ஒரு வலசைப் பறவை


தை புலனின்பத்தின் ஆடையை உடுத்திக் கொள்கிறது. இதயம், வேதனையை”

  • டாண்டே அள்கியரி.

 

பின் இலையுதிர் காலத்தின் ஓர் இரவில், ஹிபியா பொது அரங்கில் இசை நிகழ்ச்சியை முடித்து கணக்கிலடங்கா எண்ணிக்கையில் காகங்கள், பல்வேறு உருவடிவங்களில் முண்டியடித்தும் முட்டித் தள்ளியபடியும் தங்கள் வீடுகளை நோக்கி சிறகுகளை விரித்து வழிந்து வெளியேறிக் கொண்டிருந்தன.

“அட… அது மிஸ்டர்.யமானா தானே? இல்லையா?”

அக்குரல், மெலிந்து நெடிந்து நின்ற அருவருப்பான ஒருவனுக்குரியது. தொப்பியணியாமல் தலைவிரிக்கோலத்துடன் இறுக்கமான மேல்சட்டை அணிந்திருந்தான்.

“ஆமாம்…,” என்று பதிலளித்தார் நடுத்தர வயதான நவநாகரிகமிக்க மிஸ்டர்.யமானா. அவ்விளைஞன் தலைப்படும் திசையை சற்றும் பொருட்படுத்தாது அவர் யுராகுசோவை நோக்கி தன் நடையைத் தொடர்ந்தார்.

“நீ யார்?”

“நானா?” அந்த இளைஞன் தன் பின் கழுத்து மயிரை தூக்கித் தள்ளியபடி ஒரு சிறு எக்களிப்பை உதிர்த்தான். “ஒரு கலை ஆர்வலன் என்று வைத்துக் கொள்ளுங்களேன், ஏன்?”

“சரி, உனக்கு என்ன வேண்டும்?”

“நான் உங்கள் விசிறி, உங்கள் இசை விமர்சனங்களை விரும்புபவன். சமீபமாக நீங்கள் எதுவும் எழுதி நான் பார்க்கவில்லையே.”

“அப்படியா.. ஆனால், உண்மையில்….. நான் எழுதியிருக்கிறேன்.”

ஐயையோ!!! இரவின் போர்வைக்குள் அந்த இளைஞன் தன் உதடுகளை சுழித்துக் கொண்டான். டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தின் மாணவன் அவன். ஆனால் அவன் அதன் சீருடையிலுமில்லை அதைக் குறிக்கும் தொப்பியும் அணிந்திருக்கவில்லை; வெறும் இறுக்கமான மேல்கோட்டும் அதற்குப் பொருத்தமாக உள்அங்கியும் காற்சட்டையும். அவன் தன் பெற்றோரிடமிருந்து எந்த பண உதவியும் பெறுவதில்லை, அதனால் பிழைக்கும் வழி தேடி ஒரு முறை ஷூக்களுக்கு பாலீஷ் போடும் வேலையை செய்திருக்கிறான், பிறிதொரு முறை லாட்டரி சீட்டுகளை விற்றிருக்கிறான். ஆனால் இந்நாட்களில் அவன் தன் வருமானத்தை தேற்றிக் கொள்வது இவ்வாறாகத்தான் : அதிகாரப்பூர்வமாக, ஒரு பதிப்பகத்தில் பிழை திருத்துனரின் உதவியாளன். அதோடு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நிழலுலக சமாச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகிறான். அதனால், அவன் சூழ்நிலையை வைத்து நீங்கள் ஊகிக்கும் அளவை விடவும் அதிகமான பணம் வைத்திருக்கிறான்.

“மொஸார்ட்டினுடையது மட்டும்தான் உண்மையான இசை என்று அழைக்கத்தகுந்தது, அப்படித்தானே?”

மண்ணைக் கவ்விய முகப்புகழ்ச்சிப் பேச்சுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் அந்த இளைஞன் மொஸார்ட்டை விதந்தோதும் மிஸ்டர்.யமானாவின் உணர்ச்சிக் கொப்புளிக்கும் கட்டுரையை நினைவுகூர்ந்தான். பின்னர் உரையாடலை மீண்டும் தொடங்க, கவனமாக மெல்ல நயம்பட அக்கட்டுரையை தனக்கு சாதகமாக்கி ஒரு கருத்தை முணுமுணுத்தான்.

“அது உண்மையில்லை…”

அருமை! உரையாடும் உறுதியை திரும்பப் பெற்றுவிட்டான். அவனுடைய கன்னங்கள் மேல்சட்டையின் காலருக்கு உள்ளே தற்போது இறுக்கம் குறைந்து தளர்ந்துவிட்டன என்று என்னால் பணம் வைத்துகூட பந்தயம் கட்ட முடியும்.

திடங்கொண்ட ஊக்கத்தில் அவன் மேலும் தொடர்ந்தான்…

“நவீன இசையின் சீரழிவு பீத்தோவனின் காலத்தில்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனின் வாழ்க்கையோடு இசை நேருக்கு நேர் மோதிக்கொள்ள வேண்டும் என்பது முறையற்ற சிந்தனை. இசை என்பது நம் வாழ்விற்கு அரும்பெரும் துணையாக இருக்க வேண்டும். இன்றிரவு மொஸார்ட்டை கேட்ட பிறகு, இசையென்பது உண்மையில் என்ன என்று எனக்குள் துலங்கத் தொடங்கியது….”

“இதுதான் என்னுடைய ரயில் நிலையம்”

அது யுராகுசோ ரயில் நிலையம்.

“ஓ.. அப்படியா. என்னை மன்னிக்கவேண்டும். இன்றிரவு உங்களை சந்தித்து பேச முடிந்ததில் உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி.”

இரண்டு கைகளையும் தன் காற்சட்டை பாக்கெட்டுக்குள் நுழைத்திருந்த அந்த இளைஞன் லேசாக குனிந்து வணங்கி மிஸ்டர்.யமானாவிடமிருந்து விடை பெற்று கின்ஸாவை நோக்கி வலப்புறமாக திரும்பினான்.

பீதோவன் பீதோவன்தான், மொஸார்ட் மொஸார்ட்தான், அதைப் பற்றி சொல்வதற்கு வேறொன்றுமில்லை. மிஸ்டர்.யமானா மீசை வளர்க்கிறார், அதற்கான காரணம் எல்லா புரிதல்களுக்கும் அப்பாற்பட்டது. ஒருவேளை அவர் நுணுகிக் காணும் கண்கள் வாய்க்கப் பெறாதவராக இருக்கலாம். ஆமாம், நுண்ணோக்கு இல்லை அதனால் அவருக்கு அருவருப்பு என்று எதுவும் இல்லை. ஒருவேளை நானும் அவரைப் போன்றவன்தானோ. ரசனையற்றவன்! ஆனால் மீசை… அது பற்களுக்கு உகந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஓ..பொறுங்கள், ஒருவரின் சதையைக் கடிக்கத்தானா அது? சேச்சே… எனக்கு பேரரசரின் மீசை நினைவிற்கு வருகிறது[1], அவ்வளவு நேர்த்தியானது – எப்படியெல்லாம் தன்னை மேற்கத்திய பாணியில் அலங்கரித்துக் கொள்வார் அவர். ஆனாலும், மரபான கட்டைச் செருப்பையே அணிந்திருப்பார். ஓ, மிகவும் பரிதாபம்! உண்மையில், மேட்டிமைப் பொருந்திய பேரரசனின் உளவியல் என்னால் புரிந்துகொள்ள முடியாததாக இருக்கலாம். என்னைக் கேட்டால் ஒருவரின் மீசை அதை பூண்டிருப்பவரோடு சற்றே சண்டையிடும் ஆர்வத்தில் உரசிக்கொண்டிருப்பதைப்  போலிருக்கிறது என்று சொல்வேன். உறக்கத்தில் அவரின் முகம் ஒரு பிச்சைக்காரனுடையதைப் போன்று இருந்திருக்கக்கூடும். நானும் ஒன்று வளர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். அது எனக்கு இதைப்பற்றிய ஏதாவது புரிதலைக் கொடுக்கலாம். ஒரு நம்பிக்கைதான். மார்க்ஸின் மீசையை எவ்வார்த்தை கொண்டு விவரித்துவிட முடியும்? அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது? சோள நாறுகளை அவரது மூக்கின் கீழே சொருகி வைத்தது போலிருக்கிறது. விளங்கிக்கொள்ள முடியாத மர்மம். டெஸ்கார்ட்டேவினுடையது மாட்டின் வாயில் வழியும் எச்சிலைப் போலிருக்கிறது – ஐயுறுவாதத்தின் தனிக் குறியீடோ அது, ஒருவேளை? பிறகு, அவரது பெயர் என்ன? யோசித்துக் கொண்டிருக்கிறேன்… அட, ஆமாம்.., மிஸ்.டேனாபி, நிச்சயமாகத் தெரியும். நாற்பது வயதானவர். இந்த வயதில் ஒரு பெண்மணியாயிருந்தும் கூட செலவு செய்வதற்கு உபரி பணம் வைத்திருக்கிறார். அவர் மிகச் சிறிய உருவத்தில் பார்ப்பதற்கு இளமையாக இருப்பவர் என்பதுகூட ஒருவகையில் உதவுகிறது.

“மிஸ்.டேனாபி.”

நான் அவரது தோளைத் தட்டினேன். ஆஹ்ஹ்! பச்சை வட்டத்தொப்பி! தோற்றக்கேடு! கருத்தியலாளர்கள் அழகுணர்வை புறக்கணிக்கிறார்களா? ஆனால் உங்கள் வயது.. உங்கள் வயதையாவது சற்று நினைவில் கொள்ளுங்கள்!

“யாரு?”

ஓ.. கிட்டப்பார்வை வேறயா? இதற்கெல்லாம் ஒரு முடிவே கிடையாதா?

“கிரேயான் பதிப்பகத்தில் உதவியாளர்….”

நான் என் பெயரையும் சொல்லவேண்டுமா? சைனஸ் வந்து காது கோளாறு ஆகிவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியாகத் தெரியுமா?

“ஓ.. மன்னிக்கவும், மிஸ்டர்.யனகாவா.”

அது என்னுடைய உண்மையான பெயரில்லை, ஆனால் அதை நான் உங்களிடம் சொல்லப் போவதில்லை.

“ஆமாம், சென்ற முறை நீங்கள் உதவியதற்காக நன்றி சொல்ல விரும்பினேன்.”

“பரவாயில்லை”

“எங்கேயிருந்து வருகிறீர்கள்?”

“நீங்கள்?”

ஓ…ஏன் இவ்வளவு அழுத்தம்?

“இசை நிகழ்ச்சி”

“அப்படியா…சரி!”

இப்போது உங்கள் கவசங்களை உங்களால் தளர்த்திக் கொள்ள முடியுமா? இதற்காகத்தான் நான் இசை நிகழ்வுகளுக்கோ அல்லது இது போல வேறெதற்காவதோ போய்வர வேண்டியிருக்கிறது.

“நான் என்னுடைய வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறேன், சுரங்க ரயில் பிடிக்க வேண்டும். செய்தித்தாள் நிலையத்தில் எனக்குக் கொஞ்சம் வேலை இருந்தது.

‘கொஞ்சம் வேலை’ என்று நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்? பொய் சொல்வதை நிறுத்துங்கள். நீங்கள் ஒரு ஆணுடன் இருந்துவிட்டு வருகிறீர்கள், இல்லையா? பத்திரிக்கை? என்னே ஒரு பொதுவுடைமைப் பெண்ணின் வெற்றாராவாரம்.

“ஏதும் உரை நிகழ்த்தினீர்களா?”

பாருங்கள்! ஒரு சிறு வெட்கம் கூட தோன்றவில்லை அம்முகத்தில்.

“இல்லை.. தொழிற்சங்கம் தொடர்பாக…”

தொழிற்சங்கமா? பொதுப் புத்தியின் அகராதி அதை இவ்வாறு விளக்குகிறது – ஒன்றுவிடாமல் எல்லா வழிகளையும் முயற்சித்துப் பார்ப்பது, கடைசியில் ஒருவரை சோர்வுறச்செய்வது,  கண்ணீரில் கிடத்திவிடுவது; பரபரத்திருத்தல் என்பது அதன் மற்றொரு பெயர்.

என் கண்களும் கண்ணீரைக் கண்டறியாதவையல்ல.

“ஒவ்வொரு நாளும் பரபரப்பாக இருக்குமே”

“ஆமாம்… நீங்கள் சொல்வது உண்மைதான்..”

நான் சரியான இடத்தைத் தொட்டுவிட்டேன் என்று எனக்குத் தெரியும்.

“ஆனால் மக்கள் புரட்சிக்கு இதைவிட ஒரு சரியான தருணம் இதுவரை அமைந்ததில்லைதானே?”

“உண்மைதான். இப்போதுதான் அதற்கான வாய்ப்பு.”

“இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை, சரிதானே?”

“ஆனால் நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன், அது எக்காலமானாலும்”

என் முகஸ்துதி பேச்சுகள் இவரிடமும் தோற்றுவிட்டனவா? – இவரை எது கனிய வைக்கும் என்று வியந்து  யோசிக்கிறேன்.

“ஒரு கோப்பை தேநீர் அருந்திக்கொண்டே பேசலாமே?”

விட்டுவிடாதே, எப்படியாவது அவரிடமிருந்து ஒரு தேநீரைத் தேற்றிவிடு.

“நிச்சயமாக, ஆனால் இந்த அழைப்பை பிறகொரு நாளுக்கென வைத்துக் கொள்கிறேனே, இன்று வேண்டாம்.”

என்ன ஒரு காரியக்கார பெண் இவள்! இவள் நிச்சயமாக நிதி கையாள்வதில் விவேகமுற்றவளாக  இருப்பாள்; உன்னைப் போன்ற ஒரு பெண்ணுடன் வாழும் ஆசி பெற்ற மனிதன் பாக்கியவானாகத்தான் இருப்பான்; அதோடு குழைந்து போகும் பண்புச் சாயலும் வந்து சேர்ந்துவிடும்.

நாற்பது வயது பெண்மணி நாற்பது வயது பெண்மணிதான். முப்பது வயது பெண் முப்பது வயதுப் பெண்தான். பதினாறோ பதினேழோ வயதான பெண் பதினாறோ பதினேழோ வயதான பெண்தான். பீதோவன். மொஸார்ட். மிஸ்டர்.யமானா. மார்க்ஸ். டெஸ்கார்டே. பேரரசன். மிஸ்.டேனாபி. ஆனால், இப்போது நான் தன்னந்தனியன். வெறும் காற்று.

சரி, இன்றிரவு நான் என்ன சாப்பிடுவது? இதென்ன வயிற்றில் ஒரு மாதிரி குமட்டல்? ஒருவேளை, இசை கச்சேரிகளெல்லாம் வயிற்றுக்கு ஒவ்வாதவையோ? அந்த ஏப்பத்தை அடக்கிவைத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.

“ஹே.. யனகாவா!”

ஆஹ்ஹ்… இது நல்ல பெயரே இல்லை! கூடாது. நாளையே வேறொரு சிறந்த புனைப் பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும். அது இருக்கட்டும், யார் இவன்? ஒருபோதும் காணச் சகியாதவனாக இருக்கிறானே. அட ஆமாம்! எழுத்தாளர் ஆகும் ஆர்வத்துடன் தன் கையெழுத்துப் பிரதியுடன் என் அலுவலகம் வந்தவன். சற்றும் சுவாரசியமற்றவன்.. எப்போதும் குடிபோதை. என்னிடமிருந்து எதையோ பெற்றுக் கொள்ள விரும்புகிறானோ. ஒட்டாமல் விலகியே நிற்கிறேன்.

“ஆமா.. ஆனால் நீங்கள் யார்…?”

என்னிடமிருந்து எப்படியும் அவன் ஏதாவது கடன் வாங்கிவிடக் கூடும்,

“எப்பொழுது என்று மறந்துவிட்டேன், ஆனால் என் கையெழுத்துப் பிரதியுடன் நான் உங்கள் அலுவலகத்திற்கு ஒருமுறை வந்திருக்கிறேன். நான் அங்கிருந்து புறப்படும் முன்னர் அது காஃபு[2]வின் எழுத்துகளின் அப்பட்டமான நகல் என்று சொன்னீர்கள். அதுவே நான் அங்கிருந்து கிளம்ப சூசகமான சொல் அல்லவா?”

எனக்கு மிரட்டல் விட முயற்சிக்கிறானா? நான் அப்படியெல்லாம் விமர்சித்திருக்கவே மாட்டேன். பார்த்து ‘பின்பற்றியது’ என்றோ ‘போலச் செய்தல்’ என்றோதான் சொல்லியிருப்பேன். எது எப்படியானாலும் நான் அதில் ஒரு பக்கத்தைக் கூட படிக்கவில்லை. தலைப்பே என்னை மேலே செல்ல விடாமல் தடுத்துவிட்டது. அது என்ன? ஆங்..! ‘ஒரு நடன அழகியின் விரும்பப்படாத கிறுக்கல்கள்’. நான் தான் சற்று திடுக்கிட்டு பின் சங்கடத்திற்கு உள்ளானேன். இப்படி ஒரு மடையன் இந்த உலகில் இன்னும் ஜீவித்திருக்க முடியுமென்றே என்னால் நம்ப முடியவில்லை.

“இப்போது ஞாபகம் வருகிறது”

மிகுந்த சம்பிரதாயத்துடன் முகமன் கூறுவதால் ஒன்றும் கெட்டுவிடாது. இந்த ஆள் ஒரு மட்டி. இவனிடம் சிக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. பார்ப்பதற்கு பலவீனமாகத்தான் இருக்கிறான். என்னால் அவனை சுலபமாக அடித்துத் தள்ளிவிட முடியுமென்று நினைக்கிறேன், ஆனால் ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது என்பார்களே. எச்சரிக்கையுடன் இருப்பதே சிறந்த கொள்கை.

“நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.”

என் மூக்குடைத்துவிட்டான்! இலக்கைப் பிடித்துவிட்டான்! அப்படியொன்றும் இவன் அடிமுட்டாள் இல்லை போலிருக்கிறதே.

“அப்படியா? ஆம், அது ஒரு சிறப்பான முதற்படியாக அமையும்.”

இல்லை – எனக்கு அதில் துளி கூட ஆர்வம் கிடையாது.

“நான் அதை இப்படி பெயர் மாற்றிவிட்டேன் – “ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒரு போராட்டம்”

“ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒரு போராட்டம்…”

நான் வாயடைத்துப் போய்விட்டேன், அட மடக்கோமாளியே! முட்டாள்தனத்தின் எல்லைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டாய். மனித ஒட்டுண்ணி அவன். தப்பிவிடு! விரைந்து ஓடு! உன்னுடைய அசிங்கத்தை தொற்றிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை, இதனாலேயே நான் எழுத்தார்வத்துடன் வரும் இளைஞர்களை வெறுக்கிறேன்.

“உண்மையில், ஒரு பதிப்பகத்துடன் எனக்கொரு ஒப்பந்தம் கூட கிடைத்துவிட்டது.”

“என்ன?”

“ஒப்பந்தம் பேசிவிட்டேன். அந்த மூலப் பிரதிக்கு.”

அதிசயத்திற்கும் மேலான ஒன்று. ஒரு புது எழுத்தாளரின் உதயமோ, ஒருவேளை? எனக்கு லேசாக வயிறு கலங்கத் தொடங்கியது. ‘ஹியோடோகோ’[3] முகமூடியைப் போல சப்பையான மூக்கை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவன் யாரும் எதிர்பாராதவொரு மேதையாகக் கூட இருக்கலாம். திகிலாகயிருக்கிறது. உண்மையிலேயே அவ்வளவு திகிலூட்டுகிறது. இதனால்தான் நான் எழுத்தார்வமிக்க இளைஞர்களை வெறுக்கிறேன். சரி, இவனையும் நாலு வார்த்தை புகழ்ந்து வைக்கிறேன்.

“ஆஹா.. மிகத் தனித்துவமான தலைப்பு.”

“ஆமாம்.. சமகாலத்தின் அழகுணர்ச்சியோடு இசைந்து போகக் கூடியதாக இருக்கிறது.”

ஒரு கட்டை கொண்டு உன்னை மொத்தி எடுக்க முடியும் என்னால். இவற்றிலிருந்தெல்லாம் எனக்கு சற்று ஒய்வு கொடுங்களேன். என்னைக் கண்டு அஞ்சியிரு, கடவுளே – நம் பந்தம் முடிந்தது!

“பதிப்பகத்தாரிடமிருந்து நான் இன்று பணம் பெற்றேன், நல்ல கை நிறையப் பணம்! அத்தனை மதுவிடுதிகளுக்கும் ஒவ்வொன்றாகச் சென்று வந்த பின்பும், பாதிக்கும் மேலான பணம் இன்னும் கையில் உள்ளது.”

அதற்குக் காரணம் நீயொரு கஞ்சத்தனமான குடிகாரன் என்பதுதான். என்ன ஒரு அருவருப்பான அற்பன். அவனுக்குப் பணம் கிடைத்துவிட்டது என்பதால்தான் இப்படி பெருமையடித்துக் கொள்கிறான். கிட்டத்தட்ட மூவாயிரம் யென், சரியா? ஓ.. இரு, கழிவறையில் ஒதுங்கி உன்னிடம் மிச்சம் எவ்வளவு பணமிருக்கிறது என்று எண்ணிப்பார்த்திருக்கிறாய் இல்லையா? எனக்கு நிச்சயமாகத் தெரியும். இல்லையென்றால், இவ்வளவு உறுதியான குரலில் “பாதிக்கும் மேலான பணம் இன்னமும் கையில் இருக்கிறது” என்று உன்னால் சொல்லியிருக்க முடியாது. நீ அப்படித்தான் செய்திருக்கிறாய். செய்தாய்தானே?  என்னால் அதை புரிந்துகொள்ள முடிகிறது. பின் தெருவின் மின்சாரக் கம்பத்தின் நிழலில், பலவீனமாக முணுமுணுத்தபடியும்  பெருமூச்செறிந்தும் நோட்டுகளை ஒவ்வொன்றாய் எண்ணினாய். ‘ஓ, மனம் கலங்கிடாதே! உற்று கவனி! உன் தலையின் மேல் ஒரு பறவை மிதந்து செல்கிறது.!’ பரிதாபம்! நானும் இந்நிலையில் இருந்திருக்கிறேன் என்பதுதான் உண்மை.

“அத்தனை பணத்தையும் இன்றிரவுக்குள் தீர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். என்னோடு இணைந்து கொள்வீர்களா? அருகாமையில் உங்களுக்கு விருப்பமான மதுவிடுதி ஏதாவது இருந்தால் அங்கே நீங்கள் என்னை கூட்டிச்செல்லலாம்.”

மன்னிக்கவும். நான் தவறாக எண்ணிவிட்டேன். உன்னிடம் அந்த அளவிற்குப் பணமுள்ளது என்று உனக்கு உறுதியாகத் தெரியுமா? அங்கே சென்ற பிறகு என் பங்கிற்கு நானும் ஏதாவது தர வேண்டும் என்றெல்லாம் எதுவும் சொல்லக் கூடாது. சரி சரி, எதற்கும் இதெல்லாம் சரி பார்த்துக் கொள்ளலாமேயென்றுதான்…

“ஆமாம், எனக்குத் தெரிந்த ஓர் இடம் உள்ளது ஆனால் அது கொஞ்சம் ஆடம்பரமான இடம். அங்கே உன்னை கூட்டிச்செல்வதற்காக நீ என்னைத் தவறாக நினைத்துவிடக்கூடாது.”

“அதெல்லாம் பரவாயில்லை. மூவாயிரம் யென் அந்தக் கவலையை ஏற்றுக் கொள்ளும் என்று எண்ணுகிறேன். இதோ, நீங்களும் வைத்துக் கொள்ளலாம். நம்மிருவருக்கிடையில் இதை இப்போதே பிரித்துக் கொள்ளலாம்.”

“வேண்டாம்..வேண்டாம்.. அடுத்தவரின் பணத்தைக் கையாளும் பொறுப்பை நான் விரும்புவதில்லை – அது என் மகிழ்ச்சிக்கு இடையூறாகவே மாறிவிடும்.”

அசிங்கமாகத்தான் இருக்கிறான், ஆனால் இயல்பாகயிருக்கிறான். எழுதும் மனிதன் தன்னைப் பற்றி இப்படியான ஒரு தனித்துவமிக்க எளிமையான சூழலை உருவாக்கிக் கொள்கிறான். வழக்கத்திற்கு மாறாக கவலையற்று இருப்பதைப் போன்றதொரு சூழல். மொஸார்ட் மொஸார்ட் தான். ஓர் இலக்கியக் கத்துக்குட்டி, இலக்கியக் கத்துக்குட்டி தான். இயற்கையாகவே அதனதன் இடத்தில் எப்படிப் போய் அதுவே விழுகிறது என்பது வேடிக்கைதான்.

“சரி, நாம் இலக்கியத்தைப் பற்றி தீவிரமாகப் பேசுவோமா? உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் தொடக்கத்திலிருந்தே எனக்கு உன்னுடைய படைப்பின் மீது நிஜமாகவே ஆர்வமிருந்ததுதான், ஆனால் என்னுடைய பொறுப்பாசிரியர் கொஞ்சம்… எப்படிச் சொல்வது? பழமைவாதி!”

நான் அவனை ‘யே டகேடா’ மதுவிடுதிக்கு அழைத்துச் செல்கிறேன். என் நினைவு சரியென்றால், அங்கே என் கணக்கில் ஆயிரம் யென் கடன் உள்ளது, அதையும் இவனே பார்த்துக் கொள்ளட்டும்.

“ஓஹ்… இந்த இடமா?”

“ஆமாம்.. சற்று ஒளி மங்கிய இடம்தான். ஆனால் எனக்கு இப்படியான ஒரு சூழல்தான் பிடிக்கும். நீ என்ன நினைக்கிறாய்?”

“அவ்வளவு மோசமில்லை.”

“நல்லது. நம்மிருவரின் ரசனையும் ஒன்று போலவே இருக்கிறது எனத் தோன்றுகிறது. நாம் குடிக்கலாம்! இது உனக்காக! ரசனை ஒரு சிக்கலான விஷயம். ஆயிரம் வெறுப்புகளை   கடந்த பிறகுதான் ஒற்றை ரசனை நமக்குள் பிறக்கிறது. எனவே, ரசனையே இல்லாதவனுக்கு.., வெறுப்பதற்கும் ஒன்றுமே இல்லை.

நாம் குடிக்கலாம்! இது உனக்காக! இன்றிரவை பேசித் தீர்க்கலாம். நான் நினைத்ததை விடவும் நீ அதிகம் பேசாதவனாக இருக்கிறாய். நான் அப்படிப்பட்டவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பேன். என்னால் அதை வெற்றி கொள்ள முடியாது. அது எங்களின் பிரதான எதிரி. இதைப் போல பேசிக்கொண்டேயிருப்பது முழு தியாகத்தின் வெளிப்பாடு, மேலும் நிறைய பேருக்கு இதுவே தர்மத்தின் உயர்ந்த வடிவமாகக் கூட இருக்கிறது. பதிலுக்கு எதுவுமே எதிர்பார்ப்பதில்லையே, அது தர்மமேதான். ஆனால் அதேசமயம் ஒருவர் சத்துருக்களையும் சிநேகிப்பவராக இருக்க வேண்டும். என்னை உயிர்ப்பிப்பவனை என்னால் நேசிக்காமல் இருக்க முடியாது. நம்முடைய எதிரிகள் எப்போதும், தவறாமல், நமக்கு உயிரூட்டுபவர்கள். இதோ, இது உனக்காக! முட்டாள்கள், பொழுதுபோக்கித் திரிவது பொறுப்பற்ற செயல் என்று நம்புகிறார்கள். மேலும் ஒரு சிலர், சிலேடைப் பேச்சுகளெல்லாம் பொருட்படுத்தத் தக்க பதில்  என்று கூட நம்புகிறார்கள். அவர்கள் வெளிப்படைத்தன்மை என்று  நம்புவதை வேறு எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் வெளிப்படையாயிருப்பதென்பது உங்களை நீங்களே ஓர் உணர்வற்ற மனிதனைப் போல விடுவித்துக்கொள்வது ஆகும். அதன் அர்த்தம் அவர்கள் மற்றவர்களையும் உணர்ச்சியற்றவர்களாகக் கருதுகிறார்கள் என்பது. அதீத கூருணர்வுள்ளவர்களுக்கு, அடுத்தவரின் வலிகளை நன்குணர்ந்தவர்களுக்கு, வெளிப்படையாய் இருப்பது மிகக் கடினம். எனவே, வெளிப்படைத்தன்மை என்பதே வன்முறைதான். அதனால்தான் என்னால் எழுதிப் பழகிய கைகளை விரும்பி நெருங்க முடியவில்லை. ஒருவேளை அவர்களின் திறமையைக் கண்டு அஞ்சுகிறேனாக இருக்கலாம். எப்படி இந்த உலகம் லேசாக உசுப்பினால் கூட கடும் கசப்பான சொற்களைப் பேசுபவர்களோடு தழைத்து வளர்கிறது! முதலில், ஒரு நல்ல உள்ளுணர்வு என்பது கொள்ளிவாய்ப் பேயைப் போன்ற ஒரு மாயத் தோற்றம். ஞானத்தின் துணை கொண்டிராத உள்ளுணர்வு – எதேச்சையானது அல்லாமல் வேறென்ன? குருட்டு அதிர்ஷ்டம்.

நாம் குடிக்கலாம்! இது உனக்காக! நாம் பேசுவோம்! நம்முடைய பிரதான எதிரி மெளனித்திருப்பது. அது எப்படியோ, நான் எவ்வளவு பேசுகிறேனோ அவ்வளவு ஐயம்கொள்பவனாக ஆகிறேன். யாரோ என் சட்டைக் கையைப் பிடித்து இழுக்கிறார்கள், திரும்பிப் பார்க்க வேண்டும் நான்…ஹா…ஆமாம் நானும் கூட்டத்தில் ஒருவன் தான். தங்கள் மதிப்பீடுகளின் மீது முழு நம்பிக்கை கொண்டவர்கள்தான் மிக உயர்ந்தவர்களாகிறார்கள். அது அப்படியே முட்டாள்களுக்கும் பொருந்தும்தான். நானே இப்போது பழி பேசிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த நடத்தையை நல்ல பண்புகளுக்கு மிகக் கீழாகத்தான் மதிப்பிடுகிறேன். கடுஞ்சொல் பேசுவது சிறிதளவு உங்கள் எதிரே இருக்கும் நபரின் அதீத கஞ்சத்தனத்தை பிரதிபலிக்கிறது.

நாம் குடிக்கலாம்! இலக்கியத்தைப் பற்றி பேசலாம்! இலக்கியக் கோட்பாடுகள் ஆவலைக் கிளருகின்றன, இல்லையா? ஆமாம்..புதிய எழுத்தாளர்கள் புதிய எழுத்தாளர்கள்தான், பழகிய கைகள் பழகிய கைகள்தான். நான் எப்படி இயல்பாகவே அப்படியான ஒரு சிந்தனையின் பக்கம் சாய்ந்துவிட்டேன் என்பதே தனி சுவாரசியம்தான். சரி, இதோ உன் சிந்தனைக்கு ஒரு தீனி. ஒரு புதிய எழுத்தாளனாக, மூன்று மில்லியன் வாசகர்களுக்கும் பிரியமானவனாக இருக்க வேண்டுமானால் நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாய்? இது சிக்கலான கேள்விதான், எனக்குத் தெரியும். ஆனால் அதனால் உன் தன்னம்பிக்கையை ஒருபோதும் நீ இழந்துவிடாதே. இங்கே பார் – பிரத்தியேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு வாசகர்களின் விருப்பத்திற்குரிய எழுத்தாளனாக இருப்பதை விடவும் இது கையாளக்கூடிய காரியம்தான். லட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பப்படும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் தன்னையே நேசிப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அதே காரணத்தினால் சிறுபான்மை வாசகர்களால் நேசிக்கப்படுபவர்கள் தங்களை நேசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள். அது ஒரு சராசரியான வாழ்வு. அதிருஷ்டவசமாக, உன்னுடைய விஷயத்தில், உன்னுடைய படைப்பை நீ மிகவும் நேசிப்பவனாக இருப்பது, மூன்று மில்லியன் வாசகர்களால் நேசிக்கப்படும் ஒரு பிரபலமான எழுத்தாளனாக வெற்றியடைவதற்கான சாத்தியத்தையே குறிக்கிறது. தன்னம்பிக்கையை இழந்துவிடாதே. நீ பணம் சேர்ப்பாய் என்பதை  பொதுவான மொழியில் சொல்ல வேண்டுமெனில், “உனக்குத் திறமை இருக்கிறது”.

நாம் குடிக்கலாம்! இது உனக்காக! சார், உங்கள் படைப்பு ஒரே ஒரு வாசகனால் ஆயிரம் முறை படிக்கப்படுவதை விரும்புவீர்களா அல்லது ஒரே முறை ஆயிரம் வாசகர்கள் படிப்பதையா? உன்னுடைய தேர்வு எது? எல்லா வகையிலும்.. எல்லா வகையிலும், உனக்குத் திறமை இருக்கிறது! எப்படிப் பார்த்தாலும் காஃபுவை காப்பியடிப்பதில் பிரச்சினை ஒன்றுமில்லை. அசல் தன்மையைப் பற்றிய இந்த விஷயம் அடிப்படையில் வயிற்றின் இயக்கவியலை நோக்கித்தான் கடைசியில் செல்கிறது – உட்கொண்ட பிறகு, அவற்றிலிருக்கும் அடுத்தவரின் ஊட்டச்சத்துகள் வெளிவரும்போது முழுமையாக செரிமானமான பின் வருகிறதா அல்லது அப்படியே மாறாமல் மலமாக வெளிவருகிறதா; நிச்சயமாக, இதில் இரண்டாவதைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை, ஆனால் அவை நன்றாக ஜீரணிக்கப்பட்டிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. எந்தவொரு எழுத்தாளரும், பழங்காலத்திலிருந்தே கணக்கிட்டாலும், எப்போதுமே அசலான படைப்பாளியாக இருந்ததில்லை. அப்படியொரு பெயருக்குத் தகுதியான ஒருவரை எங்கேயும் யாருக்கும் தெரியாது; அவர்களை கண்டுபிடிக்கும் பொருட்டு எழுதப்பட்ட எங்களின் சிறந்த கட்டுரைகளிலிருந்துகூட அவர்கள் நழுவி விடுகிறார்கள். அதனால், இதைப் பற்றி பதற்றம் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை. ஆனால் பலமுறை, தங்கள் படைப்புகள் அசலானவை என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்களை நீ சந்திக்க நேரிடும், அவர்களையெல்லாம் நீ வடிகட்டிய முட்டாள்கள் என்று ஒதுக்கித் தள்ளிவிடு. அவர்களையெல்லாம் விளையாட்டாக அணுகவேண்டும். ஆஹ்ஹ்… பெருமூச்சு விடவேண்டும் போலிருக்கிறது. உனக்கு முன்னால் உள்ள பாதை மிகப் பெரியது, விசாலமானது. ‘விசாலத்தைப்’ பற்றி குறிப்பிடுகையில் , நீ ஏன் உன் அடுத்த புத்தகத்தின் தலைப்பு ‘விசாலமான வாயில்’ என்று வைத்துக் கொள்ளக்கூடாது? ‘வாயில்’ என்ற வார்த்தைக்கு ஆழமான வரலாற்றுப் பண்பாட்டின் கூறு உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மன்னிக்கவும், எனக்கு லேசாக குமட்டுகிறது….

…இல்லையில்லை, எனக்கு ஒன்றுமில்லை, நன்றாக இருக்கிறேன். இந்த மதுபானங்கள் அவ்வளவு சிறந்தவை அல்ல. அப்பாடா, இப்போது நான் விடுவிக்கப்பட்டவனாக உணர்கிறேன் – இதுவரை குமட்டலின் மந்தமான பிடியில் சிக்கியிருந்தேன். அப்படியே இந்த வலெரியைப் பற்றி…. அடடா…, கடைசியில் நான் அவர் பெயரை உளறிவிட்டேன் –  உன் மெளனமெனும் வாளை நோக்கி நானே குதித்துவிட்டேன். இன்றிரவு நான் பேசியதில் பெரும்பாலும் அவரின் இலக்கியக் கோட்பாடுகளிலிருந்துதான். அடடே… என்னே என் அசல் சிந்தனை!! இறுதியில், என்னுடைய வயிறு ஏற்கனவெ தொந்தரவு செய்து கொண்டிருந்ததால், இச்சிந்தனைகளை அவற்றின் அசல் வடிவத்திலேயே செரிக்க முடியாமல் பொங்கி வெளியேற்றிவிட்டேன். என்னால் இப்படியே வளவளவென்று பேசிக்கொண்டே போக முடியும் அதுதான் உன் விருப்பமென்றால். ஆனால் இங்கேயே இப்போதே  அவருடைய புத்தகத்தை உனக்குக் கொடுப்பதுதான் அதிக பயன் தரும். நான் உன்னைச் சந்திப்பதற்கு முன் இதை பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். இன்றிரவு இங்கே பேசியதெல்லாம் இன்று ரயிலில் வருகையில் இதிலிருந்து நான் பொறுக்கி எடுத்தவைதான், புத்தம்புதிய ஞானம், சுடச்சுட, அதனால்தான் என் நினைவில் அது இன்னமும் மிகத் தெளிவாக இருக்கிறது. ஆனால் நாளையே இது அநேகமாக முழுமறதி இருளுக்குள் நழுவிச் சென்றுவிடும். நீ வலெரியைப் படித்தால் வெளிவருவதில் வலெரியைத்தான் எதிர்பார்க்கமுடியும். மெளண்டேனியென்றால் மெளண்டேனி, பேஸ்கல் என்றால் பேஸ்கல். தற்கொலை செய்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படும், ஆனால் முழுமையான வாழ்வை வாழ்ந்த ஆண்களுக்கு மட்டுமே… இதுகூட வலெரியிடமிருந்துதான். அவ்வளவு மோசமில்லை, தானே? நம்மால் நம்மையே கொன்றுவிடுவது கூட இயலாது. இதோ, நீ எடுத்துக்கொள். ஏ, உபசரிக்கும் பெண்ணே! வந்து கணக்கை முடி! எல்லா கணக்கையும்! அப்போ சரி, உன்னோடு பேசியதில் மகிழ்ச்சி. அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நீ ஒரு பறவையைப் போல எடையற்றவனாகு, இறகைப் போல அல்ல…. இப்போது, நான் என்ன செய்ய வேண்டும்?”

தொப்பியணியாத பரட்டைத் தலையுடன், இறுக்கமான மேல்சட்டை அணிந்திருந்த அருவருப்பான அந்த இளைஞன் நீரில் வாத்தைப் போல தன் சிறகுகளை உளுக்கி காற்றின் மீதேறி பறந்து போனான்.


[1] தீக்கொழுந்தைப் போன்ற தாடியும் மீசையும் வைத்திருந்த பேரரசர் மெய்ஜியைக் குறிக்கிறது.

[2] ஜப்பானிய எழுத்தாளர், நாடகாசிரியர் மற்றும் நாட்குறிப்பாளர். (இயற்பெயர்:சோக்கிச்சி நாகாய்); தன் நவீன இயல்புவாத எழுத்துகளால் அறியப்படுபவர்.

[3]ஹியொடோகோ – hi-otoko – ஜப்பானிய தொன்மக் கதைகளில் வரும் நெருப்பு மனிதன். பண்டிகை முகமூடிகளாக பிரசித்தி பெற்ற உருவம்.


– ஓஸாமு தாசாய்

தமிழில் – நரேன்

[ads_hr hr_style=”hr-fade”]

[tds_info]

ஆசிரியர் குறிப்பு

Osamu Dazai – ஓஸாமு தாசாய்

இருபதாம் நூற்றாண்டின் நவீன ஜப்பானிய புனைவெழுத்துகளின் முன்னோடியாக கருதப்படுபவர். 38 ஆண்டு காலமே வாழ்ந்த தன்னுடைய குறுகிய வாழ்வில் தன் படைப்புகளுக்கு இணையாகவே தன்னைச் சுற்றிச் சுழன்ற துயரங்களுக்காக இன்றும் நினைவுகூறப்படுபவர். ஷுஜி ட்சுஷீமா (Shuji Tsushima) என்பது அவர் இயற்பெயர். செல்வச் செழிப்பான பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் தாயின் மோசமான உடல் நிலையினாலும் தந்தையின் பரபரப்பான வேலைச் சூழலினாலும் பெரும்பாலும் தனித்தே வளர்ந்தார். தன் படைபாற்றலை சிறு வயதிலிருந்தே வெளிப்படுத்தி வந்த அவர் பெரும் அலைக்கழிப்பிற்கும் கொந்தளிப்பிற்கும் உள்ளாகும் மனதுடையவராக இருந்தார். அவருடைய கதைகள் பெரும்பாலும் சுயசரிதைத் தன்மை கொண்டிருப்பதினால் ஒரு வாசகன் அவரின் துள்ளித் துடிக்கும் மனதையும், அலைபாயும் அவரின் காதல் வேட்கையையும் உணர முடியும். தன் ஆதர்ச எழுத்தாளர் தற்கொலை செய்து கொண்டதினால் பெரும் உளைச்சலுக்கு உள்ளான தாசாய், அதன் பின் தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு முயன்று பார்த்தார். போர்ச் சூழலால் பெரும் சிதைவிற்கு உள்ளானது அவரது வாழ்வு. பெரும் குடிகாரராக மாறிப் போனார், மனநல விடுதிகளில் தங்க வைக்கப்பட்டார். போருக்குப் பிந்தைய வாழ்வை தன் கதைகளில் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தவர். இறுதியாக தன் துணைவியாருடன் சேர்ந்து மேற்கொண்ட தற்கொலை முயற்சியில் அவர் வெற்றியடைந்ததிற்கு முன்னால் எழுதிய “No Longer Human” என்ற நாவல்தான் அவரின் முதன்மையான நாவலாகக் கருதப்படுகிறது.

மதுபோதையில் வெளிப்படும் அர்த்தமற்ற, வெட்டி வெட்டிச் செல்லும் உரையாடல்களின் வழியாக வாழ்வின் அபத்தங்களும் மனித மனதின் பாவனைகளும் இவரது கதைகளில் சிறப்பாக வெளிப்படுகின்றன. தொடர்பற்ற உரையாடல்களின் மூலம் மனதின் இடுக்குகளில் மறைந்திருக்கும் கசடுகளை உணரச்செய்துவிடுவது இவரது தனித்துவம். ஒவ்வொரு கதையிலும் சிறிதளவேனும் தாசாய் வெளிப்படுவதால் வாசித்து முடித்ததும் ஆசிரியரின் மீதான பரிவு கருமேகமென வந்து கவ்விக் கொள்கிறது.

மொழிபெயர்ப்பாளர்:

ம.நரேந்திரன் – மென்பொருள் துறையில் பணிபுரியும் இவர் கோவையில் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்களில் தொடர் வாசிப்பும் ஆர்வமும் கொண்டவர். இவரின் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் திரு. ஜெயமோகன் தளத்திலும் சொல்வனம் இணைய இதழிலும் வெளியாகியிருக்கின்றன. இவ்வாண்டு இவரின் சமகால ஆங்கில சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு – ‘இந்தக் கதையைச் சரியாகச் சொல்வோம்’ யாவரும் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட புலம் பெயரிகளின் இக்கதைகளின் மூலமாக முதன்மையான சமகால ஆங்கில சிறுகதை ஆசிரியர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

[/tds_info]


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.