ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?

ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார்.

என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு உட்பிரிவிகளின் அதிகரிப்பு, இரண்டு உலகப் போர்களினாலும் ஜெர்மனிக்கு எதிரான எண்ணவோட்டம் இவையெல்லாம் ஹம்போல்டின் புகழை மழுங்கச் செய்தன.

ஜெர்மனியில் பிறந்த ஆண்ட்ரியா வுல்ஃப், The Invention of Nature: Alexander von Humboldt’s New World என்ற நூலின் மூலம், ஹம்போல்டின் புகழுக்குப் புது வெளிச்சம் பாய்ச்சுவதையே தனது இலட்சியமாகக் கொண்டவர்; ஹம்போல்ட்டிடமிருந்து இன்னும் நாம் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவு இருக்கின்றன என்பதை நம்மிடம் விளக்குகிறார்.

லண்டனில் அவரது வீட்டிலிருந்து நம்மோடு பேசிய வுல்ஃப் (Andrea Wulf), ஈகுவெடாரின் உயரமான எரிமலையை ஹம்போல்ட்டின் கால்தடங்களைப் பற்றி ஏறிச்செல்லும்போது ஏற்படும் வலி அனுபவம் ஏன் முக்கியமானது; ஹம்போல்ட் இல்லாத டார்வின் எப்படிச் சாத்தியமில்லை; ஹம்போல்ட் யாரென்று தெரியாத பட்சத்திலும்கூட இன்றையச் சூழலியலாளர்கள் எவ்வாறு இந்த மாபெரும் ஜெர்மனியாருக்கு நன்றிகடன் பட்டிருக்கிருக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.

தனது காலக்கட்டத்தில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கினாலும் ஆங்கிலேயே உலகில் அலெக்ஸ்சாண்டர் வான் ஹம்போல்ட் பெரிதும் மறக்கப்பட்டிருக்கார். வரலாற்று விரிசல்களின் ஊடே இவர் கைவிடப்பட்டது ஏன்?

இதற்குப் பல காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். உலக அறிவையெல்லாம் புத்திக்குள் சேமிக்கின்றதொரு காலக்கட்டத்தில் வாழ்ந்த கடைசி பல்துறை அறிஞர் ஹம்போல்ட் தான். தொடர்ந்து அறிவியல் பல்வேறு பிரிவுகளுக்குட்படும்போது, ஹம்போல்ட் போன்ற ஆளுமைகள் அவர்களது எல்லைகளுக்கு அப்பால் தள்ளப்பட்டனர்.

இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், எதிர்மறை ஜெர்மானிய சிந்தனை மேலோங்கிய முதலாம் உலகப்போர் வரையிலும்கூட அவர் ஆங்கிலேய உலகில் புகழ்பெற்று விளங்கினார் என்பதுதான். 1859-இல் [அமெரிக்காவின்] க்ளீவ்லாந்தில் ஹம்போல்ட் நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளார்கள். ஆனால் உலகப்போர் மூண்டபோது நூலகத்தின் எல்லா ஜெர்மன் புத்தகங்களையும் அவர்கள் எரித்தார்கள். அதிலிருந்து ஹம்போல்ட் முழுமையாக மீளவில்லை.

Image result for alexander von humboldt

அந்தீஸ் மலைத்தொடரின் சிம்போரசோ எரிமலை ஏற்றத்துடன் உங்கள் புத்தகத்தை நீங்கள் தொடங்குகிறீர்கள் எங்களுக்கும் அதை காட்சிப்படுத்துங்களேன், மேலும் எரிமலை நோக்கிய உங்களது பயணத்தை பற்றி விவரியுங்கள்.

ஹம்போல்ட் வடக்கிலிருந்து தொடங்கி லிமா வரையில் 2500 மைல்களுக்கு அப்பால் அந்தீஸ் மலைத்தொடரைக் கடந்தார். அவ்வழியில் இருந்த அணுகமுடிந்த ஒவ்வொரு எரிமலைகளையும் அவர் ஏறினார். அதில் மிகப்பெரிய எரிமலை சிம்போரசோ. 21,000 அடியில், உலகின் மிகப்பெரிய மலை என்று நம்பப்பட்ட மலை அது.

ர்களிடம் மோசமான துணிகளும் காலணிகளும் தான் இருந்தன. அது ஒரு உறைப் பனிக்காலம். முந்தைய எரிமலையேற்றத்தின்போது ஹம்போல்டின் கால்கள் காயப்பட்டிருந்தன. அதோடு பாறை இடுக்குகளில் காலணிகளின் உட்புறங்கள் சிராய்ப்புற்றதால் அவரது பாதங்களில் ரத்தம் வழிந்துக்கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் சிம்போரசோவின் சிகரம் எப்போதும் மூடுபனியால் சூழ்ந்திருந்தது.

பிறகு திடீரென்று பனி விலகியதும் வெண்பனியினால் சூழ்திருந்த மலைச்சிகரம், நீல வானின் பின்புலத்தோடு அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதோடு அவர்களுக்கு முன்னால் இருந்த ஒரு பெரிய பனிப்பாறைப்பிளவும் அவர்களுக்கு தெரிந்தது. சிகரத்தை அடைய வேறு வழியே இல்லை. அதனால் அங்கேயே, சுமார் 19,400 அடிகளுக்கு மேல், மலைச்சிகரத்தின் 1000 அடிகளுக்கு கீழே அவர்கள் நின்றார்கள். இதுவே ஒரு உலக சாதனை தான். இதுவரை இந்த உயரத்தை யாரும் எட்டியிருக்கவில்லை. பறக்கும் பலூன்கள்கூட இத்தககைய உயரத்தில் பறந்திருக்கவில்லை. சொல்லப்போனால் உண்மையிலேயே அந்த நொடியில் அவர் உலகின் சிகரத்தில் நின்றுகொண்டிருந்தார்.

அந்த நொடியில் தான் இயற்கை மீதான அவரது புதிய கண்ணோட்டம் மேலும் தெளிவடைந்து, அதுவரை தனது பயணங்களில் சந்தித்தவைகள் எல்லாம் ஒன்றுசேர்ந்தார்போல அவருக்குப் பொருள்படுகின்றன. கித்தோவில் இருந்து சுமார் 100 மைல்கள் தள்ளி சிம்பராசோவை நோக்கிய அந்தப் பயணம், பூமத்தியரேகையிலிருந்து துருவங்களை நோக்கிய பயணம் போல, வெப்பமண்டல செடிகள் நிறைந்த பள்ளத்தாக்கில் இருந்து இலைக்கன் படரும் பனிக்கோடுகள் நோக்கிய பயணம் போல உலகையே கடந்தது போன்றதொரு பயணமாக இருந்தது. மேலும் அந்தப் பயணத்தில் அவர் பார்த்த செடிகள் பலவற்றைத் தனது முந்தைய ஆல்ப்ஸ் பயணத்தின் போதோ பைரெனீஸ் பயணத்தின் போதோ ஏற்கெனவே பார்த்திருந்ததை அவர் உணர்ந்தார்.

அந்த நொடியில்தான் காலநிலை மற்றும் பயிர்விளைச்சலைப் பொறுத்தவரையில் இயற்கை ஒரு ஆகப்பெரிய சக்தி என்பதை அவர் உணர்ந்தார். அந்தீஸின் மலைத்தொடர்வழி திரும்பும்போது, அவர் வரைந்த வரைபடமே பின்னாளில் “யூனிட்டி ஆஃப் நேச்சர்” என்ற தொடரானது.

அந்த நிலப்பரப்புகளைப் பற்றி (என் புத்தகத்தில்) விவரிக்க நான் அவற்றை நேரில் பார்த்தேயாக வேண்டும்! அதனால் வெனிசுலாவுக்கு சென்ற நான், ஓரினோகோ வழி துடுப்புப்பயணம் செய்தேன். அதன் பிறகு அந்தீஸ் மலைத்தொடருக்குச் சென்றேன். ஆன்டிசானாவில் 1802-இல் ஹப்மோல்ட் இளைப்பாறிய குடிசையை நாங்கள் கண்டறிந்தோம்! சிம்போராசாவின் 16,400 அடிகள்வரை தான் என்னால் ஏறமுடிந்தது. அதற்குள்ளாகவே காற்று குறைந்துவர மலையேற மிகவும் கடினமாக இருந்தது, அப்போது நான் எடுத்துவைத்த ஒவ்வொரு அடியிலும் ஹம்போல்டின் மேலிருந்த பிரமிப்பு வளர்ந்துக்கொண்டேயிருந்தது. அந்த வலியை உணர்ந்தால் தான் நம்மால் அவர் என்ன சாதித்தார் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். (சிரிக்கிறார்)

அவர் அமெரிக்கா முழுவதிலும் வெகுவாக பயணித்திருக்கிறார். அவரது ஒரு சில பயண சாகசங்கள் குறித்தும், அவர் தென் அமெரிக்க வரலாற்றை எப்படித் திசை திருப்பினார் என்பதைப் பற்றியும் சொல்லுங்களேன்.

ஐந்தாண்டு காலப் பயணமாக லத்தீன் அமெரிக்காவிற்கு ஜூன் 1799-இல் ஐரோப்பாவை விட்டு அவர் புறப்படுகிறார். ஹம்போல்ட்டை பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு கண்டுபிடிப்பாளர் கிடையாது. அவர் விஷயங்களைப் பொருத்திப்பார்த்து தொடர்புபடுத்திக்கொள்ளும் ஒரு தொடர்பியலாளர். உதாரணமாக, வெனிஸுலாவில் ஒற்றைப் பயிர்க் கலாச்சாரம் மற்றும் காடழிப்பால் ஏற்பட்ட விளைவுகளை கண்ட அவர், மனிதனால் தூண்டப்படும் அபாயகரமான காலநிலை மாற்றம் பற்றிப் பேசுகிறார்.

அதன் பிறகு ஓரினோகோ செல்லும்போது அதனைச் சுற்றி பின்னப்பட்டிருந்த நதிகளின் வழியே 1400 மைல்கள் துடுப்புப்பயணம் செய்து, ஒரு சில மேற்கத்தியவர்களே சென்றிருந்த அடர்ந்த மழைக்காடுகளில் 75 நாட்களாகப் பசியில் வாடி, ஜாகுவார்கள் மற்றும் முதலைகளை எதிர்கொண்டு என ஒரு முழு சாகசப்பயணம் அது. அதன் பிறகு அவர் அந்தீஸிற்குப் பயணப்படுகிறார். அந்தீஸ் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கடுமையான நிலப்பகுதி.

அவர்கள் போகோடாவை விட்டுப் புறப்படுவது செம்படம்பரில் – பயணிக்க அது ஒரு மோசமான காலகட்டம். பனி, மழை, புயலோடு போராடியவர்கள் தங்கள் சாதனங்கள், தாங்கள் சேகரித்தவைகளோடு லிமாவுக்கு வந்துசேர்கிறார்கள். வரும்வழியில் ஹம்போல்ட் காந்த நிலநடுக்கோட்டைக் கண்டுபிடிக்கிறார். ஆஸ்டெக் கைப்பிரதிகளைச் சேகரிக்கிறார். இன்கா நினைவுச் சின்னங்களை வரைகிறார். இயற்கையில் மட்டும் அவர் விருப்பம் கொண்டிருக்கவில்லை. லத்தீன் அமெரிக்க நாகரீகங்களின் தலைசிறந்த ஓவியங்களை அவர் ஐரோப்பாவிற்குக் கொண்டு வருகிறார். மொழிகள், கட்டிடக்கலை என நவீனத்துவம் மிகுந்த அந்த ஓவியங்கள் அக்காலத்திற்கு மிக மிக புதிது! ஏனெனில் பெரும்பாலான ஐரோப்பியர்கள் பொதுவாகவே பூர்வகுடிகளைக் காட்டுமிராண்டிகளாகவே கருதினர்.

அதன் பிறகு ஹம்போல்ட் பாரிஸில் சைமன் போலிவாரைச் சந்திக்கிறார். தனது மனைவியின் மறைவிலிருந்து மீளவேண்டி மது, மாது, சூது என்றிருந்தவர் சைமன் போலிவார். காலனிகளின் விடுதலையைப் பற்றி அவர்கள் இருவரும் பேசுகிறார்கள். பிறகொரு முறை, தனது பேனாவினால் லத்தீன் அமெரிக்காவை விழிக்கச் செய்தவர் ஹம்போல்ட் தான் எனக்குறிப்பிடுகிறார் போலிவார்.

Image result for The Invention of Nature: Alexander von Humboldt’s New World

உங்களது ஜெர்மன் பூர்வீகம் தான் இந்த புத்தகத்தை எழுத உங்களை தூண்டியதா?

நான் இந்தியாவில் பிறந்து ஜெர்மனியில் வளர்ந்தேன். நான் ஜெர்மன் என்பதால் எனது வரலாற்று வகுப்புகள் மூலம் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் குறித்து நன்கு அறிந்திருந்தேன். வேடிக்கையாக சொல்வதென்றால், ஹாம்பர்க் பல்கலைக்கழகத்தில் என்னுடைய முதல் கட்டுரையே ஹம்போல்ட்டைப் பற்றியதுதான். அதன் பின் அறிவியலின் வரலாறு பற்றியும் இயற்கையின் வரலாறு பற்றியும் நான் எழுதும்போதெல்லாம் ஹம்போல்ட் தொடர்ந்து அதில் வந்துக்கொண்டே இருந்தார்.

நான் ஃபவுண்டிங் கார்டணர்ஸ் (The Founding Gardeners) என்ற புத்தகத்தை எழுதியபோது, 1804-இல் வாஷிங்டன் டிசி-யில் [தாமஸ்] ஜெபர்சன் மற்றும் [ஜேம்ஸ்] மேடிசன் உடனான ஹம்போல்டின் சந்திப்பைப் பற்றி ஒரு முழு அத்தியாயமே எழுதினேன். அது கடைசிக்கட்ட எடிட்டிங்-இன் போது நீக்கப்பட்டாலும் அந்த அத்தியாயத்தைச் சேகரித்து வைத்திருந்த நான் என்றாவது ஒருநாள் இதையே ஒரு தனிப் புத்தகமாக எழுத வேண்டும் என்று எண்ணினேன்.

இவரைப்பற்றி தனியாக எழுதத் தொடங்கும் முன், ஒரு சில புத்தகங்களை நான் எழுத வேண்டியிருந்தது. ஏனென்றால் வானியல் முதல் புவியியல் வரை, தாவரவியல் முதல் வானிலை ஆய்வு வரை என பல்வேறு துறைகளில் அவர் பரவலாகச் சுற்றித் திரிந்திருந்தார். அவரை மீண்டும் பிரபலம் ஆக்குவது, மேலும் இயற்கை மற்றும் அறிவியலின் முன்னோடி என்ற அடிப்படையில் அவருக்குரிய சரியான இடத்தில் அவரை இருத்துவது என்பதை எனது பணியாக நான் கருதினேன். (சிரிக்கிறார்)

விண்வெளி ஆய்வை முன்கூட்டியே கணித்தது உட்பட அவர் அபாரமான ஒரு தீர்க்கதரிசி. நம்முடைய இந்தக் காலக்கட்டத்தை முன்பே அவர் எப்படியெல்லாம் கணித்திருந்தார் என்பதைப் பற்றிச் சொல்லுங்களேன்.

இயல்பாகவே விஷயங்களை ஒன்றோடொன்றுத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடிவதால் வேறு எவரும் பார்க்காத வகையில், மனிதனால் தூண்டப்படும் காலநிலை மாற்றத்தை அவர் கணித்தார். ஐரோப்பிய காலனிகளில் பணப்பயிர் மற்றும் ஒற்றைப் பயிர்முறைக் கலாச்சாரத்தால்  மண் அரிப்பு ஏற்பட்டு அங்கே எப்படி காடுகள் அழிந்தன என்பதையும் அவர் கண்டார். சுற்றுசூழல் அமைப்புக்கு உதவும் காடுகளின் இன்றியமையாமையை முதலில் எடுத்துரைத்தவரும் அவரே!

இயற்கை மட்டுமல்ல, அவர் எல்லா விஷயங்களிலுமே ஆர்வமாக இருந்தார். தந்தி எனப்படும் தகவல்தொடர்பு கருவி மீது மிகப்பெரிய ஈர்ப்புக்கொண்டிருந்தார். இப்போது இருந்தால் அவர் இணையத்தை அவ்வளவு விரும்பியிருப்பார். (சிரிக்கிறார்)

விண்வெளி ஆய்வைப் பொருத்தவரை, நம்முடைய எதிர்காலம் இதே நிலையான தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் தொடரும்பட்சத்தில் ஒருநாள் நட்சத்திரங்களுக்குகூட நாம் போய்வரலாம் என்று சொல்கிறார். ஆனால் அது குறித்து அவர் நேர்மறையாய் இருக்கவில்லை. ஒருவேளை என்றாவது நாம் சென்றால் கூட வன்மம், பேராசை மற்றும் பேரழிவு உண்டாக்கும் குணங்களை நம்மோடு கூடவே கொண்டுசெல்லும் பட்சத்தில் அந்தக் கோள்களையும் நாம் அழித்துவிடுவோம் என்று அவர் எண்ணினார். 1800-களில் இப்படி ஒரு சிந்தனையைச் சொல்வது எவ்வளவு அபாரமானது!

அவரது சமகால புகழ்பெற்ற சக இயற்கைவாதியான சார்லஸ் டார்வினோடு அவருக்கு இருந்த தொடர்பு பற்றி?

ஹம்போல்ட் இல்லாமல் டார்வின், டார்வின்-ஆக ஆகியிருக்கவே முடியாது. ஹம்போல்ட் இல்லமால் தன்னால் பீகிள்-ஐ (Beagle) எட்டியிருக்கவோ “உயிரினங்களின் தோற்ற”த்தை [Origin Of Species] எழுதியிருக்கவோ முடியாது என்று டார்வினே கூறுகிறார். இளம்பருவத்திலிருந்தே, ஹம்போல்ட்டின் புத்தகங்களை, குறிப்பாக “பர்சனல் நரேட்டிவ்”, படித்துவந்தவர்; அதில் ஒருபாதி பயணக்குறிப்பு மறுபாதி அறிவியல் திறனாய்வு. ஹம்போல்ட்டின் விவரிப்புகளில் முழுதாக காதல்வயப்பட்ட டார்வின், அவரைப்போலவே தென் அமெரிக்காவிற்குத் தனியாகப் பயணப்பட வேண்டும் என்று நினைக்கிறார். ஹம்போல்ட்டின் எழுத்து வழி ஒரு புதிய உலகத்தை டார்வின் கண்டார்.

தனது பீகிள் பயணத்தின்போது அடிக்கோடிடப்பட்ட வரிகளுடனும் கிறுக்கல்களுடன் டார்வின் பயன்படுத்திய “பர்சனல் நரேட்டிவ்” புத்தகம் இன்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருக்கிறது. அவற்றைப் வாசிக்கும்போது, டார்வின் ஹம்போல்ட்டுடன் பேசுவதைக் கேட்பது போலவே இருக்கும்.

அதன் பிறகு 1842-இல் இருவரும் சந்தித்த அந்த இணையில்லாத் தருணம். ஹம்போல்ட் லண்டனில் இருந்தார்; தன்னுடைய 70-களில் இருந்த ஹம்போல்ட், அதிகம் கவனிக்கப்படுவதற்கு பழகியிருந்தார். விடாமல் பேசிக்கொண்டே இருக்கும் பழக்கத்தை உடைய ஹம்போல்ட்டை நேரில் சந்தித்ததும் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார் டார்வின். ஹம்போல்ட் இறந்ததற்கு நான்கு மாதங்களுக்கு பிறகு “உயிரினங்களின் தோற்றம்” வெளியிடப்பட்டது.

ஹம்போல்ட் அமெரிக்காவோடு ஒரு சிக்கலான உறவில் இருந்தார் இல்லையா? அந்த நாணயத்தின் இரண்டு பக்கங்களை விவரியுங்கள்.

லத்தீன் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா நோக்கி திரும்பும் பயணத்தில் ஹம்போல்ட், ஜெபர்சனையும் மேடிசனையும் சந்திக்க வேண்டி பெரிய சுற்றுவழியைத் தேர்ந்தெடுத்தார்.

அமெரிக்கப் புரட்சிக்கும், புரட்சியாளர்களுக்கும் அவர் ரசிகராக இருந்தார். இயற்கையின் அதிசயத்தை பார்த்த நான், சுதந்திரத்தினால் ஆளப்படும் மனிதர்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்ன அவர், வாஷிங்டன் டி.சி-யில் ஜெபர்சனைச் சந்திக்கிறார். இருவரும் நன்றாகப் பழகுகிறார்கள், ஜெபர்சன் இறப்பதற்கு முன்புவரை, அவர்கள் தொடர்பில் இருந்திருக்கின்றனர். ஹம்போல்ட் தனது சமீபத்திய புத்தகம் ஒன்றை எப்போதும் ஜெபர்சனுக்கு அனுப்புவார். எனினும், தன் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்தைப் பற்றி ஹம்போல்ட் விமர்சித்தார்.

ஒருபுறம், நான் பாதி அமெரிக்கன் என்று சொல்பவராய் இருந்தார். ஏனென்றால் அவர் அமெரிக்காவைச் சிலாகித்தார். ஆனால் ஜெபர்சன் போன்றதொரு மனிதரால், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் மீதிருந்த நம்பிக்கையை, எவ்வாறு அடிமைத்தனத்தோடு நல்லிணக்கம் செய்ய முடிந்தது என்று அவருக்குப் புரியவில்லை. இதைப்பற்றி அவர் பொதுவெளியில் கடுமையாகவே விமர்சிக்கிறார்.

அவரது புத்தகங்களில் எழுதுகிறார். ஆனால் அமெரிக்க மொழிபெயர்ப்புகளில் அடிமைத்தனம் குறித்த ஹம்போல்ட்டின் விமர்சனங்களை அவர்கள் பிரசுரிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஹம்போல்ட் பெரிய கடிதம் ஒன்றை எழுத அதை அமெரிக்க ஊடகங்கள் வெளியிடுகின்றன. அதில் அவர், இது என்னுடைய புத்தகம் அல்ல, புத்தகத்தின் மிக முக்கிய பகுதியான அடிமைத்தனத்தைக் குறித்த எனது விமர்சனம் விடுபட்டிருக்கிறது என்று சாடுகிறார்.

நாம் ஏன் இன்று ஹம்போல்ட்ட்டை பொருட்படுத்த வேண்டும்?

முதலில் அவரது கதை, நாம் இயற்கையை ஏன் இவ்வாறு புரிந்து வைத்திருக்கிறோம் என்பதை விவரிக்கறது. இயற்கையைப் பற்றிய ஒரு மையக்கருத்தை ஹம்போல்ட் நமக்கு கொடுத்திருக்கிறார். மக்கள் இயற்கை மீது காதல்வயப்பட்டு அதன் அதிசயத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். இயற்கையை முதலில் உணர்ந்தால் தான் இயற்கையைப் புரிந்துக்கொள்ள முடியும் என்ற அவரது பார்வை, இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானது.

அவர் தனக்கென ஒரு எழுத்து நடையை உருவாக்கினார், அதுவே பின்னாளில் ஜான் முய்ர் [John Muir] போன்றோர் ஹம்போல்ட்டின் வழியில் இயற்கை பற்றிய எழுத்து நடைக்கு முக்கியமானதாக அமைந்தது.

இன்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், சூழலியலாளர்கள், மற்றும் இயற்கை எழுத்தாளர்கள் ஹம்போல்ட் யாரென்று கேள்வியுறாமலயே இயற்கையே வாழ்வியலின் வலை என்ற ஹம்போல்ட்டின் கண்ணோட்டத்தோடு தங்களை வேரூன்றிக் கொண்டிருக்கின்றனர்.

அவரது எண்ணமான கட்டுப்பாடுகளற்ற அறிவுசார் பரிமாற்றமும், பல்வேறு துறைகளின் இடையேயான தகவல்பரிமாற்றமும் இன்றளவும் அறிவியலின் ஒரு தூணாகக் கருதப்படுகின்றது.

எல்லாவற்றிலும் முக்கியமானதாக, விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தின் உலகளாவிய தாக்கத்தை ஆராய்ந்துக்கொண்டிருக்கையில் ஹம்போல்ட்டின் பல்துறை ஆய்வுகள் – இயற்கையே ஒரு ஆகப்பெரும் சக்தி என்ற அவரது கண்ணோட்டம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நடப்புகளை சுற்றுச்சூழல் பிரச்சினைகளோடு அவர் இணைத்த விதம் இன்றும் மிக மிகப் பொருந்திப்போகிறது!


செப்டெம்பர் 13, 2015 அன்று நேஷனல் ஜியோகிராஃப் இதழில், Why Is the Man Who Predicted Climate Change Forgotten? என்ற தலைப்பில் வெளியான நேர்காணல்; நேர்கண்டவர் சைமன் வோரால்.

தமிழில் ப்ரீத்தி வசந்த் – எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், வானொலித் தொகுப்பாளினி; பல்வேறு இதழ்களில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதியுள்ளார். குழந்தைகள் இணைய இதழான பூஞ்சிட்டு-வில் பங்களித்துவரும் இவர், குழந்தைகளுக்கான ஒலிப் புத்தகங்களுக்குக் குரல் கொடுக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.