அவள் நர்ஸ் ஆகிறாள்

வழமையாக காலை ஐந்தரை மணிக்கு கண் விழித்துப் பழகியது அவ்னி வீட்டு நாய். எப்போதும் அவ்னி சுத்தமாக இல்லாவிட்டாலும் நாயைச் சுத்தமாக வைத்திருப்பான் கழுத்தின் அளவுக்கு ஒரு வெள்ளி வளையம். ஏழாயிரத்து ஐந்நூறு ரூபாய் செலவில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் செய்து மாட்டிவிட்டிருந்தான்.

வீட்டிற்கு கொஞ்சம் அடுத்தாற்போல் அமைந்திருக்கும் அழகிய கடற்கரைக்கு நாயையும் கூடவே அழைத்துக்கொண்டு பத்து நிமிடத்திற்குள்; சில நேரம் ஓட்டமும் நடையுமாக எட்டு நிமிடத்திற்குள் சென்றுவிடுவான் அங்கிருக்கும் மலைக் குன்றுகளில் ஒன்றை தனது வாடிக்கை இருப்பிடமாக்கியும் கொண்டான். சூரிய உதயத்தைப் பார்த்து ரசிப்பதில் அவனுக்கும் நாய்க்கும் கொள்ளை விருப்பம்.

அன்று வழமைக்கு மாறாக கடற்கரையில் ஒதுங்கிக் கிடந்த பிணம் ஒன்றைக் கண்டதும் கொஞ்சம் முன்னேறிச் சென்று கடற்கரையை அண்டியுள்ள வீட்டுக்காரர்களையெல்லாம் சத்தம் வைத்து கூப்பிட்டு முடித்தான். இவனுக்கும் அந்தக் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதால் இவன் முகத்தை கொஞ்சமும் பயமில்லாமல் வைத்துக்கொண்டான்.

கடற்கரையில் மக்கள் கூடிவிட்டார்கள். கூட்டத்தில் இருந்த யாரோ அரசியல் அதிகாரிகளுக்குப் பாடுபடும் ஒருவர் போலீசுக்கு தகவலை அறிவித்திருக்கிறார். தளத்திற்கு போலீசு வந்ததும் பொது ஜனங்கள் விலகி வழிவிட்டனர். விஞ்ஞானிகளைப் போன்று தன் மூளையை பிரயோகித்துக் கொண்டு நின்ற ஒரு போலீசு பெரியவர்; முகம் குப்புறக் கிடக்கும் பிணத்தை மற்றுமொரு போலீசின் உதவியுடன் கையில் ஆளுக்கொரு தடியினை எடுத்து பிணத்தினை மல்லாத்தி விட்டார்கள்.

அது மனித உருவிலான பொம்மை என்று அதுவரைக்கும் தெரியாமலே போய்விட்டது.

பொம்மையை யாரு கொலை செய்திருப்பார்? என்று போலீசு ஆழ்ந்து சிந்திப்பது போலிருந்ததால் அவ்னி ஜனக் கூட்டத்திலிருந்து மெல்ல நாயுடன் நழுவிக்கொண்டு சென்றான். கொலை செய்தவன் கடலுக்குள் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தவர் போல் கூட்டத்தில் நின்ற மற்றைய போலீசு சொல்ல வாயெடுத்தாற்போல் நிற்கிறார்.

அவ்னிக்கும், நாய்க்கும் அன்று சூரியன் உதயமாகவில்லை.

நாயின் கழுத்தில் கிடந்த வெள்ளி வளையத்தை எட்டிப் பிடித்து மெதுவாய் இழுத்து தலையைத் தடவி விட்டான்.

பொம்மை ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? மனிதன் ஏன் பொம்மை போன்று தற்கொலை செய்ய வேண்டும்? என்ற கேள்விகள் அவன் மனதில் எழுந்துவிட்டன.

அன்று நல்ல நண்பகல். ஒரு சுண்டு தாமரைக்காயை தன் சின்னஞ்சிறிய பாவாடைக்குள் தாங்கிக்கொண்டு முழங்கால் தெரிய பாவாடையை உயர்த்தி அவ்னி அருகில் வந்து நின்றாள்  குழந்தை சிமாஸ். தாமரைக் காயை உடைத்து அதன் கோதுகளை சீமாவின் கை விரல் நகங்களிலும் கால் விரல் நகங்களிலும் கவிழ்த்துவிட்டான் “தாமரை மருதாணி பாரேன்..” என்று கைகளையும், கால்களையும் ஆட்டி இடுப்பையும் நெளித்துச் சிரித்துவிட்டு

“ஏன் நீங்க சூரியன பீச்சுக்குப் போய் பாக்கிறீங்க?..இங்க வரும்தான..அப்போ பாத்துக்கலாமில்ல..”என்றாள்.

அதற்கு அவ்னி

“அதுக்காக இல்ல சீமா அதுவா வந்து நம்மளப் பாத்தா சுடும். நாம போய் அத பாத்தா சுடாது சரியா.” என்று சொன்னதும். “ஓ…அப்புடியிருக்கா” என்றாள் சீமா. அவளுக்கு இன்னும் ஐந்து வயது கூட ஆகவில்லை ஆனால் அர்த்தமாகவும், ஆழமாகவும் பேசுவாள். தாயில்லாமல் அவளை வளர்ப்பதில் இதுவரை அவ்னியின் குடும்பத்திற்கு எந்த சிரமமும் ஏற்பட்டதில்லை.

வெள்ளி மாமா. 

ஊருக்கே தெரிந்த பெயர். நல்ல சுத்தமான வெள்ளி ஆபரணங்கள் இங்கே நியாய விலையில் கிடைக்கும்! என்ற வாசகங்களுடன் ஒரு சிறிய கடை.

அதன் முதலாளி வெள்ளி மாமா. மகள் றிஜா. வாட்ட சாட்டமான கறுப்பி. மூக்கின் நுனியில் சிறு தேமல். சிரித்தால் தெரியும் வெள்ளைப் பற்களின் மின்னல் ஔி. 

ஒரு வழியா முண்டியடிச்சு கியூவில் நின்றால்தான் அந்த அரசாங்க ஆஸ்பத்திரியில் பத்துக்குள் நம்பர் எடுத்து  றிஜாவின் சிரித்த முகத்தைப் பார்த்து காய்ச்சல் தலையிடி தடிமனுக்கு டாக்டர் கொடுக்கும் மருந்துத் துண்டை நீட்டி மருந்து எடுக்கலாம். என்ற ஒரு காலத்தையும் இந்த ஊர் மக்கள் கடந்திருக்கிறார்கள். 

றிஜா நர்ஸ் வேலையை கைவிட்டுத்தான் நிஜாம் டாக்டரை கைப்பிடிக்கப்போகும் கனவில் மிதந்தாள்.  ஆழ் கடலில் மீன்களைக் கண்டு பிடிப்பதற்காக வலையை மூழ்கடித்துக்காட்டும் ரெஜிபோம் பந்துகளைப் போன்று அவள் முகத்தில் மகிழ்ச்சி மிதந்து கொண்டிருந்தது.

யாரும் எதிர் பார்த்திருக்கவில்லை அந்த அரசாங்க ஆஸ்பத்திரி இத்தனை வேகத்தில் நிஜாம் டாக்டரையும், நர்ஸ் றிஜாவையும் இழக்கும் என்று. திருமணத்திற்குப் பிறகு ஆஸ்பத்திரிப் பக்கம் அவர்கள் வருவதேயில்லை. தன் முதல் பிரசவத்தை கணவனே பார்க்கும் போது இந்தப் பாக்கியம் எல்லாப் பெண்களுக்கும் கிடைக்கட்டும் என்று வலியோடு வலியாக பிராத்தித்துக் கொண்டாள் றிஜா. குழந்தை கிடைத்து ஒரு வாரத்திற்குள் டாக்டர் நிஜாம் அவுஸ்ரேலியா பயணமானார். ஆறு மாதத்திற்குப் பிறகு தன்னை மாத்திரம் அவுஸ்ரேலியாவுக்கு எடுப்பதாக தொலை பேசியில் உறுதி மொழி செய்து கொண்டார்.

வீட்டில் குழந்தை மொழி பழகிக்கொண்டு நாட்களை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் றிஜாவுக்கு ஆறு மாதங்கள் மறைந்தது கூட ஞாபகமில்லாமல் போயிற்று.  குழந்தையைப் பிரிந்து ஆவுஸ்ரேலியா செல்வது; ஒரு யுத்த பூமியில் தன் குழந்தையை வீசிவிட்டுச் செல்வதுபோல் இருந்தது அவளுக்கு. தண்ணீருக்கும் இதயம் இருக்கிறது என்று  அதற்குள் வாழும் உயிர்களுக்குத் தெரியும். தண்ணீரை வீணாக்குபவர்களுக்குத் தெரியாது. என்று அவளுக்குள் எழுந்த தத்துவ வார்த்தைகளை சத்தமில்லாம் முணுமுணுத்துக் கொண்டாள்.

“ராத்தா சீமாவ ஏங்கிட்டக் கொடு ஒரு கொறயும் இல்லாம நான் பாத்துக்கிறன். நம்ம உம்மா இருக்கா, வாப்பா இருக்காங்க இன்னும் ஏன் பயப்பிடுற?” என்று தன்னாலான தைரியத்தைக் கொடுக்கும் தம்பி அவ்னிக்குப் புரியுமா உயிரோடு இதயத்தை அறுத்தால் உண்டாகும் வலி இது என்று. மனதுக்குள் பேசிக் கொண்டு அழுதாள். வெள்ளி மாமாவுக்கு இதில் உடன்பாடில்லை. “குழந்தையையும் எடுத்துக்கொண்டு போவதுதான் சரி” என்று சொல்லிக் குறுக்கிடுவார். அப்படியே நடக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பார். வாழ்க்கையில் அவர் கடந்த தூரம் இப்படித்தான் அவரை பிரார்த்திக்க வைத்தது. 

விதியை வெல்ல முடியால்

அவுஸ்ரேலியா போனதுதான் போனாள் மணிக்கொரு தரம் தொலை பேசியில் இருப்பாள் றிஜா. அதுவும் வீடியோக் கால். இப்படியே ஆறு மாதங்கள் காற்றலையில் மிதந்தது குழந்தை, மேகத் திடல்களில் உறங்கியது என்னவோ வாஸ்தவம்தான்.

இப்போது…

தாயின் காற்றலை முத்தங்களையும், அரவணைப்பையும் சீமா  இழந்து மூன்று வருடங்களுக்கும் மேலாகின்றன. 

அத்தி பூத்தாற்போல் ஐந்து நிமிட பாசம். இப்போதெல்லாம் சீமா அந்த குறுட்டுப் பாசத்தை எதிர் பார்ப்பதுமில்லை. 

தாமரைக் காயின் கோதுகள் அணிந்த தன் பச்சை நகங்களால் வெள்ளி மூத்தாப்பாவை பயமுறுத்தி விளையாடிய சோர்வில் கட்டிலில் கிடந்து உறங்கிவிட்டாள். 

“நாளை திகதி இருபத்தி மூனு” என்று கலெண்டரைப் பார்த்து உச்சரித்துக் கொண்ட வெள்ளி மாமாவின் காதுகளில் பாய்ந்தது நாயின்

“வொவ்…வொவ்…வொவ்….வொவ்…வொவ்” சத்தம்.

“டே.. அவ்னி…மகே..ன்…உன்ர நாயின்ட வாய கொஞ்சம் அடக்கு..சீமா ஒறங்குது…” என்றார் வெள்ளி மாமா. நாயின் கழுத்திலிருந்த வெள்ளி வளையத்தைப் பிடித்து இழுத்து  தலையைத் தடவி விட்டான் அவ்னி. கழுத்தில் இருக்கும் வெள்ளி வளையம் நாயைக் கடித்து விட்டதோ. இல்லை அதைக் களவாட யாரும் திருடன் வந்து பதுங்கியுள்ளானோ. என்று சில வினாடி மனதைக் குழப்பிக்கொண்டு நாயின் அருகில் நின்றிருந்தான். நாயோடு கூடவே இருந்ததால் வெள்ளி வளையத்திற்கு பற்கள் முளைத்திருக்குமோ என்று சந்தேகம் எழுந்தவன்போல் மறுபடியும் மறுபடியும் அந்த வெள்ளி வளையத்தை தடவிப் பார்த்துக்கொண்டான்.

இப்போது இரவு எட்டு மணி.

வெள்ளி மாமா விளாம்பழத்தை தின்ணையில் தட்டி உடைத்து அதனுள்ளிருக்கும் கறுப்பு நிறப்புளியை விரல்களால் கிள்ளி எடுத்து பீங்கானுக்குள்ளிருக்கும் தீஞ்ச சோற்றுடன் கலந்து, மனைவி அஸீலா கொண்டுவந்து கொடுத்த தேங்காய்ப் பாலில் சிறிதளவு ஊற்றி கொஞ்சம் சீனியும் இட்டு சோறு நன்றாக நொறுங்குமளவிற்குப் பிசைந்துவிட்டு பேத்தி சீமாவின் அருகில் சென்று பார்த்தார். விளாம்பழ கரையல் என்றால் விரும்பிச் சாப்பிடும் சீமாவை விட்டு தான் மட்டும் சாப்பிட மனமின்றி

“மகள் மகள் சீமா எழும்புடா கண்ணு வாப்பா உங்களுக்கு விளாம்பழ கரையல் சோறு கொண்டந்திரிக்கன் கொஞ்சம் தின்னுட்டு படுரா கண்ணு..”

கெஞ்சிக் கூத்தாடி நாலு வாய் ஊட்டிவிட்டுத்தான் திரும்பினார் வெள்ளி மாமா.

“வொவ்..வொவ்” நாயின் குரைப்பு தொடங்கிவிட்டது. இப்படி ஒரு நாளும் அவ்னியின் நாய் குரைத்ததில்லை.

விளாம்பழக் கரையலோடு இரவுச் சாப்பாட்டை முடித்த வெள்ளி மாமா வாயுக்குள் இருக்கும் மிச்சப் பற்களைச் சுத்தம் செய்துகொண்டு வீட்டு கதவு நிலையில் சாய்ந்த படி நின்றார். நாயின் குரைப்புச் சத்தத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாமல் அவன் திரும்பவும் அதன் தலையைத் தடவி விட்டான்.

கொஞ்சம் முனகலுடன் அமைதியாகி முன் கால்களை நீட்டி தலையை கால்களுக்கு மேல் வைத்து கண்களை மூடி மூடித் திறந்தது. 

காலை ஐந்து மணி.

நாய் கண் விழிக்கவில்லை. ஏனென்றால் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லையே.

ஐந்து இருபத்தைந்துக்கு வெளியே வந்து கதவைத் திறந்த  அவ்னி மலைத்துப்போனான். றிஜா ராத்தா வாசற் படியில் தலைக்கு ஹேன் பேக்கை வைத்துக் கொண்டு உறங்கிக் கிடப்பதைக் கண்டு; உடல் சிலிர்த்து, தலை விறைத்துப்போய் “ராத்தா…”என்று சத்தமாக கூறிக் கொண்டு வாசற்படியில் அமர்ந்துவிட்டான் அவ்னி. றிஜா கண் விழித்தெழுந்தாள். பார்ப்பதற்கு ஒரு ரக பைத்தியகாரியின் கோலத்தில் இருந்தாள். றிஜாவின் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றதும்  வாப்பா வெள்ளி மாமா, உம்மா அஸீலா கண் விழித்தெழுந்து விர் என வண்டு போல் வீட்டின் மெயின் ஹாலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

றிஜாவைக் கண்டதும் துடித்துப் போனார்கள். இத்தனை வருடமும் அவுஸ்ரேலியாவில் அவளுக்கு என்ன நடந்தது என்பதை கண்ணீருடன் கொட்டித் தீர்க்கிறாள். நிஜாம் இன்னொரு திருமணம் செய்துகொண்டு றிஜாவை வீட்டு வேலைக்காரியாக்கி, மிரட்டி வைத்திருந்த கதையையும், தன் இரண்டாவது மனைவியிடம் றிஜா வேலைக்காரியாகத்தான் இங்கு வந்திருக்கிறாள் அவள் நம் வீட்டு வேலைக்காரி என்றும் நிரூபித்து வாழ்ந்து வந்த கதையையும், அங்கிருந்து சிரமப்பட்டு தனியாக இலங்கை வந்த கதையையும் கூறி முடித்து மனது கொஞ்சம் காற்ற(றை)ப்போல் இருப்பதையும் உணர்ந்தவாறு “உம்மா..என்ற மகள்…” என்று கண்கள் இரண்டையும் உறு(ரு)ட்டி வீடெங்கும் அலைய விட்டாள். 

“அவள் படுக்கிறாள் இப்ப எழுப்ப வேணா..உங்கிட்ட வந்து அண்டிப் பழக கொஞ்சம் நாள் எடுக்கும்” என்றார் வெள்ளி மாமா.

“உனக்கு என்ன ஆறுதல நாங்க சொல்றதென்டு தெரியல..   இந்த நாய்க்கு தெரிஞ்சிதானிருக்கி நீ வரப்போற என்டு. இரவெல்லாம் குரைச்சது..இதுக்குத்தானா?..

உன்ன பெத்த எங்களுக்குத் தெரியாம போச்சேடி.. நீ உசிரோட வந்து சேந்திட்டாய் அது போதும்டீ மகள…அவன அல்லாஹ் பாத்துக்குவான்..அழாதடீ…கண்ணத் தொடச்சிக்கோ..இது நம்ம ஊராளுகளுக்குத் தெரிஞ்சா ஒன்ட பத்தாக்கிப் பேசுவாளுகள் யாரிட்டயும் சொல்லிடாத..” என்று தன் புடவை முந்தானையால் றிஜாவின் முகத்தைத் துடைத்துவிட்டாள் உம்மா அஸீலா. 

திரும்பவும் பிறந்த மாதிரி ஒரு புத்துணர்வு. அவுஸ்ரேலியாவில் பட்ட கஸ்ட்டமெல்லாம் மறைந்தாற்போல் முகம் ஒரு மலர்ச்சியை ஏற்படுத்தினாலும் றிஜாவின் மனதின் ஓரத்தில் பட்ட துன்பமெல்லாம் குடிகொண்டுதான் இருக்கிறது. பெண் மனதும் அப்படித்தானே என்று தன்னைத் தேற்றிக் கொண்டாள். அடுத்து வந்த சில மணி நேரத்திற்குள் இந்த(ச்) செய்தி ஊருக்குள் பரவிவிட்டது. வீட்டிற்கு வந்து விசாரித்த மைமுனாவிடம் சிரித்த முகத்துடன் அஸீலா உம்மா பதில் சொல்கிறாள். “அவளு மகள இனியும் பிரிஞ்சி இரிக்க முடியாதென்டு வந்துட்டாள். எத்தனைக் கென்டு தாய் மகள பிரிஞ்சி வாழுற சொல்லுங்கோ பாப்போம்” வாய் அடைத்துப்போய் சற்று நேரம் கழித்து திரும்பிவிட்டாள் மைமுனா.

“உம்மா..ராத்தா எங்க போயிட்டா..காணல..வீட்டில..” என்று விசாரித்தவாறு விறு விறுரென(விறுவிறுவென) கடற்கரைக்கு சென்று  கரையோரமாக தேடித்திரிந்து; ராத்தா சாக முடிவு எடுத்து விடுவாளோ என்ற கவலையுடன் வீடு வந்து சேர்ந்த அவ்னிக்கு உயிர் வந்தாற் போலிருந்தது. றிஜா குளித்துவிட்டு இளம் வெய்யிலில் நின்று தலை துவட்டுகிறாள். 

இரண்டு மூன்று நாட்களாக அவ்னி மட்டும் கடற்கரைக்குச் செல்வதும், சூரிய உதயத்தைப் பார்த்து ரசித்த அவன் மனம் கடற்கரையோரத்தையே வெறித்து வெறித்து பார்க்கச் சொல்வதும், றிஜா ராத்தா பிணமாக மிதந்து வந்துவிடுவாளோ என்ற பயமும் தொடர்ந்தது.

“சீமா குட்டி சீமா உம்மாகிட்ட வாடா…” மகளை அன்பாக கூப்பிட்டபடி 

“உம்மா நான் திரும்ப நர்ஸ் வேலைக்குப் போக இருக்கன்” என்றாள்.

“என்னடி மகள சொன்ன..என்ற நெஞ்சில பால வாத்த..உனக்கு சந்தோசமென்டா போ.. நீ ஒழச்சித்தான் ஆகனுமென்டு இல்ல..அதயும் புரிஞ்சிக்கோ..சரி..” என்றாள் ஆறுதலாக அஸீலா.

“ராத்தாட முடிவுதான் செரி உம்மா.. அவட மனசிக்கும் கொஞ்சம் ச்சேஞ்சா இருக்கும்”என்று சொன்ன அவ்னி ராத்தாட மனசு ஒரு புறம் இருக்க தன் மனதுக்கு ஆறுதலா(க) இருப்பதை மெதுவாக உச்சரித்துக் கொண்டான். வெள்ளி மாமாவும் மகளை மீண்டும் அந்த நர்ஸ் உடையில் பார்க்கத் துடிக்கும் மனதுடன் காத்திருக்கிறார்.

“வாழ்க்கையில ஏற்படுற தோல்விகள நான் தாங்கிக்க பழகிட்டன்..என்ற இந்த நெலம வரும் எந்தப் பொண்ணும்..எந்த நெலம என்ன எப்புடி வந்தாலும் வாழனும்.. இவனுகள் முன்னால வாழ்ந்து காட்டனும்..நான் ஒன்டும் பொம்ம இல்ல இறைவன் படைபாபில(படைப்பியில _படைப்பில்) உயர்தர படைப்பு மனிதப் படைப்பு..நீ..நெனச்சிருப்படா தம்பி ராத்தா செத்துபோக முடிவு எடுத்துடுவாளோ..என்டு..ம்..” ஒரு நிமிடம் அவ்னியைப் பார்த்தும் தன் ஆதங்கத்தைக் கொட்டுகிறாள் றிஜா.

“தைரியமாத்தான் என்ன வாப்பா வளத்திருக்கார்..” என்று சொல்லிவிட்டு சிவந்த கண்களுடன் நின்றாள். 

றிஜாவின் துணிச்சல் பேச்சில் மனம் நனைந்து கொண்ட அவ்னி மற்றும் அஸீலா, வெள்ளி மாமா எல்லோரினதும் கண்களுக்குள் சிறிது கண்ணீர் வந்து நின்றாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மகள் சீமாவுக்கு அருகில் நெருங்கி நின்று அவள் கன்னத்தை தடவிக்கொடுத்தாள் றிஜா. சீமா நின்றபடி அண்ணார்ந்து றிஜாவைப் பார்த்து சிரித்தாள்.

 

-அகமது ஃபைசல்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.