வாபி-சாபி : அறிதலின் அழகியல்


லருக்கும் இது போல நடந்திருக்கும் , பிடித்தமான ஒரு தட்டோ  கோப்பையோ அல்லது ஒரு பொம்மையோ கைதவறி கீழே விழுந்து உடைவது . அந்த கணத்தின் ஏமாற்றத்தை  சொல்லி விளக்கிவிடமுடியாது. அதற்கு முந்தைய கணம் வரை, பயனும், அழகும் கொண்ட பிரியத்துக்குரிய பொருள் அடுத்த நொடியே பயனற்ற குப்பை என்றாகிவிடுகிறது . அது மட்டுமல்லாமல்  அவ்வாறு பொருட்கள் உடைவதை, நம் மனம் இயல்பாகவே ஒரு எதிர்நிலை நோக்கில் எடுத்துக்கொள்ளும், அபசகுனமாகவோ, பயனற்றதாகவோ அதை உருவகித்துக்கொள்ளும். அந்தப் பொருளுடனான நம் உறவு சட்டென்று ஒன்றுமில்லாததாகிவிடும் .

இதே  தருணத்தை ஜப்பானிய மரபான அழகியல் அணுகுமுறையான வாபி-சாபி வேறு மாதிரி கையாளும் . அது ஒரு கோப்பை உடைவதை இயல்பான விஷயமாகவே எடுத்துக்கொள்ளும் . மீண்டும் அதை இணைத்து பொருத்தி செப்பனிட்டுவதையும் அடுத்து நிகழவேண்டியது என்று உணர்த்தும் . அப்படி செப்பனிடப்பட்ட கோப்பையிலும் அழகை காணும் அணுகுமுறையை முன்வைக்கும். இந்நிகழ்வுகளை இயல்பான கால சுழற்சியின், அந்தப் பொருளில் தவிர்க்கமுடியாத மற்றுமொரு நிலையாக எண்ணி ஏற்றுக்கொள்ளும்.

மற்ற பண்பாடுகளில்  நாம் கலையில் காணும் நோக்கு, குறிப்பாக மேற்கில், இந்த அணுகுமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டது. கிரேக்க மார்பிள் சிலைகள் கச்சிதத்தையும், பிரத்தியேக  விகிதங்களையும் கொண்டு பிசிரற்ற லட்சிய உருவங்களாக  படைக்கப்பட்டவை. பதினைந்தாம் நூற்றாண்டு ஜரோப்பிய தேவாலயங்களின் உயரிய கூரைகளும், அலங்கார வேலைப்பாடுகளும், பிரம்மாண்டத்தை பறை சாற்றும் விதத்தில் என்றென்றைக்குமான சாட்சியாக இருக்குமாறு படைக்கப்பட்டவை.

அவைகளில் எளிமை, தனி மனித அணுக்கம், அன்றாடத்தன்மை போன்ற விஷயங்களுக்கு இடம் இருப்பதில்லை. ஆனாலும் இந்தத் தன்மைகள்தான்  மானுடத்தின் பெரும்பகுதி தமது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இயல்புகளாக இருக்கும்.

வாபி-சாபி , இவ்வாறான அன்றாடத்தில் மொத்த மானுடமும் எளிதில் அணுகக்கூடிய ஒரு விஷயத்தின் மீது தனது தத்துவார்த்த நோக்கை அமைத்துக்கொள்கிறது. முழுமையை வலியுறுத்தாத, நிலையற்ற, கச்சிதத்தை குறிக்கோளாக்காத ஒரு அழகியல் நோக்கு. இதன் உள்ளுறையாக அமைந்திருப்பது ஜென் பெளத்த ஞானமே. பூரணமற்ற, மறையக்கூடிய  வாழ்க்கையோடு நாம் ஏற்படுத்திக்கொள்ளும் சமாதானத்தையே இந்த ஞானம் முன் வைக்கிறது.

வாபியும் சாபியும்

கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை ஜப்பானில் மரபான மதமாக  ஷிண்டோ மதமே கோலோச்சி வந்தது. ஜென் பெளத்தம் ஜப்பானுக்கு சீனாவில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் பரவியது. ஜென் தத்துவம் இயற்கையை அதன் சுழற்சியை உள்ளபடியே காணவும், தியானிக்கவும் அதன் மூலம் மனித இயல்பை அறிந்து கொள்ளவும் உருவாகிய வந்த ஒரு பாதை. இதுவே வாபி- சாபியின் தத்துவார்த்த அடித்தளம்.

வாபி- சாபி என்பதே வாபி மற்றும் சாபி என்று முன்னர் தனித்தனியே புழக்கத்தில் இருந்த இரண்டு வெவ்வேறு சொற்களின் இணைவில் உருவானது. அந்த வார்த்தைகள் இந்த இணைவின் மூலம் புதிய அர்த்தத்தை, அடைகின்றன.

வாபி என்பது தனியே வாழ்வதின் துயரம் என்பதில் இருந்து , தனித்திருத்தலின் இனிமை என்று பொருள் கொண்டது.  சாபி என்பது நலிந்த என்ற பொருளில் இருந்து காலத்தின் கம்பீரமும் அடையாளமுமாக பொருள் கொண்டது, பொருட்களில் நிலையற்ற தன்மையே ஒரு அழகிய விஷயம் என்றாகியது. வாபியில் இருக்கும் அழகை கண்டுகொள்வது சாபி.

இந்த வார்த்தைகளை அப்படியே பொருள் கொண்டால் பொருட்களில் உள்ளவாறே அவற்றில் உறைந்திருக்கும் ஜீவனை அதன் மீதான காலத்தின் வினையை கண்டு உணரும் அழகியல் எனலாம்.

மவுண்ட் பியூஜியின் முப்பத்து ஆறு கோணங்கள் – ஹொக்குசாய்

[ads_hr hr_style=”hr-fade”]

ஜென் பெளத்தம் 

இந்திய மாகாயான பெளத்தமும் சீன மரபான ஆன்மீகமான  தாவோயிசமும் இணைந்து உருவாகியதுதான் ஜென் பெளத்தம். தியானம் என்பது மருவியே ஜப்பானிய மொழியில் ஜென் என்று வழங்கலாயிற்று.

உலகிலேயே மிக எளிதில்  தவறாக புரிந்துகொள்ளப்படும் விஷயம் ஜென் பெளத்தம் என்று, ஜென் தத்துவத்தை மேற்கில் அறிமுகம் செய்த கிறிஸ ஹம்ப்ரிஸ் விளையாட்டாக சொல்லியிருப்பார். ஜென் என்பது உணரப்படும் ஒரு விஷயம் அதை மொழியில் அள்ள முயன்றால் அது மிக மிக எளிதான (deceptively simple) ஒன்றாக தோற்றமளிக்கும் . ஆனால் அதைத்தான் வெவ்வேறு விதமாக மொழியில் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

ஜென் பெளத்தம் கடவுள் குறித்தோ , மறுபிறவி குறித்தோ  பேசுவதில்லை . ஜென் தத்துவ உருவாக்கம் அல்லது   வெளிப்பாடு என்பதையே  ஒரு தடையாகப் பார்க்கிறது . தத்துவ உருவாக்கம் நாம் ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறோம் என்பதையே பாதிக்கிறது .ஜென் இவ்வித  இடையீடுகளை தவிர்த்து தடைகள்  இல்லாத நேரடி அனுபவத்தை முதன்மையாக முன்வைக்கிறது . அந்த அளவில் ஜென் நேரடி அறிதலுக்கான ஒரு  அணுகுமுறை என்று சொல்லலாம் . அவ்வித அறிதலுக்கு அது தியானத்தையே வழியாகக் கொள்கிறது.

ஜென் மனித வாழ்வு குறித்த கேள்விகளுக்கும் சிக்கல்களுக்கும் பதிலோ தீர்வோ சொல்லுவதை ஒரு நோக்கமாக கொண்டதல்ல. அவ்வாறான கேள்விகளும் சிக்கல்களும் கரைந்து பொருளற்றுப்போகும் ஒரு நிலையை எட்டவே அது வழிகாட்டுகிறது,  நம் கண் முன் காணும் உலகத்தின்  உண்மைத் தன்மையை நாம் உணர அது உதவுகிறது . இந்த நேரடித்தன்மையை ஜென் அணுகுமுறையின் தனித்துவம் என்று சொல்லலாம்.

இந்த நிலையை அடை வழிகாட்டும் பல்வேறு அணுகுமுறைகளை ஜப்பானிய பண்பாட்டு தளத்தில் நாம் காணலாம்.  ஹைக்கூ கவிதைகள், ஒற்றை வண்ண சுமி-ஈ ஓவியங்கள் , குறுமர வளர்ப்பு என்றெல்லாம்.

இதில் வாபி-சாபி யை  ஜென் பெளத்தத்தின் அழகியல் சார்ந்த நேரடி நடைமுறை பயிற்சி எனலாம்.

தேநீர் சடங்கு:

ஜென் பெளத்தத்தை போலவே  தேயிலையும் சீனாவிலிருந்து தான் ஜப்பானுக்கு அறிமுகம் ஆயிற்று.

ஜென் ஞானியர் நீண்ட ஊழ்கத்தில் அமரும் போது விழிப்புடன் இருக்கும் பொருட்டு தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டிருந்தனர் . பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் தேனீர் அருந்துவது என்பதை ஒரு முறைமையான நிகழ்வாக்க  சில  வழிமுறைகள் முன்வைக்கப்பட்டன.

ஆனால் காலப்போக்கில் ஜப்பானிய ஷோகன்கள் ,செல்வத்தையும் , சமூக அந்தஸ்தையும் வெளிப்படுத்தும் ஒரு ஆடம்பர  நிகழ்வாக இந்த தேநீர் சடங்கை மாற்றினர் . சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர பீங்கான் கோப்பைகள், அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடங்கள் , முழுநிலவு நாள் கொண்டாட்டங்கள்  என்று ஆடம்பரத்தையும் பகட்டை வெளிப்படுத்த்தும் ஒரு நிகழ்வாக இது மாறியது.

வாபி – சாபி தேநீர் கோப்பை

[ads_hr hr_style=”hr-fade”]

ஜென் ஞானியான  முராட்டா ஜூகோ ( Murata Juko ) இந்த ஆரவாரங்களில் இருந்து தேநீர் சடங்கின் ஆன்மீக மையத்தை மீட்டெடுக்கும் விதமாக இந்தச்சடங்கை நேரெதிராக மிகவும் எளிமையானதாக  ஆக்கினார் . முழுநிலவு நாட்களுக்கு பதில் குறை நிலவு நாளை தேர்வு செய்தார் , பளபளப்பான வேலைப்பாடுகள் கொண்ட சீன பீங்கான கோப்பைகளுக்கு பதிலாக உள்ளூரில் செய்யப்பட்ட மண் கோப்பைகளை பயன்படுத்தினார் . மாளிகைகளின் அலங்கரிக்கப்பட்ட மாடங்களுக்கு பதிலாக தோட்டத்தின் ஓரத்தில் எளிமையான ஒரு சிறு குடிலில் தேநீர் சடங்கை நிகழ்த்தத் தொடங்கினார்.

பதினாறாம் நூற்றாண்டில் ஆரம்பத்தில்  பூசலிட்டுக்கொள்ளும் சிறு சிறு நிலப்பிரபுத்துவ குழுக்களாக இருந்த ஜப்பான் மெல்ல ஒரு வலுவான தேசமாக திரள  ஆரம்பித்தது.முராட்டாவின் வழி வந்த அவரின் மாணவரும்

ஜென் ஞானியுமான சென்- நோ-ரிக்யூ , இந்த ஒருங்கினைவின் அடையாளமாக  தேநீர் சடங்கை மேலும்  முறைப்படுத்தினார். தேநீர் அருந்துதல் இணைப்புக்கான , சமாதானத்துக்கான ஒரு குறியீடாக மாறத்துவங்கியது.

வீட்டுக்கூரைகள்  செய்ய பயன்படுத்தும் ஓடுகளை  (Raku)  கொண்டே தேநீர் கோப்பைகளை செய்துகொள்கிறார்.

இந்தக் கோப்பைகள் துல்லிய வடிவத்தில் இருக்க வேண்டும் என்றோ, அதிக பட்ச  பளபளப்புடன் இருக்கவேண்டும் என்றோ அவர் மெனக்கெடுவதில்லை. அந்தச் சடங்கில் தேநீர் தயாரிக்கும் முறை ஒவ்வொரு நகர்வாக மிக விரிவாகவும் , அழகுணர்ச்சியுடனும்  தியான நிகழ்வை போல வடிவமைக்கிறார். இன்றளவும் அதே முறைதான் பயன் பாட்டில் இருக்கிறது, அதே வகை கோப்பைகள் தான் புழக்கத்தில் உள்ளன.

ரிக்கியூ தேநீர் சடங்கின் – அதன் மூலம் வாபி-சாபியின் – தந்தையாக கருதப்படுகிறார். இயற்கையும் – மனிதனும் இணைந்த கூட்டு உருவாக்கமாக, திட்டமிட்டதும் திட்டமிடாததும் இணைந்து  முழுமையாக அழகையும் ஞானத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாகியது.

தேநீர் சடங்கு என்பது தத்துவமும் , அழகியலும், தியானமும் கலந்த ஒரு நிகழ்வு.

வாபி – சாபி தேநீர் கோப்பை

[ads_hr hr_style=”hr-fade”]

எளிமையின் மூலமும், இயல்பின் மூலமும், துல்லியமாக வகுக்கப்படும் தேநீர் தயாரிப்பு நிகழ்வுகள் மூலமும் ஒரு அழகியல் வெளி உருவாக்கப்படுகிறது. அந்த வெளியே நாம் ஆன்மீகத் தேடலை நிகழ்த்திக்கொள்ளும்  ஒரு களமாகிறது.

இந்த புற எளிமையும் அமைதியும் சடங்குத்தன்மையும் அகத்திலும் பிரதிபலிக்க ஆரம்பிக்கிறது. நம் மனம் பயனற்ற விஷயங்களில் இருந்து விடுபடுகிறது. இது தேவையில்லை , அது அவசியமில்லை என்று ஒவ்வொன்றாக விலக்க  எஞ்சி நிற்கும் விஷயம் முக்கியமாகிறது. நம்  மொத்த இருப்பையும் அந்த ஒற்றை  விஷயத்தில் குவிக்க முடிகிறது.

வாபி-சாபி எப்படி செயல்படுகிறது?

மனிதன் உருவாக்கும் விஷயங்களில், இயற்கைக்கு என்று, அதன் வடிவாக்கத்திலேயே ஒரு பங்களிப்பை நிகழ்த்த வழிவகுக்கிறது. மனித உருவாக்கம் (man made ) என்பதில் உருவாக்கப்படும் விஷயத்தின் மீது  தன் முழு கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்று மனிதன் நினைக்கிறான். அதன் உள்ளீடு, வடிவம், பயன்  என்று எல்லாவற்றிலும் அவன் தன் முழு பிரக்ஞை படிய வேண்டும் என்று நினைக்கிறான், அதன் மூலம் அந்த படைப்பின் மீதான தன் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டை வெளிப்படுத்த  நினைக்கிறான். இதுவே மரபான கலை நோக்கு.  இவ்வகையான  கட்டுப்பாட்டின் வெளிப்பாடு தான் நேர்த்தி , துல்லியம் , முழுமையாக்கம் போன்றவைகளுக்கான அவா.

மாறாக வாபி-சாபி இந்த நேர்த்தியையும்  முழுமையையும்  தேடிப் பின்தொடராமல் போகையில் இயல்பாகவே இயற்கையின் தன்னிச்சை அங்கு வந்துவிடுகிறது . பூரண வட்டமான ஒரு கோப்பை  என்பது மனிதனுடையது விழைவிலும் கட்டுப்பாட்டிலும் இருந்து எழுவது ஆனால் வளைவு நெளிவுகளுடன் உருவாகும் ஒரு கோப்பையில்  தன்னிச்சை என்ற வடிவில் பிரபஞ்சம் வந்து அமர்ந்துகொள்கிறது.

இப்படி முடிவுறாத பொருள்  ஒன்றில் இயற்கை வந்து இணைவதை , அதில் காலத்தில் வடுக்கள் உருவாவதை , ஒரு பொருள் தொடர்ந்து காலத்தாலும் புழக்கத்தாலும் உருமாறுவதை , இந்த மொத்த நிகழ்விலும் உள்ளுறைந்திருக்கும்  அழகையும் உணர  கற்றுத்தருகிறது வாபி-சாபி.

ஒரு முற்றான படைப்பில்  இயற்கை உள்நுழைய  முடியாது , அதில் வாழ்க்கையின் ஓட்டத்துக்கு  இடமில்லை .அதே போல அதில் மனிதனும் உள்நுழைய  முடியாது , அவன் அங்கே தன்னை இட்டு நிரப்ப வேண்டிய இடைவெளிகளே  இல்லை , அவன் வெறும் ரசிகனாக மட்டுமே புறத்தில் இருந்து ரசிக்க முடியும்.

மெருகேற்றாத , கோணலாக உருவாக்கப்பட்ட ஒரு கோப்பையோ , உடைந்து மீண்டும் ஒட்டவைக்கப்பட்ட ஜாடியோ , இயற்கையும் , நம் அகமும் ஒருசேர அதில் படர ஒரு வாய்ப்பளிக்கிறது.

வாபி-சாபி ஏன் சவாலானது ?

நவீன மனதுக்கு மாற்றங்களை உள்வாங்கிச் செரிப்பது  ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. ‘நான்’ என்பதன் தொடர் உணர்வு – நான் எப்போதுமே இருக்கிறேன் எப்போதும் இருப்பேன் என்பதான ஒரு எண்ணத்தை உருவாக்குகிறது. பின் ‘தான்’ என்றுமாக இருக்க இந்த உலகமும் என்றுமாக இருக்க வேண்டும் என்ற அவா எழுகிறது , அதன் நீட்சியாக  தான் உருவாக்கும்  விஷயங்களும் என்றுமாக  இருக்க வேண்டும் என்று விரிவடைகிறது.

ஆனால் இயற்கையின் ஆதார இயல்பே  மாற்றத்திலும் சுழற்சியிலும் தான் அமைந்திருக்கிறது. வாபி-சாபி இந்த இயல்பை நமக்கு உணர்த்த முயல்கிறது. நம்மை இயற்கையோடும் அதன் மூலம் மாற்றத்தோடு இணக்கம் கொள்ள வைக்கிறது. அது  குறித்த நேர்மறை மனநிலையை உருவாக்குகிறது.

இன்னுமொன்று, வாபி-சாபி பிரம்மாண்டமானதும் சிக்கலானதுமான  உலக இயல்பை நம் உணர்தலுக்கு இலகுவான வகையில் சுருக்கிவிடுகிறது (miniaturise). நம் மேசையில் இருக்கும் உலக உருண்டை அப்படியே இந்த உலகத்தையே  உள்ளடக்கிவிடுகிறதோ அது  போல தேநீர் சடங்கு ஒட்டு மொத்த இருப்பின் இயல்பையும் உணர்த்தக்கூடியதாகிவிடுகிறது .

அழகுணர்வு என்பது அகவிடுதலையின் ஒரு வெளிப்பாடே.  மனதுள் ஏதேனும் வகையில் கட்டுண்டவர்களின் அழகுணர்ச்சி முழுமை அடைவதில்லை. அழகை உள்வாங்க,  அழகுணர்ச்சியை வெளிப்படுத்திக்கொள்ள அகச்சுதந்திரம் அவசியமாகிறது. எந்த அளவு  கட்டுக்கள் இல்லாத மனம் அமைகிறதோ அந்த அளவு அழகுணர்ச்சியுடன் நம் மனம் இயங்க ஆரம்பிக்கிறது. வாபி-சாபி யில் உள்ள சடங்குத்தன்மை அந்த அழகுணர்ச்சி திரளும் ஒரு குவிமையமாக செயல்படுகிறது .

வாபி-சாபியின் சாரம் ஜப்பானுக்கே உரிய ஒரு தனித்துவமாக விஷயமாகக் கொள்ள வேண்டியதில்லை . அதன் வடிவம் ஜப்பானுக்கே உரியது ஆனால் அதன் சாரம் மொத்த மானுடத்துக்கும் பொதுவானது . வாபி – சாபியின் தத்துவார்த்தை நோக்கும் இந்திய தூய அத்வைத நோக்கும் வேறானவை அல்ல. ரமணரோ , நிசர்கதத்தரோ, ஆத்மானந்தரோ  முன்வைக்கும் விஷயங்கள் வாபி-சாபி மெய்யியலில் இருந்து பெரிதும் வேறுபட்டவை அல்ல .

இந்தியாவில் வேர்கொண்ட ஒரு ஞானம் , பெளத்தம் வழியாக சீனப் பெருநிலத்தில்  படர்ந்து , ஜப்பானில் மலர்ந்திருப்பதாக கொள்ளலாம் . அதன்கனி கைநீட்ட எல்லோருக்குமே கிட்டக்கூடிய ஒன்றுதான்.

[ads_hr hr_style=”hr-fade”]

இன்றைய ஜப்பான்

பண்டைய காலம் முதல் வரும் அறுபடாத மரபுத் தொடர்ச்சி கொண்ட வெகு சில நாடுகளில் ஜப்பானும் ஒன்று மரபும் நவீனமும் முரண்பட்டும்  இவைகளை நெருக்கத்தில் இருக்கும் நாடு .இன்றைய ஜப்பான் உலகின் முதன்மை  நுகர்வுக்  கலாச்சாரங்களில் ஒன்று. வாபி-சாபி யில் உதித்த மனநிலைகளை நுகர்வு கலாச்சாரம் பின்னுக்குத்தள்ளி விட்டு வேறெங்கோ சென்றுகொண்டிருக்கிறது.

இன்று தான் அதன் தேவை அவர்களுக்கு அதிகமாக உள்ளது . சமூகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் பதின் பருவத்தினர், திருமணம் பந்தத்தில் ஆர்வமின்மை,  தற்கொலைகள், தனிமையில் இருக்கும் முதியோர் என்று மொத்த சமூகமுமே  சோர்வான ஒரு  நிலைத்தன்மைக்குள் சுருண்டுவிட்டது.

இன்று ஒரு ஜப்பானிய இளைஞனிடம் போய் வாபி-சாபி என்றால் என்ன என்று கேட்டு சரியான பதிலை பெற முடியுமா என்பது சந்தேகமே. ஒரு பண்பாட்டின் ஆதாரமாக அமைந்த அழகியலை  அவ்வளவு எளிதாக விளக்கிவிட முடியாது. அப்படி அறுதியாக விளக்குவதையும் அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் எப்படியோ எல்லோராலும்  ஏதோ விதத்தில் அது உணரப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

பல ஜப்பானிய ஓவியங்களில் மவுண்ட பியூஜி பிரதானமாக இருக்காது எங்கோ ஒரு ஒரத்தில் மட்டுமே தென்படும் ஆனால் அது எப்போதும் பின்ணனியில் இருந்து கொண்டே இருக்கும் .ஓவியர் ஹொகுசாய்

மவுண்ட பியூஜியை இவ்வாறான ஒடுங்கிய பின்னணியில் வைத்து 30 க்கும் மேற்பட்ட படங்கள் வரைந்துள்ளார் . வேறு பல விஷயங்கள் இருந்தாலும் பின்னணியில் அந்த சிகரம இருந்துகொண்டே தான் இருக்கும் அது போலதான் வாபி-சாபி ஜப்பானிய மனங்களில் எங்கோ ஒரு  ஓரமாக உறைந்திருக்கிறதோ?

எல்லாவற்றிலும் அழகை காணும் நோக்கு , அழகின் மூலம் வாழ்வின் மீதான பிடிப்பும் , அதன் மூலம் திருப்தியையும் , வாழ்வின் இயல்பையும் சேர்ந்தே உள்வாங்கும் ஒரு அணுகுமுறை கொண்ட வாபி-சாபி இந்த நவீன நுகர்வு வெறிக்கு ஒரு நல்ல முறி மருந்தாய் அமையக்கூடும்.

கவிஞர் தேவதேவனின் கவிதை வரி ஒன்று இப்படி வரும். “ஒரு புல்லின் நுனியைக் கொண்டு காட்டையே உருவாக்குவேன்” என்பதாக. உண்மைதான் இந்த பிரபஞ்சத்தின் முழுமையான, சாரத்தை ஒரு புல்லின் நுனியே காட்டிவிடும்.

வாபி-சாபி  விதை வடிவில் இருக்கும் விருட்சம், அதிலிருந்து நாம் முழுமை என்ற மொத்த காட்டையுமே உருவாக்கிக்கொள்ள முடியும்.


கார்த்திக்வேலு

[ads_hr hr_style=”hr-fade”]

கார்த்திக்வேலு கலை, இலக்கியம் , கவிதை , இசை ,வரலாறு ,பொருளாதாரம், தத்துவம் , மெய்யியல் போன்ற தளங்களில் பரவலான ஆர்வமும் தொடர் அவதானிப்பும் உள்ளவன் . சொந்த ஊர் கோவை .கடந்த இருபது வருடங்களாக சிட்னியில் வசிக்கிறேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து வாசிப்பவன் .தொழில் முறையில் கணிப்பொறியாளன்.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.