பலகாலம் முன்பு என்சோ யுகத்தில் மீடெரா புத்தவிகாரத்தில் கோகி என்றொரு புத்த துறவி இருந்தார். பிரமாதமான ஓவியர் என்று அறியப்பட்டிருந்த அவர், பறவைகள், பூக்கள், நிலப்பரப்புகள், புத்தரின் திருவுருவங்கள் என வரையறைகளற்று வரைந்தார். புத்தவிகாரத்தில் தன் கடமைகளை முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும்போதெல்லாம் அவர் சிறு படகிலேறி ஏரியில் பயணிப்பார். அங்கு மீனவர்கள் தூண்டில் இட்டும் வலைவீசியும் பிடித்துவைத்திருக்கும் மீன்களை விலைகொடுத்து வாங்கிவந்து ஏரியை ஒட்டிய சிறிய வளைகுடாவில் விடுவிப்பார். அவை அங்கு நீந்துவதைப் பார்ப்பார். அந்தக் காட்சியை அப்படியே ஓவியமாக்குவார். வருடக்கணக்காக இதைச் செய்துவந்ததில் தேர்ந்த நுட்பமும் தேர்ச்சியும் பெற்றிருந்தார்.
ஒரு முறை அவர் ஓவியம் வரைவதில் ஆழ்ந்திருந்தபோது, உறக்கம் ஆட்கொள்ள, சிறியதும் பெரியதுமான பலவித மீன்களோடு தானுமொரு மீனாய் தண்ணீருக்குள் நீந்திக்கொண்டிருப்பதைப் போன்று கனவு கண்டார். விழித்தெழுந்தவுடனேயே, தான் கண்ட கனவை அப்படியே ஓவியமாக்கி சுவரில் மாட்டிவைத்தார்.
‘என் கனவுகளின் கெண்டைமீன்’ என்று அதற்குப் பெயரிட்டார். மலைக்கவைக்கும் அந்த ஓவியத்தின் அழகு கண்ட மக்கள், அதைப் பெறுவதற்கு முட்டிமோதிக்கொண்டு வரிசையில் நின்றனர். கோகியோ தான் வரைந்த பூக்கள், பறவைகள், இயற்கைக் காட்சிகள் உள்ள ஓவியங்களை வேண்டுவோருக்குக் கொடுத்தாரே தவிர, மீன் ஓவியங்களை மட்டும் விடாப்பிடியாகத் தன்னிடத்திலேயே வைத்துக்கொண்டார்.
‘உயிருள்ள ஜீவன்களைக் கொன்று தின்னும் சராசரி மனிதர்களுக்கு இந்த பிக்கு தான் வளர்க்கும் மீன்களை ஒருபோதும் தரமாட்டார்’ என்று விளையாட்டாய் சொல்வார். அவருடைய மீன் ஓவியங்கள் குறித்த சிலாகிப்பும் அவரது இந்த தமாஷான பேச்சும் நாடு முழுக்கப் பரவியது.
ஒரு முறை அவருக்கு உடல்நலமில்லாமல் போனது. ஏழு நாட்கள் கடந்த நிலையில் ஒரு நாள் அவர் சட்டென்று கண்களை மூடிக்கொண்டார். மூச்சு நின்றுபோனது. நினைவும் தப்பிப்போனது.
தகவலறிந்த அவருடைய சீடர்களும் நண்பர்களும் துக்கம்காண வந்தனர். ஆனால் அவருடைய மார்பு இன்னமும் லேசான கதகதப்புடன் இருப்பதைக்கண்டு அவர் உயிர் பிழைத்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் சூழ்ந்தமர்ந்து அவரைக் கவனித்துக் கொண்டிருந்தனர். மூன்று நாட்களுக்குப் பிறகு அவருடைய கை கால்களில் மெல்லிய அசைவு ஏற்பட்டது. சட்டென்று ஆழ்ந்த பெருமூச்சுடன் விழித்த அவர், ஏதோ தூக்கத்திலிருந்து எழுபவர் போல எழுந்து அமர்ந்துகொண்டார்.
அவரைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்து, “மனிதர்களுடனான பந்தத்தை வெகுகாலமாய் மறந்துபோயிருந்தேன். எவ்வளவு நாட்கள் ஆகியிருக்கின்றன?” என்று கேட்டார். அவருடைய சீடர்கள் சொன்னார்கள், “குருவே, மூன்று நாட்களுக்கு முன்பே உங்கள் மூச்சு நின்றுபோய்விட்டது. புத்தவிகாரத்தைச் சேர்ந்தவர்களும், உங்களுக்கு நெருக்கமான மற்றவர்களும் உங்களுடைய ஈமச்சடங்கைப் பற்றிக் கலந்தாலோசிக்க வந்துவிட்டார்கள். ஆனால் உங்கள் மார்பில் இன்னும் கதகதப்பு இருப்பதைக் கண்டு, உங்களை அடக்கம் செய்யாமல் நாங்கள் காத்திருந்தோம். இப்போது நீங்கள் உயிர்பிழைத்து வந்துவிட்டீர்கள். நாங்கள் இப்போது மகிழ்ச்சியாய் இருக்கிறோம், நல்லவேளை, நாங்கள் உங்களைப் புதைக்கவில்லை.”
கோகி தலையசைத்து ஆமோதித்தார்.
“நம்முடைய ஈகைமானான, டைய்ராவின் அதிகாரி வீட்டுக்கு யாராவது உடனே சென்று, நான் மர்மமான முறையில் உயிர்த்து வந்துவிட்டேன் என்ற தகவலை அறிவியுங்கள். அந்த அதிகாரி இப்போது சாகே மதுவை கோப்பைகளில் நிறைத்துக்கொண்டு, மெல்லிய துண்டங்களாக்கப்பட்ட மீனை உண்பதற்கு தயாராகிக் கொண்டிருப்பார். ஆனால் அப்பெருவிருந்தை கொஞ்சநேரம் நிறுத்தச் சொல்லிவிட்டு உடனடியாக விகாரத்துக்கு வரச்சொல்லுங்கள். நான் அவரிடம் மிகவும் அபூர்வமான கதையொன்றை சொல்லப்போகிறேன் என்று சொல்லுங்கள். அப்படியே மற்றவர்கள் எல்லாரும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றும் கவனமாகப் பார்த்துவாருங்கள். நான் என்ன சொன்னேனோ அதை மட்டும் அப்படியே சொல்லிவிட்டு வாருங்கள். வேறு எதுவும் சொல்லவேண்டாம்.”
சீடனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அதிகாரியின் இல்லத்துக்குச் சென்று பணியாளரிடம் அப்படியே விஷயத்தைச் சொல்லி அனுப்பிவிட்டு, உள்ளே என்ன நடக்கிறது என்று மெதுவாக எட்டிப்பார்த்தான். அதிகாரி, அவருடைய தம்பி ஜூரோ, அவருடைய பாதுகாவலன் கமோரி மற்றும் பலரும் வட்டமாக அமர்ந்து சாகே மதுவருந்திக் கொண்டிருந்தனர். சீடன் திடுக்கிட்டான். ஏனெனில் இந்தக் காட்சி அப்படியே அச்சுப்பிறழாமல் அவனது குரு சொன்ன காட்சியை ஒத்திருந்தது.
தகவல் தெரிவிக்கப்பட்டதும் அதிகாரியின் வீட்டிலிருந்தோர் பெரிதும் ஆச்சர்யம் அடைந்தனர். கையிலிருந்த உண்குச்சிகளை கீழே வைத்துவிட்டு அதிகாரி, தன் தம்பியுடனும் பாதுகாவலனுடனும் விகாரத்துக்கு விரைந்தார்.
தலையணையிலிருந்து மெல்லத் தலையைத் தூக்கி அதிகாரியைப் பார்த்த கோகி அவரது வருகைக்காக நன்றி தெரிவித்தார். அதிகாரியும் கோகி உயிர்பிழைத்து வந்தமைக்கு வாழ்த்துரைத்தார்.
“நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் எப்போதாவது புன்ஷி என்ற மீனவனிடமிருந்து மீன் வாங்கியிருக்கிறீர்களா?” கோகி கேட்டார்.
வியப்படைந்த அதிகாரி, “ஆமாம், வாங்கியிருக்கிறேன். உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டார்.
கோகி சொன்னார், “ஒரு கூடையில் மூன்றடிக்கு மேல் நீளமுள்ள மீனுடன் அந்த மீனவன் உங்கள் வீட்டின் வெளிவாயிற்கதவு வழியாக உள்ளே வந்தான். நீங்கள் வீட்டின் தெற்குப்பக்க அறையில் உங்கள் தம்பியோடு இகோ விளையாடிக் கொண்டிருந்தீர்கள். கமோரி உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து பெரிய பீச் பழத்தைத் தின்றபடி விளையாட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவ்வளவு பெரிய மீனை மீனவன் கொண்டுவந்ததைப் பார்த்ததும் மகிழ்ந்துபோன நீங்கள், அவனுக்கு ஒரு தாம்பாளம் நிறைய பீச் பழங்களைக் கொடுத்ததோடு, உங்களுடைய சாகேவையும் அவனோடு பகிர்ந்துகொண்டீர்கள். சமையற்காரர் மிகுந்த பெருமையோடு அந்த மீனைப் பெற்று மெல்லிய துண்டங்களாக வெட்டினார். இதுவரையில் நான் சொன்னதெல்லாம் சரிதானே?” என்றார்.
இதைக் கேட்டதும் அதிகாரியும் அவருடைய ஆட்களும் சந்தேகமும் குழப்பமும் அடைந்தனர். “இவ்வளவு துல்லியமாக இந்த விவரங்கள் எல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தன?” என்று கேட்டார்கள்.
கோகி சொன்னார், “நோய்மையின் வாதையை என்னால் தாளமுடியவில்லை. என் மூச்சு நின்றுபோனதைக் கூட அறியாதவனாய், காங்கையிலிருந்து கொஞ்சமாவது விடுபடும் பொருட்டு என்னுடைய கோலை ஊன்றிக்கொண்டு மெதுவாக வாசற்கதவுக்கு வெளியில் சென்றேன். மெல்ல என் நோய்மை குறையத் தொடங்கியது. கூண்டை விட்டு மேகவெளிக்குத் திரும்பும் பறவை போல நான் என்னை உணர்ந்தேன். மலைகளையும் ஊர்களையும் சுற்றிக் கடந்து மறுபடியும் ஏரிக்கரையை வந்தடைந்தேன். ஜேட் கற்களைப் போன்ற வெளிர் பச்சைநிறத் தண்ணீரைக் கண்டதும் புற உலகிலிருந்து விடுபட்டதுபோல் உணர்ந்தேன். நீந்தலாம் என்று எண்ணி என்னுடைய மேலங்கியைக் களைந்துவிட்டு நீருக்குள் பாய்ந்தேன். நீரைக்கிழித்துக்கொண்டு ஆழத்துக்குச் சென்றேன். அங்குமிங்கும் நீந்தினேன். என் விருப்பம் போல கும்மாளமிட்டேன். இவ்வளவுக்கும் நான் தண்ணீருடன் இணக்கமாய் வளர்ந்த குழந்தை இல்லை. எல்லாமே முட்டாள்தனமான கனவு என்று இப்போது தோன்றுகிறது.
ஆனால் என்னதான் இருந்தாலும் ஒரு மனிதனால் மீனின் இலகுத்தன்மையுடன் நீரில் நீந்த இயலாது. நான் ஒரு மீனைப் போல நீந்திக் களியாட்டம்போட பெரிதும் விரும்பினேன். பக்கத்திலிருந்த பெரிய மீன் சொன்னது, “குருவின் ஆசை நிறைவேற்றப்பட்டது. தயவுசெய்து இங்கேயே காத்திருங்கள்” சொல்லிவிட்டு ஆழத்தில் சென்று மறைந்தது. சற்றுநேரத்தில் கிரீடமும் ஆடைகளும் அணிந்த ஒருவன் அந்தப் பெரிய மீனின் மேல் அமர்ந்தபடி தோன்றினான். பெரிய மீனுக்குப் பின்னால் நிறைய மீன்கள் அணிவகுத்து வந்தன. அவன் என்னிடம் சொன்னான்,
‘நான் ஏரிக்கடவுளிடமிருந்து செய்தி கொண்டுவந்திருக்கிறேன். முதிய துறவியான நீங்கள் மனிதர்களிடம் பிடிபட்ட மீன்களை மீண்டும் நீரில் விடுவித்ததன் மூலம் ஏராளமான புண்ணியத்தை சம்பாதித்திருக்கிறீர்கள். இப்போது தண்ணீருக்குள் வந்திருக்கும் நீங்கள், ஒரு மீனைப் போல நீந்த பெருவிருப்பம் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்ச காலத்துக்கு நான் உங்களுக்கொரு தங்கக் கெண்டைமீனின் உடலைத் தருகிறேன். இந்த தண்ணீர் உலகத்தின் அத்தனை சந்தோஷங்களையும் அனுபவியுங்கள். ஆனால் எச்சரிக்கை. ஒருபோதும் இரையின் வாசனையால் கவரப்பட்டு தூண்டிலில் சிக்கி உங்கள் வாழ்க்கையை இழந்துவிடாதீர்கள்.”
சொல்லிவிட்டு அவன் மறைந்துவிட்டான். திகைப்புடன் நான் என்னைப் பார்த்தபோது, பளபளக்கும் தங்கச் செதில்களைக் கொண்ட கெண்டைமீனாய் உருமாறியிருந்தேன். அந்த அதிசயத்தைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் நான் என் வாலை விசிறிக்கொண்டும் துடுப்புகளை அசைத்துக்கொண்டும் என் இஷ்டம் போல நீந்த ஆரம்பித்தேன்.
முதலில் நாகாரா மலையிலிருந்து தாழ வீசிய காற்று எழுப்பிய அலைகளோடு பயணித்தேன். அதன் பிறகு ஷிகா வளைகுடாவை ஒட்டி உலவித்திரிந்தேன். அங்கே மக்கள் நீரில் ஆடை நனையுமளவுக்கு நெருங்கி வருவதும் விலகிச் செல்வதுமாக இருப்பது என்னைக் கலவரப்படுத்தியது. எனவே உயர்ந்துநிற்கும் ஹிரா மலையின் பிம்பம் பிரதிபலிக்கும் ஆழத்துக்குப் பாய்ந்து சென்றேன். இரவு நேரத்தில் கனவுபோல் என்னை ஈர்த்த, கட்டாடா படகின் மீன்பிடி ஒளிவீச்சின் முன் என்னை மறைத்துக்கொள்வதற்குப் பெரும்பாடுபட்டேன்.
கருநாவற்பழ இரவின் இருளில் நீரில் இளைப்பாறிக்கொண்டிருந்த நிலவு, ககாமி மலைச்சிகரத்தின் உச்சியில் தெள்ளந்தெளிவாய் ஒளிர்ந்துகொண்டும் எண்பது படகுத்துறைகளின் எண்பது முனைகளின் நிழல்களோடு ஊடாடிக்கொண்டும் கவின்மிகு காட்சியை உருவாக்கியிருந்தது. அலையில் பிரதிபலித்த ஒகினோ, சிக்குபு தீவுகளின் செம்மரச்சட்ட வேலிகள் என்னைத் துணுக்குறச்செய்தன. இபுக்கி மலையிலிருந்து வீசும் காற்றைக் கிழித்துக்கொண்டு கோரைப்புற்களின் ஊடே கட்டுமரமொன்று கடந்துபோனபோது சடக்கென்று கனவுகளிலிருந்து விழித்துக்கொண்டேன். யேபேஸ் படகுக்காரர்களின் தேர்ச்சிபெற்ற துடுப்புகளிடமிருந்து சாமர்த்தியமாய்த் தப்பினேன், பிரமாண்டமான சேடா பாலத்தின் பாதுகாவலனால் பலமுறை துரத்திவிடப்பட்டேன். கதிரவனின் வெம்மை பரவும்போது மேற்பரப்புக்கு வருவதும் காற்று பலமாய் வீசும்போது ஆழத்துக்கு நீந்திச் செல்வதுமாய் இருந்தேன்.
திடீரென்று எனக்குப் பசிக்கத் தொடங்கியது. உண்ணுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று அங்கும் இங்கும் தேடினேன். பசிவெறியுடன் சுற்றிலும் நீந்தி அலைந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. கடைசியாக தண்ணீருக்குள் ஊசலாடிக் கொண்டிருந்த புன்ஷியின் தூண்டில் நரம்பு கண்ணில் பட்டது. அவனுடைய தூண்டில் இரை மிகுந்த வாசனையுடன் இருந்தது.
அப்போது ஏரிக்கடவுளின் எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. நானொரு புத்த துறவி. கொஞ்ச நேரம் உணவு கிடைக்கவில்லை என்பதற்காக மீனின் இரையை உண்ணுமளவுக்கு எப்படி நான் இறங்கிப்போக முடியும்? நான் அங்கிருந்து நீந்தி விலகிச் சென்றுவிட்டேன். நேரம் செல்லச் செல்ல பசியின் கொடுமை அதிகரித்துக்கொண்டே போனது. நான் என் எண்ணத்தை மறுபரிசீலனை செய்தேன். என்னால் இதற்கு மேல் பொறுக்கமுடியாது. இரையை விழுங்கினாலும் பிடிபடும் அளவுக்கு அஜாக்கிரதையாய் இருப்பேனா? எனக்கு புன்ஷியை வெகு காலமாகத் தெரியும். ஏன் நான் பின்வாங்கவேண்டும்? நான் இரையைக் கவ்வினேன்,
புன்ஷி மிகச்சரியாக தூண்டிலை வெளியிலிழுத்து என்னைப் பிடித்துவிட்டான். ‘ஏய்.. என்ன செய்கிறாய்?’ நான் கத்தினேன். ஆனால் அவன் அதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. அவனுடைய படகை கோரைப்புற்களோடு கட்டிவைத்தான். மெல்லிய கயிற்றை எடுத்து என் தாடைவழி செலுத்திக் கூடையினுள் போட்டுக்கொண்டு உங்கள் வீட்டு வெளிவாயில் கதவுவழி உள்ளே வந்தான். தெற்குப்பக்கமிருந்த அறையில் நீங்கள் உங்கள் தம்பியுடன் இகோ விளையாடிக் கொண்டிருந்தீர்கள். கமோரி உங்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து பழம் தின்றுகொண்டிருந்தான். புன்ஷி அவ்வளவு பெரிய மீனைக் கொண்டுவந்ததைப் பார்த்து நீங்கள் அகமகிழ்ந்து அவனைப் பாராட்டினீர்கள். அப்போது நான் உங்கள் அனைவரிடமும் சொன்னேன், ‘உங்கள் யாருக்குமே கோகியை நினைவில்லையா? தயவுசெய்து என்னை விடுவியுங்கள், என்னை ஆலயத்துக்கு திரும்பிச் செல்லவிடுங்கள்.”
நான் மீண்டும் மீண்டும் பலமுறை கத்தினேன், ஆனால் நீங்கள் யாருமே என் குரல் காதில் விழுந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. மாறாக. கைத்தட்டி மகிழ்ச்சியில் ஆரவாரித்திருந்தீர்கள்.
சமையற்காரர் இடக்கை விரல்களால் என்னிரு கண்களையும் அழுத்திப் பிடித்துக்கொண்டு வலக்கையில் பெரிய கூர்கத்தியை எடுத்துக்கொண்டார். என்னை வெட்டுப்பலகையின் மேல் வைத்து வெட்டப்போனபோது, நான் மரணவேதனையுடன் கத்தினேன், “ஒரு புத்த துறவியை இப்படி யாராவது துன்புறுத்தியதாகக் கதை இருக்கிறதா? என்னைக் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்” என்று அலறினேன். ஆனால் யாருமே செவிமடுக்கவில்லை. மிகச்சரியாக வெட்டுப்படப்போகும் சமயத்தில் கனவிலிருந்து விழித்துக்கொண்டேன்.”
அனைவரும் நெகிழ்ச்சியும் வியப்புமாய் அமர்ந்திருந்தனர்.
“குரு சொன்ன கதையைக் கேட்ட பிறகு எனக்கொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. மீன் ஒவ்வொரு முறையும் வாயை அசைத்தது. ஆனால் எந்த சத்தமும் எழவில்லை. இப்படி ஒரு காட்சியை நானே என் கண்ணால் பார்த்தது அற்புதமான விஷயம்.” அதிகாரி சொல்லிவிட்டு ஒரு ஆளிடம் உடனே வீட்டுக்கு ஓடிச்சென்று மிச்சமிருக்கும் மீன் துண்டங்களை ஏரியில் வீசச் செய்தார்.
அதன்பிறகு கோகி பூரண நலம் பெற்று பல காலம் வாழ்ந்து முதுமையில் மறைந்தார். இறுதிக்காலம் நெருங்கும் தருவாயில் அவர் வரைந்த மீன் ஓவியங்கள் எல்லாவற்றையும் ஏரிக்கு எடுத்துச்சென்று நீரில் விட்டார். காகிதத்திலும் பட்டுத்துணியிலும் தீட்டப்பட்டிருந்த ஓவிய மீன்கள் விடுபட்டு உயிரோடு நீந்திச்சென்றன. அதனாலேயே கோகியின் மீன் ஓவியங்களுள் ஒன்றைக் கூட தக்கவைக்க முடியாமல் போயிற்று.
கோகியின் சீடர்களுள் ஒருவரான நாரிமிட்சுக்கு கோகியின் தெய்வீகத் திறமை கைவரப் பெற்றிருந்தது. அவரது காலத்தில் அவரும் புகழ்பெற்றவராயிருந்தார். இளவரசர் கேன்இன் அரண்மனையில் நழுவுகதவு ஒன்றில் அவர் வரைந்திருந்த கோழி ஓவியத்தைப் பார்த்த நிஜக்கோழி ஒன்று அதையும் நிஜமென்று நினைத்து கால்களால் உதைத்து சண்டையிட்டதாம். பழங்கதை ஒன்றில் இச்செய்தி பதிவாகியுள்ளது.
[tds_info]
விகாரம் – புத்த ஆலயம் அல்லது புத்தத் துறவிகள் தங்கும் மடம்
டைய்ரா – ஜப்பானிய படைவீரர் இனமான சாமுராய் இனத்தின் ஒரு பிரிவு
சாகே – அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் மதுவகை
இகோ – வெள்ளை கருப்பு காய்களுடன் விளையாடப்படும் ஒருவகை பலகை விளையாட்டு
இளவரசர் கேன்இன் – ஜப்பானின் அரசகுடும்பத்து வாரிசுகளுள் ஒருவர்
[/tds_info]
- யுடா அகினாரி
தமிழில் : கீதா மதிவாணன்
[tds_info]
ஆசிரியர் குறிப்பு :
யுடா அகினாரி Ueda Akinari (1734-1809)
பதினெட்டாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஜப்பானிய இலக்கியப் படைப்பாளியான யுடா அகினாரி, சிறந்த இலக்கியவாதியும் கவிஞருமாவார். இவரது பெரும்பாலான புனைகதைகள் அமானுஷ்யம் சார்ந்தவை. இவர் நான்கு வயதுக் குழந்தையாயிருக்கும்போது செல்வரான ஒரு வணிகரால் தத்தெடுக்கப்பட்டார். சிறந்த கல்வியறிவு போதிக்கப்பட்டு சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டார். குழந்தையாயிருக்கையில் பெரியம்மையால் கடுமையான பாதிப்புக்குள்ளானார். அவரது பெற்றோர் காஷிமா இனாரி ஆலயத்தின் தெய்வத்திடம் பிரார்த்தனை செய்தனர். அந்தக் கடவுளின் கிருபையாலேயே தான் உயிர்பிழைத்ததாக யுடா அகினாரி நம்பினார். அன்றிலிருந்து அவர் அமானுஷ்யத்தின்பால் பெரும் நம்பிக்கை உடையவரானார். அதனாலேயே பின்னாளில் அவரது படைப்புகள் யாவும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளை உடையவையாகவும் அமானுஷ்யம் சார்ந்தும் அமைந்தன. அவர் புனைகதைகளோடு தத்துவம் மற்றும் ஜப்பானிய செவ்விலக்கியம் சார்ந்து Kokugaku எனப்படும் ஆய்விலும் ஈடுபட்டார். அவர் தனது 76-வது வயதில் கியோட்டோவில் காலமானார். Tales of Rain and the Moon, Tales of Spring rain இரண்டும் இவரது முக்கியப் படைப்புகள். முன்னதை அடிப்படையாய்க் கொண்டு Ugetsu என்ற திரைப்படம் 1953-ல் வெளியானது.
மொழிபெயர்ப்பாளர் :
‘கீதமஞ்சரி’ என்ற வலைத்தளத்தில் கடந்த பத்து வருடங்களாக கவிதைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், ஒளிப்படங்கள் போன்றவற்றைப் பகிர்ந்துவருகிறார். ‘அம்மாச்சியும் மகிழம்பூக்களும்’ என்ற பெயரில் இவரது சிறுகதைத் தொகுப்பும், ‘என்றாவது ஒரு நாள்’ என்ற பெயரில் ஆஸ்திரேலிய எழுத்தாளர் ஹென்றி லாஸனின் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இவர், கடந்த மூன்று வருடங்களாக SBS தமிழ் வானொலியில் ‘நம்ம ஆஸ்திரேலியா’ என்ற தலைப்பில் நிகழ்ச்சிகளை வழங்கிவருகிறார்.
[/tds_info]