ஐந்தாம் இரவு


வ்வாறு நான் கனவு கண்டேன்…

பன்னெடுங்காலத்திற்கு முன்பு, அதாவது கடவுள்களின் யுகத்திற்குப் பின்னோக்கிப் பயணிக்கையில் நான் ஒரு போரில் துரதிர்ஷ்டவசமாகத் தோற்கடிக்கப்பட்டு உயிருடன் பிடிபட்டு எதிரிப்படையின் தலைவன் முன் இழுத்துச் செல்லப்பட்டேன்.

அக்காலத்தில் அனைத்து மனிதர்களும் உயரமாக இருந்தனர். தம் தாடிகளை நீளமாக வளர்த்திருந்தனர். அவர்கள் இடையில் அணிந்திருக்கும் தோல் வாரில் மாட்டியிருந்த போர்வாட்கள் குறுந்தடிகளைப் போலத் தோற்றமளித்தன. அவர்களது வில்கள் ஒரு கொடியைப் பிடுங்கி வளைத்துக் கட்டியது போல் விளங்கின. அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன் மெருகேற்றுவதோ அல்லது துலக்குவதோ வழக்கத்தில் இல்லை. அவை சாதாரணமாகவும் கரடுமுரடாகவும்  காணப்பட்டன.

கவிழ்த்துப் போடப்பட்ட ஒரு ஸாகே பானக் கலயத்தினைப் போன்ற ஆசனத்தில் எதிரிப் படையின் தலைவன் அமர்ந்திருந்தான். அவன் தனது வில்லை செங்குத்தாக வலக்கையில் அதன் நடுப்பகுதியில் பிடித்துக் கொண்டிருந்தான். வில்லின் அடிப்பகுதி புல்தரையைத் தொட்டுக்கொண்டு நின்றது. அவன் முகத்தில் புருவங்கள் அடர்த்தியாக வளர்ந்து மூக்கின் மேற்புறத்தில் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டன. அக்காலத்தில் சவரக்கத்தி என்றவொரு உபகரணம் கண்டுபிடிக்கப் படவில்லை.

சிறை பிடிக்கப்பட்டதால் நான் ஆசனத்தில் அமர அனுமதிக்கப் படவில்லை. ஆகையால் புல்வெளியில் சம்மணமிட்டு அமர்ந்தேன். என் கால்களில் நீண்ட நார்களினால் ஆன காலணிகளை அணிந்திருந்தேன்.  அந்தகாலத்தில் காலணிகள் மிக நீண்டதாக வடிவமைக்கப்பட்டன. என்னுடையவையோ நான் நிற்கும்போது என் கால்முட்டி வரை நீண்டிருந்தன. அவற்றின் மேற்பகுதி முழுமையாகப் பின்னப்படவில்லை. ஆசையால் அவை அலங்கார இழைகளின் வரிசைகளைப் போலத் தொங்கின. நான் நடக்கும்போது அவை சலசலத்தன.

எதிரிப்படைத் தலைவன் அங்கு எரிந்து கொண்டிருந்த சொக்கப்பனையின் வெளிச்சத்தில் என் முகத்தை நோக்கி “நான் வாழ விரும்புகிறேனா” அல்லது “சாக விழைகிறேனா” என்று வினவினான்.

அக்காலத்தில் என்னைப் போலச் சிறைபிடிக்கப்பட்ட அனைவரிடமும் இக்கேள்வியைக் கேட்பது வழக்கம். வாழ விரும்புவதாகப் பதில் அளித்தால் சரணடைந்துவிட்டதாக அர்த்தம். சாக விழைந்தால் அடிபணிய மறுப்பதற்கான அடையாளம்.

“சாக விழைகிறேன்” என்று பதிலளித்தேன். உடனே எதிரிப் படைத்தலைவன் புல்வெளி மேல் நின்ற வில்லைத்தூர எறிந்து தன் இடையில் மாட்டியிருந்த குறுந்தடி போன்ற வாளினை உருவினான். பலத்த காற்றில் கிளர்ந்தெழுந்த சொக்கப்பனையின் தீக்கங்குகள் ஒளிப்பிழம்புகளாய் வாளின் மீது மின்னின.

என் வலக்கையை ஒரு மேப்பிள் இலையைப் போலத் திறந்து உள்ளங்கையை அகல விரித்து என் கண்களுக்கு நேராக உயர்த்தினேன். சிறிது அவகாசம் கோருவதற்கு சமிக்ஞையாக இது கருதப்பட்டது.

எதிரிப் படைத்தலைவன் உருவிய வாளினை பலத்த சப்தத்துடன் உறையினுள் வைத்தான்.

அக்காலத்திலும் அவர்கள் அன்பின் அர்த்தத்தை அறிந்திருந்தனர். அவனிடத்தில் என் அன்புக்குரியவளை நான் இறப்பதற்கு முன் ஒருமுறை காணவேண்டுமென்ற கோரிக்கை விடுத்தேன். படைத்தலைவன் பொழுது புலர்ந்து சேவல் கூவும்வரையில் காத்திருப்பதாக பதிலளித்தான். அதற்குள் அவளை நான் என்னிடத்தில் வரவழைக்க வேண்டும். சேவல் கூவுவதற்குமுன் அவள் இவ்விடம் அடையாவிட்டால் அவளைக் காண்பதற்கு முன்பே நான் கொல்லப்படுவேன்.

எதிரிப் படைத்லைவன் அமர்ந்தவாறே நெருப்பினை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பெரிய நார்க்காலணிகளுடன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்தவாறே என்னவளின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு கழிந்து கொண்டிருந்தது.

அவ்வப்போது சொக்கப்பனையின் நெருப்பு சற்றே அமைதியுறும் ஒலியைக் கேட்டேன். அப்போது எதிரிப்படைத் தலைவனைத் தீப்பொறிகள் தீண்டி அவனை நிலைகுலையச் செய்வதுபோலத் தோன்றியது. அவனது கண்கள் கரிய புருவங்களிடையே பிரகாசித்தன. யாரேனும் ஒருவர் ஒரு கைப்பிடியளவு ஒடித்த மரச் சுள்ளிகளை தீயினுள் வீசுவர். உடனே நெருப்பு வெடித்துச் சிதறும். அது மிகக் கம்பீரமான ஒலி. இரவின் இருட்டையே புரட்டிப்போடும் வன்மை வாய்ந்த ஒலி.

இதற்கிடையில் வேறொரு பிரதேசத்தில் ஒரு பெண் தன் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஓக்மரத்தில் கட்டப்பட்டிருந்த வெண்புரவியைக் கட்டவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

பிடரியை மூன்று முறை தட்டிக் கொடுத்து அதன் மேல் இலகுவாக ஏறி அமர்ந்தாள். சேணம் மற்றும் அடிக் கொளுவி  அற்ற குதிரையின் மீதேறி அவள் பயணித்தாள். அவளது நீண்ட வெண்ணிறக் கால்கள் புரவியின் விலாப் பகுதியை எட்டி உதைக்கவே புரவி நாலுகால் பாய்ச்சலில் சீறிப் பாய்ந்தது.

தொலைதூர வானில் பரவிய சொக்கப்பனையின் மங்கலான ஒளிக் கீற்றை அவள் கண்டாள். புரவி, இருளிலிருந்து அந்த ஒளியை நோக்கிப் பாய்ந்தது. புரவியின் மூச்சுக் காற்று பாய்ச்சல் வேகத்தில் நாக்கிலிருந்து தீஜ்வாலைகளாக வெளியேறியது. அப்பெண் தொடர்ந்து தன் மெல்லிய கால்களால் புரவியை உதைத்து துரிதப்படுத்தினாள். அதன் குளம்பொலிகள் வானெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அப்பெண்ணின் கூந்தல் கற்றைகள் பின்புறமாகப் பரவி இருளைக் கிழித்தப்படி பறந்தன. ஆனால் இன்னும் அவள் சொக்கப்பனையை அடையவில்லை.

திடீரென, அடர்ந்த இருள் படிந்த சாலையின் ஓரத்திலிருந்து ‘கொக்கரக்கோ’ எனும் சேவல் கூவும் ஒலியை கேட்டாள். அவள் சற்று நிலைகுலைந்து பின்னால் சாய்ந்தவாறே தன் இருகைகளாலும் கடிவாளத்தை இறுக்கமாகப் பிடித்து இழுத்தாள்.

புரவியின் முன்னங்கால்களின் குளம்புகள் கடினமான பாறையினுள் சுவடுகளாகப் பதிந்தன.

‘கொக்கரக்கோ’ என்று சேவல் மீண்டும் கூவியது. அதிர்ச்சியுடன் கூடிய அலறலுடன் அப்பெண் கடிவாளத்தைத் தளரவிட்டாள். வெண்புரவி கால்கள் நொடித்து நிலைகுலைந்து வீழ்ந்து தன் மேல் சவாரி செய்தவளை முன்னே தள்ளியது. பாறைகளுக்கு அடியில் பிளந்த ஒரு பிளவின் உள்ளே புரவியும் பெண்ணும் ஒன்றாகவே வீழ்ந்து மறைந்தனர்.

புரவியின் குளம்படிச் சுவடுகள் இன்றும் பாறைகளின் மேல் தென்படுகின்றன. சேவல் கூவுவதைப் போல ஒலி எழுப்பியவன் தந்திரக்கார கோமாளி அமானொஜாகு என்பவன் ஆவான். குளம்படிச் சுவடுகள் பாறையின் மேல் காணப்படும் வரையிலும் அமானொஜாகு என்னுடைய ஜென்ம எதிரியாக விளங்குவான்.

 


பின் குறிப்புகள்:

 1. கடவுள்களின் யுகம்:  ஜப்பானிய தொன்மத்தில் பேரரசர்களின் ஆட்சிக் காலங்கள் துவங்குவதற்கு முன் கடவுள்களின் யுகம் நிலவியது என்பது மரபார்ந்த நம்பிக்கை.
 2. அமானொஜாகு: ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் ஆசைகளை நிராசைகள் ஆக்கி பெறுமதியை கெடுமதி ஆக்கும் ஒரு தந்திரக்கார பூதம்.

[ads_hr hr_style=”hr-dots”]

நாட்சுமே சொசெகி

தமிழில் – கே.கணேஷ் ராம்


[tds_info]

ஆசிரியர் குறிப்பு: 

நாட்சுமே சொசெகி :

நாட்சுமே சொசெகி நவீன ஜப்பானிய நாவலின் துவக்கப்புள்ளி என்று விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். அகுதகவா விலிருந்து துவங்கி இன்றைய ஹாருகி முராகமி வரை சொசெகியின் புனைவுலகால் வசீகரிக்க பட்டவர்கள். அகுதாகவா சொசெகியை தன்னுடைய ஆசான் என்று ஒரு கதையில் குறிப்பிடுகிறார்.1867 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஈடோ நகரில் பிறந்த சொசெகி இளவயதில் சீன இலக்கியங்களா லும் ஹைகூ கவிதைகளாலும் கவரப்பட்டு ஒரு வாசகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின் லண்டனில் இரண்டு ஆண்டுகாலம் ஆங்கில இலக்கியம் பயின்று டோக்கியோ இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக விளங்கினார்.

“I am a Cat” என்கிற நாவல் 1905ஆம் ஆண்டு பிரசுரமாகி அவரை ஜப்பானின் நவீன நாவலாசிரியராக அடையாளம் காட்டியது. தொடர்ந்து வெளியான Botchan மற்றும் Kusamukara ஆகிய புனைவுகள் அவரை நவீன ஜப்பான் இலக்கியத்தின் நட்சத்திரமாக ஆக்கின.

இலக்கிய விமர்சன நூல்களையும் நிறைய சிறுகதைகளையும் எழுதிய சொசெகி தனி மனிதனின் அடையாள சிக்கல் மற்றும் தொழில் மயமாகும் நவீன ஜப்பானிய சமூகம் ஆகியவற்றை தனது படைப்புகளில் விவாதிக்கிறார். 2016 ஆம் ஆண்டில் டோக்கியோவில் சொசெகியின் நூறாவது ஆண்டு நினைவு நாளின்போது அவரை போன்றவே ஒரு ஆண்ட்ராய்டு ரோபோ உருவாக்கப்பட்டு அவரது கதைகளையும் கவிதைகளையும் வாசித்துக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானின் புகழ்பெற்ற மாங்கா காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் படங்களிலும் சொசெகி  ஒரு கதாபாத்திரமாக தோன்றி ஒரு பூனையாக  உரு மாறுகிறார்.

1916ஆம் ஆண்டில் இறந்த சொசெகி  நவீன ஜப்பானிய இலக்கியத்தின்   முன்னோடிகளில் ஒருவராக விளங்குகிறார்..

மொழிபெயர்ப்பாளர்:

 

கே.கணேஷ் ராம் : அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த சில வருடங்களாக சிறந்த மொழிபெயர்ப்பு படைப்புகளை அளித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த எழுதிய “சுழலும் சக்கரங்கள்” (Sleeping Gears -ரியுனொசுகே அகுதாகவா) சிறுகதைத் தொகுப்பு சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதைப் பெற்றது.

[/tds_info]


குறிப்பு:
விரைவில் நூல்வனம் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவர இருக்கும் நாட் சுமே சொசெகி-யின் “பத்து இரவுகளின் கனவுகள்” கதைத் தொகுதியில் இருந்து ஒரு கதை இது.


3 COMMENTS

  • கதையின் போக்கில் சடாரென முடிந்தது.வாழ்வென்பதும் அப்படித்தானே ஏதோவொரு மந்திரவாதியின் கூவலில் முடிந்து போகிறது.

   கதையின் களம் மற்றும் கதாபாத்திரத்திங்களின் தோற்ற விவரணைகள் கரடுமுரடானதொரு காலவெளியை கற்பனை செய்ய ஏதுவாகிறது.அந்தச் சுள்ளிகளின் ஓசை அபாரம்.
   கனலிக்கும் கணேஷ் ராம் அவர்களுக்கும் வாழ்த்துகள்

 1. அழகான கதை. மிக குறைந்த அளவில் சொல்லப்பட்டுள்ள அழுத்தமான கதை. சேவல் கூவுவதற்குள் என்கின்ற கெடுவை அரசன், கைதி, கைதியின் பெண் நண்பர் அனைவருமே மதிக்கின்றனர். சேவல் குரல் கேட்ட மறு கணமே குதிரையை நிறுத்துகிறாள் அவள். ஒரு தீர்மானமான மரணத்தின் முன்னிலையில் கூட இவர்கள் அனைவருமே சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்படும்போது அமானொஜாகு வின் தந்திர குரல் அனைத்தையும் பொருளற்றதாக்கி விடுகிறது. பாறையின் குளம்புச்சுவடுகள் உள்ளவரை அந்த அமானொஜாகு தந்திரவாதி துரோகியாகவே இருப்பான் எனும் வரியில் நியாயவாதிகளை கலைத்துப்போடும் துரோகச்சுவடுகள் எக்காலத்திலும் இருந்து கொண்டேதான் உள்ளன என்று சொல்கிறது. ஒரு வகையில் அகலிகையை பாறையாக்கிய இந்திரனின் சேவல் குரலை இந்த கதை நினைவு படுத்துகிறது. கணேஷ்ராம் மொழிபெயர்ப்பு மிகப்பழமையான காலத்தை சொல்லும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.