அவன் விதி-மிகயீல் ஷோலகவ்

போருக்குப் பிந்தைய முதல் ஆண்டு, தோன் ஆற்றின் மேற்புறப் பகுதிகளில் முதல் இளவேனில் காலம் என்றும் இல்லாத விறுவிறுப்புடனும் விரைவாகவும் வந்துவிட்டது. மார்ச் மாத முடிவில் அஸோவ் கடலிலிருந்து வீசிய வெப்பக்காற்றினால் ஆற்றின் இடது கரையில் படிந்திருந்த வெண்பனி இரண்டே நாட்களில் உருகிவிடவே, மணல் புலப்படலாயிற்று. ஸ்தெப்பியில் வெண்பனி நிரம்பியிருந்த ஓடைப் பள்ளங்களிலும் கிடங்குகளிலும் நீர் பெருக்கெடுத்தது. நீரோடைகள் உறைபனியைப் பிளந்துகொண்டு பாய்ந்து எங்கும் ஒரே வெள்ளக்காடாக அடித்ததால், சாலைகளில் போக்குவரத்து அனேகமாக இயலாமலே போயிற்று.

இத்தகைய மோசமான நேரத்தில் புகானவ்ஸ்கயா மாவட்டத் தலைநகருக்கு நான் பயணம் செய்ய நேர்ந்தது. அப்படியொன்றும் பெருந்தொலைவில்லை – சும்மா அறுபது கிலோமீட்டர் தான் – ஆனால் போவதுதான் கடுமையாக இருந்தது.

என் நண்பரும் நானும் விடிவதற்கு முன்னரே புறப்பட்டோம். நல்ல ஊட்டம் போட்ட இரட்டைக் குதிரைகள் எனினும் பெரிய வண்டியை இழுக்க முடியாமல் திணறின. வெண்பனியும் உறைபனியும் கலந்து கூழ்போல கைகையாயிருந்த மணலில் சக்கரங்கள் அச்சுவரை அழுந்தின. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் குதிரைகளின் விலாப்புறத்திலும் குறுகிய பின் வார்ப்பட்டைகளின் அடியிலும் பாலேடு போன்ற வெள்ளிய நுரை புள்ளி புள்ளியாகத் தோன்றியது. குதிரைகளின் வியர்வையிலிருந்தும் வழிய வழியத் தார் பூசியிருந்த வெப்பமான நுகவாரிலிருந்தும் கிளம்பிய மயக்கமூட்டும் நெடி தூய காலைக் காற்றில் நிறைந்தது.

குதிரைகள் மிகமிகத் திணறிய இடங்களிலெல்லாம் நாங்கள் வண்டியினின்றும் இறங்கி நடந்தோம். சொதசொதப்பான வெண்பனி எங்கள் ஜோடுகளுக்கு அடியில் நளுக்கிட்டதால், நடந்து செல்லக் கடிதாயிருந்தது. சாலையோரம் செல்லலாமென்றால் அங்கு நடப்பதோ அதைவிடக் கடினம். ஏனெனில் அங்கே இன்னும் உறைபனிப் பாளம் மிளிர்ந்துகொண்டிருந்தது. எலான்கா ஆற்றின் பரிசல் துறை வரையும் முப்பது கிலோமீட்டர். அத்தொலைவு பயணம் செய்ய எங்களுக்கு ஆறுமணி நேரம் பிடித்தது.

மோகவ்ஸ்கிய் கிராமத்தில் உள்ள சிற்றாறு கோடையில் அநேகமாக வறண்டே இருக்கும். இப்போதோ பெருக்கெடுத்து ஆல்டர் மரம் நிறைந்த கரையோரப் புல்வெளியில் ஒரு கிலோமீட்டர் தூரம் பரவி ஓடியது. அதைக் கடக்க நாங்கள் படகில் செல்ல வேண்டியிருந்தது. படகின் அடிப்புறம் தட்டை; ஓட்டை வேறு; அதிகமாய்ப் போனால் மூன்று பேருக்கு மேல் இடங்கொள்ளாது. குதிரைகளைத் திருப்பி அனுப்பிவிட்டோம். அக்கரையில் இருந்த கூட்டுப்பண்ணைச் சாவடியில் குளிர்காலம் முழுதும் நின்று கொண்டிருந்த, நிரம்ப அடிபட்ட பழைய ஜீப் கார் எங்களுக்காகக் காத்திருந்தது. நானும் டிரைவரும் அற்றலைந்து போன சின்னப் படகில் நம்பிக்கையில்லாமல் ஏறி அமர்ந்தோம். மூட்டைகளை வைத்துக்கொண்டு எனது நண்பர் கரையிலேயே பின்தங்கினார். புறப்பட்டோமோ இல்லையோ படகின் உளுத்த பலகைகளின் இடுக்குகள் வழியாகச் சிறு நீரூற்றுக்கள் கொப்புளித்துக்கொண்டு மேல் வந்தன. கைகளில் அகப்பட்டவற்றைக் கொண்டு இடுக்குகளை அடைத்துவிட்டு, மறுகரை அடையும் வரையில் தண்ணீரை இறைத்துக் கொட்டிக்கொண்டே இருந்தோம். ஒரு மணிப் பொழுதில் தூரத்திலிருந்த மறு கரை போய்ச் சேர்ந்தோம். டிரைவர் கிராமத்திலிருந்து ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்து நிறுத்துவிட்டு மீண்டும் படகில் அமர்ந்தான்.

“இந்தப் பாழாய்ப் போன தொட்டி அக்கு அக்காக நொறுங்கித் தண்ணீரில் விழாவிட்டால் இன்னும் இரண்டு மணி நேரத்தில் உமது நண்பருடன் திரும்பி வருவேன். அதற்கு முன்னே முடியாது” இவ்வாறு சொல்லிக் கொண்டே துடுப்பை எடுத்தான்.

ஆற்றிலிருந்து நெடுந்தொலைவுக்கு அப்பால்தான் சிற்றூர் இருந்தது. இங்கே கரையோரத்தில் அமைதி நிலவியது. இலையுதிர் காலத்தின் முடிவிலோ இளவேனில் காலத்தின் தொடக்கத்திலோதான் ஆள் நடமாட்டம் அற்ற இடங்களில் இத்தகைய அமைதி இருக்கும். அழுகிய ஆல்டர் மரங்களின் சுள்ளென்ற நெடியுடன் நீரிலிருந்து கிளம்பிய மக்கிய நாற்றம் கலந்து வந்தது. தொலைவில் ஸ்தெப்பியில் செந்நீலப் பனிப்படலம் கவிந்திருந்தது. அங்கிருந்து மெல்லிளங் காற்று வீசியது. அண்மையில் தான் பனியிலிருந்து விடுபட்டிருந்த தரையின் இளமை குன்றாத மணம் அதில் பட்டும் படாமலும் மிதந்து வந்தது.

சிறிது தூரத்தில் நீர் ஓரமாக மணலின் மேல் மிலாறு வேலியொன்று விழுந்து கிடந்தது. புகை குடிக்கலாம் என்று அதன்மேல் அமர்ந்தேன். ஆனால் சட்டைப்பையில் கையை விட்டதும் பெரும் ஏமாற்றம் உற்றேன். பையிலிருந்த சிகரெட்டுப் பாக்கெட் நனைந்து ஊறியிருந்ததைக் கண்டேன். ஆற்றைக் கடக்கும்போது, புரண்டு புரண்டு வந்த படகின் ஒரு பக்கத்தின் மேலே அலை மோதி என் இடுப்புவரை சேற்று நீரால் நனைத்தபோது, சிகரெட்டுகளைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை. ஏனென்றால் படகு மூழ்கிவிடக் கூடாதே என்பதற்காக நான் துடுப்பைப் போட்டுவிட்டு உடனே நீர் இறைக்கத் தொடங்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது எனது அஜாக்கிரதையை எண்ணிச் சள்ளைப்பட்டேன். ஊறி உப்பிப் போன பாக்கெட்டைப் பையிலிருந்து பதபாகமாக எடுத்தேன், சப்பளிக்க அமர்ந்துகொண்டு ஈரமான, புழுப்பு நிறச் சிகரெட்டுகளை ஒவ்வொன்றாக வேலியின் மீது வைக்கத் தொடங்கினேன்.

நண்பகல். மே மாதம் போலச் சுள்ளென்று வெயில் எரித்தது. விரைவில் சிகரெட்டுகள் உலர்ந்துவிடும் என்று நினைத்தேன். பஞ்சு வைத்துத் தைத்த இராணுவக் காற்சட்டையும் மேற்சட்டையும் பயணத்துக்காக அணிந்திருந்தேன். இப்போது வெக்கையின் கடுமையைப் பார்த்ததும் ஏன் இவற்றைப் போட்டுக்கொண்டோம் என்று வருந்தத் தொடங்கினேன். அந்த ஆண்டில் அன்றைக்குத்தான் முதன்முதல் உண்மையிலேயே வெப்பமான நாள். ஆனால் சுற்றிலும் நிலவிய அமைதியிலும் தனிமையிலும் நெஞ்சைத் தன் போக்கில் போக விட்டவாறு அங்கே தன்னந்தனியாக உட்கார்ந்து கொண்டு, கடுமையாகப் படகு வலித்த களைப்பு தீரத் தலை ஈரம் காற்றில் உலர்வதற்காகப் பழைய இராணுவ உஷான்கா குல்லாயைக் கழற்றி வைத்துவிட்டு, மங்கிய நீலவானில் மிதந்து சென்ற அகன்ற மேகப் படலங்களை வெறுமையாக நோக்கிக் கொண்டிருப்பது இன்பமாயிருந்தது.

சற்று நேரத்தில் ஒருவன் ஊர்க்கோடியிலிருந்த குடிசைகளைக் கடந்து சாலைக்கு வருவதைக் கண்டேன். அவனுடன் ஒரு சிறுவன் வந்தான். பையனுக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். அதற்கு மேலிராது என்று எனக்குப் பட்டது. இருவரும் பரிசல் துறையை நோக்கித் தளர்ச்சியோடு நடந்தனர். ஆனால் ஜீப்பை நெருங்கியதும் திரும்பி என் பக்கம் வந்தனர். சற்றே கூனியிருந்த அந்த நெட்டையன் நேரே என்னிடம் வந்து ஆழ்ந்த கரகரத்த குரலில், “வணக்கம், அண்ணே” என்றான்.

“வணக்கம்” என்று அவன் நீட்டின கரடுமுரடான பெருங் கையைப் பற்றிக் குலுக்கினேன்.

அவன் சிறுவனிடம் குனிந்து, “மாமாவுக்கு வணக்கம் சொல்லடா, மகனே. உன் அப்பாவைப் போலவே இவரும் டிரைவர் என்று தெரிகிறது. நீயும் நானும் ஓட்டினது லாரி இல்லையா? ஆனால் இவர், அதோ அங்கே இருக்கிறதே சின்ன கார், அதில் போகிறவர்” என்றான்.

சிறுவன் என்னை நேரே நோக்கினான். அவன் இரு கண்களும் வானத்தைப் போன்று பளிச்சென்று தெளிவாக இருந்தன; சிறிது முறுவலித்தான். தன் குளிர்ந்த கையை என் பக்கம் துணிவுடன் நீட்டினான். நான் அதை மெதுவாகக் குலுக்கிவிட்டு, “குளிர்ந்து விறைக்கிறதா, பெரியவரே! வெயில் கொளுத்தும் இந்த நாளில் உன் கை இவ்வளவு குளிர்ந்திருக்கிறதே, ஏன்?” என்று கேட்டேன்.

குழந்தைப் பருவத்தில் பிறர் மீது காட்டப்படும், மனத்தைக் கவரும் நம்பிக்கையுடன் பையன் எனது முழந்தாள்கள் மேல் சாய்ந்துகொண்டு, சிறிய சணல் நிறப் புருவங்களை நிமிர்த்தி வியப்புடன் என்னை நோக்கினான்.

“பெரியவரா? ஆனால் நான் கிழவனில்லையே, மாமா. பையன்தானே. எனக்குக் குளிர்ந்து விறைக்கவும் இல்லை. கை மட்டும்தான் சில்லிட்டிருக்குது. ஏன், தெரியுமா? வெண்பனிப் பந்துகள் உருட்டிக் கொண்டிருந்தேன் அல்லவா, அதனால்.”

அவன் தந்தை பாதி காலியாயிருந்த பயணப் பையை முதுகிலிருந்து இறக்கி வைத்துவிட்டு என் பக்கத்தில் சோர்வுடன் அமர்ந்து பின்வருமாறு சொன்னான்: “இதோ, இருக்கிறானே நாடோடி. இவன் ஒரு துருதுருப்பை. இவனாலே எனக்கும் தாவு தீர்ந்துபோய்விட்டது, இவனும் களைத்துப் போய்விட்டான். கொஞ்சம் நீள எட்டு வைத்து நடந்தோமானால் அவன் ஓடிவரத் தொடங்குகிறான். இப்படிக் காலில் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கிறவனோடு நாம் நடந்து கட்டுமா? ஓர் அடி வைக்க வேண்டிய இடத்தில் நான் மூன்று அடி வைக்க வேண்டியிருக்கிறது. இப்படியே நாங்கள் போகிறோம், குதிரையும் ஆமையும் போலே. இவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள நமக்குப் பிடரியில்தான் கண்கள் வேண்டும். நாம் கொஞ்சம் திரும்பினோமோ இல்லையோ, உடனே குண்டு குழிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரில் அளைய ஆரம்பித்துவிடுவான்; அல்லது உறைபனிக் குச்சி ஒன்றை ஒடித்து மிட்டாய் போன்று சூப்புவான். அடேயப்பா, இவனைப் போன்ற ஒருவனுடன் பயணம் செய்வது, அதுவும் கால்நடையாகப் போவது, ஒரு மனிதன் செய்யக்கூடிய வேலையில்லை” சற்று நேரம் பேசாதிருந்தான். பிறகு, “ஆமாம், அண்ணே, உம் சேதி என்ன? எஜமானுக்காகக் காத்திருக்கிறீரா?” என்று வினவினான்.

நான் டிரைவர் அல்ல என்று அவனிடம் இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆகவே இப்படிச் சொல்லிவைத்தேன்:

“காத்திருக்கத்தான் வேண்டும் போலத் தோன்றுகிறது.”

“அக்கரையிலிருந்து வருகிறாரா?”

“ஆமாம்.”

“படகு பொட்டென வந்துவிடுமா? உமக்குத் தெரியுமா?”

“சுமார் இரண்டு மணி நேரத்தில் வரும்.”

“அப்படியானால் நிறைய நேரம் இருக்கிறது என்று சொல்லும். நல்லது. அப்பாடா என்று களைப்பாறுவோம். எனக்கொன்றும் அவசரம் இல்லை. இப்படியே போகும்போது உம்மைப் பார்த்தேன். அவ்வளவுதான். சரி, நம்மைப் போன்ற டிரைவர் விட்டாற்றியாக உட்கார்ந்து வெயில் காய்ந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணினேன். அவரருகே போய் அவரோடு சேர்ந்து புகை குடிப்போமே என்று தோன்றியது. தனியாகப் புகை குடிப்பதும் ஒன்றுதான். அதிலே ஒன்றும் சுவையில்லை. ஓ, நீர் சிகரெட் குடிக்கிறீரா? நல்ல செயலாயிருக்கிறீர் என்று தெரிகிறது. அடாடா, அவை நனைந்து போய்விட்டனவா? விடும், அண்ணே, ஈரப் புகையிலையும் ஒன்றுதான், சப்பை வைத்துக் கட்டின குதிரையும் ஒன்றுதான். இரண்டுமே மட்டம்தான். அதை வையும் அப்படியே. இந்தாரும், என்னிடம் உள்ள நறுக்குப் புகையிலையை ஒரு கை பார்ப்போம்.”

தனது மெல்லிய காக்கிக் காற்சட்டைப் பையிலிருந்து ஒரு நைந்துபோன பட்டுப் புகையிலைப் பையை வெளியே இழுத்தான். அதை அவன் பிரித்து விரித்த போது ஒரு மூலையில் “லெபித்யான்ஸ்கயா உயர்நிலைப் பள்ளியின் ஒரு மாணவி நமது அருமைப் போர்வீரர் ஒருவருக்குக் கொடுத்த அன்பளிப்பு” என்ற எழுத்துக்கள் சித்திரத் தையலால் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

வீட்டில் விளைக்கப்பட்ட காரமான புகையிலையைப் புகைத்தோம்; நெடுநேரம் வரை இருவரும் ஒன்றுமே பேசவில்லை. பையனுடன் அவன் எங்கே போகிறான் என்றும் இத்தகைய மோசமான பாதையில் எதற்காக வந்தான் என்றும் கேட்க எண்ணினேன். ஆனால் அவன் முந்திக்கொண்டான்:

“சண்டை தொடங்கியதிலிருந்து கடைசிவரை பட்டாளத்தில் இருந்தீராக்கும், அப்படித்தானே?”

“ஆமாம், கிட்டத்தட்டக் கடைசிவரையிலும்.”

“போர்முனையில் தானே?”

“ஆமாம்.”

“நல்லது. நானும் போர்முனைக்குப் போய்ப் படாத பாடெல்லாம் பட்டுத் தீர்த்தேன். அண்ணே, அளவுக்கு மேலேயே. ஆமாம்.”

தனது முழந்தாள்களின் மீது பழுப்பேறிய பெரிய கைகளை வைத்துக்கொண்டு முதுகைக் கொஞ்சம் கூனிக்கொண்டான். பக்கவாட்டில் அவன் மீது கண்ணோட்டினேன். அப்போது எனக்கு இன்னதென்று தெரியாத மனக்கலக்கம் உண்டாயிற்று. ஆ, அந்தக் கண்கள்! சாம்பல் தெளித்தது போல் தோன்றிய கண்கள், உள்ளார்ந்த வேட்கையும் துயரமும் ததும்ப, நேருக்கு நேர் நோக்கவே கடினமான கண்கள். அத்தகைய கண்களை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? தற்செயலாக எனக்கு அறிமுகமான இந்த மனிதனின் கண்கள் அந்த மாதிரி இருந்தன.

வேலியிலிருந்து கோணலும் மாணலுமான ஒரு சுள்ளியை ஒடித்து, மணலின்மீது ஏதோ விந்தையான படம் வரைந்தான். பிறகு சொன்னான்:

“சில நேரம் இரவில் என்னால் உறங்க முடியாது. இருட்டை உறுத்துப் பார்த்த வண்ணம், ‘வாழ்வே, ஏன் இப்படிச் செய்தாய்? என்னை ஏன் இப்படி வாட்டி வதைத்தாய்? என்னுடைய திராணியை ஏன் பறித்துக் கொண்டாய்?’ என்று எண்ணமிடுவேன். என் கேள்விகளுக்கு விடையொன்றும் கிடைப்பதில்லை. இருட்டானாலும் சரி, இல்லை, சூரியன் பளிச்சென்று ஒளிசெய்யும் போதானாலும் சரி… எனக்கு விடை எதுவும் கிடைப்பதில்லை. இனி ஒருபோதும் விடை கிடைக்காது.” திடீரென்று அவன் தன்னுணர்வு கொண்டு தனது சிறு மகனை அன்புடன் மெல்ல அப்புறத்தே தள்ளி, “போடா, தம்பி, போ. அதோ அங்கே நீருக்கு அருகில் விளையாடு. பெரிய ஆற்றின் கரையில் சிறு பையன்கள் விளையாடுவதற்கு எப்போதும் ஏதாவது கிடைக்கும். ஒன்று மட்டும் கவனமாயிரு. கால்களை நனைத்துக் கொள்ளாதே!” என்று சொன்னான்.

நாங்கள் இருவரும் ஒன்றும் பேசாது புகைத்துக் கொண்டிருந்தபோது தந்தையையும் மகனையும் சட்டென்று ஒரு பார்வை பார்த்தேன். அவர்களைப் பற்றி ஒன்று மட்டும் வழக்கத்துக்கு மாறாகப் பட்டது. பையன் எளிமையாகத்தான் உடுத்திருந்தான். ஆனால் நல்ல பாந்தமான உடுப்புக்கள். வெள்ளாட்டுக்குட்டியின் மெத்தென்ற மென்மயிர்த்தோலை உள்ளே கொடுத்துத் தைத்திருந்த நீண்ட சிறு கோட்டு அவனுக்கு உடலோடு ஒட்டினாற் போலப் பொருந்தியிருந்த மாதிரி, அவனுடைய சின்னஞ்சிறு ஜோடுகள் காற்றுப் புகாதபடி கம்பளிக் காலுறைகளுடன் இணைக்கப்பட்டிருந்த விதம், அவன் கோட்டுக் கையிலிருந்த பழைய கிழிசலொன்று மிகமிகக் கச்சிதமாக இழையெடுத்துச் சேர்க்கப்பட்டிருந்த நேர்த்தி, இவற்றை எல்லாம் பார்த்தபோது இவை ஒரு பெண்ணின் கைவேலை, தாயின் கைத்திறமை என்று தோன்றியது. ஆனால் தந்தையின் தோற்றமோ, வேறுபட்டிருந்தது. அவனுடைய பஞ்சு வைத்துத் தைத்த கோட்டு பல இடங்களில் பொசுங்கி, மேம்போக்காக இழை சேர்க்கப் பெற்றிருந்தது; நைந்துபோன காக்கிக் காற்சட்டையில் இருந்து ஒட்டு சரியானபடி தைக்கப்படாமல், ஆண்கள் செய்வது போன்ற அவசரத் தையல்களால் ஒட்டப்பட்டிருந்தது. அவன் அணிந்திருந்த இராணுவ ஜோடுகள் அநேகமாகப் புதியவை. ஆனால் அவனது தடித்த கம்பளிக் காலுறையில் நிரம்ப ஓட்டைகள் இருந்தன. அவற்றில் ஒருபோதும் பெண்ணின் கை பட்டிருக்கவே முடியாது… ஒன்று இவன் மனைவியை இழந்தவன்; அல்லது இவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏதோ தகராறு என்று அப்போதே நினைத்தேன்.

மகன் நீரருகு செல்லும்வரை அவன் கவனித்தான். பிறகு கனைத்துத் தொண்டையைச் சரிப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினான். நான் முழுக் கவனத்துடன் கேட்டேன்.

“தொடக்கத்தில் எனது வாழ்க்கை மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது. நான் வரோனெஷ் லகுபேர்னியாவைச் சேர்ந்தவன். அங்கே 1900-ம் ஆண்டில் பிறந்தவன். உள்நாட்டுப் போரின்போது செஞ்சேனையில் கிக்வித்ஸேயின் டிவிஷனில் இருந்தேன். 1922-ம் ஆண்டுப் பஞ்சத்தில் குபானுக்கு ஓடினேன். குலாக்குகளுக்காக மாடு போல் உழைத்தேன். உழைத்திராவிட்டால் இன்று நான் உயிருடன் இருக்க முடியாது. ஆனால் ஊரில் என்னுடைய தந்தை, தாய், தங்கை எல்லோரும் பட்டினியால் இறந்துவிட்டார்கள். நான் ஒற்றைக்கட்டையானேன். உறவினரோ என்றால் எனக்கு எங்கும் ஒருவர் கூடக் கிடையாது. கேட்டீரா. ஓர் ஆண்டிற்குப் பின்னர் குபானிலிருந்து திரும்பிவந்து, வீட்டை விற்றுவிட்டு வரோனெஷுக்குச் சென்றேன். முதலில் தச்சுவேலை செய்தேன். பிறகு ஒரு தொழிற்சாலைக்குச் சென்று மெக்கானிக் வேலை கற்றேன். விரைவில் மணம் புரிந்துகொண்டேன். எனது மனைவி குழந்தைகள் விடுதி ஒன்றில் வளர்ந்தவள். திக்கற்றவள். ஆம், எனக்கு வாய்த்தவள் மிக நல்லவள். நல்ல சுபாவம், கலகலவென்றிருப்பாள்; என்னைத் திருப்தி செய்வதில் எப்போதும் அவளுக்கு ஆவல். பாங்கும் பதவிசுமாயிருப்பாள். அவளுக்கும் எனக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. அவள் சின்னக் குட்டியாய் இருந்தபோது முதலே உண்மையான துன்பம் என்ன என்பதை அறிந்திருந்தாள். ஒருவேளை அந்த அறிவு அவளது குணத்தை உருவாக்கியிருக்கலாம். பக்கவாட்டில் அவளைப் பார்த்தால் அப்படிப் பிரமாதமாக ஒன்றும் காணோமே என்று தோன்றும். ஆனால், அண்ணே, நான் அவளைப் பக்கவாட்டில் பார்க்கவில்லையே. நேருக்கு நேராக அல்லவா பார்த்தேன்! என் கண்களுக்கு அவளை விட அழகி ஒருத்தி கூட இந்த உலக முழுதிலும் இருந்ததுமில்லை; இருக்கப் போவதுமில்லை. ஒருக்காலும் முடியாது.”

“வேலையிலிருந்து களைத்துப் போய் வீடு திரும்புவேன். சில நேரம் ஒரே சிடுசிடுப்புடன் சீறிச் சீறி விழுவேன். ஆனால் அவளோ ஏட்டிக்குப் போட்டி என்று முகத்திலடித்தாற்போலப் பேசுவதே கிடையாது. எவ்வளவு மெல்லியலுடனும் அமைதியுடனும் இருப்பாள் தெரியுமா? எனக்கு எவ்வளவு செய்தாலும் அவளுக்குப் போதுமென்று படாது. முடையாயிருக்கும்போது கூட வாய்க்கு ருசியாக ஏதாவது செய்து எனக்குத் தர எப்போதும் முயல்வாள். அவளைப் பார்த்தாலே போதும், என் மனச்சுமை இறங்கிவிடும். சற்று நேரத்திற்குப்பின் அவளை அணைத்துக்கொண்டு, ‘இரீனா, என் கண்ணே, உன்னிடம் முரட்டுத்தனமாய் நடந்துகொண்டதில் எனக்கு ரொம்ப வருத்தம். இன்றைக்கு வேலையில் ஒரே தொந்தரை. அதனால்தான் எரிந்து விழுந்தேன்’ என்று சொல்லுவேன். எங்களிடையே மறுபடியும் சமாதானம் ஏற்பட்டுவிடும். எனக்கும் அப்பாடா என்று மனது பாட்டிலே போடும். இந்தச் சுமுகமான நிலைமை வேலைக்கு எவ்வளவு உதவி தெரியுமா, அண்ணே? காலையில் உற்சாகமாகப் படுக்கை விட்டு எழுந்திருந்து நேரே தொழிற்சாலைக்குச் செல்வேன். தொட்ட வேலை எல்லாம் துலங்கிடும்; கடிகாரம் திருப்பினாற் போலே கணக்காக நடந்திடும். மெய்யாகவே பாங்கும் பரிவும் உள்ளவள் மனைவியாக வாய்த்தால் தொட்டது துலங்காமல் என்ன செய்யும்?

“சில நேரங்களில், சம்பள நாளன்று கூட்டாளிகளோடு சேர்ந்து குடிப்பேன். சில சமயம் குடிவெறியில் கால்கள் பின்ன தள்ளாடித் தடுமாறிக் கொண்டு நான் வீடு திரும்பும்போது என்னைப் பார்த்தாலே குலை பதறும்படி யிருக்கும். என் கில்லாடி நடைக்குப் பெரிய தெருவே அகலம் பற்றாது, சந்துகளைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். அந்த நாட்களில் எனக்கு இளவயது. உடம்பிலே உரமும் வலிமையும் இருந்தன. நிரம்பக் குடித்தாலும் தாங்கிக்கொள்ள முடியும். எப்போதும் நானாகவே வீடு போய்ச் சேர்ந்துவிடுவேன். ஆனால் சில நேரங்களில் கடைசிப்பகுதியில் ‘கியர்’ விழுந்து போகும் – தவழ்ந்து தவழ்ந்து ஒரு வகையாக வீடு போய் சேருவேன். ஆனால் இரீனா ஒரு வார்த்தை வெடுக்கென்று சொல்லுவாளா? கிடையாது. அதட்ட மாட்டாள், கத்த மாட்டாள். என் இரீனா என்னைப் பார்த்துச் சிரிப்பாள். அவ்வளவுதான். அதுகூட ரொம்ப ஜாக்கிரதையுடன் சிரிப்பாள். என்னதான் குடிமயக்கத்தில் இருந்தாலும் அவளுடைய சிரிப்பை நான் தப்பாக எடுத்துக்கொள்ளக் கூடாதல்லவா? அதற்காக. எனது ஜோடுகளைக் கழற்றியபடியே, ‘இன்றிரவு நீ சுவரோரமாகப் படுத்துக்கொள்வது நல்லது. அந்திரேய், இல்லாவிட்டால் உறக்கத்தில் படுக்கையிலிருந்து உருண்டு விழுந்துவிடுவாய்’ என்று மெல்லிய குரலில் சொல்வாள். அப்படியே ஓட்ஸ் மூட்டை போலத் தொப்பென்று படுக்கையில் விழுவேன். எதிரேயுள்ள ஒவ்வொரு பொருளும் சுற்றிச் சுற்றிச் சுழலுவது போலிருக்கும். எனக்கு உறக்கம் வரும் தறுவாயில் எனது தலையை மெதுவாக வருடியபடியே அன்பு மொழிகளை என் காதோடு அவள் சொல்வதை உணர்ந்து, எனக்காக அவள் வருத்தப்படுகிறாள் என்பதை அறிந்துகொள்வேன்…

“காலையில் வேலைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னேயே என்னை எழுப்பிவிடுவாள். என் மயக்கம் தெளிவதற்கு நேரம் வேண்டுமல்லவா! இரவு குடித்தால் மறுநாள் காலை நான் எதுவும் தின்னமாட்டேன் என்று அவளுக்குத் தெரியும். ஆகையால் வெள்ளரிக்காய் ஊறுகாயோ அதைப் போன்ற வேறு ஏதேனுமோ எனக்குத் தின்னத் தந்து, குடித்த மறுநாள் ஏற்படும் சோர்வைப் போக்குதற்காக எனக்கு ஒரு மடக்கு வோட்கா ஊற்றிக் கொடுப்பாள். ‘இந்தா, அந்திரேய். இனிமேல் ஒருபோதும் இப்படிக் குடிக்காதே, என் அன்பல்லவா!’ என்பாள். இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் ஒருத்திக்கு எப்படித் துரோகம் செய்ய முடியும்? வோட்காவைக் குடிப்பேன். பேசாமலேயே அவளுக்கு நன்றி செலுத்துவேன். ஒரு பார்வை. ஒரு முத்தம். அவ்வளவுதான். ஆனால் அவள் மட்டும் நான் குடிவெறியிலிருந்தபோது ஏறுமாறாக ஒரு பேச்சுப் பேசியிருந்தாளே யானால், என்னைத் திட்டவோ அதட்டவோ தொடங்கியிருந்தாளே யானால் நான் மறுபடியும் குடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வந்திருப்பேன். கடவுள் ஆணையாகச் சொல்லுகிறேன், அப்படித்தான் செய்திருப்பேன். பெண்டாட்டி கூர் கெட்டவளாயிருக்கும் குடும்பங்களில் அப்படித்தான் நடக்கிறது. அந்த மாதிரி எத்தனையோ குடும்பங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்குத் தெரியும்.

“ஆயிற்றா. விரைவில் குழந்தைகள் பிறக்கத் தொடங்கின. முதலில் பையன் பிறந்தான். பிறகு இரண்டு பெண்கள்… அப்போதுதான் கூட்டாளிகளின் உறவைக் கத்தரித்துக்கொண்டேன். சம்பளப் பணம் முழுதையும் வீட்டிற்குக் கொண்டுபோய் மனைவியிடம் கொடுக்கத் தொடங்கினேன். குடும்பம் பெரிதாகிவிட்டதே; இனிக் குடிப்பதற்குப் பொழுது ஏது? விடுமுறை நாளன்று ஒரு குவளை பீர் குடிப்பதோடு சரி. அதற்கு மேல் போகமாட்டேன்.

“1929-ல் மோட்டார்களில் எனக்கு நாட்டம் விழுந்தது. மோட்டார் ஓட்டக் கற்றுக்கொண்டு ஒரு லாரியில் வேலை செய்தேன். அதில் நன்றாகப் பழகியவுடன் மறுபடியும் தொழிற்சாலைக்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை. லாரி ஓட்டுவது என் மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படியே பத்து ஆண்டுகள் வாழ்ந்தேன். பொழுது கழிந்ததே தெரியவில்லை எனக்கு. கனவு போல் இருந்தது. ஆனால் பத்து ஆண்டுகள் எம்மாத்திரம்? நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஒருவனை ‘எப்படி வாழ்க்கையைக் கழித்தோம் என்று கவனித்திருக்கிறாயா’ என்று கேட்டுப் பாருங்கள். துளி கூட அவன் கவனிக்கவில்லை என்று தெரிந்துகொள்வீர்கள். கழிந்துபோன வாழ்க்கையும் ஒன்று, அதோ அங்கே மங்கிய பனிப்படலத்தில் தொலைவில் ஸ்தெப்பி வழி தெரிகிறதே, அதுவும் ஒன்று. இன்று காலையில் நான் அந்த ஸ்தெப்பியைக் கடந்து வந்தபோது சுற்றிலும் தெளிவாக இருந்தது. ஆனால் இப்போது இருபது கிலோமீட்டர்கள் கடந்து வந்த பின் பார்த்தாலோ ஒரே மங்கலாகத் தென்படுகிறது. மரம் எது புல் எது என்றோ, புல்வெளி எது வயல் எது என்றோ தெளிவாகத் தெரியவில்லை…

“அந்தப் பத்து ஆண்டுகளும் இரவு பகலாக உழைத்தேன். நிறையச் சம்பாதித்தேன். பிற மக்களை விட ஒரு குறைச்சலும் இல்லாமல் வாழ்ந்தோம். குழந்தைகள் தாம் எங்கள் இன்பம் எல்லாம். மூன்று பேரும் பள்ளியில் நன்றாகப் படித்தார்கள். மூத்தவன் அனத்தோலிய் கணக்கில் மிகக் கெட்டிக்காரன். மாஸ்கோ செய்தித்தாள் ஒன்றில் கூட அவன் பெயர் வந்தது. இவ்வளவு சமர்த்து அவனுக்கு எங்கிருந்து வந்தது என்று என்னால் சொல்ல முடியாது, அண்ணே. ஆனால் அது எனக்கு இன்பமாயிருந்தது. அவனைப் பற்றி எனக்கு ஒரே பெருமை. ஆமாம்… ரொம்ப ரொம்பப் பெருமை!

“பத்து ஆண்டுகளில் கொஞ்சம் பணம் மிச்சம் பிடித்தோம். போருக்கு முன்பு ஒரு சிறு வீடு கட்டினோம் – இரண்டு அறை, ஒரு கூடம், ஒரு முகப்புடன். இரீனா இரண்டு வெள்ளாடுகள் வாங்கினாள். இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேண்டும்? குழந்தைகளின் கஞ்சிக்குப் பாலிருந்தது; குடியிருக்க வீடு இருந்தது. இடுப்பார உடை, காலிலே ஜோடு, ஆக எல்லாமே நல்லபடிதான் இருந்தது. வீடு கட்ட நான் பிடித்த இடம் அவ்வளவு நல்லதாயில்லை. அது ஒன்றுதான் குறை. விமானத் தொழிற்சாலைக்கு அருகாமையிலேயே எனக்கு மனையொன்று கொடுத்தனர். அதில் தான் கட்டினேன். வேறு எங்கேனும் மனை கிடைத்திருக்குமானால், ஒரு வேளை என் வாழ்வு வேறு மாதிரித் திரும்பியிருக்கலாம்…

“பிறகு வந்தது ஐயா – அதுதான் யுத்தம். மறு நாளே எனக்கு உத்தரவு வந்துவிட்டது. அதற்கு அடுத்த நாளே ‘ரயில் நிலையத்திற்கு வரவும்’ என்று மறு உத்தரவு வந்தது. என் கண்மணிகள் நாலு பேரும் என்னை வழியனுப்பினார்கள் – அதாவது இரீனா, அனத்தோலிய், எனது மகள்மார் நாஸ்த்தெங்கா, ஒலுஷ்கா, நாலு பேரும். குழந்தைகள் என்னமோ மனங்கலங்காமல் தான் இருந்தார்கள். பெண்களுக்கு மட்டும் அழுகையை அடக்க முடியவில்லை. ஒன்றிரண்டு துளி கண்ணீர் பீறிக்கொண்டு வந்துவிட்டது. அனத்தோலிய் குளிரில் நடுங்குவது போலக் கொஞ்சம் நடுங்கினான். அத்தோடு சரி. அப்போது அவனுக்குப் பதினேழு வயது நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என் இரீனாவோ… நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் இதுபோல ஒருபோதுமே கண்டதில்லை. இரவு முழுவதும் அவள் பெருக்கிய கண்ணீரால் என் சட்டையும் மார்பும் நனைந்துபோய்விட்டன. காலையிலும் அதே கதைதான். ரயில் நிலையத்திற்குப் போனோம். அவள் இருந்த இருப்பைக் கண்டு எனக்குண்டான வருத்தத்தில் அவளை நேருக்கு நேர் பார்க்கவே என்னால் முடியவில்லை. அழுது அழுது அவள் உதடுகள் கூட வீங்கியிருந்தன; அவளுடைய தலைமயிர் குட்டைக்கு வெளியே பரட்டையாய்த் துருத்திக் கொண்டிருந்தது; அவளது கண்கள் மங்கியிருந்தன; மருள் கொண்டவள் போல விழித்துக் கொண்டிருந்தாள். அதிகாரிகள் எங்களை வண்டியில் ஏறும்படி கட்டளையிட்டார்கள். ஆனால் அவள் என்னை ஏறவிட்டால்தானே? பாய்ந்து வந்து என் மார்போடு ஒண்டிக்கொண்டு என் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கட்டிக்கொண்டாள். அவள் உடம்பெல்லாம் பதறிற்று. மரத்தை வெட்டினால் நடுங்குமே, அதுபோல… குழந்தைகள் அவளிடம் பேசித் தேற்ற முயன்றார்கள். நானும் ஏதோ ஆறுதல் சொன்னேன். ஆனால் ஒன்றும் பயனில்லை. அங்கு இருந்த மற்றப் பெண்களெல்லாம் தம் கணவன்மாரிடமும் பிள்ளைகளிடமும் வளவளவென்று பேசினார்கள். ஆனால் என்னவளோ என்னைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தாள். கிளையிலே இலை தொங்குமே, அதுபோல கடைசி வரையில் ஒரே நடுக்கமாக நடுங்கினாள்; ஒரு சொல் கூட அவளால் பேச முடியவில்லை. ‘மனதைக் கல்லாக்கிக் கொள், இரீனா, என் கண்ணே. நான் புறப்படுவதற்கு முன்னால் ஏதாவது சொல்லேன் எனக்கு’ என்றேன். ஒவ்வொரு சொல்லுக்கும் இடையில் தேம்பிக்கொண்டே அவள் சொன்னது இதுதான்: ‘அந்திரேய்… என் கண்ணாளா… நாம் இனி ஒரு போதும்… ஒரு போதுமே இந்த உலகில்… ஒருத்தரை ஒருத்தர் மீண்டும் பார்க்க மாட்டோம்…’

“எப்படியிருக்கிறது? எனக்கானால் அவள் மேல் உண்டான இரக்கத்தால் நெஞ்சு வெடித்துவிடும்போல் இருந்தது. அவள் என்னடா என்றால் என்னிடத்தில் அது மாதிரிச் சொல்கிறாள். அவளை விட்டுப் பிரிந்து செல்வது எனக்கு மட்டும் எளிதாகவா இருந்தது? இல்லையே. விருந்துக்கா போய்க் கொண்டிருந்தேன்? அதுவும் இல்லையே. இதை அவள் புரிந்துகொள்ள வேண்டாமா? அவள் சொல்லியதில் எனக்குத் தாங்க முடியாத ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. என்னைக் கட்டிக் கொண்டிருந்த அவள் கைகளைப் பிரித்து இழுத்து அவளை ஒரு தள்ளு தள்ளினேன். ஏதோ மெதுவாகத் தள்ளினது போலத்தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் எனக்குக் காளைமாடு போல வலிவு இருந்ததல்லவா? ஆகவே அவள் அப்படியே தள்ளாடி சற்றே மூன்று அடிவரை பின்னே போய் விட்டாள். பிறகு கைகளை நீட்டியபடி, என்னை நோக்கி மெல்ல நடந்து வந்தாள். நானோ, ‘ஏய், விடை தரும் முறை இதுதானா? என் காலம் முடிவதற்குள்ளேயே என்னைப் புதைக்க விரும்புகிறாயா?’ என்று அவளைப் பார்த்துக் கூச்சல் போட்டேன். ஆனால் அவள் இருந்த கோலத்தைக் கண்டதும் மீண்டும் அவளை அணைத்துக் கொண்டேன்…”

அவன் திடீரென்று இடையில் பேச்சை நிறுத்தினான். பிறகு நிலவிய அமைதியில் அவன் விம்மலை அடக்க முயன்றதால் ஏற்பட்ட ஒலி மட்டும் என் செவிக்கு எட்டிற்று. அவனது உள்ள நெகிழ்ச்சி என் நெஞ்சைத் தொட்டது. ஓரப் பார்வையாக அவனை நோக்கினேன். ஆனால் அவனது வறண்ட, சாம்பல் நிறக் கண்களிலே ஒரு துளி நீர் கூடக் காணவில்லை. ஏக்கத்துடன் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு அமர்ந்திருந்தான். அவனுடைய சோர்ந்த பெரிய கைகள் சற்றே பதறின; மோவாய் நடுங்கிற்று; உறுதியாக மூடியிருந்த உதடுகள் கூட அவ்வாறே நடுங்கின…

“இப்படிக் கவலைக்கு இடங்கொடுக்க வேண்டாம், தம்பீ. அதைப் பற்றி நினைக்கவே வேண்டாம்!” என்று மெல்லக் கூறினேன். ஆனால் அவன் என் சொற்களைக் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. துயரப் பெருக்கைப் பெரிதும் முயன்று அடக்கிக்கொண்டு புதுமையாக மாறிய தழுதழுத்த குரலில் திடீரென்று சொன்னான்:

“எனது கடைசி வாழ்நாள் வரையும், சாகும் வரையும், வாழ்வின் இறுதிக்கணம் வரையும், என்னை நான் ஒருபோதும் மன்னித்துக்கொள்ளவே மாட்டேன். அவளை அப்படி எட்டித் தள்ளினேனே, அந்தக் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்னுள்ளத்தில்!”

மீண்டும் அவன் மௌனமாகிவிட்டான். நெடுநேரம் வரை ஒன்றுமே பேசவில்லை. செய்தித்தாளிலிருந்து கிழித்த துணுக்கில் சிகரெட் சுருட்ட முயன்றான். ஆனால் காகிதத்துண்டு அவனது விரல்கள் அழுத்தியதில் சர்ரென்று கிழிந்து போயிற்று. புகையிலை சிதறி அவனது முழந்தாளின் மேல் விழுந்தது. முடிவில் காகிதத்தையும் புகையிலையையும் எப்படியோ காமாசோமா என்று ஒரு சுருளாக்கிப் பற்றவைத்து ஆவலாகச் சிலமுறை புகை இழுத்தான். பிறகு தொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசினான்:

“இரீனாவின் அணைப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். அவள் முகத்தை நிமிர்த்திப் பிடித்து முத்தம் தந்தேன். அவள் உதடுகள் அப்படியே பனிக்கட்டி போலச் சில்லிட்டிருந்தன. ‘போய் வருகிறேன்’ என்று குழந்தைகளிடம் சொல்லிவிட்டு வண்டியை நோக்கி ஓடினேன். அது நகர்ந்துகொண்டிருந்தது. அதன் படியில் குதித்து ஏறினேன். தொடக்கத்தில் ரயில் வண்டி மிகப் பையச் சென்றது. அது என் பெண்டு குழந்தைகள் நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்துசென்றபோது நான் அவர்களை மறுபடியும் பார்த்தேன். பாவம், திக்கற்ற சிறுவர்கள் ஒன்று சேர்ந்து நின்றுகொண்டு கைகளை ஆட்டி வழியனுப்பினார்கள். முகத்தில் புன்னகையை வருவித்துக்கொள்ள அவர்கள் முயன்ற போதிலும் முடியவில்லை. இரீனாவோ கைகளை மார்போடு சேர்த்து வைத்துக்கொண்டு நின்றாள். அவள் உதடுகள் சுண்ணாம்பு போல் வெளுத்திருந்தன; ஏதோ முணுமுணுத்துக்கொண்டு பரக்க விழித்தாள்; பேய்க்காற்றை எதிர்த்து நடக்க முயல்பவள் போன்று அவள் உடம்பு முழுவதும் முன்னோக்கி வளைந்திருந்தது. மார்புடன் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த அவளது கைகள், வெளிறிய இதழ்கள், கண்ணீர் மல்கிய விரிந்த கண்கள், இந்தக் கோலத்தில்தான் அவளை வாழ்நாள் முழுவதும் என் மனத்திலே காண்பேன். பெரும்பாலும் எனது கனவுகளிலும் இதே தோற்றத்தில்தான் அவளைக் காண்கிறேன். ஐயோ, அவளை ஏன் அப்படி அப்பால் தள்ளினேன்? இப்போது கூட நினைத்துப் பார்க்கும்போது மழுங்கிய கத்தியினால் நெஞ்சைக் குதறுவது போலிருக்கிறது.

“உக்ரேய்னாவைச் சேர்ந்த பேலயாசேர்கவ் நகருக்கருகே எங்களுடைய படைப்பிரிவுகளுக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். எனக்கு ஒரு மூன்று டன் லாரி ஓட்டும் வேலை தரப்பட்டது; அதிலே தான் போர்முனைக்குப் போனேன். நல்லது. சண்டையைப் பற்றி உம்மிடம் விவரிப்பதில் ஒன்றும் அர்த்தமில்லை. நீருந்தான் அதைப் பார்த்தீரே. தொடக்கத்தில் எப்படியிருந்தது என்று உமக்கே தெரியும். வீட்டிலிருந்து எத்தனையோ கடிதங்கள் வரும். ஆனால் நாங்கள் நிறைய எழுதுவதில்லை. என்றாவதுதான் எழுதுவோம். அதுவும் என்ன? இங்கே எல்லாம் நன்றாய்தானிருக்கிறது. ஏதோ கொஞ்சம் சண்டை செய்கிறோம். தற்போது நாங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் விரைவிலேயே எங்கள் பலத்தை எல்லாம் திரட்டி ஜெர்மன்காரன் ஒருபோதும் மறக்க முடியாதபடி செம்மையாகத் தரப்போகிறோம், என்றெல்லாம் எழுதுவோம். வேறு என்ன எழுத முடியும்? அதுவோ சங்கடமான நேரம். எழுதவே பிடிக்கவில்லை. எப்பொழுது பார்த்தாலும் துயரப் பல்லவி பாடி அழும் வழக்கம் எனக்கு ஒரு நாளும் கிடையாது என்பதையும் சொல்லிவிடுகிறேன். சில அழுகுணிகள் உண்டு. அவர்களைப் பார்த்தாலே எனக்குக் குமட்டிக்கொண்டு வரும். நாள்தோறும் மனைவிகளுக்கும் காதலிகளுக்கும் எழுதுவார்கள். எழுதுவதற்குக் காரணமே இருக்காது. சும்மா மூக்காலே அழ வேண்டுமே, அதற்காக எழுதுவார்கள். ‘ஐயோ, வாழ்க்கை கடுமையாயிருக்கிறே. ஐயோ, நான் குண்டுபட்டுச் செத்துப்போவேனோ என்னவோ’ என்றெல்லாம் வசவசவென்று எழுதிக்கொண்டு போவார்கள். நாய்க்குப் பிறந்த பயல்கள்! இப்படி முறையிடுகிறது; வாய்க்கு வந்ததை உளறுகிறது; பின்பு யாராவது இரக்கம் காட்ட மாட்டார்களா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. பாவம், அந்தப் பெண்களும் பிள்ளைகளும் அங்கே ஊரில் இதே போலத்தான் துன்பப்படுகிறார்கள் என்பதை இவர்கள் புரிந்துகொள்வதே கிடையாது. பார்க்கப்போனால் அவர்கள் அல்லவா நாடு முழுவதையும் தோள் கொடுத்துத் தாங்கி நின்றார்கள்! அடேயப்பா! அது போன்ற பெருஞ்சுமையால் நசுக்குண்டு சதைந்து போகாமலிருக்க நமது பெண்கள் பிள்ளைகளின் தோள்கள் எவ்வளவு வலிவாயிருந்திருக்க வேண்டும்! ஆனால் அவர்கள் சதைந்து போகவில்லை. முடிவு வரை தளராமல் தாங்கி நின்றார்கள். அந்த நிலையில் இந்த அழுகுணிகளில் எவனாவது ஒரு விடியாமூஞ்சிப் பயல் கடிதத்தில் துன்பக் கதையைக் கொட்டி அளக்கிறான். அங்கே ஊரில் வேலை செய்யும் பெண் அதைப் படித்துத் தவித்துத் தடுமாறிப் போவாளா மாட்டாளா? அந்த மாதிரி ஒரு கடிதம் வந்த பிறகு, பாவம், அந்தப் பெண், தான் என்ன செய்வதென்றோ தனது வேலையை எவ்வாறு சமாளிப்பதென்றோ அறியாது தவிப்பாள். இல்லை. தேவை ஏற்பட்டால் எந்தத் துன்பம் வந்தாலும் தாங்கிக் கொள்வதல்லவா ஆண் மகனுக்கு அழகு! எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக்கொள்ள வேண்டாமா? போர்வீரனாக இருப்பதும் அதற்காகத்தானே! பெண்மை மிகுந்து ஆண்மை குறைந்திருந்தால் எங்கேனும் தொலையட்டுமே; சூம்பின பின்புறம் சற்று பொம்மென்று தெரியும்படியாக நிறைய மடிப்பு வைத்துத் தைத்த ஸ்கர்ட்டைப் போட்டுக்கொண்டு (பின்னாலிருந்து பார்ப்பதற்காவது பெண்ணைப் போலத் தெரியுமல்லவா) பீட்டுக் கிழங்கு வயல்களில் களை பிடுங்கவோ பால் கறக்கவோ போகிறதுதானே! இந்த மாதிரிப் பயல்கள் எல்லாம் போர்முனைக்கு வரவேண்டிய தேவையில்லையே! அங்கே ஏற்கனவே அடிக்கிற நாற்றமே சகிக்கவில்லை, இவர்கள் வேறு வந்து நாறடிக்க வேண்டுமா?

“நான் முழுதாக ஓராண்டு கூடப் போரிடவில்லை… இரண்டு முறை குண்டடி பட்டேன்; ஆனால் இரு முறையும் கொஞ்சமாகத்தான். ஒரு முறை கையில், இரண்டாந்தடவை காலிலே. முதல் காயம் விமானத்திலிருந்து வந்த குண்டினால் உண்டாயிற்று. இரண்டாவது காயம் பீரங்கிக் குண்டிலிருந்து சிதறிய பெரிய சில்லு ஒன்று தாக்கியதால் ஏற்பட்டது. எனது லாரியின் மேற்புறத்தையும் பக்கங்களையும் ஜெர்மானியர் குண்டுகளால் தொளைத்துவிட்டார்கள். ஆனால், அண்ணே, முதலில் எல்லாம் அதிர்ஷ்டக்காரனாக இருந்தேன். பிறகுதான் துரதிர்ஷ்டம் வந்தது… 1942 மே மாதம் லஸவேன்கியில் துர்ப்பாக்கியவசமாக நான் போர்க்கைதியாகிவிட்டேன். அப்போது நிலைமை மிக மோசமாயிருந்தது. ஜெர்மன் படைகள் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருந்தன. எங்களுடைய 122 மில்லிமீட்டர் ஹோவிட்ஸர் பீரங்கிப் படை ஒன்றில் கிட்டத்தட்ட குண்டுகளே இல்லாத நிலைமை வந்தது. எனது லாரியில் இடங்கொண்டவரை குண்டுகளை நிறைத்தோம். ஏற்றுவதில் நானும் பரந்து பரந்து வேலை செய்த மும்முரத்தில் வியர்த்து வடிந்து முதுகோடு முதுகாக என் சட்டை ஒட்டிக்கொண்டுவிட்டது. நாங்கள் முன்னேற வேண்டியிருந்தது; ஏனெனில் ஜெர்மன் படைகள் எங்களை நெருங்கி வந்துகொண்டிருந்தன. இடப்புறத்தில் டாங்கிகள் வரும் கடகடவென்ற அதிரொலி கேட்டது; வலப்புறமும் முன் புறமும் குண்டுகளின் வெடி முழக்கம். நிலைமை சரியாக இல்லையென்பது தெரிந்தது.

“‘போர்முனைக்குப் போய்ச் சேர முடியுமா உன்னால், ஸகலோவ்?’ என்று எங்கள் கம்பெனித் தலைவர் கேட்டார். இதைக் கேட்டிருக்கவே தேவையில்லை. அங்கே என் தோழர்களெல்லாம் உயிரைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது நான் மட்டும் என்ன, வாயில் விரலை வைத்துக்கொண்டா நிற்பேன்? ‘இது என்ன கேள்வி? நான் போர்முனைக்குப் போய்ச் சேர்ந்தாக வேண்டும். வேறு வழி ஏது?’ என்று அவரிடம் சொன்னேன். ‘அப்படியானால் உடனே புறப்படு. காற்றாய்ப் பறந்து போகணும். தெரிகிறதா?’ என்றார் அவர்.

“என்னமாகப் பறந்தேன் தெரியுமா அன்றைக்கு? என் வாழ்வில் அதற்கு முன்னால் ஒருபோதும் லாரியை அப்படி ஓட்டியதில்லை! லாரியில் ஏற்றியிருப்பது உருளைக்கிழங்குகள் அல்ல என்பது எனக்குத் தெரியாமலில்லை. வண்டியிலிருக்கும் பண்டம் பற்றி மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் அங்கே நம் ஆட்கள் கையில் ஒன்றும் இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருக்கையில், சாலை முழுதும் பீரங்கிக் குண்டுகள் கண் தலை தெரியாமல் வெடித்த வண்ணமாயிருக்கையில் நான் எப்படிப் பைய ஓட்ட முடியும்? சுமார் ஆறு கிலோமீட்டர் போய்விட்டேன். சேர வேண்டிய இடத்தை மிக நெருங்கிவிட்டேன். பீரங்கிப்படை வைக்கப்பட்டிருந்த கிடங்கு போய்ச்சேர அந்த சாலையை விட்டு ஒரு திருப்பம்தான் தேவை; திரும்பியிருப்பேன். ஆனால் அங்கே நான் பார்த்த காட்சி எனக்கு விழி பிதுங்கி விடும் போலாகிவிட்டது. என்ன கண்டேன் தெரியுமா? எங்கள் காலாட்படையினர் வயலைக் கடந்து சாலையின் இரண்டு பக்கத்திலும் பின்வாங்கி ஓடிவந்து கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி எங்கும் பகைவருடைய குண்டுகள் வெடித்த மயமாகவே இருந்தன. நான் என்ன செய்வது? திரும்பிப் போகவோ முடியாது. இல்லையா? ஆகவே லாரியை முழு வேகத்தோடு செலுத்தினேன். பீரங்கிப் படையை நெருங்க இன்னும் ஒரு கிலோமீட்டர் தான் போகவேண்டும். இதற்கு முன்னரே சாலையை விட்டு வயலைப் பார்க்கத் திரும்பிவிட்டேன். ஆனால் பீரங்கிப் படையை நெருங்கவே இல்லை, அண்ணே… லாரிக்கு அருகில் ஒரு குண்டு வந்து விழுந்தது. ஏதேனும் நெடுந்தூரப் பீரங்கி வீசிய கனமான குண்டு என் லாரிக்குப் பக்கத்தில் வெடித்திருக்க வேண்டும். அந்த வெடி முழக்கமோ அன்றி வேறு எதுவுமோ என் செவியில் விழவேயில்லை. ஏதோ ஒன்று என் தலையின் உட்புறத்தில் வெடித்தது. அவ்வளவுதான். அதற்கு மேல் எனக்கு ஒன்றும் நினைவு இல்லை. நான் எப்படி உயிருடன் இருந்தேன், அந்தக் கிடங்கிற்குப் பக்கத்தில் எவ்வளவு நேரம் கிடந்தேன் – ஒன்றும் அறியேன். அதைப் பற்றிய நினைவே எனக்கு இல்லை.

“கண்களைத் திறந்தேன். ஆனால் எழுந்திருக்க முடியவில்லை; எனது தலை வெடவெடவென்று குலுங்கிக்கொண்டே இருந்தது; காய்ச்சல் வந்தவன் போல நடுங்கிக்கொண்டே இருந்தேன்; எல்லாம் இருளடித்தது போல் தோன்றிற்று; என் இடது தோளை யாரோ பறண்டி அரைத்துக் கொண்டிருப்பது போல இருந்தது. மேலெல்லாம் ஒரே வலி. யாரோ கைகளில் அகப்பட்டதை எல்லாம் கொண்டு இரண்டு நாட்களாக இடைவிடாமல் என்னைச் சக்கை சாறாகப் பிழிந்தெடுத்தது போல என் உடம்பு எங்கும் நொந்தது. குப்புறப் படுத்து நெடுநேரம் புழுத் துடிப்பது போலத் துடித்தேன். முடிவில் சமாளித்து எழுந்து நின்றேன். ஆனால் இன்னும் நான் எங்கிருந்தேன், இப்போது எனக்கு என்ன நேர்ந்துவிட்டது இவையொன்றுமே எனக்கு விளங்கவில்லை. எனது நினைவு ஒரேயடியாகத் தப்பிவிட்டது. ஆனால் கீழே படுக்க எனக்கு அச்சமாயிருந்தது. எங்கே மறுபடியும் எழுந்திருக்கவே முடியாமல் போய்விடுமோ என்று பயந்தேன். ஆகவே புயல் காற்றில் அசைந்தாடும் பாப்ளார் மரம் போல ஆடிக்கொண்டு நின்ற நிலையிலேயே நின்றேன்.

“நினைவு தெளிந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது என் நெஞ்சை யாரோ குறடு கொண்டு நெருக்குவது போலிருந்தது. நான் கொணர்ந்த குண்டுகள் என்னைச் சுற்றி எங்கும் கிடந்தன. லாரியும் சற்று தூரத்தில் அக்குவேறு ஆணிவேறாகச் சிதைக்கப்பட்டுச் சக்கரங்கள் மேலே தெரிய மல்லாந்து கிடந்தது. சண்டை நிலவரம் என்ன என்கிறீர்களா? சண்டையோ, எனக்குப் பின்புறம் நடந்துகொண்டிருந்தது… ஆம், எனக்குப் பின்புறமேதான்!

“வெளியே சொன்னால் வெட்கக்கேடு, இருந்தாலும் சொல்கிறேன்: நிலைமை எப்படியிருக்கிறது என்று புரிந்துகொண்டவுடன் என் கால்கள் அப்படியே துவண்டுவிட்டன. வெட்டுண்ட மரம் போலத் தடாலென்று கீழே விழுந்தேன். எதிரிப் படைகளுக்குப் பின்னால் தன்னந்தனியாக அகப்பட்டுக்கொண்டோம் என்று புரிந்துகொண்டேன். அல்லது அப்பட்டமாகச் சொன்னால் நான் பாசிஸ்டுகளின் கைதியாகிவிட்டேன். யுத்தத்திலே இதெல்லாம் நடப்பதுதானே…

“இல்லை, இதைப் புரிந்துகொள்வது எளிதல்ல, அண்ணே. நமது விருப்பமில்லாமலே நாம் கைதியாகிவிட்டோம் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியாது. தானே பட்டு அறியாதவனுக்கு இந்த நிலையில் நம் மனம் பட்ட பாட்டை விளக்கிக் கூறவும் முடியாது.

“ஆகவே அங்கேயே கிடந்தேன். விரைவில் டாங்கிகள் கடகடவென்று அதிர்வது என் செவியில் விழுந்தது. நடுத்தரமான நான்கு ஜெர்மன் டாங்கிகள் அதிவேகமாக என்னைக் கடந்து, நான் குண்டுகளைக் கொண்டுவந்த பக்கம் நோக்கிச் சென்றன. ஐயோ, அப்போது நான் எப்படித் துடியாய்த் துடித்தேன் தெரியுமா? பிறகு பீரங்கிகளை இழுத்துக்கொண்டு டிராக்டர்கள் வந்தன; சமையல் வண்டி வந்தது; பின்னே காலாட்படை வந்தது. அதில் ரொம்பப் பேரில்லை, முழுக்க முழுக்க ஒரு கம்பெனிக்கு மேல் இராது. தலையை நிமிர்த்தி ஓரக்கண்ணால் அவர்களைப் பார்ப்பதும் பிறகு மீண்டும் தரையில் முகத்தைப் புதைத்துக் கொள்வதுமாக இருந்தேன்; அவர்களைப் பார்ப்பதற்கே எனக்கு அருவருப்பாயிருந்தது. நெஞ்செல்லாம் பற்றி எரிந்தது.

“அவர்கள் எல்லாரும் என்னைக் கடந்துசென்று விட்டார்கள் என்று தோன்றியதும் தலையை நிமிர்த்தினேன். எனக்கு அப்பால் நூறு மீட்டர் தொலைவில் ஆறு இயந்திரத் துப்பாக்கி வீரர் விரைப்பாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். நான் பார்த்ததும் ஆறு பேரும் சாலையை விட்டுத் திரும்பி ஒரு பேச்சுப் பேசாமல் நேரே என்னை நோக்கி வந்தார்கள். ‘ஆயிற்று, முடிவு காலம் வந்துவிட்டது’ என்று எண்ணினேன். ஆகவே எழுந்து உட்கார்ந்து கொண்டேன் – கிடந்த கிடையில் இறக்க நான் விரும்பவில்லை – பிறகு எழுந்து நின்றேன். அவர்களில் ஒருவன் என் இடத்திலிருந்து அப்பால் சில தாவடிகள் பின்னே சென்றான். தோளை விட்டுத் துப்பாக்கியை சடக்கென்று எடுத்தான். மனிதனுடைய மனம் இருக்கிறதே, இது ரொம்ப விசித்திரமானது. அந்தக் கணத்தில் நான் கொஞ்சங்கூடக் கலவரம் அடையவில்லை. என் நெஞ்சில் பெயருக்குக் கூட நடுக்கம் தோன்றவில்லை. அசையாமல் அவனை உறுத்துப் பார்த்தபடியே, ‘படாரென்று ஒரு சிறு வெடி, அத்தோடு பாடு எல்லாம் தீர்ந்துவிடும். எங்கே குறிவைப்பானோ? தலையிலா அல்லது மார்பிலா?’ என்று எண்ணமிட்டேன். உடம்பின் எந்தப் பகுதியில் அவன் குண்டு பாய்ந்தால் எனக்கென்ன? அது ஏதோ பிரமாத விஷயம் போல இப்படிச் சிந்தித்தேன்.

“அவன் ஓர் இளைஞன். நல்ல கட்டமைந்த மேனி; கறுப்புத் தலைமயிர். ஆனால் உதடுகள் மட்டும் நூலிழை போன்று மெல்லியவை. அவனது கண்களில் குரூரமான ஒளி பளிச்சிட்டது. ‘இந்த ஆள் என்னைச் சுட்டுத் தள்ளுவதற்குத் துளிக்கூடத் தயங்கமாட்டான்’ என்று எண்ணினேன். நான் எண்ணியபடியே அவன் துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்தான். அவனது கண்களை நேரே உறுத்துப் பார்த்தேன். ஒன்றுமே பேசவில்லை. ஆனால் அவனை விட வயதானவனான இன்னொருவன், கார்ப்போரலோ யாரோ ஒரு அதிகாரி, ஏதோ இரைந்து சொன்னான். பிறகு வாலிபனை ஒரு புறம் தள்ளிவிட்டு என்னிடம் வந்தான். தன்னுடைய சொந்த மொழியில் ஏதோ உளறிக்கொண்டே எனது முழங்கையை மடக்கினான். எனது தசைநார்களைத் தடவியழுத்திப் பார்த்துக்கொண்டான். அதைப் பார்த்ததுமே ‘ஓ-ஓ-ஓ’ என்று கூவி, சூரியன் மறைந்துகொண்டிருந்த பக்கமாகச் சாலை நெடுகச் சுட்டிக் காட்டினான். ‘அந்தப் புறமாகப் போடா, தடிமாடு, எங்கள் நாட்டுக்காக உழையடா’ என்று சொல்வது போன்றிருந்தது அவன் குறிப்பு. படுசெட்டுப் பேர்வழி அந்த வேசை மகன்!

“ஆனால் அந்தக் கறுப்புத் தலையன் இருந்தானே, அவன் எனது பூட்ஸுகளின் மேல் கண் போட்டுவிட்டான். அவை உறுதியான நல்ல ஜோடியாகத் தோன்றின. ஆகையால் ‘அவற்றைக் கழற்று’ என்று கைகளால் சைகை செய்தான். தரையில் உட்கார்ந்து பூட்ஸுகளைக் கழற்றி அவனிடம் நீட்டினேன். அந்தப் பயல் என் கைகளிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டான். அப்புறம் என்ன செய்தேன் தெரியுமா? எனது பாதத்தில் சுற்றியிருந்த பட்டைத் துணிகளையும் பிரித்தெடுத்து அவனை நிமிர்ந்து பார்த்தவாறே, அவனிடம் நீட்டினேன். ஐயாவுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது போலிருக்கிறது. கூப்பாடு போட்டுத் திட்டி நொறுக்கினான். மீண்டும் துப்பாக்கியை உயர்த்தினான், சுட்டுவிடுவான் போல. மற்றவர்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்படியே அவர்கள் அப்பால் சென்றுவிட்டார்கள். கறுப்புத் தலையன் மட்டும் சாலையடைவதற்குள் திரும்பித் திரும்பி மூன்று முறை என்னை உருட்டி விழித்தான். கோபத்தினால் அவன் கண்கள் ஓநாய்க்குட்டியின் கண்களைப் போலப் பொறி பறந்தன. யாராவது பார்த்தால் ஏதோ நான்தான் அவனுடைய பூட்ஸுகளைப் பறித்துக்கொண்டதாக எண்ணுவார்கள். அப்படியிருந்தது அவன் பார்வை.

“நல்லது, அண்ணே, வேறு வழியோ இல்லை. என்ன செய்வது? சாலைக்குச் சென்றேன். வரோனெஷ் பக்கத்தில் வழங்குகிற நீளநீளமான, காரசாரமான வசவுகளைப் பொழிந்து தள்ளினேன். பிறகு மேற்குப் புறம் நோக்கி நடைபோட்டேன் – ஆம், கைதியாகத்தான்! ஆனால் அந்நேரத்தில் நன்றாக நடக்க எனக்கு வலுவில்லை. மணிக்கு ஒரு கிலோமீட்டர்தான் என்னால் நடக்க முடிந்தது. அதற்குமேல் முடியவில்லை. குடித்து மயங்குபவன் போலத் தள்ளாடினேன். நேரே போவதற்கு முயல்வேன். ஆனால் ஏதோ ஒன்று சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மற்றப் புறத்திற்கு என்னை அப்படியே தள்ளிவிடும். சற்றுத் தொலைவு சென்றேன். பிறகு யுத்தக்கைதிகளின் அணிவரிசை ஒன்று என்னுடன் சேர்ந்துகொண்டது. எல்லாக் கைதிகளும் எனது டிவிஷனைச் சேர்ந்தவர்கள்தாம். பத்து ஜெர்மானிய இயந்திரத் துப்பாக்கி வீரர் அவர்களுக்குக் காவலாக வந்தார்கள். அவ்வரிசையின் முன்னே சென்ற ஒரு வீரன் என் பக்கம் வந்து, ஒன்றும் பேசாமல் சட்டென்று தன் துப்பாக்கிக் கட்டையால் என் தலையில் மடாரென்று அடித்தான். நான் கீழே விழுந்திருப்பேனே யானால், ஒரு வெடியிலே தீர்த்து என்னை அங்கேயே கிடத்திவிட்டுப் போயிருப்பான். ஆனால் நான் சாய்ந்ததுமே நமது தோழர்கள் என்னை விழாதபடி தாங்கிப் பிடித்து, வரிசைக்கு நடுவில் திணித்து வைத்துக் கொண்டார்கள். கொஞ்சநேரம் வரைக்கும் என்னைப் பாதி தூக்கிக்கொண்டே நடந்தனர். எனக்கு நினைவு தெளிந்ததும் ஒருவன் என் காதோடு, ‘அட அப்பனே, எப்பாடு பட்டாவது கீழே விழாமல் சமாளித்துக்கொள். உடம்பிலே கொஞ்ச நஞ்சம் வலு இருக்கும் வரை நடந்துகொண்டே இரு; இல்லையென்றால் அவர்கள் உன்னைக் கொன்று தீர்த்து விடுவார்கள்’ என்றான். என் உடம்பிலோ கொஞ்சங்கூட வலுவில்லை. இருந்தாலும் எப்படியோ சமாளித்துப் போய்க் கொண்டிருந்தேன்.

“சூரியன் மறைந்ததோ இல்லையோ, ஜெர்மானியர் காவலை வலுப்படுத்தினார்கள. இன்னொரு இருபது இயந்திரத் துப்பாக்கிக்காரை ஒரு லாரியில் கொணர்ந்தார்கள். முன்னிலும் விரைவாக நடைபோடும்படி எங்களை விரட்டினர். படுகாயம் பட்டவர்களால் மற்றவர்களைப் போல் வேகமாக நடக்க முடியவில்லை. ஜெர்மன்காரர்கள் அவர்களைச் சாலையிலேயே சுட்டு வீழ்த்தினார்கள். இரண்டு பேர் இடையில் தப்பியோட முயன்றார்கள். ஆனால் வெட்ட வெளியில் நிலவு வீசும் இரவில் ஒரு மைலுக்கு அப்பாலிருப்பவனைக் கூட நன்றாகப் பார்க்கமுடியும் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். அப்புறம் கேட்பானேன்? அவர்களும் குண்டுகளுக்கு இரையாகிவிட்டார்கள். நள்ளிரவில் ஒரு சிற்றூரை யடைந்தோம். அது பாதி எரிந்து வீழ்ந்திருந்தது. கோபுரம் தகர்ந்த ஒரு மாதாக் கோவிலுக்குள் எங்களை விரட்டி அடைத்தார்கள். வைக்கோல் ஒரு துரும்பு கூடப் பரப்பாத வெறுங் கல் தரையிலேயே இரவைக் கழித்தோம். ஒருவரிடமும் மேல் கோட்டு இல்லை; நாங்கள் எல்லோரும் உள் கோட்டுகள் மட்டுமே போட்டிருந்தோம். ஆகவே கீழே விரித்துப் படுக்க ஒன்றும் இல்லை. சிலரிடம் அந்த உடைகள்தானும் இல்லை; வெறும் காலிகோ உட்சட்டைகள் மட்டுமே போட்டிருந்தார்கள். அவர்கள் பெரும்பாலும் ஜூனியர் ஆபீஸர்கள். சாதாரண வீரர்களுக்கும் தங்களுக்கும் வேறுபாடு தெரியக்கூடாதென்பதற்காக அவர்கள் கோட்டுகளைக் கழற்றியெறிந்துவிட்டார்கள். பீரங்கிப்படை வீரர்களிடமும் கோட்டில்லை. அவர்கள் அரையும் குறையுமாக உடை அணிந்து பீரங்கி சுடும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது கைதியாக்கப்பட்டார்கள்.

“அன்றிரவு மழை கொட்டு கொட்டென்று கொட்டியது. நாங்களெல்லாம் ஒரே தொப்பலாக நனைந்து போனோம். கூரையின் ஒரு பகுதி பெரிய பீரங்கி வெடியாலோ குண்டாலோ தகர்க்கப்பட்டிருந்தது; எஞ்சிய பகுதி சிதறு குண்டினால் சிதைக்கப்பட்டிருந்தது. பலிபீடத்தில் கூட நனையாத இடம் துளிக்கூட இல்லை. இந்த விதமாக இரவு முழுதும் இருண்ட கிடையில் செம்மறிகள் போல அந்த மாதாக் கோவிலில் கழித்தோம். நள்ளிரவில் யாரோ என் கையைத் தொட்டு, ‘காயம் பட்டிருக்கிறதா உனக்கு, தோழா?’ என்று கேட்டான். ‘எதற்காகக் கேட்கிறாய், தோழா?’ என்றேன். ‘நான் மருத்துவன். ஏதாவது ஒரு வகையில் ஒருவேளை நான் உனக்கு உதவக்கூடும்’ என்றான். ‘என் இடது தோள் கிரீச் கிரீச்சென்கிறது; வீங்கி மிகக் கொடிய நோவு தருகிறது’ என்று அவனிடம் சொன்னேன். ‘மேல்சட்டையையும் உள்ளங்கியையும் கழற்று’ என்று கண்டிப்பாகச் சொன்னான். எல்லாவற்றையும் கழற்றினேன். மெல்லிய விரல்களால் எனது தோளைத் தடவிப் பார்க்கத் தொடங்கினான். எனக்கா, வலியான வலியில்லை. பல்லை நெறுநெறென்று கடித்து, ‘ஏய், நீ டாக்டரில்லை, கால்நடை மருத்துவனாக இருக்கவேண்டும். கடுமையாக வலிக்கிற இடத்தையே போட்டு அழுத்துகிறாயே, ஏன்? இரக்கமில்லாப் பாவி!’ என்று கடுகடுப்போடு சொன்னேன். ஆனால் அவன் நெருடிப் பார்த்துக்கொண்டே கோபத்தோடு, ‘இதோ பார், வாய் மூடியிருப்பதுதான் உன் வேலை. என்னிடம் இப்படியா பேசுவது? கொஞ்சம் பொறு. ஒரு நிமிஷத்தில் இன்னும் கடுமையாக வலிக்கும்’ என்றான். பிறகு என் கையை ஒரு சுண்டு சுண்டி இழுத்தான் பாரும், என் கண்களிலிருந்து தீப்பொறிகள் பறந்தன.

“எனக்கு நினைவு வந்தவுடன், ‘என்னடா செய்கிறாய்? பாசிஸ்ட் வேசை மகனே! என் கையானல் கணுக்கணுவாய்த் தெறித்துப் போயிருக்கிறது, நீ என்னடா என்றால் அப்படிச் சுண்டி இழுக்கிறாயே’ என்று சீறினேன். அவன் களுக்கென்று தன்னுள் சிரித்துக்கொண்டது எனக்குக் கேட்டது. பிறகு அவன், ‘நான் இடது கையைச் சரிபார்க்கும்போது நீ வலக்கையால் என்னை அறைவாய் என்றெண்ணினேன். ஆனால் நீ நல்ல சாது போலிருக்கிறது! சும்மா விட்டுவிட்டாய். உனது கை முறியவில்லை. பூட்டுக் கழன்றிருந்தது, அவ்வளவுதான். திரும்பவும் அதைப் பொருத்திவிட்டேன். நல்லது. வலி குறைந்திருக்கிறதா?’ என்றான். மெய்யாகவே நோவு குறைந்துகொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. அவனுக்கு மனமார நன்றி தெரிவித்தேன். அவன் ‘யாராவது காயம் பட்டவர் உண்டா?’ என மெல்லக் கேட்டுக்கொண்டே இருளில் அப்பால் போய்விட்டான். மருத்துவன் என்றால் இவனல்லவா உண்மையான மருத்துவன்! கைதியாக அடைபட்டுக் கிடந்தபோதும் அந்த மையிருட்டிலும் அவன் தனது பெரிய பணியைச் செய்துகொண்டு போனான்.

“அது தொல்லை பிடித்த இரவு. ஜெர்மன்காரர்கள் எங்களை வெளிக்கு வாசலுக்குப் போவதற்குக்கூட விடாமல் அடைத்துப் போட்டிருந்தார்கள். எங்களை உள்ளே விரட்டியபோதே பெரிய காவற்காரன் இதைச் சொல்லியிருந்தான். அதிர்ஷ்டம் இப்படியா வந்துசேர வேண்டும்? எங்களிடையே இருந்த ஒரு கிருஸ்துவனுக்கு வெளிக்கு முடுக்கிக்கொண்டு வந்துவிட்டது. நீண்ட நேரமாக அடக்கிக்கொண்டே இருந்தான். கடைசியில் கண்ணீர் விட்டு அழுதுகொண்டு, ‘இந்தப் புனிதமான இடத்தை நான் அசிங்கப்படுத்தக் கூடாதே. நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன். கிருஸ்துவன். நான் என்ன செய்வேன், நண்பர்களே?’ என்றான். எங்களுடைய போக்குத்தான் தெரிந்தே இருக்கிறதே! சிலர் சிரித்தார்கள், சிலர் வைதார்கள். சிலர் அவனுக்குப் பல வகையான அறிவுரைகளையெல்லாம் சொல்லிக் கிண்டிவிட்டார்கள். பாவம், அவனுடைய திண்டாட்டம் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகப் போய்விட்டது. ஆனால் இது விபரீதமான முடிவில் கொண்டுவிட்டது. அவன் கதவை இடித்துத் தன்னை வெளியில் விடும்படி கேட்டான். பதில் என்ன கிடைத்தது தெரியுமோ? ஒரு பாசிஸ்ட் தனது இயந்திரத் துப்பாக்கியால் கதவிடுக்கு வழியாக சடசடவென்று குண்டுகளைப் பொழிந்து தள்ளினான். கிருஸ்துவனும் இன்னும் மூவரும் அப்போதே உயிரை இழந்தார்கள். கடுமையாகக் காயமடைந்த இன்னொருவன் மறுநாள் காலையில் இறந்தான்.

“இறந்தவர்களை ஒரு மூலையில் இழுத்துப் போட்டோம். பிறகு மூச்சுக் காட்டாமல் உட்கார்ந்து, தொடக்கத்திலேயே இப்படி அவலம் நேர்ந்ததே என்று எங்களுக்குள்ளாகவே எண்ணினோம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் கசமுசவென்று ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளத் தொடங்கினோம். எங்கிருந்து வந்தோம், எவ்வாறு சிறைப்பட்டோம் என்றெல்லாம் ஒருவருக்கொருவர் விசாரிக்கத் தொடங்கினோம். ஒரே பிளாட்டூன் அல்லது ஒரே கம்பெனியைச் சேர்ந்தவர்கள் இருட்டில் ஒருவரையொருவர் அழைத்துப் பேசத் தொடங்கினார்கள். எனக்கு அடுத்து இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ‘ஜெர்மன்காரர் நாளை நம்மை மேலே நடத்திச் செல்வதற்குமுன் வரிசையாக நிறுத்தி நம்மிடையுள்ள கமிஸார்கள், கம்யூனிஸ்டுகள், யூதர்கள் யார் யார் என்று கேட்டால் நீ பதுங்கி ஒளியப் பார்க்காதே, பிளாட்டூன் கமாண்டர். நாளை உன் பாச்சா பலிக்காது. கோட்டைக் கழற்றிவிட்டதால் உன்னையும் சாதாரணப் படைவீரனாக நினைப்பார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். அந்தப் பருப்பெல்லாம் வேகாது, ஐயா! உனக்காக நான் ஒன்றும் சங்கடத்தில் மாட்டிக்கொள்ளப் போவதில்லை. எல்லாருக்கும் முன்னால் நான்தான் உன்னைச் சுட்டிக் காட்டுவேன். நீ கம்யூனிஸ்ட் என்பதும் அந்தக் கட்சியில் என்னைச் சேர்க்க முயற்சி செய்தாய் என்பதும் எனக்குத் தெரியும். அதற்கெல்லாம் இப்போது உனக்குப் பலன் கிடைக்கப் போகிறது.’ இதைச் சொன்ன ஆள் எனக்கு இடப்புறம் மிக மிக அருகில் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அப்புறத்திலிருந்து ஓர் இளங்குரல் விடை தந்தது: ‘நீ கீழ்த்தரமான ஆள் என்று எனக்கு எப்போதுமே தோன்றுவதுண்டு, கிரிஷ்னெவ். அதிலும் நீ எழுத்தறியாதவன் என்று சொல்லிக்கொண்டு கட்சியில் சேர மறுத்தாயே, அப்போது என் சந்தேகம் வலுத்தது. ஆனால் நீ இப்படி ஒரு துரோகியாகத் தலையெடுப்பாய் என்று நான் ஒரு போதும் எண்ணவில்லை. பதினான்கு வயது வரை பள்ளிக்கூடம் சென்றாய் இல்லையா?’ மற்றவன் சோம்பிய குரலில், ‘ஆமாம், போனேன். அதனால் என்ன?’ என்றான். நெடுநேரம் அவர்கள் மௌனமாயிருந்தார்கள். அந்த பிளாட்டூன் கமாண்டர்- குரலிலிருந்து நான் அவனை அடையாளம் கண்டுகொண்டேன் – ‘என்னைக் காட்டிக் கொடாதே, தோழா கிரிஷ்னெவ்!’ என்று மெதுவாகச் சொன்னான். மற்றவன் அமைதியாகச் சிரித்தான். ‘தோழனாவது ஒன்றாவது? உன் தோழர்கள் போர்முனைக்கு அப்புறத்தில் இருக்கிறார்கள். நான் உன்னுடைய தோழன் இல்லை. ஆகவே என்னிடம் மன்றாடாதே. நீ என்ன கெஞ்சினாலும் சரி, நான் உன்னைக் காட்டிக் கொடுக்கத்தான் போகிறேன். என் உயிர் தான் எனக்குச் சர்க்கரை. அதைக் காப்பாற்றிக் கொள்வதில்தான் எனக்கு அக்கறை’ என்றான்.

“அவர்கள் பேசுவதை நிறுத்தினார்கள். அத்தகைய மிகக் கீழ்த்தரமான இழிந்த செயலைப் பற்றி நினைத்தபோதே என் உடம்பெல்லாம் படபடத்தது. ‘ஓகோ, அப்படியா எண்ணிக் கொண்டிருக்கிறாய்? இல்லை அப்பனே. கமாண்டரை நீ காட்டிக் கொடுக்கும்படி விடமாட்டேன், அடே பரத்தை மகனே! இந்த மாதாக் கோவிலை விட்டு வெளியில் நீயாக நடந்து போகமாட்டாய். மற்றவர்கள்தான் உன் கால்களைப் பிடித்துக் கரகரவென்று இழுத்து வெளியில் எறிவார்கள்!’ என்று நான் நினைத்துக் கொண்டேன். பொழுது புலர்ந்து சற்று வெளிச்சம் தெரியத் தொடங்கிற்று. கொழுத்துப் பெருத்த முகங்கொண்ட ஒரு பயல் தலைக்குப் பின்புறம் கைகளை வைத்துகொகண்டு மல்லாந்து படுத்திருந்ததைக் கண்டேன். அவனுக்குப் பக்கத்தில் சிறிய தட்டை மூக்குடைய ஓர் இளைஞன், உட்சட்டை மட்டும் அணிந்துகொண்டு கைகளால் முழங்கால்களைக் கட்டியவாறு உட்கார்ந்திருப்பதையும் பார்த்தேன். அவன் முகம் மிகவும் வெளுத்திருந்தது. அந்தக் குட்டிப் பையனால் இந்தப் பெரிய கொழுத்த காயடித்த மிருகத்தை எதிர்த்து அடக்க முடியாது என்று எனக்குப் பட்டது. ‘நானே இந்தப் பயலைத் தீர்த்துக் கட்ட வேண்டும்’ என்று தீர்மானித்தேன்.

“நான் அந்த இளைஞன் கையைத் தொட்டு, அவன் காதோடு ‘நீ பிளாட்டூன் கமாண்டரா?’ என்று கேட்டேன். அவன் ஒன்றும் பேசாமல் ஆமாம் என்று சும்மா தலையசைத்தான். நான் மல்லாந்து படுத்திருந்தவனைக் காட்டி, ‘அதோ அந்த ஆள் உன்னைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கிறான் இல்லையா?’ என்றேன். மீண்டும் அவன் தலையசைத்து ஆமாம் போட்டான். ‘எல்லாம் சரி, அவன் உதைக்காதபடிக் கால்களைப் பிடித்துக் கொள்ளு. எங்கே, சட்டென்று பிடித்துக்கொள், பார்ப்போம்! உம்’ என்றேன். அந்தப் பயல் மேலே குதித்து அவன் தொண்டையை என் இரு கைவிரல்களாலும் பூட்டுப் போட்டது போல இறுக அழுத்தி நெரித்தேன். கத்தக்கூட அவனுக்கு நேரம் கிடைக்கவில்லை. அந்த மாதிரிச் சில நிமிஷங்கள் வரை அவனைப் பிடித்து நெரித்துக்கொண்டிருந்தேன். பிறகு சற்றுத் தளர்த்தினேன். ஒரு துரோகி ஒழிந்தான். அவ்வளவுதான். அவன் நாக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

“அதற்குப் பின்னர் எனக்குக் குமட்டிக்கொண்டு வந்தது. மனிதனையல்ல, ஏதோ தரையில் நெளியும் பாம்பைக் கொன்றுவிட்டது போல அருவருப்பாயிருந்தது. கைகளைக் கழுவ விரும்பினேன்… என் வாழ்வில் ஒருவனை நான் கொன்றது இதுதான் முதல் தடவை. நம்மவனாவது ஒன்றாவது? அவன் நம்மைச் சேர்ந்தவனே அல்ல. பகைவனை விட மிகக் கெட்டவன். அவன் ஒரு துரோகி. நான் எழுந்து நின்று பிளாட்டூன் கமாண்டரிடம், ‘வா, நாம் இங்கிருந்து அப்பால் போய்விடுவோம், தோழா! மாதாக் கோவில்தான் பெரிய இடமாயிற்றே!’ என்றேன்.

“அந்த கிரிஷ்னெவ் சொல்லியது போன்றே நடந்தது. காலையில் மாதாக் கோவிலுக்கு வெளிப்புறத்தில் எங்களை வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். இயந்திரத் துப்பாக்கி வீரர்கள் எங்களைச் சுற்றி வளைத்து நின்றுகொண்டார்கள். ‘எஸ் எஸ்’ படையினர் மூன்று பேர் எங்களில் அபாயகரமானவர்கள் என்று தோன்றியவர்களையெல்லாம் பொறுக்கியெடுக்கத் தொடங்கினார்கள். கம்யூனிஸ்டுகள் யார், அதிகாரிகள் யார், கமிஸார்கள் யார் என்று கேட்டார்கள். ஆனால் எவரையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அத்தகையவர்களைக் காட்டிக் கொடுக்கும் அளவு பன்றித்தனம் உடைய எவனையும் அவர்கள் காணவில்லை. ஏனென்றால் எங்களிடையே பாதிப்பேர் கம்யூனிஸ்டுகள்; நிறைய ஆபீசர்களும் கமிஸார்களுங்கூட இருந்தனர். இருநூறுக்கும் மேற்பட்ட எங்களில் நாலே நாலு பேரை மட்டும் அவர்களாகப் பொறுக்கி எடுத்தனர். ஒருவர் யூதர். மற்ற மூன்று ருஷ்யரும் சாதாரணப் போர்வீரர்கள். பழுப்பு நிறமும் சுருண்ட தலைமயிரும் இருந்ததால் பாவம், ருஷ்யர்களுக்கும் பிடித்தது சனி. ‘எஸ் எஸ்’ படையினர் அவர்களில் ஒருவனிடம் வந்து, ‘யூதனா?’ என்று கேட்பார்கள். அந்த ஆள், தான் ருஷ்யன் என்று சொல்லுவான். ஆனால் அவர்கள் காதிலே கூடப் போட்டுக்கொள்ள மாட்டார்கள். ‘வெளியே வா’ என்பார்கள். அதற்குமேல் அப்பீலே கிடையாது.

“பாவம் அந்த அப்பாவிகளைச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்கள் எங்களை மேலே ஓட்டிச் சென்றார்கள். அந்தத் துரோகியின் கழுத்தை நெரித்துக்கொல்ல எனக்கு உதவிய பிளாட்டூன் கமாண்டர் போஸ்னான் வரையில் எனக்குப் பக்கத்திலேயே வந்தான். முதல் நாளில் அடிக்கொரு முறை என்னிடம் நெருங்கிவந்து நடந்துகொண்டே என் கையைப் பிடித்து அன்பாய் அழுத்துவான். போஸ்னானில் நாங்கள் பிரிக்கப்பட்டோம். அது நேர்ந்தது எப்படி என்று கேளுங்கள்.

“இதோ பாருங்கள் அண்ணே! நான் பிடிபட்ட நாளிலிருந்தே எப்படித் தப்புவது என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் பலிக்கக்கூடிய திட்டமாகப் போடவேண்டும் என்பது எனக்கு. போஸ்னானுக்குச் சென்ற வழி முழுதும் தப்புவதற்கு ஏற்ற வாய்ப்பு ஒருபோதும் கிடைக்கவில்லை. போஸ்னானில் தான் எங்களை ஒழுங்கான கைதிகள் முகாமில் வைத்தார்கள். அங்கே விரும்பிய வாய்ப்புக் கிட்டிவிட்டது போலத் தோன்றியது. மே மாத முடிவில், இறந்துபோன கைதிகளுக்குச் சவக்குழி தோண்டுவதற்காக ஒரு சின்ன காட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அது முகாமுக்கு அருகில் இருந்தது. அந்த நேரத்தில் வயிற்றுக் கடுப்பினால் எங்களில் நிறைய பேர் இறந்தார்கள். களிமண்ணில் குழி தோண்டிக் கொண்டிருந்தபோதே சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். எங்களது காவற்காரரில் இரண்டு பேர் ஏதோ தின்பதற்காக உட்கார்ந்திருந்தார்கள். மூன்றாமவன் வெயிலில் சோம்பித் தூங்கிக் கொண்டிருந்தான். நான் மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டுச் சந்தடி இல்லாமல் ஒரு புதருக்குப் பின்னே போய் ஒளிந்துகொண்டேன். அதன் பிறகு பெற்றோம் பிழைத்தோமென்று ஒரே ஓட்டமாகக் கிழக்கு நோக்கி விட்டேன் சவாரி.

“அந்தக் காவற்காரர்கள் மிகச் சுருக்க என்னைக் கவனித்திருக்க மாட்டார்கள். எலும்புந் தோலுமாயிருந்த என் உடம்பில் ஒரே நாளில் கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் கடந்து போகும் வலிமை எங்கிருந்துதான் வந்ததோ, எனக்கே தெரியவில்லை. ஆனால் அப்படி ஓடியும் ஒன்றும் பயன் இல்லை. நான்காம் நாள் அந்தப் பாழாய்ப்போன முகாமிலிருந்து நெடுந்தொலைவு அப்பால் இருந்தபோது அவர்கள் என்னைப் பிடித்து விட்டார்கள். என் தடத்தைப் பின்பற்றி வேட்டை நாய்கள் அனுப்பப்பட்டிருந்தன. கதிரறுக்கப்படாத ஓட்ஸ் வயலில் அவை என்னைக் கண்டுகொண்டன.

“பலபலவென்று விடியும் தறுவாயில் நான் வெட்டவெளியான வயலையடைந்தேன். பகல் வெளிச்சத்தில் அதைக் கடந்து செல்ல எனக்கு அச்சமாக இருந்தது. அங்கிருந்து காட்டுக்குக் குறைந்தது மூன்று கிலோமீட்டர்களாவது இருக்கும். ஆகவே பகற்பொழுதில் அந்த ஓட்ஸ்களிடையே படுத்துப் பதுங்கிக் கிடந்தேன். கொஞ்சம் ஓட்ஸ் கதிர்களைக் கசக்கி, உதிர்ந்த தானிய மணிகளை வேண்டியபொழுது தின்பதற்காகச் சட்டைப்பைகளில் நிறைத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் நாய்கள் குரைப்பதும் மோட்டார் சைக்கிள் படபடப்பதும் காதில் விழுந்தன. எனது நெஞ்சுத் துடிப்பு நின்றுவிட்டது. ஏனென்றால் அந்த நாய்கள் என்னை நெருங்கி நெருங்கி வந்துகொண்டிருந்தன. நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துக் கைகளால் தலையை மூடிக்கொண்டேன்; நாய்கள் என் முகத்தைக் கடியாதிருக்க வேண்டுமே என்பதற்காக. ஆயிற்றா? அவை என் கிட்டே வந்தன. என் மேலிருந்த கந்தைகளைக் கிழித்து நீக்க அவைகளுக்கு ஒரே நிமிஷந்தான் பிடித்தது. என் மேல் ஒன்றுமே இல்லை. நான் பிறந்த மேனியுடன் இருந்தேன். ஓட்ஸ் பயிரிடையே அவை என்னை இங்குமங்கும் இழுத்தடித்தன; விரும்பியபடியெல்லாம் என்னை அலங்கோலம் செய்தன; முடிவில் ஒரு பெரிய நாய் தனது முன்னங்கால்களை என் மார்பின் மேல் வைத்து எனது தொண்டையைக் கடிக்கப் பார்த்தது. ஆனால் உடனே கடித்திடவில்லை.

“இரண்டு ஜெர்மானியர் மோட்டார் சைக்கிள்களில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் முதலில் என்னை நொறுங்கப் புடைத்தார்கள். பிறகு நாய்களை ஏவிவிட்டார்கள். அவை என் உடம்பைக் குதறியெறிந்து விட்டன. சதை துண்டு துண்டாகப் பிய்ந்து விழுந்தது. முண்டக் கட்டையாக, ரத்தமயமான உடம்புடன் என்னை முகாமுக்குத் திரும்பவும் இட்டுச் சென்றனர். தப்பியோட முயன்றதற்காக ஒரு மாதம் தனிக் கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டேன். இவ்வளவுக்குப் பிறகும் உயிருடன்தான் இருந்தேன்… எப்படியோ என் உடலில் உயிர் தங்கியிருந்தது!

“கைதியாகி நான் பட்ட அவஸ்தைகளையெல்லாம் உமக்குச் சொல்லுவது கிடக்கட்டும், நினைத்தாலே உள்ளமெல்லாம் பதறுகிறது. அங்கே ஜெர்மனியில் நாங்கள் அனுபவிக்க வேண்டியிருந்த மிருகத்தனமான சித்திரவதைகளை எண்ணிப் பார்த்தால், அந்த முகாம்களில் சித்திரவதைப் படுத்திக் கொல்லப்பட்ட எனது எல்லாத் தோழரையும் நினைத்துக் கொண்டால், நெஞ்சு வீங்கித் தொண்டைக்குழி வரையும் வந்து அடிக்கிறது; மூச்சுத் திணறுகிறது.

“அந்த இரண்டு ஆண்டுகளிலும் மாட்டை விரட்டுவது போன்று இங்குமங்கும் அவர்கள் என்னை இழுத்தடித்ததுண்டே – அடேயப்பா! ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமுக்கு அவர்கள் விரட்டிய விரட்டில் நான் ஜெர்மனியில் ஒரு பாதி அலைந்து தீர்த்திருப்பேன் என்று நினைக்கிறேன். சாக்ஸனியில் சிலிகேட் தொழிற்சாலையில் வேலை செய்தேன்; ரூர் பிரதேசத்தில் ஒரு சுரங்கத்தில் நிலக்கரி தோண்டினேன்; பவேரியாவில் மண் வெட்டுவதில் நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்தேன். தியுரிங்கியாவில் கொஞ்சநாள் வேலை செய்தேன். என் கால் படாத நிலம் ஜெர்மனியில் ஏதாவது எஞ்சியிருந்ததா என்பது சைத்தானுக்கே வெளிச்சம். அங்கே விதம்விதமான இயற்கைக் காட்சிகள் ஏராளம். ஆனால் நமது வீரர்களை அவர்கள் சுட்டுக் கொன்றதும் அறைந்து புடைத்ததும் எங்கும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. அந்த நாசமாய்ப் போன விஷப்பாம்புகள், அந்தப் புல்லுருவிகள் அங்கே எங்களை அடித்துக்கொன்றதுண்டே, நம் நாட்டில் மிருகங்களைக் கூட அந்த மாதிரி எவனும் ஒருபோதும் அடித்திருக்க மாட்டான். எங்களைக் குத்துவார்கள், உதைப்பார்கள்; ரப்பர் குறுந்தடியோ, அவர்கள் கைக்கு அகப்பட்ட ஏதாவது இரும்புக்கட்டியோ, எது கிடைத்ததோ அதால் எங்களை நொறுக்குவார்கள். துப்பாக்கிக் கட்டைகளாலும் தடிகளாலும் அடிப்பதையோ, சொல்லவே தேவையில்லை. கணக்கா வழக்கா நாங்கள் பட்ட குத்தும் அடியும்!

“அவர்கள் எதற்காக அடித்தார்கள் என்று கேட்கிறீரா? நான் ருஷ்யன் என்பதற்காக, இன்னும் உயிரோடு உலகில் இருந்தேன் என்பதற்காக; அவர்கள் பொருட்டு உழைத்தேன் அல்லவா? அதற்காக. எடுத்ததற்கெல்லாம் உதையும் குத்தும். ஏறுமாறாகப் பார்த்தால் அடி; தவறுதலாகக் காலடி வைத்தால் அடி; அவர்கள் விரும்பின மாதிரித் திரும்பாவிட்டால் அடி… அடிக்கிற அடியில் என்றாவது ஒரு நாள் உயிரையே பறித்துவிட வேண்டும் என்பதற்காக அடித்தார்கள்; எங்கள் ரத்தக் குழாய் வெடித்துப் புரையேறி, நாங்கள் அடிபட்டே சாக வேண்டும் என்பதற்காக அடித்தார்கள். எங்களையெல்லாம் உயிரோடு உள்ளே தள்ளிப் பொசுக்குவதற்குப் போதுமான உலைகள் ஜெர்மனி முழுவதிலும் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் இப்படி அடித்து மிதித்து உயிரைக் கசக்கிப் பிழிந்தார்களோ என்னவோ.

“நாங்கள் எங்கே போனாலும் ஒரே மாதிரியான உணவே எங்களுக்குத் தந்தார்கள்: பாதி மரப்பொடியும் பாதி மாவுமாகக் கலந்து செய்த ‘எர்சாட்ஸ்’ என்ற செயற்கை ரொட்டி நூற்றைம்பது கிராம், இத்துடன் நீர் நிறைந்த டர்னிப் சூப்பு, அவ்வளவுதான். சில இடங்களில் குடிப்பதற்குச் சுடுநீர் தந்தார்கள், சில இடங்களில் அதுவும் கிடையாது. ஆனால் இதையெல்லாம் பற்றிப் பேசிப் பயன் என்ன? நீரே மதித்துக் கொள்ளுமே: போர் மூளுவதற்கு முன்பு நான் எண்பத்தாறு கிலோகிராம் இருந்தேன். இலையுதிர் காலம் வாக்கில் ஐம்பதுக்கு மேல் எடை ஏறவில்லை. தோலும் எலும்பும்; அந்த எலும்புகளைத் தாங்கிப் போகக்கூட வலிவில்லை. அவ்வளவுதான். ஆனாலும் உழைக்க வேண்டியிருந்து; ஒரு சொல் மறுத்துப் பேசக்கூடாது. நாங்கள் செய்த வேலையோ, சுமை வண்டிக் குதிரை கூட இவ்வளவு வேலை செய்தால் சில நேரங்களில் படுத்துவிடும் என்று நினைக்கிறேன்.

“செப்டம்பர் தொடக்கத்தில் சோவியத் போர்க் கைதிகளாகிய எங்களில் நூற்று நாற்பத்திரண்டு பேரைக் குஸ்ட்ரினுக்கு அருகிருந்த முகாமிலிருந்து B-14 முகாமுக்கு அனுப்பினார்கள். அந்த முகாம் டிரெஸ்டனிலிருந்து வெகு தொலைவிலில்லை. அப்பொழுது ஏறக்குறைய ஈராயிரம் பேர் அந்த முகாமில் இருந்தோம். ஒரு கல் குழியில் நாங்கள் எல்லாரும் வேலை செய்தோம். ஜெர்மானியக் கற்களைக் கையாலேயே உடைப்பதும் நொறுக்குவதும் எங்கள் வேலை. ஒருவன் நாளொன்றுக்கு நான்கு கன மீட்டர்கள் உடைக்க வேண்டும் என்று கணக்கு. எங்களுக்கானால் உடம்பில் உயிரை ஒட்டிவைத்துக் கொண்டிருப்பதே பெரும்பாடாயிருந்தது. இந்த அழகில் இவ்வளவு வேலையைச் சுமத்தினால் எப்படியிருக்கும், நீரே எண்ணிப் பாரும். அப்புறம் உண்மையிலேயே இதன் விளைவு தொடங்கிற்று. இரண்டு மாதத்துக்குப் பின்பு எங்கள் குழுவிலிருந்த நூற்று நாற்பத்திரண்டு பேரில் ஐம்பத்தேழு பேர் மட்டுமே எஞ்சினோம். எப்படியிருக்கிறது கதை, அண்ணே? நாங்கள் என்ன பாடுபட்டிருப்போம், ஊம்? இங்கேயானால் எங்களுக்கு உடனோடொத்த தோழர்களைப் புதைப்பதற்கே நேரம் பற்றவில்லை; இதற்கிடையில் ஜெர்மன்காரர்கள் ஸ்டாலின்கிராடைப் பிடித்துவிட்டதாகவும் சைபீரியாவுக்குள்ளே விரைவாய் முன்னேறுவதாகவும் ஒரு வதந்தி கிளம்பியது. துயரத்திற்குப் பின் துயரமாக வந்து எங்களைத் தலை நிமிர வொட்டாதபடி தரையோடு தரையாக அழுத்தி வைத்திருந்தன. என்னவோ, அங்கேயே, அந்த ஜெர்மன் மண்ணுக்குள்ளேயே எங்களைப் புதைத்து விடும்படி நாங்கள் கேட்டுக்கொண்டது போலே. முகாம் காவலாளிகளோ குடிப்பதும் இரைந்து பாடுவதுமாக வந்தது வருகிறதென்று ஒரே கொம்மாளமடித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஒரு நாள் மாலை வேலையிலிருந்து குடிசைக்குத் திரும்பி வந்தோம். நாள் முழுதும் பெய்த மழையில் எங்கள் கந்தைகள் சொட்டச் சொட்ட நனைந்து போயிருந்தன. குளிர் காற்றினால் நாங்கள் எல்லோரும் நடுங்கிக் கொண்டிருந்தோம். எங்கள் பற்கள் கடகடவென்று அடித்துக் கொள்வதை நிறுத்தவே முடியவில்லை. துணிகளையும் உடம்பையும் உலர்த்துவதற்கோ சற்றே குளிர் காய்வதற்கோ இடமே இல்லை. உயிரே போய்விடும் போலப் பசி வேறு; சாவதே மேல் என்று கூடத் தோன்றியது. ஆனால் அவர்கள் மாலை நேரங்களில் எங்களுக்கு ஒருபோதும் உணவே தருவதில்லை.

“கேட்டீரா? நான் எனது கந்தைகளைக் கழற்றி, எனது படுக்கைப் பலகை மேல் எறிந்துவிட்டு, ‘நாளொன்றுக்கு நான்கு கன மீட்டர் கல் உடைக்கச் சொல்கிறார்கள். ஆனால் நம்முள் ஒருவரைப் புதைக்க ஒரு கன மீட்டரே ஏராளமாயிற்றே’ என்று சொன்னேன். நான் சொன்னதெல்லாம் அவ்வளவுதான். ஆனால் நீர் நம்புவீரோ மாட்டீரோ, எங்களிடையிலே ஒரு சொறி நாய்ப் பயல் இருந்தான். அவன் போய், நான் மனங்கசந்து சொன்னதை முகாம் கமாண்டரிடம் கோள் மூட்டி விட்டான்.

“ஜெர்மனில் ‘லாகெர்பியூரர்’ என்று சொல்கிறார்களே, அந்தக் காவல் முகாம் தலைவன் ஜெர்மானியன். முல்லர் என்று பெயர். அப்படியொன்றும் உயரம் இல்லை. கட்டுக்குட்டான ஆள். சணல் கத்தை போன்ற தலைமயிர்; தோற்றம் முழுதும் வெள்ளாவி வைத்தது போலத் தோன்றும். அவனுடைய தலைமயிர், கண் இமைகள், கண்கள் கூட ஒரு மாதிரி மங்கலாகத் தெரியும். போதாக் குறைக்கு முண்டக் கண்ணன் வேறே. உம்மையும் என்னையும் போலவே ருஷ்ய பாஷை பேசுவான். பேசும் தோரணையும் வோல்கா பகுதிக்காரர்கள் பேசுவது போலவே இருக்கும். என்னவோ வோல்காக் கரையிலேயே பிறந்து வளர்ந்தவன் போல நமது மொழியைப் பேசுவான். அதிலும் அவன் வையும்போது கேட்கணுமே! அடேயப்பா, பயங்கரம்! இந்தத் தேவடியாள் மகன் இந்த வித்தையை எங்கே கற்றானோ என்று சில நேரங்களில் அதிசயிப்பேன். வழக்கமாக எங்கள் குடிசைக்கு முன்பாக எங்களை வரிசையாக நிறுத்தி அவ்வரிசையோரமாக, வலது கையை முதுகுப் பக்கம் வைத்துக்கொண்டு, ‘எஸ் எஸ்’ படையினர் புடைசூழ அங்குமிங்கும் நடப்பான். தோல் கையுறை அணிந்திருப்பான். அத்தோலுக்கு அடிப்புறத்தில் அவனது விரல்களைப் பாதுகாப்பதற்காகக் காரீயத் தகடு பொருத்தி இருக்கும். வரிசையோரமாக நடந்துகொண்டே, ஒருவர் விட்டு ஒருவராக முகத்தில் குத்தி மூக்கை உடைப்பான். ‘இன்புளுயென்ஸா வராமலிருப்பதற்காக வைத்திய சிகிச்சையாக்கும் இது’ என்று அவன் சொல்லுவது வழக்கம். இப்படியே ஒவ்வொரு நாளும் நடந்தது. முகாமில் மொத்தம் நான்கு வரிசைக் குடிசைகள் இருந்தன. முகாம் தலைவன் ஒரு நாளைக்கு முதல் வரிசைக் குடிசையில் இருந்தவர்களுக்கு இந்த மாதிரி ‘சிகிச்சை’ செய்வான். மறுநாள் இரண்டாவது வரிசைக் குடிசையில் இருந்தவர்களுக்கு இப்படியே வரிசையாக மண்டகப்படி நடத்துவான். சரியான பரத்தை மகன் அவன். ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக்கொள்ள மாட்டான். ஒன்றே ஒன்று மட்டும் அவன் புரிந்துகொள்ளவில்லை, அடி முட்டாள்: பார்வையிடத் தொடங்குவதற்கு முன் எங்களுக்கு முன்பாக நின்றுகொண்டு, மூக்குடைப்பதற்கு வேண்டிய அளவு கோபம் வரவேண்டும் என்பதற்காக வசை பொழியத் தொடங்குவான். தன்னால் முடிந்த வரையில் வாய்க்கு வந்தபடி யெல்லாம் அவன் திட்டும்போது எங்களுக்கு அப்பாடா என்றிருக்கும். எதனால் என்கிறீரா? அந்தச் சொற்கள் நம் சொந்த மொழி போல ஒலிக்கும். ஏதோ நம் ஊரிலிருந்து வந்த காற்றைப் போல இதமாக இருக்கும். தன்னுடைய வசவுகளும் திட்டுகளும் எங்களுக்குக் களிப்புத் தந்ததை அவன் மட்டும் அறிந்திருப்பானேயானால், ருஷ்ய பாஷையில் திட்டியிருக்க மாட்டான்; தன் சொந்த மொழியிலேயே வைதிருப்பான் என்று நான் நினைக்கிறேன். மாஸ்கோவிலிருந்து வந்திருந்த என்னுடைய நண்பன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மட்டும் முகாம் தலைவன் திட்டும்போது ஆத்திரம் ஆத்திரமாக வரும். ‘அவன் அப்படித் திட்டுகிறபோது நான் கண்களை மூடிக்கொண்டு மாஸ்கோ பீர்க் கடையில் தண்ணி போடுவது போல நினைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான். ஒரு குவளை பீர் குடிக்க மாட்டோமா என்று அடக்க முடியாத ஆசை பொங்குகிறது. படுபயல் அப்படிப் பேசுகிறானே’ என்பான்.

“ஆயிற்றா? அந்தக் கன மீட்டர்களைப் பற்றி நான் சொன்னதற்கு மறுநாள், முகாம் தலைவன் என்னைக் கூப்பிட்டனுப்பினான். மாலையில் ஒரு மொழிபெயர்ப்பாளனும் இரண்டு காவலர்களும் எங்கள் குடிசைக்கு வந்தார்கள். ‘ஸகலோவ் அந்திரேய்!’ என்று அழைத்தார்கள். நான் ஏன் என்று கேட்டேன். ‘எங்களுடன் வா. சடுதியில் நட. ஹெர் லாகெர்பியூரரே உன்னைப் பார்க்க விரும்புகிறார்’ என்றார்கள். எதற்காக அவன் என்னைக் காண விரும்புகிறான் என்பதை யூகித்தேன். என்னைத் தீர்த்துக் கட்டத்தான். ஆகவே எனது கூட்டாளிகளிடம் ‘போய் வருகிறேன்’ என்று சொல்லி விடைபெற்றேன். அவர்களுக்கெல்லாம் நான் சாகத்தான் போகிறேன் என்று தெரியும். நான் நீண்ட மூச்சு இழுத்து, பின்பு அந்தக் காவலர்கள் பின்னே நடந்தேன். முகாம் வெளி முற்றத்தைக் கடந்து போகும்போது மேலே விண்மீன்களைப் பார்த்து அவைகளிடமும் விடை பெற்றேன். ‘நல்லது, அந்திரேய் ஸகலோவ், எண் 331, போதும் போதுமென்கிற வரையில் சித்திரவதைப் பட்டுவிட்டாய்’ என்று எண்ணிக்கொண்டேன். எப்படியோ இரீனாவையும் குழந்தைகளையும் நினைத்துத் துயரம் வந்தது. அதை அடக்கிக்கொண்டு என் தைரியத்தையெல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டேன். சற்றும் முகம் சுளிக்காமல் கைத்துப்பாக்கிக் குழாய்க்கு முன் நிற்கவேண்டும், ஒரு போர்வீரனைப் போல. கடைசிக் கணத்தில் இந்த உயிரைப் பிரிய எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதைப் பகைவன் பார்த்திடக் கூடாதல்லவா..

“முகாம் தலைவனது காரியாலயத்தில் ஜன்னல் குறட்டின் மேல் பூத்தொட்டிகள் இருந்தன. அங்கே துப்புரவாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. நமது கிளப்புகளில் இருக்குமே அதுபோல. முகாம் ஆபீசர்கள் ஐந்து பேரும் மேஜையைச் சுற்றிலும் உட்கார்ந்து ஷ்னாப்ஸ் ஜின் ஒரு மடக்குக் குடிப்பதும் பன்றிக் கொழுப்பை மெல்வதுமாக இருந்தார்கள். மேஜையின் மேல் பெரிய திறந்த பாட்டில் ஒன்று வைத்திருந்தது. ரொட்டி என்ன, பன்றிக் கொழுப்பென்ன, ஆப்பிள் ஊறுகாய் என்ன, இப்படியாகப் பல டின்கள் திறந்திருந்தன. அங்கே இருந்த தீனியை எல்லாம் ஒரு பார்வை பார்த்தேன். நீர் நம்புவீரோ மாட்டீரோ, ஆனால் உண்மையாய்ச் சொல்லுகிறேன், எனக்குக் குமட்டலெடுத்தது. கிட்டத்தட்ட வாந்தியே வந்துவிட்டது. எனக்கோ பசியான பசியில்லை, ஓநாய்ப் பசிதான். மனிதர் சாப்பிடும் பண்டங்கள் எப்படியிருக்கும் என்பதையே மறந்திருந்தேன். இந்தப் பண்டங்களையெல்லாம் இப்போது எதிரே பார்த்ததும் குமட்டலெடுத்து விட்டது. எப்படியோ என் குமட்டலை உள்ளடக்கிக் கொண்டேன். ஆனால் அந்த மேஜை மீது வைத்த கண் வாங்குவதற்கு நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

“எனக்கு நேர் எதிரே முல்லர் உட்கார்ந்திருந்தான். பாதிக் குடிவெறி; தனது கைத்துப்பாக்கியை ஒரு கையிலிருந்து மற்றக் கைக்கு மாற்றிப் போட்டுப் பிடித்து, விளையாடிக் கொண்டிருந்தான். பாம்பு பார்ப்பது போல என்னை நேரே நிலைக்குத்திட்டு நோக்கினான். நல்லது. நான் நிமிர்ந்து நின்று, சிதைந்தொடிந்த பூட்ஸுக் குதிகளைச் சேர்த்து அடித்து உரத்த குரலில் ‘போர்க்கைதி, அந்திரேய் ஸகலோவ், உங்கள் சமுகத்தில் நிற்கிறேன், ஹெர் கமாண்டர்’ என்று அறிவித்தேன். ‘அப்படியா, ருஷ்ய இவான், நான்கு கன மீட்டரளவு கல்லுடைப்பது உனக்கு ரொம்ப அதிகமோ? ஏனப்பா?’ என்று அவன் என்னிடம் கேட்டான். ‘ஆமாம், ஹெர் கமாண்டர். அப்படித்தான்’ என்றேன். ‘உன்னைப் புதைப்பதற்கு ஒரு கன மீட்டரளவு போதுமா?’ ‘ஆமாம், ஹெர் கமாண்டர். எனக்கும் கண்டு மிஞ்சவும் செய்யும்.’

“அவன் எழுந்து நின்று, ‘நான் உனக்குப் பெரிய மரியாதை செய்யப் போகிறேன். இந்த வார்த்தைகளைச் சொன்னதற்காக நானே உன்னைச் சுடப் போகிறேன். இங்கேயானால் ஒரே கந்தரகோளமாகப் போய்விடும். ஆகவே வெளி முற்றத்துக்கு வா. அங்கே, வெளியே உன் கணக்கைத் தீர்க்கலாம்’ என்று சொன்னான். ‘உங்கள் இஷ்டம்’ என்றேன். ஒரு நிமிஷம் சிந்தித்துக்கொண்டு நின்றான். பிறகு துப்பாக்கியை மேஜை மேல் விசிறி எறிந்தான். ஷ்னாப்ஸை ஒரு குவளை நிறைய ஊற்றினான். ஒரு துண்டு ரொட்டியெடுத்து அதன் மீது ஒரு துண்டு கொழுப்பை வைத்தான். இவை எல்லாவற்றையும் என் பக்கம் நீட்டி, ‘சாவதற்கு முன்னால், ருஷ்ய இவான், ஜெர்மானியப் படைகளின் வெற்றிக்காக வாழ்த்துக் கூறிக் குடி’ என்றான்.

“நீட்டிய குவளையையும் ரொட்டியையும் எடுத்துக்கொள்ளத்தான் போனேன். எடுத்திருப்பேன். ஆனால் அந்தச் சொற்கள் என் செவியில் விழுந்ததும் ஏதோ என்னை உள்ளே சுட்டெரிப்பது போல இருந்தது. ‘ஒரு ருஷ்யப் படை வீரனான நான் ஜெர்மானியப் படைகளின் வெற்றிக்காக வாழ்த்திக் குடிப்பதா? ஏனப்பா, கமாண்டர், அடுத்தபடி இன்னும் என்னதான் செய்யச் சொல்லுவாயோ! நீயும் உன் ஷ்னாப்ஸும் நாசமாப் போக!’ என்று எண்ணினேன்.

“மேஜையின் மேல் குவளையையும் ரொட்டியையும் வைத்தேன். ‘உம்முடைய விருந்தளிப்புக்கு நன்றி. ஆனால் நான் குடிப்பதில்லை’ என்றேன். அவன் புன்சிரிப்புச் சிரித்தான். ‘ஓகோ, எங்கள் வெற்றிக்காக வாழ்த்திக் குடிக்க நீ விரும்பவில்லையா? அப்படியானால் உனது சாவுக்காகக் குடி!’ என்றான். எனக்கு அதனால் நஷ்டமென்ன? ‘எனது சாவிற்கும் அதன்பிறகு சித்திரவதையிலிருந்து எனக்கு உண்டாகும் விடுதலைக்கும் குடிக்கிறேன்’ என்று சொல்லி, குவளையை எடுத்து இரண்டே மடக்குகளில் குடித்துவிட்டேன். ஆனால் ரொட்டியை மட்டும் தொடவில்லை. உதடுகளைச் சற்றே கையினால் மரியாதையாகத் துடைத்துவிட்டு ‘உமது விருந்துக்கு நன்றி. நான் தயாராக இருக்கிறேன், ஹெர் கமாண்டர். இப்போது நீர் என் கணக்கைத் தீர்க்கலாம்’ என்றேன்.

“ஆனால் அவன் என்னைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு, ‘சாவதற்கு முன் கொஞ்சம் ஏதேனும் தின்னடா’ என்றான். அதற்கு நான் என்ன சொன்னேன், தெரியுமா? ‘முதலாவது குவளை குடித்த அப்புறம் நான் ஒருபோதும் தின்பதில்லை’ என்றேன். பிறகு அவன் மறுபடியும் குவளை நிறைய ஊற்றி என்னிடம் தந்தான். இரண்டாவது தடவையும் குடித்தேன். அப்புறமும் நான் உணவைத் தீண்டவே இல்லை. எது வந்தாலும் வரட்டும் என்று துணிச்சலைப் பணயம் வைத்து ஆடிக் கொண்டிருந்தேன், தெரியுதா! அட, வேறு ஒன்றுமில்லை என்றாலும் சாவதற்காக வெளியே போகுமுன்பு நன்றாகக் குடித்து போதையாவது ஏற்றிக் கொள்வோமே என்றெண்ணினேன். கமாண்டரின் சணல் புருவங்கள் சட்டென்று நெறிந்தன. ‘ஏன் தின்ன மாட்டேன் என்கிறாய், ருஷ்ய இவான்? கூச்சப்படாதே!’ என்றான். ஆனால் நான் பிடித்த பிடியை விடவில்லை. ‘மன்னிக்க வேண்டும், ஹெர் கமாண்டர், இரண்டாவது குவளைக்குப் பிறகுங்கூட நான் தின்னுவதில்லை’ என்றேன். அவன் கன்னங்களை உப்பி மூக்கால் செருமினான். பிறகு பெரிய அதிர்வேட்டுச் சிரிப்பு சிரித்தானே பார்க்கணும். சிரித்துக்கொண்டே ஜெர்மன் மொழியில் ஏதோ மளமளவென்று சொன்னான். எனது சொற்களைத் தனது நண்பர்களுக்கு அவன் மொழிபெயர்த்துச் சொல்லியிருக்க வேண்டும். மற்றவர்களும் சிரித்தார்கள். நாற்காலிகளைப் பின்னே தள்ளி, தங்கள் பானை மூஞ்சிகளைத் திருப்பி என்னைப் பார்த்தார்கள். அவர்களுடைய பார்வையில் ஏதோ மாறுதல் ஒன்று இருப்பது தெரிந்தது. சற்றே கனிவான பார்வை போலத் தோன்றியது.

“கமாண்டர் எனக்கு மூன்றாவது குவளையும் ஊற்றிக் கொடுத்தான். அவன் கைகள் சிரிப்பினால் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தக் குவளையைப் பையக் குடித்தேன். ரொட்டியில் ஒரு சிறு துண்டைக் கடித்துத் தின்று எஞ்சியதை மேஜை மேல் வைத்துவிட்டேன். பசியினால் அரை உயிராயிருந்த போதிலும், அவர்கள் என்னிடம் வீசியெறிந்த பொருக்குகளை அவுக் அவுக்கென்று தின்னப் போவதில்லை என்றும், எனது சொந்த ருஷ்யப் பெருமிதமும் செருக்கும் என்னிடம் இருந்தன என்றும், அவர்கள் விரும்பினது போன்று, நான் விலங்காக மாறிவிடவில்லை என்றும் அந்தப் பரத்தைப் பயல்களுக்குக் காட்ட விரும்பினேன்.

“அதன் பிறகு முல்லர் முகத்தில் காரியக்கார நோக்கு வந்தது. மார்பில் தொங்கிக் கொண்டிருந்த இரும்புச் சிலுவைப் பதக்கங்களைச் சரிசெய்துகொண்டான். ஆயுதம் எதுவும் இல்லாமல் என் பக்கத்தில் வந்தான். ‘இதோ பார், ஸகலோவ்! நீ உண்மையான ருஷ்யப் போர்வீரன். நீ நேர்த்தியான போர்வீரன். நானுங்கூடப் போர்வீரனல்லவா! வீரப் பண்புடைய பகைவன் மேல் எனக்கு எப்போதும் மரியாதை. நான் உன்னைச் சுடப்போவதில்லை. அதிலும், இன்று எங்கள் வீரப் படைகள் வோல்கா கரையை நெருங்கி ஸ்டாலின்கிராட் முழுவதையும் கைப்பற்றிக்கொண்டு விட்டன. இது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி. அதனால் நான் கருணை கூர்ந்து உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன். குடிசைக்குப் போ. இந்தா, இதையும் உன்னுடன் கொண்டுபோ. இது உன்னுடைய தைரியத்திற்குப் பரிசு’ என்று சொல்லி மேஜையிலிருந்து ஒரு ரொட்டியையும் ஒரு கட்டி பன்றிக் கொழுப்பையும் எடுத்து என்னிடம் தந்தான்.

“ரொட்டியை மார்போடு சேர்த்து முடிந்தவரையில் இறுக அணைத்துக்கொண்டேன். கொழுப்பை இடது கையில் பிடித்துக் கொண்டேன். நிகழ்ச்சிகள் இப்படி எதிர்பாராத முறையில் நடந்தமையால் பிரமை தட்டிப் போய் நன்றி என்றுகூடச் சொல்லாமல், சட்டென்று இடப்புறமாகப் பின் திரும்பி நேரே வெளியில் போனேன். என் நினைப்பு என்ன தெரியுமா? இந்தப் படுபாவி இதோ என் தோள் பட்டைகளினூடே வெடி தீர்த்துவிடப் போகிறானே, நான் இந்தத் தீனியை எனது கூட்டாளிகளுக்கு ஒருபோதும் கொண்டு கொடுக்க முடியாதே என்பதுதான். ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. இந்தத் தடவையும் சாவு என்னை நெருங்கி வந்துவிட்டு அப்பால் போய்விட்டது. அதனுடைய கடிய மூச்சுக்காற்று மட்டுந்தான் என் மேல் பட்டது போலிருந்தது.

“காவல் முகாம் தலைவனின் காரியாலயத்தை விட்டு தள்ளாடவே செய்யாமல் வெளியே வந்தான். ஆனால் வெளிப்புறத்தே தலைகால் தெரியாமல் ஆடி விழுந்துகொண்டே போனேன். குடிசைக்குள் எகிறி நுழைந்ததும் செமென்ட் தரை மேல் நெடுஞ்சாண் கிடையாக விழுந்தேன். எனக்கு ஸ்மரணை தப்பிவிட்டது. கூட்டாளிகள் எனக்கு மயக்கம் தெளிவித்தார்கள். அப்போது இன்னும் இருட்டாகவே இருந்தது. ‘என்ன நிகழ்ந்தது சொல்லு!’ என்று கேட்டார்கள். அப்போதுதான் முகாம் தலைவன் காரியாலயத்தில் நடந்ததெல்லாம் எனக்கு நினைவு வந்தது; அவர்களுக்குச் சொன்னேன். ‘தீனியை நாம் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது?’ என்று என் பக்கத்துப் பலகைப் படுக்கையிலிருந்தவன் நடுங்கிய குரலில் கேட்டான். ‘எல்லாருக்கும் ஒருப்போலே பங்குகள்’ என்றேன். விடிந்து வெளிச்சம் வரும்வரையும் காத்திருந்தோம். ரொட்டியையும் பன்றிக் கொழுப்பையும் ஒரு துண்டு நூலைக் கொண்டு துண்டித்தோம். ஒவ்வொருவருக்கும் தீப்பெட்டி அளவே உள்ள ஒரு துண்டு ரொட்டி கிடைத்தது; ஒரு பொருக்குக் கூட வீணாக்கப்படவில்லை. கொழுப்போ, எங்கள் உதடுகளில் ஒட்டுவதற்கே போதுமானதாக இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா? ஆனால் எல்லாருக்கும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டோம்.

“விரைவில் எங்களில் எல்லாரிலும் வலிவுள்ள முந்நூறு பேரைச் சதுப்பு நிலத்தில் வடிகால் வெட்டுவதற்காக இட்டுப் போனார்கள். அப்புறம் சுரங்கங்களில் வேலை செய்வதற்காக ரூர் பிரதேசத்துக்குப் போனோம். அங்கே 1944 வரைக்கும் தங்கினேன். அந்தக் காலத்திற்குள் நமது படைவீரர்கள் ஜெர்மன்காரர்கள் விழுங்கியிருந்த சில பகுதிகளைக் கக்க வைத்துவிட்டார்கள். ஆகவே பாசிஸ்டுகள் கைதிகளான எங்களை வெறுத்து ஒதுக்குவது குறைந்தது. ஒரு நாள் எங்களில் பகல் வேலை முறைக்காரர்கள் எல்லாரையும் வரிசையாக நிறுத்தினார்கள். காண வந்த யாரோ ஒரு ஜெர்மன் ஓபர்-லெப்டினன்ட், ஒரு துபாஷி மூலமாக, ‘படையிலோ அதற்கு முன்போ டிரைவராக வேலை பார்த்தவர்கள் யாராவது இருந்தால் ஓரடி முன் வாருங்கள்’ என்று சொன்னான். டிரைவர்களாக இருந்த ஏழு பேர் முன் வந்தோம். சில பழைய மேலுடுப்புகளை எங்களுக்குக் கொடுத்துக் காவலுடன் பாட்ஸ்டமுக்குக் கூட்டிச் சென்றார்கள். அங்கே போனதும் எங்களைப் பிரித்தனர். சாலைகள் போடவும் தற்காப்பு அரண்கள் கட்டவும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த ஸ்தாபனமான ‘தோட்’டில் எனக்கு வேலை கொடுத்தார்கள்.

“நான் ஜெர்மன் எஞ்சினீயர் படையின் மேஜர் ஒருவனுடைய ‘ஒபேல்-அட்மிரல்’ காரை ஓட்டினேன். பாசிஸ்ட் பன்றியைப் பார்க்க வேண்டுமானால் அவனைப் பார்த்தால் போதும். குட்டைப் பயல்; சால் வயிறன்; எவ்வளவு அகலமோ அவ்வளவு உயரம்; பெண்பிள்ளையினதைப் போல பருத்த பின்பக்கம். அவன் மோவாய்க்குக் கீழே மூன்று சதை மடிப்புகள்; பிடரியில் மூன்று பெரிய மடிப்புகள் தொளதொளவென்று தொங்கிக் கொண்டிருந்தன. அவன் உடம்பிலிருந்த கொழுப்பு மட்டும் ஓர் அந்தர்வெயிட்டு எடை இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். நடக்கும்போது அவனுக்கு ரயில் எஞ்சின் போல புஸ் புஸ்ஸென்று மூச்சு வாங்கும். சாப்பிட உட்கார்ந்தானோ, மூக்குப் பிடிக்க உள்ளே ஏற்றிவிட்டுத்தான் எழுந்திருப்பான். மொச்சு மொச்சென்று சவைப்பதும் பிராண்டிக் குப்பியிலிருந்து மடக்கு மடக்கென்று குடிப்பதுமாக நாள் முழுவதும் இரை எடுப்பான். எப்போதாவது எனக்கும் ஏதாவது பொருக்குக் கிடைக்கும். சாலையில் வண்டியை நிறுத்துவான். டின்களைத் திறந்து ஏதேனும் இறைச்சிப் பணியாரத்தையும் பாலடைக் கட்டியையும் உள்ளே தள்ளிவிட்டுச் சாராயம் குடிப்பான். மனது குளிர்ந்திருந்தால் நாய்க்கு எறிவது போன்று ஒரு துண்டை என் பக்கம் சுண்டி எறிவான். ஒருபோதும் இந்தா என்று அதை என் கையில் கொடுத்ததே கிடையாது. அடேயப்பா! கிடையவே கிடையாது. அது தன் மதிப்புக்குக் குறைவு என்பது அவன் நினைப்பு. இருந்தாலும் நான் முன்பு இருந்த முகாமுக்கும் இதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருந்தது. சிறுகச் சிறுக மறுபடி நானும் ஒரு மனிதன் போலத் தோன்றத் தொடங்கினேன். என் எடை கூட அதிகமாகத் தொடங்கிற்று.

“சுமார் இரண்டு வாரங்கள் பாட்ஸ்டமுக்கும் பெர்லினுக்குமாக மேஜரைக் கொண்டுபோய் வந்தேன். பிறகு நமது படைகளுக்கு எதிராகத் தற்காப்புகளைக் கட்ட அவனைப் போர் முன்னணிப் பகுதிக்கு அனுப்பினார்கள். அப்போது தான் இரவில் உறக்கத்தையே மறந்தேன். என்னுடைய நாட்டிற்கு, என்னுடைய தோழர்களிடம் எப்படித் தப்பிச் செல்வது என்று எண்ணமிடுவதிலேயே இராப்போது முழுவதும் கழியும்.

“போலட்ஸக் நகருக்குச் சென்றோம். இரண்டு வருடங்களுக்குப் பின் முதல் தடவையாக வைகறையில் நமது பீரங்கிப் படையின் முழக்கத்தைக் கேட்டேன். அந்த ஒலி கேட்டதும் எனது நெஞ்சு எப்படி அடித்துக்கொண்டது என்பதைச் சொல்லவும் வேண்டுமா? உண்மையாக, அண்ணே, நான் முதன் முதலாக இரீனாவுடன் காதல் புரியத் தொடங்கினபோது கூட என் நெஞ்சு ஒருபோதும் அப்படி அடித்துக்கொண்டதில்லை! போலட்ஸ்குக்குக் கிழக்கே சுமார் பதினெட்டு கிலோமீட்டர்களுக்கு அப்பால் சண்டை நடந்துகொண்டிருந்தது. நகரிலிருந்த ஜெர்மானியருக்கா, எரிச்சலான எரிச்சலில்லை. திகில் வேறே. எனது தொப்பை மேஜரோ வரவர மிகுதியாகக் குடிக்கத் தொடங்கினான். பகற்பொழுதில் காரில் சுற்றுவோம். அரண்களை எப்படிக் கட்ட வேண்டும் என்பதைப் பற்றி அவன் கட்டளையிடுவான். இரவில் தனியே உட்கார்ந்து தண்ணி போடுவான். ஒரேயடியாக ஊதிப் போனான்; அவனது கண்களுக்கு அடிப்புறம் சதை பைகள் போலத் தொங்கியது.

“‘சரி, இதுதான் எனக்கு ஏற்ற நேரம். இனியும் காத்திருக்கத் தேவையில்லை’ என்று எண்ணினேன். ‘நான் மட்டும் தனியாகத் தப்பிச் செல்லப் போவதில்லை. என்னுடன் இந்தத் தொப்பை மேஜரையும் இழுத்துச் செல்ல வேண்டும். அங்கே அவன் மிகவும் பயன்படுவான்.’

“சில பாழ் வீடுகளுக்கிடையே கனமான இரும்புக்கட்டி ஒன்று கண்டெடுத்து அதைக் கந்தையால் சுற்றினேன்; மேஜரை நான் தாக்க வேண்டியிருந்தால் ரத்தம் வரக்கூடாது என்பதற்காக. சாலையிலே டெலிபோன் கம்பி கொஞ்சம் கிடைத்தது. தேவையான எல்லாவற்றையும் சேகரித்துக் காரின் முன் சீட்டுக்கு அடியில் தயாராக ஒளித்து வைத்தேன். ஒரு நாள் மாலை, நான் ஜெர்மன் படைகளை விட்டுத் தப்புவதற்கு இரண்டு நாள் முன்பு, பெட்ரோல் நிறைக்கும் நிலையத்திலிருந்து திரும்பி வந்தபோது ஜெர்மன் சிப்பாய் ஒருவன் குடிவெறியில் கண்ணுமண்ணு தெரியாமல் தள்ளாடிக்கொண்டு, ஒரு சுவருடன் முரண்டிக் கொண்டிருந்ததைக் கண்டேன். உடனே காரை நிறுத்தினேன். சிதைந்துபோன ஒரு கட்டிடத்துள் அவனை அழைத்துச் சென்று, அவனது இராணுவ உடைகளையும் குல்லாயையும் எடுத்துக் கொண்டேன். பிறகு இவை எல்லாவற்றையும் முன்சீட்டிற்கு அடியில் ஒளித்து வைத்துத் தயாராக இருந்தேன்.

“ஜூன் 29-ம் தேதி காலையில் எனது மேஜர் நகருக்கு வெளியே டிரஸ்னீட்ஸா இருக்கும் திக்கில் காரை ஓட்டிச் செல்லும்படி கூறினான். அங்கு ஏதோ தற்காப்பு அரண்கள் அவன் மேற்பார்வையில் கட்டப்பட்டுக் கொண்டிருந்தன. காரை ஓட்டிச் சென்றபோது என் நெஞ்சு திக்குதிக்கென்று அடித்துக் கொண்டிருந்தது. மேஜர் பின்சீட்டில் உட்கார்ந்து அக்கடாவென்று ஒரு தூக்கம் போட்டுக் கொண்டிருந்தான். முதலில் வேகமாகக் காரை ஓட்டினேன். ஆனால் நகருக்கு வெளிப்புறத்தில் வேகத்தைக் குறைத்துப் பைய ஓட்டினேன். பிறகு காரை நிறுத்தினேன். வெளியே இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்தேன். பின்னால் நெடுந்தூரத்தில் இரண்டு லாரிகள் மெதுவாக வந்துகொண்டிருந்ததைக் கண்டேன். நான் வைத்திருந்த இரும்புக் கட்டியை வெளியே எடுத்தேன். கதவைப் பரக்கத் திறந்தேன். தொப்பை மேஜர் ஸீட்டில் மல்லாக்காகச் சாய்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவன் பெண்டாட்டி பக்கத்திலே இருந்ததாக எண்ணம் போலிருக்கிறது! ஆயிற்றா. அவனது இடப்புறப் பொருத்தைப் பார்த்து இரும்புக் கட்டியால் மட்டென்று ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான். அவன் தலை மார்பின் மேல் துவண்டு விழுந்தது. இன்னும் நன்றாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இன்னொரு போடு போட்டேன். ஆனால் அவனைக் கொல்ல விரும்பவில்லை. உயிரோடே நம் பக்கத்திற்குக் கொண்டுவரவே விரும்பினேன். நமது ஆட்களுக்கு அவன் நிறையச் செய்திகளைச் சொல்லக்கூடுமே. அதனால்தான் கொல்ல விரும்பவில்லை. ஆகவே அவனுடைய கைத்துப்பாக்கியைத் தோலுறையிலிருந்து வெளியே எடுத்து என் சட்டைப்பைக்குள் திணித்துக்கொண்டேன். பிறகு பின் சீட்டிற்குப் பின்னால் ஒரு கவட்டைப் பிடியைச் செருகினேன். மேஜரின் கழுத்தில் டெலிபோன் கம்பியைச் சுற்றிக் கட்டிக் கவட்டைப் பிடியுடன் சேர்த்துப் பிணித்தேன். நான் வேகமாகக் காரைச் செலுத்தும்போது தடுமாறிப் பக்கவாட்டில் அவன் விழாதிருக்கவே அந்த மாதிரிக் கட்டினேன். ஜெர்மானிய இராணுவ உடையையும் குல்லாயையும் அணிந்துகொண்டேன். பிறகு விட்டேன் காரை. எங்கே தெரியுமா? தரை அதிர்ந்து கிடுகிடுத்துக் கொண்டிருந்த இடத்துக்கு, அதுதான்; சண்டை நடந்த இடத்திற்கு.

“இரண்டு அரண்களுக்கு இடையே ஜெர்மானிய முன்னணிக்குள் விர்ரென்று காரை விட்டுக்கொண்டு போனேன். இயந்திரத் துப்பாக்கி வீரர்கள் சிலர் ஒரு அரணிலிருந்து வெளியே மெள்ளத் தலையை நீட்டினார்கள். என்னுடன் ஒரு மேஜர் இருந்ததை அவர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காகக் காரின் வேகத்தை வேண்டுமென்றே குறைத்தேன். நான் அப்பால் போகக்கூடாது என்பதைக் காட்டுவதற்காக அவர்கள் கூப்பாடு போட்டுக் கைகளை ஆட்டத் தொடங்கினார்கள். நானோ அதைப் புரிந்துகொள்ளாதது போலப் பாசாங்கு செய்து, எண்பது கிலோமீட்டர் வேகத்தில் காரைக் கடகடவென்று ஓட்டி அப்பால் போய்விட்டேன். நடப்பது என்ன என்பதை அவர்கள் சரியாகத் தெரிந்துகொண்டு சுடத் தொடங்குவதற்கு முன்பே நான் இரு தரப்புக்கும் இடையிலிருந்த பொது நிலத்திற்குச் சென்றுவிட்டேன். வெடிகுண்டுகள் வீழ்ந்த பள்ளங்களில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக இடசாரி வலசாரியாக வளைந்து வளைந்து ஓட்டிக்கொண்டு போனேன். அப்பா, நான் ஓடிய ஓட்டம் உண்டே, அதற்கு முயலெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

“பின்னாலிருந்து ஜெர்மன்காரர்கள் சுட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, என்னடாவென்றால் நமது பயல்களே மிகுந்த ஆத்திரங்கொண்டு முன்புறத்திலிருந்து என்னைக் குறிவைத்துத் தாக்கினார்கள். காரின் முன்புறக் கண்ணாடியில் நான்கு குண்டுகள் பாய்ந்து தொளைத்துவிட்டன. ரேடியேட்டரும் சில இடங்களில் பொத்தலாகிவிட்டது. ஆனால் அருகே ஓர் ஏரியையும் தோப்பையும் கண்டேன். நமது ஆட்கள் காரை நோக்கி ஓடி வந்தார்கள். ஆகவே நேரே காட்டிற்குள்ளே விட்டடித்தேன்; கதவை விரியத் திறந்தேன். தடாலென்று தரைமேல் விழுந்து அதை முத்தமிட்டேன். மூச்சு விடக்கூட என்னால் முடியவில்லை.

“படைச் சட்டை மேல் நான் முன் கண்டிராத ஒரு வகைக் காக்கித் தோள்பட்டிகளுடன் வந்த ஓர் இளைஞன் முதலில் என்னை நெருங்கி பல்லைக் கடித்துக்கொண்டே, ‘ஏனடா, ஜெர்மன் பிசாசே! வழி தவறிவிட்டதா, ஊம்?’ என்றான். நான் ஜெர்மானியப் படையுடுப்பை விர்ட்டென்று கழற்றிப் போட்டேன். ஜெர்மானியக் குல்லாயைக் காலடியில் கடாசினேன். பின்பு அவனைப் பார்த்து, ‘என் அழகு ராசா! அப்பா, மகனே! நானா ஜெர்மன்காரன்? நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் வரோனெஷ் அல்லவா! போர்க்கைதியாக இருந்தேன். தெரிகிறதா? அதோ அந்தக் காரில் அமர்ந்திருக்கிறதே கொழுத்த பன்றி, அதைக் கட்டவிழ்த்துவிடு; அதனுடைய தோல் பையை எடுத்துக்கொள். உனது படைத் தலைவரிடம் அதை இட்டுச் செல்’ என்றேன். இளைஞனிடம் எனது கைத்துப்பாக்கியைக் கொடுத்தேன். ஒருவர் பின் ஒருவராக எத்தனையோ அதிகாரிகள் மாற்றி மாற்றி என்னை விசாரித்தார்கள். முடிவில் சாயங்கால வாக்கில், டிவிஷன் தலைவரான கர்னலிடம் செல்ல வேண்டியிருந்தது. அதற்குள் குளி தெளி, சாப்பாடு, விசாரணை எல்லாக் கச்சவடமும் முடிந்துவிட்டது. எனக்குப் புதிய இராணுவ உடையும் கொடுத்திருந்தார்கள். ஆகவே சுத்தமான உடம்பும் உள்ளமும் கொண்டு, பொருத்தமாக உடையணிந்து, தகுந்த முறையில் கர்னல் இருந்த நிலவறைக்குச் சென்றேன். கர்னல் தனது மேஜையருகிலிருந்து எழுந்து என்னிடம் வந்தார். அங்கே பல ஆபீசர்கள் இருந்தார்கள். அவர்கள் முன்னிலையில் என்னை அணைத்துக் கொண்டு, ‘படைவீரனே, எங்களுக்கு நீ கொண்டுவந்த பரிசுக்காக நன்றி. நீ கொண்டுவந்த மேஜரிடமிருந்தும் அவனது தஸ்தாவேஜுப் பையிலிருந்தும் எங்களுக்கு நிரம்பத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. போரின் முன்னணியில் இருபது ஜெர்மானியரைக் கைப்பற்றினாலும் அவர்களிடமிருந்து இவ்வளவு நிறையத் தகவல் கிடைக்காது. உனக்கு விருது கிடைக்குமாறு சிபாரிசு செய்கிறேன்’ என்று சொன்னார். அவரது பேச்சும் அவர் என்னிடம் காட்டிய பரிவும் என் உள்ளத்தை உருக்கின. என் உதடுகள் நடுங்கின. இறுக்கமாக வைத்திருக்க முயன்றேன். முடியவில்லை. என்னால் பதில் சொல்ல முடிந்ததெல்லாம் இவ்வளவுதான்: ‘தோழர் கர்னலே, ஒரு துப்பாக்கிப் படைப் பகுதியில் என்னைச் சேர்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.’

“ஆனால் கர்னல் என்ன பண்ணினார், தெரியுமா! ஒரே சிரியாய்ச் சிரித்து என் தோளிலே தட்டி, ‘பலே, உன்னாலே நிற்கக்கூட முடியவில்லையே! நீ எப்படிச் சண்டை போட முடியும் என்று எண்ணுகிறாய்? இப்போதே உன்னை மருத்துவ விடுதிக்கு அனுப்புகிறேன். அங்கே உன் உடம்பைச் சீர்படுத்திக் கொஞ்சம் சதை பிடிக்கச் செய்வார்கள். அதன் பின்பு நீ வீடு சென்று குடும்பத்தவருடன் ஒரு மாதம் விடுமுறையைக் கழித்துவிட்டுத் திரும்பி வா. அப்போது எப்பகுதியில் உன்னைச் சேர்க்கலாம் என்பது பற்றி எண்ணுவோம்’ என்றார்.

“கர்னலும் அவருடன் நிலவறையிலிருந்த ஆபீசர்கள் எல்லோரும் என்னுடன் கைகுலுக்கி என்னை நெஞ்சார வழியனுப்பினார்கள். வெளியே வந்ததும் என் தலை சுற்றத் தொடங்கியது. நான் கைதியாக இருந்த ஈராண்டுகளில் மனிதனைப் போல நடத்தப்படுவது எப்படியிருக்கும் என்பதையே மறந்துவிட்டேன். என்ன ஆயிற்று தெரியுமா, அண்ணே! நெடுநாள் வரைக்கும் எனக்கு மேற்பட்ட ஆபீசரிடம் பேசும்போதெல்லாம் எங்கே அடி விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் தலையைத் தோள்களுக்கிடையே இடுக்கிக்கொள்ளும் பழக்கத்தை என்னால் விடவே முடியவில்லை. அந்தப் பாசிஸ்டுகளின் முகாம்களிலெல்லாம் இம்மாதிரியான பயிற்சிதான் எங்களுக்குக் கிடைத்தது. பழக்கம் லேசில் போகுமா!

“மருத்துவ விடுதியில் சேர்க்கப்பட்டதுமே இரீனாவுக்குக் கடிதம் எழுதினேன். நான் எப்படிச் சிறைப்பட்டேன், எப்படி மேஜரை இழுத்துக்கொண்டு தப்பியோடி வந்தேன் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு சில சொற்களில் அவளுக்கு எழுதினேன். சிறு குழந்தை பெருமையடித்துக் கொள்ளுமே, அதுபோலப் பெருமையடிக்கும் பழக்கம் என்னிடம் எங்கிருந்துதான் வந்ததோ சொல்ல முடியாது. எனக்கு விருது தரும்படி சிபாரிசு செய்வதாகக் கர்னல் வாக்களித்ததைக் கூட என்னால் சொல்லாமல் அடக்கிவைத்துக்கொள்ள முடியவில்லையென்றால் பார்த்துக்கொள்ளுமேன்!

“இரண்டு வாரங்கள் வெறுமே தின்பதும் உறங்குவதுமாகக் கழித்தேன். ஒவ்வொரு வேளையும் சிறிதளவாக நாளுக்குப் பல தடவை உணவு கொடுத்தார்கள். நான் விரும்பிய அளவு உணவு எனக்குக் கொடுத்திருந்தால் முதலுக்கே மோசம் வந்திருக்கும் என்று மருத்துவர் சொன்னார். ஆனால் இரண்டு வாரங்களுக்கு அப்பறமோ எனக்கு உணவைக் கண்டாலே பிடிக்கவில்லை. என் வீட்டிலிருந்து பதிலே வரவில்லை. ஆகையால் நான் ஏங்கிப் போனேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். சாப்பிட வேண்டும் என்ற நினைப்பே இல்லை. உறக்கமும் வர மாட்டேன் என்றது. என்னென்னவோ பயங்கர எண்ணங்களெல்லாம் என் மூளைக்குள் நெளிந்து குடைந்து கொண்டே இருந்தன. மூன்றாவது வாரத்தில் வரோனெஷிலிருந்து எனக்குக் கடிதம் வந்தது. ஆனால் அது இரீனாவிடமிருந்து இல்லை. என் அண்டை வீட்டுக்காரத் தச்சனிடமிருந்து வந்தது. அந்த மாதிரிக் கடிதம் எவருக்குமே எப்போதுமே வரவேண்டாம் என்று சொல்லுவேன். என்ன கொடுமை நிறைந்த கடிதம்! விமானத் தொழிற்சாலை மீது ஜெர்மானியர் குண்டு போட்டார்கள் என்றும், ஒரு பெரிய குண்டு நேரே எனது குடிலின் மேல் விழுந்ததென்றும் எழுதியிருந்தான். அந்தக் குண்டு விழுந்தபோது இரீனாவும் பெண் குழந்தைகளும் வீட்டிலேயேதான் இருந்தார்களாம்… வீடு இருந்த இடத்தில் ஓர் ஆழமான கிடங்குதான் இருந்ததென்றும் அவன் எழுதியிருந்தான்… முதல் முறை அக்கடிதத்தை முழுதும் படிக்க என்னால் முடியவில்லை. எனக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. எனது நெஞ்சிலிருந்த ஆசையெல்லாம் பிழிந்தெடுத்தது போல வெளியேறி, அது இறுகிய பந்து போல் ஆகிவிட்டதாகத் தோன்றிற்று. கூம்பிய நெஞ்சு இனி மலரவே மலராது என்று கூட எண்ணினேன். படுக்கை மீது அப்படியே மல்லாந்து கிடந்தேன். கொஞ்சம் மன வன்மை பெற்ற பிறகு கடிதத்தை முடிவு வரைக்கும் படித்தேன். குண்டு விழுந்தபோது அனத்தோலிய் ஊருக்குள் போயிருந்தான் என்று எனது அண்டை வீட்டான் எழுதியிருந்தான். மாலையில் தனது வீடு இருந்த இடத்திற்குப் போனானாம். குண்டு குடைந்த பள்ளத்தைப் பார்த்துவிட்டு அன்று இரவே திரும்பவும் நகரத்திற்குச் சென்றானாம். போவதற்கு முன்பு, தான் போர் முன்னணிக்குச் செல்ல வலுவில் பெயர் கொடுக்கப் போவதாக என் அண்டை வீட்டானிடம் சொல்லிச் சென்றானாம். இவ்வளவுதான்.

“எனது நெஞ்சு ஒருவாறு தேறி ரத்த ஓட்டம் ஙொய் என்று காதில் ஒலித்தது. அப்போது நினைத்துக் கொண்டேன், ரயிலடியில் நாங்கள் பிரிந்தபோது இரீனா எப்படி என்னைக் கட்டிக்கொண்டு தொங்கினாள் என்பதை. இந்த உலகில் நாங்கள் ஒருவரை யொருவர் மீண்டும் காணப் போவதில்லை என்பதை அவளுடைய நெஞ்சு எப்படியோ அப்போதெல்லாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும். நான் அவளை நெட்டித்தள்ளிவிட்டேன்… ஒரு காலத்திலே எனக்கும் குடும்பம் இருக்கத்தான் செய்தது; எனக்குச் சொந்தமான வீடுங்கூடத்தான் இருந்தது; அதெல்லாம் உருவாக்க எத்தனை ஆண்டுகள் பிடித்தன தெரியுமா! ஆனால் எல்லாம் ஒரே நொடியில் மின்வெட்டுப் போல அழிந்துவிட்டது; ஒண்டிக் கட்டையாகிவிட்டேன். இப்படிக் குழம்பியடித்துப்போன என்னுடைய வாழ்க்கை ஒரு கனவாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணினேன். ஏன், நான் கைதியாக இருந்தபோது கிட்டத்தட்ட ஒவ்வோர் இரவும் இரீனாவுடனும் குழந்தை குட்டிகளுடனும் பேசுவதுண்டு. ஆமாம், எனக்குள்ளாகவே தான்; ஒரு பயலுக்கு வெளித் தெரியாது. நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றும் அவர்கள் துயரப்படத் தேவையில்லை என்றும் சொல்லி, அவர்களை மகிழ்விக்க முயன்றேன். நான் முரடன், இந்தக் கொடுமையெல்லாம் என்னால் தாங்க முடியும். நாம் எல்லோரும் மீண்டும் ஒரு நாள் ஒன்று சேர்ந்து இருப்போம் என்றும் சொன்னேன். ஆகவே, இரண்டு ஆண்டுகளாகச் செத்தவர்களுடனா பேசிக் கொண்டிருந்தேன்?”

அந்தப் பெரிய மனிதன் ஒரு நிமிஷம் பேசாதிருந்தான். பிறகு நடுக்கத்துடன், மாறுபட்ட, தாழ்ந்த குரலில் “கொஞ்சம் புகை குடிப்போம், அண்ணே. எப்படியோ, என் தொண்டையிலே ஏதோ வந்து அடைத்துக்கொள்வது போலிருக்கிறது” என்றான்.

நாங்கள் சுருட்டு பற்றவைத்தோம். வெள்ளமிட்டிருந்த காட்டில் ஒரு மரங்கொத்தி டொக் டொக்கென்று கொத்துவது கேட்டது. ஆல்டர் மரங்களின் உலர்ந்த இலைகள் வெப்பமான இளங்காற்றில் சலசலத்தன. இழுத்துக் கட்டப்பட்ட பாய்களுடன் கப்பல்கள் செல்வது போன்று மேலே நீலவானில் மேகங்கள் மிதந்து சென்றன. இவ்வாறு சில நிமிஷங்களில் கம்பீரமான அமைதி நிலவியது. இளவேனில் காலம் நிறைவேற்ற வேண்டிய பெரிய செயலுக்காக, வாழ்க்கையில் உயிர்ப்பு அழியாது நிலைத்திருக்கும் என்று மீண்டும் ஊர்ஜிதப்படுத்துவதற்காகத் தயாராகிக் கொண்டிருந்த இந்த எல்லையற்ற உலகம் முற்றும் வேறுபட்டதாக எனக்குத் தோன்றியது.

மௌனமாயிருப்பது தாங்க முடியாத அளவு வருத்தம் தந்தது. ஆகவே “என்ன நிகழ்ந்தது பிறகு?” என்று கேட்டேன்.

“என்ன நிகழ்ந்தது பிறகு?” என்று தன் விருப்பம் இன்றியே பதில் தந்தான். “பிறகு ஒரு மாதம் விடுமுறை பெற்றேன். ஒரு வாரத்தில் வரோனெஷுக்கு வந்துவிட்டேன். என் குடும்பத்துடன் ஒரு காலத்தில் நான் வாழ்ந்திருந்த இடத்திற்குக் கால்நடையாகவே சென்றேன். அங்கே பெரிய ஆழமான குடைகுழி; அழுக்கான கலங்கல் நீர் பள்ளத்தில் நிரம்பியிருந்தது. சுற்றிலும் கோரைகள் இடுப்புயரம் வளர்ந்திருந்தன. எங்கும் ஒரே வெறுமை, ஒரு சந்தடியில்லை. இடுகாடு போன்று அமைதி நிலவியது. அப்போதுதான் அண்ணே, என் உணர்ச்சி குமுறியது. நெஞ்சில் குமைந்த துயரமெல்லாம் பீறிக்கொண்டு வெளிப்பட்டது. உமக்குச் சொல்வதற்கென்ன! நான் அதைக் கட்டுப்படுத்தாமல் நின்று கொண்டிருந்தேன். பிறகு ரயில் நிலையத்திற்குச் சென்றேன். அவ்வூரில் ஒரு மணி நேரம் கூட என்னால் தங்க முடியவில்லை. அன்றைக்கே டிவிஷனுக்குத் திரும்பிச் சென்றேன்.

“ஆனால் சுமார் மூன்று மாதங்கள் கழிந்த பின்பு மேகங்களினூடே வெயில் விளங்கித் தோன்றுவது போல் என் வாழ்வில் மகிழ்ச்சி மின்னிட்டது. அனத்தோலிய் பற்றிச் செய்தி கிடைத்தது; இன்னொரு போர்முனையிலிருந்து எனக்குக் கடிதம் அனுப்பினான். என்னுடைய அண்டை வீட்டுக்காரனிடமிருந்தே எனது முகவரியை அவன் தெரிந்து கொண்டிருக்கிறான். தொடக்கத்தில் பீரங்கிப் படைக் கல்லூரி ஒன்றுக்கு அவன் சென்றிருந்தானாம். கணக்கில் இயல்பாக அவனுக்கிருந்த திறமை அங்கே அவனுக்கு உதவிற்று. ஓர் ஆண்டுக்குப் பின்னர் சிறப்பாகத் தேர்வுற்றுப் போர்முனைக்குச் சென்றானாம். இப்போது காப்டன் பதவி தனக்குத் தரப்பட்டிருப்பதாக எழுதியிருந்தான். பீரங்கிப் பட்டாளத்துக்குத் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தான். ஆறு பாராட்டு விருதுகளும் பதக்கங்களும் வாங்கியிருந்தான். ஒரு வார்த்தையில் சொன்னால் தனது முதிய தகப்பனை விடப் பெரிதும் முன்னேறியிருந்தான். மீண்டும் அவனைப் பற்றி உண்மையாகவே பெருமை கொண்டேன். நீர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளும். ஆனால் என் சொந்த மகன் காப்டன். அத்துடன் பீரங்கிப் பட்டாளத்துக்குத் தலைவன். அது லேசான விஷயமா? இதற்கெல்லாம் மேலாக விருதுகளென்ன, பதக்கங்களென்ன என்று வேறு ஜமாய்க்கிறான். அவனது தகப்பன் குண்டுகளையும் மற்றவைகளையும் ஸ்டுடிபேக்கர் லாரியிலேற்றி ஓட்டிக்கொண்டுதான் பிழைப்பு நடத்துகிறான் என்றால் என்ன வந்துவிட்டது? தகப்பன் காலம் கடந்துவிட்டது. ஆனால் மகனோ எடுத்த எடுப்பிலேயே காப்டன்; வாழ்க்கை முழுதும் அவனை எதிர்நோக்கிக் காத்திருந்தது.

“இரவுகளில் எனக்குக் கிழப்பருவக் கனவுகள் தோன்றத் தொடங்கின. போர் முடிந்ததும் மகனுக்குத் திருமணம் முடித்து அவனுடன் கூட இருந்து வாழ்வேன். சிறிது தச்சு வேலை செய்வேன். அவனது குழந்தை குட்டிகளைப் பார்த்துக் கொள்வேன். கிழவன் செய்கிற வேலை எல்லாம் செய்வேன். ஆனால் இப்படி நான் கண்ட கனவெல்லாங் கூடப் படார் என்று வெடித்துச் சிதறிவிட்டன. குளிர்காலத்தில் நாங்கள் சிறிதும் இடைவிடாது முன்னேறிக் கொண்டே இருந்தோம். ஆகையால் அடிக்கடி ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக்கொள்ள நேரம் இல்லை. ஆனால் போர் முடிவில் பெர்லினுக்கு அருகே ஒரு நாள் காலை அனத்தோலியுக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். நேர் மறுநாளே அதற்குப் பதில் கிடைத்தது. அவனும் நானும் ஜெர்மானியத் தலைநகருக்கே வெவ்வேறு வழியாக வந்திருக்கிறோம் என்று தெரிந்தது. இப்போது ஒருவருக்கொருவர் மிக அருகே இருந்தோம். நாங்கள் சந்திக்கவிருந்த கணம் வரைக் காத்திருக்க என்னால் கொஞ்சங்கூட முடியவில்லை. ஆயிற்று. அந்தக் கணமும் வந்தது… சரியாக மே மாதம் ஒன்பதாம் நாள், வெற்றி நாளன்று காலையில் என் அனத்தோலிய் ஒரு ஜெர்மன் சிப்பாய் சுட்டதால் இறந்தான்.

“பிற்பகலில் கம்பெனித் தலைவர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். அங்கே முன்பின் அறியாத பீரங்கிப் படை லெப்டினன்ட் கர்னல் ஒருவர் உட்கார்ந்திருந்தார். நான் அறைக்கும் சென்றதும் கர்னல் மேல் அதிகாரியைக் கண்டது போல எழுந்து நின்றார். எனது கம்பெனித் தலைவர், ‘ஸகலோவ், இவர் உன்னைக் காண வந்திருக்கிறார்’ என்று சொல்லிவிட்டு ஜன்னல் புறமாகத் திரும்பி நின்றுகொண்டார். அப்போது ஏதோ மின்சார அதிர்ச்சி போல என்னூடே பாய்ந்தது; தொல்லை வருகிறதென்று உணர்ந்தேன். லெப்டினன்ட் கர்னல் என்னிடம் வந்து, ‘மனத்தை உறுதிப்படுத்தித் தாங்கிக் கொள்ளுங்கள், தந்தையே! உங்கள் மகன் காப்டன் ஸகலோவ் இன்று கொல்லப்பட்டார். என்னுடன் வாருங்கள்’ என்றார்.

“நான் அப்படியே கிறுங்கி ஆடினேன்; ஆனால் விழாதவாறு காலூன்றி நின்றேன். உடைந்த கற்கள் சிதறிக் கிடந்த தெருக்களின் ஊடே லெப்டினன்ட் கர்னலும் நானும் காரை ஓட்டிச்சென்ற விதத்தை இப்போது நினைத்தாலும் கனவு போலத்தான் இருக்கிறது. போர்வீரர் வரிசையாக அணிவகுத்து நின்றதும் சவப்பெட்டி சிவப்பு வெல்வெட்டால் மூடப்பட்டிருந்ததும் என் நினைவில் பனிப்படலத்தில் மறைந்தது போன்றே மங்கலாக இருக்கிறது. ஆனால் என் அனத்தோலியை மட்டும், அண்ணே, இப்போது உம்மைப் பார்க்கிறேனே, இதே தெளிவுடன் காண்கிறேன். சவப்பெட்டி அருகே சென்றேன். ஆம், என் மகன்தான் அங்கே கிடந்தான். இருந்தாலும் அது என் மகனாக இல்லை. எனது மகன் சிறு பிள்ளை; எப்போதும் புன்சிரிப்புடனே இருப்பான். குறுகலான தோள்கள்; அவனது மெலிந்த கழுத்தில் கூரிய சின்ன மிடறு துருத்திக் கொண்டிருக்கும். ஆனால் இங்கேயோ அகன்ற தோளுடைய, முழுதும் வளர்ந்த அழகிய வாலிபனல்லவா கிடந்தான்! அவன் கண்கள் என்னையுங் கடந்து அப்பால் நெடுந்தொலைவு எங்கேயோ நோக்கிக் கொண்டிருப்பது போன்று பாதி மூடியிருந்தன. எனது மகன் முகத்தில் வழக்கமாகக் காணப்படும் புன்சிரிப்பில் கொஞ்சம் இன்னும் அவனது உதடுகளின் ஓரத்தில் இருந்தது. ஆம், ஒரு காலத்தில் நான் அறிந்த அதே அனத்தோலிய் தான். நான் அவனை முத்தமிட்டுவிட்டு ஒரு புறம் நகர்ந்து நின்றேன். லெப்டினன்ட் கர்னல் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். எனது அனத்தோலியின் நண்பர்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள். ஆனால் என்னால் அழ முடியவில்லை. எனது நெஞ்சிலேயே என் கண்ணீர் வறண்டுவிட்டது என்றே நினைக்கிறேன். ஒரு வேளை அதனால்தான் அது இன்னும் துன்புறுத்துகிறது போலும்.

“என்னுடைய கடைசி மகிழ்வையும் நம்பிக்கையையும் அந்த வெளிநாட்டு ஜெர்மானிய மண்ணில் புதைத்தேன். தங்கள் தலைவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் முறையில் பீரங்கிப் படையினர் வேட்டுத் தீர்த்தனர். என்னுள்ளே ஏதோ ஒன்று சட்டென்று முறிந்தது போன்று தோன்றியது… நான் நடைப்பிணம் போல என்னுடைய படைப்பிரிவுக்குத் திரும்பி வந்தேன். விரைவில் இராணுவ சேவை முடிந்து படையிலிருந்து விலகினேன். எங்கே போவேன்? வரோனெஷுக்கா? என்ன கிடைத்தாலும் மாட்டேன். குளிர்காலத்தில் என் நண்பர் ஒருவர் காயமுற்றுப் படையிலேயிருந்து விலக்கப்பட்டு வீடு திரும்பினார்; இப்போது அவர் உரூபின்ஸ்க்கில் வாழ்ந்து வந்தார் என்பது என் நினைவுக்கு வந்தது. ஒரு முறை அவர் என்னைத் தன்னோடு வந்து வாழும்படி சொல்லியிருந்தார். ஆகவே போனேன் அவரிடம்.

“என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் குழந்தைகள் இல்லை. நகர்க்கோடியில் அவர்களுக்குச் சொந்தமான வீடு ஒன்று இருந்தது. உடம்பு இயலாதோருக்கான பென்ஷன் அவருக்குக் கிடைத்துவந்தது. இருந்தாலும் அவர் ஒரு லாரி டிப்போவில் டிரைவராக வேலை செய்துகொண்டிருந்தார். அங்கே எனக்குங்கூட வேலை கிடைத்தது. நான் என் நண்பருடன் தங்கிவிட்டேன். அவர்களால் எனக்கு வீட்டு வாழ்க்கை கிடைத்தது. நாங்கள் நகர்ப்புறங்களில் பல்வேறு வகையான சுமைகளை ஏற்றிச் செல்வது வழக்கம். இலையுதிர் பருவத்தில் தானியத்தைக் கிடங்குகளுக்குக் கொண்டு சேர்க்கும் வேலையை மேற்கொண்டோம். அப்போதுதான் எனது புதிய மகன், அதோ அங்கே மணலில் விளையாடுகிறானே, அவன்தான், எனக்கு அறிமுகமானான்.

“நெடுந்தொலைவு சுற்றி வந்த பிறகு முதல் வேலையாக ஒருவர் செய்வது சாப்பாட்டுக் கடைக்குப் போய் ஏதாவது கொறிக்கவும், அதோடு ஒரு குவளை வோட்கா உள்ளே தள்ளவும்தான். அலுப்பைப் போக்கிக்கொள்ள அதுதானே வழி? அந்தக் காலத்திற்குள் இந்தக் கொடிய பழக்கத்தில் மீண்டும் பெரும் பற்றுக் கொண்டிருந்தேன் என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு நாள் சாப்பாட்டுக் கடைக்கு அருகில் இந்தப் பயலைப் பார்த்தேன். அடுத்த நாள் மீண்டும் அவனைக் கண்டேன். சின்னப் பயல். அடேயப்பா, எப்படிப் பஞ்சைப் பயலாயிருந்தான் தெரியுமா இவன்! துணியெல்லாம் ஒரே கந்தல். முகமெல்லாம் தர்பூஸ் பழச்சாறும் தூசியும் அடை அடையாய் அப்பியிருந்தன. அழுக்கான அழுக்கில்லை. என்ன சொல்ல, தலைமயிர் பம்பையாய்க் கலைந்து முகமெங்கும் கிடந்தது. ஆனால் அவன் கண்கள் மட்டும் மழை பெய்துவிட்ட பிறகு வானில் தெரியுமே விண்மீன்கள், அவை போலப் பளிச்சிட்டன. அவனிடத்தில் எனக்கு மிகுந்த பற்று விழுந்துவிட்டது. சொன்னால் வேடிக்கையாகக் கூடத் தோன்றும். அவனைப் பார்க்காதபோது எனக்கு ஏக்கம் வரத் தொடங்கியது. வெள்ளெனவே சாப்பாட்டுக் கடைக்குப்போய் விரைவில் அவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காக லாரியோட்டும் வேலையைப் பரபரப்புடன் முடித்துவிட்டு ஓடுவேன். சாப்பாட்டுக் கடைக்கு வருபவர்கள் தருவதைத் தின்று வயிற்றை நிரப்புவான் அவன்.

“நான்காம் நாள் அரசாங்கப் பண்ணையிலிருந்து லாரியில் தானியத்தை ஏற்றிக்கொண்டு அப்படியே நேராகச் சாப்பாட்டுக் கடைக்கு முன்னே கொண்டுபோய் நிறுத்தினேன். இந்தச் சின்னப் பயல் அங்கே படிக்கட்டில் உட்கார்ந்து கால்களை ஆட்டிக் கொண்டிருந்தான். பயலுக்கு நல்ல பசி என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது, பார்த்தேன். ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி, ‘டேய், வான்யா! இங்கே வாடா. வண்டிக்குள் குதித்தேறிக்கொள். உன்னைக் களஞ்சியத்துக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன். பிறகு இங்கே திரும்பவும் வந்து நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்’ என்று கூவினேன். எனது கூப்பாட்டைக் கேட்டுத் திடுக்கிட்டான் அவன். பிறகு படிக்கட்டிலிருந்தபடியே தாவி நேரே லாரிப் படிமேல் குதித்தான். ஜன்னல் வரையில் எம்பி நின்றுகொண்டு, ‘ஏம்பேர் வான்யான்னு உனக்கு எப்படித் தெரியும்?’ என்று தாழ்ந்த குரலில் கேட்டான். என்னுடைய பதிலை எதிர்பார்த்து விண்மீன் போன்ற விழிகளைப் பரக்கத் திறந்தான். நான் சொல்லி வைத்தேன், ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று.

“அவன் சுற்றிக்கொண்டு வலப்புறம் வந்தான். கதவைத் திறந்து அவனை உள்ளே வரவிட்டு என் பக்கத்தில் உட்கார்த்திக் கொண்டேன். நாங்கள் இருவரும் லாரியில் அப்பாற் போனோம். அந்தச் சின்னப் பயல் எப்போதும் துருதுருவென்றிருப்பான். ஆனால் இப்போது திடீரென்று அமைதியாகிவிட்டான். நீண்டு நெளிந்த இமைகளை லேசாக நிமிர்த்தி அடிக்கடி என்பக்கமாக ஒருக்கணித்துப் பார்ப்பதும் பெருமூச்சு விடுவதுமாக இருந்தான். இந்த வாண்டுப் பயலுக்கு அதற்குள் பெருமூச்சு விடத் தெரிந்திருந்ததே! இதுவா அவன் செய்ய வேண்டிய காரியம்?

‘உன் அப்பா எங்கேடா, வான்யா?’ என வினவினேன்.

‘சண்டைக்குப் போனாரு. அங்கே செத்துப் போனாரு’ என்று மெல்லக் கூறினான்.

‘அம்மா?’

‘அம்மாவா, நாங்கள் ரயில்லே போய்க்கிட்டிருந்தோம், பாரு. ஒரு குண்டு விழுந்தது. அம்மா செத்துப் போச்சு’

‘எங்கேயிருந்து நீங்கள் ரயிலில் வந்துகொண்டிருந்தீர்கள்?’

‘எனக்குத் தெரியாது. எனக்கு நினைவில்லை…’

‘உனக்கு உறவினர் ஒருவர் கூட இல்லையா?’

‘இல்லே. ஒருத்தரும் இல்லே.’

‘ஆனால் ராத்திரியில் எங்கேயப்பா படுத்து உறங்குகிறாய்?’

‘எங்கேயாவது, கிடைக்கிற இடத்திலே.’

“எனக்குத் தொண்டை யடைத்து அழுகை குமுறி வந்தது. நாங்கள் ஏன் இப்படித் தனித்தனியாகப் பிரிந்து துன்பப்பட வேண்டும்? என் சொந்த மகனாகவே அவனை ஏற்றுக்கொள்வேன் என்று அப்போதே தீர்மானித்துக் கொண்டேன். இப்படித் தீர்மானித்த உடனே என் மனம் பாட்டிலே போட்டது. நெஞ்சிலிருந்த சுமை குறைந்தது. உள்ளத்தில் ஒரு வகையான ஒளி பிறந்தது. அவன் புறமாகச் சாய்ந்து குனிந்து தணிந்த குரலில் ‘வான்யா, உனக்குத் தெரியுமா, நான் யார் என்று?’ என்றேன். அவன் ‘யாரு?’ என்று ஒரே துடிதுடிப்புடன் கேட்டான். முன் போலவே மெல்லிய குரலில் ‘நான்தானடா உன் அப்பா’ என்றேன்.

“அட கடவுளே, அப்போது என்ன நடந்தது தெரியுமா? அந்தப் பயல் என்மீது பாய்ந்து என் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு என் கன்னங்களிலும் உதடுகளிலும் நெற்றியிலும் எங்கும் மாறி மாறி முத்தம் கொடுத்தான். கீச்சுக் குரலிற் பேசத் தொடங்கினான் பாருங்கள், பறவை கூவுவது போலவே இருந்தது அவன் குரல். ‘அப்பாக் கண்ணூ! எனக்குத் தெரியூம்! நீ என்னே கண்டுபிடிச்சுருவேனு எனக்குத் தெரியூம்! என்ன ஆனாலும் நீ என்னே கண்டுபிடிச்சுருவேனு எனக்குத் தெரியூம்! நீ என்னே கண்டுபிடிக்கணும்னுதான் நான் காத்துக்கிட்டிருந்தேன். ரொம்ப நாளா காத்துக்கிட்டிருந்தேன்!’ என்று கூவிக்கொண்டு அப்படியே என் உடம்போடு ஒட்டிக்கொண்டான். அவன் உடம்பு முழுதும் காற்றில் புல் சிலுசிலுப்பது போல நடுங்கிற்று. எனது கண்கள் கலங்கின. நானுங்கூடத்தான் நடுங்கிக் கொண்டிருந்தேன். என் கைகள் வெடவெடத்துக் கொண்டிருந்தன… எப்படித்தான் லாரியைச் சரியாக ஓட்டிக்கொண்டு போனேனோ நானறியேன். இருந்தாலுங்கூட ஒரு கிடங்கில் லாரியை நிப்பாட்டினேன். கண்ணீர் பொங்கிப் பார்வை மங்கியிருக்கும் போது, ஓட்டிக்கொண்டு போனால் யாரையேனும் மோதித் தள்ளிவிடுவேனோ என்று அச்சமாயிருந்தது. அங்கேயே சுமார் ஐந்து நிமிஷ நேரம் அமர்ந்திருந்தோம். என் பொன்னு மகன் இன்னமும் என்னை ஒரேயடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டே இருந்தான். ஒன்றும் பேசவே இல்லை. வேறுமனே நடுங்கிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி வலது கையைப் போட்டு மெல்ல அணைத்துக்கொண்டு, இடக்கையினாலேயே லாரியைத் திருப்பி, நான் வாழ்ந்த குடிலுக்கே திரும்பவும் ஓட்டி வந்தேன். அதற்குப் பிறகு களஞ்சியத்துக்குப் போகவே மனம் வரவில்லை.

“வாயிலில் லாரியை நிறுத்திவிட்டு புதிய மகனை அணைத்துத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்றேன். அவனோ, தனது சிறு கைகளால் என் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஒரேயடியாக ஒட்டிக்கொண்டான். மழிக்கப்படாதிருந்த என் மோவாயில் தனது கன்னத்தை அழுத்திக்கொண்டு அங்கேயே ஒட்டியிருந்தான். அந்த நிலையிலே தான் நான் அவனை உள்ளே தூக்கிச் சென்றேன். எனது நண்பரும் அவர் மனைவியும் இருவரும் வீட்டில்தான் இருந்தார்கள். நான் உள்ளே வந்து அவர்களைப் பார்த்துக் கண்கள் இரண்டையும் சிமிட்டினேன். பிறகு துணிவும் மகிழ்வும் பொங்க, ‘நல்லது, என் கண்ணாளன் வான்யாவை எப்படியோ ஒருவிதமாகக் கண்டுபிடித்து விட்டேன். இதோ பாருங்கள், நண்பர்களே!’ என்றேன். அவர்களுக்குக் குழந்தை கிடையாது. இருவருக்கும் குழந்தை வேண்டுமென்று ஆசை. ஆகவே உடனேயே என்ன நிகழ்ந்தது என்பதை யூகித்துக்கொண்டு பரபரப்போடு உபசாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். என் மகனோ என்னை விடுகிற வழியாய் இல்லை. ஆனால் எப்படியோ அவனைத் தாஜா பண்ணினேன். அவனது கைகளைச் சோப்புத் தடவிக் கழுவினேன். உணவருந்த அவனை மேஜையண்டை அமர வைத்தேன். எனது நண்பரின் மனைவி அகப்பையால் ‘சூப்’ மொண்டு ஒரு தட்டில் ஊற்றி என் மகனுக்குக் கொடுத்தாள். அதை எப்படி மடக் மடக்கென்று குடித்தான், தெரியுமா! அதைப் பார்த்தவுடன் அப்படியே அவள் அழுது கண்ணீர் சிந்தினாள். ஸ்டௌவுக்கு அருகில் ஏப்ரனால் முகத்தை மறைத்து அழுதுகொண்டு நின்றாள். எனது வான்யா அவள் அழுவதைப் பார்த்ததும் அவளிடம் ஓடி, அவளது பாவாடையைப் பற்றி இழுத்துக் கொண்டே, ‘ஏன் அழுகிறே, அத்தே? என்னே அப்பா சாப்பாட்டுக் கடைக்கிட்டே கண்டுபிடிச்சாரு. எல்லாரும் சந்தோஷமாகல்லே இருக்கணும்! நீ என்னடான்னா அழுகிறியே!’ என்றான். ஆனால் அவள் இன்னும் விசித்து விசித்து அழுதாள். அவள் உடம்பு முழுதும் கண்ணீரால் நனைந்து போய்விட்டதென்றால் பார்த்துக் கொள்ளுமே!

“சாப்பிட்ட பின் க்ஷவரக் கடைக்கு அவனை அழைத்துக்கொண்டு போய் அவனது முடியைத் திருத்தியமைத்தேன். வீட்டில் ஒரு தொட்டியில் என் கையாலேயே அவனைக் குளிப்பாட்டினேன். பிறகு சுத்தமான போர்வையை அவனுக்குச் சுற்றிப் போர்த்தினேன். என்னை ஆவிச் சேர்த்துக் கட்டிக்கொண்டு என் கையணைப்பிலேயே உறங்கிவிட்டான். அவனை மெல்லப் படுக்கையில் கிடத்திவிட்டு லாரியைக் களஞ்சியத்துக்கு ஓட்டிப் போய் தானிய மூட்டைகளை இறக்கிவிட்டு லாரியைத் திரும்பவும் நிறுத்தும் இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு நேரே கடைகளைப் பார்க்க ஓடினேன். கம்பளிக் கால்சட்டை, சின்ன மேல்சட்டை, செருப்பு, வைக்கோல் தொப்பி ஆகியவற்றை அவனுக்காக வாங்கினேன். ஆமாம், ஒன்றாவது அளவு சரியாயில்லை என்பதும் தரம் கெட்டவை என்பதும் அப்புறம்தான் தெரிந்தது. எனது நண்பரின் மனைவி கால்சட்டையைப் பற்றி எனக்கு ஒரு ‘டோஸ்’ விட்டாள். ‘உனக்கு என்ன, பைத்தியமா? வெயிலானால் இது மாதிரி அடிக்கிறது. இப்போது பையனுக்குக் கம்பளிக் கால்சட்டை போடலாமா?’ என்றாள். அடுத்த நிமிஷமே தையல் இயந்திரத்தை எடுத்து மேஜை மேல் வைத்துக்கொண்டு துணிப்பேழைக்குள் எதையோ துழாவினாள். ஒரு மணி நேரத்துக்கெல்லாம் பஞ்சுத் துணிக் காற்சட்டையும் வெள்ளை மேற்சட்டையும் தைத்துவிட்டாள். எல்லாம் என் வான்யாவுக்குத் தான். வான்யாவைப் படுக்கையில் கிடத்திக் கொண்டேன். எத்தனையோ இரவுகளுக்குப் பிறகு முதன் முறையாக அன்றுதான் அமைதியுடன் உறங்கினேன். இருப்பினும் இரவில் நான்கு தடவை விழித்துப் பார்த்துக் கொண்டேன். வான்யா எனது கையின் குடை வளைவுக்குள் சுருண்டு கிடந்தான். கூரையிறப்புக்கடியிலே குருவி சுருண்டு கிடக்குமே அது போல. மெல்ல மூச்சுவிட்டான். எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது தெரியுமா? சொல்லிலடங்காத மகிழ்ச்சி. அவன் உறக்கத்தைக் கலைக்கக் கூடாது என்பதற்காகக் கொஞ்சங்கூட அசையாமல் படுத்திருக்க முயன்றேன். ஆனால் அது ஒன்றும் பலன் தரவில்லை. மிக அமைதியுடன் அசையாது எழுந்து நிற்பேன். ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி வைத்துக்கொண்டு அவன் படுத்திருக்கும் காட்சியை வியந்து பார்த்த வண்ணமாக அப்படியே நிற்பேன்…

“பொழுது விடிவதற்குச் சற்று முன்னர் விழித்துக் கொண்டேன். நிரம்பப் புழுக்கமாயிருந்தது. ஏனென்று புரிந்துகொள்ள முடியவில்லை. அவன்தான், எனது சின்ன மகன், தனது போர்வையை விட்டு வெளியே வந்து மேலேறிச் சரியாக என் மார்பின் குறுக்கே படுத்துக் கிடந்தான். அவனது பிஞ்சுக் கால் என் தொண்டை மீது கிடந்தது. உறங்கும்போதுதான் என்ன புரளு புரளுவான் தெரியுமா, இந்தப் பயல்! அவனுடன் சேர்ந்து படுத்துறங்குவது பெருந்தொல்லை. ஆனால் அவனுடன் படுத்துப் படுத்து எனக்குப் பழக்கமாகிவிட்டது. அவனைப் பக்கத்தில் காணாவிட்டால் எனக்கு வெறிச்சென்றிருக்கும். இரவில் அவன் உறங்கும்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாலோ, அவனது சுருட்டை மயிருள்ள உச்சியை  முகர்ந்தாலோ நெஞ்சில் இருந்த நோவு உடனே போய்விடும். துயரப் பட்டுப் பட்டுக் கல்லாய் இறுகிப் போயிருந்த என் நெஞ்சு நெகிழ்ந்து இளகும்…

“முதலில் நான் லாரி ஓட்டிச் செல்லும்போது என்னுடனேயே அவனும் வருவது வழக்கம். பிறகு அது கட்டிவராது என்று உணர்ந்தேன். நான் மட்டும் தனியே போய்க் கொண்டிருந்த போது எனக்கு என்ன தேவைப்படும்? ஒரு ரொட்டி, வெங்காயம் ஒன்று, கொஞ்சம் உப்பு – இவை போதுமே, நாள் முழுதும் ஒரு போர்வீரனுக்கு. ஆனால் அவன் நிலைமை வேறு. ஒரு நேரம் அவனுக்குப் பால் வேண்டியிருக்கும்; ஒரு நேரம் அவனுக்கு முட்டை வேகவைத்துத் தரவேண்டிவரும்; ஏதாவது சூடாகத் தராவிட்டால் அவனுக்குச் சரிப்பட்டு வராது. ஆனால் என்னுடைய வேலையையும் செய்ய வேண்டியிருந்ததே. ஆகவே எப்படியோ மனந்துணிந்து என் நண்பர் மனைவியின் பொறுப்பில் அவனை விட்டுப் போனேன். போனேனா? அவன் நாள் முழுதும் அழுதுகொண்டே இருந்தான். பொழுது சாய்ந்ததும் என்னைப் பார்ப்பதற்காகக் களஞ்சியத்தண்டை ஓடிவந்தான். இரவு நெடுநேரம் வரை அங்கே எனக்காகக் காத்திருந்தான்.

“முதலில் அவனுடன் எனக்குத் தொல்லையாக இருந்தது. ஒரு நாள் மிகவும் களைத்திருந்தேன். இன்னும் வெளிச்சம் இருந்தது. படுக்கப் போனோம். வழக்கமாக ஏதாவது பேசிக்கொண்டே இருப்பான், குருவி சிலம்புகிற மாதிரி. அன்றைக்கு ஏனோ கம்மென்று இருந்தான். ‘என்னப்பா யோசனை பலமாயிருக்கிறது?’ என்று கேட்டேன். முகட்டு வளையைப் பார்த்துக்கொண்டே, ‘ஏம்ப்பா, அந்தத் தோல் சட்டே வச்சிருந்தியே, அதே என்ன பண்ணினே?’ என்று கேட்டான். என் வாழ்விலே எப்போதுமே என்னிடம் தோல் சட்டை இருந்தது கிடையாதே! எப்படியாவது சுற்றி வளைத்து இவனுடைய சந்தேகத்தைப் போக்க வேண்டும். ‘வரோனெஷில் அதை வைத்துவிட்டேன்’ என்று மழுப்பினேன். ‘என்னேக் கண்டுபிடிக்க, யேம்ப்பா, அத்தனெ நாளாச்சு உனக்கு?’ என்று அடுத்த கேள்வி போட்டான். ‘உன்னை எங்கெல்லாம் தேடினேன், தெரியுமா? ஜெர்மனியிலே, போலந்திலே, பிறகு பைலோரஷ்யாவிலே எங்கும் தேடினேன். நீ என்னடான்னா, இங்கே உரூபின்ஸ்க்கில் இருந்தாய்’ என்று சொன்னேன். ‘உரூபின்ஸ்க், அப்பா, ஜெர்மனியே விடக் கிட்டவா? நம்ப வீட்டுக்கும் போலந்துக்கும் ரொம்ப தொலையாப்பா?’ இப்படியே உறங்கும்வரை பேசிக்கொண்டே போனோம்.

“ஆனால் அவன் தோல் சட்டை பற்றிக் கேட்டானே, அதற்குக் காரணம் இல்லையென்றா எண்ணுகிறீர் அண்ணே? இல்லை. அந்தக் கேள்விக்கெல்லாம் காரணம் இருக்கத்தான் இருந்தது. ஏதோ ஒரு காலத்தில் அவனது சொந்தத் தந்தை ஒரு தோற்சட்டை அணிந்திருப்பார். அதை இப்போதுதான் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு குட்டிப் பயலின் நினைப்பு கோடை காலத்து மின்னல் போன்றது என்றுதான் உமக்குத் தெரியுமே! அது பளிச்சிடும்; பொருள்களைச் சிறிதளவு வெளிச்சம் வீசிக் காட்டும்; பிறகு மறைந்திடும். குழந்தையின் ஞாபகமும் கோடை கால மின்னலின் ஒளி வீச்சுக்கள் போன்றதே.

“இன்னொரு ஆண்டும் நாங்கள் உரூபின்ஸ்க்கிலேயே சேர்ந்து வாழ்ந்திருப்போம். ஆனால் நவம்பரில் எனக்கு ஓர் இடர் வந்தது. சேறும் சகதியுமாயிருந்த சாலையில் லாரி ஓட்டிப் போய்க் கொண்டிருந்தேன். சிற்றூர் ஒன்றின் வழியாகச் சென்றபோது சக்கரம் வழுக்கியது. தற்செயலாக அந்தப் பக்கத்தில் ஒரு பசு நின்றுகொண்டிருந்தது. அதன்மீது மோதித் தள்ளிவிட்டேன். நல்லது. அந்த நிலைமையில் என்ன நடக்கும் என்பதுதான் உமக்குத் தெரியுமா. பெண்டிரெல்லாம் ஒரே களேபரம் பண்ணினார்கள். ஊரார் சுற்றிக் கூட்டமாக வளைத்துக் கொண்டார்கள். விரைவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். ஒன்றுமில்லாத விஷயத்தைப் பெரிது படுத்தாதேயும் ஐயா என்று அவனிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் அந்த மனிதன் எனது லைசென்ஸைப் பறித்துக்கொண்டு போய்விட்டான். இதற்கிடையில் பசு எழுந்து வாலைக் கிளப்பிக் கொண்டு சாலையிலே பாய்ந்தோடிற்று. ஆனால் என் லைசென்ஸ் என்னவோ போனது போனதுதான். குளிர் பருவம் முழுதும் தச்சுவேலை செய்து கழித்தேன். பட்டாளத்திலே என்னுடன் பழகிய ஒரு பழைய நண்பர் இருந்தார். அவருக்குக் கடிதம் எழுதினேன். அவர் கஷாரி மாவட்டத்திலேயே டிரைவராக வேலை செய்கிறார். வந்து தன்னுடன் தங்கி வாழுமாறு என்னை அவர் அழைத்தார். ஓராண்டிற்கு நீ தச்சு வேலை செய்யலாம். பிறகு நீ நமது மாவட்டத்தில் புதிய லைசென்ஸ் எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். அதனால்தான் இப்போது நானும் என் மகனும் கஷாரிக்கு நடை போடுகிறோம்.

“ஆனால் அந்தப் பசுவின் மேல் லாரியை மோதியிராவிட்டாலும் கூட நான் உரூபின்ஸ்க்கை விட்டு வெளியேறித்தான் இருப்பேன். என் துயரம் என்னை ஒரே இடத்தில் நெடுங்காலம் தங்க விடாது. என் வான்யா சற்றுப் பெரியவனானதும், அவனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டிவரும். அப்போது நான் கால் முடங்கி ஒரே இடத்தில் குடியேறிடுவேன். ஆனால் இப்போதைக்கு ருஷ்ய மண்ணில் நாங்கள் ஜோடியாக நடந்து திரிகிறோம்”

“அவன் களைத்துப் போகிறானா?” என்று வினவினேன்.

“களைப்பா? அவன் நிரம்ப நடக்கிறதில்லை. பெரும்பாலான நேரம் என் மீது தான் சவாரி செய்கிறான். நான் அவனைத் தோள் மீது சுமந்து செல்கிறேன். கால் மரத்துப் போய் கீழே இறங்க அவன் விரும்பினால், கீழே குதித்துச் சாலையில் இங்குமங்கும் ஓடுகிறான். வெள்ளாட்டுக்குட்டி மாதிரிப் பாய்ந்து துள்ளி ஓடுகிறான். அதையெல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை, அண்ணே, நாங்கள் இருவரும் ஒழுங்காகச் சென்று சேர்ந்து வாழ்வோம். ஒன்றே ஒன்றுதான். என் நெஞ்சில் எங்கோ ஓரிடத்தில் நல்ல அடிபட்டிருக்கிறது. அது கடமுடா பண்ணுகிறது. அதில் ஏதோ ஒரு பிஸ்டனை மாற்றவேண்டும். அவ்வளவுதான். சில நேரங்களில் நெஞ்சில் குத்துவாளைச் செருகியது போல வலிக்கிறது. அந்த நிலையில் நான் செய்வது எனக்கே புரிவதில்லை. என்றாவது ஒரு நாள் உறங்கும்போதே இறந்து மகனைக் கதிகலங்க அடித்து விடுவேனோ என்கிற அச்சம் தான் என்னை வேதனை செய்கிறது. இன்னொரு தொல்லையும் உள்ளது. நான் இழந்தேனே, எனக்கினியவர்கள், அவர்களைக் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கனவிற் பார்க்கிறேன். முள்கம்பிக்குப் பின்புறம் நான் இருக்க அவர்கள் மற்றப்புறத்தில் விடுதலையுடன் கட்டின்றி இருப்பது போலவே பெரும்பாலும் கனவு காண்கிறேன். இரீனாவிடமும் குழந்தைகளிடமும் எல்லா விஷயங்களையும் பற்றிப் பேசுகிறேன். ஆனால் அந்த முள்கம்பியை அகற்ற முயல்கிறேனோ இல்லையோ, உடனே அவர்கள் அப்பால் போய்விடுகிறார்கள். எனது கண்களுக்கு முன்னேயே அவர்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைந்து மறைவது போலத் தோன்றுகிறது. இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? பகல் நேரம் எல்லாம் துணிவு கொண்டு மனத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். நான் சிணுங்குவதையோ பெருமூச்சு விடுவதையோ காணவே முடியாது. ஆனால் இரவில் சில நேரங்களில் விழித்துக்கொண்டு பார்த்தால் எனது தலையணை கண்ணீரால் நனைந்து ஈரமாக இருக்கிறது…”

ஆற்றிலிருந்து எனது நண்பரின் குரலும் நீரில் துடுப்புக்கள் சளப்பிடும் ஓசையும் கேட்டன.

இப்போது நெருங்கிய நண்பன் போன்று எனக்குத் தோன்றிய இப்புதியவன் தனது பெரிய கையால் என் கையைக் குலுக்கினான். மரக்கட்டை போன்று உறுதியாக இருந்தது அவன் கை.

“போய் வருகிறேன், அண்ணே, நீங்கள் நன்றாயிருக்கவேண்டும்!”

“நீரும் நன்றாயிரும். கஷாரிக்குச் சுகமாய்ப் போய்ச்சேரும்!”

“உமக்கு என் அன்பு கலந்த நன்றி. டேய், மகனே! வா, படகுக்குப் போவோம்.”

பையன் தந்தைக்குப் பக்கத்தில் ஓடி வந்து அவனது மெத்தை தைத்த சட்டையின் மூலையைப் பற்றிக்கொண்டான். தகப்பன் எட்டி அடிவைத்து நடக்க அவனுக்குப் பக்கத்திலேயே சிறுவனும் குறுகக் குறுக அடிவைத்து நடந்து சென்றான்.

திக்கற்றுப் போன இரு ஜீவன்கள், போர் என்னும் பெரும் புயலினால் முன்பின் அறியாத பகுதிகளில் வீசி ஒதுக்கப்பட்ட இரண்டு மணல் மணிகள்… அவர்களுடைய வருங்காலம் எந்த மாதிரி இருக்கும்? எனக்கென்னவோ இந்த ருஷ்யன், திடமான மனவுறுதி வாய்ந்த இந்த மனிதன், தனது பொறுப்பை இறுதி வரை தளராது நிறைவேற்றுவான் என்றும், இந்தப் பையன் தந்தையின் அரவணைப்பில் தாய் நாட்டின் பொருட்டு தேவை ஏற்பட்டால் எத்தகைய இடரையும் பொறுத்து எந்தத் தடையினையும் கடந்து முன்னேறும் ஆற்றல் வாய்ந்த ஆண்மகனாக மலர்வான் என்றும்தான் நம்பத் தோன்றியது. அவர்கள் செல்வதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பிரிந்தபோது ஒரு வேளை எல்லாம் சரியாகப் போயிருக்கும். ஆனால் அந்த வான்யாப் பயல், சில அடிகள் சென்றதும் சட்டென்று குச்சிக் கால்களில் திரும்பி என்னைப் பார்த்து சின்ன ரோஜாக் கையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டான். அவ்வளவுதான். ஏதோ வன விலங்கின் மெத்தென்ற முன்பாதம் என் நெஞ்சில் பட்டு அதன் கூரிய நகங்கள் சுரீரென்று பாய்ந்தது போலத் துடிதுடித்துப் போனேன். சடக்கென்று முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். இல்லை. போரில் தலை நரைத்துப் போன இந்த முதிய மனிதர்கள் அழுவது தம் உறக்கத்தில் மட்டும் அல்ல, விழித்திருக்கும் காலத்திலும்தான். ஆனால் சரியான நேரத்தில் முகத்தை அப்பால் திருப்பிக் கொள்ளவேண்டும். அதுதான் முக்கியமானது. வறண்டு காய்ந்து போன நெஞ்சிலிருந்து வெளிப்பட்ட கொதிக்கும் கண்ணீர் ஓர் ஆண்மகனின் கன்னங்களில்

– மிகயீல் ஷோலகவ்,தமிழில்: மீனவன,

நன்றி-சோவியத் பதிப்பகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here