“நீங்கள் ஏன் எப்போதும் துக்கமாகவே இருக்கிறீர்கள்? தயவுசெய்து சொல்லுங்களேன்.” என சிம்யோன் அர்டல்யொனோவிட்ச் நேற்று முன் தினம் திடீரென என்னிடம் வினவினார்,
வித்தியாசமான கேள்வி. அப்போது நான் கோவப்படவில்லை, நான் மிகவும் பயந்தவன்; ஆனால் இங்கே அவர்கள் என்னை நிஜத்தில் ஆத்திரமூட்டி விட்டார்கள். எனது படத்தை வரைய நேர்ந்த ஒரு ஓவியன், ‘எப்படியாயினும், நீ ஒரு இலக்கியவாதிதானே” என்றான். நான் சென்றிருந்தபோது அதைக் காட்டினான்: “போ, பைத்தியக்காரத்தனத்தைப் பிரதிபலிக்கும் அந்த நோய்பீடித்த முகத்தைப் பார்.” என அதில் எழுதியிருந்தது.
அது உண்மையாய் இருக்கலாம், ஆனால் இத்தனை அப்பட்டமாகவா அதை எழுத்தில் கொணர்வது! அச்சில் ஏற்றும் விஷயங்களுக்கென்று ஒரு கௌரவம் இருக்கவேண்டும்; அவை உன்னதமாக இருக்க வேண்டும், அதற்குப் பதிலாக இப்படி…
குறைந்தபட்சம் அதை மறைமுகமாகவாவது சொல்லலாமே; அதற்காகத்தானே மொழிநடை இருக்கிறது. ஆனால் இல்லை, அதை மறைமுகமாகச் சொல்லவேண்டுமென அவன் மெனக்கடவில்லை. இப்போதெல்லாம் நகைச்சுவையும் நேர்த்தியான நடையுமெல்லாம் காணாமலாகிவிட்டன, அபவாதம்தான் ஞானம் எனக் கருதப்படுகிறது. அதில் எனக்குக் குறை ஒன்றும் இல்லை: தன்னிலை இழந்துவிடக்கூடிய அளவிற்கெல்லாம் நான் இலக்கியவாதி இல்லை. ஒரு நாவல் எழுதியிருக்கிறேன், அது இன்னும் வெளியாகவில்லை. கட்டுரைகள் எழுதியிருக்கிறேன் – அவை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன. அவற்றை நான் ஒரு ஆசிரியரிடமிருந்து இன்னொருவரிடம் எடுத்துச் சென்றேன்; எல்லா இடங்களிலுமே அதை மறுத்துவிட்டனர்: உங்கள் எழுத்தில் உப்பே இல்லை என்றார்கள். “என்ன மாதிரியான உப்பு வேண்டும் உங்களுக்கு, தலையில் இருக்கும் உப்பா?” என ஏளனமாய் வினவினேன் நான்.
பதிப்பாளர்களுக்காக ஃப்ரெஞ்சிலிருந்து நான் மொழிபெயர்த்ததன் பெரும்பகுதி அவர்களுக்குப் புரியவேயில்லை. மற்ற வியாபாரிகளுக்கும் நான் விளம்பரங்கள் எழுதுவதுண்டு: “ஒப்பற்ற வாய்ப்பு! அற்புதமான தேநீர், எங்களது சொந்தத் தோட்டத்திலிருந்து…” ஃபியோதர் மட்வேயிட்ச் மரணித்தபோது எழுதிய புகழஞ்சலியின் வாயிலாகவும் நான் ஒரு நல்ல தொகையை சம்பாதித்தேன். ”பெண்களை மயக்கும் கலை” – ஒரு பதிப்பாளரிடமிருந்து வந்த வேலை. இதைப்போல ஆறு சிறிய புத்தகங்களை நான் என் வாழ்க்கையில் எழுதியிருக்கிறேன். வால்டெய்ரின் சிந்தனைகளைத் தொகுக்கும் எண்ணமும் எனக்கிருக்கிறது, ஆனால் நம் மக்களை அது ஈர்க்காதோ என்று அஞ்சுகிறேன். வால்டெய்ருக்கு இப்போது காலம் இல்லை; இப்போதெல்லாம் நமக்குத் தடிதான் சரிப்படும், வால்டெய்ர் அல்ல. இப்போதெல்லாம் நாம் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறோம். சரி, என் ஒட்டுமொத்த வாழ்க்கையின் இலக்கியச் செயல்பாடுகள் அவ்வளவுதான். பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு இலவசமாக, கைப்பட கடிதங்கள் எழுதுகிறேன்தான். அவர்களுக்கு எல்லாவகையான அறிவுரைகளும் வழிகாட்டுதல்களும் நேர்மையான விமர்சனங்களும் வழங்குகிறேன். கடந்த வாரம் நான் அனுப்பியது இந்த இரண்டு ஆண்டுகளில் நான் அனுப்பிய நாற்பதாவது கடிதம். இவற்றிற்காக அஞ்சல்தலை வாங்கியதில் மட்டுமே எனக்கு நான்கு ரூபிள்கள் வீணாகியுள்ளன. இவை எல்லாமும்தான் என் கோபத்திற்குக் காரணம்.
இலக்கியவாதி என்பதால் அல்ல, என் நெற்றியில் நேர்கோட்டில் இருக்கும் இரண்டு மருக்களுக்காகத்தான் அந்த ஓவியன் என்னை அப்படி வரைந்திருக்க வேண்டும். அது மிகவும் இயற்கையாக இருக்கிறது என அவன் சொல்லக்கூடும். அவர்களுக்கு இப்போது சுயசிந்தனை இல்லை, எனவே இதுபோன்ற தனித்துவமானவற்றைத் தேடுகிறார்கள். என்றாலும், அந்த மருக்களை அப்படியே இயற்கையாக எனது படத்தில் அவனால் கொண்டுவரமுடிந்ததில்லையா, அதைத்தான் அவர்கள் யதார்த்தபாணி என்கிறார்கள்.
பித்துநிலையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டு எங்களில் பலரும் பைத்தியக்காரர்கள் எனப் பட்டம் சூட்டப்பட்டார்கள். அதுவும் என்னமாதிரியான மொழியில்! “அப்படி ஒரு இயற்கையான திறமைசாலி… அவருக்குப் போய்.. என்றாலும், இறுதியில் அவர்களுக்கு இது நேரத்தான் செய்கிறது”…”எப்படியாயினும் அது அவருக்கு வெகு முன்பே தெரிந்திருக்க வேண்டும்.” அது ஒருவகையில் கலாபூர்வமானது; எனவே, தூய கலைக்கண்ணோட்டத்தில் அதனை ஒருவர் பாராட்டிடக்கூட முடியும். என்றாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, பைத்தியக்காரர்கள் எனப்பெயரிடப்பட்டிருக்கும் இவர்கள் முன்னெப்போதையும்விட புத்திசாலிகளாகிவிட்டனர். எனவே விமர்சகர்கள் அவர்களைப் பைத்தியக்காரர்கள் என்று அழைக்கலாம் என்றுதான் தோன்றுகிறது, ஆனால் இவர்களை விடச் சிறந்தவர்களை அவர்களால் உருவாக்கமுடியாது.
இருக்கிறவர்களிலேயே சிறந்த ஞானி என நான் யாரைச் சொல்வேனென்றால், தன்னையே மாதம் ஒருமுறையாவது முட்டாள் என அழைத்துக்கொள்ள முடிகிறவனைத்தான். அப்படி ஒரு பண்பே இப்போதெல்லாம் இல்லாமலாகிவிட்டது. அந்தக்காலத்திலெல்லாம் ஒரு முட்டாள் ஆண்டுக்கு ஒருமுறையேனும் எப்படியாகினும் தன்னை ஒரு முட்டாள் என்பதை உணர்ந்துகொள்வான்… இப்போதெல்லாம் அது கிஞ்சித்தும் இல்லை. சரி, ஒரு ஞானி இன்னொருவனை முட்டாள் எனச் சொல்ல முடியுமா என்றால், அதுவும் முடியாதபடிக்கு இவர்கள் சூழலைக் குழப்பி வைத்திருக்கிறார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றேதான் செய்திருக்கிறார்கள்.
இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஃபிரெஞ்சுக்காரர்கள் முதன்முதலாக தங்களது பைத்தியக்காரவிடுதியைக் கட்டியபோது, அறிவுபூர்வமான ஒரு ஸ்பானிஷ்காரன் குறிப்பிட்டான்: “எல்லா முட்டாள்களையும் தனியாக ஒரு இல்லத்தில் அடைப்பதன்மூலம் மீதமுள்ள தாங்கள் அனைவரும் புத்திசாலிகள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவர்கள் முயல்கிறார்கள்”. அதேதான்: இன்னொருவரைப் பைத்தியக்கார விடுதியில் அடைப்பதன்மூலம் உன்னை நீ அறிவாளி எனக் காட்டிக்கொள்ள முயற்சிக்காதே. “K பைத்தியமாகிவிட்டான் என்று சொன்னால் நாம் தெளிவானவர்கள் என்று அர்த்தம்.” இல்லை, அதன் பொருள் அது இல்லை.
நிற்க, நான் ஏன் இப்படிப் புலம்பிக்கொண்டே போகிறேன்? மேலும் மேலும் புலம்பிக்கொண்டே இருக்கிறேன். என் வேலைக்காரிகூட என்னை வெறுத்துவிட்டாள். நேற்று ஒரு நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். “உங்கள் நடை மாறிக்கொண்டிருக்கிறது,” என்றார்; “அது துண்டு துண்டாக இருக்கிறது: வெட்டுகிறீர்கள் வெட்டுகிறீர்கள் – அதன்பிறகு ஒரு அடைப்புக்குறி, அடுத்து அடைப்புக்குறிக்குள் ஒரு அடைப்புக்குறி, அதன்பிறகு அடைப்புக்குறிக்குள் எதையோ கொணர்ந்து இணைக்கிறீர்கள், அதன் பிறகு மீண்டும் மீண்டும் வாக்கியத்தை உடைக்கத் தொடங்கிவிடுகிறீர்கள்.
அந்த நண்பர் சொன்னது சரிதான். எனக்கு எதோ விநோதமாக நேர்ந்துகொண்டிருக்கிறது. என் குணாதிசயமே மாறிக்கொண்டிருக்கிறது, தலை வலிக்கிறது. விநோதமான விஷயங்களைப் பார்க்கவும் கேட்கவும் செய்கிறேன் நான். குரல்கள் என்றில்லை, எனக்கருகில் யாரோ “போபோக் போபோக் போபோக்!” என முணுமுணுப்பதைப்போல இருக்கிறது.
இந்த போபோக் என்பதற்கு என்ன அர்த்தம்? நான் என் மனதைத் திசைதிருப்ப வேண்டும்.
மனதைத் திசை திருப்பும் பொருட்டு வெளியே சென்ற நான் ஒரு மரண ஊர்வலத்தினை அடைந்தேன். தூரத்துச் சொந்தம் ஒருவர் – என்றாலும் அரசவையின் ஒரு மதிப்புமிக்க உறுப்பினர். இப்போது ஒரு விதவையும் திருமணம் முடிக்க வேண்டிய ஐந்து மகள்களும். அவர்களைக் குறைந்தபட்ச வசதியுடன் வாழவைப்பதற்கும் கூட எத்தனை செலவாகும்! அவர்களது அப்பா அதைச் சமாளித்தார், ஆனால் இப்போது சொற்ப ஓய்வூதியம் மட்டுமே மிச்சம். அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். எப்போதுமே அவர்கள் என்னை மகிழ்ச்சியுடன் வரவேற்றதில்லை. இப்படி ஒரு விநோதமான சூழ்நிலை ஏற்பட்டிருக்காவிட்டால் நான் இந்த இறுதிச்சடங்குகளுக்கு வந்திருக்கவே கூடாது. பிறரோடு சேர்ந்து நானும் கல்லறைக்கு நடந்தேன்; என்னைக் கீழாக நினைத்த அவர்கள் விலகி நடந்தனர். என் ஆடை மிக அவலட்சணமாக இருந்ததென்பது நிச்சயம். நான் ஒரு மயானத்திற்குச் சென்று கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன; என்னவொரு அவலமான இடம்!
அதன் நாற்றத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். அங்கே வெவ்வேறு விலைமதிப்புடைய துணிகள் போர்த்தப்பட்ட பதினைந்து பிண ஊர்திகள் இருந்தன; அலங்காரமான, மரத்திலான சவப்பெட்டிகள் இரண்டு இருந்தன. ஒரு தளபதியுடையதொன்றும் ஏதோ ஒரு பெண்ணுடைய மற்றொன்றும். ஏராளம் பேர் இரங்கல் செலுத்த வந்திருந்தனர், போலிதுக்கமும் வெளிப்படையான கொண்டாட்டமும் பெருமளவில் வெளிப்பட்டது. இதைப்பற்றி மதகுருக்களுக்குப் புகார் ஒன்றும் இல்லை; அவர்களுக்கு இதில் நல்ல வருமானம் வருகிறது. ஆனால் அந்த நாற்றம், அந்த நாற்றம். இந்த மதகுருக்களில் ஒருவராக இருக்க நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன்.
என்னை அது ஆழமாகப் பாதித்துவிடும் என்பதையும் மீறி இறந்தவர்களின் முகத்தை நான் தொடர்ந்து பார்த்தபடி இருந்தேன். சிலர் மென்மையான முகபாவம் கொண்டிருந்தனர், சிலர் வருத்தத்துடன் இருந்தனர். பொதுவாகவே, எல்லோரது சிரிப்புமே விரும்பத்தகாததாக இருந்தபோதிலும், சிலரது முகம் அத்தன்மையை அதீதமாகக் கொண்டிருந்தது. எனக்கு அவற்றைப் பிடிக்கவில்லை; அவை ஒருவரது கனவுகளை ஆக்கிரமிக்கவல்லவை.
பிரார்த்தனை நடைபெற்றபோது நான் ஆலயத்தை விட்டு வெளியே வந்தேன்: அது ஒரு சோபையான நாள், ஆனால் உலர்வானதும். கொஞ்சம் குளிராகவும் இருந்தது, அக்டோபரில் அப்படித்தானே. நான் கல்லறைகளுக்கிடையே நடந்தேன். இதில் பல்வேறு படிநிலைகள் இருக்கின்றன. மூன்றாவது வகைக்கு முப்பது ரூபிள்கள் விலை; அது சற்றுப் பாங்கானதும் சுமாரான விலையுடையதும் ஆகும். முதல் இரண்டு படிநிலைகளைச் சேர்ந்தவை ஆலயத்தின் முகப்புத் தாழ்வாரத்தில் உள்ளவை: அவை சற்று விலையுயர்ந்தவை. இந்த நிகழ்வில் அவர்கள் ஆறு பேரை மூன்றாம் படிநிலைக் கல்லறைகளில் புதைத்தனர். அவர்களுள் அந்தத்தளபதியும் பெண்ணும் அடக்கம்.
நான் பிரேதக்குழிகளுக்குள் பார்த்தேன் – அது மிகக் கோரமாக இருந்தது: நீர், அவ்வளவு நீர்! துல்லியமான பச்சையில், அதோடு…. ஆனால் அங்கே, ஏன் அதைப்பற்றிப் பேச வேண்டும்! குழிதோண்டுபவன் ஒவ்வொரு நிமிடமும் அதை வெளியே இறைத்து ஊற்றிக்கொண்டே இருந்தான். பிரார்த்தனை நடைபெற்றபோது வெளியே நடந்த நான், வாயிலையும் கடந்து சென்றேன். அதன் அருகிலேயே ஒரு அன்னசத்திரம் இருந்தது. அதற்குச் சற்றுத்தொலைவில் ஓர் உணவகம் இருந்தது. அது அப்படி ஒன்றும் சிறிய உணவகம் இல்லை: அங்கே நல்ல மதிய உணவும் எல்லாமும் கிடைத்தது. இங்கே அஞ்சலிசெலுத்த வந்தவர்கள் நிறையப்பேர் இருந்தனர். பெருமளவிலான கொண்டாட்டத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் காணமுடிந்தது. கொஞ்சம் அருந்துவதற்கும் உண்பதற்கும் எனக்குக் கிடைத்தது.
அதன்பிறகு, ஆலயத்திலிருந்து கல்லறைத்தோட்டத்திற்கு சவப்பெட்டிகளை எடுத்துச் செல்லும் ஊர்வலத்தில் நான் கலந்துகொண்டேன். சவப்பெட்டியில் இருக்கும் பிணங்கள் ஏன் இவ்வளவு கனமாக இருக்கின்றன? அது ஒருவகையான ‘செயலின்மை’யால் என்றும், அந்த உடல் அதன் உடைமையாளரால் இயக்கப்படாததால் என்றும் அல்லது அதுபோன்ற ஏதோ ஒரு முட்டாள்த்தனத்தினாலும் என்று இயங்குவிதிகளுக்கும் அடிப்படை அறிவுக்கும் எதிரான கருத்துக்களைச் சொல்வர். துறை ரீதியான அறிவைக்கோருகிற ஒரு விஷயத்தில் அது சம்பந்தப்பட்ட எந்த அறிதலும் இல்லாத பொதுவானவர்கள் கூறுகின்ற கருத்துக்களைக் கேட்பதை நான் எப்போதும் விரும்புவதில்லை; ஆனால் அதுதான் நமக்குத் திரும்பத்திரும்ப நிகழ்கிறது. ஒரு போர்வீரனின், ராணுவ அதிகாரியின் துறையைப் பற்றிக் கருத்துக் கூறுவதில் சாதாரண மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்; அதே நேரத்தில், பொறியியலில் பட்டம் பெற்றவர்கள் தத்துவம் பற்றியும் அரசியல், பொருளாதாரம் பற்றியும் பேசுவதை விரும்புகின்றனர்.
இரங்கற்பா பாடுகின்ற நிகழ்விற்கு நான் செல்லவில்லை. எனக்கென்று கௌரவம் இருக்கிறது, ஏதோ ஒரு சிறப்புத் தேவையின் பொருட்டுத்தான் நான் இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் எனில், இங்கே இரவுணவை உண்ண நான் ஏன் என்னைக் கட்டாயப்படுத்தவேண்டும், அது ஈமச்சடங்கின் இரவுணவாகவே இருக்கட்டுமே. எனக்குப் புரியாத ஒரே விஷயம் என்னவென்றால், நான் ஏன் கல்லறையிலேயே தங்கிவிட்டேன் என்பதுதான்; ஒரு கல்லறையின் மீது அமர்ந்த நான் தொடர்புடைய சிந்தனைகளில் ஆழ்ந்தேன்.
மாஸ்கோ கண்காட்சியில் தொடங்கி, வியப்பு சார்ந்த சிந்தனைகளில் வந்து நின்றேன். வியப்பு பற்றிய எனது அனுமானங்கள் இவையே:
“எல்லாவற்றைக்கண்டும் வியப்படைவது நிச்சயம் முட்டாள்த்தனம்தான், எது குறித்துமே வியப்புக் கொள்ளாமல் இருப்பது முதிர்ச்சியின் வடிவமாகவும், சில வகைகளில், ஏற்றுக்கொள்ளப்பட்ட குணாதிசயமாகவும் உள்ளது. ஆனால் அது அப்படி ஒன்றும் உண்மையல்ல. என்னைப் பொறுத்தவரை, எது குறித்தும் வியப்படையாமல் இருப்பதென்பது எல்லாவற்றைப்பற்றியும் வியப்படைவதைக் காட்டிலும் முட்டாள்த்தனமானது. அதோடு, எல்லாவற்றிற்கும் மேலாக, எதுகுறித்தும் வியப்புக் கொள்ளாதிருப்பதென்பது எதன்மீதும் மரியாதையின்றி இருப்பதற்குச் சமம். நிச்சயமாக ஒரு முட்டாளால் ஒருபோதும் மரியாதையை உணரமுடியாது.”
“அனைத்தையும் தாண்டி நான் அதிகம் விரும்புவது மரியாதையை உணர்வதைத்தான். மரியாதையை உணர வேண்டுமென நான் தவிக்கிறேன்,” என என் நண்பன் ஒருவன் அன்று என்னிடம் சொன்னான்.
அவன் மரியாதையை உணர வேண்டுமெனத் தவிக்கிறான், இன்றைய சூழலில் இதை அச்சில் கொண்டுவந்தால் என்ன ஆகுமென நான் யோசித்தேன். அந்த யோசனையின்போது நான் மறதிக்குள் மூழ்கிவிட்டேன். சமாதிகளின் மேல் எழுதியிருக்கும் கல்லறை வாசகங்களை வாசிப்பது எனக்குப் பிடிக்காது; அவை எப்போதும் ஒன்றேயாகத்தான் இருக்கின்றன. சாப்பிட்டு முடிக்கப்படாத ஒரு சாண்ட்விச் எனக்கருகிலிருந்த கல்லறைக்கல்வெட்டின் மீது கிடந்தது; மதிகெட்டதும் பொருத்தமற்றதும். ரொட்டியைத் தரைத்தளத்தில் எறிவதுதான் பாவம், பூமியில் எறிவதல்ல என்பதுதான் என் நம்பிக்கை. அதோடு, அது ரொட்டி இல்லை, சாண்ட்விச்தான் என்பதால் நான் அதை மைதானத்தில் எறிந்தேன். ஸுவோரின் நாட்காட்டியில் இதைச் சரிபார்க்க வேண்டும்.
நான் அங்கே நீண்ட நேரம் – மிக நீண்ட நேரம் அமர்ந்துவிட்டேன் என நினைக்கிறேன். பளிங்குச் சவப்பெட்டியின் வடிவை ஒத்த ஒரு நீண்ட கல்லின் மேல் நான் படுத்துவிட்டேன் போல. அது எப்படி நடந்ததெனத் தெரியவில்லை, ஆனால் நான் எல்லாவகையான விஷயங்களும் பேசப்படுவதைக்கேட்கத் தொடங்கினேன். முதலில் நான் அதில் கவனம் செலுத்தவில்லை, அலட்சியம்தான் செய்தேன். ஆனால் அந்த உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. பேசுபவர்களின் வாயெல்லாம் தலையணை வைத்து அமுக்கப்பட்டது போல அவர்களது குரல் உள்ளடங்கி ஒலித்தது, ஆனால் அதே சமயம் அவை தெளிவாகவும் மிக அருகிலும் ஒலித்தன. என்னைத் திரட்டிக்கொண்ட நான் எழுந்து அமர்ந்து கவனமாகக் கேட்கத்தொடங்கினேன்.
”மேன்மைபொருந்தியவரே, இது சாத்தியமே இல்லை. நீங்கள் ஹார்ட் கோரினீர்கள் என்றுதான் நான் அதை இறக்கினேன், ஆனால் இப்போது டயமண்ட் எண் ஏழினை இறக்குகிறீர்கள். டயமண்டுகளைப்பற்றி நீங்கள் எனக்குக் குறிப்புணர்த்தியிருக்க வேண்டும்.”
“கடுமையான விதிமுறைகளோடு எதற்காக விளையாட வேண்டும்? அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?”
“நிச்சயம் மேன்மைபொருந்தியவரே. இலக்கென்று எதுவும் இல்லாமல் ஒருவரால் விளையாட முடியாது. அடுத்த கையை இறக்காதீர்கள், நாம் டம்மி வைத்து விளையாட வேண்டிவரும்…”
“நல்லது, ஆனால் இங்கே டம்மி எதையும் உன்னால் கண்டறிய முடியாது.”
எவ்வளவு கர்வமான வார்த்தைகள்! அது வித்தியாசமானதாகவும் எதிர்பாராததாகவும் இருந்தது. ஒரு குரல் சிந்தனைவயப்பட்டதாகவும் மதிப்புமிக்கதாகவும் இருக்க, மற்ற குரல் பணிவானதாக இருந்தது; நானே அதைக்கேட்டிருக்காவிட்டால் நம்பியிருக்கவே மாட்டேன். இழவுவீட்டின் இரவுணவிற்கு நான் செல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்றபோதிலும் எப்படி அவர்களால் இங்கு சீட்டாட முடிகிறது, அதோடு இந்தத்தளபதி யார்? கல்லறைகளுக்கு அடியில் இருந்துதான் இந்த சப்தங்கள் வந்தன என்பதில் எந்த ஐயமும் இல்லை. குனிந்து கல்லறை வாசகத்தை வாசித்தேன்:
“படைத்தளபதி பெர்வோயெதவ்.. குறிப்பிட்ட தரநிலையிலுள்ள குதிரைப்படையைச் சேர்ந்த… “. ஹ்ம்! “இந்த ஆண்டு ஆகஸ்டில் மரித்தார்… ஐம்பத்தி ஏழு… சொர்க்கத்தின் வாசல் உதயமாகும் வரை ஓய்வெடுங்கள், அன்பிற்குரியவரின் சாம்பல்களே!”
ஹ்ம், கொடுமை, அது நிஜமாகவே ஒரு தளபதிதான்! பணிவுடன் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரனின் கல்லறையில் எந்த நினைவுச்சின்னமும் இல்லை, வெறும் கல்வெட்டு மட்டுமே. அவன் சமீபத்தில்தான் வந்திருக்க வேண்டும். அவனது குரலிலிருந்து அவன் ஒரு கீழ்நிலை ஊழியன் என்று தெரிந்தது.
“ஒஹ்-ஹோ-ஹோ-ஹோ!” தளபதி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து முப்பத்தாறு அடி தொலைவிலிருந்த ஒரு புதிய கல்லறையிலிருந்து இப்படி ஒரு குரல் ஒலித்தது. அது ஒரு ஆணுடைய குரல் – போலியான மத உணர்வை மிகையாகச் சூடியபடி ஒலித்தது. ”ஒஹ்-ஹோ-ஹோ-ஹோ!”
”அட, அவன் மீண்டும் விக்கல் எடுக்க ஆரம்பித்துவிட்டான்!” எரிச்சலடைந்த ஒரு பெண்ணின் ஆணவமும் இகழ்ச்சியும் நிரம்பிய குரல் ஒலித்தது. அவள் உயர் வகுப்பினைச் சேர்ந்தவள் என்பது வெளிப்படை. “இந்தக் கடைக்காரனுக்கருகில் இருப்பதொரு இன்னல்!”
”நான் ஒன்றும் விக்கல் எடுக்கவில்லை. நான் எதையுமே சாப்பிடவில்லை. அது என் இயல்பு. நிஜமாகத்தான் அம்மையாரே, உங்களுடைய ஆடம்பர குணத்தை இங்கும் கூட உங்களால் தவிர்க்கமுடியவில்லை போல் தெரிகிறது.”
”பிறகு நீ எதற்காக இங்கே வந்து படுத்தாய்?”
“அவர்கள்தான் – என் மனைவியும் சிறுகுழந்தைகளும்- என்னை இங்கே கிடத்தினார்கள். நானாக ஒன்றும் இங்கே வந்து படுக்கவில்லை. மரணத்தின் ரகசியங்கள்! அதிலும், பணமே கொடுத்திருந்தால் கூட நான் உங்களுக்கு அருகில் படுத்திருக்க மாட்டேன்; என் விதி, நான் இங்கே படுத்திருக்கிறேன், என்னிடமிருந்த பணமும் அதை முடிவு செய்தது. மூன்றாம் தர கல்லறைக்கு நம்மால் எப்போதுமே செலவு செய்துவிட முடிகிறது.”
”நீதான் நன்றாகச் சம்பாரித்தாயே? மக்களிடம் கொள்ளையடித்தாயே?”
“உங்களிடம் கொள்ளையடித்தேனா, சொல்லவேண்டியதுதான்! ஜனவரிக்குப் பிறகு உன் பணத்தின் நிறத்தைக்கூட நான் கண்ணால் காண முடியவில்லை. நீ தரவேண்டிய தொகைக்கான சிறிய ரசீதொன்று கூட கடையில் இருக்கிறது.”
”அதுசரி, இது ரொம்பவும் முட்டாள்த்தனமானது: இங்கே வந்தும் கூட கடனை வசூல் செய்ய முயற்சிப்பது முட்டாள்த்தனம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது! மேலே போ. என் மருமகளைக் கேள் – அவள்தான் என் வாரிசு.”
”இப்போது எங்கேயும் போவதற்கில்லை, யாரையும் கேட்பதற்கில்லை. நாம் இருவருமே நமது முடிவை எட்டிவிட்டோம், கடவுளின் நியாயத்தீர்ப்பின் முன் நமது பாவங்களில் நாம் இருவரும் சமமானவர்களே.”
“நமது பாவங்களில்,” அவன் கூறியதைக் கண்டனத்துடன் திருப்பிக்கூறிய அவள், “என்னிடம் பேசிடவும் துணிந்துவிடாதே.” என்றாள்.
”ஒஹ்-ஹோ-ஹோ-ஹோ!”
“பார்த்தீர்களா, அந்தக் கடைக்காரன் அந்தப் பெண்ணிற்குப் பணிந்து போகிறான் மேன்மைபொருந்தியவரே.”
“ஏன் கூடாது?”
”ஏனென்றால் மேன்மைபொருந்தியவரே, நாம் எல்லோரும் அறிந்தபடி, இங்கே விஷயங்கள் வேறுமாதிரி.”
”வேறுமாதிரியா” எப்படி?”
“எப்படியென்றால், நாம் எல்லோரும் இறந்துவிட்டவர்கள் மேன்மைபொருந்தியவரே.”
“ம், ஆமாம்! என்றாலும்…”
ம், இது ஒரு கேளிக்கை, ஒரு நல்ல காட்சி என்றுதான் சொல்ல வேண்டும்! இங்கே கீழேயே இது இப்படி இருக்கிறதென்றால், மேலே பூமியில் நாம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? என்றாலும் என்னவொரு விசித்திரமான அலுவல் இது! அதீத கோபம் தோன்றினாலும், நான் அதைத் தொடர்ந்து கவனித்தேன்.
“ஆமாம், எனக்கு வாழ்க்கையை ருசிக்க வேண்டும்! ஆமாம், உங்களுக்குத் தெரியுமா… எனக்கு வாழ்க்கையை ருசிக்க வேண்டும்.” தளபதிக்கும் எரிச்சலூட்டும் பெண்ணுக்கும் இடையிலிருந்து திடீரென ஒரு புதிய குரல் ஒலித்தது.
”கவனித்தீர்களா மேன்மைபொருந்தியவரே, நமது நண்பன் மீண்டும் அதே விளையாட்டைத் தொடங்கிவிட்டான். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு அவன் ஒன்றுமே சொல்வதில்லை, பிறகு திடீரென “எனக்கு வாழ்க்கையை ருசிக்க வேண்டும்!” எனத் தொடங்கிவிடுவான். அதுவும் அவ்வளவு பசியுடன், ஹி-ஹி!”
”அத்தனை அற்பத்தனத்துடனும்.”
“அது அவனைப் பீடித்துக்கொள்கிறது மேன்மைபொருந்தியவரே. உங்களுக்குத் தெரியுமா, அவன் மேலும் மேலும் உறக்கத்திலாழ்ந்தபடியே இருக்கிறான். ஏப்ரலிலிருந்து அவன் இங்கே இருக்கிறான்; பிறகு திடீரென, “எனக்கு வாழ்க்கையை ருசிக்க வேண்டும்!”
“ஆனால் அது இப்போது சற்று வலுகுறைந்திருக்கிறது” – தான் கவனித்ததை வெளிப்படுத்தினார் மேன்மைபொருந்தியவர்.
“உண்மைதான் மேன்மைபொருந்தியவரே. நாம் மீண்டும் அந்த அவ்டத்யா இக்னட்யெவ்னாவைச் சீண்டுவோமா, ஹி-ஹி?”
”வேண்டாம், என்னை விட்டுவிடு. என்னால் அந்தச் சண்டைக்கார அடங்காப்பிடாரியைச் சகிக்க முடியாது.”
“என்னாலும்தான் உன்னைச் சகிக்கமுடியவில்லை,” இகழ்ச்சியாகக் குரலெழுப்பினாள் அந்த அடங்காப்பிடாரி. நீங்கள் இருவரும் சலிப்பானவர்கள், உருப்படியாக எதையும் உங்களால் எனக்குச் சொல்லமுடியாது. உம்மைப்பற்றி ஒரு சிறிய கதை எனக்குத்தெரியும் மேன்மைபொருந்தியவரே – வேண்டாம், முகத்தைத் திருப்பாதீரும் – மணமான ஒரு தம்பதியின் படுக்கைக்கடியிலிருந்து ஒரு வேலைக்காரன் எப்படி உம்மை கூட்டித்தள்ளினான் என்பதை நான் அறிவேன்.”
“அசிங்கம் பிடித்தவளே,” பற்களைக்கடித்தபடி முணுமுணுத்தார் தளபதி.
”அவ்டத்யா இக்னட்யெவ்னா அம்மையாரே,” என திடீரெனக் கத்தினான் கடைக்காரன், “என் இனிய பெண்ணே, கோவப்படாதீர்கள். ஆத்மசுத்தியை நிரூபிக்கும் பொருட்டுத்தான் நான் இப்போது இத்தனை துயரங்களை அனுபவிக்கிறேனா, அல்லது இது வேறெதன் பொருட்டுமா? சொல்லுங்கள்.”
“அட, நான் எதிர்பார்த்தது போலவே அவன் மீண்டும் அந்தப் பேச்சைத் துவங்கிவிட்டான்.! அவன் பயணத்திற்குத் தயாராகிவிட்டான் என்பதை உணர்த்தும்படியாக அவனிடமிருந்து வெளிப்பட்ட நாற்றமே அதைக் காட்டிக்கொடுத்து விட்டது!”
”நான் ஒன்றும் கிளம்பத்தயாராகவில்லை அம்மையாரே, என் உடலிலிருந்து குறிப்பிட்ட எந்த நாற்றமும் இல்லை. நான் என் உடலைத் தூய்மையாகத்தான் வைத்துள்ளேன், நீங்கள்தான் உளறுகிறீர்கள். இந்த மாதிரி ஒரு இடத்திலும் கூட உங்களது நாற்றம் தாங்கமுடியாதபடி பயங்கரமாக உள்ளது. மரியாதையின் பொருட்டுத்தான் நான் அதைப்பற்றிப் பேசுவதில்லை.”
“ஏய், அவமானப்படுத்துகிறாயா கொடூரமானவனே. அவனே அவ்வளவு மோசமாக நாறுகிறான், அவன் என்னைப்பற்றிப் பேசுகிறான்.”
”ஒஹ்-ஹோ-ஹோ-ஹோ! எனது இரங்கற்பாவிற்கான நேரம் சீக்கிரம் வராதா: கண்ணீர் நிரம்பிய அவர்களது குரலை நான் கேட்க வேண்டும், என் மனைவியின் புலம்பலையும் குழந்தைகளின் மெல்லிய அழுகையையும்!..”
“சரிதான், அது கவலைகொள்ள வேண்டிய ஒரு விஷயம்தான்! ஈமக்கிரியையின் விருந்தினை வயிறுநிறைய அடைத்துக்கொண்டு அவர்கள் விட்டிற்குச் சென்றுவிடுவார்கள்… ஐயோ, யாராவது எழுந்து கொள்ளக்கூடாதா!”
”அவ்டத்யா இக்னட்யெவ்னா, கொஞ்சம் பொறுங்கள். புதிதாக வந்தவர்கள் பேசுவார்கள்.” என்றான் நைச்சியமாய்ப் பேசும் கீழ்நிலை அரசாங்க ஊழியன்.
“அவர்களில் இளைஞர்கள் யாரேனும் இருக்கிறார்களா?”
“ஆமாம் அவ்டத்யா இக்னட்யெவ்னா, இருக்கிறார்கள். சிறுவர்கள் கூட இருக்கிறார்கள்.”
“ஓ! எவ்வளவு இனிமையாக இருக்கும் அது!”
“இன்னும் அவர்கள் ஆரம்பிக்கவில்லையா?” வினவினார் மேன்மைபொருந்தியவர்.
“நேற்றுமுன்தினம் வந்தவர்கள் கூட இன்னும் எழுந்துகொள்ளவில்லை மேன்மைபொருந்தியவரே. உங்களுக்கே தெரியும், சமயங்களில் அவர்கள் ஒரு வாரத்திற்குப் பின்பும் கூடப் பேசத்துவங்காமல் இருந்திருக்கிறார்கள். இன்றும் நேற்றும் அதற்கு முன்தினமும் நிறையப் பேரை அவர்கள் கொணர்ந்தார்கள் என்பது மிக நல்ல விஷயம். இப்போதைக்கு, எழுபது அடி தூரத்திற்கு கடந்த வருடத்தினர்தான் இருக்கிறார்கள்.”
“ஆமாம், அது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.”
“ஆமாம், மேன்மைபொருந்தியவரே, அரசாங்க ரகசிய ஆலோசகர் தரசெவிட்சையும் இன்று அவர்கள் புதைத்திருக்கிறார்கள். குரல்களிலிருந்து என்னால் அதைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவரது மருமகனை எனக்குத் தெரியும். சவப்பெட்டியைக் குழிக்குள் இறக்க அவன்தான் உதவினான்.”
“ஹ்ம், என்றால் இப்போது அவர் எங்கே இருக்கிறார்?”
“உங்களிடமிருந்து ஐந்து அடி தள்ளி மேன்மைபொருந்தியவரே, இடது பக்கம்… கிட்டத்தட்ட உங்களது காலடியில். நீங்கள் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் மேன்மைபொருந்தியவரே.”
“ம்ஹூம், இல்லை – வலியப்போய் பழகுவதெல்லாம் என் வழக்கம் கிடையாது.”
”ஓ! அவரே வந்து பேசுவார் மேன்மைபொருந்தியவரே. என்னிடம் விடுங்கள், நான் அவரை மயக்கிவிடுவேன். மேலும் நான்…”
“ஒ, ஹோ! எனக்கு என்ன நடக்கிறது?” புதிதாக வந்த ஒருவனது குரல் கரகரத்தது.
“ஒரு புதிய வருகை மேன்மைபொருந்தியவரே, புதிய வருகை, நன்றி கடவுளே! எவ்வளவு துரிதமாக இருக்கிறான் பாருங்கள்! சில சமயங்களில் ஒரு வாரத்திற்கும் கூட அவர்கள் வாயையே திறக்க மாட்டார்கள்.”
”அட, அது ஒரு இளைஞனாக இருக்கும் என நம்புகிறேன்!” சிலிர்ப்புடன் கூவினாள் இக்னட்யெவ்னா.
“நான்… நான்… ஒரு சிக்கல் ஏற்பட்டது, அடுத்து, எதிர்பாராமல் திடீரென” மீண்டும் தடுமாறினான் இளைஞன். “அன்று மாலைதான், ’ஒரு சிக்கல் இருக்கிறதென’ ஷல்ட்ஸ் என்னிடம் சொன்னார், ஆனால் அடுத்த காலைக்குள்ளாகவே நான் மரணித்துவிட்டேன். ஐயோ! ஐயோ!”
புதிய வரவால் மகிழ்ச்சியுற்ற தளபதி கருணையுடன் “எந்த உதவிக்கும் வாய்ப்பில்லை இளைஞனே” என்றார். ”நீ ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். ஜெஹோஸஃபட் பள்ளத்தாக்கிற்கு உன்னைக் கனிவுடன் வரவேற்கிறேன். நாங்கள் அனைவரும் அன்பானாவர்கள். நீ எங்களை அறிந்து கொள்வாய், மெச்சுவாய். தலைமைத் தளபதியாகிய வாஸிலி வாஸிலிட்ச் பெர்வொயெதவ் உனது சேவையில்.”
“ஐயோ, இல்லை, இல்லை! நிச்சயமாக இல்லை! நான் ஷல்ட்ஸில் இருந்தேன்; எனக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது, முதலில் அது மார்பில், பிறகு இருமலும் அடுத்து சளியும்: என் நுரையீரலும் ஃப்ளூவும்… அப்புறம் திடீரென, கொஞ்சமும் எதிர்பாராமல்… எதிர்பாராத சமயத்தில் அது நேர்ந்து விட்டதுதான் எல்லாவற்றிலும் மோசம்.”
“அது மார்பில் ஆரம்பித்ததெனச் சொல்கிறாய்,” புதிதாய் வந்தவனிடம் உறுதி செய்துகொள்ள முயல்வது போல மெதுவாக ஆரம்பித்தான் அரசாங்க எழுத்தர்.
”ஆமாம், என் மார்பிலும் கோழையிலும். அடுத்து மூக்கடைப்பு இல்லை ஆனால் மார்பில், என்னால் சுவாசிக்கவும் முடியவில்லை….அடுத்து உங்களுக்குத் தெரியும்…”
“அறிவேன், அறிவேன். ஆனால் மார்பில் பிரச்சனை என்றால் நீ எக்கிற்குச் சென்றிருக்க வேண்டும், ஷல்ட்ஸிற்கு அல்ல.”
“பாட்கின்னிற்குச் சென்றுவிட வேண்டும் என எண்ணிக்கொண்டே இருந்தேன் தெரியுமா, அதற்கிடையில் திடீரென…”
”பாட்கின்னில் யாரையும் அதிகம் அனுமதிப்பதில்லை” என்றார் தளபதி.
“ம்ஹூம், இல்லை. அவர் தடை செய்வதே இல்லை; அவர் மிக நன்றாகக் கவனிக்கிறார் என்றும் எல்லாவற்றையும் முன்கூட்டியே கண்டறிந்து சொல்கிறார் என்றும்தான் நான் கேள்விப்பட்டேன்.”
“மேன்மைபொருந்தியவர் அங்கே வசூலிக்கப்படுகிற தொகையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்,” எனத் திருத்தினான் அரசாங்க எழுத்தர்.
“ச்சே, இல்லவே இல்லை. அவர் வெறும் மூன்று ரூபிள்கள்தான் கேட்கிறார். நன்றாகப் பரிசோதித்து மருந்துச்சீட்டும் தருகிறார்… அவரைப்பார்க்க நான் மிக ஆர்வமாக இருந்தேன். அவர்கள் என்னிடம் என்ன சொல்லியிருந்தார்களென்றால்… சரி, மரியாதைக்குரியவரே, நான் எக்கிற்குச் சென்றிருக்க வேண்டுமா இல்லை பாட்கின்னிற்கா?”
“என்ன? யாரிடமா?” தளபதியின் சவப்பெட்டி ஆமோதிப்பாய்ச் சிரித்து அசைந்தது. அரசாங்க எழுத்தர் அதைப் போலியாகப் பிரதி செய்தான்.
”இனிய சிறுவனே, இனிய, இன்பமான சிறுவனே, உன்னை நான் அவ்வளவு நேசிக்கிறேன்!” அவ்டத்யா இக்னட்யெவ்னா மகிழ்ச்சியாகக் கூவினாள். “உன்னைப்போல் ஒருவனை அவர்கள் என்னருகில் கிடத்தியிருக்கக்கூடாதா.”
இல்லை, இது ரொம்பவும் அதிகம்! நமது காலத்தில் மரணமடைந்தவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். என்றாலும் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வராதபடிக்கு நான் இன்னும் இவர்களைக் கவனிக்க வேண்டும். சிணுங்குகிற அந்தப் புதிய வரவு, – அவனை சவப்பெட்டியில் இப்போதுதான் பார்த்தது எனக்கு நினைவிருக்கிறது – பயந்துபோன ஒரு கோழிக்குஞ்சின் முகபாவனையைக் கொண்டிருந்தான் – உலகிலேயே அதீத எதிர்ப்பினைத் தெரிவிக்கும் ஒரு முகபாவம்! இருக்கட்டும், பொறுத்திருந்து பார்ப்போம்.
அடுத்து நிகழ்ந்தவையெல்லாம் ஒரு பைத்தியக்கார விடுதியை ஒத்திருந்தன, என்னால் முழுவதும் நினைவில் வைத்திருக்க முடியவில்லை. திடீரென ஏராளமானோர் விழித்துக் கொண்டனர்; ஒரு அலுவலர் – அரசாங்க ஊழியர் – எழுந்துகொண்டதும் ஒரு அரசுத்துறைத் திட்டத்திற்காகத் துவங்கப்பட்டுள்ள புதிய துணைக்குழுவினைப் பற்றி – அதன்பொருட்டு பல்வேறு அலுவலர்களுக்கு நிகழ வாய்ப்புள்ள இடமாற்றங்கள் பற்றியெலாம் பேசத்துவங்க அதில் தளபதி அதிக ஆர்வமாகிவிட்டார். அறியாத பல புதிய விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எந்த அளவிற்கென்றால், எந்த வழிகளிலெல்லாம் அரசாங்கச் செய்திகளை நகரத்திலுள்ள ஒருவர் அறிந்துகொள்ள முடிகிறதென ஆச்சர்யமே ஏற்பட்டுவிட்டது எனக்கு. அடுத்து அரைகுறையாக முழித்துக்கொண்ட ஒரு பொறியாளர் சுத்த அபத்தங்களை நீண்ட நேரத்திற்குப் பேசத்துவங்க, நமது நண்பர்கள் அவன் தயாராகட்டும் என முடிவுசெய்து அவனை விட்டு விலகினர். இன்று காலையில் அலங்கார சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட உயர்குடிப்பெண்ணின் கல்லறையும் அசைவதற்கான சமிக்ஞைகளைக் காட்டியது. இந்தமுறை இவர்களெல்லாம் இவ்வளவு விரைவாக எழுந்து கொண்டது குறித்து மிகுந்த பரவசமும் ஆச்சரியம் அடைந்தான் லெபெஜ்யாட்னிகாவ் (தளபதி பெர்வொயெதவ்விற்கு அருகில் படுத்திருந்த, நான் மிகவும் வெறுத்த அந்தக் கீழ்நிலை அரசாங்க ஊழியனின் பெயர் அதுதான் போலிருக்கிறது). எழுந்துகொண்டவர்களில் சிலர் புதைக்கப்பட்டு மூன்று தினங்கள் ஆகிவிட்டதென்றாலும், நானும் ஆச்சரியம் அடைந்தேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, பதினாறு வயதான ஒரு இளம்பெண் கோரமாகவும் கொலைவெறியுடனும் திரும்பத்திரும்ப இளித்துக்கொண்டே இருந்தார்.
”எஜமானரே, ரகசிய ஆலோசகர் தரசெவிட்ச் எழுகிறார்!” லெபெஜ்யாட்னிகாவ் அதீத அலட்டலுடன் அறிவித்தான்.
முழித்துக்கொண்ட ரகசிய ஆலோசகர், “ஏய்? என்ன?” என அருவருப்பாய் முணுமுணுத்தார். சிணுங்கிய அவரது குரலில் எரிச்சலும் கண்டிப்பும் தொனித்தது.
கடைசி ஐந்து நாட்களாக தரசெவிட்சைப்பற்றி அதீத அதிர்ச்சியும் வருத்தமும் தரக்கூடிய ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டிருந்ததால், நான் ஆர்வமுடன் கவனித்தேன்.
”இது ’நான்’ மேன்மைபொருந்தியவரே, இதுவரை நான் என்பதாக மட்டுமே.”
“உனது விண்ணப்பம் என்ன? உனக்கு என்ன வேண்டும்?”
”வெறுமனே உங்களை நலம் விசாரிப்பது மட்டுமே; பழக்கமற்ற இதுபோன்ற சூழலில் எல்லோருமே முதலில் ஒடுக்கப்பட்டது போல்தான் உணர்கிறார்கள். தளபதி பெர்வொயெதவ் அவர்கள் மரியாதைக்குரிய உங்களிடம் நட்புக்கொள்ள விரும்புகிறார், அதோடு அவர் நம்புகிறார்… “
“அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதே இல்லை.”
”நான் சொல்கிறேன் மரியாதைக்குரியவரே, தளபதி பெர்வொயெதவ், வாஸிலி வாஸிலிட்ச்…”
“நீதான் தளபதி பெர்வொயெதவ்வா?”
“இல்லை, மரியாதைக்குரியவரே, நான் வெறும் கீழ்நிலை உறுப்பினன் மட்டுமே, லெபெஜ்யட்நிகாவ், உங்கள் சேவைக்காக. ஆனால் தளபதி பெர்வொயெதவ் …”
“அறிவிலி! என்னைத் தனியே விடும்படி உன்னைக் கோருகிறேன்.”
தனது அடிமையின் அருவருப்பான அலுவலைக்கண்ட தளபதி பெர்வொயெதவ் ”அவர் தனியே இருக்கட்டும்.” என்றவாறு இறுதியில் கண்ணியமாக இடைப்பட்டார்.
”அவர் இன்னும் முழுதாக விழித்துக் கொள்ளவில்லை மேன்மைபொருந்தியவரே, அதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்; எல்லாம் புதிதாக இருப்பதனால் இப்படி நடந்துகொள்கிறார். முழுதாக விழித்துக்கொண்ட பிறகு இதை அவர் வேறு மாதிரி கையாளுவார்.”
“அவர் தனியே இருக்கட்டும்,” தளபதி மீண்டும் சொன்னார்.
”வாஸிலி வாஸிலிட்ச்! வணக்கம் மதிப்பிற்குரியவரே!” முற்றிலும் புதிய ஒரு குரல் அவ்டத்யா இக்னட்யெவ்னாவிற்கு வெகு அருகிலிருந்து சப்தமாகவும் மூர்க்கமாகவும் ஒலித்தது. கனவானின் துடுக்குத்தனமும் தற்போது நடைமுறையிலுள்ள கச்சிதமற்ற மொழியும் ஆணவத்தின் சாயலும் கொண்டிருந்தது அக்குரல். “கடந்த இரண்டு மணி நேரங்களாக நான் உங்களை எல்லாம் கவனித்தபடி இருக்கிறேன். உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா வாஸிலி வாஸிலிட்ச்? என் பெயர் க்ளினெவிச், நாம் வொலொகான்ஸ்கியின் நிகழ்வில் சந்தித்தோம், நீங்களும்கூட அங்கே விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தீர்கள், ஆனால் அது ஏன் என்றுதான் தெரியவில்லை.”
“என்ன! குறுமன்னர்(count) ஃபியோதர் பெட்ரோவிச்சா? … இது நிஜமாகவே நீங்களாக இருக்க முடியுமா… இவ்வளவு இளம் வயதிலா? இதைக் கேட்பதற்கு எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது!”
“ஹோ, நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லையென்றாலும் எனக்கே சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. எனினும், எவ்விடமாயினும், என்னால் முடிந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புகிறேன். அதோடு நான் குறுமன்னர் அல்ல நிலப்பிரபு(baron) மட்டுமே, வெறும் நிலப்பிரபு. எடுபிடிகளாக இருந்து உபயோகமற்ற நிலப்புரபுக்களாக உயர்ந்தவர்கள். அது ஏன் என்றும் தெரியாது, அதைப்பற்றி நான் கவலையும் கொள்ளவில்லை. போலி மேட்டிமைவாதச் சமூகத்தினைச்சேர்ந்த ‘வசீகரமான விஷமக்காரன்’ என்றழைக்கப்படுகிற ஒரு அயோக்கியன் மட்டுமே நான். என் அப்பா ஒரு பரிதாபமான சிறிய தளபதி, அம்மா ஒரு காலத்தில் மதிப்புமிக்க இடத்தில் இருந்தவள். யூதனாகிய ட்ஜைஃபலின் உதவியுடன் ஐம்பதாயிரம் ரூபிள் கள்ள நோட்டுக்களை அடித்த நான் அவனுக்கு எதிராகத் தகவலும் தெரிவித்துவிட்டேன், அதே சமயத்தில் ஜூலிச் சார்ப்பெண்டியர் டி லுஸிக்னான் அவற்றை பொஹ்தூவிற்கு (Bordeaux) எடுத்துச்சென்றிருந்தான். யோசித்துப்பாருங்கள், பதினாறு வயதாக இன்னும் மூன்று மாதங்கள் எஞ்சியிருக்கும் ஒரு பள்ளிச்சிறுமியோடு எனக்குத் திருமணமும் நிச்சயமாகியிருந்தது, அவர்கள் வரதட்சணையாக தொண்ணூறாயிரம் தருவதாகவும் இருந்தது. அவ்டத்யா இக்னட்யெவ்னா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தின் உயர்பிரிவில் பதினான்கு வயதுச்சிறுவனாக இருந்த என்னை நீ எப்படி வசியம் செய்தாய் என்பது நினைவிருக்கிறதா?
”ஏய், அது நீதானா, அயோக்கியனே! எப்படியோ, சரியான நேரத்தில் வந்திருக்கிறாய் நீ…”
“இங்கே இருக்கும் துர்நாற்றத்திற்காக, உன் பக்கத்தில் இருக்கும் கடைக்காரனை நீ தவறாக நிந்தித்துக்கொண்டிருந்தாய்… நான் எதுவுமே பேசாமல் சிரித்துக்கொண்டேன். அந்த வாடை என்னிடமிருந்துதான் வந்தது: ஆணி அறையப்பட்ட சவப்பெட்டியில் அவர்கள் என்னை அடக்கம் செய்யவேண்டியிருந்தது.”
“உஃப், ஈனப் பிறவியே! என்றாலும், நீ அருகில் இருப்பது குறித்து நான் மகிழ்கிறேன்; நகைச்சுவைக்கும் உயிரோட்டத்திற்கும் இங்கே எந்த அளவிற்குப் பஞ்சம் இருந்ததென்பதை உன்னால் கற்பனைகூடச் செய்ய முடியாது.”
”உண்மைதான், உண்மைதான், சற்றே அசலான ஒன்றை இங்கே ஆரம்பிக்க நான் விரும்புகிறேன். மரியாதைக்குரியவரே – நான் உங்களைச் சொல்லவில்லை பெர்வொயெதவ் – இன்னொருவர், ரகசிய ஆலோசகரான மரியாதைக்குரிய தரசெவிட்ச் அவர்களே, பதில் சொல்லுங்கள்! நான் க்ளினெவிச், விரதக் காலத்தில் யார் உங்களை செல்வி. ஃப்யூரியிடம் அழைத்துச் சென்றது, கேட்கிறதா உங்களுக்கு?”
“கேட்கிறது க்ளினெவிச், அதோடு உங்களைக் கண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, நம்புங்கள்.”
“உங்களை நான் பைசாவுக்கும் நம்பமாட்டேன், அதுபற்றி எனக்குக் கவலையுமில்லை. நான் உங்களை முத்தமிட விரும்புகிறேன் இனிய பெரியவரே, ஆனால் நல்லவேளையாக அது முடியாது. இந்தக் கிழவனின் லீலை பற்றி உங்களுக்குத்தெரியுமா கனவான்களே? மூன்று அல்லது நான்கு நாட்கள் முன்பு இறந்த இவன் விதவைகளுக்கும் அநாதைகளுக்குமென அரசாங்கம் ஒதுக்கியிருந்த பணம் நானூறாயிரத்தை திவாலாக்கியிருக்கிறான். இவன்தான் அந்தக் கணக்கிற்கான ஒரே பொறுப்பாளனாக இருந்ததனால் கடந்த எட்டு ஆண்டுகளாக அது தணிக்கை செய்யப்படவும் இல்லை. அவர்களெல்லாம் இப்போது எவ்வளவு துக்கமாக இருப்பார்கள் என்பதையும் இவனை என்னவெல்லாம் சொல்வார்கள் என்பதையும் என்னால் கற்பனை செய்ய முடிகிறது. அதை நினைக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது, இல்லையா? முடக்குவாதமும் மூட்டுவீக்கமும் கொண்ட ஒரு எழுபது வயதுக் கிழவனால் தனது துர்செயல்களுக்கான உடல் வலிமையை எப்படித்தக்கவைத்துக்கொள்ள முடிந்தது என கடந்த ஓராண்டாக நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன், இப்போது புதிர் அவிழ்ந்துவிட்டது! அந்த விதவைகளும் அநாதைகளும் – அவர்களைப் பற்றிய சிந்தனையே அவனை இதில் தள்ளியிருக்க வேண்டும்! எனக்கு இதைப்பற்றி வெகுமுன்பே தெரியும், இதைப்பற்றி அறிந்த ஒரே ஒருவன் நான்தான்; ஜூலிதான் என்னிடம் சொன்னாள். இதை அறிந்த உடனேயே, ஈஸ்டர் வாரத்தில், நான் அவனை நட்பார்ந்தமுறையில் அச்சுறுத்தினேன்: “எனக்கு இருபத்தி ஐந்தாயிரம் தந்துவிடு. இல்லாவிட்டால் நாளையே உன் கணக்குகளெல்லாம் ஆராயப்படும்.” ஆனால் பாருங்கள், அவனிடம் வெறும் பதிமூன்றாயிரம் தான் மிச்சம் இருந்தது. எனவே அவன் இப்போது இறந்தது மிகமிகச் சரியானது என்றுதான் தோன்றுகிறது. கிழவனே, கிழவனே; உனக்குக் கேட்கிறதா?”
”செர் க்ளினெவிச், நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன், இவ்வளவு விளக்கங்களுக்கு நீ இப்போது சென்றிருக்கத் தேவையில்லை. வாழ்க்கையானது முழுவதும் துயரங்களும் வாதைகளுமாய் இருக்கிறது, அதை ஈடு செய்வதற்கோ மிகக்கொஞ்சம்தான் கிடைக்கிறது, எனவேதான் இறுதியில் நான் நிம்மதியடைய விரும்பினேன். நானறிந்தவரை இங்கேயும் என்னால் வேண்டியதை எல்லாம் பெறமுடியும் என்றே நம்புகிறேன்.”
”கெதீஸ்யாவ் பெரஸ்டாயை இவர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருப்பார் என என்னால் பந்தயம் கட்ட முடியும்!”
”யார்? எந்த கெதீஸ்யாவ்?” அந்த முதியவனின் நடுக்கமான குரலில் பேராசை வழிந்தது.
”என்ன, எந்த கெதீஸ்யாவா? ஏன், இங்கேதான் இடதுபுறத்தில் உங்களுக்கு ஐந்து அடி தள்ளியும் எனக்குப் பத்தடி தள்ளியும். அவள் இங்கு வந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன, அந்த சிறியவள் எப்படிப்பட்ட வேசை என்பதை மட்டும் நீங்கள் அறிந்தீர்களானால் கிழவரே! நல்ல குடும்பம், நல்ல வளர்ப்பு அங்கிருந்து ஒரு வேசை, அசலான வேசை! அவளை நான் யாருக்கும் அறிமுகப்படுத்தவில்லை, அவளை அறிந்தவன் நான் மட்டுமே… கெதீஸ்யாவ், பதில் பேசு!”
”ஹி-ஹி-ஹி!” எனக் கிறீச்சிட்டுச் சிரித்தாள் அச்சிறுமி. அவளது குரலில் ஊசி துளைப்பதைப் போன்றதொரு கூர்மை இருந்தது. “ஹி-ஹி-ஹி!”
“ஓர் இளம் வேசையா?” ஒவ்வொரு எழுத்தாகக் கோர்த்துத் தடுமாறி உச்சரித்தான் கிழவன்.
“ஹி-ஹி-ஹி!”
“நான்… ரொம்ப காலமாக…. நான் ரொம்ப காலமாக,” அந்த முதியவன் பரவசத்துடன் பிதற்றினான், “பதினைந்து வயது அழகியைக் குறித்து கற்பனைகள் வளர்த்திருக்கிறேன், இப்போது இப்படி ஒரு இடத்தில்.”
“ச்சீ, அசிங்கம்பிடித்தவனே!” எனச் சப்தமிட்டாள் அவ்டத்யா இக்னட்யெவ்னா.
”போதும்!” என முடிவு செய்தான் க்ளினெவிச். “ஒரு அட்டகாசமான சங்கதி இருக்கிறது நம்மிடையே. சீக்கிரமே நாம் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம். மீதமுள்ள காலத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பதுதான் சிறப்பாக இருக்கும்; ஆனால் எவ்வளவு காலம்? ஏய், அரசாங்க எழுத்தரே, லெபெஜ்யாட்னிகாவோ என்னவோ, அதுதானே உன் பெயர்!”
”ஸெம்யன் யெவ்ஸெய்ச் லெபெஜ்யாட்னிகாவ், கீழ்நிலை அரசு ஊழியன், உங்களது சேவையில், உங்களைச் சந்தித்ததில் மிக மிக மிக மகிழ்ச்சி கொள்கிறான்.”
“நீ மகிழ்ச்சியடைந்தாயா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் எனக்கு அக்கறையில்லை, ஆனால் உனக்கு இங்கே எல்லாம் தெரிந்திருக்கிறது. எப்படி நம்மால் பேச முடிகிறது என்பதைப் பற்றி முதலில் நீ எனக்குச் சொல். நேற்றிலிருந்தே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நாம் இறந்து விட்டோம் – ஆனாலும் நாம் பேசுகிறோம், நகர்வது போலவும் தெரிகிறது – ஆனால் நாம் பேசவுமில்லை, நகரவுமில்லை. என்ன ஏமாற்று இது?”
“உங்களுக்கு இது குறித்து விளக்கம் வேண்டுமானால் பிரபுவே, ப்ளாடன் நிகோலெய்விச் என்னை விட சிறப்பாக அதை நல்க முடியும்.
“அது யார் அந்த ப்ளாடன் நிகோலெய்விச்? சுற்றிவளைக்காமல் சுருக்கமாகச் சொல்.”
”ப்ளாடன் நிகோலெய்விச் என்பவர் நமது ஊரில் வளர்ந்த தத்துவவாதி ஆவார், விஞ்ஞானியும் கலைவல்லுநரும் கூட. அவர் நிறைய தத்துவ நூல்களைப் படைத்திருக்கிறார், ஆனால் கடைசி மூன்று மாதங்களாக அவர் உறங்கிக்கொண்டே இருக்கிறார், இப்போது அவரிடம் அசைவே இல்லை. வாரத்திற்கு ஒருமுறை கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத எதையேனும் அவர் உளறுகிறார்.”
“விஷயத்திற்கு வா, விஷயத்திற்கு வா!”
”மிக எளிமையான ஒரு தரவின் வழியாக அவர் இதை விளக்குகிறார். அதாவது நாம் மேலே வசிக்கும்போது, மரணம் என ஒன்று இருப்பதாக தவறாக எண்ணிக்கொள்கிறோம். முன்பிருந்தது போலவே இங்கே உடல் புத்துயிர் பெறுகிறது, வாழ்க்கையின் மீதங்கள் எல்லாம் சேகரமாகின்றன – ஆனால் அது எல்லாமே ப்ரக்ஞையில்தான் நிகழ்கின்றன. இதை எப்படி விளக்குவதென எனக்குத் தெரியவில்லை, ஆனால் முன்பிருந்தது போலவே வாழ்க்கை தொடர்ந்து செல்கிறது – அசைவற்ற நிலையில், அவரது கருத்துப்படி, ப்ரக்ஞையின் எதோ ஒரு இடத்தில் இவையெல்லாம் சேகரமாகி இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து செல்கிறது… சில சமயங்களில் பாதி வருடத்திற்குக்கூட… எடுத்துக்காட்டாக இங்கே ஒருவன் இருக்கிறான், கிட்டத்தட்ட முழுமையாகச் சிதைந்துவிட்ட அவன் ஆறுவாரத்திற்கொருமுறை எதோ போபோக் என்பதாக, ஒரு வார்த்தையை – பொருளற்றதை – உச்சரிப்பான் – ’போபோக், போபோக்,’ ஆனால் பாருங்கள், கண்ணுக்குத்தெரியாத வாழ்வின் ஒரு துளி இன்னமும் அவனில் உயிர்த்திருக்கிறது.”
“இது மூடத்தனம். சரி, இதைச்சொல். நுகரும் உணர்வே இல்லாத என்னால் எப்படி இங்கே நாற்றமடிக்கிறது என்பதை அறிய முடிகிறது?”
“அது…ஹி-ஹி… அதுபற்றிய கருத்தில் நமது தத்துவவாதி சற்று தெளிவற்றுத்தான் பேசுகிறார். வாசனையைப் பொறுத்தவரை, அவரது கூற்றுப்படி, இங்கே ஒருவர் தனது ஒழுக்கத்தையே நுகர்கிறார். அது ஆன்மாவின் நாற்றம், இங்கே இருக்கிற இரண்டு மூன்று மாதங்களில் அது தன்னை மீட்டுக்கொள்ள முடியும், இதுவே கடைசிக் கருணை என்கிறார் அவர். நான் என்ன நினைக்கிறேனென்றால் பிரபுவே, அவருடைய இன்றைய நிலைக்கு நாம் இந்த ஆன்மீக உளறல்களையெல்லாம் கண்டுகொள்ளத்தேவையில்லை.”
”போதும்; அவருடைய மிச்சக் கருத்துக்களும் முட்டாள்த்தனமாய்த்தான் இருக்கும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. நல்ல விஷயம் என்னவென்றால், நம் கையில் இரண்டு அல்லது மூன்று மாத வாழ்க்கை இருக்கிறது, அதன் பிறகு – போபோக்! இந்த இரண்டு மூன்று மாதங்களை முடிந்த அளவு மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன், எனவே நாம் எல்லாவற்றையும் புதிய விதமாகத் திட்டமிட வேண்டும். கனவான்களே! நாம் நமது வெட்கங்களனைத்தையும் உதறித்தள்ள வேண்டுமென நான் முன்மொழிகிறேன்.”
“ஹே! நாம் நமது வெட்கங்களனைத்தையும் உதறித்தள்ளுவோம்!” என பல குரல்கள் சொல்வதைக் கேட்க முடிந்தது; சொன்னால் ஆச்சரியமாக இருக்கும், நிறைய புதிய குரல்களையும் கேட்க முடிந்தது – அவை சமீபமாக விழித்தவர்களுடையதாக இருக்க வேண்டும். தற்போது முழுதாக விழித்துக்கொண்ட பொறியாளர் தனது ஆமோதிப்பை வித்தியாசமான மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார். சிறுமி கெதீஸ்யா மகிழ்ச்சியுடன் இளித்தாள்.
“வெட்கங்களனைத்தையும் உதறித்தள்ள நான் எவ்வளவு ஏங்குகிறேன்!” என்றாள் அவ்டத்யா இக்னட்யெவ்னா.
”இங்கே அவ்டத்யா இக்னட்யெவ்னா வெட்கங்களனைத்தையும் உதறித்தள்ள விரும்புகிறாளென்றால்… என்ன அர்த்தம்…”
“இல்லை, இல்லை, இல்லை க்ளினெவிச், அங்கேயும் நான் இதேபோன்று வெட்கமுடையவளாகத்தான் இருந்தேன். ஆனால் இங்கே அதை உதறித்தள்ளுவதையே விரும்புகிறேன், பெரிதும் விரும்புகிறேன்.”
“எனக்குப் புரிகிறது க்ளினெவிச்,” எனத் துவங்கினார் பொறியாளர், “நீங்கள் இங்கே புதிய, பகுத்தறிவுக் கொள்கைகளினடிப்படையில் வாழ்க்கையை மாற்றியமைக்க விரும்புகிறீர்கள்.”
”ஹே, அதைப்பற்றி எனக்குச் சிறிதும் அக்கறையில்லை! நேற்று இங்கே அழைத்துவரப்பட்ட குதெயரவ் வரட்டும் அதற்கெல்லாம். அவன் முழிக்கும்போது இதைப்பற்றியெல்லாம் சொல்வான். அவன் அப்படி ஒரு ஆளுமை, வசீகரமும் கம்பீரமும் வலிமையுமான ஆளுமை! நாளை ஒரு இயற்கை விஞ்ஞானியை அவர்கள் அழைத்து வருவார்களென நம்புகிறேன், நிச்சயமாக ஒரு அலுவலரும் வருவார். மூன்று நான்கு நாட்கள் கழித்து ஒரு பத்திரிக்கையாளனும் அவனோடு அவனது ஆசிரியரும் வருவர். மலம் கொண்டுசெல்லட்டும் அவர்களை, என்னவாயினும் நம்மில் சிலர் அங்கே இருப்போம் – காரியங்கள் தன்னைத்தானே வழிநடத்திக்கொள்ளும். ஆனால் அதற்கிடையில் நாம் இங்கே பொய்சொல்லிக்கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை. அதைப்பற்றி மட்டுமே நான் கவனம் கொள்கிறேன், அதுமட்டும்தான் முக்கியம் என நினைக்கிறேன். அங்கே மேலே பொய் சொல்லாமல் யாராலும் வாழ முடிவதில்லை: வாழ்தலும் பொய்யுரைத்தலும் இணைச்சொற்களாய் இருக்கின்றன, ஆனால் இங்கே பொய் சொல்லாமல் இருப்பதன் மூலம் நாம் நம்மை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ளலாம். இறுதியில், கல்லறைக்கும் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது! எதைப்பற்றியும் வெட்கம் கொள்ளாமல் நாம் நமது கதைகளைச் சத்தமாகச் சொல்வோம். முதலாவதாக நான் என்னைப்பற்றிச் சொல்லுகிறேன். அதிகாரம் செய்யும் வகையைச் சேர்ந்தவன் நான். அங்கே பூமியில் அழுகிப்போன விதிமுறைகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைப்பற்ற விரும்புகிறவன். இங்கே இரண்டு மூன்று மாதங்களை, அந்தத் தளைகளையெல்லாம் களைந்துவிட்டு வெட்கமற்ற உண்மைத்தன்மையோடு கழிக்க விரும்புகிறேன்! எல்லாவற்றையும் களைந்துவிட்டு நிர்வாணமாவோம் நாம்!”
“நிர்வாணமாவோம், நிர்வாணமாவோம்,” என எல்லாக் குரல்களும் சப்தமிட்டன.
“நிர்வாணமாக நான் ஏங்குகிறேன், நிர்வாணமாக நான் ஏங்குகிறேன்,” எனக் கூச்சலிட்டாள் அவ்டத்யா இக்னட்யெவ்னா.
”ஹே… ஹே, இங்கேயே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் போல் தெரிகிறது; எக் எனக்குத் தேவையில்லை.”
“வேண்டாம், நான் சொல்கிறேன். எனக்கு வாழ்க்கையைச் சுவைக்கத் தாருங்கள்!”
“ஹி-ஹி-ஹி!” இளித்தாள் கெதீஸ்யாவ்.
”இங்கே யாருமே நம்மைத் தடை செய்ய முடியாதென்பதைத்தான் நான் சிறந்த விஷயமாகக் கருதுகிறேன். பெர்வொயெதவ் கோவமாக இருக்கிறாரென்றாலும் அவர் என்னை நெருங்க முடியாது. சரிதானே கிழவனே?”
”நான் முழுவதுமாக உடன்படுகிறேன், அதீத திருப்தியுடன் முழுவதுமாக உடன்படுகிறேன். ஆனால் கெதீஸ்யாவ்தான் தனது கதையை முதலில் சொல்ல வேண்டும் என்பதே என் நிபந்தனை.”
“நான் மறுக்கிறேன்! இதயப்பூர்வமாக, முழுமையாக மறுக்கிறேன்!” தீர்மானமாகச் சொன்னார் தளபதி பெர்வொயெதவ்.
“மேன்மை பொருந்தியவரே!” அயோக்கியன் லெபெஜ்யாட்னிகாவ் அலட்டலான பரவசத்துடன் முணுமுணுப்பாக அவரை வற்புறுத்தினான், “மேன்மை பொருந்தியவரே, ஒப்புக்கொள்வதுதான் நமக்கு நன்மைதருவதாக இருக்கும். இங்கே பாருங்கள், இந்தச் சிறுமியின், இன்னும் பலரின் சிறிய சிறிய சங்கதிகளெல்லாம் இருக்கின்றன.”
“அந்தச் சிறுமி இருக்கிறாள், உண்மைதான், ஆனால்…”
“நிச்சயமாகச் சொல்லுகிறேன் மேன்மை பொருந்தியவரே, இது நமக்குத்தான் நல்லது. வெறும் பரிசோதனைதானே, முயற்சித்துப் பார்ப்போம்..”
”கல்லறையிலும் கூட இவர்கள் நம்மை ஆத்ம சாந்தியடைய விடமாட்டார்கள்.”
”முதலாவதாக தளபதியே, நீங்கள் கல்லறையில் சீட்டாடிக்கொண்டிருந்தீர்கள், இரண்டாவதாக, உங்களைப்பற்றி எங்களுக்கு எந்தக்கவலையும் இல்லை.” இழுத்தான் க்ளினெவிச்.
”ஐயா, நீங்கள் உங்களைப்பற்றி மறந்துவிட வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.”
“என்ன? ஏன், அப்படியெல்லாம் நீங்கள் இங்கு என்னைக் குற்றப்படுத்திவிட முடியாது. இங்கிருந்தபடியே ஜூலியின் செல்லநாய்க்குட்டியென உங்களை நான் சீண்டிவிட முடியும். அப்புறம் இன்னொருவிஷயம், கனவான்களே, இங்கே எப்படி இவர் ஒரு தளபதி ஆவார்? அங்கேதான் அவர் தளபதி, இங்கே வெறும் குப்பை.
“இல்லை, வெறும் குப்பை இல்லை… இங்கேயும் கூட…”
“இங்கே நீ கல்லறையில் அழுகிப்போய்விடுவாய், அந்த ஆறு வெண்கலப் பித்தான்கள் மட்டுமே எஞ்சும்.”
“சபாஷ், க்ளினெவிச், ஹா-ஹா-ஹா!” முழக்கமிட்டன குரல்கள்.
“நான் என் தேசத்திற்குச் சேவை செய்திருக்கிறேன்… என்னிடம் வாள் இருக்கிறது…”
”உன்னுடைய வாள் வெறும் எலியைக் கொல்வதற்கு மட்டுமே தகுதியானது, நீ அதற்குக்கூட அதனை வெளியே எடுத்ததில்லை.”
”அதனால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. நான் முழுமையான அமைப்பின் ஓர் அங்கமாய் இருந்தேன்.”
“ஒரு முழுமையில் எல்லா வகையான அங்கங்களும் இருக்கின்றன.”
“சபாஷ், க்ளினெவிச், சபாஷ்! ஹா-ஹா-ஹா!”
”இங்கே வாள் என்பது எதனைக்குறிக்கிறதென எனக்குப் புரியவில்லை,” என முழங்கினார் பொறியாளர்.
”ப்ருஷ்யர்களிடமிருந்து நாம் எலிகளைப்போலத் தப்பி ஓடுவோம், அவர்கள் நம்மை நசுக்கித் தூள்தூளாக்கிவிடுவார்கள்!” மகிழ்ச்சியுடன் குழறிய, பரிச்சயமில்லாத ஒரு குரல் தூரத்திலிருந்து ஒலித்தது.
”வாள் என்பது ஒரு கௌரவம் ஐயா,” கதறினார் தளபதி, ஆனால் நான் மட்டுமே அதைக்கேட்டேன். நீண்ட ஆக்ரோஷமான இரைச்சலும் கூச்சலும் ஒலிக்கத்துவங்க, அவ்டத்யா இக்னட்யெவ்னாவின் பொறுமையற்ற வெறிபிடித்த கூச்சல் மட்டுமே கேட்டது.
“ஆனால், சீக்கிரம் ஆகட்டும்! ஹே, எப்போது நாம் வெட்கங்களை உதறித்தள்ளத் துவங்குவோம்!”
”ஒஹ்-ஹோ-ஹோ!…ஆன்மா உண்மையில் சோதனைகளின் வழியாகவே மீட்சியடைகிறது!” சாமான்யனின் குரல் உரத்து ஒலித்தது, “மேலும்…”
இந்த நொடியில் சட்டென நான் தும்மிவிட்டேன். எதிர்பாராமலும் நோக்கமின்றியும்தான் இது நிகழ்ந்ததென்றாலும் விளைவு மோசமானதாகிவிட்டது: தேவாலயத்தில் எதிர்பார்க்கப்படுகிற அளவிற்கு எல்லோரும் அமைதியாகிவிட்டனர், ஒரு கனவு போல அது மறைந்துவிட்டது. கல்லறையின் நிஜமான அமைதி பிரவேசித்துவிட்டது. என் இருப்பினால் அவர்கள் வெட்கம் கொண்டுவிட்டார்கள் என நான் நம்பவில்லை! அவர்கள்தான் வெட்கத்தையெல்லாம் உதறித்தள்ள முடிவுசெய்திருந்தார்களே! நான் ஐந்து நிமிடம் காத்திருந்தேன் – ஒரு வார்த்தை கூட இல்லை, சிறு சப்தமும் இல்லை. காவல்துறைக்குத் தகவல் சொல்லிவிடுவேன் என அவர்கள் அஞ்சிவிட்டார்கள் எனச் சொல்லமுடியாது; காவலர்கள் வந்து அவர்களை என்ன செய்துவிட முடியும்? உயிருடனிருப்பவர்களுக்குத் தெரிவிக்க முடியாத, மானுடர்கள் எல்லோரிடமிருந்தும் மறைத்திருந்த ரகசியங்கள் அவர்களிடமிருந்ததே அதற்குக் காரணம் என்ற முடிவுக்கே நான் வரவேண்டும்.
”நல்லது, என் அன்பானவர்களே, நான் உங்களை மீண்டும் வந்து சந்திக்கிறேன்,” என நினைத்துக்கொண்ட நான் அந்த வார்த்தைகளோடு மயானத்திலிருந்து வெளியேறினேன்.
இல்லை, அதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது; நிச்சயமாக முடியாது! இந்த போபோக் விஷயம் என்னைத் தொந்தரவு செய்யவில்லை (அப்படியாக இதைத்தான் இந்த போபோக் குறித்திருக்கின்றது!)
அப்படிப்பட்ட ஓர் இடத்தில் நான் காணநேர்ந்த சீர்கேடு, கடைசி ஆசைகளின் சீர்கேடுகள், ஊறி அழுகிய பிணங்களின் ஆசைகள் – கடைசி கணங்களின் ப்ரக்ஞையைக்கூட விட்டுவைக்காத சீர்கேடு! அந்த நிமிடங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன, உறுதியளிக்கப்பட்டிருந்தன, மேலும்… மேலும், எல்லாவற்றிலும் மோசமாக, அப்படி ஓர் இடத்தில்! இல்லை, இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.
நான் வேறு கல்லறைகளுக்கும் செல்வேன், எல்லா இடங்களிலும் கவனிப்பேன். ஒருவர் நிச்சயம் எல்லா இடங்களிலும் கவனிக்க வேண்டும், வெறும் ஒரு இடத்தில் மட்டும் கேட்டதை வைத்து ஒரு கருத்தினை உருவாக்கக்கூடாது. இதை உறுதிசெய்யும்படியான ஒன்றையாவது அவர்கள் கடக்க வேண்டும்.
ஆனால் நிச்சயம் நான் அவர்களிடம் திரும்பிச்செல்வேன். அவர்கள் தங்களது சுய அனுபவங்களையும் எல்லா வகைக் கதைகளையும் எனக்கு உறுதி அளித்திருக்கிறார்கள். த்தூ! ஆனால் நான் போவேன், நிச்சயமாகப் போவேன்; இது மனசாட்சியின் ஒரு கேள்வி!
சிட்டிஸன் இதழிற்கு நான் இதை எடுத்துச் செல்வேன்; அதன் ஆசிரியரது சித்திரமும் கூட அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவர் இதை ஒருவேளை அச்சிடக்கூடும்.
ஆங்கில வழி தமிழாக்கம் -இல.சுபத்ரா