தஸ்தயெவ்ஸ்கி கதைகள்


நோய் என்னும் துயர் பெருந்தொற்று நோயைக் காட்டி அச்சுறுத்தியும் உளவியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டும் மனித குலத்தில் பாதிப்பேர் தனிமையில் இருக்கும் காலகட்டம் இது.

இந்த நெருக்கடியான  காலகட்டத்தில், புனைவுகளை வாசிப்பது,   சக மனிதர்களின் உணர்வுகளை, நோய்மையின்  தாளாத துயரத்தை  மிகநெருக்கமாக  உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கிறது. தனிமனிதனின்  வாழ்க்கையை, அவனது போராட்டங்களை, அவனது ஆளுமைக்குள் உள்ள புதிர்களை, அவன் அனுபவிக்கும்  வலிகளை, அவன் யாரும் பார்க்காமல் உகுக்கும்  கண்ணீரை என அவனது அத்தனைப் பரிமாணங்களையும் மனித வேதாகமமாகப் படைத்தவர் தஸ்தயேவ்ஸ்கி.

எம். ஏ. சுசீலா மொழிபெயர்த்த “தஸ்தயேவ்ஸ்கி கதைகள்“ தொகுப்பு மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியது. மொத்த வாழ்க்கைக்கும் போதுமான சங்கதிகள் இதில் அடங்கி இருக்கின்றன.

பொருளாதாரம் முற்றிலும்  முடங்கிய இந்தக்  காலகட்டத்தில், ஏற்றத்தாழ்வுகள் மேலும் கூர்மையாகிக் கொண்டிருக்கும் தருணத்தில் “நேர்மையான திருடன்”  என்றொரு கதை இன்றைக்கு அப்படியே  பொருந்திப் போகிறது.

ஒரு  எளிய சிறிய  கதை தான் அது. 15ஆண்டுகள்  தனிமையில் வாழும்  முன்னாள் ராணுவவீரர் அவர். ஒரு குடியிருப்பில் வசிக்கிறார். அவருக்கு  உதவிகள் செய்ய  அக்ரஃபேனா என்றொரு  வேலையாள் இருக்கிறாள்.   ஒரு நாள் வீட்டில் இருக்கும்  மிகச்சிறிய அறையை வாடகைக்கு விடலாம் என்றொரு  யோசனையை  சொல்லுகிறாள். ஒரு  எலிப் பொந்தில் யார்தான் வாடகைக்கு  வருவார்கள்  என்று கேட்கிறார் அந்த  வீட்டின்  எஜமானன்.

யாருக்குத்  தேவையோ அவர்கள் வந்துவிடுவார்கள், அவனுக்கு வேண்டியது எல்லாம்  படுத்து  உறங்க ஒரு  இடம் மட்டும் தான்   என்று  சொல்லி விட்டு சென்று விடுகிறாள்.  .

அக்ரஃபேனா பிடிவாதக்காரி. அவள்  நினைத்ததை  சாதிக்கும்  நுண்ணுணர்வு கொண்டவள். அதே  சமயம்  அவள்  சுய  சிந்தனையே  இல்லாதவளாக வெளிக்குத் தெரிபவள்.

தஸ்தயேவ்ஸ்கி,  அக்ரஃபேனாவின்  காரியம்  சாதிக்கும்  திறனை  மிக இயல்பாகச் சித்திரித்து விடுகிறார்.

அப்படியான பிடிவாதத்துடன் முன்னாள் ராணுவ வீரனான அஸ்தாஃபி இவானோவிச்சை அந்த எலிப்பொந்து போன்ற அறைக்கு இழுத்து அழைத்துக் கொண்டு வந்தே விட்டாள் அக்ரஃபேனா.

தனிமையில் உழன்று கிடந்த  எஜமானனுக்கு  நல்ல கதை சொல்லியாக அஸ்தாஃபி இவானோவிச் இருக்கிறான். ஒரு நாள்,   இவர்கள் வீட்டுக்கு ஒரு  திருடன்  வந்து  குளிர்கால அங்கியைத் திருடி விட்டு ஓடி விடுகிறான். அவனை துரத்தி  ஓடுகிறான் அஸ்தாஃபி. ஆனால் திருடனை பிடிக்க இயலவில்லை.  அந்த  நிகழ்வில் இருந்து அஸ்தாஃபியால்  வெளியே  வரவே முடியவில்லை. புலம்பிக் கொண்டு  இருக்கிறான். அப்பொழுது தான்  நேர்மையான திருடனை பற்றி ஒரு நிகழ்வை சொல்கிறான் அஸ்தாஃபி.

ஒருவன்  ஒரே  நேரத்தில் நேர்மையானவனாகவும் திருடனாகவும்  எப்படி  இருக்க  முடியும் என்ற கேள்வி தான் இந்தக் கதையின் மையம். வாழ்க்கை அப்படித்தானே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நமக்குக் காட்சி தருகிறது.

தஸ்தயேவ்ஸ்கியின்  பாத்திரப் படைப்புகள் அத்தனை  நுண்மையானவர்கள். ஆழ்மனத்தின் அத்தனை  ரகசியங்களையும் ஊடுருவிப் பார்க்க நம்மை அனுமதிப்பவர்களும் கூட. ஒருவன் நேர்மையாளனாகவும் திருடனாகவும் இருக்க  முடியும் என்பதை தஸ்தயேவ்ஸ்கி நிரூபிக்கிறார். மனித மனங்கள்  அப்படித்தானே.

அந்தத் திருடனின் பேர் யேமிலியான். அஸ்தாஃபியை அவனுக்கு  மிகவும்  பிடித்துப்போய் விடுகிறது. திருடன் என்று தெரியாமேலேயே அஸ்தாஃபி இவானோவிச் அவனுக்கு நண்பனாகும் வைபவம் நடக்கிறது.  யேமிலியான்  குடிகாரன். அவனிடம்  பணம்  இல்லை. ஆனாலும் அவன் குடிப்பதற்கு வழியைக் கண்டுவிடுவான்.

எப்படிக்  குடிப்பான்  என்பதெல்லாம்  அஸ்தாபிஃக்கு  தெரியாது. ஒரு நாள்  யேமிலியான் முழுக்கவும்  குடித்து  விட்டு வீடு  வரும்போது  அஸ்தாஃபி, தனது இடத்துக்கு வரவேண்டாம்  என்று  சொல்லி  விடுகிறான். இதனால் அஸ்தாஃபிக்கு மன அழுத்தம்  அதிகரிக்கிறது. யேமிலியானை  திரும்பவும் பார்க்க மனம் விழைகிறது. அவன்  திருந்துவதற்குத்தானே நான்  இப்படி எல்லாம்  பேசினேன். அவனால்  எங்கே  போகமுடியும்? திரும்பவும் பசியில் துடித்து கொண்டு  இருப்பானே? என்றெல்லாம்  அஸ்தாஃபி பிதற்றுகிறான்.

யேமிலியான்  உண்மையில்  பயந்து போய் கீழ்ப் படியிலே உறங்கி விடுகிறான். அஸ்தாஃபி, யேமிலியான் குளிரில் நடுங்கி கொண்டு இருப்பதை  பார்த்து விட்டு  கடிந்து  கொள்கிறான். அது தான்  அஸ்தாஃபியின் எளிய மனம். அந்த  எளிய  மனதின் அவஸ்தையை  தஸ்தயேவ்ஸ்கி  தனது படைப்புகளில் எல்லாக்  காலமும்  சொல்லி  வந்து இருக்கிறார். அதன் பொருட்டே நாம்  அவரை இன்றுவரை கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.  அஸ்தாஃபியின் கால்சராய் ஒரு நாள் காணாமல் போகிறது. அவன் அதைத் தேடுகிறான். அவனோடு  யேமிலியானும்  சேர்ந்தே தேடுகிறான். அஸ்தாஃபிக்கு சந்தேகமும்  வரவில்லை.

அவர்களுக்குள் ஆழமான நட்பு துளிர்க்கிறது. இடையிடையே சண்டைகளும். ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறிச் செல்லும் யேமிலியான், பசியும் நோயும் தாங்க முடியாமல் மீண்டும் அஸ்தாஃபியிடம் வந்து சேர்கிறான். அந்த நாட்களில் அஸ்தாஃபியிடம்  ஏதோ  ஒன்றை சொல்ல துடிக்கிறான்  யேமிலியான்.

“அஸ்தாஃபி அந்த  கால்சராயை எடுத்தது நான்தான் அஸ்தாஃபி “

“போகட்டும் விட்டுத்  தள்ளு.  கடவுள்  உன்னை  மன்னிப்பார். நான்  அதை  உறுதியாக நம்புகிறேன். பாவப்பட்ட  மனிதனான நீ  அமைதியாக  இறந்து போ“ என்று  முடிக்கிறார்  தஸ்தயேவ்ஸ்கி.

“என்னை  உளவியலாளன் என்கின்றனர். அது  உண்மையில்லை. உயர்நிலையிலான யதார்த்தவாதி நான். அதாவது  மானுட ஆன்மாவின் ஆழங்களை எல்லாம் நான்  சித்தரிக்கிறேன்“ என்று தஸ்தயேவ்ஸ்கியே தன்னைப் பிரகடனப்படுத்துகிறார்.

ஆன்மாவின்  ஆழங்களை உணர்த்துவதால்தான் நாம்  நூற்றாண்டுகளைத் தாண்டியும்  அவரது  படைப்புகளை கொண்டாடுகிறோம்.

“ஒரு  மெல்லிய ஜீவன்“

தஸ்தயெவ்ஸ்கியிடம் மட்டுமே நான் உளவியலை கற்றுக்கொள்கிறேன்’ என நீட்ஷே குறிப்பிட்டிருக்கிறார். முற்றிலும் உண்மையாக இருக்கக்கூடும். ஆழ்மனதின் ரகசியங்கள் அனைத்தும் தஸ்தாயெவ்ஸ்கியால் எழுதப்பட்டிருக்கின்றன.

“ஆழ்மனதில் இருக்கும் அத்தனைப் போராட்டங்களையும், கீழ்மைகளையும், அன்பின் தருணங்களையும், நிராகரிப்பின் வலியையும் அவமானத்தின் அத்தனைப் பரிமாணங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்வையும் தனது மொழியின் வழியாக சொல்லப்பட்ட கதை “ஒரு மெல்லிய ஜீவன்”

அழகான பதினாறு வயது பெண் அவள். தாய் தந்தை இல்லை. வறுமையின் பிடியில் உழலுகிறாள். சின்னச் சின்ன பொருட்களைக் கூட அடகு வைத்து பணம் பெற்று தனது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறாள். தான் எந்த வேலையும் செய்யத் தயராக இருப்பதாக பத்திரிகையில் விளம்பரம் செய்கிறாள். ஆனாலும் அவளுக்கு வேலை கிடைத்தப் பாடில்லை. அப்பொழுதுதான் தன்னிடம் உள்ள  கன்னி மேரி சிலையை அடகு வைக்கிறாள். அவ்வப்போது அவளுக்கு சில சலுகைகள் வழங்குகிறான் வட்டிக் கடைக்காரன், அதை சாக்காக வைத்து.

அவளது ஏழ்மையைப் பயன்படுத்திக்கொண்டு அவளைத் திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்கிறான். அவனுக்கு 41 வயது. ஆனாலும் அவள் கொஞ்சம் சிந்தித்துவிட்டு சம்மதம் என்று சொல்கிறாள். வயது ஏற்றத்தாழ்வும், அவளின் வறுமையைப் பயன்படுத்திக் கொண்டதும்  அவனுக்குள் குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுகிறது.

அவன் தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறான். தனது கீழ்மைகளை ஆபாசத்தை, தான் நல்லவன் என்பதை நிலைநிறுத்த எப்படியெல்லாம் பேச வேண்டி இருந்த நிர்பந்தத்தை, தனது மிருகத்தனமான எண்ணத்தை எல்லாவற்றையும் கேள்வி கேட்டு பின் அதற்கான நியாயங்களையும் அவனே கற்பித்துக் கொள்கிறான். அது அவனது இயல்பான குணம். தன்  இளம் வயது மனைவியிடம் தனக்கான அளவுகோல் எது என்பதை எல்லா நேரமும் அவளிடம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் தெரிவித்துக் கொண்டே அவளிடம் இணக்கமாக இருப்பது போல் பாவித்து  அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் ஆணாதிக்க மனோபாவத்தை வளர்த்துக் கொண்டே இருக்கிறான். சின்னஞ்சிறிய பெண் அவள். அவளுக்கான எல்லா ஏக்கங்களும் உண்டு. அவளை கர்வம் பிடித்த பெண்ணாகவே தன்னுடைய அளவுகோலில் நிறுத்தி வைத்து அவளுக்கான அனைத்து சந்தோஷங்களையும் மறுத்து தன்னை பெருந்தன்மைக்காரனாக நிலை நிறுத்துவதில் எப்போதும் குறியாக இருக்கும் மனிதனின் உணர்வெழுச்சி நிலையை அப்படியே சித்தரிப்பதில்தான் தஸ்தாயெவ்ஸ்கியின் உளவியல் பார்வை அடங்கி இருக்கிறது.

பின்பு அவனே தனது ஆளுமைகளை, தனக்கான  அளவுகோலை மறு பரீசீலனை செய்கிறான். அவளோடு இணக்கமாக இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறான். அவளோ பயத்தில் கணவனைப் புரிந்துகொள்ள முடியாமல் அவனை நிராகரிக்கவும் வழி தெரியாமல் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்கிறாள்.

இப்பொழுதும் கூட அவன் தன் பக்க நியாயத்தை நமக்கு உணர்த்தவேதான் இவ்வளவு கதைகளையும் சொல்கிறான். அவனுக்கு வாழ்க்கையின் மீது அத்தனைப் பிடிமானங்களும் உண்டு. அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளும் போராட்டத்திலேதான் வெற்றியும் தோல்வியும் அவனை அலைக்கழிக்கின்றன.

அந்த மெல்லிய ஜீவனின் இதயத்தை ஒரு புன்னகையின் வழியே தஸ்தயெவ்ஸ்கியால் நம்மிடம் கடத்த முடிகிறது. அவள் சவப்பெட்டியில் மெலிதாக கிடத்தப்பட்டிருக்கும்போது தன்கூடவே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுகிறது.

நான் பைத்தியம் இல்லை. நீங்கள் போட்டு வைத்திருக்கும் சட்டங்கள், உங்கள் பழக்க வழக்கங்கள், ஒழுக்க நெறியோடு கூடிய வாழ்க்கை முறை, உங்களது நம்பிக்கைகைகள் இவற்றைப் பற்றி எல்லாம் நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் ஏன் அவற்றை எல்லாம் பொருட்படுத்த வேண்டும்? உங்கள் நீதிபதிகள் எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளட்டும். நான் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்று சொல்ல உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

அறியாமை என்ற பேரிருட்டால் உலகிலேயே எனக்கு அருமையாக இருந்த ஒன்று நாசமாகிப் போய்விட்டதே. அது ஏன்? என் வாழ்க்கையை நான் வாழ்ந்து கொள்வேன். நிலையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் எவனாவது இந்த மண்ணில் இருக்கிறானா? என்று பிதற்றுகிறான்.

இந்த உலகிற்கு வெளிச்சம் சுமந்து வரும் சூரியனைப் பாருங்கள்! அது காலையில் உதிக்கிறது! இப்போது பாருங்கள்! அது மடிந்து போய்விடவில்லையா? எல்லாமே மறைந்தும் மடிந்தும்தான் போகிறது. இறந்து போகக்கூடிய மனிதர்கள்தான் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கும் இருப்பவர்கள் அவர்கள்தான். உலகில் உள்ள மனிதர்களைச் சுற்றிப் படர்ந்து கிடப்பது அமைதியான மௌனம் மட்டும்தான். இந்த உலகம் அப்படிப்பட்டதுதான்! மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேசிக்க கூடியவர்கள்தான் என்று சொல்லி முடிக்கிறார்.

தனது மனைவியின் தற்கொலைக்குப் பின்பான தனிமையையும் அவனது எதிர்காலம் குறித்த நியாயமான கேள்விகளையும் நம் முன் வைக்கிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும் துயரங்களையும் அவமானங்களையும் வாழ்வையும் சாவையும் குறித்த கேள்விகளை நம்மிடையே எழுப்ப முடிந்திருக்கிறது.

அவரின் படைப்புகள் தீமை, குற்றங்கள், இருப்பு, காதல் என கட்டமைக்கப்பட்டவை. இவையெல்லாம் தனி மனித ஆன்மாவை கேள்விக்கு உள்ளாக்குபவை. கேள்விகள் ஆன்மாவைத் துளைக்கும்போதுதான் தனது இருப்பிற்கான சாத்தியங்களை மனிதன் உணர்ந்துகொள்ள முடியும். அந்த சாத்தியத்தின் கூறுகளை தஸத்யெவ்ஸ்கி நம் முன்னே அவரது படைப்பின் வழியாக எழுப்புகிறரர் மனிதனின் மீது ஒளிரும் அன்பின் ஒளியை எப்பொழுதும் பாய்ச்சுகிறார். அவரின் அன்பின் கரங்களை ஆதரவாய் நம்மை நோக்கி நீட்டிக்கொண்டே இருக்கிறார். கிறிஸ்துவைப் போல மன்னிப்பின் நியதியை நமக்கு போதிக்கிறார். பாவப்பட்ட ஆன்மாவின் ரத்தக் கறைகளை எளிமையான அன்பின் மூலம் நிவர்த்தி செய்ய முடியும் என்பதைதான் அவரது படைப்புகள் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

இத்தனை நெருக்கமாய் ஒரு பிரதியை உள்வாங்கி அதை மொழிபெயர்ப்பு செய்வது என்பது இலக்கியத்திற்கு தன்னை அர்ப்பணிப்பு செய்ததனால் மட்டுமே சாத்தியமாகி இருக்கும். வாஞ்சையாய்ப் பற்றும் கரத்தைப் போல் தஸ்தாயெஸ்கியை நமக்கு கையளித்திருக்கிறார் எம்.ஏ. சுசீலா. விடை காணமுடியாத  வாழ்வின்  துயரங்கள்  எழுதப்படும்போதுதானே அவை இலக்கியம்  ஆகின்றன.


  • இரா. சசிகலாதேவி

 

நூல் :தஸ்தயெவ்ஸ்கி கதைகள்

ஆசிரியர்: ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

தமிழில் : எம்.ஏ.சுசீலா

பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்

விலை : ₹120

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.