இறக்கப்போகிறேன்
எதனால் இறப்பேன் என்பதை
அறிந்து விடுபடுதல் ஆகத்துயரம்
உங்களிடம் சொல்லிப் போகிறேன்
பிறந்து ஒருவாரமான பச்சிளம்குழந்தையை
விட்டுப் போகிறேன்.
விரிசலில்லாத பழுத்தக் காதலை
விரிந்த மேகத்தில் பதித்து
மெல்ல மெல்ல கனிச்சாறு
என் இதயத் திரட்சியில் கனக்கச் செய்த
காதல் கணவரை விட்டுப்போகிறேன்.
கரம்கொடுப்பேன் என மூளையின்
சிவந்த நெளிவடுக்களில் நம்பிக்கையை
அலைவரிசையாக்கி அவ்வப்போது கண்திறக்கும்
பிணி அணைத்த கல்மரத் தாயை விட்டுப்போகிறேன்.
பரந்த உலகின் மலைகளில்
பள்ளத்தாக்குகளில், புல்வெளிகளில்
சுவாசப்பையின் சிறுத்துண்டை விட்டுப்போகிறேன்
இழப்பை சுவீகரித்த வளர்ப்பு விலங்குகளின் கேவல்
தூரத்தில் கேட்கிறது
என்னையும் அறியாமல் உயிரை
அவைகளிடத்து விட்டுப்போகிறேன்.
புத்தரின் அமைதி, சொற்களில் மறுக்கப்பட்ட மன்னிப்பு,
நாளை தருகிறேன். என்றுசொன்ன தர்மத்தின் வாக்குறுதி,
பின்னால் தேவைப்படுமென பதுக்கப்பட்ட சிரிப்பும்
கொஞ்சம் சில்லறைகளையும் விட்டுப்போகிறேன்
மார்பு சிந்தும் கண்ணீராகக் கசியும்
தாய்ப்பாலோடு போகிறேன்.
மீண்டும் உங்களிடம் சொல்லிப்போகிறேன்.
மருத்துவமனையின் கீழ் தளம்
வாயுக்கள் நிரம்பிய அறை
இழுத்துப் போகிறார்கள்
இரவும் பகலும் அல்லலுற்ற
மருத்துவர்கள், செவிலியர்கள்
இளைஞர்கள், குழந்தைகள், வயதானவர்கள் இன்னபிற
மடிந்துபோக ஆயிரக்கணக்கில் கூடிநிற்கிறோம்
உயிருள்ள பிணமாகச் சிலர்
தாழிட்டக் கதவுகளை உடைத்து
குருதி பெருக பலர்
வாயுக்களை நேசித்தும் முத்தமிட்டும் நிலம் சாய்கிறார்கள்.
எத்தனைக் குரூர எண்ணம் உங்களுக்கு
தசைகளைக் குதறி இழுத்து ஓடும்
சலம் பிடித்த நரிபுத்தி வேட்டை நாய்களாக
புணரும் கிருமிகளின்
பெருக்கத்தை சோதனைக்கூடங்களில் வேடிக்கைப் பார்த்து
வெற்றிக் களியாட்டம் ஆடியிருப்பீர்கள்
உங்களுக்கு என் நிலைமை வேண்டாம்.
நாட்டைக் காப்பது
நம்மை நாம் காப்பதுதான்
எல்லாவற்றையும் விட்டுச் செல்கிறேன்.
இலையுதிர்க் கால இலைகளாக
சாலையெங்கும் சடலங்கள் உதிர்ந்து கிடக்கின்றன.
மனிதர்களை மனிதர்கள் ஏன் கொலைசெய்கிறார்கள்?
கிருமிகளை ஆயுதமாக்கியவர்கள் கோழைகள்தானே?
பதில் சொல்லக் காத்திருப்பவர்களுக்கு
நோய் தாக்காத மனிதம் குளிர்ந்த என் துளி மூளையையும்
விட்டுச் செல்கிறேன்.
-அகிலா கிருஷ்ணமூர்த்தி