அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை


“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.

இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடய

தண்ணென்ற பனி”

 

“எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றது

மேகங்களிலிருந்து

காற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”

முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும் தலைப்பினை உடையது. இரண்டாவது குரு மையோவினுடையது (1173-1232). கையெழுத்துக்கலையின் எடுத்துக்காட்டுகள் என்றால் இவற்றையே நான் பெரிதும் தெரிவு செய்வேன்.

இரண்டாவது கவிதை, அதன் அர்த்தமையத்தின் விளக்கம் போன்றதாக அதன் தோற்றுவாய்காண் வழக்கத்திற்குமாறான விலாவாரியான விவரிப்பைக் கொண்டுள்ளது. 1224 ஆம் ஆண்டின் பன்னிரண்டாம் மாதத்து பன்னிரண்டாம் நாளின் இரவன்று, மேகங்களின் பின்னிருந்தது நிலவு. காக்யு மண்டபத்தில் ஜென்தியானத்தில் அமர்ந்தேன். நள்ளிரவு விழிப்புவேளை வந்ததும், தியானத்தை நிறுத்தி, சிகரத்தின் மண்டபத்திலிருந்து கீழ்ப்பகுதிக்கு இறங்கினேன், அப்படியே மேகங்களிலிருந்து வந்த நிலவு, பனியை ஒளிரவைத்தது. நிலவு என் தோழனாயிருந்தது, பள்ளத்தாக்கில் ஓலமிட்டுக்கொண்டிருந்த ஓநாய் கூட பயத்தைத் தருவிக்கவில்லை. இப்போது கீழ்ப்பகுதியிலிருந்து மீண்டும் நான் வெளிவந்ததும், நிலவு மீண்டும் மேகங்களின் பின்னிருந்தது, பின்னிரவு விழிப்பு வேளையை, மணி சமிக்ஞை செய்து கொண்டிருக்க, மீண்டும் நான் சிகரத்திற்கான பாதையில் நடந்தேன் – அதனை நிலவு கண்ணுற்றது. தியான மண்டபத்தில் நுழைந்தேன், மேகங்களைத் துரத்திச் சென்ற நிலவு சிகரத்தின் பின்னே அமிழ்ந்திட இருந்தது; என்னுடன் அது ரகசியத் தோழமை கொண்டிருந்தது போல் எனக்குத் தோன்றிற்று.” நான் மேற்கோள் காட்டியுள்ள கவிதை அங்கு தொடர்கின்றது. மலையின் பின்னே நிலவைப் பார்த்த பிறகு, மையோ தியான மண்டபத்தில் நுழைந்ததும், அது இயற்றப்பட்டது அங்கே இன்னொரு கவிதையும் வருகின்றது.

“ மலையின் பின்புறமும் செல்வேன். அங்கும் செல் நிலவே.

இரவு மாற்றி இரவாக ஒருவருடன் ஒருவர் தோழமை கொள்வோம்.”

எஞ்சிய இரவினை மையோ தியான மண்டபத்தில் கழித்த பிறகோ விடியலுக்குள் திரும்பவும் அங்கே சென்ற பிறகோ, இன்னொரு கவிதைக்கான பின்புலம் இங்கே உள்ளது:

தியானத்திலிருந்து கண்களைத்திறந்ததும், சாளரத்திற்கு ஒளியூட்டும் நிலவை விடியலில் கண்டேன். நிலவினுடையதாகத் தோன்றிய ஒளியால், என் இருதயம் பிரகாசிப்பிதன உணர்ந்தேன்:

“என் இருதயம் பிரகாசிக்கின்றது, ஒளியின் தூய விரிவான;

அவ்வொளி தன்னுடையாதன நிலவு நினைக்கும் என்பதில் சந்தேகமேயில்லை”.

பின்வரும் வெறும் துடிப்புகளை, இத்தகைய தன்னெழுச்சியான, மாசுமருவற்ற மீட்டவாக்குவதால், மையோ நிலவின் கவியாக அழைக்கப்பட்டு வருகிறார்:

“பிரகாசம், பிரகாசம், மற்றும் பிரகாசம், பிரகாசம்,

பிரகாசம், மற்றும் பிரகாசம், பிரகாசம்

பிரகாசம் மற்றும் பிரகாசம், பிரகாசம், மற்றும் பிரகாசம், பிரகாச நிலவு.”

பின்னிரவு தொட்டு விடியல் வரை, குளிர் காலத்து நிலவு குறித்த தனது மூன்று கவிதைகளில், மையோ, 1118லிருந்து 1190வரை வாழ்ந்த, இன்னொரு ஜென் கவி ”சைக்யோவை” அப்படியே பின்பற்றுகிறார். “ நான் கவிதையை உருவாக்கினாலும், அதனை உருவாக்கப்பட்ட கவிதையாக எண்ணுவதில்லை.” நிலவைப் பார்த்துப் பேசுவதென, நேரியதாயும் நேர்மையானதாயுமுள்ள, ஒவ்வொரு கவிதையின் 31 அசைகளும், வெறுமனே “ என் தோழமையாயுள்ள நிலவுக்குரியதல்ல.”

நிலவினைக்காணும் அவர் நிலவாகின்றார், அவரால் காணப்படும் நிலவு அவராகிறது. இயற்கையில்  அமிழ்ந்து போய், இயற்கையினுடன் ஒன்றாகிறார். விடியலுக்கு முன்னுள்ள இருளில் தியான மண்டபத்தில் அமர்ந்துள்ள குருவின் “தெளிந்த இருதய”த்தின் ஒளி, விடியலின் நிலவுக்கான ஒளியாகின்றது. குளிர்கால நிலவு தோழனாகின்ற , மலையின் மண்டபத்தில் மதம் – தத்துவத்தின் தியானத்தில் அமிழ்ந்துள்ள குருவின் இருதயம் காட்டப்படும், மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள ”மையோ”வின் முதல் கவிதைக்கான நீண்ட முன்னுரையிலிருந்து நாம் காண்பது போல , நிலவுடன் நாசூக்கான கலந்துறவாடலிலும் பரிவர்த்தனையிலும் ஈடுபட்டிருக்கிறது; இது குறித்துதான் கவிஞர் பேசுகின்றார். என் கையெழுத்துக் கலைக்கான முன்மாதிரி கேட்கப்பட்ட போது, முதல் கவிதையை தெரிவு செய்தமைக்கான காரணம், குறிப்பிடும்படியான அதன் கண்ணியம்– காருண்யம் சார்ந்தது. மேகங்களின் பின் செல்வதும் மீண்டும் வெளிவருவதுமான குளிர்கால நிலவு, தியான மண்டபத்திற்குச் செல்கையிலும் மீண்டும் இறங்குகையிலும் என் காலடிகளை பிரகாசப்படுத்திற்று, ஓநாய் குறித்து அச்சமற்றதாக்கிற்று: காற்று உன்னிடத்தே அமிழவில்லையா, பனியே நீ சில்லிட்டுப் போகவில்லையா! வெதுவெதுப்பும் ஆழமும் நாசூக்கான கருணையுமிக்க, ஜப்பானிய ஆன்மாவின் ஆழ்ந்த மௌனத்தை கொண்டுள்ள கவிதையாக இதனை தெரிவு செய்கிறேன். “பொட்டிஸெல்லி”1 ஆய்வாளராக சர்வதேச ரீதியில் அறியப்பட்டுள்ள , மேற்கு மற்றும் கிழக்கின், கடந்த காலம் மற்றும் நிகழ்காலக் கலையின் பெரும் அறிவுள்ள டாக்டர் ”யஸிரோ யுகியோ” தனியொரு கவிதாவாசகத்தில், ஜப்பானியக் கலையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றினை, தொகுத்துரைத்துள்ளார்: “ பனியின், நிலவின், பூக்களின் காலம்… அப்புறம் எப்போதையும் விட நம் தோழர்களைப்பற்றி எண்ணுகிறோம்.” நாம் பனியின் அழகினைப் பார்க்கையில், முழு நிலவின் அழகைக் காண்கையில், செர்ரிப்பூக்களின் அழகை உற்று நோக்குகையில், சுருக்கமாகச் சொல்வதெனில், நான்கு பருவங்களின் அழகால் விழிப்பூட்டப்படுகையில், நமக்கு மிக நெருக்கமானவர்களை எண்ணிப்பார்க்கிறோம், இந்த ஆனந்தத்தை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அழகின் பரபரப்பு திண்ணிய மானுட நேசத்தை, தோழமைக்கான ஏக்கத்தை அழைக்கிறது – ‘தோழன்’ என்னும் சொல்லிற்கு ‘மானுடன்’ என்று பொருள் கொள்ளலாம். ஒரு பருவம் இன்னொன்றிற்குள் நுழைந்திடுவதை வெளிப்படுத்திடும் பனி, நிலவு, பூக்கள் என்னும் வார்த்தைகள், மலைகள், ஆறுகள், புற்கள், மரங்களின் அழகை, இயற்கையின் எண்ணற்ற சாயல்களை, மானுட உணர்வுகளை ஜப்பானிய மரபில் உள்ளடக்குகின்றன.

பனியிலும் நிலவொளியிலும், பூக்களின் கீழேயும் ஒருவரது தோழர்களைத் தேடிடும் உணர்வு, தேநீர் விருந்துக்கும் அடிப்படையானது. ஒரு தேநீர் விருந்து, உணர்வில் ஒன்றினணைவது, நல்ல பருவத்தில் நல்ல தோழர்களின் சந்திப்பு. Thousand Cranes என்னும் என் நாவலை, தேநீர் விருந்தின் சம்பிரதாய ஆன்மீக அழகைப் போற்றுதல் எனப் போகிற போக்கில் நான் குறிப்பிட்டால், அது தவறாகும். அதுவொரு எதிர்மறைப்படைப்பு, தேநீர் விருந்து விழுந்துள்ள மலினத்தன்மைக்கு எதிரான எச்சரிக்கையும் அது குறித்த சந்தேகத்தை வெளியிடுவதும் ஆகும்.

“ வசந்தத்தில் செர்ரிப்பூக்கள், கோடையில் குயில்,

இலையுதிர்காலத்தில் முழுநிலவு, குளிர்காலத்தில் தெள்ளிய

தண்ணென்ற பனி”

ஒருவர் தெரிவு செய்து கொண்டால் , ”டோஜனின்”  கவிதையில் , நான்கு பருவங்களின் அழகை, நான்கு பருவங்களிலிருந்தான பிரதிநிதித்துவ படிமங்களின் மிக அருவருப்பான வடிவில், சம்பிரதாயமான, சாதாரண, தரமற்ற சேர்ந்திசைத்தலுக்கும் மிகுந்ததாக இல்லாதிருப்பதாக பார்க்கலாம். ஓர் கவிதையே இல்லாததாக அக்கவிதையை ஒருவர் பார்க்க முடியும். இருப்பினும் குரு “ரையோகானின்” (1758-1831) மரணப்படுக்கைக் கவிதை இதே போன்றதே;

“ ‘ நான் விட்டுச்செல்வது என்னதாக இருக்கும்’ வசந்தத்தின் பூக்கள்,

 குன்றுகளில் குயில்கள், இலையுதிர்கால இலைகள்’”

டோஜனின் கவிதையிலுள்ளது போல, இக்கவிதையில், சாதரண உருவங்களும் சாதாரண சொற்களும் தயக்கமின்றி கோக்கப்பட்டுள்ளன… இல்லை குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துமாறு… ஆதலின் அவை ஜப்பானின் சாரத்தை கடத்திச்செல்கின்றன, நான் மேற்கோள் காட்டியிருப்பது ”ரையோகானின்” கடைசிக் கவிதை.

 “ஒரு நீண்ட , பனிமூட்டமான தினம் வசந்தத்தில்:

குழந்தைகளுடன் நெருங்கி ஆடும் பந்தாட்டத்தில் அதனைக் கண்டேன்.

புதிதாயுள்ளது தென்றல், தெளிவாயுள்ளது நிலவு.

முதுமையில் எஞ்சியுள்ளதை, சேர்ந்து நடனமாடி,

இரவைக் கொண்டாடித் தீர்ப்போம்.

 

“உலகின் எதனையும் பெற விரும்பவில்லை என்பதல்ல இதன் பொருள்.

தனியே அனுபவித்த ஆனந்தத்தில் இன்னும்

மேலானவனாக இருக்கிறேன் என்பதே.”

தன்காலத்தின் நவீன மலினத்தை உதறியெறிந்த, ஆரம்பகட்ட நூற்றாண்டுகளின் நேர்த்தியில் மூழ்கிப்போயிருந்த, இன்றைக்கு ஜப்பானில் பெரிதும் போற்றப்படும் கவிதையையும் கையெழுத்துக்கலையையும் உடையவர்ன்ரையோகான்… இக்கவிதைகளின் ஆன்மாவில், கிராமப்புற பாதைகளில் அலைந்து திரிபவராக, குடியிருக்க ஒரு குடிலுடன், உடுத்தக் கந்தைகளுடன், பேசுவதற்கு குடியானவர்களுடன் வாழ்ந்தவர். அவரைப்பொறுத்தவரை, மதம் மற்றும் இலக்கியத்தின் ஆழம், புரியாததில் இல்லை. ‘ஒரு புன்னகைக்கும் முகம் மற்றும் கன்னியச் சொற்கள்’ என்னும் பௌத்தத் தொடரில் தொகுத்துரைக்கப்பட்ட, காருண்ய ஆன்மாவில் உள்ள இலக்கியத்தையும் நம்பிக்கையையுமே அவர் பிந்தொடர்ந்தார். தனது இறுதிக் கவிதையில் எதையும் அவர் விட்டுச்செல்லவில்லை. தனது இறப்புக்குப் பின்னே இயற்கை அழகியதாயிருக்கும் என்றே நம்பினார். இது வேண்டுமானால் அவர் விட்டுச்சென்றதாயிருக்கும். பழைய ஜப்பானின் உணர்வோட்டங்களையும் மதநம்பிக்கையின் இருதயத்தையும் இக்கவிதையில் ஒருவர் உணர்வார்.

 “ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன் எப்போது வருவானென்று.

இப்போது நாம் ஒன்றாயுள்ளோம். எனக்கென்ன சிந்தனைகள் வேண்டிக்கிடக்கிறது?”

“ரையோகான்” காதல்கவிதையும் எழுதினார். எனக்குப் பிடித்த எடுத்துக்காட்டு இது. 69 வயதான ”ரையோகான்” (அவ்வயதில்தான் எனக்கு நோபல் பரிசு கிடைக்கின்றது என்பதைக் குறிப்பிட வேண்டும்) 29 வயது துறவுக்கன்னி தெய்ஸின்னைச் சந்தித்தார், நேசத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார். வயதேறாத பெண்ணைச் சந்தித்திருப்பதிலான ஆனந்தத்தை, நீண்டகாலமாகக் காத்திருந்த ஒருத்தியைச் சந்தித்திருப்பதிலான ஆனந்தத்தை, இக்கவிதையில் காண முடியும். இறுதிவரி எளிமையே உருக் கொண்டது.

ரையோகான் 73 வது வயதில் மடிந்தார். தற்போதைய Niigata Prefecture ஆன, எசிகோ மாகாணத்தில் அவர் பிறந்தார் – “Snow Country” என்னும் எனது நாவலின் பின்புலமாக இருப்பது, சைபீரியாவிலிருந்து ஜப்பானெங்கும் சில்லென்ற காற்று வீசிடும், ஜப்பானின் பின்புறமாக அழைக்கப்படும் வட பகுதி. தன் ஆயுளெல்லாம் அவர் இப்பனி மண்டலத்தில் வாழ்ந்தார், வயதாகி ஓய்ந்துபோய் மரணம் அண்மையிலுள்ளதாக அறிந்ததும், அறிவு விளக்கம் பெற்றிருந்ததும், அவரது இறுதிக் கவிதையில் நாம் காணும் பனி மண்டலம்,  ‘தனது அறுதி அதீதத்தில் உள்ள அவரது விழிகளுக்கு’ இன்னும் மிக அழகியதாயிருந்தது. ‘தம் அறுதி அதீதத்தில் உள்ள விழிகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரை என்னிடமுள்ளதாக நான் கற்பிதம் செய்ய வேண்டும்.

இத்தலைப்பு, சிறுகதை எழுத்தாளர் “அகுதாகவா ரைனோசுகி (1892-1927) தற்கொலைக் குறிப்பிலிருந்து வருகிறது. இத்தொடர் மிகுந்த திண்மையுடன் என்னை இழுக்கிறது. வாழ்வதற்கான திராணி என்றறியப்படும் ஒன்றான மிருகத்தைப் படிப்படியாக இழுக்கின்றதாகத் தனக்கு தோன்றியதாக “அகுதாகவா” குறிப்பிட்டார்:

“தெளிவானதும் பனி போல் சில்லிட்டதுமான கலங்கிய நரம்புகளின் உலகில் வாழின்றேன்… என்னைக் கொன்றுவிடும் துணிச்சலை எப்போது வரவழைப்பேன் எனபது எனக்குத் தெரியவில்லை, முன்னர் எப்போதும் இருந்ததை விடவும், இயற்கை இப்போது மிக அழகியதாக உள்ளது. என் முரண்பாடு குறித்து நகைப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில், தற்கொலை பற்றி எண்ணிக்கொண்டிருக்கையில், இயற்கையை நேசிக்கிறேன். ஆனால் இயற்கை அழகானது – ஏனெனில் தம் இறுதி அதீதத்தில் அது விழிகளிடம் வந்து சேருகிறது.”

1927 இல் 35 வதுவயதில் “அகுதாகவா” தற்கொலை செய்து கொண்டார்.

‘ஒருவர் என்னதான் உலகிலிருந்து அந்நியப்பட்டிருப்பினும், தற்கொலை, அறிவுவிளக்கத்தின் வடிவமில்லை. என்னதான் பாராட்டப்படக்கூடியவராக அவர் இருப்பினும், தற்கொலை செய்து கொள்பவர், ஞானியின் உலகிலிருந்து வெகுதொலைவில் இருப்பவரே’ என தம் இறுதி அதீதத்திலுள்ள விழிகள்” என்னும் எனது  கட்டுரையில் நான் கூறவேண்டியிருந்தது. நான் தற்கொலையை பாராட்டுவதுமில்லை அனுதாபமும் கொள்வதில்லை. இளமையில் இறந்து விட்ட, முன்னோடி ஓவிய நண்பர் ஒருவர் எனக்கு இருந்தார். அவரும் தற்கொலை பற்றி எண்ணினார்; இதே கட்டுரையில் அவரைப் பற்றி எழுதியுள்ளேன்:

மரணத்திற்கு மேலான கலை இல்லை, மடிவது வாழ்தல் என்றாகும்” என்று அவர் திரும்பத்திரும்ப கூறுவதாகத் தோன்றுகிறது. எனினும், பௌத்த ஆலயமொன்றில் பிறந்து, பௌத்தப் பள்ளியொன்றில் படித்துள்ள அவருக்கு, மரணம் என்னும் கருத்தமைவு மேற்கில் உள்ளதை விட வேறானதாக இருந்தது.

விஷயங்கள் சார்ந்து எண்ணுவோரிடையே , தற்கொலை பற்றி சிந்திக்காதவர் உண்டா?” அந்தப் போக்கிரி “இக்கியு (1394-1481) தற்கொலை புரிவது பற்றி இருமுறை எண்ணினார். குரு இக்கியு, குதூகலமான நபராக, குழந்தைகளுக்கும் பரிச்சயமானவராக இருந்ததால், ”அந்தப்போக்கிரி” என்கிறேன்; எல்லையற்ற முறையில் இருந்த அவரது விசித்திர நடத்தை குறித்த, சுவையான சம்பவங்கள் ஏராளம். சிறுவர்கள் அவர் மீதேறி தாடியை வருடிவிடுவார்கள், பறவைகள் அவர் கையிலிருந்து உணவை எதிர்பார்க்கும். சிந்தையற்ற நிலையில் அவர் அறுதியானவர், அனைவரும் அணுகக்கூடிய கண்ணியமான குரு என்பது இவற்றிலிருந்து தோன்றும். இவ்வளவுக்கும் அவர் மிகவும் கண்டிப்பான, ஆழமான என் குருமார்களுள் ஒருவர். ஒரு சக்கரவர்த்தியின் மகனாகக்  கூறப்பட்ட அவர், ஆறுவயதில் ஆலயம் ஒன்றில் தங்கி, கவிதை நுட்பம் சேர்ந்த தன் மேதைமையை வெளிக்காட்டியவர். அதே வேளையில் மதம் – வாழ்க்கை சார்ந்து ஆழ்ந்த சந்தேகங்கள் கொண்டிருந்தவர்.

“கடவுள் ஒருவர் இருப்பின், எனக்கு உதவட்டும். ஒருவரும் இல்லாவிடில், ஏரியின் அடியாழம் சென்று மீன்களுக்கு நான் இரையாகும்படி விட்டுவிடவும்.” இவ்வார்த்தைகளை உச்சரித்ததும் ஓர் ஏரியில் குதிக்க முற்பட்ட அவர், தடுத்து நிறுத்தப்பட்டார். இன்னொரு சந்தர்ப்பத்தில், அவரது தைத்தோ குஜி ஆலயத்தில் ஒரு துறவி தற்கொலை செய்து கொண்டார். ” என் தோள்களில் சுமை கனக்கிறது” என்று குறிப்பிட்ட இக்கியு பட்டினிகிடந்து உயிர்விட முயன்றார். தன் கவிதைத் தொகுப்புக்கு “collection of Roiling clouds” எனப் பெயரிட்டார், தனது புனைபெயராக Roiling Clouds னை சூட்டிக் கொண்டார். அவரது தொகுப்பிலும் அடுத்து வந்தவற்றிலும் சீனாவிலும் மத்தியகால ஜப்பானிய ஜென் கவிதையிலும் ஈடு இணையற்ற கவிதைகள் உள்ளன. அவை காமநேர்த்தி வெளிப்பாடும், படுக்கையறை ரகசியங்களும் மிகுந்து ஆச்சரியப் படுத்துபவை. விதிகளை மீறி, தன் கால ஜென் விலக்கு  கறை தாண்டி, மீன் தின்றும் மது அருந்தியும் விலை மாதர்களிடம் சென்றும், அவற்றிலிருந்து விடுபட முயன்றார்; உள் நாட்டுப் போரும் ஒழுக்கச் சீர்கேடுமான காலகட்டத்தில், நிறுவனம் சார்ந்த மத வடிவங்களை எதிர்த்து, ஜென்னை நாடி, வாழ்வின் சாரம், மானுட இருப்பின் புதுப்பித்தலுக்கும் உறுதிப்பாட்டிற்கும் அக்கறை காட்டினார்.

கையோட்டாவின் முரசாகினோவிலுள்ள அவரது தைதோ குஜி ஆலயம், தேநீர் விருந்துக்கான மையமாக உள்ளது; அவரது கையெழுத்துக் கலையின் மாதிரிகள் அவ்வளவு போற்றப்படுகின்றன. இக்கியுவின் கையெழுத்துக் கலை மாதிரிகள் என்னிடமே இரண்டு உள்ளன. அவற்றில் ஒன்று ஒருவரிதான் ‘புத்தரின் உலகில் நுழைவது எளிது, சாத்தானின் உலகில் நுழைவது கடினம்’. இவ்வார்த்தைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ள நான், என் கையெழுத்துக் கலைக்கு மாதிரியாக இவற்றைப் பெரிதும் பயன் படுத்திக் கொள்வேன். தெரிவு செய்திடச் சிரமமான எவ்வித வழியிலும் அவற்றை வாசிக்க முடியும், ஆனால் புத்தரின் உலகில் சேர்ந்து கொண்ட சாத்தானின் உலகில், ஜென்னின் இக்கியு பெரும் நெருக்கத்துடன் என்னிடம் வந்து சேருகிறார். உண்மை, நன்மை, அழகினைத்தேடிடும் கலைஞனுக்கு, சாத்தானின் உலகம் குறித்த அவ்வார்த்தைகளிலுள்ள அச்சமும் கோரிக்கையும் பிரார்த்தனையாகக் கூட…. மேற்பரப்பில் அது வெளிப்படையாக இருக்க வேண்டும், பின்னே  மறைந்திருந்து, விதியின் தவிர்க்க இயலாமையுடன் பேசுவது கூடிடும். சாத்தானின் உலகமின்றி, புத்தரின் எவ்வுலகும் இருக்க இயலாது. மற்றும் சாத்தானின் உலகம் நுழைவதற்குச் சிரமமானது. அது பலவீன இருதயம் உள்ளவர்களுக்கானதல்ல.

          “ஒரு புத்தரைக்கண்டால் கொன்றுவிடு. சட்டத்தின் குலமுதல்வரைக் கண்டால், கொன்றுவிடு.”

இது நன்கறியப்பட்ட ஜென் லட்சியம், ஒருவரது சொந்த முயற்சிகளிலான விடுதலையில் நம்பிக்கை மிக்கவை, நம்பிக்கையிலான விடுதலையில் சார்ந்திருப்பவை எனப் பிரிவுகளாக பொதுப்பட பௌத்தம் பிரிக்கப்பட்டால், ஜென்னில் இத்தகைய ஆவேச உச்சரிப்புகள் இருந்தே தீரும், – ஒருவரது சொந்த முயற்சிகளிலான விடுதலையினை வற்புறுத்துபவை இந்த உச்சரிப்புகள். மறுபக்கமிருப்பது நம்பிக்கை வாயிலான விடுதலை. ஸின்பிரிவின் நிருவனரான ஸின்ரான் (1173-1262) ஒரு முறை கூறினார்: “நல்லவர்கள் சொர்கத்தில் மறுபிறவி எடுப்பார்கள், தீயவர்களுடன் எப்படி நீண்டகாலம் இருக்க முடியும். இக்கியுவின் புத்தர் உலகுக்கும், சாத்தானின் உலகுக்கும் மற்றும் இப்பார்வைக்கும் இடையே பொதுவான இன்று உள்ளது, இருப்பினும் இவ்விரண்டும் வெவ்வேறான சார்புகளுடையவை என்பதுதான் முக்கியம். ஸின்ரான் “தனியொரு சீடனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்றும் குறிப்பிடப்பட்டார்.

 “புத்தரைக் கண்டால், கொன்று விடு. சட்டத்தின் குலமுதல்வரைக்கண்டால் கொன்று விடு.”

 “தனியொரு சீடனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்”

இவ்விரு வாக்கியங்களில் இருக்கிறது எல்லையின் இறுக்கமான விதி.

ஜென்னில்  உருவ வழிபாடில்லை, ஜென்னில் சிலைகள் உண்டு; ஆனால் தியானிக்கும் கூடத்தில் புத்தரின் உருவங்களோ சித்திரங்களோ கிடையாது, புனித நூல்களும் கிடையாது. ஜென் சீடன் கண்களை மூடியபடி, நீண்ட நேரம் நிசப்தமாக, சலனமின்றி அமர்ந்திருக்கிறான். தற்போதைக்கு கருத்துகள் – சிந்தனைகளனைத்திலிருந்தும் விடுபட்டு, அசைவற்ற நிலைக்குள் நுழைகின்றான். அகத்திலிருந்து கிளம்பி, இன்மையின் உலகிற்குள் பிரவேசிக்கிறான். அது மேற்கின் ஒன்றுமற்றதன்மையோ வெறுமையோ அல்ல, மாறாக , ஒவ்வொன்றும் பிறிதொன்றுடன் சுதந்திரமாக தொடர்புறுத்திக் கொள்வதும், எல்லைகளைத்தாண்டி வரம்பின்றி இருப்பதுமான ஆன்மாவின் பிரபஞ்சமாகும். ஜென் குருமார்கள் இருக்கவே செய்கின்றனர்,குருவுடனான கேள்வி-பதில்கள் சார்ந்த கலந்துறவாடலால் சீடன் அறிவுவிளக்கத்தை நோக்கி கொண்டுவரப்படுகிறான்;புனித நூல்களைக் கற்கிறான். எனினும், சீடன் தன் சிந்தனைகளுக்கு தலைவனாக இருக்க வேண்டும், தன்முயற்சிகளாலேயே அறிவு விளக்கத்தை அடையவேண்டும். இங்கே அழுத்தம் அறிவின் மீதின்றி, வாதத்தின் மீதின்றி, உள்ளுணர்வு மற்றும் உடனடி உணர்வோட்டத்தின் மீதுதான். அறிவு விளக்கம் போதனை மூலமாக அல்லாமல், உள்முகமாக  விழிப்புற்ற விழியின் மூலமாகவே வருகின்றது. ‘வார்த்தைகளுக்கு விட்டொழிப்பதில்தான்’ உணமை உள்ளது, அது ’வார்த்தைகளுக்கு வெளியில்’ உள்ளது. இதனால் விமலகீர்த்தி நிர்தேச சூத்திரத்தில் ‘இடிமுழக்கம் போன்ற நிசப்தம்’ என்னும் அதீதத்தைப் பார்க்கிறோம். தென்னிந்திய இளவரசன் போதிதர்மன் சுமார் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்தவராக, சீனத்தில் ஜென்னை நிறுவினார். குகைச்சுவர் ஒன்றை உற்று நோக்கியவாறு ஒன்பதாண்டுகள் அமர்ந்திருந்து, இறுதியில் அறிவுவிளக்கமடைந்தார் என்கிறது மரபு. அமர்ந்த நிலையில் நிசப்தமான தியானம் என்னும் ஜென் நடைமுறை போதிதர்மாவிடமிருந்து பெறப்படுவது.

இக்கியுவின் மதம் சார்ந்த இரு கவிதைகள்.

 “அப்போது உன்னிடம் பதில்கேட்டேன். எனக்குத்

                             தெரியாத போதும்  உனக்குத் தெரியவில்லை.

அப்போது உன்  இருதயத்தில் இருந்து என்ன, போதி தர்மரே?”

 

 “மற்றும் இருதயம் என்பதென்ன?

சித்திரத்திலுள்ள பைன்மரத் தென்றலின் ஓசையாகும்”

இங்கே கீழைத்தேய ஓவியத்தின் ஆன்மாவைக் கொண்டுள்ளோம், ஓவியத்தின் இருதயம் வெளியில்,சுருக்கத்தில் உள்ளது, விட்டுவிடபட்டது வரையப்படவில்லை. சீன ஓவியர் சின் நுங்கின் வார்த்தைகளில் கூறுவதானால் , “கிளையை நன்றாகத்தீட்டு காற்றின் ஓசையை நன்றாகக் கேட்பாய்”. மூங்கிலின் குரலில் அறிவு விளக்கம். பீச் மலர் மலர்வதில் இருதயப் பிரகாசம் என்பனவெல்லாம் இல்லையா? என வினவுகிறார் டோஜன்.

மலர்கலையின் வித்தகர் இகொனாபோ ஸெனோ, “பூக்களைத்தெளிப்பதும் சிறிது தண்ணீரும் சேர்த்து, ஆறுகள்-மலைகளின் பாரியத்தன்மையை ஒருவர் உருவாக்கிவிட முடியும்” என்றார். ஜப்பானியத் தோட்டமும்,  இயற்கையின்  பாரியதன்மையை அடையாளப்படுத்துகிறது. மேற்கத்தைய தோட்டம் சமநிலையை நோக்கியதாயிருக்கும். ஜப்பானியத் தோட்டம் சமநிலை அற்றதாயிருக்கும். சமநிலை அற்றது பன்மைத்தன்மை மற்றும் பாரியதன்மையை அடையாளப்படுத்திடும் பெரும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது. நாசுக்கான உணர்வு நுட்பங்களால் திணிக்கப்படும். சமநிலை மீது சமநிலையற்ற தன்மை நிற்கிறது. நிலவியல் தோட்டத்தின் ஜப்பானியக் கலையை விடவும், சிக்கலானது, பல்வேறானது, விவரணங்களில் கவனமிக்கது, எதுவுமில்லை. இல்லாத மலைகளுக்கும் ஆறுகளுக்கும் வெளிப்பாடு அளிக்கும் வகையில் கற்களை ஒழுங்குபடுத்தியிருப்பது, முற்றிலும் பாறைகளாலாகி, உலர்ந்த நிலவியல் காட்சி எனப்படும் வடிவம் இருக்கின்றது; மாபெரும் கடலின் அலைகள் பாறைகளின் மேல் மோதுகின்றதையும் உணர்த்தும். அறுதியானதாக செறிவூட்டப்பட்டுவிடும் ஜப்பானியத்தோட்டம், போன்ஸாய குள்ளத்தோட்டம் அல்லது போன்ஸெகியக, அதன் உலர்வடிவமாகிறது.

நிலவியலுக்கான கீழைத்தேய சொல்லில் ‘மலை-நீர்’ என்னும் நேர்பொருள் உள்ளது.  நிலவியல் தோட்டத்திலும் உணர்த்துதல்கள் கொண்டு, வற்றிய-வீணாக்கப்பட்ட மற்றும் துன்பகரமான – கந்தலானதும் ஆன கருத்தமைவைப் பெற்றுள்ளது. இருப்பினும் தேநீர் விருந்தால் பெரிதும் மதிக்கப்படும் துன்பகரமான, எளிமையான, இலையுதிர்காலப் பண்புகளில், ‘கண்ணியமுடன் மதிக்கத்தக்கது, தெளிவாக அமைதியானது’ என்னும் வெளிப்பாட்டில் அது தொகுத்துரைக்கப்படுகிறது; ஆன்மாவின் மாபெரும் செழுமை மறைவாக உள்ளது; மிக இறுக்கமான , எளிமையான தேநீர் அறை, எல்லையில்லா வெளியையும் வரம்பற்ற நேர்த்தியையும் கொண்டிருக்கிறது. நூறு பூக்களை விடவும் ஒரேயொரு பூ, மிகப் பிரகாசத்தை பெற்றுள்ளது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தேநீர் விருந்து மற்றும் மலர்க்கலையின் மாபெரும் வித்தகர் ரிக்யு, முழுதாய் மலர்ந்த பூக்களை பயன்படுத்துவது தவறு என்று போதித்தார். இன்றைக்கு தேநீர் விருந்தில் கூட , தேநீர் அறையின் மூலையில் ஒரேயொரு மலரை, அதுவும் மொட்டினை வைத்திருக்கும் நடைமுறை உள்ளது. குளிர்காலத்தில், குளிர்காலத்தின் தனிச்சிறப்பான ஒரு மலர் ‘தனிமையில் உதவும் மகா’ என்னும் பொருளுடைய wanisuke என்னும் பெயருடன் தெரிவு செய்யப்படும் வெண்மைக்கும் சிறிய அளவிலான தன்மைக்கும் முக்கியத்துவம் பெற்ற  ஒரு camellia தெரிவு செய்யப்படும்; ஒரேயொரு மொட்டுதான் தேநீர் அறை மூலையில் வைக்கப்படும். வெண்மை, அனைத்து நிறங்களிலும் தூயது, மற்ற வண்ணங்களையெல்லாம் தன்னிடத்தே கொண்டது. மொட்டின் மீது பனித்துளி எப்போதும் இருத்தல் வேண்டும். சில நீர்த்துளிகளால் ஈரப்படுத்தப்பட்டிருக்கும். தேநீர் விருந்துக்குரிய மிக அற்புதமான ஒழுங்கமைப்பு மே மாதம் வரும், அப்போது ஜாடியில் இளஞ்சிவப்பு மலர் வைக்கப்படும்; ஆனால் இங்கு எப்போதும் பனித்துளி உள்ள ஒரேயொரு மொட்டுதான். மலர் மீது நீர்த்துளிகள் இருப்பதுடன், ஜாடியும் அடிக்கடி ஈரப்பதமாக இருக்கும்.

பூச்சாடிகளிடையே, உயர்ந்த தரம் தரப்படுவது பழமையான இல்காவற்கு – 16-17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த  அதற்கு விலை அதிகம். பழைய இல்கா ஈரம்பட்டதும், பொலிவுடன் அதன் வண்ணங்களும் பிரகாசமும் அழகுபெறும். இல்கா மிக அதிக வெப்பத்ஹ்டில் சுடப்படும். வைக்கோல் சாம்பலும் எரிபொருளின் புகையும் வீழ்ந்து, மேற்பரப்பில் பரவி, வெப்பம் தணிந்ததும் ஒருவித பிரகாசம் கொள்ளூம். வண்ணங்கள் வார்த்தெடுக்கப்படாமல், சூளை இயக்கத்தில் இயற்கையின் விளைவாக இருப்பதால், வண்ண வடிவங்கள், சூளையின் விநோதம்- விசித்திரங்களென அழைக்கப்படும்படி அவ்வளவு தினுசுகளில் எழும். பழைய இல்காவின் கரடு முரடான, எளிமையான, திண்ணிய மேற்பரப்புகள், ஈரமாக்கப்பட்டதும் வேட்கை மிக்க பளபளப்பு பெறும். பூக்களின் பனித்துளியினுடைய சந்தத்திற்கேற்ப அது சுவாசிக்கும். தேநீர் விருந்தின் ரசனை, பயிர்படுத்தும் முன் தேநீர் கிண்ணத்தை ஈரப்படுத்த வேண்டும் – அதற்குரிய மிருதுவான பிரகாசத்தை தரும் வகையில் – என்று கோரும்.

“ மலைகளும் இலைகளும் தமக்குரிய வடிவங்களில் தோன்ற வேண்டும்” என இகெனொபோ ஸெனோவோ இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். தனது மலர் ஒழுங்குபடுத்தும் கலையில் புத்துணர்வைக் கொண்டு வந்த அவர், நொறுங்கிய கலங்களிலும் வடிய கிளைகளிலும் “பூக்களை”க் கண்டார்; அவற்றில்  கூட அறிவுவிளக்கம் பூக்களிலிருந்தே வருகின்றது. தொல்காலத்தவர் பூக்களை ஒழுங்குபடுத்தி, அறிவு விளக்கத்தைப் பின்தொடர்ந்தனர். ஜென்னின் செல்வாக்கில், ஜப்பானிய உணர்வின் இருதயத்திற்கு விழிப்புணர்வை வருவதை இங்கே காண்கிறோம். நீண்ட உள்நாட்டு யுத்தங்களின் சீரழிவில் வாழ்கின்ற மனிதனின் இருதயம் இதிலும் இருக்கக் கூடும். பத்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட The Tales of Ise, தன்னுணர்ச்சிப்பாங்கான சுவைமிக்க சம்பவங்களின் மிகப்பழமையான ஜப்பானிய சேகரமாகும். அவற்ற்ல் பல சிறுகதைகளாயிருக்கும். அவற்றில் ஒன்றில், அர்வரா நோ யுகிஹிரா என்னும் கவிஞர், விருந்தினர்களை வரவழைத்து, பூக்களை முன்வைக்கின்றார்:

“உணர்வோட்டமிக்க மனிதரான அவர், பெரியதொரு ஜாடியில் வழக்கத்திற்குமாறான மலரை வைத்திருந்தார்.

பூக்களின் வாசனை 3½ அடிக்கு உயர்த்தது.”

இவ்வளவு உயரத்திற்கு இம்மலரின் வாசனை எழுவது வழக்கத்திற்கு மாறானது; அது எழுத்தாளரின் நம்பகத்தன்மையைச் சந்தேகிக்கும்; எனினும் இம்மாபெரும் வாசனையில் ஹீயன் பண்பாட்டின்  அடையாளத்தை என்னால் உணர முடிகிறது. இம்மலர் மிகவும் ஜப்பானிய மலர், பெண்ணின் நளினம் மிக்கது. தென்றலில் தவழும் இப்பூவின் வாசம், மிருதுத்தன்மையை கண்ணியத்தை அடக்கத்தை உணர்த்தும். ஆரம்பகட்ட கோடையின் பசுமையில் மறைவதும் மீண்டும் தோன்றுவதுமான, Mono no aware என ஜப்பானியரால் நீண்ட காலமாகச் சித்தரிக்கப்படும், பொருட்களின் முனைப்பான அழகின் மீதான உணர்வை தம்மிடத்தே கொண்டுள்ளன. 3½ அடி உயரம் எஉம் அவ்வாசத்தில் குரிப்பிட்ட அதிசயம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹீயன்2 பண்பாட்டின் அதிசயங்கள் மற்றும் குறிப்பான ஜப்பானிய அழகின் எழுச்சி என்பன ‘மிகவும் வழக்கத்திற்கு மாறான இம்மலரைப் போல’, அதிசயமானவை – டாங் சீனத்தின் பண்பாடு நாளடைவில் உள்ளீர்க்கப்பட்டு, ஜப்பானிய மயமாக்கப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மன்னராம் ஏற்பாடு செய்யப்பட்ட கவிதைத் தொகுதிகளில் முதலில் கொகின்ஸீ, புனைவில் The Tales of Ise வெளிவந்தன; ஜப்பானிய செவ்வியல் உரைநடைப் பனுவல்களில் தலை சிறந்த கெஞ்சிகதை, முரசாக்கி சீமாட்டியால் எழுதப்பட்டது; மற்றும் ஸெய் ஷோனகோனின் Pillow Book வெளியானது; இவ்விருவரும் பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை வாழ்ந்தனர், ஆக எட்டு நூற்றண்டுகளாக ஜப்பானிய  இலக்கியத்தில் செல்வாக்குச் செலுத்தியதும் கட்டுப்படுத்தவும் செய்த மரபொன்று நிறுவப்பட்டது. கெஞ்சிகதை ஜப்பானிய இலக்கியத்தின் உயரிய சிகரமாகும். இன்றளவும் கூட அதனுடன் ஒப்பிடும்படியான புனைவு இருந்திடவில்லை. இத்தகு நவீன எழுத்து 11ஆம் நூற்றாண்டிலேயே எழுதப்பட்டிருப்பது அதிசயமாகும்; மற்றும் அதிசயமான இவ்வெழுத்து வெளிநாடுகளிலும் பரவலாக அறியப்பட்டுள்ளது.

செவ்வியல் ஜப்பானிய இலக்கியம் சார்ந்த எனது புரிதல் உறுதியற்றது எனினும், என் சிறுபிராயத்தில் எனது பிரதான வாசிப்புக் குரியனவாய் இருந்தவை ஹீயன் காவியங்களே; கெஞ்சி கதைதான் எனக்கு மிகப்பிடித்தமானது. அது எழுதப்பட்ட பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அதன் வசீகரம் நீடித்தது; போலிகளும் தழுவல்களும் அதற்கு அஞ்சலி செலுத்தின. கவிதை, நுண்கலைகள், கைவினைப்பொருட்கள், நிலவியல் தோட்டங்கள் என பலவற்றுக்கு கெஞ்சிகதை3 பரந்துபட்ட – ஆழ்ந்த ஆதாரமாக இருந்து வந்துள்ளது.

முரசாக்கியும், ஸெய்கோனும், பதினோராம் நூற்றாண்டின்  ஆரம்பத்தில் மடிந்திருக்கக் கூடிய இஸீமி ஸிகியு போன்ற புகழ்பெற்ற கவிஞர்களும், பதினோராம் நூற்றாண்டின் மத்தியில் மடிந்திருக்கக் கூடிய அஜாஸோம் எமோனும் ஏகாதிபத்திய அரசவையில் இடம் பெற்றவர்கள். ஜப்பானிய பண்பாடு , அரசவைப் பண்பாடு, பெண்சார்ந்தது. முதிர்ச்சி சிதைந்து கொண்டிருந்தபோது, கெஞ்சி மற்றும் Pillow Book என்பன அதன் மிக நேர்த்தியானவையாக இருந்தன. கீர்த்தியின் முடிவிலான துயரத்தை, ஜப்பானிய அரசவைப் பண்பாட்டின் உயர்ந்த அலையை ஒருவர் உணர்வார். அரசை சீரழிவை நோக்கிச் சென்றது, அதிகாரம் அரசவை கனவான்களிடமிருந்து ராணுவ உயர் குடும்பத்தினரிடம் சென்றது – 1192 இல் காமகடரா ஷோகுனேட்டிலிருந்து 1867-68 இல் மெய்ஜி மீட்பு வரை, அநேகமாக ஏழு நூற்றாண்டுகள் அவர்தம் கைகளில் இருந்தது. எனினும், ஏகாதிபத்திய நிறுவனமோ அரசவைப் பண்பாடோ மறைந்து விட்டதாகக் கருதிவிடலாகாது. ஏகாதிபத்திய தொகுதிகளில் 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தைச் சேர்ந்த எட்டாவதான “கொகின்ஸீ”வின் எழுத்துத்திறன் மேலும் ஓரடி தள்ளிவிடப்பட்டது – சில வேளைகளில், வெறுமனே வார்த்தை விளையாட்டாய் ஆகிப்போனது; ஆனால் மர்மமிக்க, உணர்த்தும் தன்மையதான, நினைவூட்டும் எட்டிக்காட்டும் தன்மையதான புவனிலை புனைவின் கூடுதல் அம்சங்கள், நவீன குறியீட்டியல் கவிதையுடன் பொதுத்தன்மையைப் பெற்றிருந்த அளவில் சேர்க்கப்பட்டன. முன்னர்  குறிப்பிடப்பட்ட ஸைக்யோ, ஹீயன் மற்றும் காமகடரா என்னும் இரு யுகங்களின் பிரதிநிதித்துவக் கவிஞராய் இருந்தார்.

“அவரைப் பற்றி கனவு கண்டேன் அவரைப் பற்றி

                                        எண்ணிக் கொண்டிருந்ததால்.

விழித்தெழும்படி விரும்பியிருக்கமாட்டேன், அது

                                      கனவென்று தெரிந்திருந்தால்”.

 

“ என் கனவுகளில் தவறாது அவரிடம் செல்கிறேன்

                                                             ஒவ்வோர் இரவும்.

ஆனால் இது விழிப்பு நிலையில் ஒரேயொரு

                                                              காட்சியே”

இவை கொகின்ஸீவின் தலைமைக் கவியான ஓனோ நோ கொமாச்சி என்னும் பெண் கவிஞருடையவை – கனவுகளைக் கூட நேரடியான யதார்த்த வாதத்தில் பாடுகிறார். ஆனால் முரோமசி காலத்தில், இக்கியுவின் அதே காலகட்டத்தில் வாழ்ந்த, சக்கரவர்த்தினி எய்ஃபுகுவின் கவிதைகளிடம் வருகையில், துயரார்ந்த குறியீட்டியலாக மாறும் நுணுக்கமான யதார்த்த வாதத்தை, நாசூக்கான ஜப்பானிய உணர்வை பெறுகிறோம்; மிகவும் நவீனமாகத் தோன்றுகின்றதைப் பார்க்க்றோம்:

“சிட்டுக்குருவிகள் மிழற்றும் மூங்கில் புதரின்மேல் மின்னுகிறது,

            இலையுதிர்கால நிறத்தைப் பெறுகிறது சூரிய ஒளி”.

 

            ” தோட்டத்தில் புல்லினைச் சிதறடிக்கும் இலையுதிர்காலக் காற்று

            ஒருவரின் எழும்புகளுக்குள் அமிழ்கின்றது.

            மாலைச் சூரியன் மறைகின்றது சுவர்மேல்.”

தெளிவான, சில்லிட்ட பனி குறித்துள்ள நான் மேற்கோள் காட்டியுள்ள கவிஞர் டோஜன், குளிர்கால நிலவு தன் தோழமை என்று எழுதினார்.  – இவருடைய கவிதைகள் பொதுவாக ஸின்கொகின்ஸீ காலத்துக்குரியவை. மையோ சைக்யோவுடன் கவிதைகளைப் பகிர்ந்து கொள்ள, இருவரும் சேர்ந்து கவிதையை விவாதித்தனர். மையோவின் வாழ்கை வரலாற்றில் அவர் சீடர் கிகாய் குறிப்பிடுகிறார்:

“ சைக்யோ அடிக்கடி வந்து கவிதை பற்றிப் பேசினார். கவிதையிடமான தன் அணுகுமுறை சாதாரண நிலையிலிருந்து தொலை தூரத்தது என்பார். செர்ரிப்பூக்கள், குயில், நிலவு, பனி என இயற்கையின் பல்வேறு வடிவங்களுடன் மோதிய அவரது விழிகளும் காதுகளும் வெறுமையால் நிரம்பின. வந்த வார்த்தைகளெல்லாம் உண்மையான வார்த்தைகளிலிருந்து வெளிவரவில்லையா? பூக்களைப் பற்றி அவர் பாடியபோது,பூக்கள் அவர் மனதில் இல்லை, அவர் நிலவைப் பற்றி பாடியபோது, நிலவு பற்றி சிந்திக்கவில்லை. சந்தர்ப்பம் தன்னை முன்னிறுத்த அவசியம் எழுந்து நிற்க, அவர் கவிதை எழுதினார். வானம் வண்ணம் பெற்றுக்கொண்டிருக்க, வானின் குறுக்கே எழுந்தது சிவப்பு வானவில். வானம் பிரகாசமாகிவர , வெள்ளைச் சூரியஒளி இருந்தது. இருப்பினும் வெற்றுவானம், தன் இயல்பால், பிரகாசமாகிவிடும் ஒன்றாக இல்லை. அது வண்ணத்தை ஏற்றிடும் ஒன்றாக இல்லை. வெற்று வானத்தைப் போன்ற உணர்வுடன், வெளிப்பாடு கொள்ளும் காட்சிகளுக்கெல்லாம் அவர் வண்ணமளிக்கின்றார், ஆனால் தடயமேதும் இல்லை. இத்தகைய கவிதையில்தான் அறுதி உண்மையின் வெளிப்பாடாக, புத்தர் இருந்தார்.”

இங்கே, கீழைத் தேயத்தின் வெறுமையை சூனியத்தைப் பெற்றுள்ளோம். என் எழுத்துகளே வெறுமையின் எழுத்துகளாக விவரிக்கப்பட்டுள்ளன, ஆனால் அதனை மேற்கின் இன்மைவாதமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆன்மிக நிறுவனம் முற்றிலும் வேறுபட்டதாகத் தோன்றும். பருவங்கள் குறித்த தன் கவிதைக்கு ‘உள்ளார்ந்த யதார்த்தம்’ என்ற பெயரிட்டார் – மற்றும் ஜென்னில் ஆழ்ந்திருந்த போதும் பருவங்களின் அழகைப்பாடினார். 

[ads_hr hr_style=”hr-dots”]

குறிப்புகள்:

  1. பொட்டிஸெல்லி : மறுமலர்ச்சிகாலத்தின் ஆரம்ப கட்டத்தைச் சேர்ந்த  இத்தாலி ஓவியர். The Birth of venus , இவரது புகழ்பெற்ற ஓவியம்.
  1. ஹீயன் பண்பாடு: செவ்வியல்கால இறுதி கட்டத்தின் ஜப்பானியப் பண்பாடு. 794 லிருந்து 1185 வரையிலானது. நவீனகையோட்டாவின் முந்தைய பெயரே ஹீயன்.பௌத்தம், தாவோயிஸம் மற்றும் இதர  செல்வாக்குகள் மேலோங்கியிருந்த காலம்.
  1. கெஞ்சிகதை: முரசாக்கி சீமாட்டியின் கெஞ்சிகதை (The Tale of Genji) கா.அப்பாதுரை மொழியாக்கத்தில் சாகித்ய அக்காதெமியால் வெளியிடப்பட்டுள்ளது.

 


 – யசுநாரி காவாபட்டா நோபல் உரை

தமிழில் : சா. தேவதாஸ்

 

[tds_info]

யசுநாரி காவாபட்டா (1899-1972)

ஜப்பானிய நாவலாசிரியர், சிறுகதையாளர். 1968 இல் நோபல் பரிசு பெற்றவர். 1972 இல் தற்கொலை செய்து கொண்டவர். அதுதற்கொலையானதல்ல  தற்செயலானது என அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் குறிப்பிட்டனர். அவரது நண்பரும் சக எழுத்தாளருமான யுகியோ மிஷிமாவின் தற்கொலை (1970) தந்த அதிர்ச்சியால் இறந்தார் என்று கூறுவதும் உண்டு.

 

சா. தேவதாஸ் தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், விமர்சகரும் ஆவார். பபானி பட்டாச்சார்யாவின் “லடாக்கிலிருந்து கவிழும் நிழல்” என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக 2014ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் நடையனேரியைச் சேர்ந்த சா. தேவதாஸ் இராசபாளையத்தில் வசித்து வருகிறார். 1975 – 77 காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்ற இவர் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இதுவரை இருபத்தைந்து நூல்களை மொழிபெயர்த்திருப்பதோடு ஆறு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்

[/tds_info]

 

நன்றி : தட்டச்சு உதவி – தேவராஜ் விட்டல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.