பழமையான பெரிய கோவில் கோபுரத்தை முதன் முதலில் நுழைவாயிலில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் உயரம் மட்டுமே பிரமிக்க வைப்பதாக இருக்கும். கால இடைவெளியில் அதே கோபுரத்தைச் சற்று பின்னோக்கி தொலைவில் நின்று பார்க்கும்போது அதன் பிரம்மாண்டமும், அதுவரை காணாத விதவிதமான சிலைகளும், அவற்றின் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளும், கலைநயங்களும், அதன் உச்சியில் நிற்கும் கலசங்களும் தென்படுகிறது. தூர இடைவெளியில் மறுபடியும் மறுபடியும் காணும்போது கோபுரத்தின் தத்ரூப அழகை, அருமையை மனதுக்கு இன்னும் நெருக்கமானதாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
மாஸ்டர்களை மறுவாசிப்பு செய்வது அத்தகையதுதான். முதல்முறை வாசிக்கும்போது, ஒரு மிகச்சிறந்த எழுத்தாளரை வாசிக்கிறோம் என்ற பிரமிப்பே அதனுள்ளே இருக்கும் நுட்பங்களைக் கண்டறிவதற்குத் தடையென இருக்கிறது. கால இடைவெளியில் அதே மாஸ்டரை மறுவாசிப்பு செய்யும்போதே காணத்தவறியவை எல்லாம் கண்ணில் படுகின்றன. உண்மையில் மாஸ்டர்களை மறுவாசிப்பு செய்யும்போதே நாம் அவர்களை ஆழ்ந்து உள்வாங்கத் தொடங்குகிறோம்.
தமிழில் இருக்கும் சிறந்த நாவல்களையெல்லாம் படித்துவிட வேண்டுமென்ற ஆவலில் செவ்வியல் ஆக்கங்களாகத் தேடித்தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது தி.ஜாவின் அம்மா வந்தாளை வாசிக்க நேர்ந்தது. இன்ப அதிர்ச்சி அல்லது பரவசம் என இரண்டு வார்த்தைகளால் விவரிக்க முடிந்த அளவிற்குத்தான் முதல் வாசிப்பு அமைந்தது. அதன் பிறகு சில நாட்களுக்கு முன்னர் மறுபடியும் வாசிக்கும்போது இதுவரையும் திறக்காத பல்வேறு திறப்புகளை உண்டுபண்ணியது, பல நுட்பமான இடங்களைக் கண்டடைந்து உள்வாங்கிக் கொள்ளவும் முடிந்தது.
நல்ல இசையும், பெண்மையின் நளினமும், காவிரியின் திவலைகளும் தி.ஜா வின் எழுத்துக்களில் விரவிக்காணப்படும். அவர் படைப்பின் மூலக்கூறுகளாக இம்மூன்று அழகியல் அம்சங்களையும் சொல்லலாம்.
அவரது எழுத்து நடையைப்பற்றி எழுதாமல் அவர் படைப்புகளைப் பற்றிப் பேச இயலாது. இயல்பாக எல்லா எழுத்தையும் போலல்லாமல் ஒவ்வொரு சொல்லையும் பிரத்யேகமாக அலங்கரித்தைப் போன்ற ஒரு நடை அவருடையது. ”நிரம்பித் தளும்பும் அழகு” என்று அவரது எழுத்துநடையைப் பற்றிச் சொல்லலாம்.
ஜானகிராமனின் படைப்புகள், மனித மனங்கள் உணர்ச்சி வசப்படுதலை மையமாகக் கொண்டே சித்தரிக்கப்படுபவை. அவ்வகையில் இதுவும் உணர்ச்சியினால் உலகியலை எதிர்கொள்ளத் தத்தளிக்கும் மனம் பற்றிய படைப்புதான்.
ஆசாரங்கள், நியதிகள், அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தலே வாழ்வின் லட்சியம் என்ற நிலையில் ஒரு பாத்திரமும், நியதிகள், சம்பிரதாயக் கட்டுப்பாடுகளை விடவும் மனிதர்களின் உணர்ச்சிகளே அவர்களின் வாழ்வுநிலையைத் தீர்மானிக்கிறது என்ற நிலையில் ஒரு பாத்திரமும் சித்தரிக்கப்பட்டிருக்கிறது இருவேறு கருத்தோட்டங்களும் வெவ்வேறாகக் கொண்டிருக்கும் இந்த இரு பாத்திரங்களும் அம்மாவும், மகனும் என்பதே கதையின் முரண்.
உறவுகளுடன் கூட்டு வாழ்வு வாழும் சமூக அமைப்பைக் கொண்டிருப்பினும் அவரவர்க்கும் அந்தரங்கமான ஆசாபாசங்கள் உள்ளன. இச்சைகள் சம்பிரதாயக் கட்டுப்பாடுகளை மீறும்போது உறவுகளுக்குள் பெரும் மனப்பிரட்டல் ஏற்பட்டுக் கலங்கி நிற்கின்றன, இருந்தபோதும் விடாமல் இச்சை அலைகள் தொடர்ந்து நியதிகளின் கரையை வந்து வந்து சீண்டியபடியேதான் இருக்கின்றது.
உண்மையில் உணர்ச்சிகளுக்கும், நியதிகளுக்கும் இடைப்பட்ட மெல்லிய கோட்டில் நின்றுகொண்டு சிலநேரம் அந்தப் பக்கம், சிலநேரம் இந்தப் பக்கம் எனக் கால் மாற்றி வைத்தும் எந்தப்பக்கமும் நிலையாக ஓரிடத்தில் ஊன்ற இயலாமல் பரிதவித்து மனிதமனம், அந்தரத்தில் நடைபோடுகிறது என்பதுதான் பாசாங்கற்ற உண்மை.
1966 ஆம் வருடம் கிட்டத்தட்ட ஐம்பத்துநான்கு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது இந்நாவல். அம்மா வந்தாள் நாவலை ஒழுக்க மரபுகளை மீறி எழுதிய காரணத்துக்காக தி.ஜானகிராமன் தன் சொந்த கிராமத்திலிருந்து ஊர்விலக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.
எழுதப்பட்ட காலத்தில் எத்தகைய மன அதிர்வை உண்டாக்கியதோ அதே அதிர்வை இன்றும் புதிதாக வாசிக்கும் புது வாசகனுக்கும் ஏற்படுத்தக் கூடியது இந்நாவல். காலம்தான் வேறு உடைகளை மாட்டியிருக்கிறதே தவிர உணர்ச்சிகள் இன்னும் நிர்வாணம் மாறாமல்தானே இருக்கின்றன.
தன் அம்மாவின் விருப்பத்திற்கிணங்க வேதம் படிப்பதையே தன் யோகமாக நினைத்து பதினாறு வருடங்கள் படித்து முடிக்கிறான் அப்பு. சித்தன்குளத்தில் அறுபதைக் கடந்த பவானியம்மாள் நடத்தும் பாடசாலையில் மற்ற பிள்ளைகளை விடவும் அப்பு ஞானத்திலும், ஆற்றலிலும் முன்னுதாரணமான பிள்ளையாக இருப்பதாலேயே அவனுக்கு நல்ல பெயர். படிப்பு முடிந்த கையோடு தான் பிறந்த பட்டணத்திற்குப் புறப்படத் தயாராகிறான் அப்பு.
பாடசாலையில் பவானியம்மாளின் ஒரே துணையென இருக்கும் அவளின் உறவுப்பெண்ணான இந்து, கணவனையிழந்தவள். சிறுவயதிலிருந்தே அப்புவைத் தன் கணவனாக மனதில் வரித்துக்கொண்டு அவன் மீது பெருங்காதலோடு இருக்கிறாள். அவன் ஊருக்கு புறப்படும் சமயத்தில் தன்னுடைய பிரியத்தை அவனிடம் வெளிப்படுத்துகிறாள். அவனுக்குப் புரியவேண்டுமெனத் தன் தேகத்தையும் கொடுக்கத் துணிகிறாள். ஆனால் அப்பு அவளைத் தன் தங்கையைப் போலப் பாவிப்பதாகச் சொல்லி அவளிடமிருந்து விலகுகிறான். அவளை ஏற்றுக்கொண்டால் தான் கற்ற வேதத்துக்கும், தன் அம்மாவுக்கும் செய்யும் துரோகம் என்றும் நினைக்கிறான்.
காண்பவை யாவற்றிலும் தன் அம்மாவையே காணும் அப்புவுக்கு அவன் அம்மாவைப் பற்றிய புனித பிம்பத்தை சலனப்படுத்துவதாக இந்துவின் வார்த்தை ஒன்று அமைதியான குளத்தில் கல்லென வந்து விழுகிறது.
கலங்கிய மனதுடன் வீட்டிற்குச் சென்றடையும் அப்பு அம்மாவைக் கண்டதும் உள்ளச்சமநிலை அடைகிறான். அம்மாவின் அழகின் மீதும், ஆளுமை மீதும் பிரமிப்போடு இருக்கும் அப்புவுக்கு அடிக்கடி அம்மாவைப் பார்க்க வீட்டிற்கு வந்து அதீத உரிமை எடுத்துக்கொள்ளும் சிவசுவுடனான அம்மாவின் உறவு இடியாய் நெஞ்சுக்குள் இறங்குகிறது.
தன்னிடம் வேதம் கற்றுக்கொள்ளும் மிகப்பெரிய அதிகாரிகள், ஜட்ஜ் உள்ளிட்ட மாநகரத்தின் பெரிய மனிதர்களையெல்லாம் தன் வேதபாட வகுப்பில் அதட்டி,மிரட்டக்கூடிய அப்பா தண்டபாணியால் ஏன் அம்மாவை இதுகுறித்து எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை என்ற எண்ணம் அப்புவின் மனதில் அப்பாவின் மீது வெறுப்பையும், கழிவிரக்கத்தையும் ஒருசேர உண்டாக்குகிறது.
அப்புவின் உடன் பிறந்தவர்களான அண்ணன், இரண்டு தம்பிகள், தங்கை, அண்ணனின் மனைவி, சேலத்தில் திருமணமாகிச் சென்ற மூத்த அக்கா என எல்லோருக்கும் சிவசுவுடனான அம்மாவின் பழக்கம் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. மற்றவர்களைப் போல அல்லாமல் தன்னை மட்டும் ஏன் எஸ் கட்டுப்பின்னல் குடுமியும், ஈரிழைத்துண்டுடனும் வேதம் படிக்க அனுப்பினாள் அம்மா என்ற கேள்வியும் அப்புவின் மனதை அரிக்கிறது.
அதற்குப் பதிலாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் தான் செய்த பாவங்களையெல்லாம் அக்னியில் இட்டுப் பொசுக்க வேண்டும் என்பதற்காகவே அப்புவை வேத அக்னியாக வளர்க்க விரும்பியதாகச் சொல்கிறாள் அலங்காரத்தம்மாள். பட்டணத்தில் இருக்க மனமின்றி திரும்பவும் கிராமத்திலிருக்கும் பாடசாலைக்கே திரும்புகிறான் அப்பு. அம்மாவைப் பற்றி அறிந்துகொண்ட கணத்திலேயே இந்துவின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிற அப்பு மானசீகமாக அவளை ஏற்றுக்கொள்ளவும் துவங்குகிறான். அப்புவையும், இந்துவையும் பாடசாலையை நிர்வாகம் செய்வதற்கு உரிமைப் பட்டயம் எழுதுகிறார் பவானியம்மாள். சித்தன்குளத்திற்கு தன் மகனைப் பார்க்க வரும் அலங்காரத்தம்மாள் தன் அருகில் மகன் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்ந்து தன் பாவங்களைப் போக்கிக்கொள்ள காசிக்குப் புறப்படுகிறாள் என்பதோடு நிறைவு பெறுகிறது நாவல்.
மறுவாசிப்பில் புலப்பட்ட பல அம்சங்களில் முக்கியமானது ஜானகிராமனின் வலுவான,அழுத்தமான பாத்திரப் படைப்புகள். ஒரு நல்ல பாத்திரப் படைப்பில் எப்போதும் கதாபாத்திரத்தின் உள்மனம் வெளிப்பட வேண்டும், அப்பாத்திரத்தின் மனவியல் வெளிப்பாடே அதை வலுவானதாகவும், நினைவில் நிற்பதாகவும் ஆக்குகிறது.
நாவலின் பிரதான பாத்திரமான அப்பு சரியான அம்மா பிள்ளை. தாய் சொல்லே வேதமென நினைத்து வேதம் படிப்பதையே தன் பிறவியின் நோக்கமென நம்பும் சமர்த்தன். தான் படித்த வேதத்துக்கும், தாய்க்கும் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்து தன்னை நெருங்கும்போதெல்லாம் அச்சமுற்று தவிர்த்து விலகுகிறவன். அம்மாவின் கம்பீரத்தைப் பார்க்கும்போதெல்லாம் சிம்மாசனம் இல்லாத ராணியாக நினைத்து எப்போதும் பிரமிப்பவன். அம்மா ஏந்தும் புன்னகையும், மலர்ச்சியும் தனக்கே தனக்கானது என்று உருகுபவன். வேதத்தையும், தாயையும் புடம்போட்ட தங்கமென ஒன்றெனப் பாவிக்கும் பக்த மனநிலை அவனுக்கு.
அம்மா அலங்காரத்தம்மாள் நல்ல உயரமும், கம்பீரமும் கொண்ட பேரழகு கொண்டவள். கணவர் தண்டபாணி மனதுக்குள் இவளை எப்படியாவது கட்டியாண்டுவிட வேண்டும் எனப் புலம்பும் அளவிற்கு அழகுடையவள். நிமிர்ந்து நின்றால் கணவருக்கு நிகரான வாட்ட சாட்டம் சாதாரணமாக எல்லாப் பெண்களிடம் காண்பதைவிடவும் எல்லாமே சற்று கூடுதலாக இருக்கும். தன் உடல் மீதான பாலியல் சுதந்திரத்தைத் தானே தேர்ந்தெடுப்பவள். கணவராகவே இருந்தாலும் தனக்கு ஒப்பவில்லையெனில் தாட்சண்யமின்றி ஒதுக்குபவள். தன் சாயலில் பிள்ளைகளிலேயே தன்னைப்போன்ற வாட்ட சாட்டமும், வாகும் கொண்ட அப்புவை வேதவித்தாக ஆக்க விரும்புகிறவள். தன் சொல்லே இறுதியாக இருக்க வேண்டும் என்பதற்குத் தகுந்த தோற்றம் கணவனைக் கூட ஒரு எதிர்ச்சொல் சொல்ல முடியாதவராக ஆக்கிவிடுகிறது.
இந்து பதினெட்டு வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள். ஆனால் கணவனோடு வாழ்ந்த எந்த நினைவுகளுமின்றி சிறுவயதிலிருந்தே தன்னுடைய கணவனாக அப்புவையே மனதில் வரித்துக்கொண்டிருப்பவள். அப்புவிடம் தன் ஆத்மார்த்தமான காதலை, தன் உடலைக் கொண்டே அவனுக்குப் புரியவைக்கும் அளவிற்கு மனவலுவுடையவள்.
இந்த மூன்று கதாபாத்திரங்களின் உள்ளங்களுக்கிடையே நிகழும் மோதல்களும், இவர்களின் மனத்தவிப்பும்தான் அம்மா வந்தாளை மிகுந்த காத்திரமான படைப்பாக ஆக்குகிறது. அலங்காரத்தம்மாள், இந்து ஆகியோரின் தாங்களே சுயமாக உணரும் சுதந்திரமும், நியதிகளை நடுங்கச் செய்யும் நெஞ்சுறுதியும் அதற்கு நேர்மாறானவனாக இருக்கும் அப்புவுக்கு நிம்மதியின்மையை இழைத்துக்கொண்டே இருக்கிறது. உண்மையில் அப்புவின் நிம்மதியின்மைக்கு அவன் நியதிகளின் மீதுகொண்ட உறுதியான நம்பிக்கையே காரணமாக இருக்கிறது. இவர்களோடு தண்டபாணி, பவானியம்மாள் என உப கதாபாத்திரங்களின் தெறிப்புகளில் விழும் சிடுக்குகள் மேலதிக நாடகீய தருணங்களை உருவாக்குகிறது
இந்துவைப் பற்றி எழுதும்போது ‘பளீர்முகம் காதிற்கு சற்று அதிகப்படியாகவே இறங்கின மயிர், கன்னங்கரேலென்று கட்டிய கருப்பு புடவை அது நிறத்தை இன்னும் எடுத்துக் காண்பிக்கும்’ என்று எழுதுகிறார். உயிர்போகும் முன்பு இந்துவின் கணவன் பரசு, பவானியம்மாளிடம் அவளை, தான் இறந்த பிறகு அலங்கோலம் பண்ணாமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக எழுதியிருப்பார். உண்மையில் பெண்களைக் கைம்பெண்ணாக அலங்கோல ரூபத்தில் காண விரும்பாத ஜானகிராமனின் மனம்தான் அது! ஜானகிராமனின் ‘சண்பக மலர்” சிறுகதையில் நெருப்பு போல தகதகவென மின்னும் ஒரு இளம்பெண்ணைப் பற்றி இவள் சாதாரண மானுடப்பிறவியல்ல தேவ அம்சம் பொருந்திய பெண்ணாக அல்லவா இது இருக்கிறது என்று நினைத்துக்கொண்டிருப்பார். அன்று அந்தப் பெண்ணின் கணவன் இறந்துவிட்டதாக துக்க செய்தி வந்து சேரும். பெரியவர் “ஐய்யோ அப்பெண்ணை அவ்வளவு அழகென்று பிரமித்தோமே இப்போது அவள் கணவன் இறந்துபோய்விட்டதால் அவளின் வண்ணங்களையெல்லாம் பிடுங்கிக்கொண்டு வெள்ளைப்புடவையளித்து, தலையை மழித்து அலங்கோலமாய் ஆக்கிவிடுவார்களே என்று வருத்தம் அடைவார். கணவனின் இறுதி காரியத்திற்குச் சென்று வந்த அந்தப் பெண் வழக்கம்போலவே வண்ணப்புடவையும், நீண்ட தலைப்பின்னலுமாக திரும்பினதாக கதையை முடித்திருப்பார். மரப்பசு நாவலிலும் அம்மிணி திருமணத்தை மறுப்பதற்கும் இதே சூழல் இப்படியான ஒரு நிலைப்பாடு.. அதுதான் ஜானகிராமன். பெண்களின் அக உலகை அவர்களின் உணர்வாகவே மாறி சிந்தித்தால் மட்டுமே இப்படி எழுத இயலும். அப்போதிருந்த கடுமையான சம்பிரதாயக் கட்டுப்பாடுகளுக்கிடையே இப்படி எண்ணத்தலைபட்டதே தி.ஜானகிராமனை ஆத்மார்த்தமாக நெருங்கச் செய்கிறது.
நியதிகள் எல்லாம் உணர்ச்சிக்கு முன் ஒன்றுமில்லாமல் போகும் தருணங்களை நாவலின் பல இடங்களில் சுட்டிக்காட்டிக்கொண்டே செல்கிறார் ஜானகிராமன். உதாரணத்திற்கு அப்புவின் மீதான தன்னுடைய காதலுக்கு முன் தன் கணவன் இறந்துபோனதெல்லாம் எள்ளளவும் பெரிதுபடுத்துவதாக இல்லை. தன் உறுதியான நிலைப்பாட்டை அப்புவிடம் வெளிப்படுத்தும் இந்த தருணம் அத்தகையது.
“விவரம் தெரியாத வயசிலே என்னக் கேட்காம என்னைக்கொண்டு தள்ளினா அத்தை. தாலியை கட்டிண்டு போய் இருந்தேன். அவன் போன பிறகும் அங்கேயே இருக்கணும்னு எல்லோரும் சொன்னா. வாயை மூடிண்டு முரண்டு பண்ணினேன். அத்தைக்காக வரலே, ரண்டு வருஷம் வாழ்ந்த வாழ்க்கை ஞாபகம் வருமேன்னும் வரல. நான் உன்னைப் பார்த்திண்டிருக்கலாம்னுதான் வந்தேன்”
அப்புவை நெஞ்சோடு இந்து அணைத்துக்கொள்ளும்போது அந்த ஸ்பரிசம் அவனுக்குள் மிருதுவான குளிர்ந்த உணர்வை ஏற்படுத்துவதாக இருப்பினும் அவனுக்குள் இருக்கும் ஒழுக்க மரபின் நியதிகள் அவனது உடம்பில் பெரிய பச்சைப்புழு ஊர்வதைப்போலத் தோன்றச் செய்கிறது. தான் ஏற்கனவே திருமணமானவள் என்பதாலேயே அப்பு தன்னிடமிருந்து விலகுகிறானோ என நினைத்து “என் உடம்பை கட்டியாண்டா போதுமா? என் உடம்புக்குத்தானே கல்யாணம் ஆச்சு! மனசுக்கு ஆகலயே..புருஷனா நான் உன்னதானே மனசுல நினச்சுண்டிருந்தேன்” என்று சொல்லும்போது நியதிகள், மரபுகள் எல்லாம் கேள்விக்குள்ளாகின்றன.
இந்துவும் அலங்காரத்தம்மாளும் தங்களின் இச்சைகளின் தேவைகளை தாங்களே நிர்ணயிக்கும் இதுபோன்ற இடங்களில் ஒரே உணர்வு நிலையைக் கொண்டவர்கள்தான். அவர்களின் எதிர்பார்ப்புகள் எந்தவகையிலும் சமரசம் இல்லாதவை. அலங்காரத்தம்மாள் தனக்கு வரும் கனவுகளைப் பற்றி கணவர் தண்டபாணிக்குச் சொல்லும்போது கணவர் இப்படி நினைக்கிறார் “அலங்காரத்தின் கனவுகள் வர்ணங்களும், ஒலிகளும், நிறைந்தவை அவள் கனவுகளில் எப்போதும் கோபுரமும், கப்பலும், நகைகளும், வருகின்றன” என்று ஏக்கப்பெருமூச்சு விடுகிறார்.
தண்டபாணி வேதபண்டிதனாக இருப்பினும், மனைவியை அதிர்ந்து ஒருவார்த்தைப் பேசாத மனிதர் என்பதையெல்லாம் பிரக்ஞைபூர்வமாக அறிந்திருந்தும் தன் உடலின் தேவையைத் தானே தீர்மானித்து சிவசுவுடனான உறவைத் தொடர்கிறாள் அலங்காரத்தம்மாள். இது தண்டபாணிக்குத் தெரியவந்தும் கூட அவளை அதைக் காரணம் காட்டிப் பிரிந்துவிட முடியவில்லை அதுதான் அலங்காரத்தம்மாளின் அழகிற்கும் கம்பீரத்திற்குமான வெற்றி. அலங்காரத்தம்மாள் அருகிலிருந்த யாராலும் அவளை நீங்கி இருக்க இயலாத அளவிற்கு அவளிடம் இருந்தது ஒரு பிரத்யேக ஈர்ப்பு. அதை அவள் மமதையாக எடுத்துக்கொள்ளவில்லை. அது அவளுக்கே அவளுக்கென்று பிரத்யேகமாக நிகழக்கூடியது என்பதையும் ஜானகிராமன் உணர்த்துகிறார். இந்தப் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே காரணம். படிப்பவர்களுக்குத் தொடர்ந்து ஒரு அதிர்வை உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது.
சிவசுவினுடனான உறவு இருக்கிறது என்பதற்காக அவனுடன் பணிந்துபோவதும் அவளது இயல்பில் இல்லை. அவன் உடலுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் அவ்வளவுதான். சிவசுவைப் பற்றி அப்புவிடம் அலங்காரத்தம்மாள் சொல்வது இதற்குச் சான்று “பணம் இருக்குன்னு இவாள்ளாம் இப்படித்தான் ஒரு பைசா செலவில்லாம நிம்மதிய வாங்கணும்னு அலைவா” ஆக ஒரு தனிப்பெரும் ஆளுமை செல்வாக்கு நிறைந்த பாத்திரம் அலங்காரத்தம்மாள்.
அலங்காரத்தம்மாளின் பிறழ் உறவை அறிந்துகொண்டு தவித்து, மனம் அலைவுறும் இடத்திலேயே தன் மீதான இந்துவின் காதலை உணரத் தொடங்குகிறான் அப்பு. உண்மையில் அம்மாவின் தரப்பை உள்ளூரப் புரிந்துகொண்டு அதை வெளியே சொல்ல முடியாத உளநிலை. ஒரு மீறலை ஏற்றுக்கொள்வதன் மூலமாக இன்னொரு மீறலின் நியாயத்தைப் புரிந்துகொள்வதுதான் அது!
மரபுகளும் நியதிகளும் சமூகத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாலும், பெரும்பான்மையானவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு பின்பற்றியதாலுமே, எல்லாச் சூழலுக்கும் அவற்றைப் பொருத்திப் பார்க்கலாகாது என்பதை ஜானகிராமன் மிக நுட்பமான சம்பவச் சேர்மானங்களால் உணர்த்திச் செல்கிறார்.
இறுதியாக அப்புவைப் பார்க்க சித்தன்குளம் பாடசாலைக்கு வரும் அலங்காரத்தம்மாளைப் பார்த்து “அம்மா..இத்தனை அழகா இருக்காளே!” என்கிறாள் இந்து.
அதற்கு “அழகா இருந்தா, ரொம்ப கஷ்டம் இந்து” என்று சொல்கிறான் அப்பு.
அம்மாவைப் புரிந்துகொண்ட அப்புவின் மிகச் சுருக்கமான இரண்டு வரி மனநிலை இது.
மீறலுக்குப் பின்பிருக்கும் நியாயத்தைப் புரிந்துகொள்வதற்கான மனநிலைக்கு எதிரே மரபால் எழுப்பப்பட்டிருக்கும் பெருஞ்சுவராலேயே எப்போதும் சஞ்சலத்தில் உழல்கின்றன மனித மனங்கள்.
மிக வலுவான மையமுரண், கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்ச்சிகர மன மோதல்கள், நுட்பமான உளவியல் விவரிப்புகள், அழகுணர்ச்சிகொண்ட மொழிநடை என படைப்பு கூர்மையும், வாசிப்பு சுவாரஸ்யமும் ஒருங்கே அமைந்த தி.ஜானகிராமனின் ”அம்மா வந்தாள்” காலம் கடந்தும் தமிழிலக்கியத்தின் முக்கிய ஆக்கங்களின் முதன்மை வரிசையில் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டே இருக்கும்.
மிகச் சிறந்த ஆய்வு நுட்பமான ஆய்வு பாராட்டுக்கள்
மிகவும் ஆழமான கட்டுரை. மகிழ்ச்சி. மனமார்ந்த பாராட்டுகளும், நன்றிகளும்.