வைரஸ்


ப்ப்பா…”

“என்னப்பா”

“கதெ சொல்லுப்பா…” என்றபடி நெருங்கி வந்து அமர்ந்தான், கவின்.

”உனக்கென்ன வைரசு தெரியும்?”

“கொர்ன்னா”

“கொரோனா விட மோசமான ஒரு வைரசு இருந்துச்சு. அத பத்தின கதெ சொல்லட்டா?”

“ம்ம்… சொல்லுப்பா” ஆர்வமாக தலையை ஆட்டினான்.

”ஊரடங்கு போட்டாலும் அடங்காம ஆட்டி வைக்குற கொரோனாவ விட மோசமான வைரஸ் அது. கொரோனாவுக்கு முன்னாலயே ஊரடங்கு போட வைச்சிருக்கு. மனுசங்கள பிரிச்சு வைச்சிருக்கு. இந்த மண்ணுல அதிக உசுருகள பலி வாங்கியிருக்கு”

“ஓ” என கவின் ஆச்சரியத்தோடு பார்த்தான்.

“ஒருகாலத்துல கடலெல்லா சிவப்பா மாறியிடிச்சு. ஆத்துல போன ரத்தமெல்லா சேர்ந்து நிறம் மாறிடுச்சு. வானம் தெரியாதளவு புகை மூட்டம். காத்துல எல்லா கெட்ட வாடை வீசுச்சு. ஊரெல்லா ஒரே அழுகை ஓலம். வைரசு தாக்குன ஆளுகளுக்கு எல்லா கொம்பு முளைச்சு சுத்துனாங்க. பாக்குறவங்க எல்லாத்தையும் முட்டி தள்ளுனாங்க. மக்கள் வெளிய வர பயந்து வீட்டுக்குள்ளயே முடங்கி இருந்தாங்க”

“இன்னிக்கு கொரோனா கூட வாழப் பழகிக்கங்கனு சொல்லுற மாதிரி, அன்னிக்கே யாரோ சொல்லியிருப்பாங்க போல. மனுசங்களும் அதோட வாழ பழகி இருந்தாங்க. ஒருநா, ரெண்டுநாயில்ல, ரெண்டாயிரம் வருசமா. நடுவுல அந்த வைரசு புது பரிணாமம் எடுத்து பெரும் அழிவ ஏற்படுத்துச்சு”

“அந்த வைரஸ் வந்தா என்னெல்லா ஆகும்ப்பா?”

“அது நேரா மனச தாக்கும். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனநோயா மாறி, வெறி பிடிச்ச மிருகமாக்கிடும்”

“இது எப்படி மனுசங்களுக்கு பரவுச்சுப்பா?”

“இது இயற்கையா உருவான வைரசு இல்ல, மனுங்கிற ஆய்வுக்கூடத்துல உருவாக்கி பரப்பி விட்டது. இது மனுசனுல இருந்து மனுசனுக்கு பரவும். தலைமுறை தலைமுறையா பிறப்பால கடத்தப்பட்டு, வெறுப்பு ஊட்டி வளர்க்கப்படுது. ஊருனும், சேரினும் பிரிச்சு வைச்சு, பார்த்த தீட்டு, தொட்ட தீட்டுனு நம்மள பாட படுத்துச்சு. குரங்குல இருந்து மனுசன் பரிணாம வளர்ச்சி அடஞ்சப்ப உடம்புல இருந்து தொலச்சு போன வாலு, இது வந்ததுக்கு அப்புறம்  பேருக்கு பின்னால வந்து ஒட்டிகிச்சு”

“அந்த வைரசுக்கு பேரு என்னப்பா?”

“சாதி…”

“இந்த வைரஸ் வந்தா கெளரவம்னு கொம்பு முளைச்சிக்கும். அதுக்காக பெத்த புள்ள, பையன கூட கொல்ல வைக்கும். இத்தன நாள குனிஞ்சு நின்னவன் இப்போ கொஞ்ச கொஞ்சமா நிமிருவத கூட பொறுத்துக்க முடியாம முட்டித் தள்ளும். ஒருத்தனா கொல்ல அவன் பேரும், பொறப்பும், வாழுற ஊரு கூட போதும் தெரியுமா?…”

கவின் அமைதியாக என்னையை பார்த்துக் கொண்டிருந்தான்.

“கீழானனவன்னு நினைக்குறவங்க கிட்ட ஆதிக்கம் பண்ணும். அதுவே மேலானவனுக்கு சொல்லிக்கறவன் கிட்ட அடங்கிப் போகும்”

“இதுக்கு மருந்து இருக்காப்பா?”

“இருக்கு, அதுக்கு மருந்து கண்டுபிடிச்ச கதெய தா சொல்ல வந்தேன்”

“ம்ம்…”

“அப்போ அறிவுனு ஒரு சயின்டிஸ்ட் இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி பண்ணிட்டு இருந்தாரு. அவருக்கு அன்புனு ஒரு அழகான பொண்ணு. அவளுக்கு அப்பா கொஞ்ச நாள அவகிட்ட சரியா பேசல, அவளுக்குனு நேரம் ஒதுக்கலனு கவல. அறிவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியலனு கவல”

“இந்த வைரசு அறிகுறியே இல்லாம தாக்கி ஊரையே அழிச்சது. நல்ல விதமா இருக்குற ஆளுக மனசுலயும் ஓரமா வைரசு இருக்கத்தான் செய்யுது. ஒவ்வொரு ஆளுக்கு உள்ளேயும் விதவிதமான தன்மையில இருக்கு. அதனால அதுக்கு மருந்து கண்டுபிடிக்குறது அவ்வளவு சுலபமாயில்ல”

“ஒரு கட்டத்துல இந்த நாட்ட விட்டிட்டு, வெளிநாட்டுக்கு அன்போட போயிடலாம்னு கூட அறிவு முடிவெத்தாரு…  ஆனா அந்த வைரஸ் நிறம், மதம், சாமினு பலபேருல ஊருக்கு தகுந்த மாதிரி உலகமெல்லா இருந்துச்சு”

“அய்யய்யோ….”

“அறிவு வாடின பூச்செடி போல இருந்தாரு. எப்படி மருந்து கண்டுபிடிக்கறதுனு தெரியாம குழம்பி போயிட்டாரு. அவருக்கு தலவலி அதிகமாயிடுச்சு. அறிவு வேலயா இருந்தனால அன்பு அவருகிட்ட போக பயந்தா. போனா திட்டுவாரு. இப்படியே போயிட்டு இருந்தப்ப ஒரு நாளு, அறிவு ரொம்ப மனக்கவலையோட உட்கார்ந்து இருந்தாரு.

“வீட்டு முன்னால இருந்த பூச்செடியில நிறைய பூ பூத்திருந்துச்சு. ரொம்ப நாள அது வாடியிருந்துச்சு. அதுக்கு தினமும் அன்பு தண்ணி ஊத்தி பார்த்துக்கிட்டா. அதனால செடி நல்லா வளர்ந்து பூ பூத்திருந்துச்சு. அத பார்த்த மகிழ்ச்சியில அன்பு, அறிவு கிட்ட ஒடுனா”

“ப்பா… நா வைச்ச செடியில எவ்வளவு பூ இருக்குனு பாருனு” அன்பு ஒடிச் சென்று அறிவை முத்தமிட்டாள். அவள் எதேதோ பேசப்பேச, அறிவு அன்பின் வசமானார். ரெண்டு பேரும் பேசி, சிரித்து விளையாடி மகிழ்ந்தாங்க. அதுல அறிவோட மனக்கவலை எங்கோ தொலைந்தது. அப்புறம் கொம்பு முளைச்சா ஆளுகளுக்கு, கொஞ்ச கொஞ்சமா கொம்பு குறைஞ்சது. கடல் நீல நிறமா மாறியிடுச்சு. எல்லா இயல்பு நிலைக்கு வந்துச்சு”

“அதெப்படிப்பா?”

“அறிவோட மனக்கவலை தீர அன்பு தானே காரணம்? அது மாதிரி மனச பாதிக்குற இந்த வைரசுக்கு பேதமில்லாம எல்லோரையும் நேசிக்குற அன்பு தான் மருந்துனு கண்டுபிடிச்சாரு”

“சூப்பர்ப்பா… இன்னும் அந்த வைரசு இருக்கப்பா?”

“இருக்குப்பா… இப்போ கொம்பு, வாலு இல்லனாலும், அப்போ இருந்ததை விட மோசமா பரவுது.  அறிவு சொன்ன மாதிரி பேதமில்லாம எல்லோர்கிட்டயும் அன்பு செலுத்தறது தான் அதுக்கு ஒரே மருந்து” என்றேன்.

கவின் பேரன்போடு என்னை அணைத்துக் கொண்டான்.


  • பிரசாந்த் வே
Previous articleஎங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?
Next articleநீலவ்னா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.