்ச்சிவயப்பட்டு, அதைக் காதல், காதலின் தழுவல் என்றெல்லாம் கனவுகண்டாள் கோன்னி. முந்தைய நாள் சந்தித்த பையனையும் எவ்வளவு நல்லவனாக இருந்தான், எவ்வளவு இனிமையாக இருந்தது என்ற நினைவுகளில் ஆழ்ந்தது மனம். ஜூன் நினைப்பதுபோல இல்லாமல் படங்களில் காண்பிப்பது போலவும் பாடல்களில் உத்தரவாதமளிப்பது போலவும் இனிமையாகவும் மென்மையாகவும் இருந்தது என்று நினைத்துக்கொண்டாள். கண்களைத் திறந்தபோது எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை. கொல்லைப்புறம் களைச்செடிகளோடும், எல்லையில் வேலிபோல வரிசையாக நின்ற மரங்களோடும் ஒன்றாகக் கலந்திருந்தது. அதற்குப் பின்னணியாக வானம் நீலமாகவும், சலனமின்றியும் இருந்தது. மூன்று வருடமாக அங்கேயிருந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைவேய்ந்த கால்நடைப் பண்ணை சிறுத்திருந்தது. விழிப்பு வரவேண்டும் என்பது போலத் தலையை உதறிக்கொண்டாள்.

அதிக வெப்பமாக இருந்தது. வீட்டுக்குள் சென்று வானொலியைப் போட்டு அதன் ஒலியில் அமைதியை மூழ்கடிக்க முயன்றாள். வெறுங்காலுடன் படுக்கையின் நுனியில் அமர்ந்தபடி ‘XYZ சண்டே ஜம்போரீ’ என்ற இசை நிகழ்ச்சியை ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலே கேட்டாள். உரக்கவும் வேகமாகவும் ஒலித்த அடுத்ததடுத்த பாடல்களின் கூடவே தானும் பாடினாள். நடுநடுவே பாபி கிங் கத்திக் கூக்குரலிட்டார்: “இங்கே பாருங்க, நெப்போலியன்ஸ்—சன் அண்ட் சார்லியில் இருக்கும் பெண்களே. அடுத்து வரும் பாடலைக் கவனமாகக் கேளுங்க.” கோன்னி தன்னையே கவனமாகப் பார்த்துக்கொண்டாள். இசையிலிருந்து இரகசியமாக வெளிவந்து மெல்லத் துடித்த களிப்பின் பிரகாசத்தில் குளித்தாள். காற்றில்லாத அந்தச் சிறிய அறையில் அது தளர்வாகப் பரவியிருந்தது. உள்ளேயும் வெளியேயும் மூச்சை இழுத்துவிட்டபோது மென்மையாக ஏறி இறங்கிய அவள் மார்போடு இணைந்து துடித்தது.

சிறிது நேரத்தில் வீட்டு வாசலில் காரின் சத்தம் கேட்டது. திடுக்கிட்டபடி எழுந்து உட்கார்ந்தாள். அப்பா இவ்வளவு சீக்கிரம் வரமாட்டாரே. தெருவிலிருந்து உள்ளே வரும் வழியில் இருந்த சரளைக் கற்கள் நொறுங்கும் சத்தம் கேட்டது—வண்டிப்பாதை நீளமானது—ஜன்னலுக்கு ஓடினாள் கோன்னி. இதுவரை பார்த்திராத கார். மேல்கூரையில்லாத அந்தப் பழைய காரின் தங்கநிற வர்ணம் சூரிய ஒளி பட்டு மின்னியது. இதயம் வேகமாகத் துடித்தது, விரல்களால் தலைமுடியை வெடுக்கெனப் பிடித்து ஆராய்ந்தபடி எவ்வளவு கேவலமாக இருக்கிறேனோ என்று யோசித்தபடியே முணுமுணுத்தாள்: “ஏசுவே, ஏசுவே!” வீட்டின் பக்கவாட்டுக் கதவருகே வந்து நின்ற கார் ஏதோ கோன்னிக்கு பழக்கமான அறிவிப்பைச் செய்வதுபோல நான்கு சிறிய ஒலியை எழுப்பியது.

சமையலறைக்குள் நுழைந்து மெல்லக் கதவருகேபோய் திரைக் கதவைத் திறந்து வெறும் காலை நிலத்தில் வைத்தாள். காரினுள் இரண்டு பையன்கள் இருந்தார்கள், ஓட்டுனரை இப்போது அடையாளம் தெரிந்தது: தாறுமாறான பொய்முடி போன்ற கருப்பு நிறத் தலைமுடியோடு இருந்தான். அவளைப் பார்த்துச் சிரித்தான்.

“லேட்டா வந்துட்டனா, இல்லையே?” என்றான்.

“நீ யாருன்னு நினைச்சுக்கிட்டு இருக்கே?” என்றாள் கோன்னி.

“நான்தான் வரேன்னு சொல்லியிருந்தேனே?” என்றான்.

“நீ யாருன்னுகூட எனக்குத் தெரியாது,” என்றாள்.

ஆர்வமோ, மகிழ்ச்சியோ இல்லையென்பதைக் காட்டிக் கொள்வதற்காகக் சிடுசிடுப்புடன் பதில் சொன்னாள், அவன் வேகமாக ஏற்றஇறக்கமில்லாமல் பேசினான். அவனுக்குப் பின்னாலிருந்த பையனை நன்றாகக் கவனித்தாள் கோன்னி. மங்கலான பழுப்பு நிற முடி அவனுடைய நெற்றியில் கற்றையாக விழுந்திருந்தது. கிருதா பயங்கரமான கலவரமூட்டும் தோற்றத்தைக் கொடுத்தது, ஆனால் இதுவரை ஒரு தரம்கூட அவள் பக்கம் திரும்ப முயற்சி செய்யவில்லை. இருவரும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தனர். ஓட்டுனரின் கண்ணாடி உலோகப் பூச்சோடு எல்லாவற்றையும் சிற்றுருவாகப் பிரதிபலிப்பதாக இருந்தது.

“ஒரு சவாரி போகலாம், என்னோட வர்றியா,” என்றான். ஏளனமாகச் சிரித்தபடி கட்டிமுடியாத முடியை எடுத்து தோளில் தவழவிட்டாள் கோன்னி.

“என்னோட காரைப் பிடிக்கவில்லையா? புதுசா வர்ணம் பூசியிருக்கிறேன்,” என்றான். “ஏய்.”

“என்ன?”

“நீ அழகா இருக்க.”

ஒருவிதப் படபடப்புடன் கதவருகில் இருந்த ஈக்களை விரட்டுவது போல பாவனை செய்தாள்.

“நான் சொல்றதை நீ நம்பலையா?” என்று கேட்டான்.

“இங்க பாரு. நீ யாருன்னுகூட எனக்குத் தெரியாது,” என்று வெறுப்புடன் சொன்னாள்.

“ஏய், எல்லி ரேடியோ வைத்திருக்கிறான், என்னோடது வேலை செய்யலை.” நண்பனுடைய கையைத் தூக்கி அவன் கையில் இருந்த சின்ன ட்ரான்சிஸ்டரைக் காண்பித்தான். கோன்னிக்கு இப்போது அந்த இசை கேட்க ஆரம்பித்தது. அவள் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த அதே நிகழ்ச்சி.

“பாபி கிங்?” என்று கேட்டாள்.

“நான் எப்பவும் அவரைத் தான் கேட்பேன். ரொம்ப பெரிய ஆளு,”

“ஒரு விதத்துல பெரிய ஆளுதான்,” என்று வேண்டாவெறுப்பாகச் சொன்னாள்.

“கேளு, அவர் ரொம்ப பெரிய ஆளு. எங்க என்ன செய்யணும்னு அவருக்குத் தெரியும்.”

கோன்னியின் முகம் கொஞ்சமாகச் சிவந்தது. அந்தப் பையன் கறுப்புக் கண்ணாடி போட்டிருந்ததால் எதைப் பார்க்கிறான் என்பது தெரியவில்லை. அவனுக்கு அவளை நிஜமாகவே பிடித்ததா இல்லை, முட்டாளா என்று முடிவுசெய்ய முடியவில்லை. அதனால் கீழே இறங்கியும் வராமல் உள்ளே திரும்பியும் போகாமல் கதவருகே நின்றபடியே காலம் கடத்தினாள். “உன்னோட கார் முழுக்க என்னத்தை வரைஞ்சு வச்சிருக்கே?” என்றாள்.

“உன்னால படிக்க முடியலையா?” எங்கே கீழே விழுந்துவிடுமோ என்று பயப்படுபவனைப் போல கதவைக் கவனமாகத் திறந்தான். அவனும் கவனமாக வெளியே இறங்கி காலைத் திடமாகக் கீழே தரையில் ஊன்றினான்,…  அவனுடைய கண்ணாடியில் இருந்த சின்ன உலோக உலகம், ஜெலட்டின் உறுதிப்படுவதுபோல மெதுவாக நிலைக்கு வந்தது. அதன் நடுவே கோன்னியின் பச்சை சட்டை தெரிந்தது. “இங்க இருந்து ஆரம்பிக்கலாம், இது என்னோட பேரு,” என்றான். ‘ஆர்னால்ட் ஃப்ரெண்ட்’ என்று தார் போன்ற கருப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தது. பக்கத்திலேயே உருண்டையாக சிரிப்பதுபோல வரையப்பட்டிருந்த முகம் கோன்னிக்குப் பூசணிக்காயை நினைவுபடுத்தியது, என்ன, இது கறுப்புக் கண்ணாடி போட்டிருந்தது. “என்னை அறிமுகப்படுத்திக்க விரும்பறேன், நான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட், அதுதான் என்னோட உண்மையான பேரு. நான் உன்னோட நண்பனா இருக்கப் போறேன், தேனே. காருக்குள்ள இருக்கிறது எல்லி ஆஸ்கர், அவன் கொஞ்சம் வெக்கப்படுவான்.” ட்ரான்சிஸ்டரை தோளுக்கு உயர்த்தி வைத்துக்கொண்டான் எல்லி. “இந்த எண்கள் ஒரு வகை ரகசியக் குறியீடு, தேனே,” விளக்கினான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். 33, 19, 17 என்று எண்களை உரக்கப் படித்துவிட்டு என்ன நினைக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள அவளைப் பார்த்துப் புருவத்தை உயர்த்தினான், ஆனால் அவள் பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.

பின்புறத் தடுப்புக்காப்பு நசுங்கி இருந்தது. பளபளக்கும் தங்க நிறப் பின்னணியில் இப்படி எழுதப் பட்டிருந்தது: “ஒரு முட்டாள் பெண் ஓட்டுனரால் செய்யப்பட்டது.” அதைப் பார்த்துக் கோன்னி சிரிக்க வேண்டியதாகி விட்டது. அவளுடைய சிரிப்பு ஆர்னால்ட் ஃப்ரெண்டுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. நிமிர்ந்து அவளைப் பார்த்தான். “அந்தப் பக்கம் இன்னும் நிறைய இருக்கு. வந்து பார்க்கறியா?”

“வேணாம்.”

“ஏனாம்?”

“நா ஏன் பாக்கணும்?”

“கார்ல என்ன எழுதியிருக்குன்னு உனக்குப் பாக்க வேணாமா? சவாரி போக வேணாமா?”

“எனக்குத் தெரியலை.”

“ஏனாம்?”

“எனக்கு வேற வேலை இருக்கு.”

“என்ன வேலை?”

“வேலை.”

அவள் ஏதோ வேடிக்கையாகச் சொன்னது போலச் சிரித்தான். தொடைகளைத் தட்டிக் கொண்டான். தன்னை நிலையாக நிறுத்திக்கொள்ள முயல்வது போலக் காரின் மீது வித்தியாசமாகச் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். ரொம்பவும் உயரமில்லை, அவள் கீழே இறங்கிவந்து அவன் பக்கத்தில் நின்றால் அவளைவிட ஓரிரு அங்குலம்தான் உயரமாக இருப்பான். அவன் உடை அணிந்திருந்தவிதம் அவளுக்குப் பிடித்திருந்தது, அவர்கள் எல்லோருமே அப்படித்தானே உடையணிந்து கொண்டனர். கருப்பு ஷூவுக்குள் திணிக்கப்பட்ட இறுக்கிப் பிடிக்கும் கலர் மங்கிய ஜீன்ஸ், எவ்வளவு ஒல்லியாக இருக்கிறான் என்பதைக் காட்டுவதற்காக வயிற்றை இறுக்கும் பெல்ட், திடகாத்திரமான தசைகள் மேடிட்டிருந்த தோளையும் கைகளையும் எடுத்துக்காட்டும் கொஞ்சம் அழுக்கான வெள்ளை டிஷர்ட். பார்ப்பதற்கு பொருட்களைத் தூக்கிச் சுமக்கும் கடினமான வேலை செய்பவன்போல இருந்தான். அவனுடைய கழுத்துக்கூட தசைப்பற்றோடு முறுக்கேறி இருந்தது. ஏதோ ஒருவகையில் பழக்கப்பட்டதுபோல இருந்தது முகம்: இரண்டொரு நாட்களாக சவரம் செய்துகொள்ளாததால் தாடை முகவாய் கன்னங்களில் கருமை படர்ந்திருந்தது. மூக்கு நீளமாக முனையில் பருந்துபோல வளைந்து அவளை உணவுப்பொருள்போல நுகர்ந்துபார்த்து விழுங்கிவிடுவது போலவும் இருந்தது.

“நீ உண்மையச் சொல்லமாட்டேங்கிற கோன்னி. நீயும் நானும் ஒன்றாகச் சவாரி செய்ய ஒதுக்கப்பட்ட நாள் இதுன்னு உனக்குத் தெரியுந்தானே” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். குலுங்கிச் சிரிப்பதை நிறுத்திவிட்டு நேராக நின்று தன்னை சரிசெய்துகொண்ட பாவனையில் இதெல்லாம் நாடகம் என்பது தெரிந்துவிட்டது.

“எம் பேரு என்னன்னு உனக்கு எப்படித் தெரியும்?” என்று சந்தேகத்தோடு கேட்டாள்.

“கோன்னி தானே.”

“இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.”

“எனக்கு என் கோன்னியைத் தெரியுமே,” என்று விரலை ஆட்டியபடியே சொன்னான். அவனை உணவுவிடுதியில் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது. அவனைத் தாண்டிச் சென்ற கணத்தில் மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டதும் அப்போது அவன் கண்களுக்கு அவள் எப்படித் தெரிந்திருப்பாள் என்பதும் புரிந்தது. அவளை நன்றாகவே நினைவில் வைத்திருந்தான். “உனக்காகத்தான் நானும் எல்லியும் இங்க வந்தோம். எல்லி பின்னாடி உட்காந்துக்குவான். பரவாயில்லையா?” என்றான்.

“எங்க?”

“என்ன எங்க?”

“எங்க போகப் போறோம்?”

அவன் அவளைப் பார்த்தான். கறுப்புக் கண்ணாடியைக் கழட்டியதும் அவன் கண்ணைச் சுற்றியிருந்த தோல் வெளுத்துப் போயிருந்ததைக் கவனித்தாள். நிழலில் இருந்த குழிகளைப் போல இல்லாமல் வெளிச்சத்தில் இருப்பவை போலத் தோன்றின. மனதுக்கினிய வகையில் வெளிச்சத்தைக் கிரகித்துக்கொள்ளும் உடைந்த கண்ணாடிச் சில்லைப்போல இருந்தன கண்கள். எங்கோ, ஏதோ ஒரு இடத்துக்குச் சவாரி போகும் யோசனை புதியதைப்போலத் தோன்றியதால் அவன் புன்னகைத்தான்.

“ஒரே ஒரு சவாரிதான் கோன்னி, என் செல்ல இதயமே,”

“என் பேரு கோன்னிதான்னு நான் சொல்லலியே,” என்றாள்.

“ஆனா, அது எனக்குத் தெரியும். உன் பேரும் தெரியும், உன்னைப் பத்தியும் நிறைய விஷயம் தெரியும்,” என்றான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். இன்னமும் நகராமல் காரின் பக்கவாட்டில் பின்பக்கமாக சாய்ந்து நின்று கொண்டிருந்தான். “உம்மேல எனக்கு ரொம்ப ஆர்வம் ஏற்பட்டதுனால உன்னப் பத்துன எல்லா விஷயத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன். உன் அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் வெளியே போயிருக்காங்கன்னு தெரியும், எங்கே போயிருக்காங்கன்னும் தெரியும், எவ்வளவு நேரம் போயிருப்பாங்கன்னும் தெரியும். நேத்து ராத்திரி நீ யார்கூட வெளியே போனேன்னு தெரியும், பெட்டிதான் உன்னோட நெருங்குன தோழின்னும் தெரியும். சரிதானே?”

இயல்பான ஏற்ற இறக்கத்தோடு அவன் பேசியது பாடலொன்றின் வார்த்தைகளை உச்சரிப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்று உறுதியளிப்பதுபோல இருந்தது அவனுடைய புன்னகை. காருக்குள் இருந்த எல்லி அவர்களைத் திரும்பிக்கூட பார்க்க நினைக்காமல் ட்ரான்சிஸ்டரின் ஒலியைக் கூட்டினான்.

“எல்லி பின்னாடி உக்காந்துக்குவான்,” என்றான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். நண்பன் இருக்கும் திசையை முகவாயைத் திருப்பிக் காட்டி அவன் பேசியது எல்லியைக் கணக்கிலேயே சேர்த்துக்கொள்ளத் தேவையில்லை அவனைப் பற்றி அவள் கவலைப்படவும் வேண்டியதில்லை என்பதுபோல இருந்தது.

“இத்தன விஷயமும் எப்படிக் கண்டுபிடிச்ச?” என்றாள் கோன்னி.

“கேளு: பெட்டி ஷூல்சும் டோனி ஃபிட்ச்சும் ஜிம்மி பெட்டிங்கரும் நான்சி பெட்டிங்கரும்,” என்று மந்திரம் போல உச்சாடனம் செய்தான். “ரேமண்ட் ஸ்டான்லியும், பாப் ஹட்டரும்…”

“இவங்க எல்லாரையும் உனக்குத் தெரியுமா?”

“எல்லாரையும் எனக்குத் தெரியும்.”

“நீ சும்மா சொல்றே, நீ இந்த பகுதியைச் சேர்ந்தவன் இல்லையே.”

“ஆமாம்.”

“ஆனா, இதுக்கு முன்னாடி உன்னைப் பாத்ததே இல்லையே.”

“நீ இதுக்கு முன்னாடி என்னைப் பாத்திருக்கே,” என்றான். வருத்தப்படுபவனைப் போலக் குனிந்து ஷூக்களைப் பார்த்தான். “உனக்குத்தான் ஞாபகம் இல்லே.”

“எனக்கு உன்னை ஞாபகம் இருக்குன்னு நினைக்கிறேன்,” என்றாள் கோன்னி.

“அப்படியா?” இதைக் கேட்டதும் பிரகாசமான முகத்துடன் நிமிர்ந்து பார்த்தான். மகிழ்ந்து போனான். எல்லியின் ரேடியோவிலிருந்து வரும் இசையின் தாளத்துடன் இணைந்து முஷ்டிகளை மெதுவாகத் தட்ட ஆரம்பித்தான். அவனுடைய புன்னகையில் இருந்து பார்வையை விலக்கி காரைப் பார்த்தாள். பளீரென்ற அதன் வண்ணம் அவள் கண்களைக் கூசச் செய்தது. ‘ஆர்னால்ட் ஃப்ரெண்ட்’, என்ற அந்தப் பெயரைப் பார்த்தாள்.

முன்புறத் தடுப்புக்காப்பில் பழக்கப்பட்ட வாசகமொன்று இருந்தது—’பறக்கும் தட்டுக்களைப் பறக்கத் தயார் செய்’. குழந்தைகள் போன வருடம் பயன்படுத்திய வாசகம் அது, இந்த வருடம் யாரும் அதைப் பயன்படுத்துவது இல்லை. அவளுக்கு இன்னமும் தெரியாத ஒன்றைச் அந்தச் சொற்கள் சொல்வதுபோலச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என்ன யோசிக்கறே? ஹாங்,” ஆர்னால்ட் ஃப்ரெண்ட் உரிமையோடு கேட்டான். “கார்ல போகும்போது தலைமுடி காத்துல கலைஞ்சிடும்னு யோசிக்கிறயா என்ன?”

“இல்லை.”

“நான் ஒழுங்கா ஓட்டுவேனான்னு யோசிக்கிறயா?”

“எனக்கு எப்படித் தெரியும்?”

“உன்னைச் சமாளிக்கிறது பெரிய வேலையா இருக்கே. எப்படி இப்படி?” என்றான். “நான் உன்னோட நண்பன்னு தெரியாதா? நீ என் பக்கத்துல நடந்து போகும்போது காத்துல என்னோட கையெழுத்தைப் போட்டதைப் பார்க்கலியா?”

“என்ன கையெழுத்து?”

“என்னோட கையெழுத்து.” அவள் பக்கமாகச் சாய்ந்து காற்றில் X குறியை வரைந்தான். இருவருக்கும் இடையே பத்தடி தூரம் இருந்தது. கைகள் அவன் பக்கத்துக்கே திரும்பிச் சென்ற பிறகும்கூட காற்றில் அந்த X இன்னும் கண்ணுக்குத் தெரிந்தது. கோன்னி திரைக் கதவை மூடிவிட்டு உள்ளேயே அசையாமல் நின்றபடி தன்னுடைய ரேடியோவிலும் அந்தப் பையனுடையதிலும் இருந்து வந்த இசை ஒன்றாகக் கலப்பதைக் கேட்டுக்கொண்டு நின்றாள். ஆர்னால்ட் ஃப்ரெண்டை உற்றுப்பார்த்தாள். அவன் அங்கேயே அசையாமல் தளர்வாக நின்றான், தளர்வாக இருப்பவனைப்போல நடித்தான், ஒரு கையை கதவின் பிடிமீது வைத்தபடி நிலையாக நின்றான். அப்படியே நிற்பதைத் தவிர நகரும் எண்ணமே இல்லாதவனைப் போலவும் இருந்தான். அவனைப் பற்றிய பெரும்பாலான விஷயங்களை அடையாளங்கண்டு கொண்டாள், தொடையையும் புட்டத்தையும் எடுப்பாகக் காட்டிய இறுக்கமான ஜீன்ஸ், எண்ணெய் படிந்த தோல் ஷூ, இறுக்கமான சட்டை, அந்த நம்பத்தகாத நட்புறவு பாராட்டும் புன்னகை, வார்த்தைகளில் சொல்லாமலே எண்ணங்களைக் கடத்துவதற்கு எல்லாப் பையன்களும் பயன்படுத்திய தூங்கிவழியும், கனவுகாண்பதைப் போன்ற சிரிப்பு. கூடவே கொஞ்சம் கேலி கிண்டலுடன் கறாராகவும் சிறிதளவு சோகத்துடனும் பாடுவது போலவே பேசும் அவன் தொனியையும் கவனித்தாள். பின்னணியில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்த இசைக்கு வணக்கம் செலுத்துவதுபோல முஷ்டிகளைத் தட்டியதையும் கவனித்தாள். ஆனால் இவையெல்லாம் ஒன்றோடொன்று ஒத்துப்போகாமல் ஏதோ இடித்தது.

திடீரென்று, “ஏய், உனக்கு என்ன வயசாச்சு?” என்று கேட்டாள்.

அவனுடைய புன்னகை மங்கியது. அப்போதுதான் அவன் சிறுவனில்லை, கொஞ்சம் வயதானவன்—முப்பது அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம் என்பதைக் கவனித்தாள். இந்த விஷயம் புலப்பட்டதும் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.

“என்ன முட்டாள்தனமான கேள்வி. எனக்கும் உன்னோட வயசு தான்னு பார்த்தா தெரியலையா?”

“ஒரு எழவும் இல்லை.”

“வேணும்னா ஒரு ரெண்டு வயசு மூத்தவனா இருக்கலாம். எனக்கு பதினெட்டாச்சு.”

“பதினெட்டா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

அவளுக்கு நம்பிக்கை தருவதற்காகப் புன்னகைத்தபோது அவனுடைய வாயின் ஓரங்களில் கோடுகள் விழுந்தன. அவனுடைய பற்கள் பெரியதாக வெண்மையாக இருந்தன. பெரியதாகச் சிரித்ததால் கண்கள் சின்னக் கீறல்களாக மாறின என்பதையும் கண்ணிமைகள் அடர்த்தியாக இருந்ததையும் தார்போன்ற பொருளால் வரைந்ததுபோல அடர்த்தியாகவும் கருமையாகவும் இருந்ததையும் கவனித்தாள்.

திடீரென அவனுக்கு சங்கடம் ஏற்பட்டுவிட்டதைப் போல இருந்தது. திரும்பி எல்லியைப் பார்த்தான். “அவன் ஒரு கிறுக்கன்,” என்றான். “அவன் ஒரு சரியான முட்டாள், நிஜமாவே வித்தியாசமானவன்.” எல்லி இன்னமும் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தான். என்ன நினைக்கிறான் என்பதைக் கறுப்புக் கண்ணாடி மறைத்துக்கொண்டது. அவன் அணிந்திருந்த பளீரென்ற ஆரஞ்சு வண்ணச் சட்டையின் பட்டன் பாதிவரை திறந்திருந்ததால் தெரிந்த மார்பு வெளுத்த நீலநிறத்தில் இருந்தது, ஆர்னால்ட் ஃப்ரெண்டுடையதுபோல தசைப்பிடிப்போடு இல்லை. ஷர்ட் காலர் மேல்பக்கமாகத் திருப்பிவிடப்பட்டுக் காலரின் முனைகள் கன்னத்தையும் தாண்டி அவற்றைப் பாதுகாப்பதுபோல நெட்டுக்குத்தாக நின்றன. டிரான்சிஸ்டர் ரேடியோவை காதோடு அழுத்திப் பிடித்து பிரமை பிடித்தவனைப்போல வெயிலில் உட்கார்ந்திருந்தான்.

“விநோதமா இருக்கான்,” என்றாள் கோன்னி.

“ஏய், நீ விநோதமா இருக்கேனு சொல்றா. விசித்திரமா இருக்கியாம்!” ஆர்னால்ட் ஃப்ரெண்ட் கூச்சலிட்டான். எல்லியின் கவனத்தைப் பெறுவதற்காகக் காரைப் பலமாகத் தட்டினான். எல்லி முதல்முறையாகத் திரும்பியபோது அவனும் சிறுவனில்லை என்பதைக் கவனித்த கோன்னி திடுக்கிட்டாள்—வெளுத்த முடியற்ற முகம், நரம்புகள் தோலுக்கு அருகிலேயே இருப்பதுபோலச் செக்கச் சிவந்த கன்னம் என நாற்பது வயதுக் குழந்தைபோல இருந்ததைக் கவனித்தாள். இந்தக் காட்சியைப் பார்த்ததும் கோன்னிக்குத் தலைசுற்றுவதுபோல இருந்தது. அந்தக் கணத்தின் அதிர்ச்சியை மாற்றி சரி செய்வதற்காக ஏதாவது நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். எல்லியின் உதடுகள் அவன் காதுக்குள் அலறிக்கொண்டிருந்த இசையோடு சேர்ந்து முணுமுணுத்தபடி சொற்களுக்கு வடிவம் கொடுத்துக்கொண்டிருந்தன.

“நீங்க ரெண்டுபேரும் இங்க இருந்து போறதுதான் நல்லது,” என்று சன்னமான குரலில் சொன்னாள் கோன்னி.

“ஏன்? எதுக்காக?” என்று அலறினான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். “உன்ன ஒரு சவாரி கூட்டிட்டுப் போறதுக்காகத் தான் வந்தோம். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை.” ரேடியோவில் இருந்த ஆளுடைய குரலைப்போல இருந்தது இப்போது. அதே குரல்தான், என்று நினைத்தாள் கோன்னி. “இன்னிக்கு முழுக்க ஞாயித்துக்கிழமைன்னு உனக்குத் தெரியாதா? கண்ணே நீ நேத்து ராத்திரி யார்கூட இருந்தாலும் கவலையில்ல, இன்னிக்கு ஆர்னால்ட் ஃப்ரெண்டுகூட இருக்கே, அத மறந்துடாத! இப்போ நீ உள்ள இருந்து வெளியே வர்றே,” என்றபோது கடைசி வரிமட்டும் வேறு குரலில் ஒலித்தது. வெயிலின் தாக்கத்தால் தட்டையாக மாறியதைப்போல இருந்தது.

“இல்ல, எனக்கு வேல இருக்கு.”

“ஏய்.”

“நீங்க ரெண்டுபேரும் இங்கயிருந்து போயிடுங்க.”

“நீ எங்க கூட வர்ற வரைக்கும் நாங்க போறதாயில்லை.”

“நான் வருவேன்னு நினைக்காத.”

“கோன்னி, என்னோட விளையாடாத. நான் சொல்றேன்—நான் சொல்றேன், என்னோட விளையாடாத,” தலையை உலுக்கிக்கொண்டே சொன்னான். அவநம்பிக்கையோடு சிரித்தான். நிஜமாகவே பொய்முடி அணிந்திருப்பவனைப்போல கறுப்புக் கண்ணாடியைக் கவனமாக உயர்த்தி தலைக்குமேலே வைத்து அதன் தண்டை காதுக்குப் பின்னே சொருகினான். அவனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த கோன்னியினுள்ளே பயமும், நடுக்கமும் அலைபோல எழுந்தது. ஒருகணம் அவன் கண்ணுக்கே தெரியவில்லை. தங்க நிறக் காரில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த மங்கலான உருவம்போலத்தான் இருந்தான். வண்டிப்பாதையில் காரைச் சரியாகத்தான் ஓட்டி வந்திருந்தான் என்றாலும், எங்கிருந்து வந்தான், எந்த இடத்தைச் சேர்ந்தவன் என்பது தெரியவில்லை. அவனும், அவன் கேட்டுக் கொண்டிருந்த இசையும், பழக்கப்பட்டதாக இருந்தாலும் பாதி மட்டுமே உண்மையாக இருந்தது.

“எங்க அப்பா வந்து உன்னைப் பாத்தாருன்னா—”

“அவரெல்லாம் வரமாட்டார். அவர் பார்பக்யூல இருக்காரு.”

“உனக்கெப்படி அது தெரியும்?”

“டில்லி சித்தி வீட்டுல. இப்போ அவங்கெல்லாரும்.. ம்ம்…சுத்தி உக்கார்ந்துக்கிட்டு குடிச்சுட்டு இருக்காங்க,” என்று ஊரின் அந்தப் பக்கத்திலிருக்கும் டில்லி சித்தியின் கொல்லைப்புறத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பவனைப்போலத் தெளிவில்லாமல் கண்ணைச் சிமிட்டியபடியே சொன்னான். பிறகு காட்சி தெளிவாகி விட்டதைப்போல தலையை சுறுசுறுப்புடன் ஆட்டினான். “ஆமாம். சுத்தி உக்காந்திருக்காங்க. உன்னோட அக்கா நீலநிற டிரஸ் போட்டிருக்கால்ல? ஹை ஹீல்ஸ் வேற, பாவப்பட்ட பொம்பளை… உன் பக்கத்துல அவ நெருங்க முடியாது, கண்ணே!” உங்க அம்மா அந்தக் குண்டு பொம்பளைக்கு ஒத்தாசை பண்றாங்க, சோளத்தைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க—சோளத்தை உரிச்சிக்கிட்டு இருக்காங்க.”

“எந்தக் குண்டுப் பொம்பளை?” அலறினாள் கோன்னி.

“எந்தக் குண்டுப் பொம்பளைன்னு எனக்கெப்படித் தெரியும்? இந்த உலகத்துல இருக்கிற எல்லா குண்டுப் பொம்பளைங்களையும் தெரிஞ்சு வெச்சுக்கவா முடியும்!” சிரித்தான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட்.

“ஓ, அது திருமதி. ஹார்ன்ஸ்பை… அவங்களை யாரு கூப்பிட்டது?” என்றாள் கோன்னி. அவளுக்குத் தலைசுற்றியது. மூச்சிரைத்தது.

“அந்தம்மா ரொம்ப குண்டு. எனக்கு குண்டா இருந்தாப் பிடிக்காது. நீ இருக்கிறாப் போல இருந்தாதான் புடிக்கும் தேனே,” அரைக்கண்ணை மூடிக்கொண்டு புன்னகைத்தபடியே சொன்னான். திரைக்கதவுக்கு இருபுறமும் நின்றபடியே கொஞ்ச நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். “இப்போ நீ இதைத்தான் பண்ணப் போறே: இந்தக் கதவை திறந்துக்கிட்டு வெளியே வரப் போறே. நீ முன்னாடி என் பக்கத்துல உக்காரப் போறே. எல்லி பின்னாடி உக்காரப் போறான், எல்லி எக்கேடா வேணாப் போகட்டும், சரியா? இது எல்லியோட டேட் இல்லே. நீ என்னோட டேட். நான்தான் உன்னோட காதலன், தேனே,” மென்மையாகச் சொன்னான்.

“என்னது? உனக்குப் பைத்தியமாப் பிடிச்சிருக்கு—?”

“ஆமா, நான்தான் உன்னோட காதலன். அப்படின்னா என்னன்னு உனக்குத் தெரியாது, ஆனா தெரிஞ்சுக்குவ,” என்றான். “எனக்கு அதுவும் தெரியும். உன்னப் பத்துன எல்லாமே தெரியும். ஆனா பாரு: என்னவிட நல்லவன், மரியாதை தெரிஞ்சவன் உனக்குக் கிடைக்கமாட்டான். நான் சொன்ன சொல்லைக் காப்பாத்துறவன். என்னப் பத்தி முதல்ல சொல்லிடறேன். முதல் தடவை நல்லவனா இருப்பேன், முதல் தடவை மட்டும். என்னைவிட்டுப் போகணும்னு முயற்சி செய்யவோ இல்லை, பாசாங்கோ செய்யத் தேவையில்லாத அளவு உன்னை இறுக்கிப் பிடிச்சுப்பேன். உன்னால அதைச் செய்யமுடியாதுன்னு தெரிஞ்சுக்குவ. அப்புறம் நா உனக்குள்ள ரகசியமா இருக்கிற இடத்துக்குள்ள வந்து புகுந்துப்பேன். அப்புறம் நீ எனக்கு இடம்கொடுத்து என்னை காதலிக்க ஆரம்பிச்சிடுவ.”

“வாயை மூடு. உனக்குக் கிறுக்குத்தான் புடிச்சிருக்கு!” என்றாள் கோன்னி. கதவைவிட்டுப் பின்னால் நகர்ந்தாள். ஏதோ பயங்கரமான விஷயத்தை கேட்கக்கூடாததைக் கேட்டுவிட்டவளைப் போல காதைப் பொத்திக்கொண்டாள். “இப்படி யாருமே பேச மாட்டாங்க, உனக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கு,” என்று முணுமுணுத்தாள். அவள் நெஞ்சைக் காட்டிலும் பெரிதாக வளர்ந்த இதயம் வேகவேகமாகத் துடித்ததில் உடலெங்கும் வியர்வை பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

ஆர்னால்ட் ஃப்ரெண்ட் ஒரு நிமிடம் தயங்கியபின் முன்னால் அடியெடுத்து வைத்து வாசல்படியில் ஏறுவதைப் பார்த்தாள். கீழே விழப் போனான். ஆனால் புத்திசாலிக் குடிகாரனைப் போல மீண்டும் நிலைக்கு வந்துவிட்டான். அவனுடைய பெரிய ஷூவினுள் இருந்த கால் நிலைகொள்ளாமல் தடுமாறியதும், வாயிலில் இருந்த கம்பங்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டான்.

“தேனே, நான் சொல்றதை இன்னும் கேட்டுட்டுதானே இருக்கே?”

“முதல்ல இங்க இருந்து போய்த் தொலை.”

“நல்லா ஒழுங்காப் பேசு கண்ணே. சொல்றதைக் கேளு.”

“நான் போலீசைக் கூப்பிடப் போறேன்—.”

மறுபடியும் தடுமாறினான். வாயின் ஓரத்திலிருந்து வெகுவேகமாக அவள் காதில் விழக்கூடாத வசைச் சொல்லொன்றை உமிழ்ந்தான். “ஏசுவே ” என்று அவன் சொன்னதுகூட வலிந்தே வந்தது. மீண்டும் புன்னகை செய்தான். அந்தப் புன்னகை தோன்றும்போது பார்த்துக் கொண்டுதான் இருந்தாள், முகமூடிக்குள்ளிருந்து சிரிப்பதைப் போல பொருத்தமற்று இருந்தது. மொத்த முகமுமே ஒரு முகமூடியைப் போலத்தான் இருந்தது என்று உறுதியாகத் தோன்றியது. தொண்டை வரையிலும் வெயில்பட்டு பழுப்பேறியிருந்தது. அதற்கப்புறம் முகத்துக்கு மட்டும் மேக்-அப்பைப் போட்டுவிட்டுத் தொண்டையை மறந்துவிட்டது போல இருந்தது.

“தேனே, நான் சொல்றதைக் கேளு. நான் எப்பவும் உண்மையத்தான் சொல்லுவேன். சத்தியம் பண்றேன். உன்னைத் துரத்திக்கிட்டு வீட்டுக்குள்ள வரமாட்டேன்.”

“வராம இருக்கிறதுதான் உனக்கு நல்லது! நீ போகலேன்னா, நீ போகலேன்னா போலீசைக் கூப்பிடுவேன்—”

“தேனே,” அவள் பேசப்பேச கூடவே அவனும் பேசினான். “தேனே, நான் உள்ளே வரப் போறதில்லை. ஆனா நீ இங்கே வரப் போறே. ஏன் தெரியுமா?”

அவளுக்கு மூச்சு வாங்கியது. சமையலறை இதற்கு முன்னர் பார்த்திராத இடம்போல இருந்தது. அவள் உள்ளே ஓடிப் போன ஏதோ ஒரு இடம், ஆனால் அது சரியானதாக இல்லை, அவளுக்கு உதவப் போவதுமில்லை. மூன்று வருடமான பிறகும் சமையலறை ஜன்னலில் திரைச்சீலையே இருந்ததில்லை. தொட்டியில் அவள் தேய்க்கவேண்டிய பாத்திரங்கள் இருந்தன—ஒரு வேளை—மேசையின் மீது கையைத் தடவினால் ஏதேனும் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளக்கூடும்.

“நான் சொல்றதைக் கேக்கறியா? கண்ணு. ஏய்?”

“—போலீசைக் கூப்பிடப் போறேன்—”

“நீ போனைத் தொட்ட அடுத்த நிமிஷம் என் சத்தியத்தை தூக்கிப் போட்டுட்டு உள்ளே வந்துடுவேன். உனக்கு அது வேண்டாம்னு நினைக்கிறேன்.”

முன்னால் ஓடி வந்து கதவைத் தாழிட முயன்றாள். அவள் விரல்கள் நடுங்கின. “எதுக்குத் தாள் போடுற,” என்று அவள் முகத்தைப் பார்த்தபடி மென்மையாகச் சொன்னான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். “இது வெறும் திரைக் கதவு. ஒண்ணுமே இல்லை.” அவனுடைய ஒரு ஷூ அதனுள் கால் இல்லாததுபோல வித்தியாசமான கோணத்தில் இருந்தது. கணுக்காலில் வளைந்து இடது பக்கமாக நீட்டிக்கொண்டு இருந்தது. “இந்தத் திரைக் கதவையோ கண்ணாடி, மரம், இரும்புக் கதவா இருந்தாலும் யார் வேணும்னாலும் உடைச்சிடலாம்னு சொல்றேன், முக்கியமா இந்த ஆர்னால்ட் ஃப்ரெண்ட். இந்த இடம் தீப்பிடிச்சாக்க நீ நேரா என் கைக்குள்ள தானே ஓடி வருவ, என் கைக்குள்ள வந்துட்டா பத்திரமா இருப்ப—நான் தான் உன்னோட காதலன், வம்பு பண்ண வரலேன்னு உனக்குத் தெரியும். நல்லவளா, வெட்கப்படுற பொண்ணா இருந்தா எனக்குப் பரவால்ல, ஆனா வம்பு பண்ணக்கூடாது.” அந்த சொற்களில் ஒரு பகுதியை ஒருவித தாளத்துடன் பாடலைப்போல உச்சரித்தான்—பெண்ணொருத்தி காதலனின் அணைப்புக்குள் ஓடிவந்து இருவரும் இணைவது பற்றிப் போன வருடம் வந்திருந்த பாடலொன்றின் எதிரொலி என்பதைக் கோன்னி அடையாளம் கண்டுகொண்டாள்.

கோன்னி அவனை உற்றுப் பார்த்தபடி லினோலியம் தரையில் வெறுங்காலுடன் நின்றிருந்தாள். “உனக்கு என்ன வேண்டும்?” என்று குசுகுசுத்தாள்.

“நீ வேணும்,” என்றான்.

“என்னது?”

“உன்னைப் பாத்த அந்த ராத்திரியே இவதான் நமக்குன்னு முடிவு பண்ணிட்டேன். இனி வேற யாரையும் நான் பாக்கப் போறதில்லை.”

“இப்போ எங்க அப்பா வந்துடுவாரு. என்னைக் கூட்டிட்டுப் போறதுக்காக. நான் தலைக்கு குளிக்க வேண்டியிருந்தது—”. வறண்ட குரலில் வேகவேகமாக அவனுக்குக் கேட்பதற்காகவெல்லாம் குரலை உயர்த்தாமல் பேசினாள்.

“இல்லை, உங்கப்பா வரப் போறதில்லை. ஆமாம், நீ தலைக்குக் குளிக்கவேண்டியிருந்தது, ஆனா அது எனக்காக. எனக்காக நல்லா பளபளன்னு வச்சிருக்கியே. ரொம்ப நன்றி தங்கமே,” என்றபடி நையாண்டியாக வணக்கம் சொல்வதுபோலக் குனிந்தபோது நிலைகுலைந்தான். கீழே குனிந்து ஷூவைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. அவன் கால் தரையைத் தொடவில்லை என்பதும் உயரமாகத் தெரியவேண்டும் என்பதற்காக ஷூவுக்குள் எதையோ திணித்து வைத்திருந்தான் என்பதும் தெரிந்தது. கோன்னி அவனையும் பின்னால் காரின் அருகில் நின்றபடி அவளுக்கு வலப்புறத்தில் இருந்த வெற்றிடத்தைப் பார்ப்பது போலிருந்த எல்லியையும் வெறித்துப் பார்த்தாள். “டெலிபோனைப் புடுங்கணுமா?” என்று எல்லி காற்றிலிருந்து ஒவ்வொரு சொல்லாகக் கண்டுபிடித்து இழுப்பதுபோன்ற தொனியில் கேட்டான்.

“வாயை மூடு. கொஞ்சநேரம் அதை மூடியே வையி,” என்று சொன்ன ஆர்னால்ட் ஃப்ரெண்டின் முகம் கீழே குனிந்ததினாலேயோ கோன்னி அவனுடைய ஷூவைப் பார்த்துவிட்டாள் என்ற அவமானத்தினாலேயோ சிவந்திருந்தது. “இது உன்னோட விஷயமில்லை.”

“என்ன.. என்ன பண்றே நீ? உனக்கு என்ன வேணும்? போலீஸைக் கூப்பிட்டேன்னா வந்து உன்னைக் கைது பண்ணிடுவாங்க,” என்றாள் கோன்னி.

“நீ போனைத் தொடலைன்னா நான் உள்ளே வரமாட்டேன்னு சத்தியம் செஞ்சிருக்கேன். அந்த சத்தியத்தை நான் காப்பாத்துவேன்,” என்றான். மீண்டும் நேராக நின்று தோளைப் பின்னாடி வலிந்து நகர்த்த முயன்றான். முக்கியமான விஷயத்தைப் பிரகடனப்படுத்தும் சினிமா ஹீரோ போலப் பேசினான். ஆனால் கோன்னிக்குப் பின்னால் நின்றிருந்த வேறு யாரிடமோ பேசுவதுபோல உரத்த குரலில் பேசினான். “எனக்கு சம்மந்தமில்லாத வீட்டுக்குள்ள வர்ற திட்டமே எனக்கில்லை. நீயா என்கிட்டே வரணும், வர்றதுதான் சரி. நான் யாருன்னு உனக்குத் தெரியாதா?”

“உனக்குக் கிறுக்குப் புடிச்சிருக்கு,” என்று குசுகுசுத்தாள். கதவிலிருந்து பின்னால் நகர்ந்தாள். வீட்டுக்குள் வருவதற்கு அவனுக்கு அனுமதி அளித்தது போல ஆகிவிடுமென்பதால் வீட்டின் வேறு பகுதிக்குப் போக விரும்பவில்லை. “நீ என்ன… உனக்கு கிறுக்கு, நீ…”

“ஆங்? என்ன சொல்றே கண்ணு?”

சமையலறை முழுவதையும் துழாவியது அவள் கண்கள். அது என்ன அறை என்றே அவளுக்குப் புரியவில்லை.

‘இதுதான் நடக்கணும் கண்ணு: நீ வெளியிலே வர்றே, நாம ஒண்ணா கார்ல ஜம்முனு சவாரி போறோம். ஆனா நீ வெளியிலே வரலைன்னா உங்க வீட்டு ஆளுங்க வர்ற வரைக்கும் இங்கேயே காத்திருக்கப் போறோம், அப்புறம் அவங்களுக்கு நம்ம விஷயம் தெரியப்போகுது.”

“அந்த டெலிபோனைப் புடுங்கணுமா?” கேட்டான் எல்லி. ரேடியோவைத் தள்ளிப்பிடித்திருந்ததால் காதில்பட்ட காற்றைத் தாங்க முடியாதவனைப் போல முகம் அஷ்டகோணலாக இருந்தது.

“உன்னை வாயை மூடச் சொன்னேன் எல்லி,” என்றான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். ‘உனக்கு காது செவிடுன்னா ஹியரிங் எய்ட் வாங்கி மாட்டிக்கோ, சரியா? உன்ன நீ கவனிச்சுக்கோ. இந்தச் சின்னப் பொண்ணு என்கிட்டே நல்லா நடந்துக்கப் போறா, அவளால எனக்கு எந்தத் தொல்லையும் இல்ல. அதுனால நீ உன் வேலையப் பாரு. இது உன்னோட டேட் இல்லை. என்னச் சுத்திச்சுத்தி வராதே, என் பங்குக்கு வராதே, என்ன நசுக்காதே, என்னையே பின் தொடராதே,” என்று வேகவேகமாக அர்த்தமேயில்லாத தொனியில் பேசினான். அவன் கற்றுக்கொண்ட எல்லாச் சொற்றொடர்களையும் ஒவ்வொன்றாக சொல்லிப் பார்ப்பவனைப்போல, ஆனால் எது இப்போது புழக்கத்தில் இருக்கிறது என்று தெரியாதவனைப்போல கண்ணை மூடியபடியே அடுத்தடுத்துப் புதிய சொற்றொடர்களைத் தேடிப்பிடித்துப் பயன்படுத்த ஆரம்பித்தான். “என்னோட வேலிக்கடியில பூதாதே, என்னோட அணில் பொந்துக்குள்ளே நுழையாதே, என்னோட கோந்தை முகராதே, என்னோட ஐஸ்க்ரீமை நக்காதே, உன்னோட அழுக்கு விரல்களை உன்கிட்டயே வெச்சுக்கோ!”

கண்களைக் கையால் மறைத்துக்கொண்டு சமையலறை மேசைமீது சாய்ந்து நின்ற கோன்னியை உற்றுப்பார்த்தான். “அவனைக் கண்டுக்காதே, கண்ணு. அவன் கேவலமானவன். அவன் ஒரு முட்டாள். சரியா? நான்தான் உனக்கேத்த பையன். நான் சொன்னா மாதிரியே நல்ல பொண்ணா வெளியில என்கிட்டே வந்துட்டேனா வேற யாருக்கும் ஒரு தொல்லையும் வராது. அதாவது, உன் வழுக்கைத்தலை அப்பனுக்கும் உன்னோட அம்மாவுக்கும் ஹை ஹீல்ஸ் போட்ட உன் அக்காவுக்கும். சொல்றதைக் கேளு: அவங்கள எதுக்கு இதுல இழுக்கறே?”

“என்னை விட்டுடு,” குசுகுசுத்தாள் கோன்னி.

“ஏய், இந்தத் தெருக்கோடியில இருக்கற கிழவியை உனக்குத் தெரியும்தானே. கோழி மத்த விஷயமெல்லாம் வெச்சிருப்பாளே, உனக்கு அவளைத் தெரியும்தானே?”

“அவங்க செத்துட்டாங்க!”

“செத்துட்டாங்களா? என்னது? உனக்கு அவங்களைத் தெரியுமா?” கேட்டான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட்.

“அவங்க செத்துட்டாங்க—”

“உனக்கு அவங்களைப் பிடிக்காதா?”

“அவங்க செத்துட்டாங்க, அவங்க—அவங்க இப்போ இங்க இல்ல.”

“ஆனா உனக்கு அவங்களைப் பிடிக்குமில்ல. அதாவது அவங்ககிட்ட பிடிக்காதது எதாவது இருக்கா. அவங்க மேல வன்மமோ வெறுப்போ இருக்கா?” தான் முரட்டுத்தனமாக பேசிவிட்டதைப் புரிந்துகொண்டவனைப் போல குரலைத் தாழ்த்திக்கொண்டான். தலையின் உச்சியில் தொற்றியிருந்த கறுப்புக் கண்ணாடி இன்னும் அங்கேயேதான் இருக்கிறதாவென்று உறுதிப்படுத்தத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். “சரி, நீ இப்போ நல்ல பொண்ணா இரு.”

“நீ என்ன செய்யப் போறே?”

“சும்மா ரெண்டு இல்லாட்டி மூணே விஷயம்தான்,” என்றான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். “ஆனா ரொம்ப நேரம் எடுக்காதுன்னு சத்தியம் செஞ்சு தரேன். நெருக்கமா இருக்கறவங்களைப் பிடிச்சுப்போறா மாதிரியே என்னையும் பிடிச்சுப் போகும். நிச்சயமா. இங்க உனக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு. வெளியில வா. உன்னோட சேர்ந்தவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரவேண்டாம் தானே?”

அவள் திரும்பியபோது நாற்காலியிலோ வேறு ஏதோ ஒன்றிலோ இடித்து காலில் அடிபட்டுக் கொண்டாள். இருந்தாலும் பின்னால் இருந்த அறைக்கு ஓடிச் சென்று தொலைபேசியைக் கையில் எடுத்தாள். அவள் காதில் ஏதோ கர்ஜிப்பதுபோல இருந்தது. சின்னஞ்சிறிய கர்ஜனை. அவள் பயத்தால் பீடிக்கப்பட்டதால் அதைக் கேட்பதைத் தவிர வேறு எதையும் செய்யமுடியவில்லை. தொலைபேசி ஈரமாக கனமாக இருந்தது. அவளுடைய விரல்கள் எண்களைச் சுழற்றுவதற்காக அதைத் தடவ முயன்றாலும் விரல்கள் அதைத் தொடுவதற்குக்கூட பலமற்று இருந்தன. தொலைபேசிக்குள் அலறத் துவங்கினாள், அந்தக் கர்ஜனைக்குள்ளும். வாய்விட்டுக் கதறினாள், அம்மாவைத் தேடி அழுதாள். கொஞ்சமும் இரக்கமின்றி மீண்டும் மீண்டும் ஆர்னால்ட் ஃப்ரெண்ட் அவளைக் குத்துவது போல மூச்சு நுரையீரலினுள் முன்னும் பின்னும் வெட்டியிழுப்பதைப் போல உணர்ந்தாள். அவளை சுற்றிலும் சத்தமான சோகமான அழுகையொன்று எழுவதுபோலவும் வீட்டுக்குள் சிக்கியிருப்பதைப் போலவே அதனுள்ளும் தான் சிக்கியிருப்பது போலத் தோன்றியது.

சிறிது நேரம் கழித்து அவளால் மறுபடியும் கேட்க முடிந்தது. ஈரமான முதுகை சுவற்றில் சாய்த்தபடி தரையில் உட்கார்ந்திருந்தாள். ஆர்னால்ட் ஃப்ரெண்ட் கதவருகில் இருந்து பேசினான். “நல்ல பொண்ணு, போனைத் திரும்ப வெச்சிடு.”

தொலைபேசியைக் காலால் உதைத்துத் தள்ளினாள்.

“இல்ல கண்ணு. அதக் கையில எடு. திரும்பவும் அதே எடத்துல வையி.”

அதைக் கையில் எடுத்துத் திரும்பவும் அதே இடத்தில் வைத்தாள். இயங்கொலி நின்றது.

“நல்ல பொண்ணு. இப்போ நீ வெளியில வா.”

ஏற்கனவே பயத்தினால் காலியாக இருப்பதைப் போல உணர்ந்திருந்தாள், இப்போது வெறுமையாக மட்டும்தான் இருந்தது. அந்த அலறல் அவளுக்குள் இருந்ததை வெடித்துச் சிதறச் செய்திருந்தது. ஒரு காலை மற்றொன்றுக்குக் கீழே மடித்து வைத்து உட்கார்ந்திருந்தாள். மூளையின் ஆழத்தில், ஒளிப் புள்ளியைப் போன்ற ஒன்று போய்க்கொண்டே இருப்பது போலவும், அது அவளை ஆசுவாசப்பட விடாமல் வைத்திருப்பது போலவும் இருந்தது. இனி அம்மாவைப் பார்க்கப்போவது இல்லை என்று நினைத்துக்கொண்டாள். இனி என்னுடைய படுக்கையில் படுத்துத் தூங்கப்போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள். அவளுடைய பச்சை நிற மேலாடை தொப்பலாக நனைந்திருந்தது.

நாடகக் குரல்போன்ற உரத்த அன்பான குரலில் ஆர்னால்ட் ஃப்ரெண்ட் பேசினான்: “நீ எந்த இடத்திலிருந்து வந்தேன்னு நினைச்சுக்கிட்டு இருக்கிறயோ, அது இனி இல்லை. நீ போகணும்னு நினைச்ச இடம் ரத்தாகிடுச்சு. இப்போ நீ இருக்கிற இந்த இடம்—உன் அப்பாவோட வீடு—வெறும் அட்டைப்பெட்டி தான். இதை எப்ப வேணா நான் கீழே தட்டிவிட முடியும். உனக்கு அது தெரியும். எப்பவுமே தெரிஞ்சுதான் இருந்துது. சொல்றது கேக்குதா?”

நான் யோசிக்கவேண்டும் என்று நினைத்தாள். என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரிய வேண்டும்.

“ஊருக்கு வெளியில இருக்கற சூரிய ஒளியும் நல்ல வாசமும் வீசுற ஒரு அழகான வயலுக்குப் போவோம்,” என்றான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். “என் கையில உன்னை இறுகக் கட்டிப் பிடிச்சிருப்பேன். ஏன்னா என்னை விட்டுட்டுப் போகணும்னு உனக்குத் தோணவே கூடாது. காதல்னா எப்படி இருக்கும் என்ன செய்யும்னு உனக்குக் காட்டுவேன். இந்த வீடு நாசமாப் போகட்டும்! பார்க்கத்தான் கல்லு மாதிரி இருக்கு,” என்றான். திரையின் மீது நகத்தால் அவன் கீறியபோது எழுந்த ஒலி ஒரு நாளைக்கு முன்னாலென்றால் கோன்னியை வெடவெடக்க வைத்திருக்கும், ஆனால் இப்போது அப்படியாகவில்லை. “இப்போ கையை நெஞ்சுமேல வையி, கண்ணு. உணர முடியுதா? அது திடமாத் தோணும், இருந்தாலும், நமக்குதான் அதைப் பத்தி இன்னும் நல்லாத் தெரியுமே. என்கிட்டே நல்லா இரு. உன்னால முடிஞ்சா அளவு இனிமையா இரு. உன்ன மாதிரி ஒரு பொண்ணுக்கு அழகாவும் இனிமையாவும், இருக்கிறதையும், விட்டுக்கொடுத்துப் போறதையும் தவிர வேற என்ன இருக்கு? அவ வீட்டு ஆளுங்க வர்றதுக்குள்ள திரும்பிப் போகவும் செய்துடலாமே?”

இதயம் அதிரடியாகத் துடிப்பதை அவளால் உணர முடிந்தது. அதைக் கையில் இறுகப் பிடித்திருப்பதைப் போல உணர்ந்தாள். வாழ்க்கையில் முதல் முறையாக, அது அவளுடையது இல்லையென்றும், அவளுக்குச் சொந்தமில்லையென்றும், அவளுடையதல்லாத உடம்புக்குள் துடித்துக்கொண்டும், உயிர்ப்போடும் இருக்கும் ஏதோவொன்று என்றும் தோன்றியது.

“அவங்களுக்கு எதுவும் நடக்கக் கூடாதுங்கறது தான் உன் விருப்பம்னு நினைக்கிறேன்,” என்று சொல்லிக்கொண்டே போனான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். “இப்போ மேலே எழுந்துக்கோ தேனே. நீயே எழுந்து நில்லு.”

அவள் எழுந்து நின்றாள்.

“இப்போ இந்தப் பக்கம் திரும்பு. சரி. இப்போ நேரா என்கிட்டே வா. எல்லி அதைத் தூர வீசு. நான் சொல்லலை? நீ ஒரு முட்டாள், வீணாப்போன முழு முட்டாள்,” என்றான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். அவனுடைய வார்த்தைகள் கோபமாக இல்லாமல் மந்திர உச்சாடனம்போல இருந்தது. அந்த மந்திர உச்சாடனம் இரக்கத்துடன் இருந்தது. “இப்போ சமையலறையில இருந்து நேரா என்கிட்டே வந்திடு, கண்ணு. இப்போ அவங்கெல்லாம் கொல்லைப்புறத்துல மூட்டியிருக்கிற நெருப்பில சோளமும் ஹாட் டாகும் வாட்டி சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. இங்க என்ன நடக்குதுன்னு இப்ப இல்லே, எப்பவுமே ஒண்ணுமே தெரிஞ்சதில்லை. நீ அவங்க எல்லோரையும்விட ரொம்ப மேலானவ. அவங்கள்ல ஒருத்தர்கூட உனக்காக இதை செஞ்சிருக்க மாட்டாங்க.”

காலுக்கு அடியில் இருந்த லினோலியம் தரையை கோன்னியால் உணர முடிந்தது. அது குளிர்ச்சியாக இருந்தது. கண்ணுக்குள் நுழைந்த முடியைக் கையால் தள்ளிவிட்டாள். கம்பத்திலிருந்து கைகளை விடுவித்து அவளை வரவேற்பதுபோல திறந்துவைத்தான் ஆர்னால்ட் ஃப்ரெண்ட். இது ஒரு சங்கடமான தழுவல்தான் என்பதையும், கொஞ்சம் பாசாங்கும் கலந்திருக்கிறது என்பதையும் அவளுக்குத் தெரிவிப்பதற்காகவும், அவள் தன்னுணர்வுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், முழங்கைகள் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டபடியும் மணிக்கட்டுகள் தளர்ந்தும் இருப்பதுபோலக் கைகளை வைத்துக்கொண்டான்.

கையை நீட்டித் திரையின்மீது வைத்தாள். வேறெதோ கதவருகே பத்திரமாக இருந்தபடியே, இந்தக் கதவை மெல்லத் தள்ளித் திறப்பதையும், இந்த உடம்பும், நீண்ட கூந்தலையுடைய இந்தத் தலையும், ஆர்னால்ட் ஃப்ரெண்ட் காத்துக்கொண்டிருந்த சூரிய வெளிச்சம் நிறைந்த இடத்துக்குள் நகர்வதையும் பார்த்தாள்.

“என் செல்ல சின்ன நீலக்கண் பெண்ணே,” பெருமூச்சுவிட்டபடியே பாடுவதுபோன்ற பாவனையில் அவன் சொன்னதுக்கும் அவளுடைய பழுப்பு நிறக் கண்களுக்கும் தொடர்பேயில்லை. அவனுக்குப் பின்னாலும் அவனைச் சுற்றியும் நீண்டு பரந்திருந்த சூரியவொளியில் நனைந்த நிலத்தால் கட்டுண்டாள். இதுவரை இவ்வளவு பெரிய நிலப்பரப்பைக் கோன்னி பார்த்ததே இல்லை. அவளால் அதை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை என்றாலும், அதற்குள் போகிறோம் என்பது மட்டும் தெரிந்தது.


ஆங்கிலத்தில்: ஜாய்ஸ் கேரல் ஓட்ஸ்

தமிழில்: கார்குழலி

 

ஆசிரியர் குறிப்பு:

ஜாய்ஸ் கேரல் ஓட்ஸ் அமெரிக்க ஐக்கிய நாடுகளைச் சேர்ந்த முக்கியமான எழுத்தாளர்; கவிதை, நாடகம், சிறுகதை, நாவல், விமர்சனம் என எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து பல தேசிய விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றவர். ப்ரின்ஸ்ட்ன் மற்றும் கலிஃபோர்னியாவின் பெர்கலி பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவருடைய நாவல்களும் சிறுகதைத் தொகுப்புகளும் புலிட்சர் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட இறுதிப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. 

 ‘எங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?’ சிறுகதையை 1966-ஆம் ஆண்டில் எழுதினார். அரிசோனா மாகாணத்தில் சார்ல்ஸ் க்ஷ்மிட்ஸ் என்பவனால் நிகழ்த்தப்பட்ட மூன்று கொலைகளைத் தொடர்ந்து எழுதப்பட்ட இந்தக் கதையை பாடகர் பாப் டைலனுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். பல்வேறு சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றிருப்பதோடு முழுநீளப் படமாகவும்  குறும்படமாகவும் வெளிவந்திருக்கிறது. நவீன இளைஞர்களின் பாலியல் நாட்டங்களையும் அவர்களின் வாழ்வியல், இசை மற்றும் கலை சார்ந்த விருப்பங்கள் இவற்றையெல்லாம் தொட்டுச் செல்கிறது இந்தக் கதை. இன்று வரை பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு உள்ளாக்கப்படும் சிறுகதைகளில் ஒன்றாக இருக்கிறது. உள்ளர்த்தங்கள் பொதிந்த உருவகங்கள் நிறைந்த கதை என்று ஒரு சாராரும் நடைமுறை வாழ்வை உள்ளது உள்ளபடி சொல்கிறது என்று வேறு சிலரும் சொல்கிறார்கள்.

 

    • கார்குழலி தற்போது மென்பொருள் நிறுவனமொன்றில் கணினிவழிக் கற்றலுக்கான துறையில் பணியாற்றுகிறார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘சந்தமாமாஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI) துளிர் (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்

 

 

Previous articleமிருகம்
Next articleவைரஸ்
Avatar
கார்குழலி தற்போது மென்பொருள் நிறுவனமொன்றில் கணினிவழிக் கற்றலுக்கான துறையில் பணியாற்றுகிறார். தமிழ், ஆங்கிலம் என இரு மொழியிலும் எழுதும் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். ‘சந்தமாமா‘ ஆங்கில இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்‘ நாளிதழில் இளம் பருவத்தினருக்காகத் தமிழக வரலாறு பற்றிய சுவையான குறிப்புகளை வாரத் தொடராக இரண்டரை வருடங்களுக்கும் மேலாக எழுதியிருக்கிறார். துலிகா பப்ளிஷர்ஸ், பிரதம் புக்ஸ் போன்ற பதிப்பகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளராக 45-க்கும் அதிகமான புத்தகங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழக சமூக நலத்துறை, உலக சுகாதார நிறுவனம் (WHO), சேவ் தி சில்ட்ரன் (Save the Children), பன்னாட்டு எயிட்ஸ் தடுப்புமருந்து முன்னெடுப்பு (IAVI) துளிர் (Tulir CPHCSA) போன்ற நிறுவனங்களுடன் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்

2 COMMENTS

  1. 1966 வெளிவந்த கதை என்பது வியப்பளித்தது. இந்த பிரச்சனையில், நம் சமூகம் அந்த இடத்திலிருந்து பெரிதாக வளரவில்லை என்பது வேதனை.
    இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தமைக்கு நன்றி கார்குழலி. வாழ்த்துக்களும்.
    மூலக்கதையின் சாரம் குறையாமல் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.