அன்னை


ன்று விடியலே அவளுக்கு சற்று விநோதமாக இருந்தது. விடியலின் ஒலிகளற்ற காலை அவளுக்கு விநோதம்தான். படுக்கையறையில் சன்னலையொட்டியிருந்த பெரிய கட்டிலில் தாராளமாகப் புரண்டபோது முன்னறையிலிருந்த வெளிச்சம் அவளை திடுக்கிட வைத்தது. திரைச்சீலையை இழுத்து விட்டுக்கொண்டு வெளியே பார்வையை செலுத்தினாள். மணி ஏழைத் தாண்டியிருக்கலாம். மனம் பதறினாலும், அதுவே எழுந்து கொள்ளலைத் தடுத்தது. எட்டுமணிக்கு வீட்டுவேலைக்கு ஆள் வந்து விடும். அதற்குள் சமைத்து விடலாம். இல்லையென்றாலும் ஒற்றையாளுக்கு என்ன பிரச்சனை இருந்து விடப்போகிறது? அலைபேசி வழியே அலுவலகத்திற்கு மதிய உணவை தருவித்துக் கொள்ளலாம். மின்னேற்றியிலிருந்து அலைபேசியை உருவி எடுத்தபோதுதான் அது ஒலித்தது. மூத்த சகோதரனினிடமிருந்து. இந்நாள்வரை அவனிடமிருந்து வந்த அழைப்புகளை ஒருகை விரல்களுக்குள் அடக்கிவிடலாம். பொதுவாக அதையே அவன் இயல்பாக்கியிருந்தான். அவ்விடைவெளிகளை அடைக்கும் பொறுப்பை அம்மாவே ஏற்றுக் கொண்டிருந்தாள், ஓராண்டுக்கு முன்பு வரை.  மின்னோட்டத்திலிருந்து அகற்றியபோது அழைப்பொலி முடிந்து, பிறகு மீண்டும் ஒலித்தது. பேச்சுவார்த்தைகள் அற்றுப்போன நீண்ட கொடுந்தனிமைக்குப் பிறகு வரும் முதல் அழைப்பு. அந்நீண்ட இடைவெளியில் அவளின் தீண்டப்படாத அழைப்புகள், அவன் அலைபேசியிலிருந்து எங்கோ ஓடி மறைந்திருக்கலாம்.

ஹலோ என்பதற்கு பதிலாக “சொல்லுண்ணா..“, என்றாள்.

“அம்மா செத்துட்டாங்க..”

“அய்யோ.. எப்டீ..  என்னாச்சு..?”

”தெர்ல.. காலைல எந்திரிக்கவேயில்ல.. காபிய எடுத்துட்டு சமயக்காரம்மா கூப்டப் போனப்போதான் தெரிஞ்சுச்சு..” அண்ணன் வீட்டிலும், தம்பி வீட்டிலும் சமையலுக்கு ஆள்தான். உப்புச்சப்பற்ற அந்த சமையல் அம்மாவுக்கு பெரிய பாரமாக இருக்கும். ருசிக்கு அதிக இடம் கொடுப்பவள். தானாகவே எதையாவது போட்டு உப்பும், உறைப்புமாகச் செய்துக் கொள்வாள். இரத்தத்தில் கொதிப்பையும், கணையத்தின் பயன்பாடின்மையும் மாத்திரைகளால் வென்று விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்குண்டு. இதில் ஏதோவொன்றோ அல்லது இரண்டுமோ சேர்ந்து வலியில்லா இதயநிறுத்தத்தை அளித்திருக்கலாம். அதை விளக்கமாக அவளிடம் சொல்லுமளவுக்கு உறவு அத்தனை நெருக்கமில்லை.

பாட்டி கூட இதேமாதிரியான காலைபொழுதில்தான் இறந்திருந்தாள். அம்மா, மருமகளாய் சுற்றிச் சுழன்றாடினாலும், யாராவது வந்து எதையாவது கிளறிவிடும்போது அவள் விழிகளின் அணைகள் படக்கென்று உடைந்து கன்ன வாய்க்கால்களில் நீராக பாயத் தயாராக இருந்தது. பாட்டியால் பேச முடிந்திருந்தால் எழுந்து உட்கார்ந்து எல்லாம் வெறும் நடிப்பு என்றிருப்பாள்.  “ஒங்க சித்தப்பனுக்கு, என்னோட சித்தப்பா பொண்ணைக் கட்டி வச்சிட்டேன்னு ஒங்க பாட்டிக்கு கோவம்..” என்றாள் அம்மா. அவளுக்கு தெரிந்தவரை சித்தி அதிர்ந்து பேசியே அறிந்ததில்லை. “அதுக்குதான்டீ, அந்த ஊமச்சிய இழுத்தாந்து கட்டி வெச்சா எம்பையனுக்கு..” என்பாள் பாட்டி. ஒருவேளை உண்மைதானோ..? மூன்று மருமகள்கள் இருக்க, நடுவாந்தர மருமகளான அவளுக்கே அத்தனை பொறுப்புகளும் கவிழ்ந்திருந்தது. தன் மகன்களுக்கு வசதியான இடத்தில் பெண்ணெடுக்க வேண்டுமென்று பாட்டி எண்ணியிருந்தாளாம். “பெரிய எடத்து பொண்ணா கொண்டாந்தா மூணாந்நாளே குடும்பத்தைக் கூறு போட்டுடுவா..” என்றார் அப்பா. ஆனால் அது அம்மாவின் வார்த்தைகள் என்றும், அம்மாவின் வார்த்தைகளை மட்டுமே அப்பா பேசுவார் என்றும் மெல்லிய குரலில் சீறினாள் பாட்டி. “ரொம்ப அக்குசுதான் போ.. தன் பேச்சுக்கு எவளும் மறுபேச்சு பேசிப்பிடக்கூடாதுன்னுங்கிற ஆங்காரம்.. வேறென்ன..?” பாட்டி சொல்வதுபோல குடும்பத்தின் நல்லதுகெட்டதுகளில் அம்மாவின் சொல்லே இறுதியென்றாகும், அப்பா இறந்தபிறகும் கூட.

கட்டிலிலிருந்து படக்கென்று இறங்கியபோது, கட்டில் முனகியது. மீண்டும் அழைப்பொலி கேட்க, எழுந்து எடுத்தாள். இது சிறிய சகோதரனிடமிருந்து. மொத்தத்திலேயே, இது அவனிடமிருந்து வரும் இரண்டாவது அழைப்பாக இருக்கலாம். பெரிய வேலையிலிருப்பவன் என்பதால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும் இறகுகள் முளைத்திருந்தன.

“அம்மா செத்துட்டாங்களாம், அண்ணன் வீட்ல..” வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இலட்சத்தில் மதிப்பிட்டிருக்கலாம். நான்கு இலட்சங்கள் செலவழிந்திருந்தன மொத்தத்தில். அவளுடைய பிறந்தவீடு அளவில் அத்தனை பெரியதில்லை என்றாலும், சுற்றிலும் தோட்டத்திற்கான வெளிகள் இருந்தன. வெளிப்புற வாயிலைக் கடந்து, கவிழ்ந்திருக்கும் மரங்களின் நிழலை அனுபவித்துக் கொண்டே திண்ணைக்கு வரலாம். அதனையடுத்து வீடு தொடங்கி விடும். முன்கூடமும், இருபுறமும் இருஅறைகளும், உள்கூட்டில் சமையலறையும் கொண்ட வீடு. அது இப்போது, அண்ணனின் வீடாகியிருந்தது. நகரங்கள் கைகளை விரித்து கிராமப்புறங்களை இழுத்து நகர் என்றாக்கிக் கொண்டபோது, அவர்களின் வீடு அந்நகரின் மையத்துக்கு வந்திருந்ததால், அதன் மதிப்புயர்ந்தபோது வீடும் புதுப்பிக்கப்பட்டு, புதுமகளாய் நின்றபோது, அதன் மையப்புள்ளியாக அம்மா வீற்றிருந்தாள். ஒரே பெண்ணாய் பிறந்தவள். மேற்கொண்டு பிள்ளைகள் தயாராவதற்குள் தகப்பனார் இறந்து விட, தகப்பனற்ற பெண்பிள்ளையாக, அதிக சலுகைகளுடன் பிரதானமே பிராதனமென வளர்ந்தவள் அவள்.

“ம்.. அண்ணன் சொல்லுச்சு.. கௌம்பி வர்றேன்..” பொதுவாக தனக்கென குடும்பங்கள் உண்டான பிறகு, உடன்பிறப்புகள் ஒருவருக்கொருவர் பகிரும் வார்த்தைகள் தந்தி போலாகி விடுகின்றன. உறக்கத்திலேயே உயிர் பிரிந்ததா..? அல்லது வேறு ஏதேனும் உடல் உபாதையா..? மேற்படித் தகவலிலும் வேறெந்த விவரமுமில்லை.  தகவலை அவளுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை மட்டுமே அவர்களுக்கிருந்தது. அதையே வரிகளாக உணர்த்தியிருந்தனர். அவளுக்கு அப்படிப்பட்ட  கடமைகூட கிடையாது. வீட்டை இழுத்து பூட்டி விட்டு கிளம்ப வேண்டியது மட்டுமே. அடுக்ககத்தின் இரண்டாவது மாடியில் குடியிருந்தாள். சொந்த வீடு. சுயசம்பாத்தியத்தில் வாங்கியிருந்தாள். அசைவுகளற்ற அவ்வீட்டின் எல்லா அறைகளிலும் தனிமையே நிறைந்திருந்தது. நவீனங்களால் வெற்றிக் கொள்ளவியலாத தனிமை. சுமக்கவியலாத இந்த பாரம் எப்போதிலிருந்து கவிழ்ந்தது என்பதை தேதிவாரியாகக் கணிக்கவியலாதெனினும் சம்பவம்வாரியாகக் கணிக்கலாம். சக்தியின் திருமணத்திலிருந்தா..? அல்லது தனது திருமணம் இரத்தானதிலிருந்தா..? அல்லது தம்பிக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகா..? ஏதோ ஒன்று. ஆயினும் அவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கடுக்காக நிகழ்ந்தவை. தாளாவியலாது போகும் தருணங்களில், அலைபேசியிலிருந்து இன்னும் நீக்கி விடாத சக்தியின் எண்களின் மீது அவளின் பார்வை படிந்து விலகும்.

“அம்பா..“ கிசுகிசுப்பான அவனது அழைப்பை விட, அவளைக் கண்டதும் மலரும் அவன் கண்களை அவளுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அவள் பேருந்து நிறுத்தத்திற்கு வரும்போதெல்லாம் அவன் நின்றிருந்தான். அவன் அங்கு நின்றிருப்பதே தனக்காகதான் என்பதை உணர்ந்தபோது அவள் நெகிழ்ந்தாள். கூடவே வயதையும், பருவத்தையும் துணைக்கழைத்துக் கொண்டபோது அவன் அழகனாகவும் தோன்றினான். சக்தி என்ற அவனது பெயர் கூட நன்றாகதானிருந்தது. அவளுக்கும் தன் மீது ஈடுபாடிருப்பதை அவன் அறிந்துக் கொண்டான். அவள் வருகைக்கு முன்னரே காத்திருப்பவன், அவளை இரண்டொரு நிமிடங்கள் காக்க வைத்தான். அவளோ, உறங்குவதற்கான இரவுகள் நாணங்கொள்வதற்கான பொழுதுகளாக மாறுவதால், அவை வழக்கத்துக்கு முன்னரே தன்னைப் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்து வந்து விடுவதாக நம்பிக் கொண்டாள். அதை உறுதி செய்யும்பொருட்டு அலைபேசியை எடுத்து நேரம் பார்க்க, அவனுக்கு அவளுடைய எண்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாய் தோன்றியது. அவன் தாமதப்படுத்தும் இரண்டொரு நிமிடங்களைக் கூட தாளாதுபோவதை, அவள் உடல் மொழிகள் அவளையுமறியாமல் வெளிப்படுத்தி அவனுக்கு அழைப்பு விடுத்தன. அலைபேசி எண்கள் கைமாற்றம் பெற்ற பிறகு பொழுதுகள் இனிமையாகவும், ஒருவரின்றி மற்றொருவர் வாழ முடியாது என்ற உணர்வையும் இருவரிடையேயும் தோற்றுவித்திருந்தது. இரவு வானின் நட்சத்திரங்கள் போல காதல் அவர்களின் உடலெங்கும் பரவியிருந்தது.

அலைபேசியில் வந்த தகவலின் வீரியம், நேரமாக ஆக உள்ளுக்குள் பெருகத் தொடங்கியது. வெளிக்கதவில் பொருத்தப்பட்டிருந்த பால் பெட்டியிலிருந்த பால்பையை எடுத்து குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்தாள். அம்மாவும் இதேபோன்று குளிரூட்டியில்தான் படுத்துக் கொண்டிருக்கிறாள் என்பதே உளஅதிர்வாக தோன்றியது. இறந்தவுடன் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்தபிறகே சடலம் குளிரூட்டியில் வைக்கப்பட வேண்டும். அவளறிந்தவகையில் அம்மாவின் இரு மருமகள்களுமே இந்த சம்பிரதாயங்கள் குறித்து அத்தனை அறிந்தவர்களல்ல. ஒருவேளை அம்மா குளிர்பெட்டியிலிருந்து எழுந்து வந்து சொன்னால் செய்வார்களாக இருக்கும்.

திருமணத்திற்காக வரன்கள் வருவதும் ஏதோ காரணங்களுக்காக தள்ளிப்போவதுமாக இருந்த நல்வாய்ப்பில், அவளுடைய காதல் வளர்ந்து கொண்டிருந்த ஒரு நன்நேரத்தில், அவன் பெண் கேட்டு வந்திருந்தான். அவன் என்றால் அவனுக்காகவல்லவாம். தன்  இளவலுக்குப் பெண் வேண்டி வந்திருந்தான். அவளிடம் தகவல் சொல்லப்பட்டபோது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் இத்தனைதூரம் பழகிய காதலன், தனக்கொரு அண்ணன் இருப்பதையோ, அவன் பெண் கேட்டு வருவான் என்பதையோ ஏன் தெரிவிக்கவில்லை என்ற நியாயமான கேள்வி எழுந்து, இனிய ஆச்சர்யங்கள் கொடுப்பது சக்தியின் வழக்கம் என்பதால் எழுந்தபோதே அடங்கி, என்றோ ஒருநாள் சொல்ல வேண்டிய ஒன்று, இன்று குடும்பத்தாரின் முன் அவிழ்க்கப்படுவதும் நல்லதுதான் என்றெண்ணியபடி, அம்பா மெள்ள தன் காதலைச் சொல்லத் தயாரானாள்.

“அந்த பையன் பேரு விக்ரம்..” என்று அண்ணன் கூறிய போது அதிர்ந்தாள்.

உள்ளத்தில் எழுந்த படபடப்பை அவள் தற்காலிகமாக அடக்கிக் கொண்டாள். அவசரம் மீளவியலாத விளைவுகளை இழுத்து விட்டுவிடலாம். இங்கு ஆண்பிள்ளைக்கான இட ஒதுக்கீடு அதிகமென்பதால் காரியம் கெட்டு விடாதிருக்க, வார்த்தைகளை மென்மையாகத்தான் கையாள வேண்டும். அதற்குள் அண்ணன் பேசத் தொடங்கியிருந்தான். வசதிக்கு குறைவில்லாத இடமாம். இரண்டே ஆண்மக்கள். பெண் வாரிசென்று ஏதுமில்லை. மூத்தவனுக்கு திருமணம் செய்துக் கொள்ள உத்தேசமில்லை என்பதால் இளையவனுக்கு மணமுடிக்க ஆர்வப்படுகிறார்களாம். பெண் கேட்டு வந்த கங்காதரன் என்பவன் அண்ணனின் உயரதிகாரி என்பதும், இந்தத் திருமணத்தின் மூலம் அவர்கள் இருவருக்கான கணக்குகளும் இலாப இலக்கை எய்த முடியும் என்பதையும், அப்போது அவளால் மனங்கொள்ள முடியவில்லை.

விக்ரமுக்கு சர்க்கரை வியாதியிருப்பதோ, அல்லது அவனே சர்க்கரை போன்றவனாக இருப்பதோ அவளுக்குப் பிரச்சனையில்லை. சக்தியைத் தவிர்த்து அவள் மனதில் யாரும் நுழைந்து விட முடியாது. அவளை தைரியமூட்டிய சக்தியின் வார்த்தைகளை ஏந்திக் கொண்டு, அவள் வீடு திரும்பியபோதுதான் விக்ரம் வீட்டிலிருந்து, திருமணத்துக்கு நாள் குறிக்க வந்திருந்தனர்.

“இந்த காலத்தில யாருக்குத்தான்டீ சக்கரை இல்ல..?” என்றாள் அம்மா. அவன் இறங்கி வந்த பெரிய காரையும், அவர்களின் சொத்துமதிப்பையும் அவள் கருத்திற்கொண்டிருக்கலாம். கூடவே, மூத்தமகனுக்கு வேலையில் பிரச்சனை ஏற்படுவதை விரும்பாமலும் இருக்கலாம். புதுமருமகளிடம் ஸ்கோர் அடிக்க நல்ல வாய்ப்பென்பது மறைமுக வரவு.

விக்ரம் ஒடுங்கிய கன்னமும், குறுகிய உடலைமைப்புமாக இருந்தான். “எங்கண்ணன் உங்ககிட்டே எல்லாமே சொல்லிட்டாருல்ல..“ என்றான். “எல்லாமேன்னா..?” “எனக்கு சர்க்கரை வியாதி இருக்கறது பத்தி..” அவள் மௌனமாக நின்றாள். “ஆனா, சர்க்கரைய ஃபுல் கன்ட்ரோல்ல வச்சிருக்கேன் தெரியுமா..” என்றான். அவன் பிறகு பேசியவை கூட தன் நோய் குறித்தே இருந்தது. உணவு அட்டவணை தயாரித்து அதன்படியே உண்கிறானாம். திருமணத்துக்குப் பிறகு, அதை இன்னும் பிரத்யேக கவனத்துக்குக் கொண்டு வரும்போது வியாதி முழுக்க கட்டுக்குள் வந்து விடும் என்றான். அவை யாருக்கோ நடப்பதுபோலவும், அவன் யாரிடமோ பேசுவது போலவும் அவள் நின்றிருந்தாள். வியாதியை அவனும், சக்தியை அவளுமாக சுமந்துக் கொண்டிருக்கும்போது, திருமணத்தை யார் சுமப்பது என்று திகைப்பிலேயே அது முறிந்துபோக, அந்த அனலில் உருகியோடும் பனியைப் போன்று அவள் கண்முன்னரே, அவள் காதலும் வழிந்தோடியது. பிறகெல்லாமும், யாருக்கோ நடப்பது போல அவளுக்கு நடந்தது. அல்லது நடந்தவற்றிலிருந்தெல்லாம் அவள் தன்னை விலக்கிக் கொண்டாள்.  அதையே அவள் பிறந்தவீடும் விரும்பியிருந்ததை, அங்கிருந்து வெளியேறியபோதுதான் அவளால் அறிந்துக் கொள்ள முடிந்தது. அந்நேரம் தம்பிக்குத் திருமணம் முடிந்திருந்தது. மருமகள்களுக்கான இடத்தை மகளிடமிருந்து பிடுங்கி அளிப்பதன் வழியாக,  மாமியாருக்கான இடத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் சூட்சமத்தை அம்மா நன்றாகவே அறிந்திருந்தாள்.

திடீரென ஏற்பட்ட மனத்தளர்வில் அம்பை கண்களை மூடிக் கொண்டு, எதையோ மறக்கும் பாவனையில் அமர்ந்து கொண்டாள். உலகம் பாவனைகளாலானது. எண்புறமும் விரியும் அதன் கைகளால் அகத்தை மறைத்து விட முடியும். அகத்தின் அழகை எல்லா முகங்களும் பிரதிபலிப்பதில்லை. முக்கியமாக அம்மாவின் முகம். “பெண்ணொருத்திக்கு அது பிறந்த வீடே ஆயினும், திருமணத்திற்குப் பிறகு அவள் அங்கு அந்நியமே..” “எனக்குத்தான் இன்னும் திருமணம் நடக்கவில்லையே..“ என்றாள் அவள். “உனக்கு நடக்கவில்லையெனில் என்ன? உன் உடன்பிறப்புகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டதல்லவா? இப்போது போட்டி அவர்களுக்கும் உன் தாயாருக்குமானது. பிரதான இடத்தைப் பிடிப்பதும் அதை தக்கவைப்பதற்குமான சூட்சும யாகத்தில் நீ இடம் பெறவேயில்லை என்பதை உணர்கிறாயா? மேலும் நீ நடக்கவிருந்த திருமணத்தைக் கெடுத்துக் கொண்டவள்” “என் திருமணத்திற்கு என்னுடைய விருப்பமும் முக்கியமல்லவா?” என்று கூவினாள். “முக்கியம்தான். ஆனால் எதை நம்பி உன் திருமணத்தை முறித்துக் கொண்டாய்? கையில் பிடிப்பதற்குள் உடைந்துப்போன சக்தி என்ற அந்தக் காற்றுக்குமிழியை நம்பியா..?“ “ஒப்புக் கொள்கிறேன்! அவன் காற்றுக்குமிழிதான். ஆனால் எனக்குத்தான் பெற்றவள் இருக்கிறாளே?“  உரக்க சப்தமிட்டாள். “இருக்கலாம். ஆனால் அவளுக்கு அவளேதான் பிரதானம். நீயல்ல என்பதை உணரு..”

ஆனால் அன்று அவளால் உணர இயலவில்லை. மனதின் அழுத்தங்கள் உடல்நோயாக வெளிப்பட்டு, சென்ற ஆண்டின் மத்திய மாதமொன்றில், அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அனாதைபோல கிடக்க நேரிட்ட போது, அழுத்தம் இன்னும் கூடிப்போனது. கடக்கவியலாத சுயப்பச்சாதாபம் உடன்பிறந்தவர்களின் மீது சினமாக எழ, அது தாறுமாறான வார்த்தைகளில் வேகங்கொண்டு எழுந்து தாயிடம் தஞ்சம் புகுந்த தருணத்தில், அம்மாவின் யாகத்துக்கான சமித்துக்குச்சிகள் தீர்த்திருந்திருக்க வேண்டும். தன் நலனுக்கான யாககுண்டத்தில் ஏதொன்றையும் அவியாக்கி விட முடியும் அவளால், அது மகளென்றாலும்.

ஓட்டுநர் வந்திருந்தார். மாற்று உடுப்பை எடுத்துக் கொள்ளலாமா.. அல்லது இரண்டு மணிநேர பயணம்தானே.. இரவே திரும்பி விடலாமா என முடிவெடுக்கவியலாது தடுமாறியது மனம். எப்போதோ ஒருமுறையாவது பிறந்தவீடு நோக்கி மேற்கொள்ளும் பயணம், இப்போது முழுதாக ரத்தாகியிருந்தது. அம்மாவிடமிருந்தும், உடன்பிறப்புகளிடமிருந்தும் போக்குவரத்தோ, அலைபேசி தொடர்புகளோ ஏதுமற்ற நீண்ட ஓராண்டு இடைவெளிக்குப் பிறகான பயணமிது. பேத்திகளில் பெரியவள் பிடிவாதக்காரி என்றும், சிறியவள் சற்று கோபக்காரி என்றெல்லாம் அம்மா முன்பு கூறியிருக்கிறாள். பேரன்கள் இருவரும் விளையாட்டுச் சிறுவர்களாம்.  அவர்களின் சித்திரங்களை அம்மாவே வரைந்திருந்தாள். அவள் எப்போதும் சித்திரக்காரியாக இருக்கவே விரும்பியிருந்தாள் என்பதை அம்பை உணர்ந்தபோது, காலம் கடந்திருந்தது. தனிமை மீண்டும் அவளை தேடி வந்து அடைந்திருந்தது.

அம்பைக்கு வனமிருந்தது. முடிவற்ற வனம். வனம் நகரும்தோறும் விரிவடைந்து கொண்டேயிருக்கும். அதற்கென்று எல்லைகளோ, வரையறைகளோ கிடையாது. தன்னிச்சையாக வளரும் தாவரங்களும், அதைக் கொண்டு, அதை உண்டு, வாழும் எளிய உயிரினங்களும், அவற்றையுண்டு வாழும் வலிய விலங்குகளும், அனைத்திற்கும் உயிரளிக்கும் சூரியனும், தாகம் தீர்க்கும் தடாகங்களும், குளிர வைக்கும் சந்திரனும், அம்பையின் உக்கிரத்தைத் தன்னுள் செரித்து எரித்து அவளை இரட்சித்தன. அவ்வகையில் அம்பை பாக்கியசாலிதான்.

“இது எந்த இடம்?” என்றாள் ஓட்டுநரிடம். அவர் ஏதோ சொல்ல, அவ்வார்த்தைகள் ஆழம் வரை செல்ல வேண்டிய அவசியமில்லாததால், அனிச்சையாக தூரத்தைக் காலத்தால் கணித்து, இன்னும் அரைமணி நேரமிருப்பதை அறிவு எடுத்துரைக்க, இருக்கையின் பின்பகுதியில் சாய்ந்து, அலுவலக விடுப்புக்கான குறுஞ்செய்தியை தட்டத் தொடங்கினாள். யெஸ் என்றும் அவளுக்கு நேர்ந்த இழப்புக்கு சாரி என்றுமாக வந்த பதிலையடுத்து அலைபேசியை அணைத்து விட்டு, வெளியே பார்வையையோட்டினாள். காட்சிகள் தீர்ந்து உடனுக்குடன் அடுத்தடுத்த காட்சிகள் முளைத்துக் கொண்டேயிருந்தன, காலத்தின் சக்கரவோட்டத்தைபோல. காலம்தான் காலனோ? காலன் தாயிடம் வந்திருந்தான். தாய் என்பதைவிட அவளை பெண் எனலாம். ஆணவத்தின் படிகளில் ஏறி வந்தபோது எஞ்சும் அன்னை என்ற அடையாளத்தை அவள் ஒருபோதும் விரும்பியதேயில்லை. அன்று மருத்துவமனையில் அவளிடம் கொட்டியவைகள் அள்ளப்பட்டு தனக்கென புதுவடிவம் கொண்டு அவ்விடம் கடத்தப்பட்டது அம்பையுணராத ரகசியம். அந்த ரகசியங்கள், அதற்கான தருணம் வகுக்கப்பட்டு கொடுஞ்சொற்களென கசிந்து, உடன்பிறப்புகளின் வாயில் விஷமென கக்கப்பட்டபோது, அன்னை, மருமகள்கள் சாமரம் வீச, பிரதானத்தின் உச்சியிலேறி மென்நகை புரிந்தாள். அது சரித்திரங்கள் அறிந்திடாத துரோகம். சொற்கள் விஷவிருட்சமாக வளர்ந்தாடின. வளர்ந்து, வளர்ந்து தொடவியலாத உயரத்திற்கு சென்றன. தொட்டுக் கொண்டிருந்த சொந்தங்கள் அன்று விட்டு விலகியிருந்தன. காட்சிகளால் கண்கள் அயர்வுற, அவள் கண்களை இறுக மூடிக் கொண்டாள். மீளமீள முளைப்பினும், கண்கொள்ளும் காட்சிகளுக்கு முடிவுண்டு. ஆனால் அகம் முடிவற்று விரிவது. தன்னுள்ளே தான் காண்பவற்றை அள்ளியள்ளிப் பருகினாலும் அவை குறைந்து போவதில்லை. அதற்காக காந்தாரியைப் போல புறவுலகு மறுத்து கண்களைக் கட்டிக் கொள்ள வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

வீடு வந்திருந்தது. தெருமுனையிலேயே அவள் இறங்கிக் கொண்டாள். தெருவடைத்து போடப்பட்டிருந்த பந்தலில் ஆசுவாசமாக அமர்ந்திருந்த கூட்டத்திற்குக் காட்சியாகி முன்நகர்ந்தாள். வெளிவாயிலை அடைந்தபோதே, கிராமத்துச் சொந்தங்களின் ஒப்பாரி அவளை உள்ளிழுத்துக் கொண்டது.

முத்து பதித்த முகம், மூத்தோரு மதிச்ச முகம்

கோணி போனதெப்போ, கொளறுவாயி ஆனதெப்போ

தங்கம் பதித்த மொகம், தரணிமாரு மதிச்ச மொகம்

பக்கவாதம் வந்து, இப்போ பாழடைஞ்சு போனதென்ன

தொண்டைக்குள்ள சொல்லடைஞ்சு தொலதாரம் போனதேனோ

ஆலமரம் போல அண்ணாந்து நின்னவளே

பட்டமரம் போல பட்டு போயி வுளுந்ததென்ன

ஆங்…ங்..ங்..

சொல்லாத சொல்லெல்லாம் தொண்டைக்குள்ள நின்னுடுச்சோ

வராத பேச்செல்லாம் கண்ணுக்குள்ள ஒறைஞ்சுடுச்சோ

அன்னமிட்ட கையெல்லாம் அசையாம போனதென்ன

நடவாத நடயெல்லாம் மொடமாகி போனதேனோ..?

நீ பட்ட பாடுவள பாடாத நாளுமில்ல

சொல்லு கெட்டு, சோறு கெட்டு, நீ கெடந்த கோலமென்ன..

ஆங்…ங்ங்..ங்ங்..

 

இவளைக் கண்டதும் எழுந்து வந்த பக்கத்து வீட்டுக் கிழவி “நடவொடயே கெடையாது.. ஒரு சொல்லும் பேச வாய்க்கில அதுக்கு.. பக்கவாதமாம்..  வைத்தியத்துகெல்லாம் அடங்கல.. ஆறுமாசம் கெடையாக் கெடந்து போய் சேந்துடுச்சும்மா ஒங்கம்மா..” என்றபடி அழுத மூக்கை சிந்திக் கொண்டாள்.

இத்தனை நாட்களில், ஒரு தகவலும் அவளுக்கு எட்டியிருக்கவில்லை. வனத்தில், வலிமை கொண்ட விலங்குகள், வலிமையற்ற விலங்குகளைக் கொன்றதும், அவற்றையுண்டு அவற்றுக்கு இரட்சிப்பு வழங்கி விடுகின்றன. மனிதர்களுக்கு அவ்விதி இல்லை. வேட்டையாடப்பட்ட உடல், அகந்தை என்னும் பசி நேரிடும்போதெல்லாம் உண்ணப்பட்டு, எதிர்காலத் தேவைக்கெனவும் மீதம் வைக்கப்படுகிறது. மனச்சுமைகள் மனித உருக்கொண்டு அந்தச்சாவு வீட்டில் அலைந்து கொண்டிருக்க, அன்னை அதன் மையமாக உயிரற்று படுத்திருந்தாள். ஆனால் முகத்தின் மையத்திலிருக்க வேண்டிய புலன்களோ முகம் விட்டுவிலகி இடபுறமாக ஒதுங்கியிருந்தது. பீமனின் அகம் அவனுண்ணும் அன்னத்தின் சுவையிலும், துரியோதனனுக்கு அது அவன் அடக்கியாளும் களிறுகளின் பணிவிலுமிருந்தது. மதங்கொண்ட களிறும் தன்முன்னடங்கி நிற்பதை அறியும் கணமொன்றில், அவன் அகம் பருவெளியுடன் உரையாடும் நிறைவை அடைந்து விடுகிறது. அர்ச்சுனனுக்கு வில்லின் இலக்கிலும், பாணருக்கு அது சொல்லின் பொருளிலும் உள்ளது.

அம்பை கால்களை மண்டியிட்டு, அதில் உடலை அமர்த்தி, வாயை திறந்து பெருங்கூச்சலாக அழுகையை வெளிப்படுத்தியபோது, அகம் விரிந்து விரிந்து மகிழ்வைப் பருகி, தன்னை நிறைத்துக் கொள்ளத் தொடங்கியது.


  • கலைச்செல்வி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.