செண்பா சித்தி

“வீட்ட  அலங்கோலம் பண்ணி வைச்சி இருக்கான், ஹாலுகுள்ள ஷூ கிடக்கு. எத்தனை டைம் சொல்றது ஷூ போட்டு வீட்டுக்குள்ளே வராதேன்னு”

இப்போ தான் கொஞ்ச நேரம் முன்ன முழிப்பு தட்டுச்சி. எழுந்திரிக்க மனசு இல்ல. ஆனா காலங்காத்தால சித்தியோட ராமாயணம். தினமும் ஏதாவது சொல்லிட்டே இருக்கா. இன்னிக்கி சரியா குடுக்கறதுல என் பக்கமே திரும்பக்கூடாது.

“எழுந்திருச்சி வர நேரத்தப் பாரு. முகத்தப் பாருங்கம்மா காட்டான் மாறி தாடி வளர்ந்து கிடக்கு. நம்ம குடும்பத்துல இப்படியா?”

“விடு செண்பும்மா. நேத்து லேட்டா தான் வந்தான். காலைலயே அவனை திட்டாத”

“நைட் எல்லாம் ஓயாம சிகரெட் வேற. என் பெட் ரூம் வர நாறுது”

“…”

“இப்படி நீங்க குடுக்கிற செல்லம் தான்ம்மா. பேரன்னா இவ்வளவு இடம் கொடுக்கனுமா?”

“சைய். காலங்காத்தாலே, சும்மா நாய் போல குலைச்சிகிட்டு. உங்கள பாக்கவே பிடிக்கல நீங்களும் உங்க மூஞ்சியும்” என்ற போது செண்பா சித்தியின் முகம் மிகவும் சுருங்கிப்போனது. பதிலேதுவும் சொல்லாமல் தோல்ப்பையையும், மதிய சோற்று டப்பா வைக்கப்பட்டிருந்த பையையும் எடுத்துக் கொண்டு நகர்ந்தாள். அவள் மாடிப் படியிறங்கி போன போது செருப்பு சத்தம் பதட்டமாய் “டப்டப்” என்று கேட்டது. அவள் போன பின்னும் ஆத்திரமடங்கவில்லை. கையில் கிடைத்த புத்தகத்தை தூக்கி ஏறிந்தேன்.

“ஏன்டா இப்படி தீயள்ளி கொட்ர அவ மேல? அங்கே வேல கிடைக்கல. குடும்பத்தை விட்டு இவ்வளவு தூரம் வந்து இருக்கா, பொண்ணு, புருஷன் தனியா கஷ்டபடறாங்கன்னு கவலை”

“அவங்க குடும்ப கவலைன்னா. என்ன ஏதாவது நோண்டிட்டே இருக்கனுமா?  நான் அவங்க வீட்டுல இருக்கும் போதும் இப்படி தான் ஆபீஸ் டென்சன் எல்லாம் என் மேல காட்டுவாங்க. இதுக்கு தான் இங்க வர வேண்டாம்ன்னு நினைச்சேன்”

“உன் நல்லதுக்கு தானே சொல்றா. சிகரெட் அதிகம் பிடிச்சா உடம்பு கெடும்ன்னு தானே சொல்றா”

“ஆமா ரொம்ம்ப தான் அக்கரைறை. நைட் தூக்கம் கெடுதுன்னு குத்தி காட்டாறாங்க”

“அப்படியில்ல.”

“நீங்க கூட அவங்களுக்காக தானே இங்கே வந்து இருக்கீங்க எனக்குன்னா வருவீங்களா? யாருக்கும் என் மேல பாசமில்ல. சுயநலம் பிடிச்சவங்க”

“எனக்கு தேவை. அக்கடான்னு கிராமத்துல இருந்தா இந்த ரோதனை எல்லாம் எனக்கு எதுக்கு”

“ஆமா எல்லோருக்கு என்னால தான் ரோதன” எட்டி உதைத்ததில் முக்காலி ஏதுவும் செய்ய முடியாது சுவரில் மோதி சத்தமெழுப்பி தனது இயலாமையைக் காட்டியது.

விடுவிடுவென்று குளியலறை பக்கம் நடந்தேன். முகத்தில் தண்ணீரை அள்ளி அறைந்து கொண்டேன். இந்நேரம் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையம் பின்புறமிருக்கும் பக்கிங்ஹாம் சாக்கடையைத் தாண்டி செண்பா சித்தி போய்க் கொண்டிருப்பாள். இப்போதெல்லாம் அந்தச் சாக்கடையில் ஓடும் நீரின் நாற்றம் நுகரும் போது சித்தியின் நினைவே வருகிறது. அவள் குணம் மாறி சாக்கடையாகி விட்டது. அவளால் பைகளில் சுமையும், சோற்றுச் சுமையும் எடுத்துக் கொண்டு வேகமாக நடக்க முடியாது. அவள் வேலைக்குச் சேர்ந்த புதிதிலிருந்து கொஞ்ச நாள் அலுவலகம் வரை கொண்டு விட்டுக் கொண்டு தான் இருந்தேன். அவங்க அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு போக வேண்டும். ஐந்து நிமிட தாமதம் என்றாலும் விடுப்பு விழுந்து விடும். கொண்டு விடலாம் பாவம் என்று நினைத்தாலும் சித்தி கண் முன்னால் வந்தாலே ஏதோ தலைக்குள் ஏறிக் கொள்கிறது. இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பிரச்சனை வருகிறது. மூச்சிறைக்க நடக்கட்டும். முன்பெல்லாம் சித்தி அம்மாவைப் போலவே அன்பாக இருப்பாள். ஆனால் இப்போது இங்கே வசிப்பவள் என் செண்பா சித்தியில்லை. ஒருவேளைச் சித்தி சொல்வது போல் நான் தான் அடங்காம ஆணவத்தோடு இருக்கேனா? அவங்க பொண்ணு கிட்ட மட்டும் கொஞ்சி கொஞ்சி பேச வேண்டியது. எனக்கு செண்பா சித்தியை பிடிக்கவில்லை. பக்கிங்ஹாம் கால்வாயின் நாற்றம் நாசியில் ஏறியது.

தண்ணீரைத் திறந்து விட்டு ஜன்னலில் வழியே வெளியே பார்த்தேன், பின்பக்கம் தெரு நன்றாகத் தெரிந்தது. பணக்கார தோரணையோடு இருக்கும் இந்திராநகர் தெருவுக்கும், பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியிருக்கும் அந்தக் குடிசை வீடுகள் உள்ள நீண்ட தெருவுக்கும் செல்லும் வழியை அடைத்துத் தான் நாங்கள் குடியிருக்கும் வீடு இருக்கிறது. அந்தத் தெருவின் ஏதோ ஒரு வீட்டில் திருமண விழாவுக்குக் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கி 200 டெசிபெல் சத்தத்தை பரப்பிக் கொண்டிருந்தது. அந்தத் தெருவில் ஒலிபெருக்கிகள் அலறாத நாட்களே குறைவு தான். ஜன்னலின் வழியே தெரிந்த அந்த சின்ன வீட்டில், தண்ணீர் நிறைத்து வைத்திருந்த பெரிய உருளை குடுவையிலிருந்து, இளவயது பெண் ஒருத்தி அருகிலிருந்த சிறுபையன் மீது நீரை அள்ளித் தெளித்தாள். என் சிறுவயதில் நான் பார்த்த செண்பா சித்தியை போலிருந்தாள் அவள். முகமெங்கும் நீர்த்துளிகள் விழ சிலிர்த்தது அந்த சிறுவன் மேனி. மல்லிகைப் பூவை முகர்ந்தது போல மலர்ந்தது அவன் முகம், செல்லமாய் சிணுங்கினான், அப்போது அவள் அந்தச் சிறுவனின் இடுப்பை கிள்ளினாள், அவன் நெளிந்தான். அவனை இழுத்து மார்போடு அணைத்து முகத்தை அழுத்தித் துடைத்து விட்டாள். அந்தச் சிறுவன் முகம் ஏதோ வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதையுடன் திரிவது போல மயக்கத்திலிருந்து. நடை கூட கொஞ்சம் மிதந்த வண்ணமே இருந்தது. சிறுவயதில் சித்தியுடன் நானும் அப்படித்தானே இருந்தேன். சித்தி கூட இப்படி தான் குளிப்பாட்டி தலை துவட்டிவிடுவாங்க. டிசம்பர் மாசம் அவள் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டால் போதும் புயல் மழையும், சித்தியும் சேர்ந்து பள்ளி விடுமுறையை கொண்டாட்டமாகி விடும்.”எங்க செண்பாக்காக்கு தெரியாத விஷயமே இல்லாடா” இப்படி யாரிடமாவது சொல்லாத நாள் இருக்குமா அந்த காலத்தில்? அதெல்லாம் கனவா? அப்ப அவங்க பேசின எல்லா விஷயமும் சுவாரஸ்யமா இருக்கும். ஆனா இப்போ அது போல எதுவும் இல்லை. பேச்சில் என்ன சமையல் செய்யலாம், துணிமணி எங்க வாங்கனும், தைக்கனும், எவ்வளவு பவுன் சேர்க்கலாம், எங்க இடம் வாங்கி போடலாம் இப்படி தான் இருக்கு. சுயநலம் பணத்தாசை இது தான் இருக்கு இப்போ.

நேத்து சென்டரல் மால் போன போது அந்த கட்டிடத்தின் முகப்பிலிருந்த முத்திரையை பார்த்ததும் பாலு மாமா சிங்கப்பூர் போனப்ப வாங்கிட்டு வந்த ரொல்லிங் பால் மேஸ் கேம் தான் நினைவுக்கு வந்தது. சிறுவயதில் நான் என்னை அந்த சிறு பொறி எத்தனை சவால் விட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறு முறையாவது நான் அந்த குண்டுகளை எல்லாம் போட முயற்சி பண்ணி முடியாம சோர்திருப்பேன். சின்னங்ஞ் சிறிய உலோக குண்டு தான். ஆனால் சிறு அளவிலான பிசாசுகள் போல கனவில் விரட்டின. மூர்த்தியண்ணா உள்பட எங்க காலனில யாராலையுமே போட முடியல. சித்தி ஊரிலிருந்து வந்த பத்தாவது நிமிசத்தில எல்லா குண்டையும் உள் அடைப்பில் போட்டுடாங்க. அவ்வளவு பெருமையா இருந்தது. “அய் அக்கா எப்படிக்கா போட்டிங்கன்னா” சும்ம மிதப்பா “இது என்ன பெரிய மேட்டர்ன்னு” மறுபடி போட்டுக் காட்டினாங்க. அப்பறமும் எனக்குப் போட வர்லன்னு தான் நினைக்கிறேன். அப்பெல்லாம் சித்தி மேல ஏதோ நல்ல வாசனை வரும். கேட்டா ஃபேர் அன் லவ்லி வாசனைன்னு சொல்லுவாங்க. சித்தி நிறையக் கதை சொல்லுவாங்க. அவங்க சொல்ற கதையில் வரும் யானை பறக்கும். தவளை சிரிக்கும். பேய், பிசாசு கூட ஜோக் சொல்லும். ரௌடி கதைன்னா அவன் சும்மா சின்ன கல் தடுக்கி தெருல விழுந்து நெத்தி ஆகாயம் வரை வீங்கிக்கும். சித்தி கதைய கேட்கவே ஒரு கூட்டம் சேர்ந்திடும். எல்லோருக்கும் சிரிச்சி வயிறே வலிக்கும். அப்பெல்லாம் எங்க பசங்க கிட்ட எனக்கு ரொம்ப மரியாதை கிடைக்கும். சித்தி வீட்டுக்கு வந்திருக்கும் போது நிறைய நேரம் அவங்க கூட இருப்பேன். அவங்க கூட இல்லாத எல்லா நேரமும் என் நண்பர்களிடமும் மூர்த்தி அண்ணா கிட்டயும் சித்தியை பத்தி பேசிட்டே இருப்பேன்.

“அப்ப உங்க செண்பக்கா தான் உன் ஹீரோவா”

“செண்பாக்காவ ஹீரோயின்னு தானே சொல்லனும்”

“அவ உனக்கு ஹீரோயின் ஆக முடியாது”

செண்பா சித்தியை பற்றி எப்போதும் முகர்ந்து கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு மூஞ்சூறு சிவா அண்ணா சொன்னது அப்போது எனக்குப் புரியாமல் இருந்தது.  “நம்ம தனா சித்தி சிலையாட்டமிருக்கா அழகின்னு எங்க மாமா சொன்னான்னு” சிவாண்ணா தம்பி எங்க வகுப்பு தோழர்களிடம் சொன்ன போது சிவாண்ணா, அவன் தம்பி, அவங்க மாமா யாரையும் எனக்கு பிடிக்கல. எங்கேயோ சித்தியும் நானும் வெளில போகும் போது சிவாண்ணா விசில் அடிச்சான் “கருங்குரங்கு அந்த பக்கமே பார்க்காதே” என்று சொன்ன சமயம் சித்தியை ரொம்ப பிடித்தது. அப்பெல்லாம் நான் என்ன நினைக்கிறேனோ அதே தான் சித்தியும் நினைப்பாங்க. ஆனால் இப்ப சித்தி நடந்துகிறது பேசறது எதுவுமே பிடிக்கிறது இல்லை. சென்னைக்கு வேலைக்கு வந்த பின்னர் ஜீன்ஸ் டி சார்ட் எல்லாம் போட்டு கொண்டு வேறு விதமாய் திரிகிறாள். சில சுடிதார் டாப்ஸில் முன்பக்க இறக்கம் பார்க்க அருவருப்பா இருக்கு. கேட்டா தையல்காரன் அப்படி வடிவம் வச்சி தைச்சிட்டான்னு அசால்ட்டா சொல்றா. நான் சின்ன வயசில இருக்கும் போது தீபாவளி சமயம் வீட்டுக்கு வரும் போது நான் பார்த்த செண்பா சித்தி தாவணி தான் போட்டு இருப்பாங்க. அவங்க நடையும் உடையும் பார்க்க அம்மா கார்த்திகை தீபம் அன்னிக்கி ஏத்தும் அகல் விளக்கு சுடர் போல அவ்வளவு பதுவுசா இருக்கும். தினமும் மல்லிகைப் பூ தலை நிறைய வைச்சி இருப்பாங்க. சித்தி வந்ததாலே தினம் ஒன்னரை முழம் மல்லிகையை அதிகம் தர சொல்லி பூக்காரியிடம் சொல்லிடுவாங்க அம்மா. திருமணம் முடிந்து போன பின்னர் முதலில் சுடிதார் போட்டவள் இப்போது இப்படி நவீன வேஷமும், ஒட்டு பொட்டுமாக இருப்பது பழைய செண்பா சித்தி இல்ல. அம்மா சாகும் வரை புடவை உடுத்தி, நடு நெற்றியில் சிறு வட்டமாக அரக்கு கலர் குங்குமம் வைச்சி இருந்தாங்க.

இந்த வீடே சித்தியை போல இருப்பதாகத் தான் எனக்கு தோணுது. வாடகை கொஞ்ச குறைவென்ற ஓரே காரணத்துக்காக தெருக்குத்து வீடான இந்த வீட்டைப் பார்த்திருந்தாள் சித்தி. அதனால் தான் எனக்கு இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து தூக்கம் வரதில்ல. பக்கிங்ஹாம் கால்வாய்க்கு பக்கதுல இருக்கறதால இரவில் பேய் கூட்டம் போல் சுற்றும் பெரிய கொசுகள் வேறு தாள முடியாத சிக்கல். சித்திக்கு இங்கே வேலை செய்ய வேண்டி வந்த போது, சரி சேர்ந்து இருந்தா வாடகை இதர செலவுகள் எல்லாம் சரி பாதியா பிரியும், எங்கேயோ பேயிங்க் கெஸ்டில அனாதயாட்டம் திரியறதுக்கு பதில் குடும்பம் போல இருக்கலாம்னு நினைத்தது எவ்வளவு பெரிய தவறுன்னு இப்ப புரியுது. இவங்க இந்த அளவு கஞ்சதனமா இருப்பாங்கன்னு அப்ப தெரியாது. அம்மாவும் சிக்கனம் தான், ஆனா சாமி விவகாரத்தில் கணக்கு பார்க்க மாட்டாங்க. போன வாரம் விநாயகர் சதுர்த்திக்கு வீட்டுக்குப் பின்னாடி தெருவிலேயே மண்ணு பிள்ளையார் செய்து வித்துட்டு இருந்தாங்க. அந்த தெருவே எந்த திருவிழான்னாலும் ஓவர் கொண்டாட்டம் தான். பாட்டும் பறையும் ஒரே கோலாகலமா இருந்தது. நான் பிறந்தது விநாயகர் சதுர்த்தின்னு சொல்லி அம்மா விநாயகர் சதுர்த்திய எப்போதுமே நல்லா கொண்டாடுவாங்க. அம்மா சதுர்த்திக்கு எப்பவுமே இரண்டு பிள்ளையார் வாங்குவாங்க. ஒன்னை வீட்டுலயே வைச்சிட்டு இன்னொன்ன தான் தண்ணியில கரைப்பாங்க. அந்த நினைப்பில இரண்டு பிள்ளையார் வாங்கிட்டு வந்தேன். கூடவ, அருகம்புல், எருக்கம் பூமாலை எல்லாம் இரண்டடி ரெண்டு வாங்கினேன். எதுக்கு இரண்டு பிள்ளையார்ன்னு சண்ட. இப்ப தானே வாங்கிட்டு வந்த போய் திரும்ப குடுன்னு சொல்லி பிடிவாதம். எனக்கு சதுர்த்தி கொண்டாடற மனசே இல்லாம சந்தோஷம் எல்லாம் போயிடுச்சி. வாங்கின பிள்ளையாரை போய் எப்படி திரும்ப தரது. வெளியில் போய் பின்னாடி தெருவில் இருந்த ஒரு சின்ன பையன் கிட்ட கொடுத்து நீ இதை வித்துக்கோன்னு சொல்லி கொடுத்துட்டு வந்துட்டேன். விநாயகர் சதுர்த்தின்னா அம்மா செய்யும் சக்கரையும் தேங்காயும் பூரணம் வைச்ச கொழுக்கட்டை ரொம்ப பிடிக்கும். வெல்லம் போட்டது பிடிக்காது. ஏற்கனவே சித்திக்கு அது தெரியும், இருந்தாலும் சித்தி வெல்லமும் தேங்காயும் போட்ட கொழுக்கட்டை செய்து அதிலும் என்னை கடுப்பேத்திட்டாங்க. பிரசாதம்ன்னு சொல்லி கொடுத்து சாப்பிட்டே ஆகும் படி ஆச்சு. பிறந்த நாள் அதுவும் அவ்வளவு வருத்தமா போச்சு. ஆனா அதுக்கு அப்பறம் பூசைக்கு மணிய கைல குடுத்து, இந்த வீட்டு வாசல்ல செவுத்தோட இருக்கும் தெருக்குத்து பிள்ளையார்க்குப் பூஜை பண்ண கொழுக்கட்டையும் சுண்டலும் எடுத்துக் கொண்டு அவங்க முன்னாடி போன போது, அவங்க பின்னடியே நான் போனேன், சித்தி கட்டியிருந்த புடவை, நான் அடித்த மணி சத்தம் எல்லாம் அம்மா பின்னாடி போற மாதிரி தான் இருந்தது ஆனாலும்.

வெளியில் சின்னதாக தூறல் ஆரம்பித்தது. இப்படி ஒருநாள் சாயங்காலம் தான், மெல்லிசா மழை விழுந்து ஓய்ஞ்ச நேரம் சித்தியும் நானும் இந்திரா நகரல இருந்து நடந்தே மத்திய கைலாஷ் கோவிலுக்குப் போனோம். சித்தி அப்ப தான் சென்னைக்கு வேலைக்குச் சேர்ந்த புதுசு. டைடல் பார்க் முன்ன இருந்த அந்த பளீர் சாலையில் என்னென்னவோ பேசிட்டே நடந்தோம்.

“சிங்கப்பூர் போல இருக்குல, ரோட் எல்லாம்”

“சிங்கப்பூர் எப்போ கண்ணு போனீங்க”

“மொக்க போடாதீங்கக்கா எவ்வளவு படத்தில பார்த்திருக்கிறோம்”

சற்று தொலைவிலிருந்தே மத்திய கைலாஷ் கோவில் கோபுரங்கள் தெரிய ஆரம்பித்த போது கன்னத்தில் போட்டுக் கொண்டாள் சித்தி.  கோவில் அருகே கையை மாற்றி மாற்றி முழம் போட்டுக் கொண்டிருந்தாள் அந்த பூக்காரி. சம்பங்கி, மரிகொழுந்தின் வாசனை ஆளை அசத்தியது. பூ வாங்க நகர்ந்தாள் சித்தி. “அட சேகர் எப்ப வந்த?” கையை உயர்ந்தி ஹை-பை அடித்த போது ஓரக்கண்ணால் சித்தியைப் பார்த்து வழிய ஆரம்பித்தான் சேகர். சூழல் புரியாமல் நின்று நிதானமாய் பூ வாங்கினாள் சித்தி. எனக்கு எப்போதுடா சேகர் அங்கிருந்து நகர்வான் என்றிருந்தது. அவனோ கூட நடந்து வரத் தொடங்கினான். “தனா உன் பிரண்டா, ஹாய் எப்படி இருக்கீங்க?” என்று ஆரம்பித்து என்னிடம் பேசுவது போலவே பேசிக் கொண்டே வந்தாள் சித்தி. அவள் சொல்லும் மொக்கை ஜோக்கு சத்தம் போட்டு சிரித்தான். சிவன் அருகே சென்ற உடன் பேசுவதை நிறுத்தி விட்டு திருவாசகம் சொல்லத் தொடங்கினாள். ஒவ்வொரு பிரகாரத்தின் முன்னும் அவள் விழுந்து கும்பிடுவதை வெறித்து பார்த்துக் கொண்டே இருந்தான் சேகர். “செண்பாக்கா வா சீக்கிரம் போகலாம்ன்னு” அவங்க காதுக்கு மட்டும் கேட்கறாப்பல சொல்றேன் அப்பவும் “இருடா இருடா” அசைஞ்சி நிமித்தி வந்துட்டு இருந்தா சித்தி. அடுத்தநாள் “ஏய் உனக்கு ஒரு தங்கச்சி இருக்கான்னு சொல்லவே இல்லை” என்று சேகர் சொன்னப்ப “அவங்க என் சித்திடா அவங்க பொண்ணுக்கு பதினாலு வயசு. அவளே இவங்க அளவு வளர்ந்துட்டா. வேலைக்காக இங்க டெம்பிரவரியா வந்திருக்காங்க” என்று சொன்னதும் வாய் பிளந்து அதிர்ச்சி ஆகி போனான். “நீ மாமா மாதிரி இருக்க. ஆனா பதினாலு வயசு பொண்ணு இருக்க உங்க சித்தி இன்னும் சிக்குன்னு இருக்காங்கன்னு” ஆபாசமா சொன்னான். சித்தி கொஞ்சம் சின்னவயது போல தெரியறது உண்மை தான். அம்மா போல புடவை கட்டினா இப்படி கண்டவன் வழிய மாட்டான். சொன்னா எங்கே புரியுது. புடவை கட்டினாலும் சின்னப் பொண்ணாட்டம் தான் தெரிவேன்னு தலக்கனமா சொல்லுவா. சேகராவது இவங்கள உன் தங்கச்சியான்னு கேட்டான், மத்தவங்க? இவங்களோட இனிமேல் கோவிலுக்கு சினிமாவுக்கெல்லாம் எப்படி போறதுன்னு அன்னிக்கு தோணுச்சி.

வெளியே மழை வலுத்தது. வேடிக்கை பார்க்க நன்றாக இருந்தது. மழைக்கு வேகமாக நடந்து வந்துக் கொண்டிருந்தாள் கர்ப்பிணி பெண் ஒருத்தி. அத்தனை வேகமாய் இருந்தாலும் கூட வந்துக் கொண்டிருந்த இன்னொரு பெண் கை வீசினாள் பட்டு விடக்கூடாது என்று கவனமாய் நடந்து வந்துக் கொண்டிருந்தாள். சித்தியும் இப்படி தானே செய்தாள். திருமணம் முடிந்து தீபாவளி சமயம் வீட்டுக்கு வந்த சித்தியிடம் ஏதோ மாறி இருந்தது. சித்தியுடனே எப்போதும் இருந்த சித்தப்பாவை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. முன்பை விட அதிகம் பொலிவாய் மாறி இருந்த அவளிடம் முன் போல சுவாரஸ்யமான பேச்சு எதுவுமில்லை. அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். அம்மாவிடம் சமையல் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். எப்போதும் இல்லாத சுத்தம் சுத்தம் என்று பேச்சும் நடவடிக்கையும் அப்போதிருந்து தான் தொடங்கியது. அவள் துடைத்து வைத்த அடுப்பு மேடையில் என் முகம் தெரிந்தது.  அதற்கு முன் வந்த செண்பா என்னோடு விளையாடுவாள். அன்று வந்த செண்பா அம்மாவுடன் அடிப்படியில் இருந்தாள் அல்லது படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்தாள். இரவு படுக்கப் போகும் முன்னர் கதைகள் எதுவும் சொல்லவில்லை. “அக்கா இன்னிக்கி இவனை உன்னிடமே படுக்க வைச்சிக்க வயித்துல தெரியாம உதைச்சிட்டா” என்று சொன்னாள்.

குளியல் அறையிலிருந்து வெளியில் வந்து கண்ணாடியில் முகம் பார்த்தேன் கொஞ்சம் ரௌடி களை தான் தெரிகிறது. சேகர் எப்போதும் சொல்வது போல மாதிரி மாமா மாதிரி தான் இருக்கிறேன். தாடியை எடுத்தால் கொஞ்சமாவது இருப்பத்தி நான்கு வயது பையன் போல தெரியலாம் இல்லன்னா பத்து வயது அதிகமாகத்தான் தெரியறேன், “சோய்” என்று தோசை சுடும் சத்தம் வந்தது. பாட்டி சாப்பிட அழைப்பது கேட்டது. சித்தி கல்யாணத்துக்கு முன்னர் எங்க வீட்டுக்கு வரும் போது மெல்லிசாக நெய் ரோஸ்ட் போட்டு கொடுப்பாங்க. பட்டாம் பூச்சி வடிவத்தில் ஒரு நாள். ஸ்பூன் வைச்சு சின்ன சின்னதா ஊத்தின தோசை இன்னொரு நாள் என்று அசத்துவாங்க. தோசை மட்டுமே மட்டுமில்ல புதுசா புதுசா என்னென்னவோ சமைச்சி தருவாங்க. சாப்பிட்டுக்கிட்டே இருக்கலாம் கணக்கே தெரியாது. போதும் என்று சொல்லும் போது, “போதும் என்று மனசு சொன்னப்பறம் சட்டியில் இருக்கும் தோசையோடு முடிக்கனும், இதுவும் உனக்கு தான்” என்று சொல்லி இன்னொன்றும் ஊத்தி போடுவாங்க. ஆனால் அதே சித்தி தான் அவங்க வீட்டில் இருந்த சமயம் ரசம் கொஞ்சம் கூட மிச்சம் வைக்கா குடுச்சிட்டேன்னு “ரசம் ஒரு கிண்ணம் நிறைய இருந்துச்சே, அவ்வளவுமா குடிப்ப, மீதி வைச்சி இருந்தா, ஃபிரிட்ஜ்ல வைச்சிட்டு நாளைக்கு துவையல் அரைச்சி விட்டுப்பேன். இப்போ நாளைக்கும் முழு சமையல் பண்ணனும்” என்று மூஞ்சிய காட்டினா. அம்மா இறந்து போனப்பறம் அப்பா வேற கல்யாணம் பண்ணிகிட்டது பிடிக்காம தானே இவங்க வீட்டுக்கு போனேன். அன்பை தேடி தானே சித்தி வீட்டிக்கே போனேன்.

துடைத்த துண்டை பின்னாடி பால்கனியில் காயப்போடப் போன போது அங்கே அமர்ந்திருந்த பூனை மெல்ல வந்து காலை உரசியது. கொடியில் ஓரமாய் சித்தியின் உள்ளாடைகள் காய்ந்து கொண்டிருந்தன. மீண்டும் காலை உரசிய பூனையை “சீ தூரப் போ” என்று விரட்டினேன். கொஞ்சம் கூட சுரணை கெட்டது. துண்டைக் கொடியில் போட்ட போது கொடி ஊஞ்சல் ஆடியது. கிளிப்புகளிலிருந்து காற்று கிண்கிணியிலிருந்து எழும் சங்கீதம் போல ஒலி எழுந்தது. உள்ளாடைகள் கீழே விழுந்தன. ‘இதை வேற இடத்தில் காயப்போட்டா என்ன? வெளியில இருந்து பார்க்கும் போது எல்லோர் கண்ணிலும் படுமில்லையா?’ என்று தோன்றியது. “பாட்டி இத எடுத்து மறுபடி காயப்போடுங்க.” என்று சத்தமாக சொன்னேன். பூனை அருகில் வர எட்டி உதைத்தேன். கோரமாய் பல்லை காட்டிக் கொண்டு “மியாவ்” என்று மிரட்டும் தொனியில் கத்திக் கொண்டே மெல்ல அங்கிருந்து வெளியே போனது. சாப்பிடும் மேசையருகே வந்தேன்.  சாப்பிட வா என்று பாட்டி கூப்பிட்ட போதே தட்டில் இரண்டு தோசை இருந்தது. ஏதேதோ யோசித்துக் கொண்டே வந்து அமரும் முன்னர் அடுத்த தோசையை எடுத்துக் கொண்டு அசைந்து அசைந்து பாட்டி வந்துக் கொண்டிருந்தாள். பாட்டிக்கு வலது கால் கொஞ்சம் வளைந்து போயிருந்தது. நடப்பதே கஷ்டப்பட்டு நடப்பது போல தான் தோன்றும் எனக்கு. ஆனாலும் அம்மா எப்போதுமே சூடான தோசையைத் தான் அவனுக்குக் கொடுப்பாள். ஆறியதை அவளே சாப்பிட்டு விடுவாள். அம்மா போல யாருமே வர மாட்டாங்க. இந்த பாட்டி   நான் சாப்பாட்டு மேசைக்கு வந்தவுடனேயாவது ஊற்றியிருக்கக் கூடாதா? தோசை ஆறிய வெறுப்பில் பார்த்தால் தொலைக்காட்சியில் ஏதோ சாமி பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. ரிமோட் தேடினேன்.

“அவங்க வீட்டுல மாதிரி ரிமோட் அவங்க கையில மட்டும் தான் இருக்கனும் இங்கேயும் அதிகாரம் பண்ணாறங்கல. ரிமோட்ட எங்க எடுத்து ஒளிச்சி வைச்சி இருக்காங்க, காணாம்”

“எப்போ பாரு அவள கரிச்சி கொட்டிகிட்டே இரு. அங்க தான் இருக்கும் பாரு”

“தெரியல கிடைக்கல. இதுக்கு தான் என்னோட ரூம்ல ஒக்காந்து சாப்பிட்டுக்கிறேன்னு சொல்றது. உங்க சீரியல், கோவில் குளம் இதோடல்லாம் என்னால மாரடிக்க முடியலன்னு தான் என் ரூம்ல தனி டி வி மாட்டி வைச்சிருக்கேன்”.

“உன் ரூம்ல நீ உட்கார்ந்து சாப்பிட்டா அங்க வர ஒவ்வொரு தோசைக்கும் என்னால நடந்து வர முடியுமா? தோச கருகிடும் வேற”

அவன் இழுத்த இழுப்புக்கு டர்ர்ர்ர்ர்ர் என்று அவன் கோபத்துக்கு பின்னணி இசைத்தது சாப்பாட்டு மேசையுடன் இருந்த நாற்காலி.

வெளியில் வந்து இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போது இரண்டு புறமும் இருந்த வீடுகள் எல்லாவற்றிலும் காலை நேரத்துப் பரபரப்பு கொஞ்சம் அடங்கி இருந்தது. பவளமல்லிக் கொட்டி கிடக்கும் அந்த வீட்டிலிருந்து மாமி அவள் வீட்டுக்காரருக்கும் பள்ளி போக தயாராகக் கிளம்பியிருந்த பிள்ளைக்கும் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள். இடுப்பில் இன்னொரு குழந்தை தூங்கி வழிந்து கொண்டிருந்தது.  சின்ன குழந்தை மட்டும் தான் எப்போதும் தூங்க வேண்டுமா என்ன? அம்மா இறந்து போன பின்னர் வீட்டில் எந்த நேரமென்று தெரியாமல் தூங்கிப் பழகியிருந்தேன். தூக்கம் வந்தால் தூங்குவது அவ்வளவு தவறா? கை கடிகாரத்தைப் பார்த்தேன். அது ஆறு மணிக்கு நின்று போயிருந்தது. பேட்டரி மாற்ற வேண்டுமென்று நேற்று இரவே நினைத்திருந்தேன். இந்த ஆறு மணி தானே!! இதனை எப்படி மறக்க முடியும். சித்தி வீட்டில் படிக்க தங்கி இருந்த போது ஒரு நாள் சாயுங்காலம் ஆறு மணிக்கு தூங்கிட்டேன். கொஞ்ச நேரத்தில் தடபுடவென்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்து போய் பார்த்தேன். கிரைண்டர் அவ்வளவு சத்தமாக இது வரை ஓடியதில்லை. “வீடு கோவில் மாதிரி வெளக்கெத்தற நேரம் தூங்கலாமா? ஆறு மணின்னா கண்டம் போல உனக்கு திடீர்ன்னு ஆறு மணிக்கு பசிக்குதுங்கிற, ஆறு மணிக்கு தூங்கற. இதெல்லாம் உன் வீட்டில் செய்வீயா” என்று சித்தி கேட்ட போது அவள் வழித்துக் கொண்டிருந்த மாவில் கொஞ்சம் கிரைண்டர் டரம்மின் பக்கவாட்டில் விழுந்து டட்)ரமோடு சேர்ந்து சுற்றி சுவற்றில் சிதறியது. வீட்டிலிருக்கப் பிடிக்காமல் வெளியேறினேன். எங்கோ வெகு தூரம் நடந்து போய் கொண்டிருந்தேன். ஒரு கோவில் வந்தது அப்படியே அமர்ந்தேன். அங்கே அம்மா இருந்தாங்க. “நான் இருந்த போது இன்னும் கொஞ்சம் என் மேல் பாசமா இருந்திருக்கலாம்ல. உன்னை விட்டுப் போயிருக்கவே மாட்டேன்” ன்னு சொல்லிட்டு மறைஞ்சி போயிட்டாங்க. அம்மா அம்மா என்று வேகமாக தேடி ஓடினேன். ஏதோ கல் இடறியது. கீழே விழந்தது போல இருந்தது. சட்டுன்னு மொழிப்புமுழிப்பு)வந்த போது பார்த்தா இரண்டு மணி. கனவில் கால் விரலில் அடிப்பட்ட இடத்தில் காயம் எப்படி வந்தது? அப்ப நிஜவே அம்மா வந்தாங்கல்ல. இப்போ அம்மா இல்லையா?

இரு சக்கர வாகனத்தைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து கிளம்பும் ஆயத்தமாக அதில் ஏறி உட்கார்ந்து உதைத்தேன். இரண்டு மூன்று உதை வாங்கியும் வண்டி இன்னும் கிளம்பின பாடில்ல. காலங்காத்தாலே இவங்க மூஞ்சில முழுச்சி எதுவும் பிரச்சனை ஆனாலே இப்படி தான். எதுவுமே சரியா ஆகறது இல்ல. ஓங்கி உதைத்தேன் “ரூம்ம்ம்ம்” என்ற கிளம்ப தயாரானது. வண்டி ஓடத் தொடங்கியதும் நிம்மதியாக இருந்தது. தெருவைத் தாண்டி இருக்க மாட்டேன், சைக்கிள் விட்டு பழகிக் கொண்டிருந்த அந்த பையன் என் மேல் நேரே வந்து மோதினான். “அய்யோ அடி பட்டுடுச்சா” என்னை அறியாமல் கத்தி விட்டேன். அந்த பையன் “சாரி அண்ணா என் மேல தான் தப்பு” என்று எழுந்து போனான். நான் இரு சக்கர வாகனம் பழகின போது சித்தப்பா வண்டியில் தான் பழகினேன். சித்தப்பாவுக்கு அவரோட ஓட்ட ஸ்கூட்டரை நான் எடுத்தாலே பிடிக்காது. ஓட்ட ஸ்கூட்டருக்கே அப்படி இன்னும் உயர்தர வண்டியா இருந்திருந்தா? சித்திக்கும் பிடிக்காதுன்னு தான் நினைக்கிறேன். ஆனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. ஒரு முறை டபுல்ஸ் பழகனமுன்னு அவங்களை வற்புறுத்தி ஏத்திட்டு போனேன். ஓட்ட தெரியாமா அளவெல்லை நிதானம் இல்லாமல் ஓட்டி மின்சார கம்பத்துல அவங்க கால் மோதி நல்லா அடிப்பட்டது. “அய்யோ ரத்தம் கொட்டுதே” அங்கே போயிட்டு இருந்தவங்க சொல்றாங்க. எனக்கு கொஞ்சம் கூட பதட்டம் வர்ல. உடனே வீட்டுக்கு போயிட்டா போதும்ன்னு தோணுச்சி. நல்ல வலி போல, சித்தி ஸ்ஸ்ன்னு சொல்லிட்டே வந்தாங்க. ஆனா எனக்கு எதுவுமே உறைக்கல. அவங்கள எங்கயும் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகனும் தோணல. அப்பறம் கால்ல கட்டு போட்டு இருந்தப்ப கூட விசாரிக்கல. ஆனா சின்ன வயசுல வீட்டுக்கு வந்து ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லாதப்ப பசிக்குதுன்னு சொன்னப்ப பிரட் உப்புமா பண்ண நெய் புட்டியை எடுத்த போது அது கீழே விழுந்து உடைஞ்சி போச்சு. அதை சுத்தம் பண்றேன் பேர்வழின்னு கையில் நெய் புட்டியின் கண்ணாடி துண்டு குத்தி ரத்தம் வந்த போது நானும் அழுதேன். அம்மா வந்து எதுக்கு அதிக பிரசங்கிதனம்ன்னு நெய் கொட்டினதுக்கு திட்டடி)னாங்க, அப்பக் கூட கைய கிழிச்சிட்டாங்க அது பத்தி கேட்காம நெய் போச்சுன்னு திட்றாங்களே செண்பாக்கா பாவம் என்னால தானேன்னு நினைச்சேன்.

பழைய மஹாபலிபுரம் சாலையில் சித்தியோட அலுவலக வளாகம் கொஞ்சம் தொலைவில் தெரிந்தது. பவளக்குறிஞ்சி மலர்கள் செண்டு போல மலர்ந்திருந்தது கண்ணைக் கவர்ந்தது. பார்க்க அலங்காரமாகவும் இருந்தன. ஊதா தேன்சிட்டு இரண்டு அந்த மலர் செண்டுகளில் அமர்ந்திருந்தது. என்ன நினைத்ததோ செண்டுகள் அசைத்து அவை பறந்து வந்து, சாலையோரம் பளபளத்த பெரிய பதாகை மேல் தொத்தி அமர்ந்தது. அதில் ஸ்னேகா காது வரை சிரிக்கும் நகைக்கடை விளம்பரம். அன்னிக்கி என் தோழன் பெருமாள் வீட்டுக்கு வந்திருத்த போது சித்தி சிரித்ததும் இப்படித் தான் இருந்தது.  “ஏய் உங்க சித்தி ரொம்ப அறிவாளிடா, செம விஷயம்டா. அவங்க சொன்னா விஷயம் நமக்கு எவ்வளவு யூஸ்புல்லா இருக்கும் தெரியும்மா” ன்னு பெருமாள் சொன்னதும், “நீ விஷயத்தை சொல்லு நான் அது நமக்கு யூஸ்புல்லா யூஸ்லெஸ்ஸா யோசிச்சி சொல்றேன்னு” சொன்னேன். அது நான் நினைத்த அளவுக்கு எரிச்சலை வெளிபடுத்தவில்லை. இன்னும் உறைக்கும்படி தெறித்து ஓடும்படி ஏதாவது சொல்லி இருக்க வேண்டும். அப்போதாவது என் நண்பர்களிடம் காட்டும் அதிகபிரங்கித்தனத்தை கொஞ்சம் மாற்றி கொள்வாளா? எனது அலுவலக வளாகம் நெருங்கப் போவது விஷமூங்கில் புற்றுகளிலிருந்து வரும் நறுமணம் உணர்த்தியது. அதையும் மீறி கண்ணகி நகர் வண்ணான்துறை அருகில் ஓடிக்கொண்டிருந்த பக்கிம்ஹாம் கால்வாயில் நாற்றம் ஹெல்மெட்டைத் தாண்டி மூக்கைத் தொலைத்தது. ஒரு காலத்தில் பக்கிம்ஹாம் கால்வாயில் நல்ல தண்ணீர் ஓடியதாம். இருக்கலாம்.


-லாவண்யா சுந்தரராஜன்

2 COMMENTS

  1. கதை, இனிமையான உறவுகள் கால மாற்றத்தில் கசந்துபோவதை அசோகமித்திரனின் பாணியில் சொல்லி செல்கிறது. அவர் பாணியிலேயே கடைசி வரியும் இருக்கிறது. நல்ல முயற்சி.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்,
    சு.செல்வராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.