ஆர்தர் ரைம்போவின் கடிதம்- 2


டந்த மாத கனலி  இணைய இதழில், மிக இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்ற ஆக்கங்களை எழுதி ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று போற்றப்படும் பிரெஞ்சுக் கவிஞரான ஆர்தர் ரைம்போ தனது ஆசிரியரான ஜார்ஜஸ் இசம்பார்டுக்கு எழுதிய, மிகப்பிரபலமான ‘ஆரஞருற்ற உள்ளம்’ கவிதையைத் தன்னகத்தே கொண்ட கடிதத்தை வாசித்திருப்பீர்கள்.

ஆர்தர் ரைம்போ இருபத்தொரு வயதாகு முன்பே தனது எழுத்துக்களை நிறுத்திவிட்டார் எனினும் தனது வாழ்க்கைக்காலம் முழுவதும் ஒரு சிறந்த கடித எழுத்தாளராக விளங்கினார். மேற்குறித்த கடிதமும் கீழ்வரும் கடிதமும் ஆர்தர் ரைம்போ எழுதிய கடிதங்களுள் மிக முக்கியமானவை. ‘தீர்க்கதரிசனக் கடிதங்கள்’ என்று அறியப்படுபவை.

இலக்கிய வரலாறு டெமெனி என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டது என்றால், முக்கியமாக கெயர் டி டூவாய் (Caiier de Douai), மற்றும்  ரைம்போ அவருக்கு எழுதிய உலகப் பிரசித்தி பெற்ற ‘தீர்க்கதரிசனக் கடிதம்’ இவையிரண்டையும் பேணிக்காத்து ஒப்படைத்தமையாலேயே, இல்லையேல் போல் டெமெனி எனும் கவிஞர் இன்று முற்றிலும் மறக்கப்பட்டிருப்பார் என இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.போல் டெமெனி, பிப்ரவரி 8, 1844 இல் டூவாயில் பிறந்தார். நவம்பர் 30, 1918 இல் ஆர்குவேலில் இறந்தார். ஆர்தர் ரைம்போ, விக்டர் ஹ்யூகோ ஆகியோருக்கு நெருக்கமான ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரிஸில் குடியேறிய பின்னர், இவர் ஒரு புத்தகக் கடையின் இணை இயக்குநராக இருந்தார். 1870 ஆம் ஆண்டில் அவர் தனது முதல் செய்யுள் தொகுப்பான லெஸ் கிளானியஸை(Les Glaneuses)  வெளியிட்டார். 1878 ஆம் ஆண்டில் லா ஜீன் பிரான்சின் இணை நிறுவனர் ஆனார். அத்துடன், அவர் பல கவிதைகளையும், நாடக அரங்கத்துக்கான செய்யுள் தழுவல் வடிவங்களையும் வெளியிட்டார். 1884-1885 ஆம் ஆண்டில், லா லிகு டி ஆண்ட்ரியக்ஸ் (La Ligue d ‘ Andrieux) பற்றிய வியத்தகு விமர்சனம் ஒன்றை எழுதினார்.

ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு எழுதிய கடிதம் மிக நீண்டது. மூன்று புகழ் பெற்ற நெடுங்கவிதைகளை உள்ளடக்கி, ஒரு மணி நேர வாசிப்புக்குத் தீனியாக எழுதப் பெற்றதொன்று. இம்மாத கனலி இதழ்  வரலாற்றுச் சிறப்பு மிக்க, பாரிசியச்  சமர்ப்பரணிஎன்ற கவிதை அடங்கிய, இரண்டாவது ‘தீர்க்கதரிசனக் கடிதத்தின்முதல் பாகத்தை ஏந்தி வருகிறது.


இனி,

ஆர்தர் ரைம்போ போல் டெமெனிக்கு எழுதிய கடிதம் 

பகுதி 1

 

போல் டெமெனிக்கு

சார்லேவில், 15 மே 1871.

 

உங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கான புதிய இலக்கியத்தை வழங்குவதென நான் தீர்மானித்துள்ளேன். இன்றைய நடப்பு நிகழ்வுகள் குறித்த பாடல் ஒன்றுடன் ஆரம்பிக்கிறேன்:

 

பாரிசியச்சமர்ப்பரணி

 

வசந்தத்தின் உதயம் ஐயமறத் தெரிகிறது

தியர்சினதும்(Thiers) பிகார்டினதும்(Picard) எழுச்சிக்கு

அரசியலில் உரிமையுள்ள வகுப்பினர்தம் செல்வாக்கில்

அதன் அற்புதக்கரங்களை அகலத்திறக்கிறது

 

ஓ மலர்ச்சிப் பருவமே! எத்துணை அறிவுதிறம்பிய, வெற்றுச் சோம்பேறிகள்!

ஓ செவஹ் மியூடன்(Sèvres Meudon), பான்யூ(Bagneux), அன்யேஹ்(Asnières),

வசந்த காலத்தின் உவப்பூட்டும் செய்திகளைத் தூவுகின்ற

வருகையர் வரவேற்பை இப்போது கேளுங்கள்!

 

அவர்களிடம் படைக்குல்லாக்களும், பட்டாக்கத்திகளும்,  தண்டோராக்களும் இருக்கின்றன;

பழைய மெழுகுவர்த்திப் பெட்டிகள் ஏதும் இல்லை.

நெவ் நெவ் கொண்ட மெல்லுகைப்புடைய பரிசல்கள்

இரத்தத்தால் சிவந்த ஏரி நீரைக் கிழித்துச் செல்கின்றன!

 

இந்த அசாதாரணமான விடியல்களில்

முன்னெப்பொழுதும் இல்லாதவாறு

எங்கள் எறும்புக் குவியல்கள்

மஞ்சள் தலைகளை வீழ்த்தி வரும்போதில்

நாங்கள் பேரிரைச்சலிட்டுக் கூத்தாடுகிறோம்.

 

தியர்சும் பிகார்டும் மன்மதன்கள்;

சூரியகாந்திகளின் தலையை எடுப்பவர்கள்;

அவர்கள் கொரட்டின்(Corot) சித்திரங்களையே பூச்சிக்கொல்லி கொண்டு வரைவார்கள்:

பாருங்கள், அவர்கள் மரங்களுக்கு விளைக்கும் நாசத்தை!

 

அவர்கள் ஃபெவெ(Favre)ருக்கும், அதிமேதகு என்ன-அவர்-பெயர்! இற்கும் நெருக்கமானவர்கள்;

கருவிழிக்கிடையில் படுத்திருந்து,

கண்ணிமைத்து முதலைக் கண்ணீர் வடிப்பவர்கள்;

அவரது காரமான மூச்சை முகர்பவர்கள்!

 

உங்கள் கன்மெழுகு மழை இருந்த போதும்,

அப்பெருநகரம் சூடான தளம் பாவும் உருளைக் கற்களைக் கொண்டிருக்கிறது;

உங்கள் பதவிகளில் உங்களை நாங்கள்

தீர்மானமாகத் தரமுயர்த்தத் தான் வேண்டும்!

 

ஒரு நெடும் தேகாப்பியாச அரைமண்டி நிலையிலிருந்து விடுபட்டுத்

தங்களை ஆசுவாசப்படுத்தும் ராஸ்டிக்குகள்(Rustics )

புரட்சிசார் சலசலப்புகளுக்கு மத்தியிலும்

தூக்குமரம் முறியும் ஓசையைச் செவியுறுவார்கள்.

 

. ரைம்போ.


இனி, கவிதையின் எதிர்காலம் குறித்த சில விடயங்கள் உரைநடையில் இங்கே:

அனைத்து பண்டைய கவிதைகளும் கிரேக்க மொழிக்கு நம்மை இட்டுச் செல்கின்றன; ஒத்திசைவான வாழ்க்கை. – கிரேக்கத்திலிருந்து காதற்காவிய இயக்கம் வரை – இடைக்காலம் – நேர்சொற் பொருண்மையினதும், செய்யுள் ஆக்கத்தினதும் மாந்தர்கள் இருந்தார்கள். என்னியொஸ்(Ennius) முதல் தெரோல்டஸ்(Theroldus) வரை, தெரோல்டஸ் முதல் கசிமீர் டெலவிஞ்ஞ(Casimir Delavigne) வரை அனைத்துமே தொடைநய உரைநடை, ஒரு ஆட்டம், எண்ணிறந்த, மடமை வாய்ந்த தலைமுறைகளின் அரைகுறைத் தன்மையும் பெருமையும்:  ராஸின்(Racine) தான் தூய்மை, வலிமை, மேன்மை. அவரது தொடைநயங்கள் ஊதப்பட்டிருந்தால், அவரது கரைக்கட்டுத் தையல்கள் குழம்பிப் போயிருந்திருக்கும், இன்று ‘தோற்றங்கள்’ நூலின் முதல் ஆசிரியர் போலவே ‘தெய்வீக விகடன்’ நூலும் அறியப் படாமலே போயிருந்திருக்கும். ராஸினுக்குப்(Racine) பிறகு அழுகுணி ஆட்டமாய்ப் போனது. இது இரண்டாயிரம் ஆண்டுகள் நீடித்தது!

இது வேடிக்கைப் பேச்சோ, புரியாத புதிரோ அல்ல. ஒரு இளைய பிரான்சு எப்போதுமே கொண்டிருக்கக் கூடிய வெஞ்சினத்தைக் காட்டிலும் இந்த விடயத்தில் அதற்கான காரணம் எனக்கு உறுதிப்பாட்டுடன் அகத் தூண்டுதலையும்  அளிக்கிறது.  மேலும், நாங்கள் வீட்டில் இருக்கிறோம், எங்களுக்கு நேரம் இருக்கிறது, புதியவர்களுக்கு அவர்களின் மூதாதையர்களைப் பழித்துரைக்கப் பூரண  சுதந்திரம் கிடைக்கிறது.

கற்பனாவாதம் ஒருபோதும் தக்க முறையில் மதிப்பிடப்படவில்லை. அதை யார் மதிப்பிட்டிருப்பார்கள்? விமர்சகர்கள்!!  பாடல் என்பது மிக அரிதாகவே ஒரு படைப்பு எனக் கொள்ளப்படும் என்று கற்பனாவாதிகள் நிரூபிக்கிறார்கள், அதாவது, பாடப்பெற்றுப் புரிந்து கொள்ளப்பட்ட பாடகரின் சிந்தனை.

என்னை இன்னொருவராகக் கருத்தில் கொள்வோம். பித்தளை எக்காளத்தொனி எழுப்புகிறதென்றால் அது அதனது தவறன்று. அது எனக்கு ஐயமறத் தெரிகிறது. எனது சிந்தனை மெல்ல முகிழ்வதை  நான் உணர்கிறேன். நான் அதனைக் கண்ணுறுகிறேன். நான் அதனைச் செவியுறுகிறேன்.  நான் அவ்வில்லால் இசை மீட்டுகிறேன்: அங்கு கூடுகொள் இன்னியம் ஆழங்களை ஊடுருவுகிறது அல்லது மேடை மீது ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்துகிறது.

தங்களை நூலாசிரியர்கள் என்று உரிமை கோருகின்ற ஒற்றை நோக்குப் புத்திசீவிகளது  முயற்சிகளின் பலாபலன்களை நெடுங்காலமாகவே நான் சேர்த்தடுக்கி வருகின்றேன். பழம்பெரும் அறிவிலிகள் அகங்காரத்தின் தவறான அர்த்தத்தை மட்டும் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த மில்லியன் கணக்கான எலும்புக்கூடுகளை நாம் இப்போது துடைத்தெறிய வேண்டி இருந்திராது.

கிரேக்கத்தில் செய்யுள்களும், லைர் யாழ்களும்(lyres) தொடைநயத்துக்குச் செயல் வடிவம் கொடுத்துவிடும் என்று நான் கூறியிருக்கிறேன். பிற்பாடு, இசையும் தொடைநயங்களும் ஒரு விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் போய்விட்டது. கடந்த காலம் பற்றிய ஆய்வு, ஆர்வலர்களைக் கவர்ந்திழுத்தது. அவர்களில் பலர் இத்தொன்மங்களைப் புதுப்பிப்பதில் பெருமகிழ்வு எய்துகிறார்கள் – அது அவர்களுக்கானது. முக்காலமும் உணரும் அறிவுத்திறமானது இயல்பாகவே தனது எண்ணக்கருக்களை விட்டெறிந்து வருகிறது. இந்த அகத்தின் கனிகளில் ஒரு பகுதியை மனிதர்கள் பொறுக்கி எடுத்தார்கள். அவர்கள் அவற்றுக்கேற்ப செயற்பட்டதோடு, அவை பற்றிய நூல்களையும் எழுதினார்கள். விடயங்கள் இவ்வண்ணம் தொடர்ந்தன. மனிதன் மனிதனாக இயங்கவில்லை. இன்னமும் விழித்திருக்கவில்லை. அல்லது இன்னமும் பெருங்கனவின் முழுமையை எய்தவில்லை. அரச ஊழியர்கள், எழுத்தாளர்கள்,  நூலாசிரியர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள் – இந்த ‘மனிதன்’ மட்டும் என்றுமே இருந்ததில்லை!

கவிஞனாக விரும்பும் ஒரு மனிதனின் முதல் ஆய்வு அவனது சுய அறிவு பற்றியதே, அது முழுமையானது; அவன் தனது சொந்த ஆன்மாவைத் தேடுகிறான், அவன் அதைக் கூர்ந்து ஆய்வு செய்கிறான், அதைச் சோதிக்கிறான், கற்றுக் கொள்கிறான். அவன் அதனை அறிந்து கொள்வதுடன் நின்றுவிடாது, அதைப் பேணி வளர்க்க வேண்டும். அது மிகவும் எளிமையானதாகத் தோன்றுகிறது: ஒவ்வொரு மனதிலும் ஒரு இயற்கையான வளர்ச்சி நடைபெறுகிறது; பெரும்பாலான அகங்காரவாதிகள் தங்களை எழுத்தாளர்கள் எனப் பீற்றிக் கொள்கிறார்கள்; தங்களின் அறிவுசார் முன்னேற்றத்தைத் தங்கள் அடைமொழியாகக் கூறும் பலர் உள்ளனர்!

ஆனால், ஆன்மாவை அறக்கொடியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் – கம்ப்ராச்சிகோஸின்(comprachicos) நாகரிகத்தைப் பின்பற்றி, நீங்கள் விரும்பினால்! ஒரு மனிதன் தனது முகத்தில் பாலுண்ணிகளை நாட்டி வளர்ப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள்.

அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும், தன்னை ஒரு தீர்க்கதரிசியாக மாற்ற வேண்டும்  என்று நான் கூறுகிறேன்.

ஐம்புலன்களதும் நெடிய, அளப்பரிய, பகுத்தறிவால் ஏற்குந்தரம் அழிதலால் கவிஞர் தன்னை ஒரு தீர்க்கதரிசியாக ஆக்குகிறார். அன்பினதும், துன்பத்தினதும், பைத்தியக்காரத்தனத்தினதும் அனைத்து வடிவங்களுமே; அவன் தன்னைத் தேடுகிறான், அவன் எல்லா விசங்களையும் நுகர்ந்து தீர்த்துப் புறம்போக்கிய பின்  அவற்றின் சாரத்தை மட்டும் வைத்துக் கொள்கிறான். சொல்லொணாத சித்திரவதை யாதெனில், அவனுடைய நம்பிக்கைகள், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல்கள் அனைத்தும்  எங்கே தேவைப்படுகிறதோ, அங்கே அவன் சக மனிதர்களை விடவும் ஒரு சிறந்த நோயாளியாகவும், ஒரு பெரிய குற்றவாளியாகவும், ஒரு பெருஞ் சபிக்கப்பட்டவனாகவும், ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கற்றுணர்ந்த வல்லுநராகவும் ஆகி விடுகிறான்! அவன் அறியப்படாததை அடைகிறான்! ஏனெனில், அவன் தனது ஆன்மாவைப் பேணி வளர்த்துக் கொண்டு விட்டான், ஏற்கனவே செல்வந்தன், வேறு யாரையும் விட!  அறியப்படாததை அடைகையில், அவன் பயத்தின் காரணமாகத் தனது தூரதிருட்டி நோக்குகளின் பலாபலனை இழந்து விடுகிறான். குறைந்தபட்சம் அவன் தூரதிருட்டியில் நோக்கியேனும் இருக்கிறானே!  செவியுறாத, எண்ணற்ற விடயங்களின் எல்லையில் அவன் மரணிக்கட்டும்: மற்றைய உதாவாக்கரைச் செயலாளிகள் வருவார்கள்; அவர்கள் தோல்வியுற்ற தொடுவானத்திலிருந்து இவர்கள் தொடங்குவார்கள்!

 

– மீதி ஆறு நிமிடங்களில் தொடரும் –


ஆங்கிலம்/தமிழ் : குகதர்சனி (தமிழ்க்கிழவி)

பிரெஞ்சு/ஆங்கிலம்: கேத்தரின் (கடிதம்), ஆலிவர் பெர்னார்ட்(கவிதை)

நன்றி : www.mag4.net (ரைம்போவின் கடிதம்), விக்கிபீடியா


  • ஆசிரியர் குறிப்பு : 

ஜீன் நிக்கோலாஸ் ஆர்தர் ரைம்போ (20.10.1854 – 10.11.1891) வடகிழக்கு பிரான்சின் ஆர்டென்னெஸ் பகுதியில் உள்ள சார்லவில்லில் வளர்ந்தார். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த ஞானம் மிக்க குழந்தையாகப் போற்றப்பட்ட ரைம்போ, பிரெஞ்ச் குறியீட்டு இயக்கக் கவிஞராக அறியப்பட்டவர். தன் 16 வயதிலிருந்து 19 வயதிற்குள் கவிதை எழுதி முடித்தவர். ‘குழந்தை ஷேக்ஸ்பியர்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.

அவர் சிறு வயதில், பக்தியும் பணிவுமுள்ள மாணவராக, மற்றைய மாணவர்கள் அனைவர்க்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கோலேஜ் டி சார்லவில்லில் அனைத்துப் பாடங்களிலும், குறிப்பாக இலக்கியத்திலும் காண்பித்த தனது அசாத்தியத் திறமையால் தனது ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தினார். ரைம்போ தீவிரமாக வாசிப்பவராயிருந்தார். சமகால, கடந்தகால பிரெஞ்சு இலக்கியங்களை எல்லாம் வெகு விரைவில் துறைபோகக் கற்றதோடு, இலத்தீன் மொழிக் கவிதைகளைப் படைப்பதிலும் வல்லவாராயிருந்தார்.


குகதர்சனி: பிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகப் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர்.  கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள், குறும்படங்கள், விரிவுரைகள், அகராதி அத்தியாயங்கள், ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள், மருத்துவர்/ இயன்மருத்துவர்/ உளநலவியலாளர்/ நகரசபை வாடிக்கையாளர் சந்திப்புகள், சத்திர சிகிச்சை முற்பொழிப்புக்கள், குடிவரவு நேர்காணல்கள்,  நீதிமன்ற சாட்சிக்கூற்றுகள்  உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவற்றை மொழி/உரை பெயர்த்தவர். 

கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

Previous articleஇடிந்த வானம்
Next articleவானத்தை வரைந்த சிறகு
Avatar
குகதர்சனி (தமிழ்க்கிழவி): பிரித்தானியாவில் சுதந்திர பட்டய (Chartered) மனித வள ஆலோசகராகப் பணியாற்றுகிறார். லண்டன் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் மனிதவள முதுகலைமாணி. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணத் திறைசேரியிலும், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலும் முகாமைத்துவ உதவியாளராகவும், பிரித்தானியாவில் பிரபல நிறுவனம் ஒன்றில் தமிழ்/ஆங்கில, ஆங்கில/தமிழ் நேர்முக உரைபெயர்ப்பாளராகவும் இருந்தவர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பாடல்கள், குறும்படங்கள், விரிவுரைகள், அகராதி அத்தியாயங்கள், ஆவணங்கள், கணக்கு அறிக்கைகள், மருத்துவர்/ இயன்மருத்துவர்/ உளநலவியலாளர்/ நகரசபை வாடிக்கையாளர் சந்திப்புகள், சத்திர சிகிச்சை முற்பொழிப்புக்கள், குடிவரவு நேர்காணல்கள், நீதிமன்ற சாட்சிக்கூற்றுகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவற்றை மொழி/உரை பெயர்த்தவர். கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இலங்கை அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான இலக்கிய நிர்மாணப் போட்டிகளில் கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு ஆகியவற்றுக்கான பரிசில்களைப் பெற்றவர். ‘தமிழ்க்கிழவியின் கிறுக்கல்கள்’ இவரது முதல் கவிதைத் தொகுப்பாக வெளிவந்துள்ளது.

4 COMMENTS

  1. சகோதரி அவர்களின் அருமையான மொழியாக்கத்திற்க்கு முதலில் எமது அன்பு வாழ்த்துக்களைப் பதிவிட்டு மகிழ்கிறேன்.
    இலக்கியம் என்ற எல்லையற்ற பெருங்கடலின் புதிய அலைகளை அனுபவித்து உணர்கிறேன். உளமகிழ் நன்றிப்பூக்கள்💐💐

  2. கடித இலக்கியத்திற்கு நான் புதிது, உங்களின் படைப்பின் மூலம் தான் உள் நுழைகிறேன். மொழியாக்கம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி !♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.