பா.திருச்செந்தாழை கவிதைகள்.

 • ரகசியங்களற்றவனின்
  நிழலில்
  கண்ணாடி வளர்கிறது.
 • எப்படியாயினும்,
  இதற்கு ரகசியமெனப் பெயரிட
  நான் இன்னொருவருக்கும்
  இதனை தத்துக்கொடுக்க வேண்டியதிருக்கிறது.
 • ரகசியங்கள் பெறுமதியானவை
  என்பதிலிருந்து
  வெளியேறிவிட்ட என் புதுவயதில்
  நான் சிறிய காற்றாடிகளை
  நீண்ட தொலைவில் செலுத்தும்
  ஞானம் பெற்றேன்.
 • எல்லாவற்றிலிருக்கும்
  ரகசியங்களை
  என் வெகுளித்தனம் சுரண்டி விலக்குகிறது.
  அங்கே குருதியற்ற ஓருடல் வெளிப்படுகிறது.
  எடையிழந்த எல்லாமும்
  மிதக்கத்துவங்குகின்றன.
 • ரகசியமற்ற ஈருடல்கள்
  புணர்ந்து கொண்டிருக்கின்றன.
  இப்போது
  கண்ணாடி உடல்கள்
  பிறக்கும் பருவம்.
 • கடவுள் என்னை சபித்தார்.
  ரகசியங்கள் ஆரஞ்சின் தோல் போன்றவை எனச்சொல்லியபடி.
  தீவினைகளற்ற வாழ்வில்
  நீ இருக்கும்போதே இறப்பாய் என்றார்.
  நான் ஆற்றில் மிதந்து செல்கின்ற
  சடலத்திற்கு
  எவ்வளவு மீன்கள்
  எவ்வளவு மீன்கள்
  என முனங்கினேன்.
 • ரகசியங்களற்ற ஒன்றை
  நான் வரைந்தேன்.
  இப்போது
  அது உங்களைப் பார்ப்பதை
  நீங்கள் ஏன் உணரவேயில்லை.

-பா.திருச்செந்தாழை

Previous articleஅவள் நர்ஸ் ஆகிறாள்
Next articleசெண்பா சித்தி
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.