“அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு செய்து கொள்கின்றனர்.” சுரேஷ் ப்ரதீப்.

எழுத்தாளர் சுரேஷ் ப்ரதீப் சமகாலத்தில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர். இதுவரை மூன்று சிறுகதைத் தொகுப்புகள், ஒரு நாவல், ஒரு கட்டுரை தொகுப்பும் கொண்டு வந்துள்ளார். இதுமட்டுமின்றி தொடர்ந்து அச்சு மற்றும் இணைய மின்னிதழ்களில் சிறுகதைகளையும் விமர்சன கட்டுரைகளையும் எழுதிக் கொண்டிருக்கிறார். அகழ் மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவராகவும் செயலாற்றுகிறார்.

அவரின் இலக்கியச் செயல்பாடுகள், படைப்புகளின் பின்புலம் மற்றும் நவீன இலக்கியம் சார்ந்த கருத்துகளை அறிந்து கொள்ள,கனலியின் சமகால இலக்கிய முகங்கள் என்கிற பகுதிக்கு, இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாக மேற்கொள்ளப்பட்டது.

இனி நேர்காணல்.

முதலில் திருமண வாழ்த்துகள்.

தனிப்பட்ட வாழ்க்கை திருமணத்திற்குப்   பிறகு எப்படி மாறியுள்ளது.?

இந்த நேர்காணல் குறித்து நீங்கள் என்னிடம் சொன்னபோது முதல் கேள்வி திருமண வாழ்க்கை பற்றியதாக இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை! வாழ்த்துகளுக்கு நன்றி. திருமணமாகி இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை என்பதால் அகரீதியாக ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து துல்லியமாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் இருவருமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். பிரியாவும் வாசிப்பு பழக்கம் உடையவள் என்பதால் இலக்கியம் சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடிகிறது.  திருமணத்துக்கு முன்பே என் நூல்கள் அனைத்தையும் வாசித்தும் விட்டாள். ஒரு புறச்சூழல் மாற்றத்தை மட்டும் கவனிக்கிறேன். பேராசிரியர் டி தருமராஜ் அஞ்ஞாடி நாவலைப் பற்றி விடலையும் குடும்பனும் என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பான விடலை வாழ்க்கையின் அலைபாய்தல்கள் மீறல்கள் கசப்புகள் எல்லாம் நீங்கி திருமணத்திற்கு பிறகான இந்த குடும்ப வாழ்க்கையில் சில பொறுப்புகள் கூடியிருப்பதாகத் தோன்றுகிறது.

 

வருடத்தில் 100 புத்தங்களுக்கு மேல் வாசிக்கும் பழக்கம் உடையவர் நீங்கள். உங்கள் வாசிப்பு எப்படித் தொடங்கியது? வாசிப்புக்கு பிறகு ஏன் எழுத வேண்டும் என்று நினைத்தீர்கள்? 

அப்பா நிறைய வாசிக்கக்கூடியவர். பெரியார்  மீதான ஈடுபாடு அவரை வாசிப்பவராக மாற்றியிருந்தது.  ஆகவே வீட்டில் எப்போதும் நாளிதழ்களும் வார இதழ்களும் வந்து கொண்டிருக்கும்.இன்று இருபதுகளில் முப்பதுகளில் இருக்கும் பெரும்பாலான இளைஞர்கள் போலத் தினமலர் தினத்தந்தி போன்ற நாளிதழ்களில் இணைப்பிதழ்களாக வரும் சிறுவர் மலர், தங்க மலர் போன்றவற்றின் வழியாகத்தான் என் வாசிப்பு தொடங்கியது. குறிப்பிட்டு இந்த வயதில்தான் வாசிக்கத் தொடங்கினேன் என்று சொல்ல இயலாது. ஆனால் எழுத்துக்கூட்டி தமிழ் வாசிக்கத் தொடங்கியபோதே பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் வாசிக்கத் தொடங்கிவிட்டேன்.

எப்போது எழுதத் தொடங்கினேன் என்று கேட்கப்படும் போதெல்லாம் ஒரு மெல்லிய ஏக்கம் நெஞ்சில் படரும். நான் முதலில் எழுதத் தொடங்கியதே ஒரு நாவல்தான்! எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தின் வழியாக இந்திய வரலாற்றின் அறிமுகம் கிடைத்தது. புத்தகத்தில் அசோகர், கனிஷ்கர், சந்திரகுப்த மௌரியர் என்று அரசர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அடைப்புக்குறிக்குள் அவர்கள் வாழ்ந்த காலம் எழுதப்பட்டிருக்கும். அவற்றை படிக்கப் படிக்க அவர்களுடைய வாழ்க்கையின் மீது ஒரு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. நானே கற்பனையில் ஒரு நிலத்தை உருவாக்கி அதில் அவர்களைப் போல அரசர்கள் அரசர்களின் வாரிசுகள் அவர்களுக்கு இடையேயான போர்கள் என்று செல்லும் ஒரு நாவலை ஒரு பழைய டைரியில் எழுதினேன். அப்போது என் வயது பதிமூன்று. அந்த டைரி தொலைந்துவிட்டது. இன்றுவரை அது தொலைந்தது குறித்த ஏக்கம் எனக்கிருக்கிறது.

அதன்பிறகு நிறையக் கதைகள் எழுதினேன். நண்பர்கள் வட்டத்தில் மட்டும் சுற்றுக்கு விடுவேன். இதழ்களுக்கு எல்லாம் அனுப்பியதில்லை.

தீவிரமாக வாசிக்கத் தொடங்கியது என்னை அறியாமலேயே நிகழ்ந்தது. கிராம நூலகத்தில் புதுமைப்பித்தன் , நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் என சிலரை அறிமுகம் செய்து கொண்டேன். கல்லூரி நூலகம் வழியாக அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கரிச்சான் குஞ்சு, எஸ் ராமகிருஷ்ணன் என்று தொடர்ச்சியாக தீவிரமாக வாசித்தபிறகு எழுதுவதில் ஆர்வம் குறைந்துபோனது. மேலும் அக்காலகட்டத்தில் கல்கி, சாண்டில்யன், வைரமுத்து, டான் பிரவுன், சேட்டன் பகத் என்று பொழுதுபோக்கு எழுத்தையும் இணையாக வாசித்தே வந்தேன். வாசிக்கும்போதே தலைகீழ் விகிதங்களும் பொன்னியின் செல்வனும் வேறு என்று தெரிந்தாலும் இரண்டுக்குமான வேறுபாட்டினை துல்லியப்படுத்திக் கொண்டது ஜெயமோகனின் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நூலின் வழியாகத்தான்.

தீவிர இலக்கிய நூல்களின் அறிமுகத்துக்குப் பிறகு என்னால் மட்டுமே சொல்லப்படக்கூடிய கதைகளும் நான் வாசித்தவற்றில் வெளிப்பட்டிருக்காத உணர்வுகளும் கண்டடைதல்களும் என்னில் இருப்பதான எண்ணம் உறுதிப்பட்டது. தற்போது எழுதுவதற்கு அதுவே காரணம்.

 

வாசிப்பில் நீங்கள் கண்டடைந்த ஆசான்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்.?

வகுப்பில் கூட நான் ஆசிரியர்களிடம் பெரும்பாலும் சந்தேகங்கள் கேட்கமாட்டேன். கூச்சம் ஒரு காரணம். மற்றொனறு அவர் நல்ல ஆசிரியராக இருந்தால் கேட்காமலேயே நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிடுவார் என்றொரு அசட்டு நம்பிக்கை!

இலக்கியத்தைப் பொறுத்தவரை என் ஆசிரியர் ஜெயமோகன் மட்டும்தான். அவருடைய முதன்மை மாணவர்களில் ஒருவனாக நான் அறியப்படுகிறேன். நகைமுரண் என்னவென்றால் நான் அவருடன் அதிகம் உரையாடியதே இல்லை.  இலக்கியம் குறித்த என் ஐயங்களை அவருடைய எழுத்தே பல சமயம் களைந்துவிடும். இருப்பினும் அருகமர்ந்து கற்றுக் கொண்ட ஆசிரியர் என்றால் ஜெயமோகன் ஒருவரைத்தான் சுட்டமுடியும். அவர் விஷயத்தில் என் அசட்டு நம்பிக்கை பெரும்பாலான சமயங்களில் மேலும் உறுதியானது.

இருப்பாக அல்லாமல் எழுத்தின் வழியே கற்பித்தவர்களாக டால்ஸ்டாய், புதுமைப்பித்தன், தஸ்தாவெய்ஸ்கி, கசாண்ட்சாகிஸ், அசோகமித்திரன் ஆகியோரை குறிப்பிடுவேன். இவர்களுடன் காந்தியையும் ஒரு எழுத்தாளராக இணைத்துக் கொள்வேன்.

 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை மானசீகமாக குருவாக ஏற்றுக் கொண்டவர்களில் நீங்களும் ஒருவர். ஜெயமோகன், விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு, அதன் நண்பர்கள் என்கிற இந்த பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்.? இவற்றிலிருந்து பெற்றவை மற்றும் இழந்தவை ( அப்படி ஒன்று இருந்தால்) அதைப்பற்றிச் சொல்ல முடியுமா?

2013ஆம் ஆண்டு இறுதியில் தமிழ் இந்து நாளிதழில் ‘நமக்குத்தேவை டான் பிரவுன்களும் சேட்டன் பகத்துகளும்’ என்ற தலைப்பில் ஜெயமோகன் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் முதன்முறையாக அவர் பெயரைக் கேள்விப்பட்டது அப்போதுதான். சில நாட்களில் மகாபாரதத்தை மறுஆக்கம் செய்யும் அவரது அறிவிப்பு வெளியானது. 2014 பல்வேறு அகமோதல்கள் வழியே நான் பயணித்த ஆண்டு. அவ்வாண்டின் இறுதியில் (அநேகமாக டிசம்பரில்) திருத்துறைப்பூண்டியில் உள்ள கிருஷ்ணா புக் ஸ்டாலில் நற்றிணை வெளியீடாக வந்திருந்த முதற்கனல் நூலினை பார்க்க நேர்ந்தது. உடனடியாக வாங்கிவிட்டேன். நான் வாசித்த ஜெயமோகனின் முதல்நூல் அதுதான். 2015க்குள் விஷ்ணுபுரம் கொற்றவை உள்ளிட்ட அவருடைய பெரும்பாலான நாவல்களை வாசித்துவிட்டேன். அதுவரை நான் எந்த இலக்கிய கூட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. நான் முதன்முறையாகக் கலந்துகொண்ட இலக்கிய கூட்டம் 2016 மார்ச்சில் கொல்லிமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புதிய வாசகர் சந்திப்பு’ தான். இன்றுவரை நண்பர்களாகத் தொடரும் ஷாகுல் ஹமீது, ஜினுராஜ், சிவா என பலரை அங்குதான் சந்தித்தேன். வாசிக்கவும் விவாதிக்கவுமான ஒரு தளத்தை எழுத்தாளர் ஜெயமோகனுடனான அந்த சந்திப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

படைப்புச் செயல்பாடு என்பது அந்தரங்கமான ஒரு மூலையில் அமர்ந்து செய்யப்படுவது என்ற என் எண்ணத்தை அந்த வாசகர் சந்திப்பு உடைத்தது. தொடர்ச்சியாக வாசிப்பதும் வாசித்தவை குறித்து எழுதுவதும் விவாதிப்பதும் படைப்பூக்கத்தை அதிகப்படுத்தும் செயல்கள் என்று உணர்ந்தேன். அதற்குச் சான்று ஜெயமோகனை சந்தித்த ஒரு வருடத்திற்குள் ஒளிர்நிழல் எழுதி முடித்தேன் என்பதுதான். 2017 பிப்ரவரியில் எழுதி முடித்த அந்த நாவல் அவ்வாண்டு மே மாதம் வெளியானது. பொதுவாகவே இந்த நான்காண்டுகளில் வருடத் தொடக்கங்களில் நிறைய எழுதி இருக்கிறேன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் நடக்கும் விஷ்ணுபுர விழா கூடுகைகள்தான். அவ்வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களும் என் படைப்புச் செயல்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கத்தினர். ஒரு அந்தரங்க நட்பு இருப்பதால் வெளிப்படையாகவும் விமர்சிக்க அவர்கள் தயங்கியதில்லை.

அதன்பிறகு சிற்றில் விவாத குழுமத்தின் வாயிலாக லாவண்யா சுந்தரராஜன், கார்த்திக் பாலசுப்ரமணியன், சுனில் கிருஷ்ணன், நாகப்பிரகாஷ் போன்ற நண்பர்களுடன் இணைந்து கருத்தரங்குகளை ஒருங்கிணைக்கத் தொடங்கிய பிறகு நட்பு வட்டம் மேலும் விரிந்தது.

இழந்தது என்று எதையும் கூற இயலவில்லை. ஆனால் ஒன்றைச் சுட்ட வேண்டும். ஜெயமோகன் ஒரு இந்துத்துவ ஆதரவு மனநிலை கொண்ட எழுத்தாளர் என்ற ஒற்றை வரி இங்கு திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. அதில் துளியும் உண்மையில்லை என்பது அவரை வாசிப்பவர்களுக்குத் தெரியும். அவரும் இந்துத்துவத்திற்கு தான் எவ்வளவு அயலானவன் என்றும் தன் உறவு இந்திய ஞான மரபுடன் மட்டுமே என்றும் பலமுறை எழுதிவிட்டார். ஆனாலும் அவருடைய பிரம்மாண்டமான படைப்புலகை எதிர்கொள்ளும் திராணி இல்லாதவர்கள் திரும்பத் திரும்ப இந்த ஒற்றை வரியுடன் வருகின்றனர். இந்த ஒற்றைவரி மிக எளிதாகப் பரவுகிறது. ஆகவே அவரால் அடையாளப்படுத்தப்படும் இளம் எழுத்தாளர்கள் அல்லது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் அனைவரும் ‘சங்கிகள்’ ஆகிவிடுகின்றனர்!

இவர்கள் ஜெயமோகன் கையில் ஒரு ‘பெரிய இலக்கிய இந்துத்துவ திட்டம்’ இருப்பதாகவும் அதற்காகவே அவர் திட்டமிட்டு ‘தொண்டர்களை’ உருவாக்குவதாகவும் கற்பனை செய்கின்றனர். சுனில் கிருஷ்ணனையும் என்னையும் ஜெயமோகன் தன்னுடைய கருத்தியலைக் காரைக்குடியிலும் திருவாரூரிலும் பரப்புவதற்காக ‘தயார்ப்படுத்தி’ இருக்கிறார் என்றொரு எழுத்தாளர் முன்பு எழுதி இருந்தார். இலக்கியத்தில் ஒரு மாணவன் அல்லது இளம் எழுத்தாளன் முன்னோடிகளிடமிருந்து அழகியல் நோக்கைத்தான் முதன்மையாகப் பெற்றுக்கொள்வான். அந்நோக்குடன் அவன் கொள்ளும் முரணும் இயைபும் அவன் பிற நூல்கள் குறித்தும் இலக்கியச்சூழல் குறித்தும் எழுதுகிறவற்றில் வெளிப்படும். ‘அழகியல் நோக்கு’ என்பதிலேயே ஒரு படைப்பின் அரசியல், தத்துவ நிலைப்பாடு, சமூக அக்கறை என அனைத்தும் அடங்கிவிடும். ஆனால் அழகியல் என்ற வார்த்தையை பயன்படுத்தினாலே அது அரசியலுக்கு எதிரானது என்று இங்கு பலர் முடிவு செய்து கொள்கின்றனர். அதனாலேயே ஜெயமோகனின் விமர்சன அழகியலுடன் விவாதிப்பவர்கள் ஒன்று சங்கியாக இருக்க வேண்டும் அல்லது இவர்கள் பாஷையில் ‘விசிலடிச்சான் குஞ்சாக’ இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

இந்த ஊளைச்சத்தத்தைக் கடந்து சூழலில் பேச வேண்டியிருப்பதை வேண்டுமானால் ஒரு தொல்லை என்று சொல்லலாம். ஆனால் அதையும் ‘இழப்பு’ என்று சொல்லமாட்டேன்.

 

நீங்கள் சொல்வது போல இலக்கியம் நண்பர்களுடன் கூடி விவாதிப்பதன் வழியாக உங்கள் இலக்கிய செயல்பாடு இன்னும் மேம்படுகிறது என்று வைத்துக் கொண்டால் கூட  ஒரு குழுவாக இயங்கும் போது அதற்கு ஒரு மைய கருத்தியல் நிலைப்பாடு வந்து விடுகிறது இல்லையா! அது இலக்கியத்திற்கு எதிராகச் செயல்படும் நிலை தானே?

இலக்கிய செயல்பாடுகளும் இலக்கிய விவாதங்களும் படைப்பூக்கத்தை அதிகரிக்கும் என்பது ஒரு தனிப்பட்ட உணர்தலே அன்றி அதை ஒரு  பொது விதியாகக் கூறமாட்டேன். எனினும் ‘மையக்கருத்தியல்’ என்ற சொல்லை நீங்கள் பயன்படுத்தி இருப்பதால் இக்கேள்வியை இப்படி அணுகலாம் என நினைக்கிறேன். மையக்கருத்தியல் என்ற சொல்லே ரொம்பவும் பொதுமைப்படுத்தப்பட்ட ஒன்றாகத் தெரிகிறது. அச்சொல் அரசியல் சொல்லாடல்களில் கச்சிதமாகப் பொருந்தக்கூடியது. ஆனால் இலக்கியத்திற்கு அப்படியான மையக்கருத்தில் இருக்க இயலும் என்று நான் நம்பவில்லை. ஒரு படைப்பாளியை மதிப்பிடும்போது அவருடைய தனித்தன்மைகளையே கருத்தில் கொள்கிறோம் இல்லையா. நம்முடைய வாசிப்புக்கு அகப்படாமல் போன நுட்பங்களை இன்னொருவர் தன் வாசிப்பின் வழி கண்டடைந்திருக்கலாம் அல்லது முற்றிலும் தவறான கோணத்தில் ஒரு படைப்பாளியை நாம் அணுகி இருக்கலாம். இதுபோன்ற விஷயங்கள் நிகழாமல் இருக்க கூட்டு வாசிப்பும் விவாதங்களும் குழுச்செயல்பாடுகளும் உதவும் என நம்புகிறேன். மற்றபடி ஒரு இலக்கிய வாசிப்பு குழுவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான கருத்தியல் நிலைப்பாடு இருக்கும் என நான் நம்பவில்லை. அப்படி ஒரு பொது கருத்தியல் நிலைப்பாட்டுடன் ஒரு குழு இயங்குமானால் அது அரசியல் குறுங்குழுவேயன்றி இலக்கிய வட்டம் அல்ல.

எழுத வேண்டும் என்று முடிவு செய்து பிறகு இப்படித்தான் எழுத வேண்டும் என்கிற கருத்துக்கள் மனதில் எதுவாது இருந்ததா?

இன்றுவரை அப்படி எந்தக் ‘கருத்தும்’ எழுதும் நொடிவரை மனதில் வந்தது கிடையாது. கருத்துகள் மட்டுமல்ல. கதையே மனதில் இருக்காது. எழுதிச் செல்லும் போது அடுத்தடுத்து வரும் வார்த்தைகளே கதையை உருவாக்கிக் கொள்ளும். சொட்டுகள், 446 A, விடைபெறுதல் போன்ற திட்டமிட்டு எழுதப்பட்டதாகத் தோன்றும் கதைகள்கூட அதன்போக்கில் வளர்ந்து சென்றவையே.  உண்மையில் அப்படி ஒன்றும் இல்லாததில் இருந்து திரண்டுவரும் எழுத்துதான் நிறைவளிப்பதாக இருந்திருக்கிறது. சில சமயம் அறிந்த கதைகளையும் எழுதி இருக்கிறேன். உதாரணமாக வீதிகள். அக்கதையில் வரும் பிரவீணா என் தோழிதான். எழுதிய பிறகு கதையை அவளிடம் வாசிக்கக் கொடுத்தேன். ‘இது எனக்கு நடந்தது இல்லையே’ என்றாள். நிறைவாக இருந்தது.

 

முதல் சிறுகதை  எப்போதும் வெளிவந்தது? அது வெளிவந்த போது எப்படிப்பட்ட மனநிலையிலிருந்தீர்கள். அதற்கு வெளிவந்த விமர்சனங்களை எப்படி எடுத்து கொண்டீர்கள்?

அலுங்கலின் நடுக்கம்’ என்ற சிறுகதை பதாகை இதழில் 2017 ஏப்ரலில் வெளியானது. ஆனால்  அது வெளியாவதற்கு முன்பே என் முதல் நாவல் அச்சுக்குப் போய்விட்டது. ஆகவே ஒரு சிறிய எதிர்பார்ப்பைத் தாண்டி எவ்வித பரவசமும் மனதில் எழவில்லை. நாவலை நூலாகப் பார்த்தபோது ஒருவித மகிழ்ச்சி தோன்றியது.

ஒரு சிறுகதையின் மைய இலக்கணமாக எவற்றையெல்லாம்  நீங்கள் கருதுகிறீர்கள்?

அப்படி எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ‘புதுமை’ என்று சொன்னால் அதுவொரு தேய்வழக்கு போல தெரியும். ஆனாலும் நான் ஒரு சிறுகதையில் முதன்மையாக எதிர்பார்ப்பது புதுமை என்ற இந்த அம்சத்தைத்தான். இன்னும் குறிப்பாக பிரத்யேகம் என்று சொல்லலாம். எதைப்பற்றி தேடினாலும் உடனடியாக நாம் தேடுவது குறித்து அத்துறையின் முதன்மை அறிஞர் என்ன சொல்லி இருக்கிறார் என்று எளிதாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே நிறைய தகவல்களால் கோர்க்கப்பட்ட சிறுகதைகள் இன்று அதிகமாக வருகின்றன. அவ்வகை சிறுகதைகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பேசவும் படுகின்றன. ஆனால் இவ்வகைக் கதைகளில் அதன் ஆசிரியர் ஒரு தொகுப்பாசிரியரின் வேலையை மட்டுமே செய்கிறார் என்று எண்ணுகிறேன். ஒரு சுவாரஸ்யமான தகவலை ஒரு பிரத்தியேகமான தனக்கான தேடலுடன் ஒரு சிறுகதை ஆசிரியர் எவ்வாறு இணைக்கிறார் என்பதே சிறுகதையில் நான் முதன்மையாகக் கவனிக்கும் அம்சம்.

 

உங்கள் சிறுகதைகள் இருளிலிருந்து மீண்டும் ஒரு இருள் என்கிற ஒரு வடிவத்தை அதுவாகவே தேர்ந்தெடுத்த கொள்கிறது என்று தோன்றுகிறது. இதன் பின்னணி என்ன?

ஒளிர்நிழல் வெளிவந்தது முதலே இக்கேள்வியை வெவ்வேறு வகையில் எதிர்கொள்கிறேன். நாவலை வாசித்த பிறகு என்னிடம் தீர்க்க முடியாத உளச்சிக்கல் ஏதோ இருக்கிறது என்றெண்ணி என்னைத் தயக்கத்துடன் அணுகி இன்று நல்ல நண்பர்கள் ஆகிவிட்டவர்கள் உண்டு. இன்னும் சற்று எல்லை தாண்டி என்னை உளவியல் ஆலோசனைகள் வழியே ‘திருத்த’ முனைந்தவர்களும் உண்டு. என் மீதான அக்கறையில்தான். அடிப்படையில் எழுதும் அனைவரிடமும் சமூகத்தால் ‘உளச்சிக்கல்’ என்று எண்ணப்படும் ஒரு அம்சம் இருக்கவே செய்கிறது. அதுவே புனைவெழுத்தின் அடிப்படை என்பது என் எண்ணம். ஆனால் அதைக்கடந்து என் எழுத்தினுள் வெளிப்படும் பிறழ்வுகள் ஆழத்தில் என் அகத்தில் நடக்கும் மோதல்களின் வெளிப்பாடு என்றே நினைக்கிறேன். பெயர் சூட்டப்பட்டுவிட்ட உணர்வுகளுக்குள் நான் பெரும்பாலும் செல்ல விழைவதில்லை. கருப்பு வெள்ளையாக மனிதர்களை இலக்கியம் அணுகாது என்பது ஒரு பொதுக்கூற்று. ஆனால் இங்கு சொல்லப்பட்டிருக்கும் நிறங்களைத் தாண்டி மனித அகத்தின் மேலும் மேலும் நுண்ணிய நிறங்களைத் தேடிச் செல்வதே என் எழுத்தாக இருக்கிறது. பட்டை பட்டையான நிறங்களின் உலகிலிருந்து பார்க்கும்போது என் எழுத்தில் ஒளிக்கான அம்சங்கள் எதுவுமே தென்பட வாய்ப்பில்லை. ஒளிக்கான ஏக்கமும் என்னுள் கிடையாது. என் அக்கறை இவ்வுடலின் இருப்பை மனம் என்னென்ன வேடங்களெல்லாம் அணிந்து நியாயப்படுத்திக் கொள்கிறது என்பதைத் தேடுவதாகவே இருக்கிறது. அங்கு ஒளிக்கோ இருளுக்கோ இடமில்லை. மனித இருப்புக்கு இயல்பிலேயே ஒரு லட்சிய நிலை இருப்பதாக நாம் நம்பவைக்கப்பட்டிருப்பதால் – முன்பு மதத்தின் வழியே தற்போது காந்தியம் கம்யூனிசம் போன்ற லட்சியவாதங்கள் வழியே – அந்த லட்சிய நிலையைப் பொருட்படுத்தாத என் புனைவுகள் ‘இருள்’ தன்மை கொண்டிருப்பதான தோற்றம் தரலாம். உறுதியாகத் தெரியவில்லை.

புற உணர்வுகளை விட அக உணர்வுகளை அதிகம் பேசும் கதாபாத்திரங்களை எழுத்தில் கொண்டு வருவது ஏன்?

அவன்  வைத்திருந்த ஐம்பது ரூபாய் தொலைந்துவிட்டதால் அவனால் பயணச்சீட்டு எடுக்க முடியவில்லை. நடத்துனரால் பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டான்’

இப்படி ஒரு வரி கதையில் வருகிறதென வைத்துக் கொள்வோம். அதன்பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்பது என் கவனத்தை ஈர்ப்பதே இல்லை. அவன் அந்த பணத்தைத் தொலைத்த தருணமும் அந்த நடத்துநரை அவன் எதிர்கொள்ளும்போது அவன் மனம் கொள்ளும் சலனங்களுமே எனக்கு முக்கியமாகப்படுகிறது. அச்சலனங்களை எழுதுவது புனைவெழுத்தில் புதிதில்லை என்றாலும் அதில் சொல்லப்படாத ஒரு பரிமாணம் மிஞ்சி இருப்பதாகவே எனக்குப்படுகிறது. புற உலகை விட அக உலகின் பிரம்மாண்டமே என்னை ஈர்க்கிறது.

 

அழகியல் தன்மை, கோட்பாடுகளின் தன்மை, சமகால அரசியல் நிலைப்பாடுகளின் தன்மை இவற்றில் உங்கள் படைப்புகள் அழகியல் தன்மைகளை முன் வைக்கிறது என்கிறீர்கள். சரி மற்ற இரண்டிலிருந்து நீங்கள் விலகி  நிற்பது ஏன்?

அழகியல் நோக்கு என்பது அரசியல் , கோட்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாகவே இருக்கும். அரசியலுடனும் கோட்பாட்டுடனும் எனக்கு விலகல்கள் ஏதுமில்லை. அரசியல் என்றதும் ‘நீ அகண்ட பாரதத்தை விரும்புகிறாயா பொதுவுடமைச்சமூகத்தை விரும்புகிறாயா’ என்ற இடத்துக்கும் கோட்பாடு என்றதும் ‘இப்படைப்பு எத்தனை சதவீதம் பின்நவீனத்துவ தன்மை கொண்டது’ என்ற ஆராய்ச்சி செய்யும் இடத்திற்கும் செல்வதிலிருந்து மட்டுமே நான் விலகி நிற்க விரும்புகிறேன்.

 

ஒரு எழுத்தாளன் சமகால அரசியல் பேசக்கூடாது என்கிற  நிலைப்பாடு உங்களுக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். சரி ஒரு எழுத்தாளன் ஏன்  சமகால அரசியலைத் தான் எழுதும் படைப்புகளில் பேசக்கூடாது?

முதலில் ‘சமகால அரசியல்’ என்று நாம் எதைப் புரிந்து கொள்கிறோம் என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும். சமீபத்தில் முகநூலில் ஒரு நண்பர் ராகுல் காந்தி’ நானும் பிராமணன்தான்’ என்று தன் கதர் சட்டைக்கு உள்ளிருந்து ஒரு கூட்டத்தில் பூணூலை வெளிக்காட்டுவது போன்று பகிரப்படும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை விலக்கி ஒரு பதிவு எழுதி இருந்தார். முழு விஷயத்தையும் விளக்கினால் தனிக்கட்டுரை அளவு வரிகள் தேவைப்படும். ராகுல் காந்தி அப்படிச் சொல்லவும் இல்லை பூணூல் காட்டவும் இல்லை என்பது மட்டும் உண்மை. ஆனால் அவர் அப்படி சொன்னதாகப் பல்லாயிரம் பேர் நம்பிவிட்டனர். ஆதரித்தும் எதிர்த்தும் முடிவே இல்லாமல் விவாதங்கள் நடந்திருக்கின்றன. அந்த முகநூல் நண்பர் எழுதிய பதிவை ராகுல் காந்தி அப்படி பூணூல் காட்டியதாக எண்ணியவர்களில் அதிகபட்சமாக ஒரு பத்து சதவீதம் பார்த்திருக்கலாம்.

உண்மையில் நம்மைச் சூழ்ந்து நடக்கும் ‘சமகால அரசியலும்’ அது உருவாக்கும் உணர்வுகளும் இப்படிப்பட்டதாகவே இருக்கின்றன. ஹராரி இந்த நூற்றாண்டின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றென இந்தப் போலிச் செய்திகளின் பெருக்கத்தைக் குறிப்பிடுகிறார். இச்சூழலில் ஒரு எழுத்தாளன் இவ்வாறான ‘உருவாக்கப்பட்ட செய்திகளுக்கு’ எதிர்வினை ஆற்றிக் கொண்டிருப்பது அவனது படைப்பூக்கத்தை அழிக்கும் என எண்ணுகிறேன். இதிலிருந்து முற்றாக விலகி துறவியைப்போல வாழ வேண்டும் என்பது என் எண்ணமல்ல. உணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடனேயே உருவாக்கப்படும் செய்திகளின் பின்னிருக்கும் மனநிலையை ஆராய்ந்து பார்க்கலாம். அது எழுத்துக்கு அவசியம். ஆனால் அந்த கட்டமைக்கப்பட்ட உணர்ச்சிகளில் தன்னை ஒரு எழுத்தாளன் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது.

கருத்தியல் ரீதியான அரசியலைப் பொருத்தவரை அனைத்து கருத்துநிலைகளையும் அவன் கவனித்தாலே போதும். அவன் தன்னை காந்தியத்துக்கோ கம்யூனிசத்துக்கோ இந்துத்துவத்துக்கோ கிரயமெழுதி கொடுக்க வேண்டியதில்லை என்பது என் நிலைப்பாடு.

 

யதார்த்த வாத கதைகள், நேர்கோட்டுக் கதைகள் இவை அதிகளவில் தமிழில் எழுதப்பட்டு விட்டன அல்லது எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த போக்கைச்  சமகால எழுத்தாளராக எப்படி பார்க்கிறீர்கள்.? இதே இடத்தில் சமகால உலக இலக்கியத்தைப் பாருங்கள். அவர்கள் இவற்றையெல்லாம் தாண்டி போய்க் கொண்டிருக்கிறார்கள் இல்லையா?

அநேர்க்கோட்டு எழுத்து, மாய யதார்த்தம் போன்ற புதிய போக்குகள் இலக்கியத்திற்குள் நுழைவதை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன என நினைக்கிறேன். ஒன்று எழுத்தாளனின் தனிப்பட்ட கவனம். உலக இலக்கியத்தில் தமிழ்ச் சூழலிலும் நிகழ்ந்திருக்கும் சாதனைகளைக் கவனித்து அவற்றைத் தாண்டி விடவேண்டும் அல்லது தனித்துச் செல்ல வேண்டும் என்ற கவனத்துடன் செயல்படும் படைப்பாளிகள் புதிய எழுத்துமுறையைச் சூழலில் அறிமுகப்படுத்துவார்கள். ஆனால் இவ்வகைப் படைப்பாளிகள் வடிவத்துக்கு அதிக முக்கியத்துவம் தந்து புனைவுச் செயல்பாட்டின் இயல்பான கொண்டாட்டத் தன்மையை நீர்க்கச் செய்து புனைவை ஒரு வகையான புதிர் விளையாட்டாக மாற்றிவிடுவார்கள். இந்த சுழலிலிருந்து தப்பித்த எழுத்தாளர்களே வெற்றிகரமாக செயல்பட்டிருக்கிறார்கள். சுரேஷ்குமார இந்திரஜித்,யுவன் சந்திரசேகர் இருவரும் அவ்வகையில் அநேர்க்கோட்டு எழுத்தின் சிறந்த முன்னோடிகள்.

இன்னொரு வகையினர் வாழ்க்கைச்சூழல் அளித்த புதியவகை நெருக்கடிகளால் தங்களை அறியாமலேயே புதிய வடிவத்தைக் கண்டடைந்து கொள்கிறவர்கள். இலங்கை யுத்தத்தால் அங்கிருந்து வெளியேறிய கலாமோகனின் நிஷ்டை தொகுப்பு அதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

சமகால எழுத்தாளர்களில் இதுபோன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான அநேர்க்கோட்டு எழுத்து முயற்சிகளை மேற்கொண்டவர்கள் குறைவென்றே நினைக்கிறேன். பாரம், முடிவின்மையின் வடிவம் என நான் சில கதைகளை முயன்றிருக்கிறேன். சுனில் கிருஷ்ணன் தொடர்ந்து தன்னுடைய கதைகளில் வடிவச் சோதனைகளை முயன்று வருகிறார். தற்போது வெளிவந்திருக்கும் விஜயராவணனின் ‘நிழற்காடு’ தொகுப்பு  அறிபுனைவு, உருவகக்கதை என வெவ்வேறு வகையான கதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இதுவொரு தேக்கநிலைதான். இன்று என்னுடன் எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு தங்கள் எழுத்தின் மீதான அல்லது சூழல் மீதான அதிருப்தி கூடும்போது புதிய களங்களை நோக்கி தமிழ்ச் சிறுகதை நகரும் என நினைக்கிறேன்.

 

கதைகளின் கருக்கள் திடீரென்று என்று தோன்றி உங்களுக்குத் திடுக்கிடல்கள் தருவதாகச் சொல்கிறீர்கள்  இந்த திடுக்கிடல்கள் கதைகளாக மாற்றும் போதும் அல்லது மாற்றி பிறகும் அதே திடுக்கிடல்கள் இருக்கிறதா?

கதை எழுதும்போது எழுத நினைத்தபோது மனதில் தோன்றிய கரு அடையும் மாற்றங்கள் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். உண்மையில் எழுதும்போது அடையும் உற்சாகமே நினைத்தே பார்த்திராத ஒன்று சட்டெனத் தோன்றி கதைப்போக்கைத் தீர்மானிப்பதைத்தான். மற்றபடி கதையை induce பண்ணிய அந்த விஷயம் அதே மர்மத்துடன்தான் எழுதி முடித்தபிறகும் நீடிக்கும். ஒளிர்நிழல் நாவலில் ஒரு வாட்ச்மேனின் தற்கொலை வரும். அது நான் படித்தபோது பள்ளியில் நடந்தது. எழுதிய பிறகும் இன்றும் அவருடைய கோமாளித்தனமான முகமும் உடையும் தொந்தரவு தருவதாகத்தான் இருக்கிறது.

 

சிறுகதைகளை விட நாவல்களை அதிகம் வாசிக்கிறேன் என்கிறீர்கள்? இந்த பதில் சுவாரஸ்யம் தருகிறது. அதற்கு நேர்மாறாக நிறையச் சிறுகதைகளையும் ஒரே ஒரு நாவல் மட்டும் எழுதியுள்ளீர்கள். இந்த முரண்பாடு வித்தியாசமாக இருக்கிறது இல்லையா அதனால் இதைக் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.?

ஒளிர்நிழலுக்கு முன்பாக இரண்டும் பிறகாக ஒன்றும் என நாவல்கள் எழுதி இருக்கிறேன். அவற்றை பிரசுரம் செய்யவில்லை. தற்போதும் ஒரு நாவல்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதி சில நாட்கள் கழித்தும் அந்நாவல் என்னை திருப்திப்படுத்தினால் மட்டுமே அதைப் பிரசுரிக்கும் முயற்சிகளை எடுத்துக் கொள்வேன்.  ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. சிறுகதைகளிலும் ஒரே நாளில் எழுதி அன்றே டெலீட் பண்ணிய கதைகள் உண்டென்றாலும் பெரும்பாலும் அப்படி ஆவதில்லை. எந்நேரமும் ஒரு நாவலுக்குள் இருக்க வேண்டும் என்பதே இப்போதும் என் விருப்பமாக உள்ளது. ஆனால் அப்படித் தொடர்ந்து இருக்க அனுமதிக்காத வாழ்க்கைச்சூழல்கூட சிறுகதைகள் அதிகம் எழுதக் காரணமாக இருக்கலாம்.

 

எழுத்தில் எந்தவிதமான வட்டார வழக்குகளைப் பயன்படுத்தாமல் ஒரு பொதுவான எழுத்து முறையை கடைப்பிடிக்கிறீர்கள். இது பொதுவான வாசகர்களுக்கு உங்களைக் கொண்டுபோய் சேர்க்க உதவினாலும். தான் பார்த்து வளர்ந்த ஒரு வட்டார வழக்கு மொழியைத் தனது எழுத்தில் பயன்படுத்த வேண்டும் என்கிற ஆசை ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இருக்கமில்லையா. உங்களுக்கு அப்படி ஒன்று இருக்கிறதா?

வட்டார வழக்கினை மிகச்சில கதைகளில் முயன்றிருக்கிறேன். நான் தேர்ந்து கொள்ளும் கதைக்களங்களுக்கு வட்டாரத்தன்மை பெரிதாக இதுவரை தேவைப்படவில்லை. ஆனாலும் திருவாரூரை மையப்படுத்தி எழுதும் எண்ணமிருக்கிறது

 

” சக மனிதன் மீதெழும் வெறுப்பே இந்த நாவலுக்கான அடிப்படை எனத் தோன்றுகிறது.”

இந்த வரிகள் உங்களின் ஒளிர்நிழல் நாவலில் வருகிறது.? அன்பு செய்யுங்கள் அதுவே அறம் என்கிற இலக்கிய துதிபாடலுக்கு எதிராக எழுதப்பட்ட வரிகளாக இவற்றை எடுத்துக் கொள்ளலாமா?

எழுதியபொழுதை விட இப்போது அவ்வரிகள் மேலும் பொருந்துவதாகத் தோன்றுகிறது. வெறுப்பு நம்முடைய இயல்பான குணம். பேருந்தில் காலை மிதிப்பது கூட ஒரு  மனிதனை வெறுக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால் அன்பு அவ்வளவு இயல்பானதல்ல. அதைப்பற்றித் தொடர்ந்து பேசவும் எழுதவும் வேண்டியிருக்கிறது. அப்போதும் அன்பு முழுதாக நம்பக்கூடியதாக இல்லை. நம்பகத்தன்மைதான் வெறுப்பைத் தேர்வு செய்யக் காரணம் என நினைக்கிறேன். மற்றபடி அன்பு செய்யுங்கள் என்பதற்கான எதிர்வினை எல்லாம் இல்லை. சொல்லப்போனால் அந்த நாவலை வாசித்தவர்கள்தான் ‘வாழ்வின் ஒளிமிக்க பக்கங்களை’ எனக்கு எப்படியாவது காட்டிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள்!

மரணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் அதன் மீது மயக்கமும் ஒருவித பதட்டமும் இருக்கிறதா?

ஒளிர்நிழல் நாவலில் அதுவும் மறைமுகமாக ஒளிந்தே ஒரு நிழல் போல வருகிறது இல்லையா!

பள்ளி நாட்களில் நெருக்கடியைத் தரும் ஆசிரியர்கள் இறந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருக்கிறேன். எப்படி இறக்க வேண்டும் என்று தெரியாத வயதில் சாகப்போவதாகச் சொல்லி வீட்டுக்கு வெளியே ஓடியிருக்கிறேன். ஆனால் அன்றாட வாழ்வில் மரணம் பெரிய பதற்றங்களை எல்லாம் அளித்ததில்லை. எனக்கு ஒன்பதாம் வகுப்பு பாடமெடுத்த ஆசிரியர் பின் மண்டையில் அடிபட்டு இறந்திருக்கிறார். அவருக்குப் பள்ளியில் நடந்த அஞ்சலிக்கூட்டம் அதன் புதுமை காரணமாக நினைவிருக்கிறதே தவிர நேற்று பார்த்த மனிதர் இன்றில்லையே என்றெல்லாம் அதிர்ந்ததில்லை. ஆனாலும் மரணத்தை அவதானிக்கும் ஒரு கண் எனக்குள் இருப்பதாகவே தோன்றுகிறது. என்னுடைய பல கதைகளில் மரணம் வருகிறது. அது ஏன் கதையினை இடையீடு செய்கிறது என்று எனக்குப் புரியவில்லை. பதற்றம் இல்லை. ஆனால் மயக்கம் இருக்கிறது. இப்படி யோசித்துப் பார்க்கலாம். நமக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்றை விளைவிக்க வாய்ப்பிருக்கும் ஒரு மனிதர் அந்த ஆபத்தினை ஏற்படுத்தப்போகும் சந்தர்ப்பத்தில் இறந்துவிடுகிறார். நாம் அதற்காக மகிழத்தானே செய்வோம்?

உண்மையில் சகமனிதனின் மரணம் நமக்கு என்னவாக பொருள்படுகிறது என்பது சார்ந்த பெரிய குழப்பமே எனக்கு இருக்கிறது. பஞ்சத்தில் போர்களில் நோய்களில் பிரிவினையில் கலவரங்களில் விபத்துகளில் என இன்று நடந்த மரணம் தொடங்கி வரலாற்றில் நிகழ்ந்த கோடிக்கணக்கான மரணங்கள் வரை நாம் அறிய நேர்கிறது. இதெல்லாம் என்னவாக பொருள் கொள்ளப்படுகின்றன என்ற திகைப்பும் எனக்கு இருக்கிறது. இந்த கொரோனா தொற்று வந்த பிறகு உலகில் எவ்வளவு பேர் தினம் சாகிறார்கள் என்பது செய்தியாகிறது. அதையெல்லாம் ஆர்வத்துடன் நான் கவனித்துக் கொண்டும் இருக்கிறேன். கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதுபோல. மரணத்தை நான் கொஞ்சம் குரூரமாகத்தான் அணுகுகிறேன் போலிருக்கிறது.

 

அமானுஷ்யமான விஷயங்களின் பேரில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? அமானுஷ்யம் என்று சொல்லக்கூடிய தனிப்பட்ட அனுபவங்கள் ஏதும் இருக்கிறதா?

தர்க்கப்பூர்வமாக வகுத்துவிட முடியாத அனைத்தையும் நான் அமானுஷ்யமாகத்தான் பார்க்கிறேன். அப்படிப் பார்க்கும்போது அன்றாடமே எனக்கு மர்மம் நிறைந்ததாகத்தான் தெரிகிறது. மேலும் பகுத்தறிவுவாதியாக இருப்பது அலுப்பூட்டக்கூடிய ஒரு செயல். மர்மமான ஒரு அனுபவம் ஏற்படும்போது அதை கிழித்துப் பார்த்து தர்க்கங்களை கண்டுபிடித்து என்ன செய்யப் போகிறோம். அமானுஷ்ய அனுபவங்கள் சில உண்டு. ஆனால் அவற்றை பொதுவில் பகிர்ந்து கொண்டு அதற்கு அளிக்கப்படும் ‘அறிவியல்பூர்வமான’ விளக்கங்களைக் கேட்க எனக்கு மனமோ செவியோ இல்லாததால் அவற்றை இங்கு பகிரவில்லை.

 

ஒளிர்நிழல் ஒரு மெட்டா ஃபிக்ஷன் நாவல். அதை வாசிக்கும் வாசகர்கள் கூட அதில் கதாபாத்திரங்களாக மாறுகிறார்கள். அத்தியாயங்கள் மாறிமாறி வருகிறது. நிறைய புதிய புதிய கதாபாத்திரங்கள் வருகிறது. கதை ஒன்று அங்கே கனமாக இல்லை. முதல் நாவலை இப்படி எழுதியதற்குக் காரணம் எதுவாது இருக்கிறதா? இல்லை புதிய முயற்சியாக இருக்கட்டும் என்று எழுதியதாக எடுத்துக் கொள்ளலாமா!

உண்மையில் ஒளிர்நிழல் என் கோணத்தில் ஒரு ‘நேர்க்கோட்டு நாவல்’ தான். எழுதி முடித்த பிறகு ஒரு அத்தியாயத்தையும் இடம்மாற்றவில்லை. ஒரு அத்தியாயத்தையும் திரும்ப எழுதவில்லை. என்னால் இயல்பாகவே ஒரு நாவலை ‘கதையாக’ கற்பனை செய்ய முடியவில்லை. ஒளிர்நிழலை ஒரு தற்கொலை கடிதமாக எழுதப்படும் நெடுங்கதை என்ற உத்தேசத்துடன்தான் எழுதத் தொடங்கினேன். அந்நாவலுக்குள் ‘ஒளிர்நிழல்’ என்ற பெயர் முதன்முறை வரும் வரை அக்கடிதத்துக்குள் அப்படி ஒரு நாவல் இருப்பது எனக்கே தெரியாது! திட்டமிடாமல் தன்போக்கில் வளரட்டும் என்பது மட்டுமே அந்நாவலுக்குப் பின்னிக்கும் ஒரே திட்டம். வித்தியாசமாக முயன்று பார்க்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் நாவல் வெளியாகி வாசிக்கப்பட்ட பிறகே அது வித்தியாசமான முயற்சி என்பது எனக்கே தெரிந்தது.

 

முதல் நாவல் வெளிவந்த பிறகு எதிர்கொண்ட விமர்சனங்கள் எப்படிப்பட்ட மன நிலையைத் தந்தது அந்த விமர்சனங்களில் வழியே அடுத்த நாவலை எப்படித் தகவமைத்துக் கொள்ளப் போகிறீர்கள்?

பேராசிரியர் டி.தருமராஜ் இந்நாவலை ஒரு முரட்டுத்தனமான முயற்சி என்றார். ஜெயமோகன் ஒளிர்நிழல் குறித்து எழுதிய விரிவான கட்டுரைக்குப் பிறகு நாவல் பரவலாக வாசிக்கப்பட்டது. அக்கட்டுரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. அதன்பிறகு ஒளிர்நிழல் குறித்து இருபது கட்டுரைகளாவது எழுதப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். அவற்றில் நாவலின் ‘பிழைகள்’ என்று பெரிதாக எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. மாறாக நாவலின் வாழ்க்கை நோக்கின் மீதான வியப்போ எரிச்சலோதான் விமர்சனமாகப் பதிவாகி இருந்தது.  எனினும் ஒளிர்நிழல் நாவலின் சில போதாமைகளை உணரத் தொடங்கி இருக்கிறேன். அடுத்த நாவலை auto fiction பாணியில் முயல்கிறேன். ஆனால் அதிலும் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு கிறுக்குத்தனம் உள்ளது.

 

சுய வெறுப்பு அல்லது சுய பரிதாபமும் இவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இவ்வுணர்ச்சிகள் உங்கள் எழுத்துகளில் அதிகம் வெளிப்பாடு கண்டிருப்பதாகத் தோன்றுகிறது அதனல் கேட்கிறேன்?

உண்மைதான். ஆனால் இவ்விரண்டு உணர்வுகளையும் மெல்ல மெல்லக் கடந்து கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். என் அடுத்த சிறுகதைத் தொகுப்புக்கான கதைகளை சில நாட்களுக்கு முன் வாசித்துப் பார்த்தேன். உண்மையில் மகிழ்ச்சியாக இருந்தது. இழிவுணர்வுகளைக் கடந்துவிட்டதால் அல்ல. இவ்வுணர்கள் இக்கதைகளில் மிதக்கவில்லை. ஆழ்படிவுகளாக உள்ளே சென்று விட்டிருக்கின்றன. தனிப்பட்ட முறையில் தன்வெறுப்பும் கழிவிரக்கமும் எழுத்தாளனுக்கு மட்டுமல்ல உணர்ச்சியுள்ள அத்தனை மனிதனுக்கும் அவசியம் என்றே நான் நினைக்கிறேன். இவற்றைப் பிறழ்வுகளாகக் கண்டு ‘களையெடுக்க’ நினைப்பது என்னைப் பொறுத்தவரைக் கொடூரமான செயல். தன்னைப் பற்றிய விமர்சனமும் போதாமையும் கொண்டவர்களே தன்வெறுப்பிலும் கழிவிரக்கத்திலும் அமிழ்வார்கள். சுயத்தைப் பற்றிய அத்தகைய அவதானம் ஒரு அபூர்வமான குணம். தன்வெறுப்பு கொண்ட ஒருவன் அதைக் களைய முனையும் நன்நம்பிக்கைவாதியைவிட பலமடங்கு மேலானவன் என்பதே என் எண்ணம். தன்வெறுப்பு கொண்டவர்கள் அவர்களாக அவர்கள் விரும்பினால் அதிலிருந்து விலகி வரட்டும். மற்றபடி அதை வெளியிலிருந்து ‘போக்க’ நினைப்பது அபத்தம்.

 

உங்களது புனைவுகளின் சாரம்சம் அல்லது உங்களது மொத்த எழுத்துகளாலும் நீங்கள் எதிர்கொள்ளும் அடிப்படை கேள்வி என்ன?  அப்படி ஒரு கேள்விக்கான பதிலாக உங்களுடைய படைப்புகளைத் தொகுத்துக்கொள்ளும் சாத்தியம் உண்டா? நம் வாழ்க்கைக்கு இங்கு அர்த்தம் உண்டு என நம்புகிறீர்களா? அல்லது இந்த கேள்வியை நான் இப்படி மாற்றிக்கேட்கிறேன். எழுத்து உங்களுக்கு அர்த்தம் தேடுவதற்கான கருவியா?

நம் மனம் தொடர்ச்சியாக நம்மை வகுத்துக்கொண்டே இருக்கிறது. நாம் தினம் எதிர்கொள்ளும் சிக்கல்கள், துயர்கள், இன்பங்கள், அனுபவிக்கும் சுவைகள், பார்க்க நேரிடும் காட்சிகள் என ஒவ்வொன்றையும் உள்ளீடாகக் கொண்டு வாழ்க்கை குறித்த நமது பார்வையை மனம் மாற்றி அமைத்துக் கொண்டே இருக்கிறது. இதில் நிரந்தரமாக அர்த்தம் என்ற ஒன்று இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. ஆகவே அப்படி ஒன்றை தேடிச்செல்லும் விருப்பமும் எனக்கில்லை. என் எழுத்தின் வழியாக ஒரு தருணத்தின் பொருளின்மையைத்தான் நான் தேடிச் சென்று கொண்டே இருக்கிறேனோ என்று தோன்றுகிறது. ஒரு தருணத்தின் அல்லது நிகழ்வின் உண்மையான பெறுமதியை அதன்மேல் போர்த்தப்பட்டிருக்கும் அத்தனை லட்சியப்பூர்வமான நியாயங்களையும் களைந்துவிட்டுப் பார்ப்பது எனக்கு உவப்பானதாக இருக்கிறது. அதேநேரம் மனிதன் அவனை இயக்கும் அடிப்படை விசைகளான காமம், வன்முறை ஆகியவற்றை மட்டுமே சார்ந்திருக்கிறான் என்ற நவீனத்துவ பார்வையிலும் எனக்கு உடன்பாடில்லை. நவீனத்துவ மனநிலை அதற்கு முந்தைய செவ்வியல் காலகட்டத்து லட்சிய மனநிலையின் ஒரு எதிர்வினை மட்டுமே. ஆனால் நான் கற்பனை செய்யும் பொருளின்மை நவீனத்துவத்துக்குள் குறுக்கிவிட முடியாத அளவுக்கு பெரியது என நினைக்கிறேன்.

 

ஆனால் நிகழ்வு அல்லது தருணங்களின் பொருளின்மை என்று வரும்போது மெதுவாக அபத்தத்தின் எல்லைக்குள் சென்றுவிடுகிறது இல்லையா?

அபத்தம் என்ற சொல்லையே அர்த்தம் என்ற விருப்பம் நிறைவேறாதபோது தோன்றும் கசப்பினை குறிக்கத்தானே பயன்படுத்துகிறோம். நம் மனம் கற்பனை செய்யும் நியதிகளின்படி அல்லது ஏற்கனவே கற்பனை செய்யப்பட்டவற்றை நாம் நம்பியிருந்து அதற்கேற்றபடி இங்கு எதுவும் நிகழாது போகும்போதுதான் ‘எல்லாம் அபத்தம்’ என்ற முடிவினை நோக்கிப் போகிறோம். நிகழ்வுகளின் இயல்பிலேயே அத்தகைய ஒத்திசைவு எதுவும் இல்லை என்று உணர்வதையே நான் பொருளின்மை என்று குறிப்பிடுகிறேன்.

 

நவீனத்துவ மனநிலையைச் செவ்வியலுக்கான எதிர்வினை என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் பொருளின்மையை நவீனத்துவத்திற்கான எதிர்வினை என்கிறீர்களா? ஒவ்வொரு காலகட்டமும் இன்னொரு காலகட்டத்திற்கு எதிர்வினைதான் செய்கிறதா?

நிச்சயமாக. எதிர்வினையும் செய்கிறது என்று சொல்வேன். ஒன்றின் போதாமையிலிருந்துதானே இன்னொன்று கிளைக்கிறது. போதாமை எல்லா காலகட்டத்திலும் உணரப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். கடவுள்கூட திரும்ப வரலாம். யார் கண்டது?

 

தஸ்தயெவஸ்கி ஓரிடத்தில் ” அழகு உலகைக் காக்கும்” என்று அறிவிக்கிறார். நீங்கள் அந்த வாக்கியத்துடன் உடன்படுகிறீர்களா? அழகு என்றால் என்ன? என்று கேட்டால் அதற்கு உங்களுடைய பதில் என்ன?

சில வருடங்களுக்கு முன்பு இக்கேள்வியைக் கேட்டிருந்தால் உடன்படமாட்டேன் என தீர்க்கமாகச் சொல்லியிருப்பேன். அன்று அழகு குறித்த ஒரு எதிர்ப்புணர்ச்சிகூட என்னிடமிருந்தது. ஆண் பெண் ஆணவ மோதல்களில் அழகென்பது ஒரு துருப்புச்சீட்டாக மட்டுமே பயன்படுகிறது என்றெல்லாம் கூட சிந்தித்து இருக்கிறேன். இயற்கையின் அழகைக்கூட நுகர் வியத்தின் சொற்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்றுதானோ என்று சந்தேகித்து இருக்கிறேன். ஆனால் அப்போது லட்சியவாதத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. பெரியாரியம் மார்க்சியம் காந்தியம் என அந்த நம்பிக்கை மாறி மாறி வந்திருக்கிறது. இன்று யோசித்துப் பார்த்தால் லட்சியவாதத்தின் மீதான அந்த நம்பிக்கை அது கையாளப்படக்கூடியதாக இருப்பதால் ஏற்படுவது என்று தோன்றுகிறது. லட்சியவாதிகளுக்கு எய்துவதற்கு ஒரு இலக்கு இருக்கிறது. ஆகவே அது மேன்மையானதாக இருக்கிறது. ஆனால் அழகுணர்வு இலக்கற்றது. ‘சமத்துவ சமுதாயத்தை அமைப்போம்’ என்று சொல்லும்போது நம்முடைய அடுத்த கேள்வி வழிமுறை பற்றியதாகவே இருக்கிறது. ஆனால் ‘மாலைச்சூரியன் பெரிய சைஸ் ஆரஞ்சு பழம் மாதிரி எவ்வளவு அழகா இருக்கு’ என்று நம்மிடம் யாரும் சொன்னால் ‘அதக்கு இப்ப என்ன’ என்றுதான் கேட்கிறோம்.

லட்சியவாதங்களின் மீது நம்பிக்கை இழக்கத் தொடங்கிய காலத்தில் அழகுணர்வு குறித்த என் பார்வை மாறியது என்று நினைக்கிறேன். லட்சியவாதம் வரலாற்றை ஒரு கணித சூத்திரம் போலப் பார்க்கிறது. சில variablesஐ மாற்றிவிட்டால் நமக்குத் திருப்தி தரக்கூடிய முடிவினை வரலாற்றிடம் பெற்றுவிடலாம் என்று அது நம்மை நம்ப வைக்கிறது. அந்த எண்ணத்தின் மீது வலுவான அடிவிழும்போது நமக்கு எஞ்சியிருக்கும் ஒரே புகலிடம் அழகு என்றுதான் தோன்றுகிறது. அழகு என்பதை நான் நிலையானதாகவோ ஸ்தூலமானதாகவோ நான் கருதவில்லை. சில நேரங்களில் அழகுணர்வு இயற்கையில் ஏற்கனவே உள்ள symmetryஐ காண்பதால் ஏற்படும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நேரங்களில் பிடித்த பெண்ணின் சிரிப்பாகவோ அழுகையாகவோ இருக்கிறது.

எப்படியாயினும் அழகில் பௌதீக இருப்புடன் பார்ப்பவனின் ஆன்மா அல்லது அதைப்போன்ற ஒன்று இணையும் புள்ளி ஒன்று இருப்பதாக நான் நம்புகிறேன். அவ்விருப்பின் ஆன்மாவை பார்ப்பவனின் ஆன்மா தொடும் தருணத்தை அழகை அனுபவம் கொள்ளும் தருணமாக நான் சொல்வேன். எரிக் ஃபிரம் தன் ‘அன்பு என்னும் கலை’ நூலில் அன்பென்பது தொடர்ச்சியான செயல்பாடுகள் வழியாக அடையப்பட வேண்டிய ஒன்று என்று சொல்லி இருக்கிறார். நான் அழகுக்கும் இதையே சொல்வேன். பார்ப்பவனிடம் மேம்போக்கான புலன் உணர்ச்சியைத் தூண்டுவதைக் கடந்து சொற்களற்ற வெளியில் அவனை நிறுத்துவதை அழகென நான் வகுத்துக் கொள்கிறேன்.

 

அழகினை குறிக்க மயக்கம் என்ற சொல் இங்கு உண்டு. கடற்கரையில் ஒரு அஸ்தமனத்தை ஒருவர் பார்க்கிறார். ஒர் இருபது நிமிடம் இவ்வுலகைச் சேர்ந்ததில்லை என்பது போன்ற ஒரு சோகம், அழகு என ஆகாசத்தில் கண்கொள்ளாக் காட்சி.  பிறகு இருள். எடைகல் போல வைக்கப்பட்ட மெளனம் அழகிற்கு நீடித்த தன்மை இல்லை போலும் என அவர் உண்மைக்கு ஏங்குபவராக மாறுகிறார். இந்தப் பின்னணியிலிருந்து கேட்கிறேன், அழகிற்கும் உண்மைக்குமான தொடர்பு என்ன? இரண்டுக்கும் இடையே ஒரு முரண்பாடு இருப்பது போலில்லை? ஒரு கவிதையைப் படிக்கும்போது அது அழகாகவும் இருக்கிறது அதேசமயம் உண்மையாகவும் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுவதுண்டு. இலக்கியம்  இரண்டிற்கும் இடையே போகிற போக்கில் ஒரு சமநிலையை எப்படிப் பேணுகிறது ?

உண்மைகள் ஏன் நிலைத்திருக்க வேண்டும்? நீங்கள் சொல்லும் உதாரணத்திலேயே அவர் ஒரு ரசிகர் என்ற இடத்திலிருந்து நுகர்வர் என்ற என்ற எல்லைக்கு நகர முனைகிறார். நுகர்வருக்கு அனைத்துமே எல்லையற்று கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வேண்டும். அவர் தொடுக்கும் கீவேர்டுக்கு பல்லாயிரம் பக்கங்கள் கூகுள் பதில் சொல்ல வேண்டும். அப்படி எல்லையற்றுப்போவது அவருக்கே சலித்து அவர் வெளியேற வேண்டும். ரசிக்கக்கூடியவர் தான் ரசித்ததை இன்னொன்றாகத்தானே மாற்றிக்கொள்வார். அவர் எதை ரசித்தாரோ அது அவர் புலன்களில் ஒரு உணர்ச்சியாக சேகரமானால் அதே தருணத்தை மீட்டெடுக்க முயல்வார். சினிமா, தீம் பார்க் போன்றவை கொடுக்கும் ஒரு அனுபவம் போல. ஆனால் அழகினை அனுபவம் கொள்வது அதைவிட ஒரு படி கூடுதலானால் அவ்வனுபவம் புலன்களில் மட்டுமே சேகரமாவதில்லை. மாறாக நான் அழகென்றெண்ணுவதை ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும்போதும் நான் அடைவது ஒரு வகையான திகைப்பைத்தான். நான் அறிந்த பெண்கள் என் கண்களுக்கு அழகாகத் தெரிந்த தருணம் ஒன்றுண்டு. அவர்களை நினைவு மீட்டும்போது அத்தருணமளித்த மகிழ்ச்சிதான் நினைவுக்கு வருகிறது. மீண்டும் அவர்கள் அதே அழகுடன் வெளிப்பட வாய்ப்பில்லை. அத்தருணத்தில் அவர்களை அவ்வளவு அழகாகக் காண்பித்தது எது என்ற ஆய்வுக்கோ மீண்டும் அவர்கள் அப்படித் தெரிவார்களோ என்ற ஏக்கத்துக்கோ நான் போக விரும்பவில்லை. அத்தருணத்தில் நிகழ்ந்துவிட்ட ஒன்று என்றே அதைப் பார்க்க விரும்புகிறேன்.

இலக்கிய அனுபவத்துக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். உண்மைகள் மலைகள் போல நிலைத்திருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மீண்டும் மீண்டும் நம் தலையைக் கொண்டு சென்று முட்டப் பாறாங்கல் போல உண்மை தேவைப்படுகிறது. அது திடமாக இருக்கிறதா என்று அடிக்கடி முட்டிப் பார்த்து மண்டையில் ரத்தம் வழியே பரிசோதனையும் செய்து பார்க்கிறோம். இலக்கிய அனுபவமும் அழகின் அனுபவமும் ஏன் உண்மையானதாகவும் நிலையற்றதாகவும் இருக்கக்கூடாது?

 

அந்தக் கேள்வியை நீங்கள் புறவயமாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள் என்று தோன்றுகிறது. உங்களுடைய பதில் ஒரு நீட்ஷேவிய பதிலைப் போல இருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் அதீத நுகர்வு என்பது குறுகிய வரலாறு உடைய வாழ்வு முறைதானே? நிலையில்லாதது என நடைமுறை ரீதியாக அறிந்தும், மனிதன் தொன்றுத்தொட்டே நீடித்த வாழ்க்கையைத் தேடிவருபவனாக இருந்திருக்கிறான். நித்தியத்துவம், இறவாமை, சாசுவதம், அமரத்துவம், நிரந்தரத்துவம் என பல்வேறு சொற்களை உருவாக்கிவைத்திருக்கிறோம். ஒருவகையில் இன்றைய மருத்துவம் என்பதே அதற்கான ஒரு ஏக்கம்தான் இல்லையா? நீடித்த தன்மைக்கான ஏக்கம் மனிதனின் சாரம்சத்திலேயே உண்டு என்று நினைக்கிறேன். இப்பின்னணியில்

நீடித்த அழகுக்கும் உண்மைக்குமான மனிதனின் விழைவைக் குறித்த கேள்விதான் அது (அந்தக் கேள்வி சற்று விரிவாக இருந்திருக்க வேண்டும். தவறுதான்). உதாரணமாக, வெர்மியரின் ஓவியத்தில் துணி தைத்துக் கொண்டிருக்கும் பெண்ணைப் பாருங்கள். அவள் அன்றிலிருந்து இன்று வரை நாம் ஒவ்வொரு முறை பார்க்கும் தோறும் துணியைத் தைத்துக்கொண்டிருக்கிறாள், ஏறக்குறைய அதே அழகுடன். நான் இப்படிக் கேட்டுப்பார்க்கிறேன். கலையில் இலக்கியத்தில் இந்த காலத்தைக் கடந்து செலுத்தும் அம்சம் அதாவது அழகையும் உண்மையையும் (முழு முற்றான என்று கொள்ள வேண்டியதில்லை) நீட்டிக்கும் குணம் முக்கியம் இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நம்முடைய உடல் செல்லில் உள்ள மைட்டோகாண்டிரியா செல்லின் பகுதியே அல்ல என்று சொல்கிறார்கள். அழகுணர்வையும் நான் அப்படியான ஒன்றாகத்தான் பார்க்கிறேன். ஒரு அழகனுபவத்தை அடையும் போது நம்முள் ஏதோவொன்று நிகழ்கிறது. பின்னர் அதற்கு நாம் பல்வேறு வகையில் பெயர் சூட்டுகிறோம். அது கலைந்தபிறகு ஏங்குகிறோம். ஆனால் நமக்கு அது என்னவென்று பிடி கிடைப்பதில்லை. அதை நிலைக்க வைத்துவிடலாம் என்றுதான் காலங்காலமாக முயன்று வருகிறோம். காமத்தில் தொடங்கி லட்சியங்கள் வழியாக ஆன்மீகம் வரை நாம் அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம் என நினைக்கிறேன். ஆனால் அது இன்னமும் பிடிபடவில்லை. பிடிபடாததால்தானே இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

 

வரலாறு, மரபு, காலம் போன்றச் சொற்களை நீங்கள் என்னவாக பொருள் கொள்கிறீர்கள்? ஓர் எழுத்தாளனாக மேற்சொன்ன மூன்றுடனான உங்களுடைய தொடர்பு என்ன?

வரலாற்றினை சம்மந்தமே இல்லாத ஆனால் ஒரே அறையில் கலைந்து கிடக்கும் பொருட்களை அடுக்கிப்பார்த்து சந்தோசப்படுவது என்று கொள்ளலாம். வரலாற்றிலிருந்து நமக்கு கடந்தகாலம் கிடைப்பதில்லை என்பது என் எண்ணம். அங்கிருந்து நாம் பெற்றுக்கொள்வது அடுக்குதலின் தர்க்கத்தைத்தான். மரபினை வரலாற்று அடிப்படையில் அணுகுவதைவிட உள்ளுணர்வு சார்ந்து அணுகுவது பெரும் குழப்பங்களை அளிக்கும் என்றாலும் ஓரளவு நம்மை கடந்தகாலத்துடன் உணர்வுப்பூர்வமாகப் பிணைத்துக்கொள்ள இந்த உள்ளுணர்வு உதவும் என்பது என் எண்ணம். கடந்தகாலத்தைப் புனைவுகளினூடாக கற்பனை செய்யும்போது மரபினை நெருங்கிச்செல்ல இயலும். எழுத்தாளனாக வரலாற்றினை தரவுகளுக்காகவும் மரபினை புனைவின் அழகியலுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். காலம் தத்துவத்துடன் தொடர்புடையது. அது பற்றிய அறிதல் புனைவினுள் ஒரு இலக்கிய உண்மையாக மட்டுமே நிகழமுடியும் என நினைக்கிறேன்.

 

உங்களுடைய இசை ரசனை குறித்துச் சொல்லுங்கள். இசை உங்களுக்கு என்னவாக 

இருக்கிறது?

மிகக்குறைவாக இசை கேட்கும் எழுத்தாளர்கள் என்றொரு பட்டியலிட்டால் நான் அதில் முதலிடம் பெற வாய்ப்பிருக்கிறது. சினிமா பாடல்களைக்கூட மிகக்குறைவாகவே கேட்கிறேன். முகநூலில் அவ்வப்போது நடக்கும் ராஜா-ரஹ்மான் சண்டைகள், எஸ்பிபி இறந்தபோது மொத்த இலக்கிய உலகமும் துக்கம் அனுஷ்டித்தது போன்ற செயல்கள் எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தன. சில இலக்கியவாதிகள் இலக்கியத்தைவிட இசையைப் பற்றி ஆழமாகத் தெரிந்து வைத்திருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் நான் மிகக்குறைவாகவே இசை கேட்கிறேன். நஸ்ரத் ஃபதே அலிகான் பாடல்கள் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அவருடைய சில பாடல்களைத் தொடர்ந்து கேட்பேன். என் அலுவலக நண்பர் ஆரோக்கிய டேனியல் தன்ராஜ் வழியே நஸ்ரத் ஃபதே அலிகானை தெரிந்து கொண்டேன்.

 

நவீன கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆதர்சமான கவிஞர்கள் என்று யாரையெல்லாம் சொல்வீர்கள்?

நான் ஒரு சிறந்த கவிதை வாசகன் இல்லை என்றுதான் நினைக்கிறேன். சமகாலத்தில் பல கவிஞர்களைத் தொடர்ந்து வாசிக்கிறேன். இசை, வெய்யில், இளங்கோ கிருஷ்ணன், வே நி சூர்யா, ச.துரை ஆகியோர் எனக்குப் பிடித்தமான கவிஞர்கள். மனுஷ்யபுத்திரன், பெருந்தேவி , எம்.யுவன் ஆகியோரை ஆதர்சம் என்று சொல்வேன். மூவருமே வெவ்வேறு வகையில் எனக்கு முக்கியமானவர்கள். கவிதைகளை தொடர்ந்து வாசிக்கும்போது என் உரைநடை மேம்படுவதான ஒரு எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. கவிஞர்களின் உரைநடையின் மீதே எனக்கு ஒரு பெரும் ஈர்ப்பு உண்டு. யுவன் சந்திரசேகரின் புனைவு மொழியும் இசையின் கட்டுரைகளும் எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறவை. அதைக் கடந்து நவீனக் கவிதைகளின் அழகியல் குறித்துப் பேசுமளவு என் வாசிப்பு புறவயமானதாக இல்லை என நினைக்கிறேன்.

 

சமகால எழுத்தாளராகச் சமகால கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழிலக்கியச் சூழலில் புனைவுகளை எழுதும் எழுத்தாளர்கள் நவீன கவிதைகளைப் புறக்கணித்துச் செல்லும் தன்மை இருப்பதாக ஒரு தோற்றம் இருக்கிறது இல்லையா அதனால் இதைக் கேட்கிறோம்.?

மேலே இருக்கும் கேள்வியிலேயே அதற்கான பதில் இருப்பதாக நினைக்கிறேன். மேலும் சொல்ல வேண்டுமெனில் கவிஞர்களை நான் சற்று வியப்புடன்தான் பார்க்கிறேன். உதாரணமாக

வே நி சூர்யா மற்றும் ச துரை இருவருமே நல்ல நண்பர்கள். அவர்களுடன் நிறைய பேசியும் இருக்கிறேன். அவர்களின் ஆளுமை குறித்த ஒரு அவதானிப்பும் என்னிடம் உண்டு. ஆனால் அந்த ஆளுமை கவிதைக்குள் கொள்ளும் உருமாற்றம் வியப்புக்குரியதாக இருக்கிறது. புனைவெழுத்தாளர்கள் ஒரு புனைவில் அவ்வாறு என்னை ஆச்சரியப்படுத்துவதில்லை. ஆனால் கவிஞர்கள் மொழியை இன்னும் கூர்மையான ஆயுதமாக்கிக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஒரு புனைவெழுத்தாளனுடனான உரையாடலுக்கு அவனுடைய படைப்புகளை திறவுகோலெனில் ஒரு கவிஞருடைய படைப்புக்குள் நுழைய அவனுடனான உரையாடல் திறவுகோல் என்று எண்ணுகிறேன்.

நவீன கவிதைகள் குறித்து எழுதும் எண்ணமிருக்கிறது. செயல்படுத்த வேண்டும்.

 

ஒரு எழுத்தாளராக குடும்ப உறவுகளுடன் பயணம் செய்வதில் இருக்கும் அசெளரியமாக எதைப் பார்க்கிறீர்கள்?

‘கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று’ என்ற காச்சர் கோச்சர் நாவலின் வரிதான் நினைவுக்கு வருகிறது.ஒரு விஷயத்தை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கே.என்.செந்தில் ‘காலை ஒன்பது மணிக்கு வேலைக்குப்போய் ஐந்து மணிக்குத் திரும்பும் வாழ்க்கை அமைந்துவிட்டதே’ என்று ஆதங்கப்பட்டிருந்தார். அதே ஆதங்கம் எனக்கும் உண்டு. பணிநேரத்தில் எழுதுவதோ வாசிப்பதோ கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். வேலைக்குச் சென்று சம்பாதிக்கும்படியான கட்டாயம் ஏற்பட்டுவிட்டதை நினைத்து பலமுறை மனம் கலங்கியிருக்கிறேன். கிடைக்கும் சொற்ப நேரத்தில் மட்டுமே வாசிப்பது எழுதுவது எல்லாம். அப்படி நிறையத் திட்டங்களுடன் மாலை வீடு திரும்பும்போது வீட்டின் ஒத்திசைவில் ஏதும் கலக்கம் உண்டாயிருக்கும். யாரும் ஒரு வார்த்தை என்னிடம் சொல்வதற்கு முன்பே நான் அதை உணர்ந்துவிடுவேன். எண்ணியிருந்ததில் ஒன்றைக்கூடச் செய்ய முடியாமலாகும். அதுபோன்ற தருணங்கள் மிகப்பெரிய அளவில் அசௌகரியமாக உணரச் செய்கிறவை.

 

ஒட்டுமொத்த மனிதக் குலமும் இன்றைக்கு எதிர்கொள்ளும் அடிப்படைச் சிக்கல்களாக அல்லது ஆன்மீக நெருக்கடிகளாக நீங்கள் எவற்றைச் சொல்வீர்கள்?

மனித குல வரலாற்றை ஒரு சிலந்தி வலையுடன் ஒப்பிடலாம். பின்னல்கள் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டே போகும் சிலந்தி வலை. ஒவ்வொரு மனிதனின் அன்றாட இருப்பையும் முடிவு செய்வதில் வியாபாரத்துக்காக உறவுகளுக்காக லட்சியங்களுக்காக அரசங்களுக்காக நாமே விரித்துக் கொண்ட இந்த சிலந்திவலைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. நம்முடைய ஆன்மீகத்தையும் அறிவுத்தேட்டத்தையும் இந்த சிக்கலான வலைதான் முடிவு பண்ணுகிறது என எண்ணுகிறேன். ஒரு நூறு வருடங்களுக்கு முன்புவரை கூட நம்மால் ‘உலகம்’ என்ற முழுப்பரப்பை கற்பனை செய்ய முடியவில்லை. ஆனால் இன்று அனைவருக்குமே இந்த உலகின் பிரம்மாண்டம் புரிகிறது. ஆகவே இதன் வளங்கள் குறித்தும் இதன் சிக்கலான இயங்கு முறை குறித்தும் பயங்களும் திகைப்புகளும் இருக்கின்றன. நாமனைவருமே இந்த பூமி இன்னும் ஒரு சில நூற்றாண்டுகளில் அழிந்துவிடும் என்று நம்புகிறோம். மத ஆதிக்கம் நிறைந்த நாட்களில் இறுதித்தீர்ப்பு நாள் குறித்து இருந்த பயம்போல இன்று இந்த ‘உலக அழிவு’ குறித்த ஒரு பயம் இருக்கிறது. ஆனால் இந்த பயம் மிகுந்த தர்க்கப்பூர்வமானது. இன்னின்ன ஆச்சாரங்களை கடைப்பிடித்தால் இறுதித்தீர்ப்பு நாளில் கடவுள் காபந்து பண்ணுவார் என்பதைப் போன்ற நம்பிக்கையுடன் கலந்த பயமல்ல. நீர்மட்டம் மெல்ல உயரும் ஒரு உடைந்த அடைபட்ட கப்பலில் சிக்கிக்கொண்டது போன்ற பயம். துணைக்குக் கடவுள் லட்சியவாதம் போன்ற சாந்தப்படுத்தும் கற்பனைகள் இல்லாத வெளியில் நிறுத்தப்பட்டிருக்கிறோம். ‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கு இதுவரை நாம் பேணிக்கொண்டிருந்த விழுமியங்களுடன் இசைவு கொள்ளும்படியான ஒரு பதிலைக் கண்டடையவில்லை என்பதுதான் இன்றின் அடிப்படை சிக்கல் என நினைக்கிறேன்.

 

குறுகிய அல்லது நீண்ட நாள் இலக்கிய திட்டங்கள் என்று எவற்றையெல்லாம் மனதில் வைத்துள்ளீர்கள்?

தற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலை முடிக்க வேண்டும். அதற்கான தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். நீண்டகால நோக்கில் இரண்டு பெருநாவல்களை எழுதும் எண்ணமிருக்கிறது. ஒன்று இந்தியச் சுதந்திர காலகட்டம் பற்றியது.

 

உங்கள் இலக்கிய திட்டங்கள் மற்றும் எண்ணங்கள் வெற்றிபெற கனலி சார்பில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி.

2 COMMENTS

  1. சுரேஷ்பிரதிப் கனமான கேள்விகளைத்தான் எதிர்கொண்டுள்ளார். சிறப்பான படைப்புகளை வழங்க வாழ்த்துகள்

  2. சிறப்பான நேர்முகம் இலக்கியம் பறற்றிய ஆழமான நோக்கம் தெழிவு இவரிடம் நிறைய அறியமுடிகிறது,நல்வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.