ஸ்வீடிஷ் எழுத்தாளர் பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பொராபஸ் (1950) என்ற நோபல் பரிசு பெற்ற நாவலை க.நா.சு அன்புவழி என்று தமிழில் மொழி பெயர்த்திருந்தார். இதைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருந்தாலும் முழுமையாக இப்போதுதான் படிக்கிறேன்.
இதைப் போல ஒரு நாவலை எழுதிவிட முடியாதா என்று வண்ணநிலவன் சொன்னது பல இடங்களில் படிக்க கிடைக்கிறது. (என்னுடைய தேடலில் தமிழில், குறிப்பு செய்திகளாகவும், பொத்தாம் பொதுவான பத்திகளாகவும் மட்டுமே இணையத்தில் கிடைத்தது. விரிவான தமிழ் பதிவுகள் இருப்பின் தயவு செய்து தெரிவியுங்கள்.)
பொராபஸ் என்ற மூல நாவல் தலைப்பை ‘அன்புவழி’ என்று மொழி பெயர்த்திருப்பதை வாசகனுக்கான எளிமைப் படுத்தல் என்றே எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. முரண்களை வைத்து இயங்கிச் செல்லும் இந்த நாவலில், காற்றில் ஆடும் தராசுத் தட்டுகளைப் போன்று மாறி மாறி தனது தரப்பை இருவித நம்பிக்கைகள், கைவிடாமல் உரையாடிப்போகின்றன.
பொராபஸ் என்பவன் வரலாறா, நம்பிக்கையா? ஏனென்றால் படிக்கும்போது இந்த பாத்திரத்தை கற்பனை பாத்திரமாக பார்க்க வேண்டுமா, மரபின் நிஜமாக பார்க்கவேண்டுமா என்று வகுத்துக் கொள்ள உதவும். விவிலியம் தனது நற்செய்தி கதைகளில் ஒன்றாக பொராபஸ் பற்றி சொல்வதால், நற்செய்தியை நம்பும்போது பொராபஸ் என்பவனை நிச்சயமாக நம்பியே படிக்கவேண்டும். ஒருவிதமாக ஒப்புமை புரிதலுக்காக இரணியனைப் போல என்று சொல்லலாம். எதிர்த்தரப்பின் வீரியம் விரிந்து நேர்மறைக்குள் ஒடுங்கும் நிலை.
ஒரு நல்ல நாவல் வெறும் கதையை சொல்வதில்லை. சொல்லவும் கூடாது. கதைக்கு ஊடாக இருக்கும் வெளிகளில் வாசகனை யோசிக்கத் தூண்டவேண்டும். அந்த யோசனை பற்றிய சுயதெளிவுக்கு அவன் நாவலை தாண்டி எங்கெங்கோ சென்று பலவற்றை அறிந்து கொள்ளவேண்டும். உடன்பட்டும், எதிர்பட்டும். மிக குறைந்த பக்கங்களில் – சுமார் 150 – ஒரு நோபல் நாவல் என்பதே இதன் சான்று. லாகர்க்விஸ்ட் வைதீகமான தனது குடும்ப சூழலில் அதை நம்ப முடியாமலும் அதே சமயம் தவிர்க்கவும் முடியாத மனநிலையில் இருந்திருக்கிறார் என்று பிரம்மராஜன் சொல்கிறார். ஆகவே இது பொருண்மை மிக்க நாவல்தான்.
மரபுகள் கட்டமைத்த அறவழிக் ‘காதை’-களை மறுபார்வைக்கு உட்படுத்துவதை நவீனம் செய்கிறது. பாஞ்சாலியைக் குறித்த பாரதியின் பார்வை முதல், அகலிகை குறித்த புதுமைப்பித்தனின் பார்வை வரை. தனது அன்றாட வாழ்வின் இயலாமை, சிக்கல் மற்றும் அழுத்தத்தில் உழலும் நவீனன் (நகுலன் மன்னிப்பாராக) மரபின் விழுமியங்களை உரசிப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். எதிர்ப்பது அவன் நோக்கமல்ல. மறுப்பதே. அது அவனது அன்றாடத்தின் அழுத்தத்தில் விளைவது. ஆக்கபூர்வமான ஒருவனின் முரண்படுதலில், வெற்றுவெறுப்புகளை காண முடியாது என்பதே நவீனத்தின் ஒரு பண்பாக இருக்க கூடும்.
ரோம ராம்ராஜ்யத்தில் பஸ்கா விருந்தின் போது மரணதண்டனை குற்றவாளி ஒருவன் விடுதலை செய்யப்படுவான் என்ற விதிப்படி (விதி .. எவ்வளவு சரியான வார்த்தை! மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன் போல) பொராபஸ் விடுதலை ஆகிறான். அவனுக்கு பதிலாக இயேசு சிலுவையில் அறையப்பட்டு, விடுதலைக்கு பின் பொராபஸ் என்ன மனநிலையில் இருக்க நேர்கிறான் என்பதே நாவல்.
அன்புவழி என்ற நாவலின் தோராயமான சுருக்கம் இங்கே பதிகிறேன். முன்பே படித்தவர்கள் அல்லது சுருக்கம் வேண்டாம் என்பவர்கள் ‘நாவலின் சம்பவங்களும் அனுமானங்களும்’ எனும் தொடரும் பத்தியில் வந்து இணைந்து கொள்ளலாம்.
அன்பு வழி – கநாசு
பொராபஸ் என்ற குற்றவாளி விடுதலை செய்யப்பட்டு, இயேசு அவனுக்கு பதிலாக சிலுவையில் அறையப்படுகிறார். தனக்கு பதிலாக மரணத்தை எதிர்கொண்ட அந்த குற்றவாளி யார் என்று மறைவில் நின்று பொராபஸ் பார்க்கிறான். இருள் கவிழும் பகலையும், பலவீனமான உடலுடன் மார்பில் உரோமம் இல்லாத நலிந்த ஒருவன் சிலுவையில் மரணிப்பதையும், அவனுக்கு முன்னே ஒரு பெண் இறுக்கமான முகத்துடன் ஆனால் அவனை பற்றிய நம்பிக்கையுடன் இருப்பதையும் கவனிக்கிறான்.
பிறகு இறுகிய மௌனத்துடன் ஊருக்குள் திரிகிறான். பருத்த உடல் கொண்ட ஒரு பெண்ணிடம் காம உறவில் திளைக்கிறான். பிறகு உதடு பிளவு கொண்ட ஒரு பெண்ணிடம் பழகுகிறான். ஊரிலுள்ள முதியவர் ஒருவரிடம் கொஞ்சம் பேசுகிறான். அவர் அதிசயத்தை நடத்தும் தனது குரு சிலுவையில் மரணித்ததை பற்றி உயர்வாக சொல்கிறார். இவன் நம்பிக்கை இல்லாமலே அதை கேட்கிறான். ஊரார் வந்து அந்த முதியவரிடம் பொராபஸ்தான் விடுதலை பெற்றவன். இவனுக்கு பதிலாகத்தான் இயேசு சிலுவையை ஏற்றார் என்று சொன்னதும் அவர் முகம் சுளித்து வெளியேறுகிறார். இயேசுவின் அதிசயம் பற்றி, உயிர்த்து மீண்டது பற்றி உதடு பிளவு கொண்ட பெண் சொல்வதையும் அவனால் நம்ப முடியிவில்லை. இறப்புக்கு பின் இயேசுவால் எழுப்பப்பட்ட ஒருவனை தேடி சென்று விசாரிக்கிறான். அவன் தனது நிஜ அனுபவத்தை சொல்கிறான். அப்போதும் இவனுக்கு நம்பிக்கை பிறப்பதில்லை.
தன்னையே காப்பாற்றிக் கொள்ளாத ஒருவர் எப்படி கடவுள் ஆக முடியும் என்றே அடிக்கடி கேட்டுக்கொள்கிறான். அவர் என்ன சொன்னார் என்றால் அன்பு செய் என்றே சொன்னார் என்கிறாள் அவள்.
புதிய கடவுளின் அதிசயத்தை பற்றி அவள் சொன்னாள் என்பதால், மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் அவளை சமூகம் ஒரு பள்ளத்தில் நிறுத்தி கல்லால் அடித்துக் கொல்கிறது. ஒரு பார்வையற்ற முதியவரின் பேச்சை சாட்சியாக வைத்து முதல் கல்லை அவரை வீச சொல்ல, கண் தெரியாத அவரால் வீச முடியாமல் போக, வேறு ஒரு ஆள் வந்து கை பிடித்து வீசுகிறான். பிறகு அனைவரும் கல்வீச கல்லடிபட்டு அந்தப் பெண், கடவுளை இறைஞ்சியபடியே சாகிறாள். இந்த கலவரத்தின் நடுவே, முதியவனுக்கு உதவிய அவனை பொராபஸ் கத்தியால் குத்தி சப்தமின்றி கொன்றுவிடுகிறான். பிறகு இரவில் வந்து அவளை நீண்ட தூரம் சுமந்து சென்று அவள் குழந்தை புதைக்கப்பட்ட கல்லறையில் அதனருகே அடக்கம் செய்கிறான்.
அந்த ஊரை விட்டு வெளியேறும் அவன் மீண்டும் சிறைப்படுகிறான். ஒரு இருள் சுரங்கத்தில் சஹாக் என்ற அடிமை ஒருவனோடு சங்கிலியால் இணைத்து கட்டப்பட்டு இருவரும் கூட்டாக அடிமை வேலை செய்கின்றனர். போராபாஸ் மிகமிகக் குறைவாக பேசுகிறான். சஹாக்கிற்கு போராபாஸ் யார் என்று தெரியாது. ஆனால் சஹாக் இயேசுவை தனது கடவுளாக ஏற்றிருப்பவன். இருள் மூலையில் மண்டியிட்டு தொழும் சஹாக்கை காணும் பொராபஸ் மெதுவாக அவனிடம் பேச்சு கொடுக்கிறான். இயேசு நம்பிக்கை பற்றி சொல்லும் அவன் கழுத்தில் உள்ள அடிமைத் தாலியை காட்டி அதன் பின்புறம் கீறலாக எழுதப்பட்ட எழுத்துருவை காட்டுகிறான். அதுவே தன் கடவுள் என்கிறான். அப்போது இயேசு மரித்ததை தான் நேரில் கண்டதை, உயிர்த்தெழுந்ததை சொல்லும் பாரபாஸ் மீது சஹாக் பேரன்பு கொள்கிறான். பொராபஸ் கழுத்தில் உள்ள அடிமைத் தாலியிலும் அப்படி கீறி விடுகிறான் சஹாக். சுரங்கத்தின் அடிமையோட்டி சஹாக்கின் பிரார்த்தனை, புதிய கடவுள் பற்றி அறிந்து கொண்டாலும் உடன்படுபவன் ஆகாமல் இருக்கிறான். ஆனால் அவன் சஹாக்கை சுரங்கத்தின் கொடுமையான வேலையிலிருந்து சற்று மீண்டு நிலப்பரப்பில் உள்ள அடிமை வேலைக்கு செல்ல உத்தரவிடுகிறான். அப்போது சஹாக் தனது சகாவான பொராபஸ்ஸையும் தன்னுடன் விடுவித்தால் மட்டுமே தான் செல்ல உடன்படுவதாக சொல்கிறான். பொராபஸ் அவனுடன் சுரங்கத்திலிருந்து விடுதலை பெறுகிறான். பசுமை நிறைந்த நிலப்பரப்பில் கழுதைகளுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் அடிமைகளாக இருவரும் வேலை செய்கின்றனர் – சங்கிலி பிணைப்புகள் இல்லாமல். கொடும் சுரங்கத்திலிருந்து வெளிவந்தது இயேசுவின் மகிமை என்று சஹாக் நம்புகிறான். தான் வெளிவந்தது சஹாக்கின் உதவியால் என்று பொராபஸ் நம்புகிறான்.
ஒருநாள் கவர்னர் இந்த இரு அடிமைகளையும் அழைத்து ஆள் விடுகிறார். சஹாக் அடிமைத் தாலியின் பின்புறம் உள்ள கீறப்பட்ட பெயரை இயேசு கிறிஸ்து என்று படிக்கிறார். நீ ரோம அரசர் சீசருக்கு அடிமையா? கடவுளுக்கு அடிமையா? என்று கேட்க “நான் கடவுளின் அடிமை” என்கிறான். அவன் சிலுவையில் அறியப்படுகிறான். அதே போன்ற தாலியை அணிந்திருக்கும் பொராபஸ்ஸிடம் அவன் கடவுளின் அடிமையா என்று கேட்கும்போது இல்லை என்று தலை அசைக்கிறான். சுட்டெரிப்பது போன்ற சஹாக்கின் பார்வையை தவிர்க்கிறான். தாலியில் கிறிஸ்துவின் பெயர் ஈட்டியால் கீறி அடிக்கப்படுகிறது. அதாவது அவன் இயேசுவை நம்பும் ஆள் இல்லை. சஹாக் சிலுவையில் அறையப்படுவதையும் புதர் மறைவில் இருந்து பொராபஸ் பார்க்கிறான்.
பிறகு மாவு அரைக்கும் இயந்திர அடிமை வேலையில் இருக்கிறான். ரோம் நகரத்தின் வீடுகள் தீப்பற்றி எரிகின்றன. அதை கிறித்தவர்கள்தான் செய்தனர் என்று சொல்கிறது ரோம் அரசு. அதிசயம் செய்யும் கடவுளான கிறிஸ்துதான் எதிரிகளை தீயில் அழிக்கிறார் என்று எண்ணி பொராபஸ் தானும் பல வீடுகளுக்கு தீ வைக்கிறான். கிறித்தவர்கள் அனைவரும் ஒரு இருள் குகையில் அடைக்கப்படுகின்றனர். அடிமை ஒட்டி வந்து கிறித்தவர்களை பழி சொல்லும்போது அவர்கள் ஒருபோதும் தாம் அதை செய்யவில்லை. தமது கடவுள் அன்பு செய்வதையே உபதேசிப்பவர் என்கிறார்கள். அதோ இருக்கிறானே என்று பொரபாஸ்ஸை காட்டி அவன் தீ வைக்கும்போது பிடிபட்டவன் அவன் தாலியில் இருக்கும் பெயர் படியுங்கள் என்கிறான். ஒரு முதியவர் வந்து படித்து சொல்கிறார். அதன் மீது அந்த பெயர் அடிக்கப்பட்டு இருப்பதை அவன் வெளிச்சத்தில் பார்க்கிறான்.
இறுதியாக இயேசுவை நம்பும் அனைத்து அடிமைகளும் சிலுவையில் அறையப் படுகின்றனர். இரண்டிரண்டு பேராக அனுப்ப படுகையில் ஒற்றைப் படை எண்ணிக்கையில் அந்த கும்பல் இருப்பதால், இறுதியாக பொராபஸ் தனியாக சிலுவையில் அறியப்படுகிறான். அந்த குன்றில் வியாபித்திருக்கும் இருளிடம் பேசுகிறான். எனது ஆன்மாவை உனக்கு ஒப்படைக்கிறேன் என்று சொல்லிச் சாகிறான்.
நாவலின் சம்பவங்களும் அனுமானங்களும்
நாவல் ஆரவாரமற்ற மொழியில் பயணிக்கிறது (க.நா.சு என்பதாலோ ). ஆகவே விரைவாக படித்து சென்று, நின்று கவனிக்கும் சாத்தியங்கள் குறையக்கூடும். நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின்மை இரண்டுக்குமான தொடர் உரையாடலை பொராபஸ் என்ற அடிமையின் மனதின் வழியே வெளிச்சப் படுத்துகிறார் லாகர்க்விஸ்ட். சுவாரசியம் என்னவென்றால், நாவல் முழுதும் பொராபஸ் பேசுவதை தவிர்ப்பவன். நாவல் முடிந்தவுடன் மனக்கிளர்ச்சி அல்லது கனம் என்பதெல்லாம் இதில் கிடைப்பதில்லை. கேள்விகளும் யோசனைகளுமே.
நாவலில் பெரும்பாலும் ‘அந்த குற்றவாளி’ என்றே இயேசு குறிப்பிடப்படுகிறார். அவரை நம்பும் மக்கள் அவரை குரு என்கின்றனர். தம் கடவுள் என்கின்றனர்.
இயேசு சிலுவையுருவதை, இருள் சூழ்ந்ததை, நேரில் கண்டபோதும், அதனால் பாதிப்பு இல்லாமல் அவரை கடவுள் என்று நம்ப மறுக்கும் பொராபஸ் ஒரு புறம். அவர் மரணித்தபோது இருள் சூழ்ந்தது என்ற செவிவழி செய்தியையே வைத்து பெருநம்பிக்கை கொள்ளும் சாமானியர்கள் ஒருபுறம். இந்த உரையாடலை தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகிறார் லாகர்க்விஸ்ட். சில சம்பவங்கள், சில பாத்திர அமைப்புகள் மற்றும் வார்த்தைகள் வழியே அவர் குறிப்பாக சிலவற்றை வைத்திருப்பதாகப் படிக்க நிறைய இடமிருக்கிறது.
இந்த நாவலில் எல்லா இடத்திலும் நம்பிக்கை என்ற பதத்தையே க.நா.சு பயன்படுத்துகிறார். ஆனால் belief என்ற நம்பிக்கை, faith என்ற நம்பிக்கை – அதாவது விஸ்வாசம் – இரண்டும் ஒன்றல்ல. பொராபஸ் நம்பிக்கை என்று சொல்வதும், சஹாக் நம்பிக்கை என்று சொல்வதும் ஒன்றன்று.
உதாரணமாக – இயேசு உயிர்த்து எழுவார் என்று நம்பி உதடு பிளவுண்ட பெண் கொல்கோதா குன்றுக்கு சென்று மண்டியிட்டு பிராத்தனையில் இருக்கிறாள். இவனும் மறைவில் இருந்து பார்க்கிறான். வானில் இருந்து ஒளி தோன்றி அடக்கம் செய்யப்பட கல்லை புரட்டி அவர் மீட்கப் பட்டார் என்கிறாள் அவள். ஆனால் கல்லறையின் மேல் மூடிய கல் புரட்டப்பட்டு இருப்பதை மட்டுமே அவன் பார்க்கிறான். கல்லைப் புரட்டி அவரது விசுவாசிகள் அவரை வேறெங்கோ கொண்டு போயிருப்பார்கள் என்றுதான் அவன் நினைத்துக் கொண்டு திரும்புகிறான். அந்த பெண்ணுக்கு இருந்தது விசுவாச நம்பகம். அவனுக்கு இருந்தது புலனுக்கு ருசுப்படும் நம்பிக்கை மட்டுமே. ஒரே இடத்தில் ஒரே விஷயத்துக்காக வந்திருக்கும் இருவருக்கு தோன்றும் விஷயங்கள் வெவ்வேறாக இருக்கிறன. ஒன்று காட்சி. மற்றொன்று அனுபவம்.
நாவலில் நம்பிக்கையற்ற பொராபஸும், விசுவாசமுள்ள சஹாக்கும் ஒரே சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டு அடிமை வேலைகளை செய்கின்றனர். ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதே இல்லை. அரிதாக ஓரிரு சொற்கள்தான். நம்பிக்கையும் நம்பிக்கையின்மையும் எப்போதும் ஒன்றோடொன்று பிணைந்தபடிதான் சமூகத்தில் இருக்கிறன என்று இதை கொள்ள இடமுண்டு. அந்த கொடும்சிறையில் இருந்து சஹாக்கின் தன்மையே விடுதலை தருகிறது. அறிவின் மூலமே தன்னை துளைத்துக் கொண்டிருக்கும் பொராபாஸ் அவனால்தான் விடுபெறுகிறான் என்பதில் ஒரு செய்தியை வைக்கிறார். மேலும் நிலப்பரப்பில் சங்கிலி தளைகள் இல்லாமல் இருந்தாலும், இருப்பது போன்ற நெருக்கத்திலேயே இருவரும் வேலை செய்கின்றனர். மாடுகளுக்கு பதில் இருவரும் பிணையாக உழுதலுக்கு இழுக்கின்றனர்.
கொடும் சுரங்கத்திலிருந்து வெளிவந்தது இயேசுவின் மகிமை என்று சஹாக் நம்பும்போது, சஹாக்தான் தன்னை மீட்டவன் என்று பொராபஸ் எண்ணுகிறான்.
அவனைப் பொறுத்தவரை தனக்கு பதிலாக உயிர்விட்ட இயேசு தன்னைப் போன்றதொரு குற்றவாளி, அவ்வளவே. நாவலின்படி அச்சமயம் இயேசுவின் சிறப்பை பொராபஸ்ஸும், அவனைப் பற்றி அவரும் பரஸ்பரம் ஏதும் அறிந்திருக்கவில்லை. இயேசு மரண சிலுவையை ஏற்கவேண்டும் என்று முடிவு செய்வது பொது மக்கள்தான். அதற்கு, தான் எந்த வகையிலும் பொறுப்பில்லை என்றே நம்புகிறான். அவனிடம் குற்றவுணர்ச்சி ஏதும் இருப்பதில்லை. ஆனால் மரணத்திலிருந்து தப்பி அவன் பெற்றிருக்கவேண்டிய நிம்மதியை அவன் ஒரு நொடி கூட உணர முடிந்ததில்லை. அதற்கு காரணம் தனக்கு பதிலாக உயிர் விட்டவர் சாமானியன் அல்லன். தனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அனைவரும் நம்பி, அனுபவம் மூலம் விசுவாசம் கொள்ளும் ஒரு ஆளுமை. அன்பு செய்வதை மட்டுமே தனது வலிமையாக கொண்டிருக்கும் ஒருவர் என்ற விஷயமே அவனை அலைக்கழிக்கிறது. சாவின் நுனியில் சிலுவையில் தனது இறுதி மூச்சை விடும்போது கூட அவன் விசுவாசியாக ஆவதில்லை. நீதான் அந்த கடவுளை நம்பவில்லையே. பிறகு ஏன் உன் அடிமைத் தாலியில் அவர் பெயர் இருக்கிறது என்று கேட்கும்போது “நம்ப விரும்புகிறேன்” என்று ஒரு வார்த்தை பதில் சொல்கிறான்.
தனிச்சிலுவை
சிலுவையைச் சுமந்து கொண்டு செல்லும் இயேசு உதடு பிளவுண்ட பெண்ணிடம் நீயும் என்னிடம் அதிசயத்தை எதிர்பார்க்கிறாயா என்று கேட்கிறார். அவள் அப்படி எதையும் தான் எதிர்பார்க்கவில்லை என்கிறாள். அவர் தனது கைகளால் பிளவுண்ட அவளது உதட்டை தொடுகிறார். அது அப்படியேதான் இருக்கிறது. பிறகு “நீ எனக்காக ஒரு நாள் சாட்சி சொல்வாய்” என்று சொல்லிவிட்டு போய் குன்றில் மரிக்கிறார். (‘கேளுங்கள் தரப்படும் என்பதை நினைவூட்டுகிறது). அவளது பிளவுண்ட உதடு சரியாவதில்லை. ஆனால் பள்ளத்தில் கல்லடி பட்டு சாகும்போதும் அவள் அருகே உள்ள கடவுளின் உடையை பிடித்து இழுத்து மன்றாடும் திருப்தியிலேயே சாகிறாள். அறிவின் மூலம் கேள்விகளால் அதற்கான பதிலை தேடித் தேடி செல்லும் பொராபஸ் தனியனாக சிலுவையில் மரணிக்கிறான். நம்புபவன், நம்பாதவன் இருவருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் ஒருவருக்கு நிம்மதி மற்றொருவருக்கு தனி சிலுவையில் இருளின் தனிமை.
இயேசுவால் உயிர் மீட்கப்பட்ட ஒருவனை தேடிச் சென்று பேசுகிறான் பொராபஸ். அவன் விவரமாக சொல்கிறான். தனது நம்பிக்கையை உறுதி செய்து அவரது அதிசயத்தை போற்றுகிறான். அவனிடம் மரணம் அடைந்த பின் அவன் சென்ற அனுபவம் பற்றி பொராபஸ் கேட்கும்போது அது ஒன்றுமே இல்லாததாக இருந்தது என்கிறான். இந்த பதிலில் திருப்தி அடையாமல் திரும்பி வந்து விடுகிறான். “சாவு என்பது துரியம். ஒன்றுமில்லை” என்று எழுதுகிறார் க.நா.சு. அறிவின் மூலம் நம்பும் ஒருவன் அனைத்தையும் அதற்கான அளவுகோல்களின் வழியேதான் அளந்து அறிய முயல்கிறான். அது அமையாத போது நம்பிக்கை இன்றி வெளியேறுகிறான். மரணம் என்பது அனுபவம். விசுவாசம் என்பதும் அனுபவம். அதற்கான அளவுகோல்கள் வெளியே இல்லை என்றே நாம் இதை நிரவிக்கொள்ள வேண்டி இருக்கிறது.
இதில் மற்றொரு முக்கிய அம்சம் பொராபஸ் பெற்றோர்கள் இல்லாதவன். ஒரு வேசியின் மகனாக பிறந்து, பிறக்கும்போது அவளை இழந்தவன். அவன் தந்தை யார் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் அவனை தனது தந்தை என்று தெரியாமேலேயே ஒரு சண்டையில் பள்ளத்தில் தள்ளி கொன்று விடுகிறான் பொராபஸ். நாவலில் அவனது தந்தை யார் என்பதை லாகர்விஸ்ட் மட்டுமே அறிந்திருக்கிறார். பிறகு கொள்ளை, கொலை என்று திரியும் அவனுக்கு அன்பு என்பதன் அடையாளம் தெரியாது. அதனால்தான் ஒரு அன்பு சிலுவையில் மரணித்தபோது கூட வெறும் சம்பவமாகவே அவனுக்கு தெரிகிறது.
கடவுளின் அதிசயம் பற்றி, உயிர்த்து எழுந்ததை பற்றிய ஆதாரமான நம்பிக்கையோடு இருக்கும் உதடு பிளவுபட்ட பெண்ணை, அரசாங்கம் குற்றவாளி என்கிறது. அதற்குச் சாட்சி பார்வையற்ற ஒரு முதியவன். இதன்மூலம் பார்வையுள்ள ஒருவர் சொன்ன அனுபவத்தை, பார்வை அற்ற ஒருவரின் வாக்குமூலம் மூலமாக சாட்சியாக்கும் முரண் என்பதாக லாகர்க்விஸ்ட் பூடகமாக சொல்ல வருகிறாரோ என்று எண்ண இடமுண்டு.
சுரங்கத்தின் இருண்ட மூலை ஒன்றில் பிரார்த்தனை செய்வதைப் பார்த்துவிட்டு “இருட்டிலா உன் கடவுள் இருக்கிறார்?” என்று கேட்கும் ஒற்றைக் கண்ணனிடம் “அவர் எங்கும் இருப்பவர்!” எனும் சஹாக்கின் குரலில் பிரஹலாதன் நிழல் படிந்திருப்பதைக் காணலாம். உலகம் எங்கேயும் ஆத்மார்த்தமான நம்பிக்கையின் உள்வைரங்கள் ஒன்றுதான். கிளைப்பின் அடையாளங்கள் மட்டுமே வெவ்வேறு. சுரங்க மூலையில் மண்டி இட்டு பிரார்த்தனை செய்யும் சஹாக் கண்டதும், இறுதியில் சிலுவையில் அறைபட்டு சாகும் பொராபஸ், குன்றில் சூழக் கண்டதும் கரிய இருள். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.
தனது கடவுளை நம்பாமல் மறுக்கும் பொராபஸ் உடனிருக்கையில், தனக்குக் கிடைத்த சுரங்க விடுதலை, சக அடிமைக்கும் தந்தால் மட்டுமே தான் விடுதலையை ஏற்பதாக சொல்லும் அந்த சஹாக்கின் மனம் அன்புவழிப் பட்டது. அதை சாத்தியமாக்குவது அவனது விசுவாசம். அறிவின் எல்லையை, புலன் எல்லையை தாண்டி எழும் அந்த நேயம், அன்பு வழிப்பட்டது. அந்த அன்பு நம்பிக்கை வழிப்பட்டது.
உண்டென்றால் அது உண்டு; இல்லை என்றால் அது இல்லை என்ற கண்ணதாசனை நினைந்து கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் சிலவற்றுக்கு அறுதியான பதில் இல்லை.
—————————————————————————————————————————————–