மிருகம்


லெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளைச் சந்திப்பது அபூர்வமாகவே. மதுச் சாலைகளிலும், தோட்டங்களிலும், சில வேளைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி  சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில்தான் சென்றதுண்டு. ஆனால் நான் அங்கு சென்றதும் பயப்பட்டு விடுவேன். காரணம் அவள் வளர்க்கும் நாய்தான். அது மிகவும் பெரியது. மிகவும் நீளமான பற்கள். அது ஓர் பயங்கர மிருகத்தைப் போல.

முதலாவது சந்திப்பில், நான் நடுங்கியதை அவள் கண்டுவிட்டாள்.

“பயப்பிடவேண்டாம் ரவி.  ரூக்கி நல்லவன். முத்தமிடு ரவியை…”

“எலெனா, எனக்கு அதனது முத்தங்கள் தேவை இல்லை.”

அந்த முதல் தடவையில் அவளைக் களைப்பில்லாமல் ரூக்கி முத்தமிட்டதைக் கண்டபோது எனக்குள் வியப்பு ஏற்பட்டது. நாயினது பெரிய பற்கள் எனக்குப் பயத்தைத் தந்தபோதும், அவள் அவைகளை ரசித்தாள். இந்த வேளையில்தான் நான், எமது உடல்களைப் பற்றி நினைத்தேன். அனைத்து உடல்களது ரசிப்புகளும் ஒருமைப் படுமா? வேறுபாடுகளைக் காப்பனவே, எமது உடல்கள் எனும் நினைப்பு எனக்கு வந்தது.

சில வேளைகளில் ரசிப்பில்லாததே எனது உடல் என்பது எனது நினைப்பு. வேலைக்குச் செல்கின்றேன். சரி, எனக்கு வேலையில் விருப்பம்  இல்லாமல். செக்ஸ் செய்கின்றேன், பல வேளைகளில் செக்ஸ் விருப்பம் இல்லாமலும். எழுதுகின்றேன். எழுத்தில் எனக்கு விருப்பம் உள்ளது என்பதை எப்படிச் சொல்ல முடியும்? சில நண்பர்களை நான் உண்மையாக நம்புகின்றேன். இவர்களில் சிலர் என்னைக் கொல்லத் துடிப்பார்கள் என்பதைப் பின்னர்தான் அறிந்தேன்.

சில வேளைகளில் நான் சில பிராணிகளையும், சில மிருகங்களையும் ரசித்தாலும், அவைகள் மீது எனக்கு ஓர் அச்சம் இருந்தது. பின்பு இவைகள் மீது அச்சம் இல்லாதவர்களைக் கண்டேன். மிருகங்களை நான் விரும்பினாலும், இவைகள் சில வேளைகளில் எம்மைத் தீண்டும் என்பதை நான் கண்டுள்ளேன், பத்திரிகைச் செய்திகளும் எமக்குக் காட்டியுள்ளன.

இவைகளை முதலாளித்துவ நாடுகளில் முகத்தைக் காட்டி வெறுக்கமுடியாது.  இந்த நாடுகளில் பிறந்த பலரும், வந்த சிலரும் இவைகளை தெய்வங்கள் என்றே கருதுகின்றனர். இந்தக் கருத்து என்னிடம் இல்லை.

நான் வசிக்கும் கட்டிடத்துக்கு அருகில் உள்ள சந்தியில்  அராபிய, ஆபிரிக்க இளைஞர்கள் சின்ன நாய்களுடன் திரிவதைக் கண்டுள்ளேன். இவைகளது  முகம் நாய்களது  முகங்கள் போலவே இருக்காது. ஏன் இந்த இளைஞர்கள் இந்தக் குட்டி நாய்களுடன் திரிகின்றனர்? அழகிய சிறிய பெண்களுடன் இருக்கலாமே? பின்புதான் “இவர்கள் தூள் விற்பனை செய்பவர்கள்.” என எனது அறைக்கு அருகில் வாழும் அகமத் சொன்னான்.

“ஏன் இவர்கள் சிறிய நாய்களுடன்?”

“இவை சிறிய நாய்கள் இல்லை. கொலை செய்யும் நாய்கள். இந்த இளைஞர்கள் உன்னைக் கடிக்க நாய்களை விட்டால்,  உனது உடல் இவைகளுக்குச் சுவையான இறைச்சி ஆகும்…”

“இந்தக்  கொடூரமான நாய்களை வளர்க்கும் உரிமை இவர்களுக்கு உள்ளதா?”

“இல்லையும், இருக்கு எனச் சொல்லலாம். பிரான்சில் உள்ள சட்டங்கள் எல்லாம் முறையாக நடத்தப்படுவதில்லை என்பது உனக்குத் தெரியும்தானே. இந்த நாய்களை பெல்ட்டில் பூட்டி வைத்திருக்க வேண்டும்…”

“சில நாய்களை பெல்ட் இல்லாமலும் கண்டுள்ளேன்…”

“இது தடுக்கப்பட்டுள்ளது. போலீசுக்கு அறிவித்தால் நாய் பிடிபடும், நாயை வளர்ப்பவர் விசாரிக்கப்படுவார்.”

“அகமத், நடிகை பிரிஜித் பார்டோ இந்தக் குட்டி நாய்களை விரும்புவாரா?”

“விரும்புவார் என நினைக்கின்றேன். சினிமாவின் பின் மிருகங்களைப் பாதுகாப்பதுதான் அவரது வாழ்வு.  அவர் லட்சாதிபதியாக இருப்பதால் அவருக்கு பயங்கரமான மிருகங்களை வளர்த்தாலும் பாதுகாப்புக் கிடைக்கும். எமக்கு இந்தப் பாதுகாப்புக் கிடைக்குமா?”

“உங்களுக்கு நாய்களில் விருப்பம் உள்ளதா?”

“இருந்தது. இப்போது இல்லை.”

“ஏன்?”

“உனக்கு அல்ஜீரியாவைத் தெரியாது.” சரி வடக்கு ஆபிரிக்காவின் ஓர் நாடு  எனத் தெரியும். இது ஓர் வெய்யில் நாடு. நான் அங்கு பிறந்தது ஓரானில். அங்கே இளம் வயதில் இருந்து ஓர் நாயை வளர்த்தேன். நான் சாப்பிடுவதைத்தான் அதற்கும் கொடுப்பது எனது வழக்கம். இங்கு போல நாம் அங்கு நாய்களுக்கு பெல்ட் போடுவதில்லை. அவைகள் சுதந்திரமாகவே வெளியில் திரியும், வீதிகளில் கிடைப்பவைகளைச் சாப்பிடும், பின்பு தங்கள் வீடுகளுக்குள் வரும். எனது நாய் ஒருபோதுமே வெளியில் சென்றதில்லை. என்னைக் காணும்போதெல்லாம் தனது வாலை ஆட்டும், என்னை முத்தமிடும்…”

“உங்களுக்குக் கிடைத்தது நாயல்ல, ஓர் காதலி.” என்றபோது அகமத் சிரித்துக் கொண்டார்.

“சரி, காதலி என்பதும் சரிதான். அப்போது எனக்கு ஓர் காதலி இருந்தாள். நீ அவளது போட்டோவைக் கண்டால் உனக்கு மயக்கம் வரும்…”

“அல்ஜீரிரியப் பெண்கள் பேரழகிகள்.”

“நீ அவள்களோடு செக்ஸ் செய்துள்ளாயா?”

“இல்லை. நான் ‘ஆயிரத்து ஓர் இரவுகள்’ எனும் கதையை வாசித்தபோது அரபுப் பெண்கள் எனது நினைவுக்கு வந்தனர்.  பின்பு இந்தப் பெண்களை நிறையக் கண்டு உள்ளேன்.”

“இந்தப் பெண்கள் சூடானவர்கள்.” என்றபின் அவர் தனது விழிகளை வானத்துக்கு அனுப்பினார்.

சில கணங்களின் பின் என் முன் அவரது விழிகள்.

“நான் மிகவும் சூடான இளம் பெண்ணுடன் எனது காதல் வாழ்வைத் தொடங்கினேன். அவளது அழகை நான் ஒரு போதுமே நான் சென்ற மியூசியங்களில் கண்டதில்லை. அவளது விழிகளால் நான் தின்னப்பட்டேன்…”

“நீங்கள் அதிஷ்டமானவர்.”

“இல்லை. அவள் என்னைப் பிரிந்து பல ஆண்டுகள்.”

“இது இரக்கத்தைத் தருவது. ஏன் அவள் உங்களை விட்டுப் பிரிந்தாள் என நான் கேட்கலாமா?”

“எனது நாய்தான் காரணம் .”

“நாய் அவளைக் கடித்ததா?”

“இல்லை, அவள் எனது வீட்டில் இருந்தாலும் நான் நாயின் மீதுதான்  மிகவும் கரிசனையையைக் காட்டினேன்.  பின்பு கட்டிலுக்குப் பிந்திப் போகும் வேளைகளில்  அவள் கோவப்பட்டாள். சில தினங்களின் பின் நானா, நாயா உனக்குத் தேவை எனக் கேட்டுவிட்டு வெளியே போனதால் எமது காதல் முடிந்தது….”

“மீண்டும் அவளிடம் மன்னிப்புக் கேட்கவில்லையா?”

“கேட்கச் சென்ற வேளையில் அவள் ஓர் கிழவனின் மடியில் இருந்ததைக் கண்டேன்.”

“வாழ்வு சில வேளைகளில் சுலபமானது இல்லை. பின்பு வேறு ஓர் பெண்ணைத் தேடவில்லையா?”

“ஆம், வேறு பல பெண்களுடன் வாழ்ந்தேன்.”

“இந்தப் பெண்கள் உங்களது நாயை ரசித்தார்களா?”

“அது எனக்குத் தெரியாது.”

“உங்களது நாய் இப்போதும் அங்குதான் உள்ளதா?”

“நான் அதனைக் கொலை செய்து விட்டேன்.”

எனக்குள் நடுக்கம் வந்தது.

“பயப்படவேண்டாம், நான் ஓர் கொலையாளி இல்லை.  நான் ஏன் இங்கு வந்தேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? “

“தெரியாது. நான் இங்கு  அகதியாக வந்தேன். அல்ஜீரியா, பிரான்ஸால் 120 வருடங்கள் காலனித்துவம் செய்யப்பட்டதால், நீங்கள் இங்கு இலகுவாக வரும் வாய்ப்பு உள்ளது என்பது எனது நினைப்பு.”

“சரி, நான் நீண்ட காலங்களின் முன்பு வந்தேன். நிச்சயமாக இங்கு வருவதில் எனக்கு விருப்பமே இல்லை. எனது கால் காரணமாகவே நான் இங்கு வந்தேன். நான் நடப்பது இப்போது இலகுவாக உள்ளது. இரும்பாலானதுதான் எனது இடது பக்கத்தின் பாதிக் கால்.” என்றபடி தனது கால்சட்டையை மேலே நோக்கி இழுத்தார் அகமத். நான் இரும்பைக் கண்டேன். 7 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். இப்போதுதான் அவரது அரைக்கால் இரும்பில் இருந்தது தெரிய வந்தது. இரங்கினேன்.

“இந்தக் காலின் கதை, எனது நாயினது கதையும்தான்.”

“நீங்கள் உங்களது நாயையும் இங்கு கொண்டு வந்திருக்கலாமே?”

“கதை முடியவில்லை. கேள். நான் அந்தத் தினத்தில் பேரிச்சம் பழங்களை வாங்கிக்கொண்டு எனது வீட்டுக்கு வந்தேன். எனது நாய் என்னை அதிகமாக முத்தமிட்டது. சில பழங்களைக் கொடுத்தேன். ஓர் பழத்தின் கொட்டை அதனது பல்களது  இடைவெளியில் சிக்கியது. அது அவதிப்பட்டதைக் கண்டேன். நான் பல தடவைகள் அந்தக் கொட்டையை எடுக்கச் சிரமப்பட்டபோதும் அது வெளியே வரவேயில்லை. நான் எனது குறடு ஒன்றை எடுக்க வீட்டுக்குள் சென்றேன். வெளியே வந்ததும் நாய் என்னைக் கோபமாகப் பார்த்து, என் மீது பாய்ந்து கடித்தது.  நான் மயங்கி விழுந்தேன். சில கணங்களின் பின், மிகவும் நோவுடன் விழித்தபோது,  கால் முறிந்து கிடந்ததையும், நாய் என்னை முத்தமிட்டதையும்  எனது விழிகள் கண்டன. அப்போதுதான் நான் குறட்டால் அடித்து அதனைக் கொன்றேன். பின்பு பிரான்சுக்கு வந்தேன் புதிய காலை வாங்குவதற்கு.”

அகமத் புன்னகைத்தபின் “மாலை வணக்கம்” தந்து திரும்பினான்.

இந்தத் தினத்தில் எனக்குள் எலெனாவின் நினைப்பு வந்தது. நான் அவளுக்குப் போன் பண்ணினேன்.

“ரவி… பல நாள்கள் உன்னைக் கண்டு…”

“இப்போது நான் ஓர் பஸாரில் வேலை செய்கின்றேன். நீ?”

“இப்போதும் கண்ணாடிக் கடையில்தான்.”

“ரூக்கி சுகமாக உள்ளதா?”

“சில மாதங்களின் முன்பு அதற்குக் கால் உடைந்தது.”

“கவலையாக இருக்கின்றது. ஓர் விபத்தா?”

“இல்லை, மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டது.”

“இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததால் அது தப்பி விட்டது என நான் நினைக்கின்றேன்.”

“நீ, சொல்வது சரி.”

எலேனாவின் கதை கொஞ்சமாக எனக்குத் தெரியும். ஆனால் நான் அவளை நாயுடன்தான் தொடர்பு கொண்டேன்.

பார்பஸ் பகுதியில் நடந்த குழப்ப ஓவியக் கண்காட்சியிலேயே அவளது தொடர்பு எனக்குக் கிடைத்தது. அந்தக் கண்காட்சி நடந்த இடத்தில் பலரைப் பல பிராணிகளுடன் கண்டேன். ஒருவரது பூனையைக் கண்டு, அது புலியா என எனக்குள் நடுக்கம் வந்தது. அது குழப்பமான ஓவியக் கண்காட்சி. சிலர் தமது ஓவியங்களைக் கிழித்துக் கொண்டு கலையைக் காட்டினர். சிலர் தமது  படைப்புகளைக் கத்தியால் குத்திக் கொண்டிருந்ததையும் கண்டேன். இந்தக் கண்காட்சி எனக்குப் பிடித்தமானதாக இருந்தது.

“மாலை வணக்கம்!” எனக் கேட்டுத் திரும்பினேன்.

அழகிய பெண். அருகில் ஓர் நாய். கையில் ஓர் பியர். அவள்தான் எலெனா.

“நான் எலேனா. நீங்கள் இந்தியர் என நினைக்கின்றேன். உங்களது நாடுகளிலும் இத்தகைய கண்காட்சிகள் நடக்கின்றனவா?”

“எனது பெயர் ரவி. நான் இலங்கையில் பிறந்தவன். நான் அங்கு ஒருபோதுமே ஓவியக் கண்காட்சிகளுக்குச் சென்றதில்லை. ஆனால் அங்கு படைப்புகளை அழிக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன்.”

ரூக்கி எனது அருகில் வந்ததும் நான் நடுங்கியபோதுதான் “பயப்பிடவேண்டாம்” என அவள் எனக்குச் சொன்னாள்.

அவளை அப்போது எனக்குப் பிடித்துக்கொண்டது. நிச்சயமாக ஓர் செக்ஸ் விருப்பினால்  அல்ல. அப்போது நான் எனது பல நண்பர்களை வெறுத்து இருந்தேன். ஓர் தனிமை… எனக்கு விருப்பமில்லாத ஓர் தனிமை எனக்குள் இருந்தது. சில வேளைகளில் வெளியே காணும் ரெனே எனும் வயோதிபப் பெண்ணுடன் பேசுவேன். 97 வயது என அவள் சொன்னதுண்டு.

அவள் தனியாக வாழ்வதாகச் சொன்னபோது வியப்புற்றேன். அவளுக்கு இரண்டு மகன்களும் ஓர் மகளும் இருப்பதாக ஒரு தடவை எனக்குச் சொன்னாள்.

“உங்களது பிள்ளைகளுடன் வாழுவது நல்லதல்லவா?”

“இல்லை. நான் தனியாகவே இருக்க விரும்புகின்றேன்.”

 

இந்த நாடு எங்கள் நாடு போல இல்லை. எங்களது வாழ்வில் எமது பெற்றோரைப் பாதுகாப்பது மிகவும் பிரதானமானது. இந்த முதலாளித்துவ உலகில், உறவுப் பிரிவுகளை யாவரும் தேடுவதைக் கண்டு எனது தலை வெடித்ததுண்டு.

சில வேளைகளில் நானும் இந்த உறவுப் பிரிவுகளில்…. ஆம், ஆம்… நான் இன்று இங்கே. இந்த வாழ்வில் பணம் கிடைக்கின்றது, விரைவில் செலவாகின்றது… ஆனால் வாழ்வு கிடைக்கின்றதா எனச் சிலவேளைகளில் நான் நினைப்பேன். இந்தப் பண உலகில், நாம் மனிதர்களாக அல்ல அடிமைகளாக வாழும் புது நிலைக்குள் வந்தோம் என்பதையும் நான் சிந்திப்பதுண்டு.

எலெனாவுடன் நான் ஓர் மதுச்சாலையின் வெளியில் இருந்தேன். அவள் ரூக்கிக்கு ஓர் பிஸ்கட்டைக் கொடுத்தாள். எனக்கும் கலை தெரியும் என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்பட்டு எமது சந்திப்பு நடந்தது என நான் நினைத்தேன்.

சேவகன் இரண்டு பியர் கிளாஸ்களை எங்கள் முன் வைத்தான். மதுவின் நிறம் மஞ்சளாக இருந்தது. எலேனாவின் முகத்தின் நிறமும் அதுதான். அவள் ரூக்கியையே பார்த்தும், தடவிக்கொண்டும் இருந்தாள். நாயின் பெரிய பற்கள் எனக்குப் பயத்தை ஊட்டியபோதும், நான் பயமில்லாதவன் போல என்னைக் காட்டிக்கொண்டேன்.

“எனக்கு ரூக்கியில் நிறைய விருப்பம்.” என்றாள்.

“உங்களோடு வாழுபவருக்கும் இந்த விருப்பம் இருக்கலாம் என நினைக்கின்றேன்.”

“நான் ஓர் ஆணோடும் அல்லது பெண்ணோடும் வாழ்வதில்லை. நான் ரூக்கியுடன்தான் வாழுகின்றேன்.”

“பிராணிகளும், மிருகங்களும் மனிதர்களைக் காட்டி  மேலானவர்களா?”

“அப்படித்தான் நான் நினைக்கின்றேன். தொடக்கத்தில் நான் ஓர் ஆணுடன் வாழ்ந்தேன். சில மாதங்களிலேயே அவர் மீது வெறுப்பு வந்தது.”

எது காரணம் எனும் கேள்வியைக் கேட்க நினைத்தபோதும், நாகரீகம் காரணமாக நான் அதனைக் கேட்கவில்லை.

“அவர் என்னிடம் நிறைய அன்பு காட்டினார். ஆனால் எனது செக்ஸ் விருப்பங்கள் அவரது விருப்பங்கள் இல்லாமல் இருந்தன. விருப்பங்களை வாழாத இணைப்பில் எனது இரவுகள் கருகின.”

“நீங்கள் சொல்வது சரி. நான் திருமணம் செய்ததில்லை. இது எனக்கு வெறுக்கின்றது. சில நண்பிகள் உள்ளனர். அவள்களோடு சில வேளைகளில் எனது இரவுகள் கழியும். பிரிவு துக்கமானதா?”

“ஆம். சில மாதங்களில் எனது பிரிவை மறந்தேன். பின்பு ஓர் நண்பியின் தொடர்பு ஏற்பட்டது. சுவையான இரவுகள் தொடக்கத்தில்.  சில மாதங்களில் அவளைப் பிரிந்துவிட்டேன். வாழ்வு என்பது இணைப்பிலும் பிரிவிலும்தான் உள்ளது. மீண்டும் ஓர் பியர் வேண்டுமா?”

“குடிப்போம்.”

மீண்டும் மஞ்சள் கிளாஸ்கள் எங்கள் முன்.  நாங்கள் குடித்தோம். பல விஷயங்களைப் பேசினாலும் அவைகள் இப்போது எனது நினைவில் இல்லை. நேரம் இரவு 12 ஆக இருந்ததால், தூங்குவதற்குத் தனது வதிவிடத்துக்கு அழைத்தாள்.

அவளது வதிவிடம், எனது வதிவிடம் போல இல்லை. அங்கு யாவும் ஒழுங்காக அடுக்கப்பட்டிருந்தன. சுவர்களில் அழகிய நாய்களின் படங்கள். அது ஓர் நாய்கள் மீதான கண்காட்சி சாலையாக இருந்தது.  அங்கு பல நாய்கள் இருக்கும் என எனக்குள் பயம் வந்து, அமைதியாக “உன்னிடம் ஓர் நாய்தான் உள்ளதா?” எனக் கேட்டேன்.

“இல்லை. என்னிடம் உள்ளது ரூக்கிதான். இதனது இனத்தின் பெயர் ரோக்வேய்லர். இது பயங்கரமான நாயாகக் கருதப்பட்டாலும் என்மீது அன்பு காட்டுகின்றது. நாம் நாய்மீது பாசம் காட்டினால் அதுவும் எங்கள் மீது பாசம் காட்டும்.”

ரோக்வேய்லர் என்னைப் பார்த்து வாயைத் திறந்தது. எனக்குள் நடுக்கம்.

“பயப்பிடவேண்டாம் ரவி.” என அதனை அவள் தனது மடியில் கிடத்தினாள். அவளது உதடுகளை முத்தமிட்டது  ரூக்கி. தனது பெரிய பல்களால் அவளது சொக்கையை நக்கியது. அதனது கால்களை மிருதுவாகத் தடவினாள். ரூக்கியின் கைகள் அவளது கூந்தலை அவிழ்த்தன. அவள் என்னை மறந்து அதனோடு. பின் எழுந்து குசினிக்குள் சென்றாள். அவளின் பின் ரூக்கி. அவளது தொடையைத் தனது நீள நாக்கால் முத்தமிட்டது.

இருவரும்  பின்னர் திரும்பி வந்தனர். எலேனாவின் கையில் ஓர் பெரிய கோப்பை. அதனுள் இப்போது வெட்டியதுபோன்ற இறைச்சித் துண்டுகள். மிகவும் சிவப்பு. பாய்ந்து ரூக்கி அவைகளைக் கடித்தபோது இரத்தம் ஒழுகியது.

“இது மலிவான இறைச்சி அல்ல. விலை அதிகமானது. கிராமத்தில் கவனமாக வளர்க்கப்படும் மாடு.”

எனது பயத்தைக் காட்டாமல் “ ரூக்கிக்கு ஆடுகளிலும் விருப்பம் உள்ளதா?” எனக் கேட்டேன்.

“இல்லை. மாடுகளைத்தான் விரும்பும்.”

“மரக்கறிகளை?”

“ஒருபோதுமே தொட்டது இல்லை. கண்டால் கோபம் வரும். ரவி, எனக்குத் தூக்கம் வருகின்றது. இது உங்கள் வீடே. சாப்பிடுங்கள். நாளை சந்திப்போம்.”

கோப்பையில் ஓர் இறைச்சித் துண்டும் இல்லை. அவள் ரூக்கியுடன் தூங்கும் அறைக்குச் சென்றாள்.

நான் அன்று சாப்பிடவில்லை. இரவில் நிறையச் சத்தங்கள் வந்தன. காலையில் விழித்தால், ரூக்கியை ஓர் கிழிந்த பிரேசியருடன் கண்டேன்.


  • க.கலாமோகன்

நன்றி -ஓவியம் : Rain

Previous articleபேதமுற்ற போதினிலே -10
Next articleஎங்கே போகிறாய், எங்கே போயிருந்தாய்?
Avatar
(பி.1960) ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில ஒட்டோவியம் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. "தாயகம்"  சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.