அமெரிக்க அடுக்கக மனையொன்றைக் கட்டுடைத்தல்

புயலின் போது தான்‌ இந்த அடுக்ககம் தனது வயதை வெளிக்காட்ட தொடங்குகிறது.

முதலில் எறும்புகள்: மீச்சிறிய கால்களும் சீனிக்குப்பசித்த வாயையும் தூக்கிக்கொண்டு உயிருள்ள கறுத்த கம்பளம் போல சுவர் மற்றும் ஜன்னல் வழியே உள்ளே கசிகின்றன.தாள் சுற்றப்பட்ட மிட்டாய்கள் உள்ள கிண்ணத்தை தங்கள் வீடாக்கிக் கொள்கின்றன அது பூச்சி வாழ்க்கையின் திடீர் சுழல், சின்னஞ்சிறியவை. வெளியில் கொட்டும் மழையைத் தாண்டி , அருவருப்பினாலும் அச்சத்தினாலும் நாம் போடும் கூப்பாடுகளுக்கு செவிடானவை. பூனை மோரியார்ட்டி , தன் உணவை அவை திரளாக சூழ்வதை பதைப்புடன் பார்த்துக்கொண்டிருக்கிறது. பூனை உணவுடன் நிற்கும் என் கணவர் CB  “அதை மட்டும் தொடாதீர்கள் தயவு செய்து பூனை உணவை மட்டும் மொய்க்காதீர்கள் என்று விரக்தியில் அலறிக்கொண்டிருக்கிறார்.

நான் அயர்லாந்தைச் சேர்ந்தவள் . எனக்கு புயல் அந்நியமானதல்ல .இந்த மாதம் வரை சங்கடத்தையும் மஞ்சளையுமே இழுவையாக வழங்கிய ‌‌இந்தக்காய்ந்த அந்நிய வருடத்தை சுத்தப்படுத்தும் நிவாரணமாக இருக்கிறது மழை.மழைக்கு பழக்கப்பட்டவள் நான். எனக்கு மிக பிடித்த காலம் இதுவென்று எல்லா நேரமும் சொல்லிக்கொண்டிருப்பேன். என் வாயிலிருந்து இந்த மூன்று சத்தங்கள் தான் திரும்பத்திரும்ப …… நான் அயர்லாந்தைச் சேர்ந்தவள், நான் அயர்லாந்தைச் சேர்ந்தவள் ,நான் அயர்லாந்தைச் சேர்ந்தவள். ஒரு கேடயம், ஒரு அடையாளம் , வெகு நிச்சயமாக என்னை திணறடிக்கும் இந்த புதிய கலாசாரத்தின் சில பகுதிகளுக்கு எதிரான முடவனின் கோல் போல நான் தாங்கிப் பிடிப்பவை.

இந்த மழை டிசம்பர் வாரங்களில் சான்ஃப்ராசிஸ்கோவின் சுத்தமான பரிச்சயமான காற்றை சுவாசிக்கிறேன். மழை நீர் என் வீட்டிலிருந்து புடைத்த கட்டிகளை கிழித்தெடுத்தாலும் எனக்கு விருப்பமானது தான். என்னால் இனம் கண்டுகொள்ள இயலாத இந்நகரத்தின் நெசவில் நிறைந்தவற்றுள் இம்மழை மட்டும் நெருக்கமாகவும் புரிதலோடும் இருக்கிறது.

என் டிரஸ்ஸிங் மேசையிலிருந்து தொங்கும் நைலான் கால்சராய்கள் நிறைந்த மிருதுவான பையின் வெளிப்புறமெங்கும் கறுத்த பூசனம் பூத்திருக்கிறது. அவசர வழி கதவின் அடியிலிருந்து பரவி என் துணிகளை உண்ணத் தொடங்கியுள்ளது. எழுதும் உபகரணங்கள் வைக்கும் மெலிவான பெட்டியிலும் அதைப் பார்க்கிறேன் அதன் மங்கிய மிளிர்வு வாயை கெடுத்து குமட்டல் ஏற்படுத்துகிறது.

பூச்சி மருந்து அடிபவரிடம் கண்ணாடியை காட்டிய பொழுது அதை ஒன்றும் செய்ய முடியாதென கைவிரித்தார்.புயலின் உக்கிரத்தில் அது கருநீர் கசியத் தொடங்கியுள்ளது.அதன் கீழ் முனையிலிருந்து பசைப் போன்ற திரவம் வடிகிறது , மிருகத்தின் திறந்த வாயிலிருந்து வடியும் எச்சில் போல , பயங்கரமானதும் பெயரற்றதுமான ஒன்று தன்னை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க குடும்பப் படங்களில் வரும் பூச்சி மருந்து அடிப்பவரைப் போலவே இருக்கிறார். முரட்டு உடல் மொழியும் , சாம்பல் தலை முடியும், சத்தமான பேச்சுமாக. எங்கள் சுவர்களில் ஓட்டைகள் இட்டு அதை விஷத்தினால் நிரப்புகிறார்.

சமையல் அறை சிங்க்கை சரி செய்ய வரும்போது , ப்ளம்பரிடம் ஒழுகும் கண்ணாடியை காட்டச் சொல்கிறார் CB .நம் அறிவைத் தாண்டிய திகில் போலுள்ளது இந்த எழவெடுத்த வீடு என்று அவனிடம் சொன்னேன். வீரியமிக்க சேஜ் இலைகளோ, சிறு மிருக பலியோ வேண்டுமானால் இங்கு வேலை செய்யக்கூடும்.

புருவங்களை உயிர்த்தியபடி கையில் ரெஞ்ச்சுடன் வீட்டின் பின்னால் எங்கோ உள்ள பைப்பில் உடைப்பு இருக்கலாம் என்கிறார் பிளம்பர்.என்னை சமாதானம் செய்வது போல ,வெளியில் தெரியும் அளவு பெரிதாக எதுவும் இருக்காது என்கிறார்.வீடே வெள்ளக் காடாகும் அபாயம் ஒன்றுமில்லை. ‘ஆனாலும் கொஞ்சம் கவலையாகத்தான் இருக்கிறது ‘ என்கிறார் போவதற்கு முன்.

சமையல் அறையில் இறைச்சி உணவான மீட் லோஃப் செய்ய நடுத்தர விலை மிக்ஸியை உபயோகிக்கிறேன.அமெரிக்காவிற்கே உரித்தான இந்த உணவை சமைக்க , இறைச்சி கிட்டத்தட்ட கலந்துவிட்ட நிலையில் , பழைய நலிந்த அவனுள்(oven) ( அதன் மேற்புற குமிழ்கள் இரண்டும் அதனுள்ளேயே விழுந்து அமுங்கிவிட்டன எனினும் கெட்டிலில் நீர் வைத்தால் கொதிக்கின்றது) வைக்க கிட்டத்தட்ட தயாரான நிலையில் உள்ளது. மாட்டிரைச்சி, முட்டை,சோளரொட்டி,ஆரிகானோ, பொன்னிரத்தில் வதங்கிய வெங்காயம் எல்லாம் சேர்ந்த பயங்கரமான கலவை தான் இது . ஆனால் அவனில் பேக் செய்த பின் வருத்த சீனிக்கிழங்குகளுக்கும் , தேன் தடவிய வானவில் வண்ண கேரட்டுகளுக்கும் சுவையான துணையாகிவிடும். திடீரென மிக்ஸி என் கையில் சூடாகிறது, எரிகிற வாடை வருகிறது, அதன் மோட்டாரிலிருந்து சாம்பல் புகை திரையாக எழுகிறது , கையால் தொட முடியாத அளவு வெப்பமடைகிறது. அது தன்னைத்தானே உடைத்துக்கொண்ட பின்பும் அதன் கத்திகள் சுழன்றபடி உள்ளன.பிளக்கை கழற்றி அதை சமையல் பலகையின் பின்னால் வைக்கிறேன். எழவெடுத்தது. இன்னும் வெளியில் தூக்கி எறியவில்லை.ஆனால் நிச்சயமாக எறிந்து விடுவேன்.

ஒரு உறவு முறிவை நீங்கள் உணர்ந்த கணத்தில் தோல்வி புலப்படுகிறது . மேல்பூச்சற்ற இழப்பின் ஜ்வாலை.மனது உடைவதைப் போல ஏதோ ஒன்று என்று நினைக்கிறேன், நம் வேர்கள் பிடிக்க மறுக்கின்ற,மண்ணை ஏற்க மறுக்கின்ற தருணம்.

நானும் CB யும் இந்நாட்டை விட்டு கிளம்பியே ஆகவேண்டுமென்று ஒப்புக்கொண்டு ஒரு புரிதலுக்கு வந்த நொடியிலிருந்து எல்லா சுகவீனங்களும் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. சொல்லிக் கொள்ளக்கூடிய அனுபவமோ, மன முதிர்ச்சியோ,அல்லது துணிவோ, எதைத் தேடி இங்கு வந்தோமோ அதை ஏதோ ஒரு வகையில் கண்டடைந்து விட்டோம் என்றும், இதைத் தாண்டியும் தள்ளியுமான நகர்வுக்கு தயாராகி விட்டோம் என்றும்,எங்களை இனி இங்கே இருத்த எது ஒன்றுமில்லை என்றும் முடிவுக்கு வந்து விட்டோம்.

அவர்கள் கிளம்பிய போது தான் முதல் அறிகுறி தெரிந்தது, இதற்கு மேல் இந்த பே எரியா வில் வாழ முடியாத நண்பரகளின் வெளியேற்றம்.விசா , செலவு , குடும்பம் …

ஆகஸ்டிலும், செப்டம்பரிலும், அக்டோபரிலும் மூன்று கணமான முறைகள் நண்பர்களுக்கு விடை கொடுத்தப் பின் , நவம்பரில் மறுமுறை அதை செய்த போது எங்கள் ஆவி வெளியேறி காய்ந்து வெறுமையானோம். டப்ளின் இப்படி ஆகிவிடுமோ என பயந்து ,அந்நகரத்தை நாங்கள் விட்டகன்ற வருடத்தைப் போலவே எங்கள் உலகம் அமைதியாக தோன்றியது. கஷ்டப்பட்டு சம்பாதித்த அமெரிக்க நட்புகளின் ஊடும் பாவும் இல்லாமல் நாங்கள் மறுமுறை கவனமீர்க்கும் வகையில் வேறாக தெரிந்தோம். தொடுவானத்தில் வெளியேற்றத்தை குறிக்கும் விளக்குகள் உதிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்த வீடும் அதை உணர்ந்தது போல எங்களுக்கடியில் சட்டென்று விம்மி புடைத்து நகர்ந்தது. எங்கள் விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்ட முதல் அடுக்ககம் என்பதைத் தாண்டி , இத்தங்க நகரத்தின் வாடகை சீர்செய்யப்பட்ட எங்கள் புகலிடம் என்பதைத் தாண்டி வேறு ஒன்றாக வளர்ந்து நிற்கிறது.

உங்கள் எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து முடித்துவிட்டீர்களா இல்லை தொடர்ந்து போராடுவதற்கான யோக்கியதையை இது இழந்துவிட்டதா என்பதெல்லாம் உறுதியாக சொல்வது கடினம்.அதை விட கடினம் நாம் முழுமையாக சோர்வுற்றிருக்கிறோம் என்று ஒப்புக்கொள்வது. நீங்கள் இந்த இடத்தில் பொருந்திப் போகவில்லை என்பதும் தான். எப்படி எழுபதுகளில் கட்டப்பட்ட ஒரு உறுதியிழந்த அடுக்ககத்தின் தேய்மானம் நம் வாழ்க்கைக்கு உருவகமாக சடுதியில் மாறியது? சமையலறை பைப் உடைந்த போது அது சாதரணமாக வீட்டில் நடக்கும் நிகழ்வில்லை. அது ஒரு அவமதிப்பு. அசௌகர்யமல்ல விரோதமானது.அமெரிக்கா எங்களை ‘ போ’ என்கிறது. எனக்கு அது புரிகிறது.

பரிதாபகரமான ஒரு ஐஸ் தேநீருடன், இந்த புயல் மதிய நாளில் , ரோவின் சமையலறையில் அமர்ந்து என்னுடைய நொறுங்கிக் கொண்டிருக்கும் வீட்டைப்பற்றி ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தேன்.அவள் தன்னுடைய சிற்பம் போல் செதுக்கப்பட்ட புருவம் ஒன்றை உயர்த்தி ‘ வீட்டுப்பேய்’ என்றாள். இங்கே படிக்கும் மாணவி அவள். இந்த புது நாட்டில் அவளின் தனமைபடுத்தப்பட்ட உணர்வு என்னுடைய உணர்வுடன் ஒவ்வொரு புள்ளியிலும் ஒத்துப்போக்க்கூடியது.அது வீட்டுப்பேயாக இருந்தால் நன்றாக இருக்கும் ஆனால் அது வெறும் அமெரிக்கா தான் என்று நிச்சயமாக நம்புகிறேன் என்று அவளிடம் சொல்கிறேன்.

கிறிஸ்மஸுக்கு அடுத்த நாள் அடர்வனம் போலுள்ள என் டிரெஸிங் மேசையை ஒதுங்க வைக்கிறேன். உபயோகித்த பொருட்கள் கிடைக்கும் சால்வேஷன் ஆர்மியில் வாங்கிய இந்த அதிசய மேசை வீட்டிற்காக முதலில் வாங்கிய பொருட்களுள் ஒன்று. பெரிய வட்ட கண்ணாடியுடன் கறுத்த மர இழுப்பறைகளுமாக தரைக்கு சமீபமாக தாழ்வாக நிற்கிறது. நான் உபயோகித்த பொருட்களிலேயே மிக கம்பீரமானதும் மிக அழகானதும் இந்த மேசை. இதை விட்டுச் செல்வது வருத்தம் தருவது ஆனாலும் நான் உறுதியாக இதை விட்டுச்செல்வேன்.

க்ரீச் என ஒலியெழுப்பும் எங்கள் கட்டிலில் உட்கார்ந்து முடிச்சு விழுந்து கிடக்கும் என் மலிவான நகைகளை குவித்து வைக்கிறேன் பல மணி நேரம் செலவிட்டு வேண்டாதவைகளை கழிக்கலாம் என்ற நம்பிக்கையில்.எந்த இடத்திற்கு போவது என்று முடிவு செய்யும் முன் ,விமான பயணச் சீட்டு எடுக்கும் முன் , இந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கான வீணான முயற்சியாக இதை செய்கிறேன். மலிவு விலை கடைகளிலிருந்தும் பொருட்காட்சிகளிலிருந்தும் நிறைய வாங்கி சேர்த்திருந்தேன் என்று நினைத்திருந்தேன், என் பேராசையை நானே கடிந்து கொள்வேன் என்று நம்பியிருந்தேன்.ஆனால் மிகவும் குறைவான நகைகளே இருந்தன. இரண்டு டாலர் சங்கிலிகள் ஒரு கை நிறைக்குமளவும், சில காதணிகள். கடந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நேசிக்கப்பட்ட ஆனால் இப்போது உடைந்த பரிசுகள் , சங்கிலி தொலைந்த கற்கள். கால்வேயில் வாங்கிய லாப்ராடைட் கற்கள் , க்றைஸ்ட் சர்ச்சை தாண்டிய கடைகளிலிருந்து கண்ணாடி கற்கள், க்ராஃப்டன் தெருவைத் கடந்து உள்ள நகைக்கடை தெருவிலுருந்து ஒரு மரகதப் பச்சை. கடினமான கூர்மையான பொருட்கள்_ வீட்டிலிருந்து, CB யிடமிருந்து வந்த பரிசுகள் , என் கையில் தங்களை சூடேற்றிக் கொண்டிருந்தன. அதை பரத்தி வைக்கிறேன். 

நான் அணிவதை நிறுத்திய , தையல் நூலுடன் சிக்கிய நான்கைந்து கழுத்து சங்கிலிகளின் சிக்கலை விடுவிக்கிறேன். ஒன்றை ஒன்று பற்றியிருக்கின்ற அவற்றை பிரித்தெடுக்கும் போது அந்த கறுத்த உலோகம் என் விரல் நுனிகளில் மென்மையாய் உராய்கிறது. ஒன்று கூட அறுபடாமல் இதை செய்ய முடிகிறது.

மலிவு விலை கடையின் பெட்டியில் இவற்றை தனியாக பத்திரப்படுத்தினேன்.அந்த சங்கிலிகளை ஒழுங்கு படுத்தியது, அந்த சிக்கல்களை கூர்ந்து கவனித்து புரிந்து கொண்டதில் என் கைகளில் காரீய சாம்பல் ஒட்டியிருந்தது. பரிசாக வந்த உடைந்த சங்கிலியற்ற மணிகற்களை அதற்குண்டான பெட்டிகளில் வைக்கிறேன். அணிவதற்கு தகுதியற்றவையாக இருந்தாலும் விலைமதிப்பற்றவை தான்.இப்போது உடைந்தருந்தாலும் முன் நாட்களில் நான் அவற்றை அணிந்திருந்தேன். என் கழுத்தைச் சுற்றி பகட்டாகவும் அழகாகவும் மின்னியவை. உடைந்துவிட்டதால் அவை மதிப்பற்றவையாகி விடாது. 

தோற்றுப்போனவை என்பதால் அவற்றை வைத்திருப்பது வீணானது என்றாகாது.

இப்போது உபயோகமில்லை என்பதால் அது குப்பை என்றாகாது. மிளிரும் நற்காலங்கள் இல்லை என்றாகாது ….இந்த அமெரிக்க அடுக்கக வீடு அற்புதமான ஒன்று, ஒரு பரிசு, ஒரு சிறப்பான உரிமை எங்கள் வீடு இல்லை என்றாகாது சங்கிலி அறுந்த மாணிக்கம்.

அடுத்த நாள் வேலை முடிந்த பின் என் இடது கையை பார்க்கிறேன் , என் கல்யாண மோதிரம் மின்னும் தங்கத்தில் தீ நீலத்தில் ஒளிரும் ஐந்து கோமேதக க்கற்களுள் . ஒன்று விழுந்து விட்டது , முட்டியால் குத்தியதில் உடைந்த ஒரு பல், அதிர்ச்சியூட்டும் வெற்றுப் பள்ளம். அழகான ஒன்றும் , நீங்கள் மிகவும்நேசிக்கும் ஒன்றும் சரியாக அமையாத போது மட்டும் வரும் பரிகொடுத்த அழுத்தமான துயரம் , அதனால் வயிற்றில் உணரும் சங்கடம் ஆனால் நான்அந்த வெற்றிடத்தை கவனித்து கேட்கிறேன்.

ஒவ்வொரு நாளும் மேலும் கொடுக்க வேண்டிய நிறைய துணிகளை மடித்து வைக்கிறேன் .பழுதடைந்து வேலை செய்யாத ஏதோ ஒன்றை வெளியில் வீசுகிறேன், மழைநீரை துடைத்தெடுக்கிறேன் , அயோக்கிய எறும்புகள் மீது மருந்தடிக்கிறேன். கண்ணாடி ,பிசாசு கறுப்பை உமிழ்ந்தபடி தான் இருக்கிறது . அதை பொருட்படுத்தாது முறைத்துக் கொண்டு அங்கு தான் பல் விளக்குகிறேன்.

கல்யாண மோதிரத்தை சரி செய்வேன். இந்த கறும்பூசனத்தை துடைத்து சுத்தப்படுத்துவேன்.

விரைவில் இங்கிருந்து கிளம்ப விமானப் பயணச்சீட்டுகளை எடுப்போம். அப்போது கலிஃபோர்னியாவை திரும்பிப் பார்க்கையில் எங்கள் தோள்களுக்குப் பின் அது தங்கமாகதான் மிளிரும்.

மூலம்: சாரா கிரிஃபின்

தமிழில்: அனுராதா ஆனந்த்சாரா மரியா க்ரிஃபின் -குறிப்பு

ஒரு நாளில் சில மணிநேரங்கள் வாசிப்பாவது இல்லையெனில் தன்னால் இந்த உலகத்திற்குள் முழுமையாக நுழைய முடியாது என்று கூறும்
Sarah Maria Griffin 30 வயதான டப்ளின் அயர்லாந்தைச் சேர்ந்த கவிஞர் எழுத்தாளர்.தான் சிறு வயதிலிருந்து எழுதிக்கொண்டும் , வாசித்துக் கொண்டும்  , விடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டும் இருந்ததாக கூறுகிறார்.
கவிதைகளின் வழி தான் இலக்கியத்திற்குள் பிரவேசம் .11 வயதிலேயே தன் கவிதைகளை பிரசுரிக்க இதழ்களுக்கு அனுப்பியவர் . அவை நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.ஆங்கிலத்திலும், மீடியா மற்றும் கலாச்சார துரையிலும் பட்டம் பெற்றவர்.மூன்றாவது ஆண்டு கல்லூரியில் படித்த  போது ,விரிவுரையாளர் ஒருவர் படித்த பின் என்ன திட்டம் இருக்கிறது என கேட்டிருக்கிறார் .அதற்கு சேரா தான் எழுத்தாளராக போவதாக சொன்ன போது  அந்த ஆசிரியர் பெரிதாக சிரித்திருக்கிறார். அந்த கணம் மிக உறுதியாக தன் பாதையை முடிவெடுத்தாக சொல்கிறார்.
2012 இல் அயர்லாந்தில் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக , வேலைகள் அரிதாயின. இவருடைய காதலருக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் முகநூல் வழியாக ஒரு சந்தர்ப்பம் வருகிறது . இருவரும் அயர்லாந்தை விட்டு கலிஃபோர்னியாவிற்கு குடி பெயர்கிறார்கள். சேராவுக்கு வேலை கிடைக்கவில்லை .  பிற வீடுகளில்  குழந்தை பராமரிப்பு போன்ற சிறு சிறு வேலைகள் செய்து கொண்டு, தன் சொந்த ஊரின் நினைவுகளை விட்டு அகல முடியாமல்,இந்த புது நகரத்தின் கலாசாரத்தை அறிவதிலும் , வாசிப்பிலும் , தன் அனுபவங்களை எழுதுவதுமாக இந்த கடுமையான காலத்தை கடந்திருக்கிறார்.
அமெரிக்காவில் தான் வசித்த வருடங்கள் முழுவதுமே      இந்த குடிபெயர்வின் கோப்புகளை சரிபார்ப்பதிலேயே  கழிந்ததாக கருதுகிறார்.ஐரிஷ் டைம்ஸ் என்ற பத்திரிகையில் அவரது கவிதைகள் பிரசுரமாயின.பின் தன் கவிதைகள் உருவத்திலும் எடையிலும் பெருகி கட்டுரைகளும் கதைகளுமாக விரிந்தன என்று சொல்கிறார்.
இந்த எழுத்துக்களே அவரது முதல் நூலான Not lost – A story about leaving home  என்று 2013 யில் வெளிவந்தது. இந்த மகிழ்ச்சி ஒரு சர்ரியலிஸ அனுபவமாக இருந்ததாக கூறுகிறார்.தான் வேலை செய்து வந்த வீட்டில் துணிகளை மடித்து வைத்துக்கொண்டிருக்கும் போது முதல் புத்தகம் பிரசுரிப்புப் பற்றிய தொலைபேசி வந்தது என்றும் , இந்த செய்தி கேட்டபின்பும் நம்பமுடியாது தொடர்ந்து துணிகளை மடித்துக்கொண்டிருந்ததாகவும் சொல்கிறார் .
 இது வளருதல், காதல் , வாழ்க்கை மற்றும் அழகாக அதை வாழ்தலைப் பற்றிய வெளிப்படையான , நுட்பமான, விவரிப்பு  என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டுதலைப்  பெற்றது. இது memoir வகைமையைச் சார்ந்தது.
இரண்டாவது நூலான Spare and found parts என்ற புதினம் ,சரியான கேள்விகளை , மிகவும் பொறுப்புடன் ,சரியான விடயங்களைப்பற்றி கேட்கிறது  ஆனால் அதற்கான பதில்கள அளிக்க முயலவில்லை என்ற விமர்சனத்துடன்   கொண்டாடப்பட்டது.
வளர்இளம் பருவத்தினருக்கான (young adult) Other words for smoke என்ற நூலும் , Follies  என்ற கவிதை தொகுப்பும் கூட எழுதியிருக்கிறார்.
இப்போதும் வாசிப்பும் , தொடர்ந்து எழுதுவதும் கணவருடன் விடியோ கேம்ஸ் ஆடுவதை வழக்கமாக பின்பற்றுவதாக்கூறுகிறார்.

தன்னை டப்ளினர் ( டப்ளினைச் சார்ந்தவள்) என்று குறிப்பிட்டு சொல்லும் சேரா தன் காதல் கணவருடனும் , தன் பூனையுடனும்  கடற்கரையோரத்தில்  டப்ளினில்  சிகப்பு செங்கற்களான சிறிய வீட்டில் வசிக்கிறார்.

2 COMMENTS

  1. நல்ல கதை. அமெரிக்காவுக்குச் சென்றால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்றொரு கருத்து நிலவி வரும் காலத்தில் அங்கு நிலவும் வாழ்வின் சிக்கல்களை மிக நுட்பமாகச் சொல்லுகிறது இக்கதை. இந்தக் கதை எனக்குப் பிடித்ததற்கு காரணம் அதிகம் அறியப்படாத இளம் எழுத்தாளரின் கதை என்பதுதான். புதிய எழுத்தாளர்கள், புது எழுத்து வகை, நம்முடைய பொதுப்புத்தியை ஆக்கிரமித்து நிற்கும் கற்பிதங்களை உடைக்கும் கதைகளை வாசிப்பது நம்மை மேம்படுத்தும். மொழிபெயர்ப்பை இன்னும் நல்ல முறையில் செய்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. நிறைய எழுத்துப் பிழைகள். ஆசிரியர் கவனத்தில் கொள்ள வேண்டியவை. வாழ்த்துகள்.

  2. நல்ல முயற்சி! ஆனால், அமெரிக்காவில் பல வ௫டங்கள் வாழ்ந்து வந்தாலும் கதையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.