Sunday, Jun 26, 2022
Homeமொழிபெயர்ப்புகள்மொழிபெயர்ப்புக் குறுங்கதைரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –

ரியுனொசுகே அகுதாகவா குறுங்கதைகள் –


செஞ்ஜோ

முன்னொரு காலத்தில் சீனாவின் கிராமப்புறமொன்றில் ஒரு மாணவன் வசித்து வந்தான். தான் விரைவில் எழுதப்போகும்  பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தயாராகிக்  கொண்டிருந்தான். ஒவ்வொரு நாளும் தன் அறையின் ஜன்னலை ஒட்டிய மேசை முன் அமர்ந்து வாசித்துக்  கொண்டிருக்கும்போது , வீட்டு முற்றத்தின் நடுவில் அனைவரும் ரசிக்குமாறு பூத்துக் குலுங்கும் பீச் மரத்தினை தன் ஓய்வுப் பொழுதில் அவதானித்துக் கொண்டிருப்பான்.அவன் வீட்டினருகே பார்வைக்குப் புலப்படுமாறு  ஒரே ஒரு வீடு அமைத்திருந்தது. அவன் சில சமயங்களில் அவ்வீட்டில் மிக அழகிய பெண்ணொருத்தி தன் அன்றாட வேலைகளைச் செய்தவாறு நடமாடுவதைப் பார்த்திருக்கிறான். அவனுக்கு அவள் யாரென அறிந்து கொள்ள வேண்டுமென்ற வியப்பு மேலிடும். அவளும் தனியாக வசித்து வந்தது  போலத் தோன்றியது. அவளைப் பற்றியோ அவளது குடும்பத்தைப் பற்றியோ ஊரிலுள்ள எவரும் அறிந்திருக்கவில்லை. நாளாக நாளாக அவளை நேரில் சந்திக்க வேண்டுமென்ற ஆசை அம்மாணவனுக்கு அதிகமாக ஊற்றெடுத்தது.

ஒரு வசந்தக் கால அஸ்தமனப் பொழுதில் நாள் முழுவதும் படித்துக் களைத்த மாணவன் சற்றே  ஓய்வெடுக்க வீட்டு முற்றத்திற்கு வந்தான். தோட்டமெங்கும் பறவைகளின் கீச்சொலிகள்.  அவற்றிற்கிடையே அருகமைந்த வீட்டினுள்ளிருந்து கூச்சலும், கூப்பாடும் நிறைந்த கர்ண கோடூர அலறல்களை அம்மாணவன் கேட்டான். இது தான் தருணமென்று வீராவேசத்துடன் அப் பெண்ணின் வீட்டை நோக்கி விரைந்தோடி வாயிற் கதவுகளைத் திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

உள்ளே நுழைந்தவுடன் ஒரு தேவதயைப் போலத் தோன்றிய  அண்டை வீட்டுப் பெண் முரட்டுத் தோற்றத்துடன் நரை முடியுடன் கூடிய பெரிய உருவம் படைத்த ஒரு கிழவனை இருக்கையை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளிக் கொண்டிருந்ததை  கண்டான். அவளோ  மேலும்்கைமுட்டியால் அவன் முகத்தை அழுத்தினாள். புருவங்களை வெறியுடன் கூராக்கி  மேலெழும்ப நெறித்தாள். அக்கிழவனோ உருவத்தில் அவளை விட இருமடங்குப் பெரியவனாக தோன்றினான் . ஆனாலும்  அவளை ஒரு ராட்சசி என பாவித்து  அவள் முன்னே  கூனிக் குறுகி ஒரு குழந்தையைப் போலச் சிணுங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவன் ஓடிப்போய் அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.

“ஏன் அவனை இவ்வாறு சித்திரவதை செய்கிறாய்? அவன்  வயதானவன்! உனக்கு வெட்கமாக இல்லையா?” என்றான் அவன்.

“வயதானவனா? ஆஹா  ! இந்த மடையன் ஒரு சிறுவன். என்னை விடக் குறைந்த வயதுடையவன்.” என்றாள் அவள்.

“நீ பொய் சொல்கிறாய்.”

“இல்லை, நான் அவனுடை தாய். உனக்குத் தெரியவில்லையா ?”.

அம்மாணவன் முகம் வெளிரிப் போனான். அவள் கையை உதறிவிட்டு அவள் முகத்தை ஆராயத் துவங்கினான்.  அண்டை வீட்டுப் பெண் தொலைவிலிருந்துப் பார்த்ததுபோலவே அருகிலும் மிக அழகாகவே காணப்பட்டாள். ஆனால் அவளது தோல் நிறம் இயல்பு பிறழ்ந்து குருதியின் நிறத்தில் புள்ளிகளோடு மினுமினுத்ததைக் கண்டான். மேலும் அவள் தன் கண்களைச் சிமிட்டவேயில்லை.

“ஆமாம், என்னுடைய இந்த மகன் மதிப்பற்றவன். ” அப் பெண் சினத்தோடு பேசினாள். “எப்போதும் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்துபவன். தொல்லைகளை மட்டுமே கொடுக்கும் இவன் என் பேச்சைக் கேட்காத சுயநலவாதி. இவனுடைய வயதிற்கேற்ற விஷயங்களை அறிந்துகொள்ளத் தவறி விட்டான்.”

“ அவனுக்கு எவ்வளவு வயதாகிறது? . எழுபது வயது உடையவனை ப்  போலத் தோன்றுகிறான்.  இவன் உனது மகனென்றால் உனக்கு எத்தனை வயதாகிறது?”

“எனக்கு மூவாயிரத்து அறுநூறு வயதாகிறது.”

இதைக் கேட்டபின் அம்மாணவன் தன் அருகில் இருப்பவள் மனித இனத்தைச் சேர்ந்தவளில்லை என்றுணர்ந்தான். அவள் ஓர் அமானுஷ்ய உருவினளான செஞ்ஜோ என்பதை  அறிந்தான். அவன்  கண்முன்னே கடுஞ்சினமுற்றவளாய்  அந்தப் பெண் நரை முடியுடய பெரிய உருவம் படைத்த அக்கிழவனை,  அந்த நிர்மலமான வசந்தக் கால அஸ்தமனப் பொழுதில்,  அதே நிலையில் கைவிட்டவாறு விருட்டென்று மறைந்து விட்டாள்.

பின் குறிப்பு :  செஞ்ஜோ  என்பது ஜப்பானிய தொன்மக் கதைகளில் இடம் பெறும் மரணமற்ற மாயாவி, மந்திர ஆற்றலும் ஞானமும் உடைய அமானுஷ்ய பேயுரு.


சதுப்பு நிலம் 

I

     அது ஒரு மழைக்கால மதிய வேளை. ஓவியக் கண்காட்சியின் ஓர் அரங்கில் சிறு தைல வண்ண ஓவியம் ஒன்றைக் கண்டுபிடித்தேன். இவ்வாறு “கண்டுபிடித்தேன்” என்று நான் சொல்வது  மிகைப்படுத்தப்பட்ட  கூற்றாகத்  தோன்றினாலும் அதுவே உண்மை. ஏனெனில் நான் குறிப்பிடும் ஓவியம், அறையில் விளக்கு ஒளி பரவாத மூலைச்  சுவரில் ஒரு  பரிதாபகரமான  சட்டத்தினுள் அடைக்கப்பட்டு தன்னந்தனியாக காட்சியளித்தது.

என் நினைவு தெளிவாக இருக்கும் பட்சத்தில் அதற்கு “சதுப்புநிலம்” என்று பெயரிடப்பட்டிருந்தது. யாரென்றே தெரியாத அடையாளமற்ற ஒரு ஓவியன் வரைந்த ஓவியம். கலங்கல் நீருடன் ஈரம் செறிந்த சகதி நிலத்தைச் சூழ்ந்த அடர்த்தியான தாவரங்கள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு காட்சியளித்தன. இத்தகைய ஓவியம் தற்செயலாகக் கூட வழக்கமான பார்வையாளர்களின் கவனத்தைப் பெறாது.

ஆனால் விசித்திரமான வகையில் ஓவியன் இத்தனை அடர்த்தியான தாவர வர்க்கங்களைத் தீட்டுகையில் எந்த ஒரு இடத்திலும் சிறு  பச்சை நிறக் கீற்றைக் கூடப் பயன்படுத்தவில்லை .  நாணல் புற்கள் , போப்லர் ,  அத்தி மற்றும் ஏனைய மரங்கள் யாவும் தெளிவற்ற மஞ்சள் நிறத்தில் – ஒருவிதமான ஈரம் தோய்ந்த  இறுக்கம் படிந்த மஞ்சள் – நிறத்தில் வரையப்பட்டிருந்தன .

தாவரங்கள் ஓவியனுக்கு மெய்யாகவே இத்தகைய நிறத்தில் மட்டுமே புலப்பட்டனவா?  அல்லது, அவன் ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்வாறு மிகைப்படுத்திக் காட்டுகிறானா?

இவ்வாறு வியந்து கொண்டே ஓவியத்தின் பிரத்தியேகமான வசீகரத்தால் வசியமுற்று நின்றேன். இந்த ஓவியத்தில் அதி பயங்கரமான இரகசிய அற்புதம் உறைந்திருக்கிறது என்பதை அதைப் பார்க்கப் பார்க்க மெல்ல உணர்ந்தேன். சதுப்புநிலத்தின் முன்புறத் தோற்றம் மிக விசாலமாக வரையப்பட்டிருந்தது. அதன் மீது நாம் கால்வைத்து  வீழ்ந்து விடுவோமோ என்ற அச்ச உணர்வு பீரிட்டது.  வழுக்கும் சதுப்பு நிலம் கணுக்கால்களை அப்படியே உள்ளிழுத்து விழுங்கி விடுமோ என்று அஞ்சினேன்.

இச்சிறு தைல வண்ண ஓவியத்தினூடாக ஓவியன் மிரட்சியான நிலையில் இயற்கையை ஆட் கொள்ள விழையும் வாதையை நான் உணர்ந்தேன். எல்லா சிறந்த கலைப்படைப்புகளைப் போல இந்த மஞ்சள் சதுப்புநிலத் தாவரங்களின்  ஓவியத்தின் வாயிலாகவும் உன்னதமான  பரவச உணர்வை அடைந்தேன். அரங்கினுள் காட்சிப்படுத்தப்பட்ட வேறு எந்த ஓவியமும் இதற்கு நிகரான பேராற்றலைப் பெற்றிருக்கவில்லை.

II

    “இந்த ஓவியத்தால் மிகவும் ஈர்க்கப் பட்டீர்கள்  போலிருக்கிறதே!” என்ற குரலுடன் என் தோளில் யாரோ  தட்டுவதை உணர்ந்து நான் சிறிது நிலைகுலைந்து திரும்பிப் பார்த்தேன்.” நல்லது, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”  நன்கு மழிக்கப்பட்ட மோவாயுடைய ஒருவர் சதுப்புநில ஓவியத்தை ஏளனப் பார்வையுடன் சுட்டிக்காட்டினார் . அவர்  தான் ஒரு கலை விமர்சகர் என்று தன்னைத் தானே மெச்சிக் கொள்ளும் ஒரு நபர். ஏற்கனவே அவருடன் எனக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அதை உணர்த்தும் தொனியில்  விட்டேத்தியாக “இது ஓர் அற்புதமான கலைப்படைப்பு” என்றேன் .

“அப்படியா? என் ஆர்வம் அதிகரிக்கிறது” என்ற கலை விமர்சகர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார். அவருடைய சிரிப்பொலியில் வியப்படைந்த பிற பார்வையாளர்கள் எங்களைத் திரும்பிப் பார்த்தனர். நான் மேலும் எரிச்சலடைந்தேன்.

“மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவெனில் இது ஓவியர்களின் கூட்டமைப்பின் வழக்கமான ஒரு உறுப்பினர் வரைந்த ஓவியம் இல்லை. இதை வரைந்த ஓவியர் மிகவும் வற்புறுத்தியதால் எஞ்சி  உயிர் வாழும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பரிந்துரையில் வல்லுநர்கள் இந்த ஓவியத்தைக் காட்சிப்படுத்த அனுமதி அளித்துள்ளனர்”.

இதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற நான், “எஞ்சி உயிர்வாழும் குடும்பத்தினரா? அப்படியெனில் இந்த ஓவியர் இறந்துவிட்டாரா?” என்றேன்.

“ஆமாம், ஒரு வகையில் இறந்துவிட்டார். இறந்தாரைப் போல வாழ்கிறார்” என்றார் கலை விமர்சகர்.

எனது எரிச்சலுணர்வை விட ஆவல் அதிகரிக்கவே இவ்வாறு கேட்டேன்.

“அது எப்படி?”.

“நெடுங்காலத்திற்கு முன்னே அவருக்கு மனம் பிறழ்ந்து பித்துப் பிடித்து விட்டது.”

“இந்த ஓவியத்தை வரையும்போதுமா அந்நிலையில் இருந்தார்?”.

“நிச்சயமாக. ஒரு பைத்தியக்காரனைத்  தவிர வேறு யார் இத்தகைய நிறத்தை இவ்வாறு உபயோகிக்க முடியும்? ஆனாலும் நீங்கள் இந்த ஓவியத்தைப் புகழ்ந்து அற்புதக் கலைப் படைப்பு என்கிறீர்கள் . எனக்கு வேடிக்கையாக உள்ளது”.

கலை விமர்சகர் மீண்டும் ஏளனமாகச் சிரித்தார். என்னுடைய அறியாமைக்காக நான் வெட்கப்பட வேண்டும் என விரும்பினார் போலும். அல்லது அவரது மேம்பட்ட கலை நுண்ணுணர்வை நான் அறிய  வேண்டும் என விரும்பினார். இரண்டு வகையிலும் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அவர் கூறிய கதையைக் கேட்டவுடன் என் ஆன்மா கிளர்ச்சியுற்று ஓர் ஆழ்ந்த அனுபூதி நிலையை அடைந்தது .

பிரமிப்புடன் நான் சதுப்புநில ஓவியத்தை இரண்டாம் முறையாக உற்றுநோக்கினேன். இத்தகைய சிறு சட்டத்தினுள்ளே அடக்கி வைக்கப்பட்டிருந்த ஓவியனின் அதி தீவிர வாதை மற்றும் பாதுகாப்பின்மையின்  பயங்கரப் படிமத்தை  மீண்டும் தரிசித்தேன் .

“நான் அறிந்த வரையில் அந்த ஓவியர் தான் விரும்பிய முறையில் வரைய இயலாததால் மனம் பிறழ்ந்துப் பித்தானார்  . இதற்காகவாவது நாம் அவரைப் பாராட்ட வேண்டும்.” என்ற கலை விமர்சகரின் முகத்தில் விஷமத்தனமான புன்னகை. இத்தகைய பரிசைப் பெறுவதற்காகவா எங்களைப் போன்ற கலைஞர்கள் தம் வாழ்வையே பணயம் வைக்க வேண்டியதாகிறது என்று நொந்துகொண்டேன். என் உடலில் விசித்திரமான அதிர்வுகள் பரவ நான் துயரம் படிந்த ஓவியத்தையும் மூன்றாவது முறையாக உற்று நோக்கினேன்.

இருண்ட வானுக்கும்  கலங்கல் நீருக்கும் இடையே  காணப்படும் நாணல் புற்கள், பாப்லர் மற்றும் அத்தி மரங்களினூடே ஈரம் செறிந்த  மஞ்சள் நிறத்தின் அதிர்வலைகள் கட்டற்ற இயற்கையின் தவிர்க்க இயலாத பேராற்றலை வெளிப்படுத்தின.

“ஆமாம், இது ஓர் அற்புத கலைப்படைப்பு”,  என்று நான் கலை விமர்சகரின் முகத்திற்கு நேராகத் துணிவுடன் கூறினேன்.


ரியுனொசுகே அகுதாகவா

தமிழில் –  கே.கணேஷ்ராம்


ஆசிரியர் குறிப்பு:

ரியுனொசுகே அகுதாகவா ( 1892 – 1927):

ஜப்பானிய  புனை கதைக்கு உலக அரங்கில் தனித்துவமான அடையாளத்தை ஏற்படுத்தியவர் ரியுனொசுகே அகுதாகவா. ஜப்பானிய தொல் மரபையும் ஐரோப்பிய நவீன வடிவயியல்  உத்திகளையும் ஒன்றிணைக்கும் புனைகளங்களாக  அவரது சிறுகதைகள் விளங்குகின்றன.

நாட்டாரியல் கதைகளை மீட்டெடுத்து அவற்றை அதி புனைவாக உருமாற்றி மானுட வாழ்வின் புதிர்களைச் சுற்றிப் படரும் சிலந்தி வலைகளாக விரிகின்றன  அவர் கதைகள். வாழ்தலின் வாதையை, இருண்மையைப் புனைவாக வெளிப்படுத்துவதில் எட்கர் ஆலன் போ விற்கு நிகரானவர் அகுதாகவா என்று விமர்சகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள்.

கதை சொல் முறையில் பல்வேறு சாத்தியங்களைத் தன் புனைவுகளில் நிகழ்த்தியுள்ள ரியுனொசுகே அகுதாகவா ” சிலந்தி வலை” போன்ற எளிய கதைகள் முதல் ” சுழலும் சக்கரங்கள்” போன்ற உளவியல் சிக்கல்களை ஆராயும் அரிய சவாலான கதைகளையும் படைத்துள்ளார்.

ஹாருகி முராகமி போன்ற சமகால ஜப்பானிய எழுத்தாளர்களுக்கு மிக நெருக்கமானவராகத் தென்படுகிறார்  அகுதாகவா. 1927 ஆம் ஆண்டில் தன் முப்பத்து ஐந்தாம் அகவையில் தற்கொலை செய்துகொண்ட அகுதாகவா வின் ” சுழலும் சக்கரங்கள்” எனும் நெடுங் கதையை ஸ்டிரின் பெர்க் இன்  Inferno விற்கு இணையான புனைவாக சிலாகித்துக் கொண்டாடுகிறார் போர்ஹே. ரியுனொசுகே அகுதாகவா வின் வாழ்வை ” Patient X” என்ற தலைப்பில் பின்நவீனத்துவப் புனைவாக எழுதியுள்ளார் டேவிட் பீஸ்.

மொழிபெயர்ப்பாளர்:

 

கே.கணேஷ் ராம் : அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த சில வருடங்களாக சிறந்த மொழிபெயர்ப்பு படைப்புகளை அளித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த எழுதிய “சுழலும் சக்கரங்கள்” (Sleeping Gears -ரியுனொசுகே அகுதாகவா) சிறுகதைத் தொகுப்பு சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதைப் பெற்றது.


 

No comments

leave a comment

error: Content is protected !!