சங்க – ஜப்பானியக் காதல் பாடல்கள்


லகில் பழைமையான இலக்கியங்கள் தொகை நூல்களாகத்தான் கிடைத்துள்ளன. கிரேக்கம். சீனம்,ஜப்பான், தமிழ், சமஸ்கிருதம் முதலானவை தொடக்க காலத்தில் தோன்றிய தொன்மை இலக்கியங்களில் சில.

சங்க காலம் செவ்வியல் காலம். அதன் இலக்கியம் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையைக் காட்டும். மனித மன உணர்வுகளுக்கு இயற்கையானது பின்னணியாக இருந்துள்ளது. திணை இலக்கியம் என்று சொல்லப்படும் சங்க இலக்கியம் ஐந்திணை மக்களின் வாழ்வு முறையில் காதலை முன்னிலைப்படுத்தியது. சங்க இலக்கியத்தில் காதலைக் கூறும் அக இலக்கியமே மிகுதி. உலக இலக்கிய வரலாற்றில் காதல், வீரம் ஆகிய இரண்டுமே அக்காலத்திய பாடுபொருளாக இருந்துள்ளன.

சங்க காலத்திய இலக்கியத்தையும், ஜப்பானிய இலக்கியத்தையும் ஒப்பிட்டு அறிவதற்கான சாத்தியக் கூறுகள் மிகுதி. மன்யோசு இலக்கியம் என்பது ஜப்பானின் பழைய இலக்கியத்தொகை நூலாகும். சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரை அது இலக்கியத்தின் பொற்காலம் எனில், ஜப்பானில் மன்யோசி தோன்றிய இலக்கிய காலத்தைப் பொற்காலம் என்று கருதலாம். சங்க இலக்கியத்திற்கும் ஜப்பானிய மன்யோசிய இலக்கியத்திற்கும் உள்ள ஒப்புமையை அறிய இலக்கிய இன்பத்தோடு மக்களின் மன உணர்ச்சியையும் அறிந்து கொள்ளலாம்.

ஜப்பானியக் காதல் பாடல்கள், சங்க காலத்திய காதலர்களின் உணர்ச்சிமிகுந்த பாடல்களோடு தொடர்புடையவை. காதலின் துயரம் வெளிப்படுமாறு ஜப்பானியத் தலைவி ஒருத்தி பாடுகிறாள்.

 

                                                                நிற்பதா? நடப்பதா? என் செய்வது?

                                                                நிலத்தில் நடப்பினும் நெஞ்சம் மட்டும் 

                                                                வானை நோக்கி அல்லவா

                                                                சென்றுவிடுகிறது

 

என்கிறாள்.  இன்னொரு ஜப்பானியத் தலைவி, ,

 

                                                                இடைவிடாது சிள்வண்டு ஒலி எழுப்புகிறது 

                                                                என் படுக்கை அருகே! 

                                                                என்காதல் நோயை  எவ்வாறு கூறுவேன்?

                                                                சிறிதும்  உறக்கமில்லையே!

                                                                எழுந்தும் அமர்ந்தும் தவித்து நிற்கிறேன்..

                                                                எல்லாப் பொழுதிலும்

                                                                நீயே  என் நெஞ்சிலும் நினைவிலும்..

என்று பாடுகிறாள்.  தலைவி ஒருத்தியின் காதல் துயரத்தை அறிந்தவளாய் ஒளவையார் பாடுகிறார். தலைவி வாயிலாக,

 

                                                                முட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்

                                                                ஓரேன்  யானுமோர் பெற்றி மேலிட்டு

                                                                ஆஅ வொல்லெனக் கூவு வேன்கொல்

                                                                அலமர லசைவளி யலைப்பவென்

                                                                உயவுநோ யறியாது துஞ்சும்  ஊர்க்கே

                                                                        ( குறுந்தொகை .பா  280)

 

காதலுணர்வில் அழுந்திய ஜப்பானியத் தலைவியின் மனநிலையும், தமிழ்த்தலைவியின் மனநிலையும் ஒன்றுபோலவே உள்ளன. இதுபோல் இன்னொரு குறுந்தொகைப் பாட்டு,

 

                                                                உள்ளினும் உள்ளம் வேமே யுள்ளாது

                                                                இருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி

                                                                வான்தோய் வற்றே காமம்

                                                                சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே (குறுந்  102)

 

என்ற பாடலில். வான் தோய் வற்றே காமம்  என்ற அடிகள், ஜப்பானியத் தலைவி இதனை எதிரொலிப்பதைப் போல உள்ளதல்லவா!

 

வெள்ளிவீதியார் எழுதிய காதல் பாடல்களில்  ஒன்று, காமமானது  நாணத்தை அழிக்கச் செய்தமைக்கு நீரானது மணற்கரையைத் தாக்கி அலைப்பதை உவமையில் காட்டும்.

 

                                                                வான்பூங்  கரும்பின் ஓங்குமணல் சிறுசிறைத்

                                                                தீம்புனல்  நெரிதர வீய்ந்துக் காஅங்குத்

                                                                தாங்கும் அளவைத் தாங்கிக்

                                                                காமம் நெரிதரக் கைநில் லாதே (குறுந் 49)

 

இப்பாடலைப் போன்றே, ஜப்பானியப்  பெண்பாற் புலவர் காசா   என்பவர் பாடிய பாடல் இப்பாடலோடு பொருந்துகிறது.

 

                                                                ஐசி கடற்கரையை

                                                                அலைகள் எவ்வாறு

                                                                அலைக்கழிக்கின்றன.

                                                                இதுபோலத்தானே

                                                                என் காதலும்…

                                                                என் நிறையும் அல்லவா

                                                                கவரப்பட்டுவிட்டது

 

என்கிறாள்  அப்பெண் கவிஞர்.

 

வாடைக்காலம் பிரிந்திருக்கும் காதலரை வருத்தும். அதனைப் பொறாத காதலர் வாடையை இன்னா வாடை எனவும்.துயர்தரு வாடை எனவும் கூறுவர்.  குறுந்தொகைத் தலைவியின் வருத்தம்.

 

                                                                தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும் 

                                                                வாரார் போல்வர்நங் காதலர்

                                                                வாழேன் போல்வல் தோழி யானே ( குறுந் 103)

என்று பாடித் தன் காதல் துயரையும், தலைவன் வராத பொழுதையும் தோழியிடம் சொல்லி ஆறுதல்தேட முயல்கிறாள்.  யோசிதடா  என்னும் ஜப்பானியக் கவிஞர், இது போன்ற ஒருசூழலில் வாடையை முன்னிறுத்தித் தன் வருத்தத்தைப் பகர்ந்துகொள்கிறார்.

                                                                இந்த இரவுப் பொழுதில்

                                                                தலைவன் வரவில்லை

                                                                வராத என்றென்

                                                                தலைவனை விடவும்

                                                                இந்த வாடை

                                                                எவ்வளவு கொடுமையானது?

                                                                என் மீது இரக்கம் காட்டாதது

 

என்று பாடுகிறார். காதலனோடுஅணைந்திருக்கும் தலைவி ஒருத்தி  இரவு நேரம் நீட்டிக்காதா  என்ற நினைவில் இருக்க, கோழியானது கூவிக் காலைப் பொழுதை அறிவித்துவிட்டதே என்று வருந்துகிறாள். இதனைக் குறுந்தொகைப் பாடல் ஒன்று.

 

                                                குக்கூ என்றது கோழி அதனெதிர்

                                                துட்கென் றன்றென் தூய நெஞ்சம்

                                                தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்

                                                வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே( குறுந் 157)

ஜப்பானியக் கவிஞர் இதனை எதிரொலிப்பதைப் போல் அமைந்த பாடல் ஒன்று,

 

                                                காதலனோடு இன்ப உலா 

                                                நடத்திய பின்

                                                அவளோடு உறையும்

                                                இந்த இராக்காலம்

                                                நீட்டிக்காதா?

                                                செந்நிறக்கோழி

                                                தன் துணையைக்

                                                கூவியழைத்துவிட்டதே!

                                                என்செய்வது?  இந்த

                                                இராக்காலம் நீட்டிக்காதோ!

என்கிறார். பொழுதை அறிவிக்கும் கோழி மீது கூடக் கோபம் வருவது அந்தச் சூழலில் இயல்புதானே!

சங்க இலக்கியக் காதல் பாடல்கள் பலவும் ஜப்பானியக் காதல் பாடல்களோடு மிகுந்த ஒப்புமை உடையன.  இன்னும் பல பாடல்கள் தமிழ் அகத்திணைச் சூழல்களோடு மிகுந்த ஒப்புமைக்குரியனவாய்  உள்ளன.  அவற்றை விரிப்பின் தனி ஒரு பெருநூலாக ஆகிவிடும்.

ஒத்த உணர்வு என்பது, காலம், இடம், இனம், மொழி, பண்பாடு , நாடு, ஆகிய  எல்லைகளக் கடந்து சென்று இலக்கியத்தை அனுபவிக்கத் தோன்றுகிறது. இன்னும் பல பார்வைகளில் இரண்டு மொழிகளில் எழுந்த இலக்கியத்தில் ஒப்புமை காணலாம். ஒத்த உணர்ச்சி உலகமுழுமையும் ஒரே மாதிரி இருப்பதை இவ்வகையான ஒப்பீடு மூலம் அறியலாம்.


இராம. குருநாதன்

[tds_info]

பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரையிலான நூல்களை ஆய்ந்து அறிவதில் ஆர்வம் கொண்டவர். ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள், இரண்டு நாவல்கள், 12 கட்டுரைத்தொகுதிகள் எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதிவருகிறார்.

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.