சமர்த்தனான கவலை
ஒரு மலினமான கவலையைப்
பெரும் பம்மாத்துடன்
செல்லம் கொஞ்சி
ஞாபக புறவெளியின்
தென்படாத
தூரத்திற்கு தொலைத்துவிட்டு
வந்தேன்
என் மனக்கதகதப்பின்
வீச்சத்தை நுகர்ந்துகொண்டு
எப்படியோ மீண்டும்
வந்துவிட்டதது
குளிப்பாட்டிவைத்த
என் மனவீட்டுக்குள்ளேயே
வாலைக் குழைத்து குழைத்து
நிரபராத முகத்தோடு
என் கால்களை நக்கி
‘என் எஜமானனே…’
என்றேகுகிறது
என்னிடம்.
இனி கல்லெடுப்பதா ?
கறிபோடுவதா ? என்ற
ஒரே குழப்ப வெறியில்
கொப்பூழ் சுற்றி
ஊசிகள் போட்டுக்கொண்டேன்
சோகம் பூண்டி கவிழும்
கிளிசரின் கண்ணீரோடு
என் தலைமாட்டில் படுத்துக்கொண்டு
என்னிடம் தொடர்ந்து
பரிதாபம் சம்பாதித்துக்கொண்டிருக்கும்
வெகு சமர்த்தனான
என் அகவஸ்து கவலை,
என்னைத் திரும்பி பார்க்கவைக்க
வின்னுலக வீதியின் விளிம்புவரை
வந்தெனை சோதிக்கும் வல்லமைகொண்டதென்பதை
அதன் வாலசைவில் நானறிவேன்.
புதுத்தாய் நோம்பு
இவள் மாராப்புக்கு
ஊசி பாசி விற்கும்
பெண்ணொருத்தியின்
மார்புத்தூளியில் உறங்கும்
குழந்தையின் கனம்.
நாயும் பூனையும் இவள் வீட்டைச்சுற்றிதான்
ஏகாந்த இடமொன்றை தேர்ந்தெடுக்கின்றன
தம் ஈத்துக்கு
அதனதன் குட்டிகளின்
முதல் சினுங்கல்கள்
இவளுக்குத்தான் செவிமடுகிறது
முதலில்
குழந்தைகள் பாட்டமாக
இவள் வாசலில்தான் கூச்சலிட்டு விளையாடி களேபரம் செய்கிறார்கள்
இவளிடும் கோலத்தில் அப்படியென்ன
ஊட்டச்சத்தோ !
திருவிழா ஒன்று
களைக்கட்டுவதுபோல்
எறும்புக்கூட்டம் அலைமோதுகிறது
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
அழுகைச் சத்தம்
இவள் மார்பை என்னமோ செய்து பிசைகிறது
கணவனின் தூசி விழுந்த கண்களுக்கு
தன் தங்கையிடம்
தாய்ப்பால் கேட்கச் சென்று
பாதியில் வீடு திரும்புகிறாள்
தூர்வாரும் முற்றத்துக்கிணற்றில்
நல்லதங்காள் வீசிய குழந்தைகளில் ஒன்று அடிக்கடி
‘அம்மா … அம்மா… ‘ என்றழைத்து இவள் உதட்டில் பிதற்றுக்கிறது
குழந்தையின் எச்சில் துமியும் படாத
மார்புக்காம்புகளவளது
மாமாந்தம் தோறும் வாங்கி உண்ட ஒளடதங்களின் கொலு
மருத்துவரின் அறிவுரைப்படி
ஒருவழியாக குறைந்துவர
திருமணமான நான்கு ஆண்டுகளில்
மூன்று கருச்சிதைவுற்றவள்
சம்போகத்தின் மூர்ச்சையில்
காம சுவாதீனமற்று
உயிர் நீத்துக்கொண்டே
உயிர் நீர்மம் ஜனித்துக்கொண்டிருந்தாள்
மீண்டுமொருமுறை
தன் புதுத்தாய் நோம்பிற்கு.
டப்பிங்
சிலநேரம் தூக்கம் வராமல்
நினைவுகள் நடுநிசிவரை சென்றுவிடும்
அப்போது சன்னமாக
நாய் வாயசைக்கத்தொடங்கும்
என் குணத்திற்குப் பொருந்திப்போகாத
யார் யாரோ என் நினைவுக்கு வந்து
என்னோடு பேச்சுக் கொடுக்கத் துவங்கியதும்
நாயின் வாயசைப்பு ஆங்காரமாகிக்கொண்டிருக்கும்
எனக்கெதிரான
நினைவு உருவங்களுக்கு
நானும் ,
எனக்கு வீதியிலிருந்துகொண்டு
நாயும்
வாயசைத்துக்கொண்டிருப்போம்
யாரோ ஒருவர் திடீரென கல்லைக்கொண்டு வீதி நாயின்மீது
எறிந்து விட்டு பேசாமல் போய்விடுவார்
என் உருவக பிரதிவாதி
அல்லது
நான்
தூங்கத் தொடங்கியிருப்போம்
என் மூக்கை நக்கித் தன்னைக்
குழைந்துகொடுக்க
நிசியை மோப்பம் பிடித்துக்கொண்டு
ஓடிவரும் கிழக்கின் ஒளிக்கு
எனக்காக வாயசைக்கும்
அந்த ஞமலியின் நிறம்
வேலைக்குப் புறப்படும்போது
வாலைச் சுருட்டிக்கொண்டு
வாசலில் களைப்பாக
உறங்கிக்கொண்டிருக்கும்
நாயின் தொண்டையைப்
பார்வைகளால் நீவி
தட்டிக்கொடுத்துவிட்டுப்போகும்
என் மனம்.
இரவுவரை அது எனக்காகவே காத்திருக்கும்
எனக்காக வாயசைக்க
அல்லது
குரல்கொடுக்க என்றும் சொல்லலாம்
தினமும் என்னைப்போல் யாருக்காவது
டப்பிங் கொடுத்துக்கொண்டிருக்கும்
நாயைப்பார்த்துக்
கதைக்கட்டுகிறார்கள் இப்படி.
இறந்துபோன,
அதிக வட்டிக்கு கடன் கொடுக்கும் பரமசிவன் ஆவியைத்தான்
அது குரைக்கிறதென்று.
அவரிடம்
நான் கூட வாங்கியிருக்கிறேனே
ரூபாய் பத்தாயிரம் பத்து வட்டிக்கு!!!
குளிரவைக்கும் ஒளி
ஒரு பிரளய ஒளியைக் கடந்துவர
கனலியொளியைக் கடந்து வர
அதன் நிழலொளியைக்
கடந்து வர
நியான் ஒளிகளைக்
கடந்து வர
வீதிகளின் டங்ஸ்டன்
ஒளிகளை கடந்து வர
வீட்டின் பூஜையறையில்
நுழைகிறாள்
வந்தவளை அருகு வரவேற்று
ஆர அமர எதிரமர்த்தி
பற்றற்ற
தீபக் கடைச்சொட்டு ஒளியில்,
பாவும்
சுண்டிய வெளிச்சத்தின்
நிச்சலனம்,
மெல்ல
குளிரவைக்கத் தொடங்கியது
அவள் ரொக்கப்பருவத்தின்
ஒவ்வொரு இரவையும்
இருண்மையையும்.
————————————————————————————————————————————–
ச. அர்ஜூன்ராச்
[email protected]