‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ (2004), ‘மனாமியங்கள்’ (2016) நாவலைத் தொடர்ந்து சல்மா எழுதியுள்ள மூன்றாவது நாவல் ‘அடைக்கும் தாழ்’ (2022). தொண்ணூறுகளுக்குப் பிறகு கவிதை எழுதத் தொடங்கியவர் சல்மா. இவரது ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ (2000) என்ற கவிதைத் தொகுப்பு நவீனப் பெண்ணியக் கவிதைகளின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. பெண்ணுடலின் அந்தரங்கங்களைப் பெண்மொழியில் காத்திரமாகச் சல்மா எழுதியிருந்தார். பெண்களின் ஒட்டுமொத்தமான பிரச்சினைகளைப் படைப்பூக்கத்துடன் பகிர்ந்துகொள்ள நவீனக் கவிதை வடிவத்தை அவர் பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இவரது புனைவுலகம் அதிலிருந்து தனித்துவமானது. சிறுபான்மையினரான இஸ்லாமியப் பெண்களின் அக உலகம் சல்மாவின் புனைவுகளில் திறந்து காட்டப்பட்டது. வீட்டிற்குள்ளேயே திரைகள் போட்டுத் தங்கள் முகத்தை மூடிக்கொண்டிருக்கும் இஸ்லாமியப் பெண்கள் இவரது கதைகளில் பேசத் தொடங்கினார்கள். சல்மா அப்பெண்களின் வழியாகத் தன் உரையாடலைத் தொடங்கினார் என்றும் கூறலாம். சல்மாவின் எழுத்துக்களைச் சித்தி ஜுனைதா பேகம் எழுத்துடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார் அம்பை.
ஒடுக்கப்பட்ட தலித் பெண்கள் இன்று அதிக அளவில் எழுத வந்திருக்கிறார்கள். ‘தலித் பெண்ணியம்’ என்றொரு இலக்கிய வகைமை தமிழில் உருவாகியிருக்கிறது. இது ஓர் ஆரோக்கியமான இலக்கியச் செயல்பாடாகும். ஆனால் இஸ்லாம் சமூகத்தில் இது போதிய அளவில் நிகழவில்லை. ‘மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண் மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது’ என்று சித்தி ஜுனைதா பேகம் எழுதிய ‘காதலா? கடமையா?’ (1938) நூலுக்கு எழுதிய அறிமுக உரையில் உ.வே.சாமிநாதையர் குறிப்பிட்டிருக்கிறார். உ.வே.சா.வின் வியப்பு இன்றுவரை தொடரத்தான் செய்கிறது. மதத்தினூடாகக் கட்டப்பட்டுள்ள இறுக்கங்களிலிருந்து அவர்கள் இன்னும் வெளியே வரவில்லை; அல்லது அந்த இறுக்கங்களோடு வாழப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், இஸ்லாமியச் சமூகத்தில் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு மிகமிகக் குறைவு. ‘கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதவிதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம், மெய், மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும் அடிபணிந்தவர்களாகவுமே உணர்ந்திருக்கின்றனர்’ என்று சித்தி ஜுனைதா பேகம் குறித்த கட்டுரையொன்றில் கீரனூர் ஜாகீர்ராஜா குறிப்பிடுகிறார். இஸ்லாம் சமூகத்திலிருந்தே இதுபோன்ற கலகக் குரல்கள் இன்று பொதுவெளியில் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒரு பெண்ணாகப் பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையில் இதனைத் தம் படைப்புகளில் தொடர்ச்சியாகச் செய்து வருபவர் சல்மா.
‘அடைக்கும் தாழ்’ நாவலில் காதலுக்கும் மதத்துக்கும் உள்ள உறவுச் சிக்கலைப் புனைவாக எழுதியிருக்கிறார் சல்மா. புரிந்துகொள்ள இயலாத ஓர் உணர்வு, காதல். காதலுக்கும் அன்புக்கும் நெருக்கமான தொடர்புண்டு; அதுபோல காதலுக்கும் உடலுக்கும்கூட நெருக்கமான தொடர்புண்டு. சங்க காலத்தில் ஓர் ஆணும் பெண்ணும் எதிர்பாராத ஒரு தருணத்தில் பார்த்தவுடன் ஒருவரையொருவர் விரும்பினார்கள்; புணர்ந்து மகிழ்ந்தார்கள். தெய்வே இவர்களைச் சேர்த்து வைத்ததாகக் கருதினார்கள். சாதி மதம் போன்ற ஏற்றத்தாழ்வுகள் உருவாகாத காலத்தில், ஆண் பெண்ணுக்குள் நடைபெறும் உடலியல் சார்ந்த இயல்பான நிகழ்வாகக் காதல் பார்க்கப்பட்டது. ‘செம்புலப் பெயல் நீர்போல / அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’ என்று பாடக்கூடிய சூழல் அன்று இருந்தது. இன்று அந்நிலை இல்லை. தற்காலத்தில் ஊர், உறவு, சாதி, மதம் என அனைத்தும் பிரிக்க முடியாத அளவுக்குக் காதலுடன் கலந்திருப்பதைக் கவிஞர் மீரா கவிதையாக எழுதியிருக்கிறார். காதலுக்கு அன்பு மட்டுமே போதுமானது என்பது ஒரு கற்பிதம்தான். யதார்த்தம் அப்படியில்லை. அன்பைத் தாண்டி நிறையக் கணக்குகளை நேர்செய்ய வேண்டியிருக்கிறது.
சல்மா இந்நாவலுக்கான தலைப்பைத் திருக்குறளில் இருந்து பெற்றிருக்கிறார். திருவள்ளுவர், ‘அன்புடைமை’ என்றொரு அதிகாரம் எழுதியிருக்கிறார். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்குத்தாழ் ஆர்வலர் / புன்கணீர் பூசல் தரும்’ என்பது அந்த அதிகாரத்தின் முதல் குறள். அதாவது, ‘அன்பு என்பது மூடிவைக்க முடியாத உணர்ச்சி. ஒருவர் அன்புடையவர் என்பதை அவர் பிறருடைய துன்பத்தைக் கண்டு நம்மையறியாமலும் கண் கலங்குவதே காட்டிவிடும்’ என்று நாமக்கல் கவிஞர் இதற்கு உரை கூறுகிறார். இந்நாவல் இந்தக் குறளுக்கான கருத்தை மறுபரிசீலனை செய்ய முயன்றிருக்கிறது. மூன்று தலைமுறைகளின் கதை இந்நாவலின் சொல்லப்படுகிறது. காதலுக்கும் மதத்துக்குமான பிரச்சினையை நாவல் பிற்பகுதியில்தான் தீவிரமாகப் பேசியிருக்கிறது. முற்பகுதியில் அதற்கான களத்தைச் சல்மா உருவாக்கிக் கொள்கிறார்.
இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் பெண்களின் வாழ்க்கை சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் பிரதி காத்திரமாக உரையாடுகிறது. மதமும் அதனைத் தீவிரமாக நம்பும் ஆண்களும் எவ்வாறெல்லாம் பெண்களை ஒடுக்குகிறார்கள் என்பதைச் சல்மா விரிவாகவே எழுதியிருக்கிறார். அதேநேரத்தில் பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலும் பிரதியில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த முரண்தான் நாவலை இறுதிவரை இயக்குகிறது. ராஜாங்கம் மதத்தை நம்பினாலும் பெண்களுக்கு இணை முக்கியத்துவம் அளிக்கிறான். ஆனால் இவன் தம்பி அஜ்மல் இஸ்லாம் மதக் கருத்துக்களைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறான்; நெகிழ்வுத்தன்மையற்று நடந்துகொள்கிறான். வரிசையாக ஆறு பெண் குழந்தைகளை அவன் மனைவி பெற்றெடுக்கிறாள். ஆனாலும் கருத்தடையைப் பாவமாகக் கருதுகிறான். பெண்கள் வயதிற்கு வந்தவுடன் திருமணம் செய்துவிட நினைக்கிறான். குறிப்பிட்ட வயதிற்குமேல் பெண்களைப் பள்ளிக்கு அனுப்பத் தடை விதிக்கிறான். வீட்டில் இருக்கும்போதும் பெண்களை முக்காடு போட்டுக்கொண்டிருக்க நிர்ப்பந்திக்கிறான். இவன் ஒரு பட்டதாரி என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களுக்கு மத்தியில் மதப் பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய இயக்கமான தப்லீக் ஜமாஅத்தில் அஜ்மல் தீவிரமாக இயங்குகிறான். இந்த இயக்கம் மீதான விமர்சனத்தையும் பிரதி முன்வைக்கிறது.
மதம் கடந்த இரு காதல் நிகழ்வுகளைப் பிரதி அணுகியுள்ளது. முதல் காதல், ராஜாங்கத்தின் அண்ணன் அனிபாவுடையது. அனிபா, தனது தோட்டத்தில் வேலைசெய்யும் சித்ராவை விரும்புகிறான். அவளுக்கும் விருப்பம்தான். இந்தக் காதல் ‘16 வயதினிலே’ (1977) வெளிவந்த காலகட்டத்தைச் சார்ந்தது. அனிபாவைத் திருமணம் செய்துகொள்வதில் சித்ராவுக்குத் தடையேதும் இல்லை. பிரச்சினை அனிபா வீட்டில்தான். மதமே மாறினாலும் சித்ராவை ஏற்றுக்கொள்வதில் அனிபா குடும்பத்தினர் தயக்கம் காட்டுகின்றனர். சித்ரா இந்து என்பதுதான் காரணம். அனிபாவைவிட ராஜாங்கம் வயதில் இளையவன். ஆனால் அறிவு, அனுபவம் ஆகியவற்றை உணர்ந்தவனாக இருக்கிறான். யதார்த்தத்தில் இது சாத்தியமில்லை என்பதை ராஜாங்கம் அனிபாவுக்குப் புரிய வைக்கிறான். சித்ராவுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுகிறது. அனிபா தற்கொலைக்கு முயல்கிறான். மத இறுக்கங்களுக்கு எதிராக அவனால் ஒன்றுமே செய்ய முடியாது; தன்னை வேண்டுமானால் மாய்த்துக் கொள்ளலாம். சல்மா இந்தக் கதாபாத்திரத்தை அவ்வளவு அருமையாக வடிவமைத்துள்ளார். மதம் மிகப்பெரியது; அதற்கு எதிராகத் தனிமனிதர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. அனிபா கதாபாத்திரம் இதற்குச் சிறந்த உதாரணம். இந்நிலையில் சித்ரா, கணவனால் கொடுமைப்படுத்தப்படுகிறாள். அவளும் தற்கொலை செய்துகொள்கிறாள். அனிபா மனநிலை பாதிக்கப்படுகிறான்; தன்னைக் காணாமல் ஆக்கிக்கொள்கிறான். அவனால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது. தனி மனிதர்கள் குறித்து மதம் எப்போதும் கவலைப்படுவதில்லை. இப்படியாக முதல் காதல் கதை முடிவுக்கு வருகிறது.
இரண்டாவது காதல், ராஜாங்கத்தின் மகன் இம்ரானுடையது. இவனிடமும் மத நம்பிக்கை கொஞ்சமும் குறையாமல் இருக்கிறது. தற்காலத்திலும் மதம் நெகிழ்வுத் தன்மையுடன் இயங்கவில்லை என்பதற்கு இம்ரானின் நடவடிக்கைகளின் வழியாகச் சல்மா நிறுவுகிறார். அனிதா என்ற மலையாளப் பெண் இம்ரானைத் தீவிரமாகக் காதலிக்கிறாள். இவனுக்காகத் தன்னை இஸ்லாமியப் பெண்ணாகக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொள்கிறாள். பொட்டு வைக்கவில்லை. நோன்பு கடைப்பிடிக்கிறாள். இம்ரானுக்காகத் தன்னை வருத்திக்கொள்கிறாள். அனிபாவுக்கு இருந்த தயக்கம் இம்ரானுக்கும் இருக்கிறது. இந்தக் காதல் நிறைவேறாது என்று நினைக்கிறான். இருவருக்கும் இடையில் தகர்க்கவே முடியாத ஒரு சுவரைப் போன்று மதம் இருப்பதை உணர்கிறான். சிந்தனைகள் நவீனமாக இருந்தாலும் யதார்த்தம் அதற்கு எதிராகவே இருக்கிறது. அனிதா தந்தையின் இறப்பும் நண்பர்களின் தொடர் வற்புறுத்தலுமே இம்ரான் மனதில் மாற்றத்தை உண்டாக்குகிறது. அனிதாவின்மீது காதல் கொள்கிறான். காலம் இருவருக்கும் இடையில் மெல்ல விரிசலை உண்டாக்குகிறது.
தற்காலத்தில் இந்துத்துவச் சனாதன அமைப்புகளால் தீவிரமாகப் பரப்பப்படும் ஒரு சொல் ‘லவ் ஜிகாத்.’ இந்தப் பரப்புரைதான் அனிதாவின் மன விரிசலுக்குக் காரணமாக அமைகிறது. ‘லவ் ஜிகாத்’ பரப்புரை கேரளாவில் தீவிரமாகச் செய்யப்படுகிறது. ஒவ்வொரு மதத்திலும் மதத்தைக் காப்பாற்றும் கலாச்சாரக் காவலர்கள் எப்போதும் இருப்பார்கள். இந்நாவலில் வரும் கிருஷ்ணன் நாயர் கதாபாத்திரம்தான் அந்தக் கலாச்சாரக் காவலர். அவர்தான் அனிதாவிடம் ‘லவ் ஜிகாத்’ பற்றிக் கூறுகிறார். அவள் மனதில் இஸ்லாமிய வெறுப்பு உருவாவதற்குக் காரணமாக இருக்கிறார். இந்து மதத்தைச் சார்ந்த ஆண் ஒருவர் முஸ்லிம் பெண்ணை மணந்தால், அதனைக் காதல் என்றும் இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவரை முஸ்லிம் ஆண் மணந்தால் அது கட்டாயத்தின் பேரில் நடத்தப்படும் ‘லவ் ஜிகாத்’ என்றும் பொதுவெளியில் பரப்புரை செய்யப்படுகிறது. இந்தப் புள்ளியில் பிரதி கவனம் செலுத்தவில்லை. இப்படியொரு காதல் பிரதியில் ஊடாடியிருந்தால், ‘லவ் ஜிகாத்’ பரப்புநர்களின் முரணைப் புரிந்துகொண்டிருக்கலாம். தொண்ணூறு சதவீதத் திருமணங்கள் பெற்றோரின் விருப்பப்படியே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள பத்துச் சதவீதக் காதல் திருமணத்தில் இரண்டு சதவீதம் மட்டுமே வெவ்வேறு மதங்களுக்கு இடையில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் எனும் பெயரில் இதுவரை 180 பெண்கள் கேரளாவில் மயக்கப்பட்டு மதம் மாற்றப்பட்ட பத்திரிகைச் செய்தியை அனிதாவிடம் காட்டுகிறார் கிருஷ்ணன் நாயர். அனிதாவின் சித்தி பெண்ணும் இஸ்லாமிய இளைஞன் ஒருவனை மதம் மாறித் திருமணம் செய்து கொள்கிறாள். அனிதாவின் மனதில் இது மேலும் குழப்பத்தை உண்டாக்குகிறது. அவள் ‘லவ் ஜிகாத்’ செய்திகளை உண்மையென நம்பத் தொடங்குகிறாள். தவிர, இம்ரானுக்காகத் தான் ஏன் மதம் மாறவேண்டும் என்ற கேள்வியை அவள் கேட்டுக் கொள்கிறாள். அனிதாவின் கதாபாத்திரம் எதிர்மறையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் வாழ்க்கையின் நிதர்சனங்களை அவள் வெளிப்படையாகப் பேசுகிறாள். சல்மா அந்தவிதத்தில் பாராட்டத்தக்கவர். ‘ஒருவர்மீது வந்த காதல், பிறகு இல்லாமல் போவதற்குக் காரணங்கள் இருக்கலாம்தானே?’ என்ற அனிதாவின் தர்க்கத்தில் நியாயம் இருப்பதாகவே பிரதி ஆசிரியர் கருதுகிறார். காதலுக்காக ஒருவர் இன்னொரு மதத்துக்கு ஏன் மாறவேண்டும் என்ற காத்திரமான கேள்வியை இந்நாவல் முன்வைக்கிறது. இதுதான் இந்நாவலின் மையமும்கூட. இந்த மாற்றம் இம்ரானிடமே உருவாவதுதான் சிறப்பு.
அனிதாவின் நிராகரிப்புக்குப் பிறகு தன்னைத் தீவிரமாக விரும்பும் வினுதாவின் அன்பில் கரைந்துபோகிறான் இம்ரான். ‘வினுதா மதம் மாறாதவரை, அத்தா இந்தத் திருமணத்தை ஏற்க மாட்டார். தன்னால் வினுதாவிடம் இதைச் சொல்ல இயலுமா எனத் தெரியவில்லை’ என்று இம்ரான் கருதுகிறான். இம்ரானின் இந்த மன மாற்றத்தை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இஸ்லாத்தைத் தீவிரமாக நம்பும் ஒருவன், தன்னைக் காதலிப்பவள் தனக்காக ஏன் மதம் மாறவேண்டும் என்று நினைப்பது முக்கியமான நகர்வு. ஆனால் ஆழமான மத நம்பிக்கையுள்ள இம்ரானின் குடும்பம் அவனது நினைவுகளை அரித்துக்கொண்டே இருக்கிறது. ‘நான் மதம் மாறிக்க ரெடி. இம்ரான் படற கஷ்டத்தை என்னால சகிக்க முடியல’ என்கிறாள் வினுதா. அன்புடைய இரு நெஞ்சங்கள் தம்முள் கலப்பதற்கு மதம் ஏன் இவ்வளவு பிரச்சினையாக இருக்கிறது என்ற கேள்வியைப் பிரதி இவ்விடத்தில் அழுத்தமாக எழுப்புகிறது.
பிரதியின் கதையாடலில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. அனிபாவைக் காதலித்த சித்ராவுக்கு இஸ்லாம் மதம் ஒரு பிரச்சினையாகத் தெரியவில்லை; இம்ரானைக் காதலித்த அனிதாவும் தொடக்கத்தில் தன்னை இஸ்லாம் மதத்துக்கு மாற்றிக்கொள்கிறாள்; இம்ரானுக்காக வினுதாவும் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதற்குத் தயாராக இருக்கிறாள். அனிதாவின் சித்தி மகளான காவ்யாவும் பைசலை மதம் மாறித்தான் திருமணம் செய்துகொள்கிறாள். சித்ரா, அனிதா, வினுதா, காவ்யா என நால்வருமே இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் நால்வருமே தாங்கள் காதலித்த ஆண்களுக்காக மதம் மாறுவதற்குத் தயாராக இருக்கிறார்கள். இவ்விடத்தில், தாங்கள் காதலித்த பெண்களுக்காக மதம் மாறும் முடிவை அனிபா, இம்ரான், பைசல் என ஒருவருமே ஏன் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. பெண்கள்தாம் ஆண்களுக்காகத் தங்கள் மதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறதா? மதம் மாறுவதற்கு இஸ்லாம் ஒருநாளும் அனுமதிக்காது என்ற விமர்சனத்தைச் சல்மா இங்கு முன்வைக்கிறாரா? மதம் சார்ந்து பிரதி பேசுகிறதா? அல்லது பாலினம் சார்ந்து பிரதி பேசுகிறதா? இது போன்ற கேள்விகளையும் உள்ளடக்கித்தான் இந்நாவலை வாசிக்க வேண்டும்.
அன்பைச் சாதி மதத்துக்குள் அடைத்து வைக்க முடியாது என்ற நேர்க்கோட்டு வாசிப்பையும் இந்நாவலின்மீது நிகழ்த்தலாம். அனிபா, சித்ராவுக்கு இடையிலான காதல் நாவலில் மிகக்குறைந்த அளவே பேசப்படுகிறது. அவர்களது காதல் திருமணத்தில் முடியாமல் போனதற்குக் குடும்ப கௌரவம் காரணமாகச் சொல்லப்படுகிறது. அனிபாவுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால், அனிபாவால் அந்த வாழ்க்கையில் ஒட்ட முடியவில்லை. சித்ராவின் அன்பு அவனை மனப்பிறழ்வுக்கு உள்ளாக்குகிறது. அனிபா குடும்பத்திற்கு இதுவொரு குற்றவுணர்வாகவே படவில்லை. இம்ரானின் காலகட்டத்தில் காதலுக்கு வெவ்வேறு பெயர்கள் கற்பிக்கப்படுகின்றன. இந்த இடத்தில் பிரதி இம்ரான் வழியாக நிகழ்கால அரசியலை விவாதிக்கிறது. அனிதாவும் வினுதாவும் காதலை வெவ்வேறு விதமாக அணுகுகிறார்கள். அனிதா, இம்ரானை நிராகரித்த பிறகு அகர்வால் என்பவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். அனிதாவுக்குள் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதை அவளால் அறிய முடிகிறது. காவ்யாவும் கிருஷ்ணன் நாயரும் இதற்குக் காரணமாக இருக்கிறார்கள். அனிதாவின் கதாபாத்திரம் காதலைவிட யதார்த்தத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. வினுதா கதாபாத்திரம் இதற்கு நேரெதிரானது. இம்ரான் மீதுகொண்ட அடைத்து வைக்கமுடியாத வினுதாவின் அன்பு, மதம் எனும் தாழ்ப்பாளை உடைக்கவும் தயாராகிறது.
காதல் குறித்த புனிதங்கள் தற்காலத்தில் இயல்பாகவே உடைந்து போகின்றன. இம்ரான், அனிதாவைத் தொடர்ந்து வினுதாவைக் காதலிக்கிறான். இம்ரான் ஏற்கனவே அனிதாவைக் காதலித்தவன் என்பது வினுதாவிற்குத் தெரியும். அனிபாவும் சித்ராவும் வேறொருவரைத் திருமணம் செய்துகொள்ளத்தான் செய்கிறார்கள். புனைவும் யதார்த்தமும் இணைகோடுகளாகப் பிரதிக்குள் ஓடுகின்றன. சல்மா இந்நாவலினூடாகச் சில உரையாடல்களை முன்னெடுத்திருக்கிறார். காதலும் தற்போது அரசியல் வயப்படுத்தப்பட்டிருக்கிறது. மதக் காவலர்கள் தங்கள் இருப்பை வெளிப்படுத்த ‘லவ் ஜிகாத்’ என்ற முழக்கத்தைக் கையிலெடுத்துள்ளனர். இஸ்லாமியப் பின்புலத்திலிருந்து சல்மா இந்நாவலை எழுதவில்லை. சிறுபான்மை இனத்தைச் சார்ந்த பெண் என்ற இடத்திலிருந்தே இப்புனைவை எழுதியிருக்கிறார். இஸ்லாம் மதம் பெண்களுக்கு ஆதரவாக இல்லை என்பதை ஒரு பெண்ணாக உணர்கிறார். எந்தச் சூழலிலும் ஒரு பெண்ணே பாதிக்கப்படுபவளாக இருக்கிறாள் என்று அவர் கருதுகிறார். தன் அன்பை நிரூபிப்பதற்குக்கூட அவள்தான் மதம் மாற வேண்டியிருக்கிறது. எல்லாவற்றையுமே இந்நாவல் உரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறது. அவ்வகையில் தமிழுக்கு இந்நாவல் குறிப்பிடத்தக்க ஆக்கமாக இருக்கும்.