அமைதியான அந்தக் காலைநடையில்
அவர் சென்றுகொண்டிருந்தார்
எல்லாம் முடிந்துவிட்டது.
இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்!
இதுதான் இதுதான் அந்தச்செயல்
என்பதுபோல்!
மிகச்சரியான பாதை ஒன்றைத்
தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்!
அந்தக் காலையையும்
அந்தப் பாதையையுமே தாண்டி
அந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்!
இவைபோலும்
எந்தச் சொற்களாலுமே
தீண்ட முடியாதவர்போல்!
எங்கிருந்து வருகின்றன
எங்கிருந்து வருகின்றன
விளையாடும் குழந்தைகளின்
இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்?
இப்பேரண்டத்தின்
ஒத்திசைவிலிருந்துவரும்
பேரிசையின் களிஸ்வரங்கள்!
விளையாட்டு
அந்த நகரில்
பூங்காக்களிலும் திடல்களிலுமாய்
ஆங்காங்கே மனிதர்கள்
விளையாடிக்கொண்டிருந்ததுதான்
எத்துணை அழகு!
விளையாட்டுகளின்
நோக்கமும் பொருளும்தான் என்ன
விளையாட்டைத்;தவிர?
விளையாட்டு என்பதுதான் என்ன?
உடற்பயிற்சி?
நேரப்போக்கு?
களிப்பு?
யாவுமான நிறைவு?
இவையெல்லாம் உண்மையா?
பொருளற்ற வாழ்வின்
உறுப்பினர்களால் இயன்ற உறவு!
நாம் கண்டேயாகவேண்டிய
ஒரே பொருள்!
ஒவ்வொரு கிளைகளும்
ஒவ்வொரு கிளைகளும்
ஒளிநோக்கியே எட்டிப்பார்த்தன
அப்புறம் தீடீரென
தங்களைத் தாங்களே
நோக்கத் தொடங்கின
அப்புறம் பூத்துப்பூத்து
மண்நோக்கியே
மலர்களைச் சொரிந்தன
அப்புறம் எல்லாமே
தானில்லாமல்
தானாகவே நடந்தன.
இந்த மவுனத்தை
இந்த மவுனத்தைக் கண்டுதான்
நாம் ஆடவும் பாடவும் புறப்பட்டிருந்தால்
நமது ஆடல், பாடல் மற்றுள கலைகள் அனைத்தாலும்
அந்தப் பெருவாழ்வைக் கண்டடைந்திருக்கமாட்டோமா?
இந்த மவுனத்தைத் தாங்காமல்
அதனின்றும் தப்பிக்கவேதான்
நம் கலைகள் பிறந்திங்கே
ஆட்டம் போடுகின்றனவா?
அடைய வேண்டிய இடத்தை
அடைய வேண்டிய இடத்தை
அடைந்துவிட்டார்கள் அவர்கள்
அடைய வேண்டிய இடம் என்பது
அடைய வேண்டிய இடம் என்று
ஒன்று இல்லை என்பதும்
இருக்கிறது என்பதும்தான்
அதுதான் இயங்கிக்கொண்டே இருப்பது என்பதும்
கற்றுக்கொண்டே இருப்பது என்பதுமான
வாழ்வின் பொருள்.
இரவின் அழகு
ஓ, கடவுளே
இத்துணை பெரிய அழகையா
நாங்கள் முகம்திருப்பிக்கொண்டவர்களாய்
கண்டுகொள்ளாமல்
படுத்துத் தூங்குகிறோம்?
கண்ணீர் ததும்பிவிட்டது அவனுக்கு
பரவாயில்லை, பரவாயில்லை.
முதலில் நீ ஓய்வுகொள் நன்றாய்
அதுதான் முக்கியம் அதுதான் முக்கியம்
என்றது அது.
அழுகை முட்டிக்கொண்டுவந்தது அவனுக்கு
அய்யோ யாரும் இதுவரை
எனக்குச் சொல்லித் தரவில்லையே இதனை
எவ்வளவு காலங்கள் வீணாகிவிட்டன!
எவ்வளவு காலங்கள் வீணாகிவிட்டன!
பார்த்தாயா,
இப்போது உனக்கு ஓய்வுதான் தேவை
கொஞ்சம் தூங்கு என்றது அது.
மலரின் சொற்கள்
ஒளியில் மலர்ந்து
ஒளியை விளம்பிக்கொண்டிருந்த
ஒரு மல ர்!
அழிவில்லாது எப்போதும்
காற்றில் அசைந்தபடியே
இருக்கின்றன
அதன் சொற்கள்!
புரிதலின் பேரறிவுச் கனல்பரக்க
உள்ளும் புறமுமாய்ப்
பெருகி அலைந்தது,
அவன் மேல்மூச்சு, கீழ்மூச்சு.
தேவதேவன்.
சிறந்த சுவையான மொழித்தமிழில் கவிதை அற்புதம்
வியப்பும் நிறைவும் நன்றியும் எப்போதும் பெருகித் ததும்பும் கவிதைகள்!