அன்றைய சொற்கள்
பின்னிரவில் பெல்லா அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள். அர்த்தமற்ற தன்மை, நடிப்பு என ஒவ்வொரு சிறு விடயமும் நினைவு வருகிறது. ஆனால், அவள் வைத்திருந்தவை யாவும் அச்சிறிய விடயங்களே – இப்போது மீள முடியாமல் இழந்துவிட்ட அவளின் சின்னஞ்சிறு பகுதிகள். மிகவும் நுண்ணியதே ஆயினும் அவளுக்குப் பிடிக்காத விடயங்களால் ஆச்சரியம் அடைந்ததைப் போல நடித்ததை நினைவு கூர்கிறாள். முட்டாள்தனமான, அற்பமான விடயங்கள். கட்புலனாகாமல் போனவையும், சாத்தியமாகும் என அவள் கற்பனை கூடச் செய்திராதவையும் நினைவுக்கு வருகிறது. படுக்கையில் இருக்கிறாள் ஆனால் தூக்கம் வரவில்லை. நடந்து கொண்ட விதத்துக்காகத் தன்னை வெறுப்பதில் தீவிரமாக இருப்பதாலா? தன்னைத் தாழ்த்திக் கொண்டு விட்டதாலா? அல்லது அவள் களைத்திருப்பதாலா? கடுமையாக யோசிப்பதாலா?
பெயரற்ற உறைபனிக்கால இரவொன்றில் பெல்லா குளிரில் மரத்துப் போயிருந்த கால் விரல்களைப் போர்வைக்குள் இழுத்தவாறு கால்களை ஒன்றுடன் ஒன்று தேய்த்துக் கொண்டாள். அவளுக்கு இப்போது தேர்வு செய்வதற்கு ஒரு விடயம் கூட இல்லா விட்டாலும் இன்னமும் அவள் எதையோ தேடிக்கொண்டு தான் இருக்கிறாள் – அதை அவள் எதுவென்று உணராத போதுங்கூட. படுக்கையின் அந்த ஒரு பகுதி எவ்வளவு குளிராக இருக்கிறது என்பதை அவள் உணர்கிறாள். அங்கே ஏதோ அவள் கால்விரல்களைக் காட்டிலும் குளிராக இருக்கிறது, அது அவளுக்கு கொஞ்சம் வியப்பாகவும் இருக்கிறது. பின்னர் அவை மீண்டும் நினைவில் எழுகின்றன – அன்றைய சொற்கள். அவள் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறாள். ‘இது எனக்கு மட்டும் ஆவதில்லை, எல்லோருமே வீடு திரும்பிய பின் இக்கனத்தை உணர்கிறார்கள்’. பெல்லாவுக்கு அது மட்டும் நிச்சயம். அந்த எண்ணம் அவளை ஓரளவு இலகுவாக உணர வைக்கிறது. இருந்தாலும்…
தங்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்பவர்கள் இதை நன்கறிவார்கள். அவர்கள் வெளியே செல்வதை நிறுத்தி விடுகிறார்கள் அல்லது குறைந்தபட்சம் அவ்விதமான இடங்களுக்குச் செல்லாதிருக்கவேனும் அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் அர்த்தமுள்ள விடயங்களைச் சொல்கிற, செய்கிற மக்கள் உள்ள இடங்களுக்குச் செல்வார்கள். அவர்கள் தான் சரி, முற்றிலும் சரி. இன்றிரவு அதைத் தான் செய்திருந்திருக்க வேண்டும். பெல்லா படுக்கையின் குளிரில் இருந்தபடி இவ்விதம் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். ‘அது போன்ற இடத்துக்கு நான் இனி ஒரு போதும் செல்ல மாட்டேன்.’ ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. மக்கள் அர்த்தமுள்ள விடயங்களை மட்டுமே சொல்கிற, செய்கிற இடங்கள் எவற்றையும் பெல்லா அறியாள். அறிந்திருந்தாலும் அவள் அங்கெல்லாம் ஒருபோதும் அழைக்கப்பட மாட்டாள். அதனால் தான் பெல்லா இரவிரவாக அயர்ச்சியாலும் அன்றைய சொற்களாலும் பந்தாடப்படுகிறாள்.
உணவு வேளைகள்
எம் அந்தக் கலைஞரின் பெயரை மீண்டும் மறந்து விட்டாள். மறந்துவிட்டது நினைவுக்கு வரும் போதெல்லாம், அவள் அதை எழுதி வைத்திருந்த குறிப்புப் புத்தகத்தில் அதைப் பார்த்துக் கொள்வாள். பார்த்த பிறகு மீண்டும் மறந்து போய் விடுவாள். அந்த கலைஞரின் ஃபளாட்வேர்களை எம் மிகவும் விரும்பினாள். ஆன்ட்டிக் தட்டுகள் மந்தமான வர்ணம் தீட்டப்பட்டு மென்சிவப்பாகவும், அதே நேரம் ஊதாவாகவும் தோற்றமளித்தன. வழக்கமாகப் போகாத ஒரு கடையில் அவற்றைப் பார்த்தவுடன் அவள் அவற்றை வாங்கியே தீர வேண்டும் என முடிவு செய்தாள். அங்கிருந்த ஒருவரைப் பத்தொன்பதையும் (பல வடிவங்களிலும், அளவுகளிலுமாக அந்தக் கடையில் இருந்த அத்தனையையும்) கல்லாவுக்குக் கொண்டுவரச் செய்தாள்.
அங்கிருந்த பெண் இதைக் கண்டு திகைத்துப் போனாள். எம் மிக மோசமான இரசனையைக் கொண்டிருந்ததால் மட்டுமல்ல, (ஒரு பொருள் அந்தப் பெண்ணின் மணித்தியால சம்பளத்தின் மூன்று மடங்காக இருந்தாலும்) அத்தனை குப்பையையும் மொத்தமாக வாங்குகிறாளே என்பதாலும் தான். இருந்தாலும், தான் எவ்வளவு கவனமாக இருக்கிறாள் என்பதை எம் பார்ப்பதை உறுதி செய்தவாறு ஒவ்வொன்றாக அவற்றை அலங்காரக் காகிதத்தில் சுற்றினாள். சற்று நேரம் தன் முன்னால் நின்று கொண்டிருந்த பெண்மணி பற்றி அவள் பலவற்றை எண்ணிக் கொண்டாள். அவளுடைய மெல்லிய உதடுகள் பற்றியும், விலை உயர்ந்ததாய் தென்பட்டாலும் தற்சமயம் யாருமே அணியாத, மென்மையான உரோமத் தோலினால் செய்யப்பெற்ற மேலங்கி பற்றியும். ஆனால், நான்காவதைச் சுற்ற ஆரம்பித்த போதோ அவள் வேறெதையோ சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
எம்மின் கணவர் தனது மனைவி வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த ஃபளாட்வேர்களைக் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. அதில் பரிமாறப்பட்ட உணவைக் கூட அவர் கவனிக்கவில்லை. உணவைக் கத்தியால் நறுக்கி, முட்கரண்டியால் குத்தி, வாயை நோக்கிக் கொண்டு சென்றார் – மனைவியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் இறந்து விடவேண்டும் என்று எம் விரும்பினாள். ஆனால் உண்மையில் அல்ல. அவள் ஒருபோதும் மரணத்தைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்ததில்லை. இருப்பினும், நாள் ஒன்றுக்கு இரு தடவை, உணவு வேளைகளில் எம்முக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தவிர வேறில்லை. ‘மரணம்’ என்ற சொல் – ஒரு கடிகார முள்ளைப் போலச் சுற்றிச் சுற்றி வருகின்ற மனக்குறையில் இருந்து இனிய, விரைவானதொரு விடுதலைக்கான வாக்குறுதி.
இதையெல்லாம் உள்ளே வைத்திருப்பது நல்லதுதானா? மௌனமே இவற்றைச் சொல்லுமென விட்டுவிடுவது? அப்படி ஒன்று சாத்தியம் தானா? எம் ஒரு துண்டு இறைச்சியைத் தனது முட்கரண்டியில் சுற்றி வாயில் வைத்தாள். அவளது கணவர் உணவை மெல்லும் சகிக்க முடியாத ஒலி, அவள் உணவை மெல்லுகின்ற ஒலியை மழுங்கடித்துக் கொண்டிருந்தது. அதனால் அவள் மீண்டும் மெல்லுகிறாள் – பழிவாங்கலாக, ஒரு எதிர் தாக்குதலாக. அவளது கணவர் தட்டின் விளிம்பில் தனது முட்கரண்டியால் தட்டினார். இது ஒரு விரும்பத்தகாத ஒரு ஒலியை எழுப்பியது. தட்டு பாழாகி விட்டதா என்று எம் நிமிர்ந்து பார்க்கிறாள். எம் மீண்டும் கலைஞரின் பெயரை மறந்துவிட்டாள். அது இப்போதைக்கு நினைவுக்கு வரப்போவதில்லை. குறிப்புப் புத்தகமோ படுக்கையறையில் இருந்தது. அவ்வளவு தூரம் போகவும் இயலாது. கண்கள் முட்டிக் கொண்டு வருவதை எம் உணர்ந்தாள். மூக்கைச் சிந்துவது போன்ற பாவனையில் கண்ணீரை நாப்கினில் ஒற்றிக் கொண்டாள். அமைதியாக, அவள் முட்கரண்டி கொண்டு மற்றொரு துண்டு இறைச்சியை எடுத்துக்கொள்கிறாள். எம் எதிரே அமர்ந்திருந்த அவள் கணவரோ தட்டில் இருந்த சிறிய, ஒளி ஊடுபுகவிடும் தன்மையுடைய வெங்காயத்தை எப்படி அழைப்பது என்பதை நினைவுக்குக் கொண்டு வர கடுமையாக முயன்று கொண்டிருந்தார். இருபது அல்லது முப்பது வினாடிகள் கழித்து, அது பளிச்சென்று நினைவுக்கு வருகிறது : ‘முத்து வெங்காயம்’. அவர் மற்றொரு காய்கறியைத் தனது முட்கரண்டியால் குத்தும்போது அவரது முகத்தில் திருப்தியான புன்னகை படர்கிறது.
என்றென்றும் எஸ்ஸாவும் எல்லாவும்
பீவர் பற்றி யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பதை முதலில் உணர்ந்தபோது எஸ்ஸாவுக்கு ஒன்பது வயதாகிவிட்டது. அவள் தனது உயிர் நண்பி எல்லாவிடம் இதைச் சொல்ல முயன்றாள்.
“எஸ்ஸா, நான் முன்பு உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறேன். அங்கே ஒரு பீவரும் இல்லையே, பொய்காரி. “ “இல்லை, என் வீட்டில் இல்லை. . . ”
அந்தப் பதில் கூட எஸ்ஸாவின் உற்சாகமனைத்தையும் வடியச் செய்து விட்டது. பீவர் குறித்து யாரிடமும் எஸ்ஸா சொல்ல முயன்றது இதுவே கடைசியும் முதலும். அவள் அதைப் பற்றி எவ்வளவு அதிகமாக யோசித்தாளோ, அவ்வளவு அதிகமாக அது உண்மையில் ஒரு பீவர் தானா என்று ஆச்சரியப்பட வேண்டியிருந்தது. பள்ளியில் உள்ள நூலகத்துக்குச் சென்று, மிகப்பெரிய விளக்கப்படக் கலைக் களஞ்சியத்தைத் திறந்து, பாலூட்டிகள் பகுதியைப் பார்வையிட்டாள். ஆஹா! – ரோடென்ஷியா. எஸ்ஸா வைத்திருந்தது ஒரு பீவரைப் போலவே தோற்றமளித்தது. ஆனால், உண்மையில் அது ஒரு பீவர் தானா இல்லையா என்பதை வேறுபடுத்தி அறிய முடியவில்லை. இதில் முக்கியமானது என்னவென்றால், அவளுக்குள் தான் இந்த உயிரி இருந்தது, பார்வையில் பட்ட ஒவ்வொரு மரக்குற்றியையும் மென்றது, அவளது இதயத்தைக் கழிவு நிரம்பியதாய் ஆக்கி விட்டது. பீவர் இல்லாதிருந்த நேரமென்பது எஸ்ஸாவுக்கு நினைவில் இல்லை. அது கரடுமுரடான, மண்ணிற உரோமங் கொண்ட மேற்தோலை உடைய, சதைப்பிடிப்புள்ள ஒரு விலங்கு. அது எஸ்ஸாவை மற்றவர்களுடன் பேசமுடியாத அளவுக்குக் குப்பைகளால் நிரப்பியது, பாடுவதும் வெகு குறைவு, நடனமோ கேள்விக்குறியாக இருந்தது. அவளால் சாப்பிடவோ படிக்கவோ முடியவில்லை. அவள் யாரோ ஒருவர் கையைப் பற்றிக் கொள்வதற்கோ, யாரோ ஒருவர் அவளது கையைப் பற்றிக் கொள்வதற்கோ வழியே இல்லை. பயணிக்கவோ, புதிய பேரார்வங்களைக் கண்டறியவோ அவளால் முடியவில்லை. அவளால் பணம் சம்பாதிக்கவோ, ஒருவர் கண்ணைப் பார்க்கையில் தான் எவ்வாறு உணர்கிறாள் என்று சொல்லவோ இயலவில்லை. அவள் பத்தொன்பது வயதை எட்டிய நேரத்தில், அவள் இதயம் முழுவதும் பீவர்களால் நிரம்பியிருப்பதை உணர்ந்தாள் – ஒருவேளை ஒரு முழு குடும்பமும். அவை நாள் முழுவதும் உள்பட்டையைச் சாப்பிட்டு, மரச்சில்லிகளைப் பெருமளவில் குவித்தன. விரைவில் எஸ்ஸா தனது படுக்கையறை திரைச்சீலைகளைத் திறப்பதற்கே அதிக நேரம் எடுத்தது. தனியாக இருப்பது கூட ஒரு போராட்டமாக இருந்தது.
இருபத்தொரு வயதை எட்டிய இரவில் அவள் இறந்துவிட முடிவெடுத்தாள். அவள் இதயத்தில் எப்போதும் இருந்த பீவரிடம் முதன்முதலில் பேசினாள்: “ஏன் நான் மட்டும்? நீ எதற்காக என்னிடம் வந்தாய்? “ பீவர் அதன் பெரிய கறுப்புக் கண்களால் அவளைப் பார்த்தது: “எங்களுடன் வா, நீ விரும்பினால் மரக்குற்றிகளுக்கு இடையில் வாழலாம். இது மிகவும் வேடிக்கையானதல்ல, ஆனால் இது நேரத்தை கடத்த உதவுகிறது, மேலும் உனக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.” எஸ்ஸா அதையே செய்தாள். பீவர் குடும்பத்தில் சேர்ந்தாள். ஒவ்வொரு நாளையும் மரக்குற்றிகளைக் கொறிப்பதில் கழித்தாள். பொழுதும் போனது. உடற்பயிசியும் ஆனது.
பின்னர், ஒரு நாள், சோகையான முகம் கொண்ட ஒரு பெண் எஸ்ஸாவிடம் வந்து கேட்டாள்: “ஏன் நான் மட்டும்? நீ எதற்காக என்னிடம் வந்தாய்? “என்று. எஸ்ஸா பதிலளித்தாள் : “எங்களுடன் வா, நீ விரும்பினால் மரக்குற்றிகளுக்கு இடையில் வாழலாம். இது மிகவும் வேடிக்கையானதல்ல, ஆனால் இது நேரத்தை கடத்த உதவுகிறது, மேலும் உனக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி.”
ஒரு நிமிடம் அவளுடைய விருப்பத் தேர்வுகளை எடைபோட்டவாறு அப்பெண் அங்கே நின்றிருந்தாள். இறுதியாக, அவள் முதுகில் பொருத்தப் பட்டிருந்த எம்4ஏ1 கார்பைன் ரக துப்பாக்கியை எடுத்துச் சுட்டாள். அது சில நொடிகளில் பீவர்களை நிர்மூலமாக்கியது; தவறாமலும், வினைத்திறனுடனும் நிகழ்ந்திருந்தது. அந்த இடம் மண்ணிற சடலங்களாலும், கருகிய மர, மாமிச நாற்றத்தாலும் நிரம்பி இருந்தது.
“பொய்காரி”, எல்லா சொன்னாள்.
“நான் இல்லை”, என்றாள் எஸ்ஸா அவளை மூர்க்கமாகத் தள்ளி விட்டபடி.
எல்லா அதிர்ச்சியின் எல்லயைத் தாண்டி இருந்தாள். எஸ்ஸாவை மிகவும் பண்பான நடத்தை கொண்டவள் என்றே அவள் எப்போதும் நினைத்திருந்தாள். ஆனால் சில காரணங்களால் எஸ்ஸாவின் கடுமையான போக்கு கூட எல்லாவை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்தது, இரு பெண்களும் பள்ளியில் உள்ள எல்லோரையும் பற்றிப் பேசியவாறே மீதமுள்ள நாளைக் கழித்தனர் – அவர்களின் வக்கிரமான ஆசிரியர், செங்கற்களைப் போல ஊமையாய் இருந்த பையன்கள், தங்களைத் தாங்களே கடந்து செல்ல வேண்டிய பெண்கள். எஸ்ஸாவும் எல்லாவும் சிரிசிரி என்று சிரித்தார்கள்.
– மியெகோ கவகமி
ஆங்கிலத்தில் : டேவிட் பாய்ட்
தமிழில் : தமிழ்க்கிழவி
நன்றி: கிரந்த.காம்
[tds_info]
ஆசிரியர் குறிப்பு:
மியெகோ கவகமி
மியெகோ கவகமி ஆகஸ்ட் 29, 1976 இல் ஜப்பான் ஒசாகாவில் பிறந்த கவிஞர், எழுத்தாளர். ஹருகி முரகாமி அவர்களின் பாராட்டைப் பெற்றவர். இவரது முதல் நாவலான மை ஈகோ ரேஷியோ, மை டீத் அண்ட் தி வேர்ல்ட் 2007 இல் வெளியிடப்பட்டது. இதற்கு வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களுக்கான சுபோச்சி ஷோயோ விருது வழங்கப்பட்டது. அடுத்த வருடமே வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது நாவலான பிரெஸ்ட்ஸ் அண்ட் எக்ஸ், 250,000 பிரதிகள் விற்பனையானதுடன் அகுட்டகவா பரிசையும் தட்டிக் கொண்டது. இந்த நாவல் நோர்வீஜிய, இசுப்பானிய, பிரெஞ்சு, சீன, கொரிய மொழிகளுள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர கவகமி சிறுகதை, கவிதை, கட்டுரைத் தொகுப்புக்களையும் வெளியிட்டுள்ளதோடு வேறு பல பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
தமிழ்க்கிழவி : பிரித்தானியாவில் சுதந்திர பட்டய மனித வள ஆலோசகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.
[/tds_info]
வாழ்த்துக்கள் சகோதரி !, சிறப்பான ஜப்பானிய குறுங்கதைகளை எமக்கு அளித்தமைக்கு !
சிறப்பாக மொழியாக்கம்…!!
சிந்தைமகிழ் வாழ்த்துக்கள்..💐💐💐