ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள்
இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள்
பொழுதின் நெடும்பாதை நீண்டாலும்
இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும்
பருவகாலங்களின் மலர்கள் புதுப்பிறப்பின் ஓசைகளை எழுப்பினாலும்
சங்குகளின் உள்ளே ஒளிந்த மணற்துகள்களில் பொறிக்கப்பட்ட
நமது பெயர்கள்
காதலின் பிள்ளைகளென ஒன்றையொன்று கூவியழைக்கும்
அங்கே நாமிருந்தோம்
வானவில்லுக்குத் துணையாய்
அங்கே நாமிருந்தோம்
ஈசல்களுக்கும் காளான்களுக்கும் நண்பர்களாய்
அப்போது நண்பகல்
அகன்ற பேருந்துக்களின் புகை மண்டிய பாதை
நாமோ பச்சை நிறத்தில் ஓர் ஆப்பிளைப் போல உடையணிந்திருந்தோம்
வழக்கமாக ஒரு மேகம் உருமாறுவதை
வழக்கமாக ஒரு வாழைப்பழம் தோல் சுருங்குவதை
வழக்கமாக ஒரு பூந்தொட்டி ஈரமாவதை
நாமேதான் பார்த்திருந்தோம்
அந்நாள்
விழிகளில் ஒரு செவ்வரியாக பதிந்த இரவில்
நாம் முகர்ந்த நமது சுவாசத்தின் வாசனை
நாம் அறிந்த உடலின் இரகசியப் பாதைகளில் மலர்ந்த மலர்களும்
அவற்றின் மீது ஒளிரும் நிலவின் நீல ஒளியும்
விடைபெறுவதற்கு முன்பாக
நாம் சத்தியங்களை பரிமாறவும்
நாம் அசாத்தியங்களை உறுதியளிக்கவும் தயங்குவதில்லை
நான் திரும்பவும் விண்மீன்களுக்குச் செல்கிறேன்
அங்கே ஓசைகள் இல்லையென்பது நமது அபிப்ராயம்
அமைதியில் உனது மலர்கள் மலர்வதில்லை
அவை ஒவ்வொன்றும் எலும்புகளின் மஜ்ஜைச் சேற்றில் மலர்பவை
ஓசைகள் முடிவடையும் இடத்தில் அமைதி துளிர்ப்பதில்லை
ஓசைகளின் இடையே அமைதி நிரம்பியிருக்கிறது
நீ அதில் மலர்ந்தவள்
நெடுந்தவக் காலத்தின் சோர்விலே பிறந்த ஓர் அழகு
நம்மோடு நமது காலம் பிணைந்திருக்கிறது
ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கும் நமது விரல்களைப் போலவோ
அல்லது
உனது விரல்களில் ஒன்றில் ஒளிரும் மோதிரம் போலவோ
ஒன்றிலிருந்து மற்றொன்று மற்றொன்றிலிருந்து மேலுமொன்றாகப்
பெருகியிருக்கிறது உலகம்
துப்பாக்கிகளைப் பூட்டும் ஓசையிலிருந்து காதல் பிறக்கவில்லையா
ஒரு மலர் சோர்வடைந்து தலைகுனியும் போது முகம் கவிழ்த்து
ஒரு தொட்டியில் தன்னைப் புதைக்கத் துணியும் போது காதல் பிறக்கவில்லையா
நமது அரும்புகளுக்குப் பெயரிட்டபோது நீ மலர்களின் தாயாக இருந்தாய்
அவைகள் ஒவ்வொன்றும் உன் பிள்ளைகளென முகம் மலர்ந்த காலத்தில்
நீ மூப்படையாமல் ஒரு விதையாக இருந்தாய்
ஒரு காதலுக்கு வயதில்லை அதன் உடன்வரும் நாட்காட்டியும் இல்லை
எந்தவொரு துயரத்திற்கும் காதலென்று பெயரில்லை
அதுவொரு வெண்ணிற மலரென எனது பூந்தொட்டியில் மலர்ந்திருப்பதைப் பார்க்கிறேன்
அதுவொரு வெண்மேகமென உருமாறுவதை குளங்களின் மேற்பரப்பில் பார்க்கிறேன்
சாயலைக் கண்ணுற்றவனாக
சாபத்தின் திசையறிந்தவனாக
மீண்டும் விண்மீன்களுக்கு
அவைகளில் நாம் சலிப்பற்றவர்கள் என்பதாலும்
நமது ஒவ்வொரு அசைவுகளுக்கும் அவையே சாட்சியென்பதற்காகவும்
நாம் இரவை நமது மூச்சால் சூடேற்றினோமா
நாம் இரவை நமது வியர்வையால் நனைத்தோமா
கண்களில் ஒளிர்கிறது காதலின் அகல்
ஒவ்வொர் அங்கமும் ஒரு மலர்
ஒவ்வொர் அங்கமும் ஒரு பருவகாலம்
ஒவ்வொர் அங்கமும் ஒரு திசை
ஒவ்வொர் அங்கமும் நிலம் குளிர பெய்த மழை
ஒவ்வொர் அங்கமும் நித்தியத்தின் சிறு துண்டு
பின்பு பாலங்கள் கட்டப்பட்ட ஆறுகளைக் கண்டோம்
அவை கரைகளை நம்மையொப்ப இணைந்திருந்தன
கரைகளின் இயல்பறிந்த பாலங்களின் அமைதியில்
காதலின் குணம் ஒளிந்திருக்கிறதென்றால்
எப்போதும் போல் ஒரு நகை
எப்போதும் போல் ஒரு துள்ளலால் மரக்கிளைத் தொட்டுச் செல்லும் பாவனை
எப்போதும் போல் கைவிடுதலில் கொள்ளும் சிறுமகிழ்ச்சி
வெண்மலர்த் தோட்டங்கள் முகலாயத் தோற்றம்
நீள் வனங்களோ அறியாத இரகசியங்களின் காப்பிடங்களாய்
உன் ஒவ்வொரு சொல்லையும் காட்டவும் மறைக்கவும்
அருவியொன்றில் உடல்நனைத்த நாளில்
நீரும் அதன் ஓசையும் நாமும் பாறைகளும் மரங்களின் இலைக்கண்களுமேயிருந்தோம்
பறவைகள்!!!!
நாம் நீரின் ஓசையில் அனைத்தையும் கவனிக்காதிருந்தோம்
நாம் நமது மெலிதான தசைகளின் இசைவான ஓசைகளில் உலகையே கவனிக்காதிருந்தோம்
உலகை மறத்தல் அத்துனை எளிதே
உலகை மறத்தல் அத்துனை எளிதே
கையெட்டும் தொலைவில் காதலில் கனிந்த ஒரு மென் தசை
கண்ணெட்டும் தொலைவில் அர்த்தச் செறிவுற்ற அசைவுகள்
காதெட்டும் தொலைவில் நீட்டி முழக்கிச் சுருக்கப்படும் பெயர்
மீன்கள் மெளனத்திருக்கின்றன
திமிங்கலங்களின் ஓசைகள் திசை நீள்கின்றன
பாப்லோ நெருடாவுக்குக் காதலும் கவிதையும் புதிதில்லை
காதலுக்கோ பாப்லோ நெருடா ஒரு பொருட்டேயில்லை
அகமென்ற ஒரு பரப்பும்
புறமென்ற திணைகளின் தொகுப்பாக
நாம் காதலின் பிள்ளைகள் மட்டுமேயல்ல
வேறுபாட்டின் பிள்ளைகள்
ஒன்றையொன்று நோதலின் விளைவெனவே நாம் காதலில் சிக்குண்டிருக்கிறோம்
அதி தீவிரம் என்பதேயொரு பொய்
ஆழத்தில் நிறமழிவதும் உருக் கலைவதுமே
நம்பத்தகுந்தவற்றின் பட்டியலில் முன்னிற்கின்றன
காதல் அந்தப் பட்டியலை நித்தமும் புதுப்பிக்கிறது
பாலை மணலோவென
மழை ஈரத்திலும் சூடாறாமல் உடல் உலராமல்
தனித்திருக்கும் ஒவ்வொரு இரவிலும் நாம் நமது உரையாடலில்
குறுஞ்செய்திகளின் குறுகுறுப்பில் அகம் மலர்ந்திருக்கிறோம்
நான் கண்விழித்த இரவுகளின் சாட்சிகளாக எதனைக் காண்பிப்பேன்
பின்னிரவைக் கடந்தும் ஒலித்த இசை
பித்தேறியதைப் போலப் பாடும் ஒரு பாடகனின் குரல்
நள்ளிரவுக்கு அப்பாலும் துணையாக வந்து செல்லும் தெருநாய்களின்
முகமற்றவர்களுக்கான இரங்கல் ஊளைகளால்
தரைபடாமல் நடக்கும் கால்கள் ஒரு பழைய உவமை
முதுகெலும்பு நிமிர்ந்த காலத்தளவு பழைய உவமை
மயிரடந்த உடற்கொண்டவர்களாய் நாம் திரிந்த காலத்தளவு பழைய உவமை
அனல் தகிக்கும் ஒரு காலம் அருகிலே அதன் நகல்
எனது நகல்கள் ஒவ்வொன்றிலும் நானேயிருக்கிறேன் அவ்வப்போது விடைபெற விரும்பினாலும்
தசைகள் பழையதாகும் நாட்களில் பழைய காதல்
இழந்த ஒரு வீடாக
இழந்த ஒரு நிலமாக
இழந்த விதைத்தானியங்களாக
அது நடனத்தின் துவக்கத்திற்குத் தயாராகின்றது
நடனமாடும் காதல்!!!!
சரியாகச் சொல்வதைக் காட்டிலும் சரியாக இருப்பதே சரியானது
சரியாக இருப்பதைக் காட்டிலும் சரியாக உணர்வதே சரியானது
சரியாக உணர்வதைக் காட்டிலும் சரியாக…..
காதலின் தகிப்பில் என்ன மிஞ்சியிருக்கிறது இரவின் சாம்பலன்றி
காதலின் தகிப்பில் என்ன மிஞ்சியிருக்கிறது இதயத்தின் ஒப்பாரியன்றி
காதலின் தகிப்பில் என்ன மிஞ்சியிருக்கிறது இதழ்களின் வெடிப்புகளன்றி
தொலைவே காதலின் துயரம்
நித்தியத்துவம் காதலின் நம்பிக்கையென்றால்
அநித்தியமோ அதன் சுவாசம்
வயலின்களும் பியானோ ஒலிகளுமாக நிரம்பியிருந்த அரங்கில்
உடல் மலர்ந்த வாசனை
கைவிடப்பட்ட உறுதிமொழிகளால் காதலின் அணை பலமுறை நிரம்பியிருக்கிறது
பிளவும்
அகன்ற கனவுகளின் மலர்களும்
ஓசைகளற்ற வெற்றிடங்களும்
காய்ந்து
எரியத் தயாராகவிருக்கும் தெருவோர மரங்களும்
நாம் திணையழிந்த காலத்தின் தானியங்கள்
நாம் திசையறியாத வீண்மீனின் வீழ்ச்சி
நாமோ துவக்கமேயில்லாத அழிவொன்றின் சாட்சி
ஒவ்வொரு நரம்பும் அணுக்களின் இசையெழுப்பும் போதில்
உதிர நிறம் காண்பதில் சமனடையும் மனதிற்கு
சொல்வதற்கு ஒரு சொல்லாவது
அனுப்புவதற்கு ஒரு செய்தியாவது மீதியிருக்கும் நாட்களில்
காதல்
ஹிஸ்பானியாக் கிதார் மெட்டுக்களாகத் துள்ளுகிறது
அன்றேல்
பறவைகளின் சிதைந்த கூடென நார் பிரிகிறது
கண்விழித்த வேறுபாடுகளற்ற இரவுகளில் ஒன்றில்
மின்கிதாரின் பிளிறலின் இடையே மூங்கில் குழல் ஒலிக்கிறது
நமது பூசல்களின் சாயலொப்ப
காலமற்ற காலம்
வெளியற்ற வெளி
உயிரற்ற உயிரென
நமதிருவரின் குளிர் நிரம்பிய துருவங்களில் நாமே உறைந்திருக்கிறோம்
ஒவ்வொரு நாட் பிரிவும்
ஒவ்வொரு இசைவில்லாத பொழுதிலும்
காதல் ஒரு விதையே போல
பியானோ இசையைப் போல
தானிருப்பதே அறியாமல் தன்னையே அறிவிக்கிறது
டிஸ்கொத்தே அரங்குகளின் விளக்கொளிகள்
டிஸ்கொத்தே அரங்குகளின் வாசனைத் திரவங்களின் மணத்தில்
டிஸ்கொத்தே அரங்குகளின் துள்ளல் இசை மடைமாற்றத்தின் இடையே
மெலிதான வியர்வை மெலிதான துர்நாற்றம்
நாம் நம்மைச் சகிக்கத் துவங்கினோம்
பருவகால மழை முறைதவறாமல் பெய்வதற்கு நாமே காரணமென்று
அறைகூவினோம் உலகின் காதுகளில் ஒலிபட
யாரோவெல்லாம் நமைக் கண்டு நகைத்த நாட்களிலும்
யாரோவெல்லாம் நம்மை இரகசியச் செய்தியாக மாற்றிய நாட்களிலும்
நமது இரவுகளின் மேடையில் நாமடிய நடனம்
மிகப்பழையதென்று அவர்கள் அறியவில்லையென்று சொன்னோம்
நமது அங்கங்களின் பிணைப்பின் காலம்
ஆதியிலும் ஆதியின் சுருக்கம் நிரம்பிய உடலென்று சொன்னோம்
உண்மையல்லவென்றால் நமது பாவனைகளில் என்னதான் ஒளிந்திருக்கிறது
உண்மையல்லவென்றால் நமது விரல்களின் ஒன்றிணைவில் எதுதான் நிலைத்திருக்கிறது
உண்மையல்லவென்றால் நமது அகத்தின் கண்ணாடிகளில் எவைதான் ஒளிர்கின்றன
வெய்யிலைக் குடித்தே மலர்கள் மஞ்சள் நிறத்தை அடைகின்றன
வெய்யிலைக் குடித்தே தும்பிகள் தலை கிறுகிறுத்துத் திரிகின்றன
பிரிவுக் காலத்தின் வெய்யிலைக் குடிக்கும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு தும்பியென
பிரிவுக் காலத்தின் வெய்யிலைக் குடிக்கும் ஒவ்வொரு மலரும் மஞ்சள் நிறத்திலுமாக மலர்வதையும்
தேநீர்க் கோப்பையின் முன்னே விவாதித்தோம்
எல்லா மலர்களும் காதலின் மொழியில் சொற்கள்
எல்லா நதிகளும் காதலின் குரலில் பாக்கள்
எல்லா மலைகளும் காதலின் கற்களில் அரண்
உடைகளைக் கவனித்தோமா
அவை திசைக்கொன்றாக சிதறியதை அறிந்தோமா
நிர்வாணத்தில் நாம் முகமூடிகள் இழந்தோம்
நிர்வாணத்தில் எழிலென்ற ஒன்றை அறிந்தோம்
நிர்வாணத்தில் இலைகள் பேசும் இரகசியங்களைக் கேட்டோம்
நமது அறைகளின் மிதக்கும் கலன்களுக்குக்கு இடையே
தூரத்து இரயில் ஓசை தடமிடுவதைக் கேட்டோம்
ஒரு பாடலின் முடிவில் ஒரு முத்தமென
ஒவ்வொரு பாடலின் முடிவிற்காகக் காத்திருந்தே இசையறிந்தோம்
உருவற்ற ஓவியத் தீற்றல்களை எழுதிய விரல்களின்
ஒழுங்கற்ற அசைவுகளில் ஊண்பெற்ற ஓவியங்களின் நிறங்களில்
நாம் நம் முகத்தைக் கண்டு நகைத்தோம்
அவை குழந்தைகளைப் போலவும்
நமது பிருட்டங்களைப் போலவும் மென்மையாகவிருந்தன
மலர் ஜாடிகளைப் போலவும் இருந்தன
யானைகளின் கண்களைப் போல சாதுவாகவும்
தெருக்கள்
மனிதர்கள்
நாய்கள்
வாகனங்கள்
எங்கே போயின?
எவற்றில் கவலையுற்று நாம் அவற்றை நாடினோம்
எவற்றை நாடி நாம் அவற்றை மீட்டோம்
எவற்றை மீட்டு நாம் அவற்றை உயிர்ப்பித்தோம்
பித்தேறிய நமது சந்திப்பின் காலக்கணக்குப் பிசகிய சங்கேதங்களன்றி
மூப்பறியாத நமது அகால விளையாட்டுக்களின் விதிகளற்ற போட்டிகளன்றி
இரவே ஒழுங்கென்றும் பகலே ஒரு விபத்தென்றும் நாம் உணர்ந்தோம்
ரொம்பவே பழையதென்றாலும்
காதலே வாழ்வென்றும் பிரிவே சாதலென்றும் நாம் விவாதித்தோம்
பிரிவிலே உடல் எலும்புகளாலான கூடாகிறது
கைகளில் வளை தங்காத நங்கைகள் நம் மூதாய்கள்
அவர்களே காதலின் விதிகளை நமக்குப் போதித்தவர்கள்
நாமோ அவர்களை மீறத் துடிக்கிறோம்
எதுவுமே பெரிதில்லை நம் காதலைத் தவிர என்கிறோம்
முன்சென்றவர்களில் எவருமே பெரியவரில்லை என்கிறோம்
இன்றோ என்னிடத்தில் ஒரு புகைப்படமும் இல்லை
உனது எண்ணும் மின்னஞ்சலும்
உனது திசையின் பெயரும் தடயமற்றுக் கிடக்க
எமது கிழக்கிலே ஒவ்வொரு காலையும் கதிர் எழுகிறது
அதனிடத்திலே ஓர் ஏளனம்
அது ஒருபோதும் என்னைக் கவனிப்பதில்லை
ஜஸ்டின் பெய்பரின் பாடலொன்றைப் பாடியாவது
அல்லது
அகப்பாடலொன்றை வாசித்தாவது
நமது காதலின் பழைய ரேகைகளை உயிர்ப்பிக்கச் செய்கிறேன்
புளூஸ் இசையில் இரவைத் துளைக்க
பியானோக் கட்டைகளின் அசைவுகளில் நினைவுகளைக் கொல்ல
ஒவ்வொரு இரவிலும் தேர்ச்சியுற்று மற்றொரு இரவில் தோல்வியுறுகிறேன்
மூன்லைட் சொனாட்டா மெதுவாக அசைகிறது
முலைகளின் நடனமொப்ப அல்லது
காற்று உலர்த்தும் ஆடையென
மிகவும் ஏதேதோ காதலின் பருவத்தில் அடையாளம் காணாத நிழலில் மனிதரின் சுவடாகவும் விலங்கின் ஒத்தடாமாகவும் நிரம்பிய கவிதை / கவிஞர் மிகவும் அன்றலர்ந்த மகிழ்ச்சி / வாழ்த்துகள்