வானத்தை வரைந்த சிறகு


      அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்த வெங்கடேசன், புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல… காம்பவுண்டுக்கு வெளியே மஞ்சள் நிறத்தில் மடல் விரித்திருந்த வாழைக் குருத்தை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

திடீரென வேலிப் பக்கமிருந்து ஏதோ பேச்சுச் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார். எப்போது விழட்டும் என்று வானத்திடம் அனுமதி கேட்டபடி நின்றிருந்த அந்த பட்டுப் போன மொட்டைத் தென்னையின் கீழே இரண்டு பையன்கள் நின்றிருந்தனர்.

ஒருவன் கருப்பாக, உயரமாக இருந்தான். தொளதொளப்பான ரோசாப்பூ நிறச் சட்டையும், நீல நிறப் பேண்ட்டும் அணிந்திருந்தான். இன்னொருவன் குள்ளமாக மாநிறமாக இருந்தான். தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான். அநேகமாக உள்ளூர் அரசுப் பள்ளியில் படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

இருவரும் கழுத்தை உயர்த்தி மொட்டை மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்று ஆள் உயரமிருந்த உளுத்துப் போன அந்த மரத்தைச் சுற்றி கப்புச் செடிகள் புதராக வளர்ந்திருந்தன. அதனூடாக காரை முட்செடிகளும் செழித்திருந்தன.

சின்னப் பையன் நீளமான ஒரு கம்பால் கப்புச் செடிகளை விலக்கிப் பிடித்துக் கொள்ள, ஓணானைப் போல கால்களை அகட்டி அகட்டி வைத்து பெரிய பையன் அந்த மரத்தில் ஏறினான். பாதி தூரம் ஏறியதும், இடது கையால் மரத்தைச் சுற்றி அணைத்துக் கொண்டு, அங்கிருந்த பொந்தில் வலது கையை விட்டான்.

வெங்கடேசனுக்கு மனசு திக்கென்றது. பொந்தில் ஏதாவது பாம்பு இருந்தால் என்ன ஆவது….? அவர்களை அதட்டலாம் என அவர் வாயைத் திறந்தபோது அவன் கையை வெளியே எடுத்தான். கையில் பச்சையாக எதுவோ இருந்தது.

“யேய் உசாரா புட்ரா…. உட்றப்போற…” என்று பதட்டத்தோடு மேலே பார்த்துக் கத்தினான் சின்னவன்.

வலது கையை மரத்திலிருந்து தூரமாய் தூக்கிப் பிடித்தபடி மெதுவாகக் கீழே இறங்கினான் பெரியவன்.

ஆர்வக் குறுகுறுப்போடு அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தார் வெங்கடேசன். அப்போதுதான் அவர்கள் வெங்கடேசனைத் திரும்பிப் பார்த்தனர். தங்களுக்குள் பார்வையாலேயே ஏதோ பேசிக் கொண்ட அவர்கள் வெங்கடேசனை நோக்கி வந்தனர்.

“ணா…. கிளி…. ஓணுமாணா…?” என்று அவருக்கு அருகில் வந்ததும் பெரிய பையன் கேட்டான்.

அவன் தன் இடது கையில் கிளியின் உடலையும், வலது கையால் அதன் தலையையும் அழுத்தமாகப் பிடித்திருந்தான்.

வெளிறிய பச்சை நிறத்தில் இருந்த கிளி, சிறிய மிளகுக் கண்களை உருட்டி உருட்டி அவரைப் பாவமாகப் பார்த்தது. உடலை அசைக்கக் கூட முடியாததால் பெருக்கல் குறி போன்ற தன் கால் விரல்களை நீச்சலடிப்பதைப் போல காற்றில் துழாவிக் கொண்டிருந்தது.

“அத ஏண்டா அப்டி அமுக்கிப் புடிக்கற… அதுக்கு நோவப் போவுது… தலய உட்டுட்டு கால புட்ச்சிக்டா…” என்று அவனிடம் சொன்னார்.

“தலய உட்ட்டா கையக் கட்ச்சிபுடும்ணா….” என்றான் அவன்.

“கிளி எப்பிட்ரா கடிக்கும்… அதின்னா நாயா…?” என்று சிரித்தார் வெங்கடேசன் கிண்டலாக.

“ணோவ்… கட்ச்சிசினா வெர்லே துண்டாப் பூடும்….” என்றான் அவன். அதை நம்பாமல் மேலும் கிண்டலாகச் சிரித்தார் வெங்கடேசன்.

“கூண்ட்ல வெச்சி ஊட்லயே வளக்கலாம்ணா…. நல்லா பேசும்… ஓணுமா…?.” என்றான் சின்னப் பையன்.

அப்போது தான் வெளியே வந்த அவரின் மகன் வினோத்தும், மகள் சுரபியும் கண்கள் விரிய விரிய கிளியைப் பார்த்தனர்.

“ப்பா… கிளி சூப்பரா இருக்குப்பா…. வாங்கலாம்பா….” என்றான் வினோத்.

“பறக்கற கிளிய கூண்ட்ல அட்ச்சி வெச்சா பாவம்டா…” என்றார் அவனிடம்.

“கிளி தூரம் தூரமா பறந்து போயி சாப்பாடு தேடுதுல்ல… நாம கூண்ட்ல வெச்சி இங்கியே நெறய்ய சாப்பாடு போட்லாம்… அது கிளிக்கி நல்லதுதான…?” என்றான் வினோத்.

“இப்ப வீட்ல கூண்டு இல்ல… கூண்டு வாங்கியாந்தப்பறம் சொல்றங்… அப்ப புட்ச்சிகினு வா…. இப்ப உட்ரு…” என்றார் அவர் அந்தப் பெரியப் பையனிடம்.

“உட்டுட்டா புடிக்க முடியாதுணா…. நானு இப்ப றக்கய ஒட்டி குட்த்துட்றேங்… கூண்டு வாங்கியாந்ததுங் றக்கய பிரிச்சி கூண்ட்ல உட்ரலாங்….” என்றான் அவன்.

அதைக் கேட்டதும் வினோத்தும், சுரபியும் ஆளுக்கொரு பக்கமாக அவர் கைகளைச் சுரண்ட ஆரம்பித்தனர்.

“கூண்டு வரட்டும் அப்பறம் பாக்கலாம்….” என்று அவர்களை அதட்டினார். அவரின் அதட்டலைக் கேட்டு குழந்தைகள் பின்வாங்கினர். அவர்களின் முகம் வானம் பார்த்த மானாவாரிக் கடைலைச் செடிகளைப் போல வதங்கியது.

“வாடா போலாங்…. அந்த வாத்யார் சார் கேட்டாரே அவருக்குக் குடுக்கலாம்….” என்று சின்னவன் சொல்ல, இருவரும் கிளம்பினர்.

அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த ரேவதி, சூழ்நிலை புரிந்ததும் அந்தப் பையன்களை இருக்கச் சொன்னாள்.

“ஏங்க பசங்க ஆசப்பட்றாங்க… வாங்கிக்கங்க….” என்றாள்.

“அதுக்குனு கிளிய கூண்ட்ல அடைக்கணுமா…?” என்றார் அவர் ரேவதியிடம்.

“நாம வாங்கலனா… வேற யார்னா வாங்கதாம் போறாங்க… அதுக்கு நாமளே வாங்கி நல்லா பாத்துக்கலாம்… நீங்கல்லாம் வெளிய போனப்பறம் நானு மட்டும் வெட்டு வெட்டுனு ஊட்ல தனியாதான இருக்கறங்…. இதுனா தொணைக்கு இருக்கும்…” என்றாள் ரேவதி கிளியைப் பார்த்தபடி.

நூறு ரூபாயைக் கொண்டு வந்து சின்னப் பையனிடம் கொடுத்தார் வெங்கடேசன். வீட்டிலிருந்து செல்லோ டேப்பை வாங்கி விரல் நீளத்துக்குத் துண்டாகக் கிழித்தான் சின்னப் பையன். பெரிய பையன் கிளியின் உடலை மேலும் அழுத்திப் பிடித்துக் கொள்ள, கிளியின் வலது இறக்கையின் முனையில் நீளமாய் இருந்த நான்கைந்து வெளிர் பச்சை இறகுகளை மட்டும் சேர்த்து செல்லோ டேப்பால் ஒட்டினான். அடுத்த இறக்கையையும் அதே போல ஒட்டிய பின்னர் கிளியை போர்டிக்கோவில் கொண்டு போய் விட்டான் பெரியவன்.

தரையில் கால் பட்டதும் தாவி எழும்பி இறக்கைகளை அசைத்தது கிளி. ஆனால் இறக்கைகளை விரிக்க முடியாமல் தொபீரென கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் மீண்டும் எழும்பி… மீண்டும் விழுந்தது.

அப்படி பலமுறை தத்தித் தத்திக் கீழே விழுந்த கிளியை ஓடிப்போய் பிடித்து மேலே தூக்கினான் வினோத். அடுத்த நொடியே கைகளை உதறிக்கொண்டு அதை தொபீரென கீழே போட்டான்.

பிடித்த வேகத்திலேயே அவன் விரலைக் கடித்துவிட்டது கிளி. அவனது வலது கை சுட்டு விரலில் ரத்தம் கசிந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு கையை உதறினான். சிமெண்ட் தரையில் துளித் துளியாய் சிதறியது ரத்தம். எல்லோருமே பதறிவிட்டனர்.

“கைய ஒதுறாத….” என்று அவனது விரலை அழுத்திப் பிடித்தாள் ரேவதி.

உள்ளே ஓடிய வெங்கடேசன் பஞ்சும் டின்ச்சர் பாட்டிலும் கொண்டு வந்தார். விரலில் துளிர்த்த ரத்தத்தைத் துடைத்துவிட்டு அதில் டின்ச்சர் விட்டார். அதன் எரிச்சலில் “ஸ்ஸ்ஸ்…” என்று நாக்கை உறிஞ்சினான் வினோத்.

அதையெல்லாம் கிலியோடு பார்த்துக் கொண்டிருந்த சுரபி கிளியைப் பார்க்கவே பயந்தாள். இந்த இடைவெளியில் தத்தித் தத்தி காம்பவுண்ட் கேட் வரை போய் விட்டது கிளி.

நீளமான, சுண்டு விரல் கனமுள்ள ஒரு குச்சியை எடுத்து வந்து அதைக் கிளியின் தலைக்கு முன்பாக நீட்டினான் பெரிய பையன். அந்தக் கம்பை வாயால் கடித்தது கிளி. அவன் கம்பை மேலே தூக்கியதும் கம்பைக் கடித்தபடி தொங்கிய கிளி… பின்னர் கால்களை நீட்டி கம்பைப் பற்றி அதன் மீது ஏறி நேராக நின்றது. அதை அப்படியே தூக்கி வந்து அவர்கள் எதிரில் காட்டினான் அவன்.

“கிளிய இப்டிதாங் தூக்கணுங்…. பழக்கமாய்ட்ச்சினா கடிக்காது…. அப்ப கைலயே புடிக்கலாம்…” என்று சொல்லியபடி கிளியை மீண்டும் கீழே இறக்கி விட்டான்.

“ஏண்டா… ஊட்டுக்கு வரும்போதே கையக் கடிக்குது… இந்தக் கிளி ஓணுமாடா…? பறக்க உட்டுல்லாமா…?” என்றார் வினோத்திடம் வெங்கடேசன்.

“ம்ஹும்…. இனிம கொம்புல புட்ச்சி தூக்கலாம்…” என்றான் அவன். பெரிய பையனின் கையிலிருந்த கம்பை இடது கையில் வாங்கி கிளியின் முன்னால் நீட்டினான். முன்பு போலவே கம்பை வாயில் கடித்து அதன் மீது ஏறியது கிளி.

சர்க்கசில் கிளிகளைத் தலைக்கு மேலாகத் தூக்கிப்பிடித்து சுற்றிச் சுற்றிக் காட்டும் தொடை பெருத்த அழகிகளைப் போல… கிளியைத் தூக்கிக் காட்டி சிரித்தான் வினோத். அப்படியே வீட்டுக்குள் கொண்டுபோய் கூடத்தில் இறக்கி விட்டான்.

வழவழப்பான டைல்சில் கால்கள் பட்டதும் திணறிய கிளி கால்களை உதறிக் கொண்டது. தலையைத் திருப்பி வட்டமான கண்களை உருட்டி அவர்களைப் பார்த்தது. மெதுவாகத் தாவித் தாவி சுவரோரம் ஓடி இருட்டான மூலையில் நின்று கொண்டு மீண்டும் அவர்களைப் பார்த்தது. அதன் கண்களிலிருந்த மிரட்சி மேலும் மேலும் கூடியது.

ரேவதி சமையலறைக்குள் போய் கொஞ்சம் அரிசியை எடுத்து வந்து கிளியின் முன்னால் தூவினாள். சிவப்பு நிற டைல்சின் மீது சிதறிய அந்த வெண்ணிற அரிசித் துளிகள்…. துரியோதனனுக்கு முன்னால் கர்ணன் சிதறவிட்ட பானுமதியின் முத்துகளைப் போல பளிச்சென சிரித்தன. ஆனால் அரிசியைச் சட்டை செய்யாத கிளி பின்னால் தாவி மேலும் சற்று தூரத்தில் போய் நின்று கொண்டது.

“அது அரிசியத் தொடலியே…. அது என்னா சாப்டும்…?” என்று கவலையோடு கேட்டாள் ரேவதி.

“மொதல்ல அதக் கொஞ்ச நேரம் தனியா உடுங்க… அதுக்கு பயம் தெளியட்டும்… இப்ப பாற்கடல்லருந்து அமிர்தமே எட்த்தாந்து வெச்சாலும் அது தொடாது…” என்றார் வெங்கடேசன்.

டி.வி. வாங்கிவந்த அட்டைப் பெட்டியை பரணிலிருந்து கீழே இறக்கி, அதற்குள் கிளியைத் தூக்கி விட்டான் வினோத். ( குச்சியால் பிடித்துத்தான் ). அப்படியே பெட்டியைத் தூக்கிப் போய் படுக்கை அறையின் ஒரு மூலையில் வைத்தான்.

ரேவதி சமையலில் இறங்கிவிட்டாள். வெங்கடேசன் மார்க்கட்டுக்குக் கிளம்பினார். வினோத் மட்டும்  டி.வி. பார்ப்பதும் அடிக்கடி அட்டைப் பெட்டியை எட்டிப் பார்ப்பதுமாக இருந்தான். சமையலின் நடுவில் ஒரு கை நிறைய்ய அரிசியைக் கொண்டு போய் அட்டைப் பெட்டியில் தூவிவிட்டு வந்தாள் ரேவதி.


    நடு இரவில் டொக் டொக்… டொக் டொக்… என மெலிதான சத்தம் கேட்டது. புரண்டு படுத்த வினோத் கண்களைத் திறக்காமலே அதைக் கூர்ந்து கவனித்தான். மீண்டும் டொக் டொக்… டொக் டொக் என ஒரே சீராகச் சத்தம் கேட்க… அவனுக்குப் பயமாக இருந்தது. வெங்கடேசனின் மார்பின் மீது வலது கையைப் போட்டபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ரேவதியை அசைத்தான். முனகிக் கொண்டே கண் விழித்த ரேவதியும் அந்தச் சத்தத்தைக் கேட்டாள். பயத்துடன் வெங்கடேசனை உலுக்கினாள். அவரும் இமைகளைச் சுருக்கியபடி அதைக் கவனித்தார்.

அட்டைப்பெட்டியிலிருந்து தான் சத்தம் வந்தது. கிளி அட்டைப்பெட்டியை குத்தி உடைக்கிறதோ…? வெங்கடேசன் எழுந்து விளக்கைப் போட்டார். சத்தம் நின்று விட்டது.

மெதுவாக நடந்து பெட்டியை எட்டிப் பார்த்தார். பெட்டியில் இருந்த அரிசி பாதிதான் இருந்தது. “டேய் கிளி அரிசியத் தின்னுது…” என்றார் உற்சாகமாக. பெட்டியை எட்டிப் பார்த்த ரேவதி சமையலறைக்குப் போய் இன்னும் ஒரு பிடி அரிசியைக் கொண்டுவந்து பெட்டிக்குள் போட்டாள்.

கொட்டாவி விட்டபடியே வெங்கடேசன் விளக்கை நிறுத்தினார். அறை இருட்டைத் தழுவிக் கொள்ள…. ரேவதி அவரைத் தழுவிக் கொண்டாள்.


   மறுநாள் காலையில் கிளியின் முகத்தில்தான் கண் விழித்தான் வினோத். பெட்டிக்குள்ளேயே ஒரு ஓரமாக கருப்பும் வெளுப்புமாய் எச்சமிட்டிருந்தது.

“அம்மா… கிளி ஆயி போயிட்டு அதுக்கு பக்கத்திலியே பட்த்துக்கினு இருக்குது… கிளீன் பண்ணுமா….” என்றான் வினோத்.

“அத நாம்பாத்துக்கறேங்… நீ போய் குளி… டைமாவுது …” என்றாள் ரேவதி.

பிள்ளைகளையும். வெங்கடேசனையும் ஒரு வழியாக அனுப்பிவிட்டு, ஒரு நீளமான பெருமூச்சு விட்ட ரேவதி… திடீரென கிளியின் நினைவு வர… பெட்டியைப் போய்ப் பார்த்தாள்.

அவளின் நிழல் பெட்டிக்குள் விழுந்ததும் துள்ளி எழுந்து ஓரமாகத் தத்தியது கிளி. அந்தக் குச்சியை பெட்டிக்குள் விட்டதும் அதன்மீது ஏறியது. அப்படியே தூக்கி வந்து கூடத்தில் விட்டாள். தாவி தரையில் குதித்ததும் எகிறி எகிற இருட்டாக இருந்த வடக்கு மூலைக்கு ஓடியது. மெல்லிருள் படர்ந்திருந்த சுவரோடு ஒண்டிக்கொண்டது.

மெதுவாகக் கழுத்தைத் திருப்பி, சிவப்பு நிற வளையத்துக்குள்ளிருந்த அந்த மிளகுக் கண்களைச் சிமிட்டிச் சிமிட்டி பயத்தோடு ரேவதியைப் பார்த்தது. சிவப்பான வளைந்த மூக்கை தன் வலது காலால் அவசரமாக ஒரு முறை உரசிக் கொண்டது.

அப்படியே அதைத் தூக்கி அதன் பச்சை நிறத் தலையிலும், பஞ்சு போன்ற கழுத்திலும், தக்காளிப் பழ நிற மூக்கிலும் முத்தமிட வேண்டும் என்று ஆசை வந்தது ரேவதிக்கு. கிளியை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாள். துள்ளிக் குதித்து தத்தியபடி இன்னும் பின்னால் நகர்ந்தது.

“அடியே கிளியக்கா….. உன்ன ஒன்னும் கட்ச்சி துண்ணுட மாட்டேங் நானு…. எதுக்கு இப்டி பயந்து சாவற….?” என்றாள் அதைப் பார்த்து.

மீண்டும் கழுத்தை மட்டும் திருப்பி, கண்களைச் சிமிட்டி அவளைப் பார்த்தது.

“கிட்ட வாடி கிளியக்கா….” என்று ஆசையோடு அதை நோக்கி கைகளை நீட்டினாள்.

மேலும் பின்னால் நகர்ந்து சுவரோடு ஒட்டிக் கொண்டது.

“செரி செரி… ரெண்டு நாளு போவட்டும் இரு…” என்று உள்ளே போய் ஒரு தக்காளிப் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி அதை கிளிக்கு முன்னாள் போட்டுவிட்டு, மற்ற வேலைகளைப் பார்க்கத் தொடங்கினாள்.


மாலையில் வீடு திரும்பிய பிள்ளைகள் கிளியை விட்டு நகரவேயில்லை. குச்சியில் உட்கார வைத்து கதவுக்கு வெளியேயும் கொண்டு போனான் வினோத்.

“டேய்…. வெளிய போவாத… தெருவுல நாய் இருக்குது. லபக்குனு புடிச்சிக்கும்….” என்று அதட்டினாள். மீண்டும் உள்ளே கொண்டு வந்தவன் கூடத்தில் இறக்கிவிட்டு சற்று நெருங்கி நின்று வேடிக்கை பார்த்தான்.

“டேய்… தூரமா இரு… கண்ணக் குத்திடப் போவுது…” என்று அதட்டினாள்.

இரவு தாமதமாய் வீடு திரும்பிய வெங்கடேசன் சாப்பிட்டுக் கொண்டே கிளியைப் பற்றி விசாரித்தார்.

”நாளிக்கு வரும்போது கூண்டு வாங்கினு வாப்பா… போர்டிக்கோல கட்டித் தொங்க உடலாம்…” என்றான் வினோத்.

மறுநாள், அதற்கு மறுநாள் என ஒவ்வொரு நாளும் கூண்டு வாங்காமலே வந்தார் வெங்கடேசன்.

“மறந்துபோச்சி… நாளைக்கு வாங்கினு வரேங்…” என்றார் ஒவ்வொரு நாளும்.

ஆறாவது நாள் அட்டைப் பெட்டியைத் தூக்கி மீண்டும் பரனில் போட்டுவிட்டு, பீரோவின் இரும்பு கால்களுக்குக் கீழே இருந்த இடைவெளியில் ஒரு மனையைப் போட்டு, அதன் மேல் கிளியை விட்டாள் ரேவதி. பீரோவின் பின்புற இருட்டில் நகர்ந்து மறைந்து கொண்டது. அவ்வப்போது அரிசி, தக்காளி, வேர்க்கடலை என  போட்டு, ஒரு கிண்ணத்தில் தண்ணீரையும் வைத்தாள்.

அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்கள் எல்லோரும் கிளம்பிப் போன பிறகு மெதுவாக வெளியே வந்தது கிளி. ரேவதி மட்டும் இருப்பதை உறுதி செய்து கொண்டு தத்தித் தத்தி கூடம் வரை வரும். பயம் நீங்கிவிட்டது என நினைத்துக் கொண்டாள் ரேவதி.

“கிளியக்கா… இப்ப நீயும் நானும் மட்டுந்தாங் ஊட்ல… உன்ன மாதிரிதாங் என்னயும் பதிமூணு வர்சத்துக்கு முன்னால இங்கக் கொண்டாந்து உட்டுட்டுப் போனாங்க… மொதல்ல நானும்… பெட்ரும்ல இருந்து சமையல் ரூமு வரைக்கும் பயந்து பயந்துதாங் நடந்தங்…. ம்… இன்னமுங் இந்த ஹாலு… பெட்ரூமு… வாசலு தாண்டி போவ முடில…” என்று பெருமூச்சு விட்டாள் ரேவதி.

கழுத்தைத் திருப்பித் திருப்பி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டது கிளி.

“ஒண்ணு தெரிமா…? உங்கிட்ட இந்த ஊட்டுச் சாவியில்ல… ஆனா எங்கிட்ட இருக்குது…. அவ்ளோ தாங்…” என்றாள் கசப்பாகச் சிரித்துக்கொண்டே.

“உனுக்கு எத்தினி குஞ்சிங்க…? உங்கூட்டுக்காரரு உன்ன மாதிரியே நல்ல கலரா…? மூக்கு உன்னவுட செவப்பா இருக்குமா…?” என்றாள் கிளியின் கண்களைப் பார்த்தபடி.

தலையைச் சாய்த்து அவளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டது.

“சரி இரு… சமையல் பண்ணிட்டு வர்ரேங்….” என்று எழுந்த ரேவதி சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.  கிளி பீரோவுக்குக் கீழே நுழைந்து கொண்டது.

கிளிக்கு நெல் பிடிக்கும் என்று கேள்விப்பட்டு நெல் வாங்க ஒரு நாள் பஜாருக்குப் போனார் வெங்கடேசன். எந்தக் கடையிலும் நெல் விற்கவில்லை.

“அரிசிதாங் சார் கெடைக்கும்… நெல்லு வேணும்னா மண்டிக்கி தாங் போவணும்… மண்டிலாம் நம்மூர்ல கெடையாது…” என்றார் ஒரு கடைக்காரர்.

கிளிக்கு மிளகாய்ப் பழமும் பிடிக்கும் என்பதால் மார்க்கட்டில் பச்சை மிளகாயை வாங்கி வந்து ஒரு கவரில் போட்டுக் கட்டி வைத்தாள் ரேவதி. மூன்றாவது நாள் பழுக்கத் தொடங்கியதும் அதைக் கிளிக்கு முன்னால் போட்டாள். அதில் ஒரு பழத்தை இடது காலால் இரண்டு முறைப் புரட்டிப் பார்த்த கிளி… தலையைத் திருப்பிக்கொண்டு தூரமாகப் போய்விட்டது.

அவ்வப்போது அரிசியும், வேர்க்கடலையும் தான் தின்றது. அதுவும் யாரும் பார்க்காத போதுதான்.  ரேவதி தனியாக இருக்கிற போது மட்டும் பீரோவுக்கு வெளியே வந்து வேர்க்கடலையைக் காலால் தூக்கி வாயில் வைத்துக் கொறித்துக் கெண்டே அவளைப் பார்க்கும். அது வேர்க்கடலைப் பருப்பைத் தின்றுவிட்டு தோலை மட்டும் வெளியே தள்ளுகிற லாவகத்தைக் கண்கள் விரிய பார்த்துக் கொண்டே இருப்பாள் ரேவதி்.

எல்லோரும் கிளம்பிப் போன பிறகு வாசல் கதவை மட்டும் மூடி விட்டு மற்ற அறைக் கதவுகளைத் திறந்து வைப்பாள்.  படுக்கை அறை, சமையலறை, பூஜை அறை என சுதந்திரமாகச் சுற்றிவரும் கிளி, சில நேரங்களில் சமையலறையில் அவள் சமைக்கும் போது மூலையில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருக்கும்.

“இன்னா அப்டி பாக்கிற…? உங்குளுக்கு சமைக்கிற வேலையெல்லாம் இல்ல… எதுவாந்தாலும் அப்படியேதான் திண்றீங்க… நாங்க அரிசி, பருப்ப அப்படியே தின்ன முடியுமா…? நாக்கு ருசியா கேக்குதே…. அப்டி பச்சயா தின்னாலும் ஒடம்புக்கு ஒத்துக்குமா…?” என்றாள் கிளியைப் பார்த்தபடி.

“இப்பவே பீபி, சுகரு, கொழுப்புனு கெடக்கறம்… ம்… உங்கள மாதிரி ஒரு கை அரிசியும், ஒரு புடி பருப்பும் மென்னு துண்ணுட்டு தண்ணிய குட்ச்சிட்டா எங்களுக்கும் வேல மிச்சம். அப்பறம் இப்டி சமையல் ரூமுனு ஒண்ணு எந்த ஊட்லயும் இருக்காது. இது மட்டும் இல்லனா… ….? ” என்று பெருமூச்சு விட்டபடியே இட்லி அரிசியையும், உளுத்தம் பருப்பையும் கழுவி கிரைன்டரில் போட்டாள்.

தலையாட்டிக்கொண்டு கிர்ரென ஓடத்தொடங்கியது கிரைண்டர். அந்தச் சத்தத்திற்கு எகிறி இரண்டடி பின்னால் போன கிளி… அங்கிருந்தே அவளையும், கிரைண்டரையும் மிரட்சியோடு பார்த்தது.

“கிளியக்கா… நானு எவ்ளோ ஃபீலிங்கா உங்கிட்ட பேசிகினு இருக்கிறங்… எதுனா வாயத் தறக்கறியா நீ…? ஊமக் கோட்டாங் மாதிரி பார்த்துகி்னு இருக்கற…?” என்றாள் பொய்க் கோபத்தோடு. அப்போதும் அது அப்படியே தான் பார்த்தது.

“போடி… கிளின்னா கூடக்கூட பேசும்னு சொல்வாங்க… நீ எங்க பேசற…? உன்ன புட்ச்சாந்து இப்டி உள்ள வெச்சிட்டாங்கன்னு கோவமா..?” என்றபடி அதைத் தொடப் போனாள்.

சட்டென்று எகிறி பின்வாங்கியது.

“வந்து ஒரு மாசம் ஆவுது… இன்னும் என்ன நம்பமாட்டியா…?” என்று சற்று கோபமாகவே கேட்டாள்.

அப்போது வீட்டுக்கு வெளியில் “கீச் கீச் கீச்….” என்று இரண்டு கிளிகள் கத்திக் கொண்டு பறந்தன.  அந்த சத்தத்தைக் கேட்டதும் தலையை உயர்த்திய கிளி “கீச் கீச் கீச்…” என்று அடித் தொண்டையிலிருந்து கத்தியது. மிகச் சத்தமான கத்தல். அதைச் சற்றும் எதிர்பாராத ரேவதி அதைப் பார்த்து முறைத்தாள்.

“பாத்தியா… நானும் ஒரு மாசமா உங்கிட்ட பேசிகினு இருக்கறங்… ஒரு வார்த்த பதிலு பேசல நீ…  ஆனா உங்க ஆளுங்க வெளிய கத்தறதக் கேட்டதும் பதிலுக்குக் கத்தற… இன்னா இருந்தாலும் நாங்க வேற… நீங்க வேற தான…?” என்றாள்.

மீண்டும் கண்களைச் சிமிட்டி அவளை அமைதியாகப் பார்த்தது கிளி.

“ம்… நானு சொல்றது எதுனா புரிதா உனுக்கு…? ஏதோ இப்டி உங்கிட்ட பேசணும்னு தோணுது… ஆனா நீ தலையத் திருப்பிகினு நிக்கிற… அதுக்கு இந்த செவுரு கூடவே பேசலாம் நானு…” என்றாள் வருத்தத்தோடு.

ஒரு அடி முன்னே தத்திக் குதித்த கிளி, பின்னர் மீண்டும் பின் வாங்கி பழைய இடத்திலேயே நின்றுகொண்டது.

 


      மேலும் ஒரு மாதம் கழித்து ஒரு நாள்… எல்லோரும் கிளம்பிய பிறகு சாப்பிட நான்கு இட்லிகளோடு கூடத்தில் உட்கார்ந்தாள் ரேவதி. தலைக்குக் குளித்திருந்தாள். மூன்று நாள் தொல்லை. உடலும் மனசும் சோர்வாக இருந்தன.

கிளியுடனாவது பேச்சுக் கொடுக்கலாம் என “கீ கீ கீ…” என்று கூப்பிட்டாள். வழக்கமாக அவள் சாப்பிடும் போது கூடத்துக்கு வரும் கிளி அவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருக்கும். ஆனால் அன்று வெளியே வரவே இல்லை.

மீண்டும் “கீ கீ கீ…” என்றாள்.  ம்ஹீம்…

ஒரு வேளை அதற்கும் மூன்று நாளோ…?

பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அது உண்டா…? இருந்தால் அவை எப்படி சமாளிக்கின்றன….? அந்த இரவுகளிலும் இவரைப் போல மூர்க்கமாக…. அதன் துணைகளும் தொல்லை கொடுக்குமா…? அந்த வலியோடு சேர்த்து இந்த வலியையும் அவை எப்படிச் சமாளிக்கும்…? தன்னைப் போல அமைதியாகப் பல்லைக் கடித்துக் கொண்டு கிடக்குமா…? தன்னைப் போலவே கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுமா…?

யோசனையோடு சாப்பிட்டு, காலையில் விழுந்த சாமான்களைக் கழுவி வாசலில் கவிழ்த்துவிட்டு, அழுக்குத் துணிகளை ஊறப் போட்டாள். இட்லிக்கு அரிசியையும் பருப்பையும் ஊற வைத்தாள். துணிகளைத் துவைக்கத் தொடங்கினாள்.

துணிகளைப் பிழிந்து மொட்டை மாடியில் உலர்த்திவிட்டுக் கீழே வந்த போது பிற்பகல் இரண்டரை மணி. பெரும் சோர்வோடு சோற்றைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்ததும் அவளுக்கு மீண்டும் கிளியின் நினைவு வந்தது.  “கீ… கீ” என்றாள். வரவே இல்லை.

என்ன ஆனது…? காலையிலிருந்து கண்ணிலேயே படவில்லையே. ஒருவேளை உடம்பு சுகமில்லையோ. எழுந்து போய் பீரோவின் கீழே குனிந்து பார்த்தாள்

இருட்டில் எந்த அசைவும் இல்லை. டார்ச் அடித்து உள்ளே பார்த்தாள். வெறுமையாக இருந்தது. திக்கென்றது. சமையலறை, பூஜை அறை, கழிவறை எனத் தேடினாள். எங்கும் இல்லை.        காம்பவுண்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கூடத் தேடினாள். எங்குமே இல்லை.

ஒரு வேளை கவனக் குறைவாக கதவும் கேட்டும் திறந்திருந்து… அந்தச் சமயத்தில் தத்தித் தத்தியே வேலிக்குப் போய் விட்டிருக்குமோ…? அவ்வளவு தூரம் போவதற்குள் நாய்கள் விடாதே. வேலியில் போய்ப் பார்ப்பதற்கும் அவளுக்குப் பயமாக இருந்தது. ஆளுயர சாரைப் பாம்பு ஒன்று கோதுமை நிறத்தில் தாம்புக் கயிறு போல சரசரவென அதற்குள் போனதை அவளே ஒரு நாள் பார்த்திருக்கிறாள்.

அய்யோ… பாம்புகளிடத்தில் சிக்கியிருக்குமோ….?

அந்த எண்ணம் வந்ததும் அவளது தொண்டையில் ஒரு குண்டூசி சிக்கிக் கொண்டதைப்போல வலி நெருடியது. சாப்பாட்டை எடுத்து மூடி வைத்துவிட்டு சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். மனசு தவிக்கத் தொடங்கியது.

மாலையில் வீடு திரும்பிய பிள்ளைகள் ஏமாற்றத்தில் அழுதன. வெங்கடேசன் அவளிடம் கத்தத் தொடங்கினார்.

வெளியே கும்மிருட்டு. அவராலும் எங்கும் தேட முடியவில்லை. இரவு பிள்ளைகள் சாப்பிடவேயில்லை. வெங்கடேசன் அரை குறையாகச் சாப்பிட்டுப் படுத்துக்கொண்டார். வெறும் வயிற்றுடனே படுத்துக் கொண்டாள் ரேவதியும்.

காலையில் அவர்கள் கிளம்பிப் போன பிறகு, மனதைத் திடப் படுத்திக்கொண்டு வேலிப்பக்கம் போனாள்.  நப்பாசைதான்.

அங்கே ஒரு அசுரனைப் போல நாலாபுறமும் கிளை விரித்து வளர்ந்திருந்த கருவேலம் மரத்தின் ஊடாக ஒரு நுணா செடி வளர்ந்திருந்தது. அதனருகே கப்புச் செடிகள் புதராக மண்டிக் கிடந்தன.  தூரத்திலிருந்தே புதருக்குள் உற்று உற்றுப் பார்த்தாள். காய்ந்த மண்டைகளும், பழுப்பு நிற, பச்சை நிற இலைகளுமாக இடைவெளியின்றி கிடந்தது புதர். ஒரு ஓணான் மட்டும் நுணாச் செடியின் கிளையில் இருந்து தலையை ஆட்டி ஆட்டி அவளையே பார்த்தது. ஒரு நீளமான குச்சியை எடுத்து மண்டைகளை விலக்கிப் பார்த்தாள்.

“கீ… கீ….” என்றாள். அமைதி.  மீண்டும் கீ…. கீ…. என்றாள். மீண்டும் அமைதி. அவளுக்கு மனசு பிசைந்தது. கண்கள் கலங்கின. ஒரு பெருமூச்சோடு எழுந்தாள். மனசில்லாமல் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

அப்போது புதருக்குள்ளிருந்து “கீ… கீ… கீ….” என மெல்லிய சத்தம் கேட்டது.

திடுக்கிட்டுத் திரும்பினாள். மூச்சையடக்கியபடி உற்றுக் கவனித்தாள். மீண்டும் “கீ… கீ….” என்ற மெல்லிய சத்தம். அது கிளியக்காவின் குரல்தான். சட்டென்று கீழே உட்கார்ந்து பார்வையைக் கூர்மையாக்கி புதருக்குள் உற்று உற்றுப் பார்த்தாள்.

நுணாவின் அடி மரத்தின் அருகில் கப்பு மண்டை மறைவில் ஒடுங்கி உட்கார்ந்திருந்தது கிளி. அதன் கண்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்ததும் சட்டென்று அவள் மனசு தளும்பியது. படபடப்பாகப் புதரிலிருந்து ஒரு குச்சியை ஒடித்து உள்ளே நீட்டினாள். அதை வாயில் கவ்விய கிளி அதன் மீது ஏறியது. அப்படியே வெளியே இழுத்தாள். குச்சியில் ஏறி அமர்ந்து கொண்டது கிளி. விறுவிறுவென நடந்து வீட்டுக்குள் வந்தவள் ஹாலில் கிளியை இறக்கி விட்டாள்.

“போடி முண்ட…. ராத்திரிலாம் என்னத் தூங்க உடாம பண்ணிட்டியே… உனுக்கு இன்னா கொற வெச்சேங் நானு… எதுக்கு வெளியே போன…? பாம்பு வாய்ல மாட்னியோ, நாய் வாய்ல மாட்னியோனு மனசு துட்ச்சி போச்சி எனுக்கு…” என்றாள். அவள் கண்கள் கலங்கின.

கடித்தாலும் பரவாயில்லை என்று சட்டென்று கிளியைப் பிடித்து அதன் கழுத்தில் ஆவேசமாய் ஒரு முத்தமிட்டாள்.  நல்லவேளையாக அது கடிக்கவில்லை.  அவள் கைகளுக்குள் இருந்த கிளியின் உடல் மெல்ல அதிர்ந்தது. அதன் இறக்கைகளை மெதுவாக நீவிவிட்டாள். அதன் மெத்தென்ற இறக்கையின் மீதும் ஒரு முத்தமிட்டாள். அவள் கை விரல்களில் கிளியின் கால் விரல் நகங்கள் முள்ளைப் போல குத்தின. இறக்கிக் கீழே விட்டாள். சற்றுத் துரத்தில் போய் நின்றுகொண்டு அவளைப் பார்த்தது கிளி.

“எந்தக் கடவுளு புண்ணியமோ… நீ தப்பிச்சது பெரிய அதிசியம்தாங்…” என்றாள். ஒரு கை நிறைய்ய அரிசியைக் கொண்டு வந்து அதன் எதிரில் தூவினாள்.

அவசரமாக டொக் டொக் என்று அரிசியைக் கொத்தித் தின்றது.

“கூடப் பொறந்த பொறப்பு மாதிரி உன்ன நென்ச்சிகினு கீறங் நானு… ஆனா… இந்த ஊடு, நானு, எம்பசங்க… எதுவுமே வாணாம்னு வெளியப் போய்ட்டியேடி…” என்றவள் பெருமூச்சு விட்டபடி சோபாவில் உட்கார்ந்து கிளியையே உற்றுப் பார்த்தாள்.

“நீ எங்கப் போயி எதுங்கிட்ட மாட்னியோனு அவரு மூஞ்சே சுருங்கிப்போச்சி… உன்ன இப்டி ஊட்ல புட்ச்சி வெச்சதே தப்புன்றாரு… ஆனா அவுரு கூட… இந்தத் தனி ஜெயில்ல கீற என்னப்பத்தி நெனைக்கவே இல்ல தெரிமா…?” என்றாள். அவள் குரலில் இருந்த வலி அந்தக் கூடம் முழுவதும் தவழ்ந்து தவழ்ந்து பரவியது. அவளும் கிளியும் அதனுள் மூழ்கி மூழ்கிக் கரையத் தொடங்கினர்.


மாலையில் மீண்டும் கிளியைப் பார்த்ததும் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட குதூகலம். வெங்கடேசன் பெருமூச்சு விட்டார்.

“எப்டியோ ஒரு கொலக் கேசுல இருந்து தப்பிச்சிட்டோம்…” என்று சிரித்தார்.

அடுத்த ஒரு வாரம் வழக்கமாக ஓடியது. பழையபடி கிளியக்காவிடம் பேச மனசு வரவில்லை ரேவதிக்கு. அதையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அதுவும் வெறுமனே அவளைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தது.

அடுத்த ஞாயிறு காலை பதினோறு மணி. பிள்ளைகள் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். வெங்கடேசன் புத்தகத்தோடு உட்கார்ந்திருந்தார். ரேவதி கிளியை போர்ட்டிக்கோவில் கொண்டு வந்து விட்டாள்.

“டேய் பார்த்துக்க…” என்று வினோத்திடம் சொல்லிவிட்டு உள்ளே போனாள்.

கிளி தத்தித் தத்தி வாசலை நோக்கிப் போனது.

“ஏ… கிளியக்கா… திரும்பி வா… மறுபடியும் வெளிய ஓடிப் போயிடாத….” என்றான் வினோத். அது நடக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தார் வெங்கடேசன். பக்கவாட்டில் கால்களை ஆட்டி ஆட்டி நடந்த கிளி போர்ட்டிகோ தூண்களைக் கடந்து கேட்டை நெருங்கியது.

அப்போது கேட்டுக்கு வெளியே நடந்து போன ஒரு நாய் நின்று திரும்பியது. கேட்டின் சதுரக் கம்பிகளின் ஊாடாக உள்ளே கவனித்தது. கிளியைப் பார்த்ததும் “லொள்…” என்றது.

வெங்கடேசனும், பிள்ளைகளும் திரும்பிப் பார்த்தனர்.

“லொள்…. லொள்….” என மீண்டும் சத்தமாய் குறைத்த நாய் முன் கால்களைத் தூக்கியபடி கேட்டின் மீது தாவியது.

அதைப் பார்த்ததும் அதிர்ந்து போன கிளி சட்டென்று எகிறி மேலே தாவியது. மெதுவாக இறக்கையை விரித்துப் பறந்து போய் காம்பவுண்ட் மீது உட்கார்ந்தது. அப்படி அது பறப்பதை மூவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

“மா… மா… வெளிய வா… கிளி பறக்குது…” என்றான் வினோத்.

அவசரமாக வெளியே வந்தாள் ரேவதி.

மீண்டும் “லொள்… லொள்… லொள்….” என்று ஆவேசமாகக் குரைத்தபடி காம்பவுண்டின் மீது எகிறியது நாய்.

மீண்டும் பயந்து போன கிளி எழும்பி மேலும் பறக்கத் தொடங்கியது. நாய், வினோத், சுரபி, வெங்கடேசன், ரேவதி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வானத்தில் எழும்பிப் பறந்த கிளி “கீச் கீச் கீச்….” என்று கத்திக்கொண்டே கிணற்றுப் பக்கமிருந்த தென்னை மரம் நோக்கிப் பறந்தது. ஐந்து பேருமே தலையை உயர்த்திப் பார்க்க, தென்னை மரத்தையும் கடந்து பறந்து பறந்து வானத்தில் மறைந்து போனது.

”எப்டி பறக்குது…? றக்கைய யாரு பிரிச்சி விட்டது….?” என்று மேலே உயர்த்திய கழுத்தோடு கேட்டார் வெங்கடேசன்.

“அய்யோ… பொதர்ல போய் இருந்துச்சே… அப்ப மண்டையில மாட்டி பிச்சிகினு இருக்குமோ…?” என்றாள் ரேவதியும் படபடப்புடன்.

பிள்ளைகள் கண்களில் ஏமாற்றம் வழிய வழிய வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


திரும்பி வீட்டுக்குள் நுழைந்த ரேவதி கிளி பறந்து போன திசையிலிருந்த சன்னலோரம் போய் நின்று வானத்தைப் பார்த்தாள். தென்னை மரங்களுக்கு மேல் வெள்ளை வெள்ளையாய் பரவிக் கிடந்த மேகங்கள் மட்டுமே தெரிந்தன.

“போய் வாடி கிளியக்கா…” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டாள்.

அவளது மனசுக்குள் ஒரு நிம்மதி பூக்கத் தொடங்கியது. அப்படி ஒரு போதும் இங்கிருந்து தன்னால் பறந்து போய்விட முடியாது என்று நினைத்தபடி… நிதானமாக தன் விரல்களில் ஒட்டியிருந்த செல்லோ டேப்பை பிரித்து எடுக்கத் தொடங்கினாள்.


 • கவிப்பித்தன்

 

3 COMMENTS

 1. கிளியக்கா அருமையான கதை மிகச்சாதரணமாக தொடங்கி விடு விடுவென வளர்ந்து நல்ல கதையாக முடிகிறது. இது தனிப்பட்ட ரேவதி என்கிற பெண்ணின் பிரச்சினை அல்ல. அவள் பெண்களின் பிரதிநிதி.வீடே பெண்களுக்கான திறந்த வழி கொண்ட கூண்டு.அதை கூடு என நினைக்க வைப்பதில்தானே ஆண்களின் சாமார்த்தியம் இருக்கிறது.கதைசொல்லும் எழுத்தாளனில் இருந்து கலைஞனாகும் பாதையில் பயணிக்கும் கவிப்பித்தனுக்கு வாழ்த்துக்கள்

 2. கிளியக்கா சிறுகதை அருமை

  கிளி போன்ற உயிரினங்களை பார்க்கலாம் ! ரசிக்கலாம் !
  உபத்திரவமின்றி உணவு கொடுக்கலாம்!

  எனது மகன் வளர்த்த தேன்சிட்டு காக்கையின் கடிவாயில் சிக்கி உயிரிழந்ததை பார்த்த என் மகனை தேற்றியது பெரும்பாடாகி போனது.

  இந்த கதையில் ரேவதியின் கருணை மனதால் கிளிக்கு சுதந்திரம் கிடைத்தது மகிழ்ச்சி.

  உயிரினங்களுக்கு
  உணவு
  தண்ணீர்
  சுதந்திரம்
  கொடுப்போம் !

  வாழ்த்துக்கள் கவிப்பித்தன்

 3. வானத்தை வரைந்த சிறகு படித்தேன் எங்கே சோகத்தில் முடிப்பாரோ என படபடத்தது மனம் செலோ டேப்பை பிரித்த பிறகே சிறகைப்போல் லேசானது மனம் தினம் ஒரு கதைக் கிட்டுமோ?!..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.