பெரிய இடத்துப் பூனை (பிரெஞ்சு) சார்ல் பெரோ, தமிழில்- ஈஸ்வர்.


 

ஒரு ஊரில் ஒரு தந்தை, தன் மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவருக்கு வயதாகிவிட்டதால், தன்னிடம் இருக்கும் சொத்தை எல்லாம் மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிடத் தீர்மானித்தார். அதன்படி, மூத்தவனுக்கு தன்னுடைய மில்லையும், இரண்டாமவனுக்கு ஒரு கழுதையும், இளையவனுக்கு ஒரு பூனையும் கொடுத்தார்.

கடைசி மகனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ‘என் மூத்த அண்ணனும், இரண்டாவது அண்ணனும் சேர்ந்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம். அவர்களிடம் தானியங்களை அரைக்க மில்லும், பொதி சுமந்து செல்ல கழுதையும் இருக்கின்றன. என்னிடமோ இந்தச் சிறு பூனை தான் இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வேன்?’, என்று எண்ணி மனம்கலங்கினான்.

ஆனால், அது ஒரு அதிசயப் பூனை. மிகவும் புத்திசாலியான அது, மனிதர்களைப் போல பேசவும் செய்தது. அது தன் எஜமானிடம் சொல்லியது, “எஜமானரே! நீங்கள் கவலைப்படாதீர்கள். எனக்கு ஒரு சாக்குப்பையும், ஒரு கயிறும், என் காலில் அணிந்துகொள்ள ஷூவும் கொடுங்கள். உங்களை நான் இந்த நாட்டுக்கே ராஜாவாக ஆக்கிக் காட்டுகிறேன்”.

பூனை பேசியதைக் கண்ட இளைய மகனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அவன் அந்தப் பூனை கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தான். அது மகிழ்ச்சியாகத் தன் புதிய ஷூவை அணிந்துகொண்டு காட்டை நோக்கிச் சென்றது. அங்கே முயல்கள் அதிகமாக வசிக்கும் புதர்கள் அருகே சென்று, தான் கொண்டு வந்த சாக்குப்பையில் சில கேரட் துண்டுகள், பச்சைக் காய்கறிகளைப் போட்டுவைத்துவிட்டு ஒளிந்துகொண்டது. ஒரு அப்பாவி முயல் அதைச் சாப்பிட வந்தபோது, அந்தப் பூனை சடாரெனத் தாவி, சாக்குப்பையின் வாயை, கயிறைக் கொண்டு இறுக்கமாகக் கட்டிவிட்டது. பிடிபட்ட முயலை எடுத்துக்கொண்டு, அந்த நாட்டின் மன்னரைக் காணச் சென்றது.

அரண்மனையின் வாயிற்காவலர்கள் இந்தப் பூனையின் மிடுக்கான தோற்றத்தையும், அது காலில் அணிந்திருந்த விலையுயர்ந்த ஷூவையும் பார்த்துவிட்டு, ‘ஓ! இது ஒரு பெரிய இடத்துப் பூனை போல’, என்று நினைத்துக்கொண்டு உள்ளே அனுமதித்தனர். அது ராஜாவிடம் சென்று சொன்னது,

“மன்னருக்கு எம் வணக்கம். எம் எஜமானர் கராபாஸ் கோமான், உங்களுக்கு இந்தச் சிறு முயலை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்.”

“யார் இந்த கராபாஸ் கோமான், நான் கேள்விப்பட்டதே இல்லையே? இருந்தாலும் நான் முயல்கறி சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்டன. எனக்கோ அது மிகவும் பிடிக்கும். எனவே, நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறேன்”, என்று மன்னர் கூறினார்.

மற்றொருநாள் சில பறவைகளைப் பிடித்துக்கொண்டுபோய் தன் எஜமானர் கராபாஸ் கோமான் மன்னருக்குக் கொடுத்ததாகச் சொன்னது. அதற்கு மன்னர் சொன்னார், “உன் எஜமானர் கராபாஸ் கோமான் என்மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறாரே! மிக்க மகிழ்ச்சி”.

இதுபோல, அவ்வப்போது பறவைகள், சிறு சிறு விலங்குகள் எனத் தந்திரமாகப் பிடித்துக்கொண்டு போய்க்கொடுத்து, மன்னரின் உணவு ஏக்கத்தைப் போக்கி, இல்லாத ஒரு கராபாஸ் கோமான் மீது மன்னருக்குப் பெருமதிப்பு வரும்படிச் செய்தது, அந்தப் பெரிய இடத்துப் பூனை. ஒருநாள் அரண்மனையிலிருந்து வெளியேவரும்போது, மன்னரின் குதிரைவண்டி ஓட்டுனர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அதை, பெரிய இடத்துப் பூனை ஒட்டுக்கேட்டது.

“மன்னர் வண்டியைத் தயார் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆற்றைச் சுற்றி நகர்வலம் போகவேண்டுமாம்”, என்று ஒரு ஓட்டுனர் சொல்ல, அதற்கு மற்றொருவர் சொன்னார்,

“மன்னர் மட்டும் அல்ல, அவருடன் இளவரசியும் வருகிறாராம்”.

இதைக் கேட்டதும், பூனை ஒரு திட்டம் தீட்டியது. தன் எஜமானரிடம் ஓடிச்சென்று சொன்னது,

“எஜமானரே! நான் உங்களிடம் சொன்னது நினைவிருக்கிறதா? இப்போதுதான் சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், நம் ஊரின் நடுவிலுள்ள ஆற்றுக்குச் சென்று குளிப்பது தான். மீதி எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்”.

அவனும் சரியென்று ஆற்றுக்குச் சென்று, தன் ஆடைகளைக் கழற்றி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, தண்ணீரில் இறங்கினான். அப்போது, இரகசியமாக அவன் துணியை எடுத்து ஒரு பெரிய பாறையின் பின் ஒளித்துவைத்துவிட்டது அந்தப் பூனை.

அது எதிர்பார்த்தது போலவே, ஆற்றின் வழியே மன்னர் தன் மகளுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அவர் வண்டியை வழிமறித்த பூனை, நேராக மன்னனிடம் சென்று,

“மன்னா! மன்னா! காப்பாற்றுங்கள். என் எஜமானர் கராபாஸ் கோமான் ஆற்றில் மூழ்கிக் கொண்டிருக்கிறார். அவரைச் சில திருடர்கள் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த ஆடையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்”, என்று கதறியது.

உடனே மன்னர் தன் காவலர்களை அனுப்பி, பூனையின் எஜமானை ஆற்றிலிருந்து அழைத்துவந்தார். மேலும் சிலரைக் கூப்பிட்டு, மன்னர் சொன்னார்,

“அரண்மனைக்குச் சென்று நம் கராபாஸ் கோமானுக்கு சிறந்த ஆடைகளை எடுத்துவாருங்கள்!”

திடீரென மன்னரையும் அவர் காவலாட்களையும் பார்த்ததால், எதுவுமே புரியாமல்,

“யார் அந்தக் கராபாஸ் கோமான்?”, என்று தன் பூனையிடம் இரகசியமாகக் கேட்டான் அதன் எஜமான். அதற்குப் பூனை,

“நீங்கள் தான் அது. நான் அப்படித்தான் உங்களைப்பற்றி மன்னரிடம் சொல்லியிருக்கிறேன். இப்போது எதுவும் பேசாமல் மன்னருக்கு நன்றி சொல்லுங்கள்”, என்று சொன்னது.

காவலர்கள் கொண்டுவந்த நல்ல ஆடைகளை அணிந்துகொண்டு மன்னருக்கு நன்றி சொன்னான். அதற்கு மன்னர்,

“எனக்கு எதற்கு நன்றி சொல்கிறீர்கள்? நீங்கள் கொடுத்தனுப்பிய அன்பளிப்புகளுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். எங்களோடு நீங்களும் நகர்வலம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்”, என்று சொன்னார்.

‘என்ன அன்பளிப்பு?’, என்று திருதிருவென விழித்துக்கொண்டு அவனும் வண்டியில் ஏறினான். அங்கே இளவரசி இருந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டமாத்திரத்திலேயே காதல் கொண்டனர்.

வண்டி புறப்பட்டது. பூனை, வண்டிக்குச் சற்றுமுன்னே நடந்து சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்ற பிறகு, சில விவசாயிகள் அறுவடை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தது. அவர்களிடம் ஓடிச்சென்று, “நண்பர்களே, என் பின்னால் மன்னர் நகர்வலம் வந்துகொண்டிருக்கிறார். இங்கே வரும்போது, இந்த விவசாய நிலம் யாருக்குச் சொந்தமானது என்று கேட்பார். அப்போது, நீங்கள், ‘இது எங்கள் எஜமானர் கராபாஸ் கோமானுக்குச் சொந்தமானது’ என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லவில்லையென்றால், உங்கள் கழுத்து உங்களிடம் இருக்காது”, என்று சொல்லித் தன் கையில் வைத்திருந்த ஒரு கத்தியைக் காட்டி மிரட்டியது.
பூனை சொன்னதுபோலவே மன்னர் வந்து கேட்டார்,

“இந்த வயல்வெளிகளெல்லாம் யாருடையவை?”, பூனையின் மிரட்டலால் பயந்துபோயிருந்த விவசாயிகள்,

“இது எங்கள் எஜமானர் கராபாஸ் கோமானுக்குச் சொந்தமானது”, என்று கூறினர். இதைக் கேட்ட மன்னர், பூனையின் எஜமானரைப் பார்த்து,

“நல்ல பொன்விளையும் பூமி உங்களுடையது”, என்று கூறினார். இந்தப் பூனைதான் ஏதோ தந்திரம் செய்கிறது என்று புரிந்துகொண்ட அவன் பதில் ஏதும் கூறாமல் புன்னகைத்தான்.

பூனைக்குத் தான் போடும் திட்டங்களெல்லாம் வெற்றியடைவதைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியில் வேகமாக நடந்து முன்னே சென்றது. வழியில் ஒரு பெரிய மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் ஒரு அரக்கன் வசித்து வந்தான். அவனால் நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்துக்கு மாற முடியும். இதை ஏற்கனவே அறிந்திருந்த பூனை அவன் மாளிகையின் வாசலுக்குச் சென்றபோது,

“யார் நீ? உனக்கு என்ன வேண்டும்”, என்று அந்த அரக்கன் கத்தினான். அதற்குப் பூனை,

“இந்த உலகத்திலேயே மிகப்பெரிய மந்திரவாதியான அரக்கரே, உங்களைக் கண்டு என் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டுப் போகலாமென்று வந்துள்ளேன்”, என்று சாமர்த்தியமாகச் சொன்னது. இதைக் கேட்ட அரக்கனுக்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது. பூனையைத் தன் மாளிகையின் உள்ளே அழைத்துச் சென்றான். அங்கே சென்றதும்,

“ஐயா, உங்களால் எந்த உருவத்திற்கும் மாற முடியும் என்று சொல்கிறார்களே, அது உண்மைதானா?”, என்று அந்தப் பூனை கேட்டது.

“ஆம், இதோ பார்! ஹா ஹா ஹா”, என்று கத்திக்கொண்டே அந்த அரக்கன் ஒரு சிங்கமாக மாறினான். இதைப் பார்த்த பூனை, சற்று பயந்துபோய்,

“ஆஹா! அற்புதம்! ஆனால் உங்களால் சிங்கம் புலி போன்ற பெரிய உருவங்களாகத் தான் மாறமுடியும் போலிருக்கிறது. சிறிய உருவங்களாக உங்களால் மாறமுடியாது”, என்று சொன்னது.

“என்ன சொல்கிறாய்? நான் எந்த உருவமும் எடுப்பேன்”, என்று கர்ஜித்தான் சிங்கமாக மாறிய அரக்கன்.

“அப்படியானால், எங்கே எலியாக மாருங்கள் பார்க்கலாம்”, என்று பூனை சவால் விட்டது. உடனே அரக்கன் எலியாக மாறினான். இதற்காகவே காத்திருந்த பூனை, எலியாக மாறிய அரக்கனை எடுத்து ‘லபக்’ என்று வாயில் போட்டுச் சாப்பிட்டுவிட்டது. அரக்கனின் சமையல்காரர்களை மிரட்டி ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னது. பூனை மாளிகைக்கு வெளியே வந்தபோது, மன்னரின் வண்டி வாயிலின் அருகே வந்தது. அது ஓடிச்சென்று, மன்னரிடம் சொன்னது,

“எங்கள் எஜமானர் கராபாஸ் கோமானின் கோட்டைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.”

இதைக் கேட்ட ராஜா மிகுந்த ஆச்சரியம் அடைந்தார்.

“முன்பு பார்த்த வயல்வெளி, இவ்வளவு அழகான மாளிகை, இவை எல்லாம் உங்களுடையதா?”, என்று மன்னர் கேட்க, பூனையின் எஜமான் பொதுவாக தலையசைத்து வைத்தான்.

பிறகு, பூனை எல்லோரையும் விருந்துக்கு அழைத்தது. மிகச் சிறப்பான விருந்தாக அமைந்தது. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்த மன்னர், கண் ஜாடையிலே தன் மகளைப் பார்த்து, கராபாஸ் கோமானைத் திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று கேட்க, இளவரசியும் சம்மதம் தெரிவித்தாள். பின்பு பூனையின் எஜமானைப் பார்த்து,

“கராபாஸ் கோமான் அவர்களே, என் மகளை உங்களுக்குத் திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா?”, என்று கேட்டார். அவனும் சம்மதம் தெரிவிக்க, அவர்களின் திருமணம் இனிதே நடந்தது. பூனை சொன்னபடியே தன் எஜமானை நாட்டின் ராஜாவாக மாற்றிவிட்டது. அவன் பூனைக்கு நன்றி சொல்லிவிட்டு, அரண்மனையிலேயே ஒரு சிம்மாசனம் செய்துகொடுத்து, தன் அமைச்சர் ஆக்கிக்கொண்டான். பின்பு எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

[இந்தக் கதை, சார்ல்ஸ் பெரோ (Charles Perrault) என்பவர், Le maître chat அல்லது Le chat botté என்னும் தலைப்பில் ஃபிரெஞ்சு மொழியில் எழுதிய சிறார் சிறுகதையின் தழுவல் ஆகும். வாய்மொழிக் கதையாடலாக இத்தாலியர்களிடம் உலவி வந்த பூனைக்கதை கருவிற்கு, சார்ல்ஸ் பெரோ 1600-களில் எழுத்து வடிவத்தை அளித்தார். அப்போதிலிருந்து, எல்லா கதைகளைப் போலவே இந்த பூனைக் கதையும் பல்வேறு திரிபுகளுக்கு உட்பட்டது. அடிப்படையில், காலில் ஷூ அணிந்து கொண்டு தந்திரமாகச் செயல்பட்டு, மிரட்ட வேண்டியவரை மிரட்டி, பணிய வேண்டியவரிடம் பணிந்து போனால், ஒரு பூனை கூட எல்லோரையும் ஆட்டுவிக்க முடியும் என்பதே இதன் மையக் கருத்து. எதிர்மறைக் கதாபாத்திரமான பூனையின் மூலமாகவே கதையும் காட்சிகளும் நகர்த்தப்பட்டு வந்தாலும், மறைமுகமாக, அந்தக்காலத்தில் வாழ்ந்த Nobles என்று அழைக்கப்பட்ட ஐரோப்பியக் கோமான்களின் போலி மிடுக்கையும், தந்திரத்தையும், முட்டாள்தனத்தையும் இந்தக்கதை நக்கல் செய்வதையும் நாம் பார்க்கலாம்.]


  • தமிழில்: ஈஸ்வர்

6 COMMENTS

  1. சிறார் படைப்பின் உண்மை பதம் காட்டுகிறது மொழியாக்கம் செய்யப்பட்ட “பெரிய இடத்துப் பூனை. இத்தகைய வரவுகள் தமிழ் மொழி சிறார் இலக்கியத்தில் புதிய திசை பாய்ச்சலை கொடுக்கும் என நம்பலாம்.

  2. அருமையான சிறார் கதை.ஆனால் தாத்தா ஆன நானும் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.