நினைவு கொண்டிருப்பது
இன்று மாலை
யாருமற்ற பூங்காவுக்குள் நுழையும்போது
எதிர் வரிசையில்
புன்னகையுடன் தோன்றி
முகமன் கூறுவாள்
ஒரு நாய்க்கார சீமாட்டி.
அவளைக் கடந்து
வெட்கத்தை விட்டு
ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்திருக்கும்
மரங்களின் கீழ்,
இலைகளின் படுகையின் மீது
ஓசை எழும்ப
நடைப்பயிற்சி பழகும்போது,
வழமை போலவே
தன் கவிகையில்
நிறங்களை நிறைத்தபடி
நின்று கொண்டிருக்கும்
அந்த
அழகு மரம்.
வட திசையிலிருந்து வீசும் காற்றில்
திடீரென எங்கிருந்தோ வந்து
எதிர்பாராமல்
சேர்ந்து கொள்கிறது
வழக்கத்திற்கு மாறான
வெம்மை.
அப்போது,
பெரியதாகவும் அல்லாமல்
சிறியதாகவும் இல்லாமல்,
மஞ்சளுக்கும் சிவப்புக்கும்
இடைப்பட்ட நிறத்தில்
ஒரு காட்டையே
உடன் அழைத்துக்கொண்டு,
மேலிருந்து மிதந்து
உள்ளங்கை
வந்தமரும்.
மேப்பிள் மரத்தின்
முதிர்ந்து கனிந்த
நடு வயதின்
இலை ஒன்று.
உடனே
உன்னை
நினைத்துக்கொண்டேன்.
ஏன்? ஒரு இலை கூட
உன்னைத்தான்
நினைவுபடுத்த வேண்டுமா,
என கேள்வி எழும்.
உடனே உருவாகும்
பதிலும்.
சரிதான்,
ஒரு இலை கூட
உன்னைத் தவிர –
வேறு யாரைத்தான்
நினைவுபடுத்தும்?
காஸ்மிக் தூசி
மருத்துவ மரபியலில் விஞ்ஞானி. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள். இலக்கியம், இசை ஆர்வம்.
ஜெயமோகன் தேர்ந்தெடுத்து சிறுகதை ஒன்று “புதிய வாசல்” நூலில். மொழி பெயர்த்த சிறுகதை “நிலத்தில் படகுகள்”
தொகுதியில். வேணு தயாநிதி மற்றும் காஸ்மிக் தூசி ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள்
சொல்வனம், பதாகை இதழ்களில். கவிதை, சிறுகதை தொகுப்புகள் விரைவில். ஆங்கிலத்திலும் கவிதைகள்.