அழிந்துவரும் கால்தடங்கள்

ரண்டாம் உலகப் போர் நடந்துகொண்டிருந்தபோது, அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளின் (Allied countries) கூட்டமைப்பு மூலம் 1943ம் ஆண்டில் The Monuments, Fine Arts and Archives Program என்ற ஒரு குழு நிறுவப்பட்டது. நானூறு பேர் இந்தக் குழுவிலிருந்தனர். போர் நடக்கும் இடங்களில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் மரபுசார் கட்டுமானங்களை அழிவிலிருந்து காப்பாற்றுவதும் போர் முடிந்தபின்பு நாஜிகள் திருடிய அல்லது பாதுகாத்துவைத்த கலைப்பொருட்களை மீட்டு உரிய இடத்தில் சேர்ப்பதுமே இவர்களின் முக்கியப் பணி. உலகத்தையே அச்சுறுத்திய ஒரு பெரும் போர்ச்சூழலில்கூட மரபும் கலைச்செல்வங்களும் அழியக்கூடாது என்று அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.  மரபின் இழை அறுந்துவிடக்கூடாது என்று நினைப்பதும் அதைக் காப்பதற்கான முயற்சிகளை எடுப்பதும் மனித இயல்புதானே.

 மனித வரலாற்றின் பெரிய மாற்றங்களுடைய பின்னணியில் காலநிலையும் ஒரு முக்கியக் காரணியாக இருந்திருக்கிறது. ஒரு இனக்குழுவை அதே இடத்தில் தங்கச் செய்வது, புலம்பெயரவைப்பது, உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பது, சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது, வாழ்வாதாரத்தை மாற்றியமைப்பது எனக் காலநிலை பலவிதமான மாற்றங்களுக்கு விதையாக இருந்திருக்கிறது. “மனித இனம் மற்றும் அதன் மரபுகளுடைய பேறுகாலத்தின்போது ஒரு மருத்துவச்சியாகவே காலநிலை மாறுபாடு இருந்தது” என்று எழுதுகிறார் ஒரு அறிஞர். காலநிலை மாற்றம் என்ற பிரச்சினை காலநிலை அவசரநிலையாக மாறிவிட்ட தற்போதைய சூழலில் மரபு மற்றும் கலைகளின் மீதான அதன் தாக்கமும் விவாதப் பொருளாகியிருக்கிறது. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருட்சேதம், சமூக மாற்றங்கள், நோய்கள், மனநல பாதிப்புகள் ஆகியவற்றோடு மரபுசார் மாற்றங்களையும் பேசுவது முக்கியமானது.

2005இல் உலகளாவிய மரபு மையம் நடத்திய ஒரு ஆய்வில், உலகப் பிரதிநிதிகளில் எழுபத்திரண்டு சதவிகிதத்தினர் காலநிலை மாற்றத்தால் தங்களது இயற்கைச்சூழல் மற்றும் பண்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். காலநிலை மாற்றம் பல்வேறு வழிகளில் பண்பாட்டைப் பாதிக்கிறது. இவற்றில் மிக முக்கியமானது காலநிலையால் ஏற்படும் புலம்பெயர்தல் (Climate Induced Migration). தனது இடத்தை விட்டு வெளியேறுபவர்கள், அந்த இடத்தின் மரபுசார் அம்சங்களில் சிலவற்றையும் விட்டுச் செல்கிறார்கள். புது இடத்தில் தங்களது மரபுகளை அவர்கள் பின்பற்றினாலும் தங்களது ஊருக்கே உரிய சில மரபுகளை அவர்கள் இழக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய அடையாளச் சிக்கலாக மாறுகிறது. மரபு மூலமாகக் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு (Cultural security) அவர்களுக்கு இல்லாமல் போகிறது.

இது தவிர, வேறு வழிகளிலும் காலநிலை மரபைத் தாக்கும். காலநிலையால் ஏற்படும் பேரிடர்கள் பண்பாட்டுச் சின்னங்களுக்குச் சேதம் விளைவிக்கின்றன. காலநிலையால் சமூகச் சமநிலை சீர்குலையும்போது பண்பாட்டுச் சின்னங்கள், மரபுச் செல்வங்கள் சூறையாடப்படலாம். காலநிலை மாறுபடும்போது மரபுசார் செயல்பாடுகள் பாதிக்கப்படக்கூடும், கலைகள் அழியும்.

2014இல் ஒரு பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடல்மட்டம் உயரும்போது பாதிக்கப்படக்கூடிய பண்பாட்டுச் சின்னங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் எலிபண்டா குகை, கோனார்க் சூரியக் கோயில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மகாபலிபுரத்தில் உள்ள கோயில்கள்/சிற்பங்கள், கோவாவில் உள்ள முக்கியமான தேவாலயங்கள் போன்ற பல முக்கியமான இடங்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன. கசகஸ்தானில் உள்ள ஓட்ராரில் இருக்கும் களிமண் கட்டுமானங்கள், பெரு நாட்டின் சான் சான் களிமண் நகரம், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் கொண்ட எகிப்தின் அலக்‌சாண்ட்ரியா நகரம் போன்ற பல முக்கியமான இடங்கள் காலநிலை மாற்றத்தால் ஏற்கனவே பாதிப்படையத் தொடங்கிவிட்டன. வெப்பநிலை அதிகரிப்பதால் ரஷ்யாவின் உறைந்த கல்லறைகளான குர்கான்கள் உருக ஆரம்பித்திருக்கின்றன. பல கலையம்சங்களைக் கொண்ட வெனிஸ் நகரம் மூழ்கும் அபாயத்தில் இருக்கிறது. 2004இல் வீசிய ஹெடா சூறாவளி, பசிபிக் தீவான நியூவில் உள்ள ஹுவனாகி கலாச்சார மையம் மற்றும் அருங்காட்சியகத்தில் தொண்ணூறு சதவிகித கலைச்செல்வங்களை முற்றிலுமாக அழித்திருக்கிறது! இவை அனைத்துமே திரும்பப் பெற முடியாத இழப்புகள்.

மேலே குறிப்பிட்ட கட்டுமானங்கள் பேரிடர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை அல்ல. ரஷ்யாவில் ஒரு உறை கல்லறை கட்டும்போது அங்கிருக்கும் நிரந்தரப் பனி உருகும் என்று யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள். கசகஸ்தான் ஓட்ராரில் உள்ள களிமண் கட்டுமானங்கள் நீரால் ஏற்படும் பாதிப்பை மனதில் வைத்து உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு இடத்தில் அதுவரை காணப்படாத பருவநிலையையும் பேரிடரையும் காலநிலை மாற்றம் கொண்டு வருகிறது, இது மரபுச் சின்னங்களை அழிக்கிறது.

LONDON, UK – APRIL 2011: An aerial image of Thames Barrier, London (Photo by Blom UK via Getty Images)

காலநிலை மாற்றம்  எந்த அளவுக்கு மோசமாகியிருக்கிறது என்பதை ஒரு சிறிய உதாரணத்தின்மூலம் புரிந்துகொள்ளலாம். 1982ஆம் ஆண்டில், மத்திய லண்டனில் இருக்கும் மரபுச் சின்னங்கள் வெள்ளத்தில் மூழ்காமலிருக்க ஒரு தடை அமைப்பு (Flood Barrier) உருவாக்கப்பட்டது. தேம்ஸ் நதியில் வெள்ள அபாயம் இருக்கும்போது இதை உயர்த்திக்கொள்ளலாம். இதை உயர்த்தும்போது நீரோட்டம் தடைபடும், மத்திய லண்டனை நோக்கி நதிநீர் பயணிக்காது – இதுதான் அடிப்படை. உருவாக்கப்பட்ட பிறகு, முதல் தசாப்தத்தில் அதன் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்தது. 1980களில் மொத்தமாகவே இது நான்கு முறைதான் பயன்படுத்தப்பட்டது. அதாவது, அந்த காலகட்டத்தில் நான்கு முறை மட்டுமே வெள்ள அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு எழுபத்தைந்து முறை இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது! அதுவும் குறிப்பாக 2014ம் ஆண்டில் எழுபது நாள்களுக்குள்ளாகவே இருபத்தெட்டுமுறை தடை அமைப்பு உயர்த்தப்பட்டிருக்கிறது! ரோமானிய காலகட்டத்திலிருந்தே லண்டன் நகரத்தில் வெள்ள அபாயம் இருந்திருக்கிறது என்றாலும் இதுவரை இந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்ததில்லையாம்.

காலநிலை மாற்றத்தால் மிகவும் நுணுக்கமான பாதிப்புகள்கூட ஏற்படும். மரபுசார் செயல்பாடுகள், நாட்டார் கலைகள் போன்றவை காலநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள டுனா கிராமத்தினர், காலநிலை மாற்றத்தால் தங்களது மரபுசார் பானைத் தொழில் பாதிப்படைவதாகக் கூறுகிறார்கள். எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வதால் பானைகளைச் சரியான முறையில் இவர்களால் காயவைக்க முடிவதில்லை. எதிர்பாராத மழைப்பொழிவு, வெள்ளப்பெருக்கு ஆகியவை மண்ணின் தன்மையை மாற்றியமைப்பதால் அது பானை செய்வதற்கும் ஏதுவாக இருப்பதில்லை.  புகழ்பெற்ற சென்னப்பட்ணா மர பொம்மைகளைப் பற்றி அறிவோம். முந்தைய காலத்தோடு ஒப்பிடும்போது பொம்மைகள் செய்வதற்கான சில குறிப்பிட்ட மர வகைகள் எளிதில் கிடைப்பதில்லை என்று அந்தக் கலைஞர்கள் தெரிவிக்கிறார்கள், இந்த மரங்கள் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பது  அறிஞர்கள் கருத்து.

குஜராத்தின் ரபரி வகை ஆடைகளுக்கான கறுப்பு சாயத்தை எடுக்கும் மரங்கள் எண்ணிக்கையில் குறைந்துவிட்டனவாம். அது மட்டுமில்லாமல் அஜ்ரக் வகை ஆடைகளை உருவாக்குவதில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தின் புஜோடி கிராமம் “நெசவாளர்களின் கிராமம்” என்று அழைக்கப்படுகிறது. இங்கு நெய்யப்படும் கம்பளியாடைகள் உலகப் புகழ் பெற்றவை. புஜோடியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், காலநிலை மாற்றம் காரணமாகச் செம்மறியாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன எனவும், அதனால் கம்பளியின் தரம் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தால் தீவுநாடுகள் மற்றும் மலைப்பிரதேசங்களின் உணவு ஆதாரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கின்றன. உதாரணமாக, பல காட்டுப்பழங்கள்/செடிகள் காலநிலை மாற்றத்தால் கிடைக்காமல் போய்விட்டதாகவும், இதனால் தங்களது உணவுப் பழக்கத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அசாம் மாநில மக்கள் தெரிவிக்கின்றனர். கொரியாவின் கிம்சியில் தொடங்கி இத்தாலியின் பாஸ்தா வரைக்கும் பல்வேறு மரபு உணவுகளுக்கான அடிப்படைப் பயிர்கள் ஏற்கனவே காலநிலை அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிட்டன. “உணவுப் பாதுகாப்பு” என்ற பொதுப்பார்வையில் பார்க்கும்போது இது ஒரு சாதாரணமாக விஷயமாகத் தெரியலாம். சொல்லப்போனால், காலநிலை மாற்றத்தால் உலக அளவில் உணவு உற்பத்தியிலேயே பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கும் சூழலில், ஒரு குறிப்பிட்ட இனக்குழுவின் மரபு உணவு காணாமல் போவது அவ்வளவு மோசமான பிரச்சினையாகத் தோன்றாது. ஆனால் அந்தக் குறிப்பிட்ட இனக்குழுவுக்கு அது மிகப்பெரிய மரபுசார் இழப்புதான். அதையும் பேசவேண்டும். ஒவ்வொரு தொல்குடிக்கும் உணவுசார் இறையாண்மை (Food Sovereignity) என்பது வேறுபடும். “உணவு உற்பத்தியே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு பழம் கிடைக்காமல் போவதும் கீரை வகை அழிந்துபோவதும் பெரிய பிரச்சனையா?” என்று நாம் ஒதுக்கிவிட முடியாது. காலநிலை தீர்வு என்பது எல்லாருக்குமான உணவு இறையாண்மையையும் உறுதி செய்வதாகவே இருக்கவேண்டும்.

இவையெல்லாம் நேரடிப் பாதிப்புகளுக்கான உதாரணங்கள். ஒரு இடத்தின் காலநிலை மாறுபடும்போது கண்ணுக்குத் தெரியாத வழிகளில்கூட மரபு பாதிக்கப்படும். காலநிலை மாற்றத்தால் ஆர்டிக் பகுதியில் உள்ள பனி உருகி வருகிறது. இதைப் பற்றிக் குறிப்பிடும் ஒரு இனூயிட் தொல்குடி நபர், “நாங்கள் பனியின் பிள்ளைகள், அதுதான் எங்களுடைய அடையாளம். பனி உருகி இல்லாமல் போய்விட்டால் எங்களது அடையாளம் என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார். நேரடியான வாழ்வாதார பாதிப்பு இல்லாவிட்டால்கூட ஒரு மரபின் இழப்பு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திவிடும், ஒரு கையறு நிலையை உருவாக்கும்.  வயல் நிறைந்த கிராமத்தில் வாழ்ந்துவரும் ஒருவர், தனது வாழ்நாளுக்குள்ளாகவே அதை வானம் பார்த்த பூமியாகப் பார்க்க நேரிடுவது எத்தனை துயரமானது?!

 ஒரு சமூகத்தின் பண்பாட்டு இழப்பு என்பது விலைமதிப்பு, கணக்கீடு ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது. பொருட்சேதத்தைக் கணக்குப் போடுவதுபோல “இது பெரிய இழப்பு – அது சிறிய பாதிப்பு” என்றெல்லாம் வகைப்படுத்திவிட முடியாது. பண்பாட்டு இழப்பால் ஏற்படும் மன உளைச்சலையும் அடையாளச் சிக்கலையும் சேர்த்துக்கொண்டால் பாதிப்பு பன்மடங்காகிவிடும். அந்தச் சமூகம் மீண்டெழும் வேகத்தையும் அது பாதிக்கும். ஆகவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மரபுசார் பாதிப்புகளை நாம் பேசவேண்டும். இதுகுறித்த விரிவான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். காலநிலை மாற்றத்துக்கான தயார்நிலை, அதற்கு ஏற்றவாறு நம்மைத் தகவமைத்துக்கொள்வது ஆகியவற்றில் இதுபோன்ற மரபுசார் அம்சங்களும் விவாதிக்கப்படவேண்டும். இதையும் உள்ளடக்கிய ஒரு எதிர்காலத்திட்டமே சரியானதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.