எப்போது விழிப்புத் தட்டினாலும் சரி, ஏதோவொரு கதவு இடம்பெயரும் ஓசை கேட்டது. கைகோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு அறையாகச் சென்று சில அறைகளை மேல்நோக்கி உயர்த்தியும், மற்றவற்றைத் திறந்தும், தாம் ஆவி உருவில் உள்ள தம்பதியர் என்பதை அவை உறுதிசெய்தன.
அவள் “இதை விட்டுவிட்டோமே” என்றாள். அவன், “அட! இதையும்தான்” என்றான். அவள், “அது மாடியில் இருக்கிறது” என்று முணுமுணுத்தாள். அவன், “அத்துடன் தோட்டத்திலும்” என்றான் கிசுகிசுப்பாக. பிறகு, “சத்தம்போடக் கூடாது. இல்லையென்றால் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்” என்றார்கள்.
ஆனால் எங்கள் தூக்கம் போனது அவர்களால் இல்லை. அவர்கள் எதையோ தேடினர். ஏதோ ஒன்றை முடிவுக்குக் கொண்டுவரும் ரீதியில் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்தனர் என்றும்கூட இப்போது இதைப் பார்க்கிறவர்கள் சொல்லலாம். புத்தகத்தின் பக்கவாட்டிலிருந்த மார்ஜின் மீது திடீரென நின்றுவிட்ட எழுதுகோல், “இதோ கண்டுபிடித்துவிட்டனர்” என்று பார்ப்பவர்கள் உறுதியாகக் கூறும்படி இருந்தது. அதன் பிறகு, இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் தொடர்ந்து படித்ததால் களைத்துப்போனதுபோல் எழுந்து நிற்கலாம். மரத்தால் செய்த அலங்காரப் புறாக்களிடமிருந்து வெளிப்பட்ட உற்சாகம், பண்ணையிலிருந்து எழுந்த கதிர் அடிக்கும் கருவியின் சத்தம் தவிர வேறு சத்தம் ஏதுமற்ற அந்த வீட்டின் எல்லாக் கதவுகளும் திறந்துகிடக்கின்றனவா என்பதையும், ஆள் நடமாட்டம் ஏதுமின்றி இருக்கிறதா என்பதையும், அந்த நபர் உறுதி செய்துகொள்வது போல அது இருந்தது. ‘நான் எதற்காக இந்த வீட்டுக்குள் நுழைந்தேன்? இங்கு நான் என்ன தேடுகிறேன்?’ என் கைகளில் எதுவுமே இல்லை. ‘அது மாடியில்தான் இருக்கவேண்டும்’
ஆப்பிள்கள் மேல் மாடியிலிருந்தன. கீழே, தோட்டத்தின் புல்வெளி மீது இப்போது விழுந்த புத்தகத்தைத் தவிர, தோட்டம் எப்போதும் போல சலனமற்று இருந்தது.
ஆனால் அவர்கள் அதை வரவேற்பறையில் கண்டுபிடித்து விட்டனர். இயல்பாக ஒருவருடைய கண் பார்வையில் படுமளவுக்கு அது வெளியே தெரிந்தது என்று சொல்லிவிட முடியாது. ஜன்னல் பலகைகள் ஆப்பிள்களையும் ரோஜாக்களையும் பிரதிபலித்தன. எல்லா இலைகளுமே அந்தப் பிரதிபலிப்பில் பசுமையாகத் தெரிந்தன. அவர்கள் வரவேற்பறையில் நகர்ந்தபோது ஆப்பிள் தன் மஞ்சள் நிறத்தை மட்டுமே வெளிக்காட்டியது. ஆனாலும் சில நொடிகளுக்குப் பிறகு கதவு திறந்து, தரையின் மீது பரவி, சுவர்களில் படர்ந்து, கூரையிலிருந்து தொங்கியதே – அது என்ன? என் கைகள் வெறுமையாக இருந்தன. ஒரு சிறு பறவையின் நிழல் தரைக் கம்பளத்தைக் கடந்தது. நிசப்தக் கிணற்றின் அடியாழத்திலிருந்து மரத்தால் ஆன புறாவின் உற்சாகத் துள்ளல் ஒலி மேலெழுந்தது. ‘ஆபத்தில்லை ஆபத்தில்லை ஆபத்தில்லை’. அந்த வீட்டின் நாடி மென்மையாகத் துடித்தது. புதையல் மறைவாக எங்கோ புதைக்கப்பட்டுள்ளது. அந்த அறை… இப்போது வீட்டின் நாடித் துடிப்பு ஒரு நிமிடம் நின்றது. ஓ! எங்கோ புதையுண்டிருக்கும் அந்தப் புதையலா?
சில நொடிகளில் ஒளி மங்கியது. அப்படியென்றால், தோட்டத்தில்? ஆனால் இலக்கின்றி அலைந்து திரிகிற சூரிய கிரணங்களுக்காக மரங்கள் இருள்பந்து ஒன்றைக் கோர்த்தன. மிக நேர்த்தியானதும், மிக அரிதானதுமான, நான் தேடுகின்ற அந்தச் சூரியக் கதிர் எப்போதுமே கண்ணாடிக்குப் பின்பக்கமாக வசதியாக ஒளிர்ந்துகொண்டிருக்கும். மரணம்தான் கண்ணாடி. மரணம் எங்களுக்கிடையே நின்றது. பல நூறு வருடங்களுக்கு முன்பு முதலில் பெண்களை அடைந்து, வீட்டைமட்டும் அப்படியே விட்டுவிட்டு, மற்ற அத்தனை ஜன்னல் கதவுகளையும் அடைத்து, அறைகள் அனைத்தையும் இருளாக்கியது. அவன் அந்த இருளைவிட்டும், அவளைவிட்டும் நகர்ந்து முதலில் வட திசையை, பிறகு கிழக்கு திசையைப் பார்த்தான்; தெற்கு வானில் விண்மீன்கள் மினுங்குவதைக் கண்டான்; வீட்டைக் கண்டடைந்து, நிலத்தின் கீழே புதைந்துகிடப்பதைக் கண்டான். ‘ஆபத்தில்லை ஆபத்தில்லை ஆபத்தில்லை’ வீட்டின் நாடி மகிழ்வுடன் துடித்தது. ‘புதையல் உனக்குத்தான்’.
மரங்கள் அடர்ந்த சாலையில் காற்று உறுமியது. இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக மரங்கள் தம் தலையை வளைத்துத் தாழ்த்தின. மழையின் வழியே வழிந்த நிலவின் கிரணங்கள் கட்டுக்கடங்காது தெறித்தன. ஆனால் விளக்கின் ஒளிக்கதிர்கள் நேரடியாக ஜன்னலிலிருந்து வெளிச்சம் பாய்ச்சியது. மெழுகுவர்த்தி அசையாது உறுதியாக எரிந்தது. வீடெங்கும் உலவி, ஜன்னல்களைத் திறந்து, எங்கள் உறக்கத்தைக் கலைக்காதிருக்க கிசுகிசுப்பான குரலில் பேசியபடி ஆவியுருவத் தம்பதியர் தங்களுக்கான மகிழ்ச்சியை அங்கு தேடினர்.
அவள், ‘இந்த இடத்தில்தான் நாம் உறங்கினோம்’ என்றாள்.
அவன், ‘எண்ணிலடங்கா முத்தங்கள் ஏந்தி’ என்றான்.
‘காலையில் விழித்து …’
‘மரங்களுக்கிடையே இருக்கும் வெள்ளி …’
‘மாடி…’
‘தோட்டத்தில்’
‘கோடைக்காலம் தொடங்கியபோது..’
‘குளிர்காலப் பனிப் பொழிவின்போது…’
மென்மையாக ஒலிக்கும் இதயத் துடிப்பைப் போல வெகு தொலைவில் கதவுகள் அடைத்துக் கொள்கின்றன.
அவர்கள் இன்னும் அருகே வந்துவிட்டனர்; வாயிலருகே வந்ததும் நின்றனர். காற்று விசிறியடித்தது, மழை கண்ணாடிக்குக் கீழே வெள்ளியாக வழிந்தது. எங்கள் விழிகள் கருத்தன. எங்கள் அருகில் எந்தக் காலடிச் சத்தமும் கேட்கவில்லை. மேலங்கியை விரிக்கும் ஆவியுருப் பெண்ணைக் காணவில்லை. லாந்தர் விளக்கு அணையாதபடி அவனுடைய கைகள் ஜாக்கிரதையாகப் பிடித்திருக்கின்றன. அவன் சுவாசிக்கும் ஓசை கேட்கிறது. ‘பார். தம் உதடுகளில் காதலுடன் அவர்கள் ஆழ்ந்து உறங்குகிறார்கள்’
குனிந்து, எங்கள் தலைக்குமேல் வெள்ளி விளக்கை உயர்த்திப் பிடித்து, எங்கள் முகங்களை நீண்ட நேரம் ஆழ்ந்து பார்க்கிறார்கள். காற்று நேராகப் பயணிக்க, சுடரொளி மெல்லத் தாழ்கிறது. நிலவின் அடர்த்தியான கிரணங்கள் சுவரையும் தரையையும் கடந்து பிறகு ஓரிடத்தில் சந்திக்கின்றன. உறங்குகின்ற முகங்களை நோக்கித் தாழ்ந்து, உற்றுப் பார்த்து, தம் கண்ணுக்குத் தெரியாத அவர்களுடைய மகிழ்ச்சியைத் தீவிர யோசனையுடன் தேடிக் கண்டடைய முயல்கிற அந்த முகங்களின்மீது கிரணங்கள் கறையாகப் படிகின்றன.
‘ஆபத்தில்லை ஆபத்தில்லை ஆபத்தில்லை’ அந்த வீட்டின் இதயம் பெருமையுடன் துடிக்கிறது.
‘நெடுங்காலம்…’ என்று அவன் பெருமூச்சுவிட்டான். ‘மீண்டும் நீ என்னைக் கண்டுபிடித்துவிட்டாய்’
அவள், ‘உறங்கி; தோட்டத்தில் புத்தகம் வாசித்துக்கொண்டு; சிரித்துக்கொண்டு; பரணில் ஆப்பிள்களை உருட்டி …இங்குதான் நாம் நம் புதையலை விட்டுச் சென்றோம்…’ என்று அவள் முணுமுணுத்தாள்.
குனிந்திருந்த அவர்களிடமிருந்து வந்த ஒளி என் விழித் திரைகளைத் திறந்தது. ‘ஆபத்தில்லை ஆபத்தில்லை ஆபத்தில்லை’ வீட்டின் நாடி கட்டுப்பாடின்றித் துடித்தது. விழித்துக் கொண்ட நான்,
‘நீங்கள் இங்கு புதைத்து வைத்துள்ள உங்கள் புதையல் என்பது உள்ளத்தின் ஒளியா?’
என்று உரக்கக் கூச்சலிடுகிறேன்.