கம்மா
காய்ந்த தென்னம்பாளைப் பிளவுக்குள்
தனித்தனி மழைகள் சேர்ந்து தேங்கியது
படகினுள் மிதக்கும்
சமுத்திரமென தெரிந்தது.
தளும்பும் சமுத்திரக் குட்டியென்று
எனது கையின் பதினோறாவது
குறுவிரல் வியப்பானது.
பாளையை மாதிரியாக வைத்து
சந்ததித் தொடர்ச்சியாய்
வெட்டாத நகங்களால்
சமுத்திரத்தின் குட்டியான
கம்மாவைத் தோண்டினேன்.
கருவாச்சி மடை
கொடியறுக்காத சிசுவாய்
கருவுக்குள் நானிருக்கையில்
பால்சோறு பிசையும்
கிண்ணத்தின் அளவே கம்மா.
பிடித்தநேரத்தில் அம்மாவுக்குள்ளிலிருந்து
வெளியே வந்துபோவேன்.
குழம்பு முருங்கைக் காய்களை விரித்து
கம்மாவில் சவாரிசெய்து விளையாடுவேன்.
நான் வளர வளர
கம்மாவும் நீரும் பெருத்தது.
எனது நிறம் ஒவ்வாத அம்மா
கொடி நறுக்கி
தனது பிறப்பு வாயிலை மூடிக்கொண்டாள்.
சவாரியிலேயே வாழ்ந்தேன்.
உள்நாக்கினை மாமிசப் பொறியாக்கி
கம்மாயிக்கு வந்த அம்மாளை
உயிருடன் முழுங்கிக் கொண்டேன்.
கல் மடை
இருளில் தரையில் கிடந்த
இரண்டு செம்பருத்தி மொட்டுகளின் ஊடே
முதுநாகம் கக்கிய
மாணிக்க கல்லுடன் நடந்தேன்.
நத்தையின் உணர்கொம்புகளாக
பூரித்து மலர்ந்தன செம்பருத்திகள்.
அக்கணமே கல்லின் எரிபிரகாசத்தில் அவ்விடத்தில் மடை பறித்தேன்.
ஊத்து மடை
தீமூட்டியும் அனத்தியதால்
கலப்பு மணமுடித்தவளை
கம்மாகரையில் புதைத்தனர் ஊரார்.
கரைநெடுக
கிச்சுக் கிச்சுத் தாம்பூலம் விளையாடிய
சேதுநாட்டு கீதாரிப் பிள்ளைகள்
மரவள்ளி கிழங்காகிப் போன
அவள்மேல் கைவைத்து
கண்டுபிடிக்கையில்
கரையிடித்து ஊரழிக்க
ஊற்றாய் வெடித்தாள் நீர்மகள்.
செவ மடை
நிறை கம்மாவைக் குடித்தபடி
மடையாழ வாயில் சிக்கி
மாண்டது சினை எருமை.
கரையுடைக்க நிரம்பும் நீரை
சீக்கிரம் அவிழ்த்துவிட
நிலக்கிழார்கள் எனைக் கும்பிட்டார்கள்.
‘எருமைக் குருதி கலக்கவிருக்கும் இந்நீரை நான் ஒரேமூச்சில் வாரியிறைக்கும் எல்லையளவில் எஞ்சனங்களுக்கு
நிலங்கள் தருவீர்களா?’ எனக் கேட்டேன்.
தெய்வத்திடம் சொல்வது போல
சரியென்று ஒப்புக்கொண்டனர்.
அடியில் இடுப்புச் சங்கிலியை ஆட்டுகையில் என்னை மேலே
தூக்குங்களெனச் சொல்லி
சங்கிலி மறுமுனையை அவர்களிடம் கொடுத்து குதித்தேன்.
வான்நோக்கி விறைத்திருக்கும்
நாலு கால்களுக்கு நடுவில்
சினை வயிற்றை வணங்கிவிட்டு
பற்களாலேயே எருமையினை அரிந்தேன்.
வாமடைகளை உடைத்து
நிலமெங்கும் ஓடியது செந்நீர்.
விடாமல் ஆட்டிய சங்கிலியை கம்மாவுக்குள் போட்டனர்.
அன்றிலிருந்து அவர்களின்
மூத்திரச் சுனையில்
ரத்தம் பீய்ச்சியது.
வாமடை
எனது உடல் துவாரங்களே
நிலத்தின் வாமடை.
கணிக்கமுடியா தருணத்தில்
உயிர்நீர் கசிகையில்
கற்களால் செத்தைகளால்
அணைகட்டவும் –
உயிர்நீரைப் பாய்ச்ச
அடைப்புகளை எடுக்கவும்
துவார வாசல்களில்
நானே காவலுக்கு நிற்கிறேன்.
[mkdf_icon icon_pack=”font_awesome” fa_icon=”fa fa-pencil” size=”mkdf-icon-small” custom_size=”” type=”normal” border_radius=”” shape_size=”” icon_color=”red” border_color=”” border_width=”” background_color=”” hover_icon_color=”yellow” hover_border_color=”” hover_background_color=”” margin=”” icon_animation=”icon_animation” icon_animation_delay=”” link=”” anchor_icon=”yes” target=”_self”] முத்துராசா குமார்
சிறப்பு