அணங்குகொல்? – க. மோகனரங்கன்

 


முகத்தில் சில்லென்று தண்ணீர் படவும் எரிச்சலுடன் கண்களை இடுக்கிக்கொண்டு பார்த்தேன். அம்மா சுமந்துகொண்டு போன தண்ணீர்க் குடத்திலிருந்து தளும்பித் தரையில் வழிந்த நீர் சிதறி கன்னத்தில் தெறித்திருந்தது. நான் படுத்திருந்த கூடத்திலிருந்து பார்க்கும் போது திறந்திருந்த வாசல் முற்றத்தில் துவைத்து உலர வைத்த வேஷ்டியைப் லே வெய்யில் ஏறிக் கிடந்தது. மணி ஏழரைக்கு மேலிருக்கும்.போர்வையை ஜாக்கிரதையாக விலக்கினேன், வழக்கம் போல கைலி சுருண்டு முழங்காலின் அடியில் கிடந்தது. இரண்டு மாதமாகத்தான் கைலி கட்டப் பழகியிருந்தேன். இன்னும் அவிழாமல் இடுப்பில் நிற்கும்படி கட்டத் தெரியவில்லை. கைகளால் துழாவி மேலேற்றி இடுப்பில் இறுக்கிக் கட்டினேன். உடல் சோம்பிக் கிடக்க, உடனே எழுந்திருக்க மனமில்லாமல் கண்களை மூடியிருந்தேன், கூரையின் பக்கவாட்டு சாய்ப்பு இருந்த இடைவெளி வழியே இறங்கிய ஒளிக்கற்றையில் பொன் தூசுகள் மினுங்குவதை அரை விழிகளால் கண்டு கொண்டிருந்தேன், திடீரென்று நிழல் வெட்டி வெளிச்சம் கலையவும் உடலை அசைக்காமலே யாரென்று கவனித்தேன். மெத்தை வீட்டுப் பெரியம்மா,

“வாக்கா!’ அடுப்பில் வேலையாயிருந்த அம்மா வரவேற்பது காதில் விழுந்தது.

“இந்தக் கூத்தை கேட்டியா?” பெரியம்மாவின் பீடிகையையும், தாழ்ந்த குரலையும் கேட்டதும் ஏதோ அசந்தர்ப்பமான விஷயமாக இருக்கக்கூடும் என்று புரிந்தது. காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.

‘அவன் தூங்கறான். நீ சொல்லுக்கா !’ என்றது அம்மாவின் குரல். பெரியம்மா சொல்ல முணு முணுவென்ற சப்தம். ஒன்றும் புரியவில்லை.

அடக் கண்றாவியே அமுக்குணி மாதிரி இருந்துகிட்டு இத்தன வேலை பண்ணியிருக்காளா? ’

‘ஊமைக் கோட்டான் ஊரைக் கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க’

‘ பொன்னு இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கா எப்ப வேணாலும் உட்கார்ந்திடுவா ! இவளுக்கு எதுக்கு இந்தப் பொழப்பு?’ களத்தில் நெல்லடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஆம்பிளை ஆள் பத்து பேருக்கும் பொம்பிளை ஆள் எட்டு பேருக்குமாக சேர்த்து சாப்பாடு கொண்டுபோக மொத்தமாக சேர்த்து உலைக்குப் போட எத்தனை படி அரிசி உலைக்கு போடவேண்டும் என்று கேட்க வந்த சரசு அக்காவும் கூட வந்த வேலையை மறந்து நின்றுவிட்டாள். 

“அவளை எதுக்குச் சொல்லுறீங்க ! சீமையில 

இல்லாத ரதின்னு இவளைப் போய் சிறை எடுத்துக்கிட்டு வந்தானே பொண்டுகன் அவனைச் சொல்லனும்!” நாமளும் பொறந்த வீட்டுல நிழலுலதான் வளர்ந்தோம். கட்டிகிட்டு வந்தப்புறம் காடு, கரை, தோட்டம்னு அலையிலயா ? வெய்யில் பட்டால் பொண்டாட்டி உடம்பு கருத்துடும்னு குச்சுக்குள்ளவே வச்சு தாங்கினானே அவ புருசன். ஒரு மாசத்துக்கு அவ வாங்கற சோப்பும் பவுடரும் எவ்வளவுங்கறிங்க?” துண்டு துண்டாகக் காதில் விழுந்ததிலிருந்து சண்முகம் டிரைவர் மனைவி பூங்கொடியைப் பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. ஆனால் சங்கதி என்னவென்று முழுசாகத் தெரியவில்லை. போர்வையை உதறி கைகளை நீட்டிச் சோம்பல் முறித்தேன்.  அவர்கள் தம்பேச்சை நிறுத்திக் கொண்டனர். 

அடுப்பில் உலை கொதிச்சு கிடக்கும். அப்புறம் வர்றேன்  சின்னம்மா ” என்றபடி சரசக்கா புறப்பட்டது. படுக்கையைச் சுற்றி மூலையிலிருந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு கொடியில் கிடந்த சட்டையை உதறி எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினேன்,

”இருடா டீயை சுடவச்சு தர்றேன்” என்ற அம்மாவிற்கு “வேண்டாம்”என்ற ஒற்றைச் சொல்லை பதிலாகத் தந்துவிட்டு நடந்தேன்.                 

நல்ல தண்ணிக் கிணற்றுக்குப் போகும் வழியில் மேலாகக் கொஞ்ச தூரம் நடந்தால் தெருமுனையில் வலது பக்கம் சண்முகத்தினுடைய ஓட்டு வீடு. வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த கூட்டத்தின் தெளிவற்ற பேச்சுகளுக்கு மத்தியில் சண்முகத்தின் ஆக்ரோஷமான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது, தெரு திரும்பியதுமே காதில் விழுந்தது. வீட்டின் முன்னிருந்த வேப்பமரத்தினடியில் நின்று கொண்டிருந்தது பூங்கொடி, அவசரமாக அள்ளிச் செருகியிருந்த கொண்டையிலிருந்து பிரிந்த முடியிழைகள் கன்னத்தில் ஒட்டியிருக்க, கண்ணீர் வழிந்து உலர்ந்து போன கண்களுடன், சூனியத்தை வெறித்த பார்வையுடன் அது நின்றுகொண்டிருந்தது.            

 பீடியை இழுத்தபடி எதிரே திண்ணையில் உட்கார்ந்திருந்த சண்முகம் திடீரென்று எழுந்து ஓடி பூங்கொடியின் கன்னத்தில் அறைந்தான். அது கண்களை மூடி, உதட்டைக் கடித்து அந்த அறையை மௌனமாக வாங்கிக்கொண்டு நின்றது. “என்னடி குறை வச்சேன்? ராத்திரி பகல்னு இல்லாம மோட்டார் சூட்டுல வெந்து சம்பாரிச்சுகிட்டு வந்து போட்டா, உட்கார்ந்து திங்குற திமிரு உனக்கு இன்னொரு புருஷன் கேட்குதா?” முடியைப் பிடித்து அவள் முகத்தைக் கொண்டுபோய் மரத்தில் முட்டினான். வலியில் உதடு கோண ஓரத்தில் ரத்தம் துளிர்த்தது.

“களை வெட்டிக் கஞ்சி குடிச்சுகிட்டிருந்த நாயி நீ! உன்னைப் பார்த்து மயங்கி நடு ஊட்ல கொண்டாந்து வச்சேன் பாரு நான், என்னைச் சொல்லனும்டி! நாய் புத்தியைக் காட்டிட்டியேடி! வாலை ஆட்டிக்கிட்டு பீயைத் திங்கப் போயிட்டியேடி!” அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் பொங்கக் கத்தினான். மறுபடியும் எழுந்து எட்டி உதைக்கக் காலைத் தூக்கிக்கொண்டு ஓடியவனை பக்கத்து வீட்டு பேபியம்மாள் குறுக்கே விழுந்து தடுத்தது. “வேண்டாம்டா சாமி! அடிச்சது போதும்டா. பெத்ததுவ ரெண்டும் பரிதவிச்சு நிக்குதுங்க. அதுங்க முன்னால அடிக்காதடா! பாவி முண்ட பண்ணது தப்புதான். இல்லைன்னு யாரும் சொல்ல மாட்டங்க. ஆத்திரத்துல ஒண்ணு கிடக்க, ஒண்ணு ஆயிப் போயிட்டா, நம்ம புள்ளைங்கதானப்பா அனாதையாப் போகும்” சண்முகத்தை ஆறக்கட்டியது. ”இங்க என்ன கண்காட்சியா காட்டறாங்க? வேடிக்கை பார்க்க வந்திட்டிங்க” சுற்றி நின்ற கூட்டத்தைப் பேசி விரட்டி அடித்தது.         

ஆட்கள் கலைந்ததும் ஆவேசம் குறைந்தவனாக சண்முகம் பூங்கொடியின் பக்கமாகத் திரும்பி தூவென்று துப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கதவைச் சாத்திக்கொண்டான். பூங்கொடியின் பெண்ணையும் பையனையும் “வயித்தை காயப்போடதிங்க வாங்க” என்று பேபியம்மா தன் வீட்டுக்கு அழைத்துப் போனது.தெருவின் வெறுமையில் மரத்தடியில் தலை குனிந்து தனியே அவள் ஒரு துயர ஓவியம் போல் நின்றிருந்த அந்தக் காட்சியை இதற்கு முன்னரும் எங்கேயோ, எப்போதோ கண்டிருந்ததைப் போல ஒரு உணர்வு என்னுள் எதனால் எழுந்தது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். சேலை முந்தானையைக் கொண்டு முகத்தைத் துடைக்கக் குனிந்த பூங்கொடி நிமிரும்போது அவளையே நோக்கிக்கொண்டு நின்ற என்னைக் கண்டது. நிமிர்ந்து சில நொடிகள்தான் என்னைப் பார்த்தது. பார்த்து விட்டு மரத்தில் சாய்ந்தபடி மறுபடியும் சூன்யத்தை வெறிக்கத் தொடங்கிவிட்டது. அந்த சில நொடிகளில் என்னை ஊடுருவிச் சென்ற பார்வையில் தெரிந்தது வெறுப்பா, ஏளனமா, பரிதாபமா அல்லது இவையெல்லாம்

மொத்தமாகக் கலந்த ஒன்றா புரியவில்லை. எனக்கு மட்டுமல்ல எந்த ஆணுக்குமே அந்தப் பார்வையின் வேதனையைப் புரிந்துகொள்ள  முடியாது என்றே எனக்குத் தோன்றியது. அதற்கு மேல் அங்கு நிற்கப்  பிடிக்காமல் திரும்பி நடந்தேன்.   

அப்போது நான்  பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். மாரியம்மன் திருவிழா முடிந்த மறுநாள் மழை வேறு விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்தது.

வகுப்பில் பாதிபேர் வரவில்லை. தமிழ்ப் பாடவேளை. குருலிங்கம் ஐயா, பாடப் புத்தகத்தை மூடிவைத்துவிட்டுக் கதை சொல்ல ஆரம்பித்தார். கணையாழியை தொலைத்துவிட்ட சகுந்தலையைப் பற்றி உணர்ச்சி ததும்ப விவரித்துக் கொண்டிருந்தார். அவர் கதை சொல்ல ஆரம்பித்தால் எதிரே இருக்கும் மாணவர்களை மறந்து மெல்ல மெல்லத் தன் குரலில் தானே ஆழந்துவிடுவார் .வடிவேல் பின்பக்கம் கணேசனிடமிருந்து எதையோ வாங்கி அவசரமாகத் தனது  காக்கிப் பைக்குள் திணிப்பதைப் பார்த்தேன். ஏதோ கதைப் புத்தகமாக இருக்க வேண்டும். கணேசன் பாடப் புத்தகத்தைத் தொடுவதே பரிட்சைக்கு முதல் நாள்தான். அவன் எப்போதிலிருந்து கதைப் புத்தகமெல்லாம் படிக்க ஆரம்பித்தான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இடைவேளை மணி அடித்ததும் ஐயா கதையை மனசில்லாமல் பாதியில் நிறுத்திவிட்டுப் போக, நான் வடிவேலிடம் அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத் தருகிறேன் என்று கேட்டேன். முதலில் அப்படிப் புத்தகம் எதுவுமே இல்லை என்று சாதித்த வடிவேல் கடைசியாக பள்ளி நேரம் முடிந்தவுடன் காட்டுகிறேன் என்று ஒப்புக்கொண்டான். எல்லோரும் வீட்டிற்குப் போனபிறகு வடிவேல் என்னை வகுப்புக் கட்டிடத்தின் பின்பக்கமாகக் கூட்டிப் போனான். கதைப் புத்தகத்தைக் காண்பிக்க எதற்கு இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு போகிறான் என்ற குழப்பத்தோடு அவனுடன் சென்றேன். காம்பௌண்டு சுவர் மறைவில் நின்று, சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, யாரிடமும் மூச்சு விடக்கூடாது என்று சொல்லி பையில் கைவிட்டு எடுத்து நீட்டினான். மங்கலான சாணித்தாளில் அச்சடிக்கப் பட்டிருந்தது அப்புத்தகம். ஒரு பக்கம் படித்ததுமே பதற்றத்தோடு நிமிர்ந்து வடிவேலைப் பார்த்தேன். அவன் எதிரே ஆடிக்கொண்டிருந்தது தென்னை மரத்தின் பசுங்கீற்றுகளைப் பார்த்துக்கொண்டிருந்தான். நான் குறுகுறுப்போடு அதன் பக்கங்களைப் புரட்டி வேகவேகமாகப் படித்தேன். அடிவயிற்றில் கிளம்பி மெல்ல உடம்பெங்கும் பரவியது ஒரு உஷ்ணம்.

அதுவரையிலும் நான் உணர்ந்திராத வெப்பமது. புத்தகப்பையை மடி மீது வைத்து இறுக்கிக் கொண்டேன்.                

படுத்த உடனே உறங்கிப் போகிறவன் அன்றிரவு வெகுநேரம் வரையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தில் படித்த ஒவ்வொரு வார்த்தையும், வாசமும் சூடும் கொண்ட உறுப்புகளாக மாறி என் புலன்களை அழுத்த கற்பனையுள் தறிகெட்டு மூழ்கிப் போனவன் எப்போது உறங்கினேன் என்று தெரிய வில்லை.

எதற்கு, யாருடன் போனேன் என்று தெரியவில்லை. பெரிய காட்டின் நடுவில் சிக்கிக்கொண்டு வழி தெரியாமல் தவித்தேன். நேரத்தைக் கூட அனுமானிக்க முடியவில்லை . உயரே சூரியனின் கதிர்கள் வியாபித்திருந்த பசுங்குடையை ஊடுருவி உள்ளே வர இயலவில்லை. பின்னணியில் ஒலித்த கண்ணில் படாத பூச்சிகளின் ரீங்காரம் சூழலின் மர்மத்தை அதிகரித்துக் காட்டியது. பயத்தில் என் நெஞ்சு துடிக்கும் ஓசை எனக்கே கேட்கும் நிசப்தத்தில் சருகுகளை மிதித்தபடி எட்டு வைத்து வந்து கொண்டிருந்தேன். திசையெதுவும் புலப்படவில்லை. உள்ளுணர்வு காட்டிய தடத்தில் முன்னேறிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த சப்தத்தை செவியுற்றேன். உடுக்கையா அல்லது பறையா… எனக்குப் பிரித்தறியத் தெரியவில்லை . ஆனால் அது தோல் வாத்தியம்தான். தூரத்திலிருந்து புறப்பட்டு வந்த அந்த சப்தம் மெல்ல என்னை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. நின்று உற்றுக் கேட்கும் தோறும் எலும்புகளை ஊடுருவிச் செல்லும் அதனதிர்வுகளில் எதோ நரம்புகளின் முடிச்சு அவிழ்வதை உணர்ந்தேன். அதன் ஒலிக் கார்வைகள் நெருங்க, நெருங்க என் நடை விரைவு கூடி ஓட்டமாகியது. ஒரு கட்டத்தில் அந்த ஓசையின் தாளக் கட்டுக்கு ஒத்திசைந்த வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்.          

எவ்வளவு நேரம், எவ்வளவு தூரம் ஓடிவந்தேன் எதுவும் தெரிய வில்லை. களைத்துப் போய் நின்ற போதுதான் எதிரே மறித்து நின்றிருந்த பாறைக் கூட்டமொன்றின் இடுக்கில் அந்தக் குகையைக் கண்டேன். என் கால்கள் செலுத்தப்பட்டவை போல் அக்குகையின் வாயிலை நோக்கித் தானாகவே என்னை நடத்திச் சென்றன. ஈரம் கசகசத்த தரையைக் கொஞ்ச தூரம் இருட்டில் கடந்தபின் மங்கலான வெளிச்சம் தென்பட்டது. நின்று நிதானித்தேன். மூடித் திறந்த பின் கண்களுக்கு வெளிச்சம் பழகியது. எதிரே மேடையென அகன்றிருந்த பாறை மீது தன் கூந்தலை விரித்துக் கிடத்தியபடி சம்மணமிட்டுக் கண்மூடி அமர்ந்திருந்தாள் ஒரு பெண். பின்னால் குகைச் சுவரை ஒட்டியபடி இரு பெண்கள் கைகளில் தீவட்டியோடு நின்று கொண்டிருந்தனர். அவர்களின் கழுத்தில் கிடந்த மலர் மாலைகளையும், இடையில் தரித்திருந்த மரவுரிகளையும் காண யாரோ ஆதிவாசிகள் என்று தோன்றியது. பிறகுதான் நினைவு வந்தவனாக | மேடையிலிருந்த பெண்ணைக் கூர்ந்து நோக்கினேன். அவள் முழு நிர்வாணமாக இருந்தாள். பின்னாலிருந்து விழுந்த வெளிச்சத்தின் தழலில் அவள் முகம் மறைந்திருந்தது. கொங்கைகள் மீதும் அடிவயிற்றின் மேலும் குங்குமமும் மஞ்சளும் அப்பிக் கிடந்தது. உற்றுக் கேட்கவும்தான் அவள் எதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சொற்கள் புரியவில்லை. மந்திரம் போலிருந்தது. அவள் கண்திறந்து பார்க்க வில்லை என்றாலும் கூட நான் வந்து நின்றதை அவள் அறிந்திருந்தாள் என்றே எனக்குத் தோன்றியது. வெளியே அந்தத் தோல்கருவியின் இசை நெருங்கிக் கொண்டிருந்தது. அதற்கேற்ப உள்ளே அமர்ந்திருந்தவளின் உச்சாடனத்திலும் வேகம் கூடியது. என் புலன்கள் மூழ்கும் கூண்டில் அடைபட்ட எலிகள் போலத் தத்தளிக்கத் தொடங்கின. என் உடலின் மீதான மூளையின் கட்டுப்பாட்டை நான் இழக்கத் தொடங்கியிருந்தேன். விறைப்படைந்த எனது உடலானது பாறை மீது

ஏறி அப் பெண்ணின் காலடியில் பணிந்து நிற்பதை யாருடையதோ என்பதைப்போல பார்த்துக்கொண்டிருந்தது என் நினைவு. கைகளை அகல விரித்தவள் கண்திறந்து புன்னகைத்தாள்… ஒரு குழந்தையைப் போல அவள்  இடுப்பில் தவழ்ந்து ஏறியவன், அவளது முலைகளில் ஒன்றை நோக்கி வாய்குவித்த வண்ணம் அண்ணாந்தேன் . கனிவுடன் புன்னகைத்த அம்முகம் தெளிந்து பூங்கொடியின் முகமாகி நிலைத்தது.“ அக்கா…நான்…தப்பு… இல்லை ”

நாக்கு குழற எதோ சொல்ல முயன்றவன் செவிகளில் குகை வாயிலைக் கடந்து வந்த தோல் கருவிகளின் ஓசை இடியென இறங்க மொத்தமாக நினைவு தப்பியது.

 

வழக்கத்திற்கு மாறாக அதிகாலையிலேயே விழிப்பு கண்டுவிட்டது. குளிர்ந்த நீரில் கழுவிய பிறகும் கண்களின் ஓரத்தில் சிவப்பு தங்கியிருந்தது, தலைவாரும் போது கண்ணாடியில் தெரிந்தது. கதவை ஓசையின்றித் திறந்து நடந்தேன். மார்கழிப் பனி ஊசிகளென உடல்மீது இறங்கியது. கைகளைக் குறுக்கி உடலோடு வைத்துக் கொண்டேன். வாசலில் குனிந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தது பூங்கொடி . அதன் முகத்தைப் பார்க்க மனம் ஒரு கணம் கூசினாலும் என் நடை தானாகவே வேகம் குறைந்தது. குனிந்த நிலையில் கோடிழுக்க வாகாக அவள் கை முன்நீண்டிருக்க கழுத்திற்குக் கீழே தென்பட்ட சதைத் திரட்சியில் என் கண்கள் தயங்கி நிற்க உடலில் அந்த உஷ்ணம் மீண்டும் எழுவதை உணர்ந்தேன். நிமிர்ந்த பூங்கொடி என் கண்களைப் பார்த்து விகல்பமில்லாமல்  சிரித்தது. கத்தி போல் நேராகச் சரிந்து இறங்கிய நாசியின் கீழே, பிளந்த நாவல் பழத்தினையொத்த கருஞ்சிவப்பு உதடுகளில் துளிர்த்த பனித்துளிகளின் வரிசையாய் அப்பற்கள்…. போயும் போயும், மடையன் சண்முகத்துக்கு இவ்வளவு அதிர்ஷ்டமா? இது தனக்கு வாய்த்த பொக்கிஷம் என்றாவது அவனுக்குத் தெரியுமா? நான் மறுகி நிற்கையில் கோலப் டப்பாவுடன் நிமிர்ந்த பூங்கொடி சொன்னது ”இந்தப் பனியில் இப்படி நின்னா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” நான் வெறுமனே தலைய விட்டு மேலே நடந்தேன்.

 அன்று நாள் முழுவதும் வேப்ப மரத்தடியிலேயே நின்று ஓய்ந்து போன பூங்கொடி சாயங்காலம் பேபியம்மாவிடம் பஸ்சுக்குக் காசு வாங்கிக்கொண்டு புதுப்பட்டியிலிருந்த தன் தங்கை வீட்டிற்குப் போய்விட்டது. பதினைந்து நாள் கழித்து வந்தபோது சண்முகம் வீட்டில் இல்லை. வண்டிக்கு போய்விட்டிருந்தான். காலைக் கட்டிக்கொண்டு அழுத பிள்ளைகளை சமாதானப்படுத்திவிட்டு, சமைத்து, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து வைத்தது. டூட்டி முடிந்து சண்முகம் வீட்டிற்கு வரும் நேரத்திற்கு பூங்கொடி எழுந்து பேபியம்மா வீட்டிற்கு வந்து உட்கார்ந்து கொண்டது. “அந்தத் தேவிடியா முண்டை மறுபடியும் எதுக்கு வந்தா ?” பிள்ளைகளிடம் சத்தம் போட்ட சண்முகம் மேற்கொண்டு ரகளை எதுவும் செய்யாமல் படுத்துக்கொண்டான். காலையில் அவன் புறப்பட்டுப் போனதும் பூங்கொடி மறுபடியும் வீட்டிற்கு போனது. இந்த நாடகம் ஒரு வாரம் போல நடந்தது. பிறகு ஒருவரை ஒருவர் வீட்டில் இல்லாதது போல பாவிக்கப் பழகிக்கொண்டு மூன்று மாதங்கள் போயிற்று. அத்தியாவசியத் தேவைகளுக்கு பிள்ளைகள் மூலம் பேச்சு நடந்தது. அக்கம்பக்கமிருந்தவர்கள் கண்களில் முளைத்திருந்த முட்கள் முனை மழுங்க மேலும் ஆறு மாதங்களாயிற்று. ஏழெட்டு மாதங்களுக்கு பிறகுதான் பூங்கொடி தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கியது. 

 அன்றும் படியேறி வீட்டிற்கு வந்த பூங்கொடி அம்மாவிடம் பேசுவதை புத்தகம் படித்தபடியே கேட்டு8க்கொண்டிருந்தேன். உள்ளூர் டெண்ட் கொட்டகைக்குப் புதிதாக வந்திருக்கும் படத்தைப் பார்க்க வேண்டும் என்று தன் பெண் அடம் பிடிப்பதாகவும் , அதற்காகக் கடனாக இருபது ரூபாய் வேண்டும், அடுத்த வாரம் திருப்பித் தந்துவிடுவதாகவும் கேட்டது. கடுகு டப்பாவிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்த அம்மா கூடவே  “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத பூங்கொடி ! வயசு பொண்ணு நெனைச்ச நேரம் சினிமா டிராமா பார்க்கனும்னுலாம் இப்படி அடம் பிடிக்கக்கூடாது நீதான் சொல்லி வளர்க்கணும்” என்று அறிவுரை சொன்னாள். 

“எங்க அண்ணி நாம சொல்றதை இப்பத்திய பிள்ளைங்க கேட்குதுங்க. இதுல இவங்க அப்பன் கொடுக்கற செல்லம் வேற” சலித்துக்கொண்டே போனது பூங்கொடி.

முதல் காட்சி முடிந்து, இரண்டாவது ஆட்டத்திற்கான டிக்கெட் கொடுப்பதற்கு அடையாளமாக டெண்ட்டில் ரிகார்டு போட்டனர். மதுரை சோமு ‘மருதமலை மாமணியே’ என்று முருகனை உரக்கக் கூவியழைத்தார். நான் புறப்பட்டுப் போய் நல்ல தண்ணிக் கிணற்றுக்குப் போகும் வழியில் பூட்டிக் கிடந்த முருகேசன் வீட்டு வாசலில் ஒதுங்கி நின்றேன். பல்பு கெட்டுப்போய் ஒரு வாரமாக தெரு விளக்கு எரியவில்லை. அம்மாவாசைக்கும் அடுத்தநாள். எதிரில் வருபவர் ரொம்ப பக்கத்தில் வந்தால்தான் ஆணா, பெண்ணா என்றே நிதானிக்க முடியும். பூங்கொடியும் மகளும் கடைசியாகத்தான் வந்தார்கள். எதேச்சையாக வருவதைப் போல எதிரே போய் நின்றேன்.      

” இந்த நேரத்துல இங்க எங்க வாசு? ” பூங்கொடி கேட்டது

” உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் ” 

மகளிடம் சாவியைக் கொடுத்து வீட்டைத் திறந்து விளக்கு போடச் சொல்லி அனுப்பிவிட்டு    ” சொல்லு” என்றது.

 ” எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை ” தடுமாறியவன் சட்டென்று எட்டி அதன் கையைப் பற்றிக் கொண்டவனாக முணுமுணுத்தேன்.

உன்னை மனசுல நினச்சுகிட்டிருக்கேன்… இன்னிக்கு நேத்து இல்ல… ரொம்ப வருஷமா…” உளறிக் கொட்டினேன் . உடம்பில் ஊறிய உஷ்ணம் நேரே தலைக்கு ஏறி மண்டை கொதிக்கத் தொடங்கியது.

 ” வேண்டாம் வாசு ” கறாராக ஒலித்த பூங்கொடியின் குரலில் கோபமோ வெறுப்போ இல்லை.

 ” ஏன் என்னைப் பிடிக்கலையா ? உன் குடிகாரப் புருஷனையும், நீ சேர்த்துக்கிட்டதா சொல்றாங்களே அந்த செல்வத்தையும் விடவா நான் குறைஞ்சு போய்ட்டேன். சொல்லு ! சொல்லிட்டுதான் நீ இங்கேயிருந்து போகணும் ” பித்து பிடித்தவனைப் போல குழறினேன். பூங்கொடியின் கை இன்னும் என் பிடிக்குள்ளேதானிருந்தது. அதை விலக்ககூட அது முயலவில்லை.

வேண்டாம்னா வேண்டாம்! விட்டுடு வாசு!” பட்டுக் கத்தரித்த மாதிரி இருந்தது அதன் குரல்.

நான் பேசாமல் மௌனமாக நின்றிருந்தேன். கையை விடுவித்துக்கொண்டு திரும்பி நடந்த பூங்கொடி, திடீரென்று ஏதோ நினைத்த மாதிரி மறுபடியும் என் முன் வந்து நின்று இருட்டில் என் முகத்தைப் பார்க்க முயன்றது. நான் தலையைக் குனிந்து கொண்டேன். என் புறங்கழுத்தில் கையைக் கொடுத்து தன் மார்போடு சேர்த்து என்னை ஒரு நிமிஷம் அணைத்துக்கொண்ட பூங்கொடி, பிறகு என் முன்நெற்றியில் முத்தமிட்டு விலக்கி நிறுத்திவிட்டு சொன்னது “நீ என் புருஷனைவிட, எதோ குருட்டுத்தனமா ஆசைவச்சு  அவமானப்பட்ட அந்த செல்வத்தை விட, ஏன் என்னை விடவும் நீ உசத்தி. அதனாலதான் வேண்டாங்கிறேன் புரியுதா?” சொல்லி விட்டு விறுவிறுவென்று போய்விட்டது. அதன் பிறகு ஊரிலிருந்த ஒரு வருடத்தில் பூங்கொடியை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன்.

கல்லூரிப் படிப்பு, படிப்பு முடிந்து வேலை, பிறகு திருமணம் என்று வெளியூரிலே என் வாழ்க்கை நிலைபெற்றுப் போயிருந்தது. காதலும், காமமும் இரவில் எதேச்சையாய் அண்ணாந்து பார்க்கும் போது அடிவானில் ஒளிரும் பிரகாசமான நட்சத்திரங்களைப் போல எனது நினைவில் பின்தங்கிப் போய் விட்டிருந்தது. பையனுக்கு முடி இறக்குவதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்தபோது எதேச்சையாக பூங்கொடியைப்  பார்க்க நேர்ந்தது. தலை நரையோடி, உடல் தளர்ந்து போயிருந்த முகத்தில் அந்த பழைய வசீகரம் மட்டும் மங்காமல் ஒளிர்ந்து கொண்டுதானிருந்தது. மனைவியின் கையிலிருந்து குழந்தையை வாங்கி அதன் உச்சந்தலையில் முத்தமிட்டு திருப்பிக் கொடுத்தபின் என்னைப் பார்த்து சிரித்தவாறே சொன்னது.

” உன் பையன் அச்சு அசப்பிலே உன்னை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கான் “     

வயதுகளையும் வருடங்களையும் கடந்த அந்த சிரிப்பில் முன்பு என்னைச் சுட்ட நெருப்பில்லை. மாறாக, தீண்டும் எதனையும் குளிரச் செய்திடும் தன்மை இருந்தது.


  • க. மோகனரங்கன்

3 COMMENTS

  1. அற்புதமான சிறுகதை. நன்றிகள் ஆசிரியர் மோகன ரங்கன் அவர்களுக்கும். வெளியிட்ட கனலிக்கும்.

    • ‘அணங்குகொல்’ மோகனரங்கன் சிறுகதை ஆண் பெண் இருபாலரும் பொதுவான தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வகையில் கதைக் களன்.. விறுவிறுப்பாக இருந்தது.

  2. அணங்குகொல் ஒரு ஆணிற்கும் பெண்ணிற்குமான உணர்ச்சிகள் இருபாலருக்கும் பொதுவானது தான் என்பதை அழகுபட சொல்லியிருக்கிறார் ஆசிரியர். வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.