கோவில்பட்டி
23.5.1991
தலைவாரும் எதிர்த்த வீட்டுப்பெண் கழிந்த ஒன்றிரண்டு மயிர்களை விரல்களில் சுற்றி வெளியில் எரியும்போது என் மூளையையும் சேர்த்து எறிந்தாள். எனது மூளை சாக்கடை ஓரத்தில் ஆபாசமாகக் கிடக்கிறது. அன்புள்ள தஸ்தாயெவ்ஸ்கி.
உனக்கு இந்தக் கடிதம் எழுதுவதில் ஒரு தனிப்பட்ட ஆழ்ந்த தொடர்பு இருக்கவே செய்கிறது. ஏனெனில் என் வாழ்வில் ஒரு கரப்பான் பூச்சிக்கு அடுத்தபடியாக மிகமிக முக்கியமான நபர் நீதான். எனது சுய சரிதத்தில் முதலும், முடிவுமாக நீங்கள் இருவரும் உள்ளீர்கள் என்ற செய்தியை பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம் எழுதுகிறேன். தாஸ்தாயெவ்ஸ்கி.
எனக்கு மீசை முளைக்கும்போது வேறு சில சிக்கல்களும் கூடவே முளைத்தன என்றுதான் சொல்ல வேண்டும். சன்னம் சன்னமாய் என் இடுப்புக்குக்கீழ் கால்கள் காணாமல் போன அதிர்வு நிலை. எப்படி இயங்குவேன்? ஏதேதோ குரல்கள் எனது மனக்குகை இண்டு இடுக்கிலிருந்து வெளிக் கிளம்பிக் கொண்டிருந்தன. அவ்வொலிகள் என்னை கடந்து செல்ல நான் பின் தொடரலானேன்.
பாறைகளிலிருந்து சிலைகள் உருவாவது போல் சிறிது சிறிதாக உருவாக தொடங்கினேன். ஆனால் பாறைக்கும் அச்சிலைக்கும் சம்பந்தம் இல்லாததுபோல் எனக்கும் என் வடிவங்களுக்கும் இடையே எந்தவித இணைப்புகளும் நடக்கவில்லை என்பதை வெகு பின்னால் அறிந்து கொண்டேன். இப்படி இணைப்புகள் இல்லை என்று நீ காட்டினாயா அல்லது அவற்றை உருக்கி அழித்தாயா என்று திட்டவட்டமாய் கூறமுடியவில்லை. ஆனால் தஸ்தாயெவ்ஸ்கி, உனக்கு முடிவுஸ்தானம் தான் கொடுக்க முடிகிறதே ஒழிய, முதல்ஸ்தானம் கரப்பான் பூச்சிக்குதான் தர வேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் கரப்பான் பூச்சிகளை சந்திக்கும்போது, அது ஒரு போதும் மறந்து, மறைந்து செல்லும் வெற்று காட்சியாய் எனக்கு இருந்ததில்லை.
கோடவுன்களில் குவியல் குவியலாய் சந்தித்திருக்கிறேன். விருட்டென்று என் கட்டைவிரலைவிட குட்டையாக விரைந்து செல்வதை நடுச்சாம தெருக்களில் கண்டிருக்கிறேன். பாடப்புத்தகங்களில் கோட்டுச் சித்திரமா கவும், விளம்பரங்களில் கொலை செய்யப்பட வேண்டிய அசுரனாக காட்டப் படுவதையும், விஞ்ஞான புத்தகங்களில் மிக மிக முதிய ஜீவராசி என சிலாகிக்கபடுவதையும் படித்திருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் எனது பள்ளிக்கூட பாத்ரூமில் கண்ணுக்கு அருகில் சுவரில் அதுவும் நானும் நிலை பெறுகையில் நடந்தது அசாதாரணமான ஒன்றுதான்.
நிசப்தத்தின் குண்டுகள் அங்கிருந்து வந்தன என்றும் அதனால் நான் தாக்கப்பட்டது தெரியாமல் காயமுற்றேன். என்றும், சொன்னால் உனக்கு ஆச்சரியமாய் இருக்காது, இல்லையா? அதன் ஆவி எனது மனஜமுக்காளத்தின் அடியில் அப்பொழுதே ஓடி புதைந்து கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்தவித சிந்தனா ரூபத்தையும் எடுக்காத ஒரு நாள்பட்ட நோய் என்னை பீடித்தது.
ஆனால் இதெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.
எல்லோரையும் காமத்தின் சிறு புழு இருளினூடே வந்து விழுங்கி கொள்வது போல் என்னையும் தின்றுவிட்டது. எல்லோரிடமும் நல்லுணர்வின் சிறகுகள் முளைத்து விரிவது போல் வெளித்தோன்றி, இறகுகள் வலுப் பெறலாயின.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு, வலுவான, இரும்பாலான சமூக வடிவங்களின் மேல் ஊர்ந்து செல்லலானேன். சிறகுகளை அசைத்து மேலே பறந்து அவற்றின் ஜியோமிதி வடிவங்களை கண்களால் அறியலானேன்.
பாறை வடிவங்களைப் பெரும் நீண்ட நெடும்பயணம் துவங்கியது.
நல் உணர்வின் மெல்லிய கொடிகள் எங்கள் தேச சமயப் பிரச்சாரர்களின் வாசகங்களில் பற்றிபடரலாயின. ஒவ்வொரு வாசகமும் உள்விம்முதலை தந்தன. எனது பதினாறு வயதுப் பாறையில் அக்கல்வெட்டுகள் பதியலாயின. நூலகங்களில் ஆள் அண்டாமல் இண்டு இடுக்குகளில் தூசிபடிந்து கிடக்கும் பெரிய பெரிய மத நூல்களின் மண்டபத்தில் விசாலமாக நடக்கலானேன். அதே இண்டு இடுக்குகளில் மட்டுமே கிடக்கும் மஞ்சள் புத்தகங்கள் எனக்கு முன் நடக்கலாயின.
இவ்விரு உணர்ச்சிகளின் வடிவம் ஒன்றை ஒன்று தாக்கி, சிதைவுற்று வடிவமற்ற உணர்ச்சிக் கொத்து ஆனேன் ( கரப்பான் பூச்சியை பின்பு வெகுகாலத்திற்கு மறந்து போயிற்று) எனக்கு நானே சிக்கிக்கொண்டேன்.
மூளையின் முற்றத்தில் மஞ்சள் வெயிலும், அந்த காரமும் மாறி மாறி தோன்றின. அடுத்தடுத்து அல்ல.
நல்லுணர்வின் சாறு ஓடி தவிர்க்கவியலா அரசியல் கிண்ணங்களில் தங்கியது. நல்லுணர்வின் சாறுஆவியாகி மனித எல்லையின் புதர்களினை சுற்றி வரலாயிற்று.
இரண்டு தலை ஜீவியானேன்.
தாஸ்தாயெவ்ஸ்கி,
நீதியின் சிறு குவளைக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ள மனித சமுத்திரம் எத்தனை காலமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏன் அது ஒருபோதும் நடக்கவில்லை. எத்தனை பரிசோதனை வடிவங்களை வெவ்வேறு சீதோஷ்ண நிலைகளில் வெவ்வேறு சரித்திர நிழல்களோடு கண்டுபிடித்திருக்கிறது. யாவற்றிலும் அந்த ஒரே ஒரு விவாதம் முடியப்படாமல் நடந்துகொண்டே இருக்கிறது. சுதந்திரம். அதன் வடிவம் யாது? அதன் உயிர் எது? அதன் உருவாக்கமும், அஸ்தமனமும் எந்த தப்புத் தாளங்களில் நிர்ணயிக்கப்படுகிறது? எத்தனை எத்தனை விரிவான விளக்கங்கள்? அதைக் காக்கவும், பரிமளிக்கவும் எத்தனை கூண்டுகள்? (எப்படி இந்த முரண்? கூண்டுகளில் வைத்து சுதந்திரத்தை வளர்த்தெடுக்கிறார்கள்.)
சமூகவியல், சரித்திரவியல், பூகோளவியல், வானவியல் என பக்கம் பக்கமாக டன்டன்னாக இயல்களின் கதை வளர வளர படிக்கலானேன். சமயப்பிரச்சாரகர்களின் திரையை ஓட்டை போட்டு மறுபக்கம் சென்றுவிட்டது புழு.
தாஸ்தாயெவ்ஸ்கி,
மிளகாய்ப்பூச்சியை மீண்டும் சந்திக்கலானேன் அதன் ஆவியின் பதிவுகள் என் மனப்பிரதேசத்தில் தலைமாற்றாக விழுந்திருந்தன. ‘’ நான்” என்ற புதிய பொருளை தட்டித்தட்டி துலாவி முதலில் கண்டுபிடித்தது கீழ்த்திசை கிறுக்கல்கள் என்கிறார்கள். ஆனால் ஒரு போதும் எங்கள் சந்துகளிலும், கோவில்களிலும் அச்சிடப்பட்ட தாள்களிலும், லொட்டு லொட்டு என்று கேட்டுக்கொண்டு இருக்கும் ” நான் யார்” என்ற சத்தம் என் காதுக்குள் ஏறவே இல்லை.
ஆனால் என்னைப்பற்றிய முதல் சந்தேகங்களை கரப்பான் பூச்சி சில அசைவுகளாக என்னிடம் ஆரம்பித்து விட்டது. முதல் அசைவு தொடங்கியது. கரப்பான் பூச்சியை பற்றிய ஆச்சரியங்கள், கேள்விகள் என்னைப்பற்றிய வியப்புகள் ஆயின. என்னைப்பற்றிய தவிப்புகள் சமூகம் பற்றிய யோசனைகள் ஆயின. சமூகம் பற்றிய ஆய்வுகள் முடிவற்று நீண்டுகொண்டே போயின.
நான் பிறக்கலானேன். என் சீசர் இடத்தின் முதல் வரியை மிளகாய் பூச்சி எழுத ஆரம்பித்து விட்டது.
பிணங்களை மிதக்கவிட்டு கொண்டுவரும் சரித்திரத்தின் ஆற்றில் நான் முங்கலானேன். எங்கு எங்கெல்லாம் பற்றுக்கோடுகள் தேடி தவித்தேன்? எத்தனை சதவீதம் ஒருவன் தன்னை தக்க வைத்துக் கொள்வது? எவ்வளவு சதவீதம் சமூக அர்ப்பணம் செய்து கொள்வது? இது தத்துவ பிரச்சினையா? சமூகப் பிரச்சினையா? மிகத் தீவிரமான சமூகப் பிரச்சினையாகவே என்னை வதைத்தது? ஹா! சமூகத்தின் ஸ்தூல வடிவங்கள் வெவ்வேறு குண ரூபமான வளையங்களை சுழல விட்டுக் கொண்டிருந்தன. நடைமுறைவாதி சில வளையங்களை தள்ளிவிட்டும், சிலவற்றை ஆயுதமாக மாற்றியும், சரித்திரத்தின் விசைத் சக்கரங்களாக அவற்றை சுழற்ற விடும் பெரும் பேய்காற்றில் என் இதயம் படபடவென ஆடியது.
தாஸ்தாயேவ்ஸ்கி,
கலையின் கண்கள் என்னுள் ஏன் முளைத்தன? கலை எதை தொடும்போதும் தொடப்பட்டத்தின் ரூபத்தை உருக்கி அழித்து விடுகிறதே? அரசியலை கலை தீண்டும் போது, அரசியலின் போல ஜியோமிதி வடிவங்கள் உருகி தொலைந்து போய்விடுகின்றன. மதம், தத்துவம், கலாச்சாரம் அனைத்தின் பௌதிக வரையறைகளை கலை எரித்து, அவ்வெரி பொருளில் ஒளி வீசுகிறது.
ஹா! நீ யார்? உனது நிலைப்பாடு என்ன? தெளிவாகச் சொல் என்று அறை கூவுகிறான் அரசியல் ஜிவி.
மூன்று தலை ஜீவராசியின் இதயம் சூம்பி வதங்குகிறது. பதில்கள் என்று உதடு துடிக்கிறது. வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் வெவ்வேறு விசைகளினால் உறுப்புகள் ஒவ்வொன்றும் இடைவெளி கூடிக்கூடி வடிவம் மாறலாயிற்று.
பாறை தன் வடிவங்களை அடையும் பயணம் தொடர்ந்தது. புரண்டு எழும் சமூகத்தின் சுழிக்காற்றில் என் இறகுகள் ஒவ்வொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. இறக்கைகள் மட்டும் படிக்கின்றன. காக்கையில்லாமல்.
மரணம், அதுபற்றி முடிவு செய்யாமல் அடுத்த அடி எடுத்துவைக்க முடியுமா?
மரணத்தைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. மரணம் உயிரியல் பிரச்சினையா? சமூகவியல் பிரச்சினையா?
அதன் சமூகவியல் பரிமாணமே என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. மரணம் என்றும் உண்மையை நூலில் கட்டி தூக்கியபடி முன்னால் ஆட்டி ஒவ்வொருவரின் சுதந்திரமும் திருடப்பட்டு விடுகின்றன.
நல்லுணர்வின் சிறகுகள் உள்கட்டுமானம் மாறி கால்கள் ஆயின. உணர்ச்சியின் அடி வானத்தை தாண்டி ஸ்தூல வாழ்வின் மதில் சுவர், கொல்லைப்புறம், முற்றங்களில் தத்தித்தத்தி முன்னேறின.
கோட்பாடுகள் நடை முறையினால் நெளிந்து கோணலாகி கொண்டிருக்கின்றன. நடைமுறையின் திசைகள் என கொள்கைகள் மஞ்சு மூடி எங்கும் குழுமியிருந்தன.
துப்பாக்கி குண்டுகள், சிறை, சித்திரவதை, ஊனப்படுத்தல், ஜனத்திரள் கொலை, பொருளாதார முற்றுகை, கலாச்சார விச ஊசிகள் உலகப் பிரக்ஞையின் ஜவ்வு வலியோடு கிழியத் தொடங்கியது. கோழை, சந்தர்ப்பவாதி, பாசாங்குக்காரன், துரோகி, கருங்காலி கனவுவாதி, சுயநலமி, எதிரி, கோட்பாட்டு மண்டலங்களில் இவர்களின் விளக்கங்கள் மாறிமாறிச் சுழன்றன. என் தனி வாழ்க்கையின் கால அளவின் லாயத்தில், உலக வாழ்வின் பெருங்காலம் கட்டுப்பட மறுத்தது. தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது.
தாஸ்தாயெஸ்வ்கி,
போர்களத்துக்குச் செல்லாமல் போராளியாய் இருந்தேன். சிறைக்குச் செல்லாமல் சிறையில் இருந்தேன். துரோகம் செய்யாமல் துரோகியானேன். நன்மை புரியாமல் நல்லவனாய் நடந்தேன் பாறையின் வடிவங்கள் கொந்தளிக்கலாயின. கொந்தளிப்பு வடிவமாயிற்று.
தாஸ்தாயெஸ்வ்கி,
ஒரு மிளகாய்ப்பூச்சி துவக்கி வைத்த யாத்திரை திசைகளைத் தொலைத்து,ஸ்தூலங்களின் பிளவுகளில் பிறப்புறுப்பு மாட்டிக்கொண்டு மரண ஓலம் பெருக்கிற்று. எங்கனும் குறுக்கும் நெடுக்குமாய் குற்றங்களின் பாதை பிளவுகள், என்ன வினோதமான இருத்தல் நிலை அது. அவற்றின் ஒரு முனை சதா இந்தக் கணத்திலும், மறுமுனை நம் மூதாதையரின் விரல்களிலுமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மனிதப் பிரக்ஞய் பிளவுகளையும், இணை மானங்களையும், கொண்டு சதா தன்னை செய்து கொண்டிருக்கிறது. இதன் அனுபவ நிலை என்ன தெரியுமா,
தாஸ்தாயெவ்ஸ்கி?
தொடர்ச்சியான குழப்பநிலை, வாழ்வின் இயல்பான குதூகலங்கள் வற்றிய குளம், குளத்தின் மேல் அறிவின் அரூர் பொரியல் மஞ்சு மூட்டம், பாசாங்கு ஆன்மீகத்தின் விபத்துகளை அறியமுடியாத குருட்டுத்தனம் வடிவங்கள் ஒன்றின்மேல் ஒன்று நிழலாக படிய தொடங்கின.
ரஸகோல்நிக்காவ் திரு.ரஸகோல்நிக்காவ் அவர்களே! தங்களை ஒரு முறை தேநீர் விருந்துக்கு அலைக்க விரும்புகிறேன். மாஸ்கோவின் பாலத்தில், சாயந்திரம், உங்களுக்காக சாய்ந்தவாறு காத்திருக்கிறேன். நீங்கள் எந்த நேரமும் வரலாம். ஆனால் உறுதியாய் வருவீர்கள். ஜனங்கள், ஜன்னல்களை சாத்திக்கொண்டு உறக்கம் கனவு காமம் என்னும் சிறு துவாரங்களில் அடைந்து கொள்ளும் போது தள்ளாட்டதோடு நீங்கள் சுற்றித் திரிவீர்கள். துயரம், ஒரு பாறையைப் போல் மலர்ந்து அதன் மிருதுவான செய்தி உங்கள் கலைந்த தலையில் ஒட்டிக்கொண்டு வருகிறது.
தாஸ்தாயெவ்ஸ்கி, ரஸகோல்நிக்காவ் அதுதானே உனது குற்றமும் தண்டனையும் நாவலின் மைய மனிதன். இப்போது ஏதும் சரியாக நினைவு இல்லை. உனது புத்தகம் வாசித்து வெகுகாலம் ஆகிவிட்டது. ஒரு வடிவமற்ற உணர்ச்சியின் கீற்றுகள் மட்டும் இப்போது தெரிகின்றன.
நான் படித்திருந்த நிறையப் புத்தகங்களில் மனிதர்களின் நிழலாக கதாபாத்திரங்கள் இயங்குவதும் அவ்வியக்கங்களின் நிழலாக அழகியல் பரந்து கிடப்பதும் கண்டிருக்கிறேன்.
தாஸ்தாயேவ்ஸ்கி,
உனது ” குற்றமும் தண்டனையும்” புத்தகம் முதன்முதலாக பச்சை மாமிச மாக என்னுடன் இருந்தது. என்னை வெற்று நிழலாக்கியது. மனித வாசகன் நிழலாகவும், கதாப்பாத்திரம் மாமிசமாகவும், ஆனது எப்படி?
மர்மக் கதையின் ருசி உன்னிடம் உள்ளது என்றான். என் நண்பன். ஹா! மர்மம். தாஸ்தாயேவ்ஸ்கி, அகாலம் நித்தியத்துவம், பரவெளி போன்றவை எவ்வளவு வெளிப்படையானவை அவற்றின் பால் ஜவ்வு மிட்டாய் கவர்ச்சியும் எனக்கு இல்லை. தினசரி வாழ்க்கை எத்தனை கோடி மர்மங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு டம்ளர் கீழே விழும்போது அண்ட சராசர நிகழ்ச்சி போக்கும் திசைமாறி விடுகிறதே! ஹா, முன்ன் அழியாத புது கணம். புது பிரம்மாண்டம். பயமாக இருக்கிறது. மர்மமாக இருக்கிறது.
இந்த அன்றாட வாழ்வின் மர்மங்களுக்கும், உனது நாவலுக்கும் ஏதாவது இணைப்பு வைத்திருக்கிறாயா?
உன் ரஸகோல்நிக்காவ், கூடவே குடித்தேன் கூடவே அலைந்தேன். கூடவே பேசினேன். கூடவே பயந்தேன்.
அவன் மாமிசம்,
நான் நிழல்
அவன் இயக்கம்.
நான் குழப்பம்,
ரஸகோல்நிக்காவ் வாழ்க்கையில் நான் பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொரு கணத்திலும், என் வாழ்வின் கணங்களில் அவன் விடாப்பிடியாக பங்கெடுத்தவாறு இருந்தான். நான் பஸ்ஸில் சண்டை போடுகையில் கூடவே சண்டை போட்டான். நான் சோர்வுற்று முழிக்கையில் கூடவே முழித்தான்.
எனக்கென்று தனிமனம் இருந்தது. போலவும், தனிச் சாலை இருந்தது போலவும் எழுதுகிறேன் இல்லையா, உண்மையில் தாஸ்தாயேவ்ஸ்கி, என்ன நடந்தது?
எண் வடிவங்கள் மெல்ல அசைந்து மிதக்கலாயின. பல்வேறு படிமங்களின் கூட்டங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தாலோசித்து திகைப்பு நிலையை நெருங்கின என் மூளை வழியே ஓடிக்கொண்டிருந்த நீண்ட ஒற்றையடிப்பாதை மெல்ல எதிலோ புதையலாயிற்று.
மனிதச் சதுக்கத்தில் நெஞ்சளவு ஓடிக்கொண்டிருந்த துயரத்தின் ஆறு, தலையை முக்கி பாயலாயிற்று. பாறைகளில் தொடுக்கிக் கொண்டிருந்த வடிவங்கள் பயங்கொண்டு அலறின. மனக்குகை அதிர்ந்து குப்புற விழுந்தது. மனித நாகரீகமும், பாழும் சந்திக்கும் உணர்ச்சி அம்பலம் தோன்றியது.
தர்க்கங்கள், தர்க்கத்தின் அமைப்பியல்கள், கருத்துக்கள், கருத்துக்களின் அமைப்பியல்கள், கருத்துக்கள் கருத்துக்களின் ஸ்தூல வடிவங்கள் உணர்ச்சிகள் அவற்றின் வெளியீட்டு வடிவங்கள் என வெவ்வேறு இழைகளை பின்னி இயங்கிக் கொண்டிருந்த தறி மெல்ல தன் ஓட்டத்தை நிறுத்தியது. ரூபமற்ற ஆதி கேள்விகள், சீழ்கள் வடியலாயின, அதன் ரோகம் சகல மூடிகளையும் இழந்து வெளித்தெரியலாயிற்று. ஆ! என் தலையில் இந்த ஆபாசத்தையா இது காறும் சுமந்திருந்தேன்.
பாறையின் மிச்ச சொச்ச வடிவங்கள் கடைசி சொட்டாய் விழ தொடங்கிற்று. பாறையின் வடிவ உற்பத்தி நிறுத்தம் கண்டது.
வெவ்வேறு விட்டங்களில், வெவ்வேறு வளையங்களில் சுழன்று கொண்டிருக்கும் விதிகள் கண்முன் சுற்றலாயின. விதிகள் பிறப்பதும் முதுமை அடைவதும், சாவதும் ரத்த நாளங்களில் அதிரலாயிற்று.
உனது ரஸகோல்நிகாவ் என் முன்வாசல் வழி புகுந்து, கொல்லைச் சுவரில் மீசையால் தேடிக்கொண்டிருக்கும் மிளகாய் பூச்சியை கடந்து, எங்கு சென்று விட்டான் என்று எனக்கு இப்போது தெரியவில்லை. அதைத் தேடும் ஆர்வமும் இப்போது எனக்கு இல்லை.
பிற, பின் உன் அன்புள்ள,
தேவதச்சன்.
[tds_note]
நன்றி : ‘கல்குதிரை’ இதழ்
கல்குதிரை இதழ் 8 – (1990 டிசம்பர் – 1991 மே) “தாஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழ்” -இல் இடம்பெற்ற கடிதம் இது. [/tds_note]