Saturday, May 28, 2022

மஜ்னூன்


ஜ்னூன் இறந்து சொர்க்கத்தை வந்தடைந்தான். மேலோகத்திற்கு வந்தும் துயரிலேயே இருந்தான். கண்ணெதிரில் நின்று கொண்டிருந்த கடவுளைக் கூட அவன் சட்டை செய்யவில்லை. அவரும் எதோ குற்ற உணர்வில் அவன் முகத்தை பார்த்துப் பேசத் தயங்கித் தடுமாறிக் கொண்டிருந்தார்.

“அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது” என்று தேவதைகள் எல்லாம் கடவுளை நிந்தித்துக்  கொண்டிருந்தார்கள். லைலாவையும் மஜ்னூனையும் இப்படி அநியாயமாகப் பிரித்துவிட்டார் என்ற  வருத்தம்தான் அவர்களின் கோபத்திற்கான முகாந்திரம்.  இருவரையும் சேர்ந்து வாழவிட்டிருக்கலாம். அவரின் செய்கைக்கு எந்த நியாயங்களும் கிடையாது என்பது அவர்களின் வாதமாக இருந்தது.

இவ்வுலகில் நித்தமும் நிகழும் துயர நாடகங்களில் இவர்களின் கதையும் பத்தோடு பதினொன்றாக மறைந்துவிடுமென்று நினைத்த கடவுளுக்கு, தன் கணிப்பு தவறாகிப் போனதில் ஏமாற்றம் தான். கடைசியில் இக்காதல் கதை அமரகாவியமாக மாறி வரலாறு முழுவதும் தன்னை மோசக்காரனாக பிரதிபலித்து விடுமோவென்ற அச்சத்தில் சோர்ந்து போனார். அதே சமயம், அவர்களின் பிரிவு இவரையும் மனதளவில் பாதித்திருந்தது. ஏதாவது செய்து பிராயச்சித்தம் தேடிக்கொள்ள நினைத்தார்.

“மஜ்னூன்… சொர்க்கத்திற்கு வந்தும் துயரமாக இருப்பவன் நீ ஒருவன் மட்டும் தான். என் படைப்பில் உன்னை போன்று ஒருவனை இல்லை உங்களைப் போன்று இருவரை நான் சந்தித்தது கிடையாது. லைலாவையும் சேர்த்துதான் சொல்கிறேன். நீ அவள் மீது வைத்திருக்கும் பெருங்காதலைக் கண்டு வியந்து போகிறேன். நான் மனிதர்களை படைத்தேன், நீங்கள் காதலைப் படைத்தீர்கள். காதல் உங்களை, என்னையே மறக்கடிக்க வைத்துவிடும் போல! உனக்கு முன்பே லைலா இங்கு வந்து சேர்த்துவிட்டாள். புதிதாக வருபவர்கள் இது சொர்க்கமா நரகமா என்று குழம்பிப் போய்விடும் அளவுக்கு சோகமே உருவமாக இருக்கிறாள். அவளது துயரின் வீச்சு மற்றவர்களையும் பாதிக்கிறது. சொர்க்கத்தின் இயல்பையே மாற்றி விடுவாள் போலிருக்கிறது.”

“உங்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும். நடந்து முடிந்த எதையும் என்னால் மாற்ற முடியாது. கடவுளே ஆனாலும் சில விதிகளை என்னாலும் மீறமுடியாது. நான் சொல்வது உனக்கு புரியுமென்று நினைக்கிறேன். அதனால் அதற்கு உட்பட்டு விரும்பிய வரத்தைக் கேள். அதை உனக்குத் தருகிறேன். அவளிடமும் இதையே கேட்டேன் பதிலில்லை, என்னுடன் பேச மறுக்கிறாள். நீயாவது கேள்!”,  என்ற கடவுளைப் பார்த்து புன்னகைத்தான். அதில் ஏளனம், இறுமாப்பு, கோபம், விரக்தி என எல்லா உணர்வுகளும் கலந்திருந்தன.

“இறைவா! லைலா தன் அந்திம நாட்களில் என்னை நினைத்து மனமுருகி என் பெயரைப் பிதற்றியப்படியே  உயிரை விட்டிருக்கிறாள். தான் இறப்பதற்கு முன்பு ஒருமுறையேனும் என்னை  பார்த்து விடுவதுதான்  அவளின் கடைசி ஆசை, நீங்கள் செய்த குழப்பத்தில் என்னால் அவளை பார்க்கவே முடியாமல் போனது.  அந்நாட்களில் நான் அவளின் பிரிவைத் தாங்க முடியாமல் மதியிழந்து பாலைவனத்திலும், பாரசீக நகர  தெருக்களிலும் பைத்தியகாரனாகத் திரிந்துக் கொண்டிருந்தேன். செய்தி அறிந்து அவளைப் பார்க்க நான்  ஓடோடிச் சென்ற பொழுது, அவள் நிரந்தர உறக்கத்திலிருந்த கல்லறையைக் கை நீட்டிக்  காண்பித்தார்கள்.”

“நான் மோசமானவன்!! என்னால் வாழ்நாள் முழுவதும் வலியையும், வேதனையையும் தவிர வேறு எதையுமே  அவளுக்கு முழுதாய்ப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. அதனால் கடைசி நிமிடங்களில், நான் அவள்  அருகில் இருக்க விரும்புகிறேன்” என்றான்.

அதற்கு கடவுள் “சரி, அந்த வரத்தை உனக்கு நான் தருகிறேன். ஆனால் சிலவிதிகளுக்கு நீ கட்டுப்பட  வேண்டும். முதல் விதி, நீ பூலோகத்திற்கு சென்ற பிறகு எந்தக் காரணம் கொண்டும் அங்கு யாருடனும் பேசக்  கூடாது, மிகமுக்கியமாக லைலாவிடம். இரண்டாவது, எவரையும் தொட்டுவிடக்கூடாது. கடைசியாக, அங்கு  நிகழ்ந்து கொண்டிருக்கும் எதையும் மாற்ற முயலக்கூடாது. இவற்றை மீறினால், அடுத்த நொடியே நீ இங்கு  வந்து விடுவாய். உனக்கு புரியாத மொழியில் சொல்வதென்றால் காலப்பயணம் செய்யப்போகிறாய்.  மனிதர்களின் அறிவிற்கும் சிந்தனைக்கும் அப்பாற்பட்டவொன்று. நீ அங்கு ஒருவரின் கண்ணுக்கும்   புலப்படமாட்டாய், அதனால் நீயாக உன் சுயக் கட்டுப்பாட்டை இழக்கும் வரைக்கும் இந்த விதிமுறைகளை  கடைபிடிப்பதில் சிரமமிருக்காது” என்றார். மஜ்னூன் அதற்கு உடன்பட்டான்.

லைலா கணவனின் மறைவிற்கு பிறகு மஜ்னூனை நினைத்து அந்த துயரத்திலேயே உருகி கொண்டிருந்தாள்.  அவளை மஜ்னூனிடமிருந்து பிரித்து  அந்த பணக்காரக் கிழவனுக்கு கட்டாயத்  திருமணம் செய்து  வைத்தார்கள். உறவுகளுக்கும், கலாசாரத்திற்கும் கட்டுப்பட்டு இத்தனை நாள் வரை ஜடமாக வாழ்ந்து  வந்தவள், இதுவரைக்கும் தன்னையும் அவனையும் பிரிக்கும் புறக்காரணமாகயிருந்த மணவாழ்க்கையும்  முடிவுக்கு வந்தப்படியால், அடக்கிவைத்திருந்த மஜ்னூன் மீதான காதல் அவளையும் மீறி கிளர்த்தெழுந்து  விட்டிருந்தது. அவனின் நினைவிலேயே ஊண், உறக்கம் மறந்து, கடைசியில் நோயுற்று மரணப் படுக்கையில்  விழுந்தாள்.

மஜ்னூன் முற்பிறப்பில் தவறவிட்டதை இப்பொழுது கண்ணெதிரே பார்த்தபடியிருந்தான். அந்த துயரத்தை  அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் வாங்கி வந்தது வரமல்ல சாபம் என்பது அவனுக்குப்  புரிந்தது. உயிரிலும் மேலாக நேசித்த ஒருத்தியை இந்தக் கோலத்தில் பார்க்க அவனால் முடியவில்லை. தான்  ஒரு போதும் சரி செய்ய முடியாத பெரும் தவறிழைத்து விட்டதை உணர்ந்தான். ‘அந்த பள்ளிக்கு நான்  சென்றிருக்கக் கூடாது, அவளை நான் காதலித்திருக்கவே கூடாது, வாழ்நாள் கடந்தும் தொடரும் ஓர்  துயரத்திற்கான சந்திப்பை நிகழ்த்திவிட்டேன் என்னால் தானே இவ்வளவு துன்புறுகிறாள்.’ இத்தனை  குழப்பத்திற்கும் தானே காரணமென்று கலங்கிப் போனான். இதுவரை அவளை அவன் தொட்டுப் பேசியது  கூட இல்லை. கண்களினாலும், கவிதைகளினாலும் காதல் வளர்த்தார்கள். இன்று மரணத்தின் விளிம்பில் தன்  பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும் லைலாவின் அருகில் சென்றான். அவள் வேதனைக்கு நிரந்தர  விடுதலையளிக்க விரும்பினான். அவள் உதட்டில் முத்தமிட்டான். அவளுக்கு ஏதோ கனவு காண்பது  போன்றிருந்தது. திக்பிரமையிலேயே உயிரை விட்டாள். அவன் கண்கள் தன் கட்டுப்பாட்டை இழந்து  விட்டிருந்தது. அவனும் விதியை மீறிவிட்டிருந்தான்.


  •  நரேஷ்
பகிர்:
Latest comments
  • அருமையான கற்பனை! 👍🏽👍🏽👍🏽

    • நன்றி ருஷா !

  • Superw dear 💚

leave a comment

error: Content is protected !!