ஒருநாள் மூங்கில் வெட்டும் முதியவர் ஒருவர், மர்மமாக ஒளிரும் மூங்கில் தண்டு ஒன்றைப் பார்த்தார். அந்த தண்டை வெட்டும்பொழுது, அதில் ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டார்.
அவருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தை இல்லை என்பதால், அந்தப்பெண் குழந்தையை வளர்ப்பதற்காக தன் வீட்டிற்கு கொண்டு வந்தார். அந்தப்பெண் குழந்தைக்கு, கபியா-ஹிமோ (ஒளிரும் மூங்கிலின் அரசி) எனப் பெயரிட்டு வளர்த்தார்கள்.
பெண் குழந்தையை கண்டெடுத்த அடுத்தநாளிலிருந்து, மூங்கில் வெட்டும் ஒவ்வொரு பொழுதும் ஒரு தங்க நாணயம், மூங்கில் வெட்டும் வயதானவருக்கு கிடைத்தது. அவர்கள் குழந்தையை நன்றாக வளர்த்தனர்.
கபியா அழகான இளம்பெண்ணாக வளர்ந்தாள். அவளை திருமணம் செய்துக்கொள்ள நிறைய அரசர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் அனைவரையும் வேண்டாம் என்று கபியா மறுத்துவிட்டாள். அவ்வாறு திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றால், டிராகனின் மார்பில் இருக்கும் படிகக் கல்லை கொண்டுவர வேண்டும் என்று ஒரு கடினமான சவாலை விடுத்தாள்.
அரசர்களும் டிராகனுடன் பயங்கரமாக போரிட்டனர். ஆனால் அவர்கள் யாராலும் அந்தப் படிகக் கல்லை கொண்டுவர முடியவில்லை.
கபியா-ஹிமோவால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. முழுநிலவைப்பார்த்து மிகவும் வருத்தம் அடைந்தாள்.
மூங்கில் வெட்டுபவரிடம், தான் உண்மையாக நிலவில் இருந்து வந்தவள் என்றும், ஒருநாள் நிலவில் இருப்பவர்கள் தன்னை சீக்கிரம் வந்து அழைத்து சென்றுவிடுவார்கள் என்றும் தெரிவித்தாள்.
ஆனால், மூங்கில் வெட்டுபவருக்கு, கபியா-ஹிமோ தன்னை விட்டு பிரிந்து செல்வதை விரும்பவில்லை. அவளை நிலவில் இருந்து வருபவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சாமுராய்களை காவலுக்கு வைத்தார்.
ஒரு முழுநிலவு நாளில் கபியா-ஹிமோவை அழைத்துச் செல்ல நிலவில் இருப்பவர்கள் வந்தனர். அவர்கள் கபியா-ஹிமோவை தங்களுடன் அழைத்துச் சென்றனர். சாமுராய்களால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை.
கபியா-ஹிமோ மூங்கில் வெட்டுபவரையும், உலகில் உள்ள மக்கள் அனைவரையும் மிகவும் விரும்பினாள். ஆனால் கபியா-ஹிமோ நிலவுக்கு உடையவள். ஆனால், முழுநிலவு நாட்களில், சில சமயங்களில் மட்டும் அவள் பூமியைக் காண வருவாள்.
மூலம் : ஜப்பானியச் சிறார் நாட்டுப்புற கதைகள்
தமிழில் : ரா.பாலசுந்தர்
நன்றி/Source Courtesy :