1.
அப்போதுதான் அதிசயமாக
யாரோ பாதி புகைத்து எறிந்த சிகரெட் அது
வேறுவழியில்லாமல் அன்றைக்குதான்
முதன்முதலாக அதை முயற்சித்தேன்
மற்றபடி உன் அரண்மனைகள் இடிந்துவிழுந்ததுப் பற்றி
எனக்கெதுவும் தெரியாது.
2.
யார் சொல்வதற்கு முன்பும்
முந்திக்கொண்டு நான் என்னை வெறுப்பதாகச்
சொல்லிவிடுகிறேன்
இருந்தாலும் ஒரு தடவை அவர்களும்
அதை சொல்லிவிடுகிறார்கள்
நான் எப்போதுதான் பூமியின் மையத்தை எட்டுவது.
3.
ஒரேயொரு வீட்டிற்குள் மட்டும்
எப்போதும் நுழைய முடியாதென்பது
அந்த தெருவை என்னிடமிருந்து அந்நியமாக்குகிறது
சாதாரணமாக எந்த வீட்டிற்குள்ளும் நுழையலாம் என்பதும்
ஒரு தெருவுக்கான அம்சமாக இருக்கிறது
எங்கே போனாலும் இப்படியொரு வீடிருக்கிறது
கரையோடு அடித்துச்சென்று
எல்லா நம்பிக்கைகளின் முன்னாலும்
என்னை குற்றவாளியாய் நிற்கச் செய்வதாக.
4.
கற்களின் முன்னால் விடாமல் நமது பிரார்த்தனைகள்
தொடர வேண்டியதுதான்
நமது இன்னல்களின் மூலம் அவை புன்சிரிப்பு தவழும்
கடவுளாக மாறிக்கொள்ளும்
5.
ஆசிரியர் குறிப்புகளில்
அந்த நூலின் ஆசிரியன் இருப்பதில்லை.
6.
மனிதர்களின் ஏதோ ஒரு கண்டுபிடிப்பு வழியாகவே
என் மரணத்தை நிகழ்த்திக்கொள்ள முடியும்
எவ்வளவு அப்பட்டமாக நான் பழிவாங்கப்படுகிறேன் என்பதற்கு
வேறென்ன உதாரணம் வேண்டும்.
7.
கயிறு கட்டி தூக்காமல் அவர்களை பறக்கவிட முடியாதென
எவ்வளவு தாமதமாக தெரிகிறது
கோடிகோடியாய் கொட்டி கொடுக்காவிட்டால்
சவால் விட்டுக்கொண்டிருக்கும் போதே
எதிரிகள் கிளம்பி வீட்டுக்கே போயிருப்பார்களென்பதும்
எவ்வளவு தாமதமாக புரிகிறது
எதுவும் நம் கையிலில்லை என்பதற்கான
உண்மையான பக்கம் தெரியவரும் நேரமிது
காற்றிலேயே பறந்து சென்று தர்மத்தை நிலைநாட்டிவிட்டு
நிலத்தில் தரையிறங்கி ஒரு என்ட்ரன்ஸ் கொடுப்பதற்கு
நான் இந்த தேசவாதிகளை அவ்வளவு விரும்பவில்லை
என்றாலும் பூட்ஸ் தடதடக்க உள்ளே நடந்துகொண்டிருப்பவனுக்கு
அவ்வளவு பெரிய ஷூபழக்கமில்லாததால்
அவ்வப்போது குதிகால் தசை பிசகி கொள்கிறது
அவனே வந்து அழைத்துப்போகும் வரை எங்கேயும் நகர மாட்டேனென்று
மழையிலேயே நனைந்தவாறு நின்றுவிடும் பிடிவாதமான
காதலிகள் அவனுக்குக் கிடையாது.
ஞா.தியாகராஜன்.