ஈச்சங்கை
ஹைவேஸ் தாபா வாசலில்
பச்சை சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும்
ஈச்சமரமாகிய நான்
அகல வாய்க்காவில் முளைத்தவள்.
மறுகாவையும்
பஞ்சபாடையும் குடித்து
ஆழ ஊன்றினேன்.
பீக்காட்டின் கரம்பைத் தின்று
கறித்திமிருடன் பூத்தேன்.
தூண்டிலுக்கு
புழுக்கள் தோண்டுகையில்
பாதங்கள் கூசும்.
செதில் உடலேறி சறுக்கியவர்களை
பிடித்திருக்கிறேன்.
ஓலைத் தலையினுள் தேடி
ஈச்சம் பழங்களைக் கொட்டியிருக்கிறேன்.
தேன்மிட்டாய் பாகினை
அரளிக்காயில் தடவி
கண்ணெதிரே தின்றவளை
தட்டிவிட்டிருக்கிறேன்.
ஹைவேஸ் தாபா வாசலில்
சிவப்பு சீரியல் பல்புகள் சுற்றப்பட்டு தனித்து நிற்கும் ஈச்சமரம் நான்.
என்னை நானே பிடுங்கி
ஓட முடியவில்லை.
வண்டிமாட்டின் லாடமாக ஒளிரும்
நிலாவினையெடுத்து
அறுத்துக்கொள்ள முடியவில்லை.
இல்லாமலாக்கப்பட்ட
கைகளை நினைத்து
இத்துக்கொள்கிறேன்.
கெளுத்தி
பரப்பெங்கும் குவிந்துள்ளன
மண்டவெல்லம் போன்ற பாறைகள்.
குன்றொன்றின் உச்சியில் தொல்விரல்களால் குடையப்பட்ட
பருத்த உரலின்
திறந்த வாயினுள் அலம்புகிறது மழைநீர்.
உள்ளே நீந்தும்
பூனைமீசைக் கெளுத்திக் குஞ்சை
மலையேறி வந்து யார் விட்டது.
எங்கிருந்து விழுந்தது.
கெளுத்தி
உரல்
பாறைகள்
நான்
உலகு… எல்லாம்
பிள்ளைகள் மீன் பிடித்துப்போடும்
பாட்டிலுக்குள் இருக்கிறோம்.