அமெரிக்கச் சூழலியல் இதழாளரான எலிசபெத் கோல்பர்ட் (Elizabeth Kolbert) மனிதகுலம் சக உயிரினங்களை எப்படி அழித்தொழிக்கிறது என்றும், அழிவிலிருந்து தான் மீண்டும் கொண்டுவர விரும்பும் ஓர் உயிரினம் பற்றியும் பேசுகிறார்.
The Sixth Extinction என்ற நூலின் ஆசிரியர் எலிசபெத் கோல்பர்ட்; டைனோசர்களை அழித்தொழித்த பேரழிவை ஒத்த ஒரு பேரழிவு இப்போது நம்மை நெருங்கிக்கொண்டிருப்பதாக இந்நூலில் வாதிடுகிறார். இதற்கு முன்பு ஏற்பட்ட ஐந்து ஊழிப் பேரழிவுகளும் (Mass extinction) இயற்கைச் சூழலால் நிகழ்ந்தவை. ஆனால் இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது மனிதனால் உருவாக்கப்பட்டது என்று அவர் நமக்குக் காட்டுகிறார். மூன்றில் ஒரு பங்கு பவளத்திட்டுகள், நன்னீர்ச் சிப்பிகள், சுறாக்கள், திருக்கை மீன்கள், மூன்றில் கால்பங்கு பாலூட்டிகள், ஐந்தில் ஒரு பங்கு ஊர்வன விலங்குகள், ஆறில் ஒரு பங்கு பறவைகள் ஆகியவை “அழியும் தருவாயை (oblivion) நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றன” என்றும் கோல்பர்ட் தெரிவிக்கிறார்.
ஆறாவது ஊழிப் பேரழிவு எனும் பதத்தை எப்போது கேள்விப்பட்டீர்கள்? அது எவ்வாறு உங்கள் புத்தகத்தின் மையப்பேசுப் பொருளாக ஆனது?
அது மிக நீண்ட நாட்களுக்கு முன்பாக என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தேசிய அறிவியல் அகாதெமி 2008-இல் வெளியிட்ட “நாம் ஆறாவது ஊழிப் பேரழிவின் மையத்தில் இருக்கிறோமா?” எனும் கட்டுரை தான் என்னை இந்த வழிக்கு முற்றிலுமாகத் திருப்பியது. மேலும் அதுவே இந்த முழு புத்தகத்தின் ஆரம்பப்புள்ளி என்றும் சொல்லலாம். அதன்பிறகு, நியூ யார்க்கர் (New Yorker) இதழுக்கு “ஆறாவது ஊழிப் பேரழிவு?” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினேன்; அது பனாமாவில் நடக்கும் இருவாழிட உயிரினங்களின் (amphibian) மீதான வேட்டையைப் பற்றியதாகும். நான் மிகச்சிறிய விஷயங்களைப் பற்றி பேசவில்லை என்று தெரியும். அதனால் தான் இது ஒரு புத்தகமாகவே உருவாகிவிட்டது.
காலநிலை மாற்றம் குறித்த உங்கள் முந்தைய எழுத்துக்கள் [அதன்] சந்தேகங்களை எதிர்கொண்டது. இது போன்ற பரந்துப்பட்ட அணுகுமுறை மேலும் அதிக வரவேற்பைப் பெறும் என்று கருதுகிறீர்களா?
காலநிலை மாற்றம், குறிப்பாக அமெரிக்காவில், அதிகப்படியாக அரசியலாக்கப்பட்டுவிட்டது. மக்கள் அதைப் பற்றி குறைந்தபட்சம் சிந்திப்பதற்கு இதுதான் உண்மையான தடையாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தில் விவாதிக்கப்பட்டிருக்கும், ஊழிப் பேரழிவுக்குப் பங்களிக்கும் மற்ற பிரச்சினைகளான அயல் ஊடுருவி உயிரிகள் (invasive species), கடல் அமிலமயமாதல் (ocean acidification) போன்றவை அரசியலாக்கப்படவில்லை. ஆனால் அமிலமயமாதல் என்பது அப்படியே புவிவெப்பமாதலைப் போன்ற ஒரு நிகழ்வுதான். இவையனைத்தும் கரியமில வாயு வெளியேற்றம் பற்றியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சமூகம் அறிவியலை விட்டுவிட்டு அதன் சொந்தக் கருதுகோளை ஏற்படுத்திக்கொண்டு அதில் வாழ்கிறது.
இதில் முரண் என்னவென்றால் இதற்கு முன்பு ஏற்பட்ட அழிவுகள் இல்லையென்றால், நாம் இப்பொழுது இங்கு இருந்திருக்கமாட்டோம் என்பதுதான்…
ஆம். 66 மில்லியன் (1 மில்லியன் = பத்து இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் சிறப்பாக வாழ்ந்துகொண்டிருந்தன; அவற்றின் வாழ்க்கைமுறை ஒரு எரிகல் தாக்கத்தினால் முடிவுக்கு வராமல் இருந்திருந்தால், அவை மேலும் 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் சிறப்பாக வாழ்ந்திருக்கக் கூடும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. இந்தக் கோளில் உயிர்வாழ்க்கை என்பது எதேச்சையானது. அதற்கு பெரும் திட்டங்கள் எதுவும் இல்லை. நாமும் ஒருவிதத்தில் எதேச்சையானவர்கள் தான். இந்த நெடும் வரலாற்றில் தவிர்க்கமுடியாத வகையில் நாமும் ஒரு பகுதியாகிவிட்டாலும், நாம் அசாதாரணமானவர்களாகவும் மாறிவிட்டோம். மேலும் நம்முடைய நடவடிக்கைகள் என்பவை சாத்தியமுள்ள முன்மாதிரிகளைக் கொண்டிருக்கவில்லை.
மனிதர்கள் மொத்தமாக இறந்துவிட்டால் இந்தக் கோளுக்கு அது நன்மை பயக்குமோ என்று உங்கள் புத்தகத்தை வாசிக்கும் ஒருவர் ஆச்சரியப்படக்கூடும்?
நாம் இல்லையென்றால் சில உயிரினங்கள் இங்கு அழிந்துவிட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பான்மையான உயிரினங்களுக்கு அது நல்லதையே விளைவிக்கும். இது தீவிரமாக அல்லது தவறான முறையில் (radical or misanthropic) சொல்வது போன்று இருக்கும். ஆனால் இதுதான் வெளிப்படையான உண்மை என்று எண்ணுகிறேன்.
நாம் இங்கு தோன்றியதிலிருந்து, உயிரினங்களை அழிப்பதில் மும்முரமாக இருக்கிறோம் என்று தோன்றுகிறது.
50,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவை அடைந்த மனிதர்கள் அதிகமான உயிரினங்களை அழித்ததற்கு மறுக்கமுடியாத சான்று உள்ளது. தன் குட்டிகளை வளர்க்க தன் உடலில் பைக்கொண்டுள்ள போன்ற பெரும் விலங்குகள், பெரிய ஆமைகள், பெரிய பறவை இனங்கள் போன்றவை மனிதர்கள் குடியேறிய இரண்டாயிரம் ஆண்டுகளில் மொத்தமாக அழிந்துவிட்டது.
உங்களின் புத்தகம் ஒரு பத்திரிக்கையாளரின் புத்தகமாக உள்ளது. பத்திரிகையாளரின் தேடல் உணர்வைக் கொண்டிருப்பது உங்களுக்கு முக்கியமானதா?
ஆம், ஏனென்றால் நான் ஒரு பத்திரிக்கையாளர், அறிவியலாளர் அல்ல. நான் என் சொந்த நிபுணத்துவத்தில் இருந்து கருத்துக்களை முன்வைப்பதில்லை. மக்களோடு பயணித்து அவர்களின் நிபுணத்துவத்தில் இருந்தே கருத்துக்களைப் பெறுகிறேன். இந்த முழு சோகக்கதையை ஒன்றிரண்டு அத்தியாயங்களில் கொண்டு வந்துவிடலாம். ஆனால் இது மக்கள் உண்மையில் சிந்திக்க வைக்க, தேடலில் நம்மைப் பின்தொடர வைக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியே. இந்த வகையில் தான் நாம் நல்ல கட்டுரைகளைச் சொல்லமுடியும்.
உங்கள் பின்புலம் அரசியல் செய்திவழங்கல் (political reporting) சார்ந்திருக்கிறது; ஏன் அறிவியலுக்குத் தாவினீர்கள்?
ஏனென்றால், நான் காலநிலை மாற்றத்தில் ஆர்வம் கொண்டிருந்தேன், அரசியலும் என்னை அதன் பக்கம் நகர்த்தியது. 2000-2001-ஆம் ஆண்டு, அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யூ புஷ்-கின் கீழ் கியோட்டோ உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறிய காலகட்டம். உண்மையில் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சனையா அல்லது புஷ் மற்றும் வேறு சிலர் சொல்வது போன்று எந்தச் சிக்கலும் இல்லாததா என்பது அப்போது எனக்கிருந்த மிகப்பெரிய கேள்வி. இக்கேள்விக்கான விடையை கண்டடைந்து அதைக் கட்டுரையாகச் சொல்வதற்கு எனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. அவற்றை மூன்று பகுதிகளாக நியூ யார்க்கர் இதழில் எழுதினேன், அங்கிருந்து பரவிவளர்ந்தது.
அறிவியல்ரீதியான புரிதலை அடைவதற்கு நீங்கள் எத்தகைய சவால்களை எதிர்கொண்டீர்கள்?
அது மிகப்பெரிய சவால். எனக்கு அவ்வளவாக அறிவியல் பின்புலம் இல்லை. நான் இலக்கியத்தை முக்கியப் பாடமாக எடுத்துத் படித்தவள். அரசியலும் அறிவியலும் வெவ்வேறானது என்று என்னால் வேறுபடுத்தமுடியவில்லை, ஏனென்றால் இரண்டு துறைகளிலும் துறைசார் நபர்கள் தங்கள் சொந்த உலகில் சொந்த மொழியில் பேசிக்கொண்டிருப்பார்கள். அவற்றிலிருந்து உங்கள் வாசகர்களுக்குப் பொருத்தமானது என்று நீங்கள் கருதும் கதையை அறிவதற்கான வழியைக் கண்டறிந்து எழுத வேண்டும்.
சர்வதேச [விமான, கப்பல்] போக்குவரத்து பல அழிவுகளை விரைவுப்படுத்தியுள்ளது. அதை நாம் நிறுத்த வேண்டுமா?
இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான மகத்தான வழியைக் கண்டுபிடிக்கும்வரை இந்தப் புத்தகத்தை நான் முடிக்கவில்லை. [சூழலியலில்] நம்முடைய தாக்கத்தை மட்டுப்படுத்தும் வழிமுறைகள் சில உள்ளன. ஆனால், நம்முடையச் செயல்பாடுகளை முழுமையாகப் பார்க்கும்போது, அது நம் வாழ்க்கைமுறையின் பெரும்பகுதி என்பதையும், நீண்டகாலமாக இதையே தான் செய்துவந்திருக்கிறோம் என்பதையும் நீங்கள் உணரமுடியும். பல நூறு ஆண்டுகளாக கடற்பேருயிரினங்களை நாம் வேட்டையாடிவருகிறோம்; கடல் பயணங்களை நிறுத்துவோம் என்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.
இன்றைய காலக்கட்டத்தில் உயிரியல் பூங்காக்களின் முக்கியத்துவம் எத்தகையது?
உயிரியல் பூங்காக்கள் பற்றி நேஷனல் ஜியாகரபிக் இதழுக்கு ஒரு கட்டுரை எழுதினேன், அதன்பிறகு உயிரியல் பூங்காக்களின் முக்கியத்துவத்தை அறிந்து அதிசயித்துவிட்டேன். எவ்வளவு உயிரினங்களை அழிந்துகொண்டிருக்கின்றன என்பதை உணத்துவதில் அவை முதல் வரிசையில் நிற்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விலங்குகளையே தங்களால் சமாளிக்க முடிகிறது என்று ஏராளமான உயிரியல் பூங்காக்களில் என்னிடம் கூறினார்கள். தேசிய பூங்காக்களிலும், மற்ற இடங்களிலும் அதிகரிக்கும்படி அனைவரும் செய்யப்போவது இதையேதான். இதனால் மொத்த உலகமும் ஒருவகையில் உயிரியல் பூங்காவாக மாறும் என்பது ஒரு sobering thought.
ஆறாவது ஊழிப் பேரழிவு மனித வாழ்வாதாரத்தை பாதிக்குமா?
நான் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி: அப்படியென்றால் நம் நிலை என்ன? இக்காலக்கட்டத்தில் அவ்வளவு பொருத்தமான கேள்வியாக இதை நான் நினைக்கவில்லை. மற்ற உயிரினங்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து அவற்றின் வளங்களை நுகரும் விஷயத்தில் நாம் கெட்டிகாரர்கள். இதுவரையில் மிகவும் வெற்றிகரமான ஓர் உத்தி இதுவாகும். இப்பொழுது இந்தக் கோளில் 720 கோடி மனிதர்களும், தங்கள் இனத்தின் கடைசி சில நூறு உயிர்களைக் கொண்டுள்ள உயிரினங்களும் உள்ளன. இங்கு இன்னும் நுகரப்படாத வருங்காலத்தில் பயன்படக்கூடிய ஏராளமான உயிரிப்பொருட்கள் உள்ளன. மற்ற உயிரினனங்களுக்கும் இயற்கை உலகிற்கும் அவற்றை நாம் உணர்ந்துகொள்ளும் முன்னரே, மிகப் பெரிய அளவிலான சேதத்தை நாம் ஏற்படுத்தமுடியும் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
அற்றுப்போனதில் இருந்து உயிரினம் ஒன்றை மீண்டும் கொண்டுவர நீங்கள் விரும்புகிறீர்களா?
பெரிய ஆக்கு (Great Auk) பற்றி நான் எழுதியிருக்கிறேன். இவ்விலங்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு அற்றுப்போனது. [இரசாயன] பதப்படுத்தப்பட்டிருந்த இந்த விலங்கு ஒன்றை ஐஸ்லேந்தில் கண்டேன். அவை உண்மையில் மிக அழகான பறவைகள், பென்குயின் போன்று பறக்க இயலாத பறவைகளிடம் இருக்கும் ஒருவித சிநேகப்பாவம் இதற்கும் உண்டு என்பதைக் காணமுடிகிறது. நான் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக இதைத்தான் விரும்பித் தேர்ந்தெடுப்பேன்.
9 மார்ச் 2014 அன்று தி கார்டியன் இதழில் The whole world is becoming a kind of zoo என்ற தலைப்பில் வெளியான நேர்காணல்.
தமிழில் ரா. பாலச்சுந்தர்