பியோதருடன் ஒரு குவளை வோட்கா -வைரவன் லெ ரா.

கையிலிருந்த வோட்கா குப்பி எரிச்சலுடன் என்னையே வெறிப்பது தெரிந்தாலும் விரல்கள் அதன் மூடியை வருடுவதுடன் தன் வேலை முடிந்தது என மீண்டும் கைகளுக்குள் அடைக்கலம் புகுந்தன. பியோதர் வரும் நேரம் எனத் தெரியும், வழியில் மர்மலதோவின் மகள் சோன்யாவை சந்தித்து இருக்கலாம். அவனோடு மர்மலதோவின் குடும்பம் இன்றும் அணுக்கத்தில் தான் இருக்கிறது, இல்லை! டிமித்ரியின் கடிதங்கள் சைபீரியாவிலிருந்து அவனை வந்து சேர்ந்திருக்கலாம். அதைப் படித்துக்கொண்டே ஆற்றங்கரையோரம் அமைதியாய் காலாற காற்றின் போக்கில் ஒரு நீண்ட நடை தேவைப்பட்டிருக்கலாம், அல்லது ஸ்விட்ரிகைலோவ் சமாதிக்குச் சென்றிருக்கலாம். ஏற்கனவே அவன் வைத்த பூக்கள் வாடிப்போய், அங்கே இன்று மலர்ந்த பூக்களை வைக்க அவன் விரும்பியிருக்கலாம்.

பியோதரை என் வாழ்நாளில் நாங்கள் சேர்ந்து படித்த ராணுவக் கல்லூரி நாட்களைத் தவிர்த்து எண்ணினால், சந்தித்த நாட்கள் கைவிரல்களின் மொத்த எண்ணிக்கையில் அடங்கும். ஒவ்வொரு முறை நாங்கள் சந்திக்கும் போதெல்லாம், முழுநிலவை விட்டு விலகும் மேகக் கூட்டம் போல என்னை மறைத்துக் கொண்டிருக்கும் முகமூடி கழன்று விழும், அது உடையும் ஓசை கேட்கும் போதுதான் அதை நான் அணிந்திருந்தேன் என்பதே தெரியவரும். அப்போது நான் ஓவியங்கள் வரைந்து கொண்டிருந்தமையால் ஒருவகையில் அவனோடு உரையாடுவது, என்னை நானே மறுபரிசீலனை செய்து கொள்ள உதவும் என்பதும் ஒரு காரணம்.

பியோதரைப் பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் ஒரு வகையான குழப்ப மேகங்களே சூழ்ந்துகொள்ளும். அவனுடைய தர்க்கங்கள் என்னை ஆச்சரியப் படுத்துபவை. “நீ குறிப்பிட்ட சில நபர்கள் எப்போதுமே குற்றங்களைச் செய்து கொண்டேயிருந்தார்கள். அதற்கான நியாயத்தையும் உருவாக்கிக் கொண்டார்கள். குற்றம், நியாயம் இரண்டையும் தராசின் இருபக்கமும் சமமாய் இருப்பதைப் போல சமநிலையில் வைப்பதை நீ விரும்புகிறாயா?”. ஆமாம், ஏற்கனவே மேலே குறிப்பிட்ட சில நபர்களைப் பற்றிய உரையாடல் எங்களுக்குள் நிகழ்ந்திருக்கிறது. கேள்வியைக் கேட்டுவிட்டு அவனைப் பார்க்கும்போது, தலையில் பின்னேறி சுருண்டு கிடந்த முடிக்கற்றையை சரிப்படுத்திக்கொண்டே என்னைப் பார்த்துச் சிரித்தான். அவனது இருவிழிகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாய் இருக்கும், அதுவே மற்றவரிடமிருந்து அவனைத் தனியாகக் காட்டும். “குற்றங்கள் செய்கிறவன், அதற்கான நியாயத்தையும் உருவாக்கித் தானே ஆக வேண்டும். இல்லையேல் மனித மந்தையோடு மோதி மூச்சடைக்க வேண்டும். அதை எதிர்ப்பதற்கான வாய்ப்புகளை, சமயோசிதச் சமாச்சாரங்களை எதிர்பார்த்துத்தான் குற்றம் செய்தவர்கள் காலம் தள்ளுவார்கள். அங்கே அவர்கள், ஏன் அந்தக் குற்றம் செய்தேன்? அதற்கான காரணம் என்ன? என பதில்களையும் பட்டியலிட்டு வைத்திருப்பார்கள். ஒருவேளை அதற்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய் எனச் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்க மாட்டார்கள். முதலில் மறுப்பார்கள். அவர்களின் ஆன்ம பலம் பொறுத்து ஏற்றுக்கொள்ளும் காலம் மாறும். ஆனாலும் குறிப்பிடத் தக்க சிலர் அந்தக் குற்றங்களை விரும்பி செய்வார்கள். டிமித்ரி, உன்னிடம் அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவன் படைப்பிரிவிலிருந்தான். அங்கே ஒழுக்கங்களை ஒரேயடியாக, ஒரே தவணையில் மொத்தமாய் திணிக்க முயல்வார்கள். ஒழுக்க நெறிகளுக்கும் தவறுகளுக்கும் சம்பந்தம் இல்லை. அவன் குற்றங்களை விரும்பி செய்தான். அதற்கான காரணங்கள் இருந்தன. முதல் குற்றம் அவனுள் பதற்றத்தை ஒரு சிறு நெருப்புப் பொறி போல பற்ற வைத்தது. சுயநலமான யோசனைகள் அவனை வழிநடத்தின. சுயநலம், ஒருவன் தன்னைப் பற்றி, விருப்பங்களை, எதிர்பார்ப்புகளைச் சிந்திப்பதால் வருகின்றன என வைத்துக் கொள்வோம். அதன் பொருட்டே தன் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறான். எப்போதாவது தன் கையால் செய்த குற்றங்களை எண்ணி வருந்த ஆரம்பித்தால், அவ்வருத்தத்தை மறக்க எதைச் செய்தால் இயலுமோ, முதலில் அதை முயல்கிறார்கள். ஒரு புத்தகம் படிப்பதோ, இசை கேட்பதோ, நாடகம் பார்ப்பதோ, பிடித்த பெண்களோடு நகர வீதிகளில் உலா வருவதோ, ஆளுக்கு ஆள் வேறுபடும். இவன் குடிக்க ஆரம்பித்தான், தன் கையில் இருக்கின்ற பணத்தை எல்லையின்றி செலவு செய்தான். தன் கையிலிருக்கும் பணம் யாருடையது என்றெல்லாம் கவலை கொள்ள நேரமில்லை, முற்றிலும் கேளிக்கைக்கான நேரமது. அதன் மூலம் ‘மகிழ்கிறேன்’ எனும் சித்திரத்தை வரைகிறான், அங்கே அவனின் குற்றவுணர்ச்சி எல்லாம் வடிந்து அவனை விட்டு விலகிவிடுகிறது. அவன் தன் தவறுகளுக்காக ஒருவேளை வருந்த ஆரம்பித்தால், அவனே தனக்குள் இன்னொருவனை உருவாக்கி உலாவ விடுகிறான். அவன் மகிழ்வதை மட்டுமே விரும்புகிறான். தான் ஏற்றுக்கொண்ட வாழ்க்கையை அவன் மறுப்பதுமில்லை. மாறாக வாழ்கிறான், டிமித்ரி. அவனின் குழந்தைப் பருவம் அப்படியொன்றும் மகிழ்ச்சிகரமாகயில்லை. அவனின் தந்தை, சாத்தான்கள் இந்த உலகில் வாழ்ந்தார்கள் என்பதற்கான மிச்சம். அந்தக் கதையெல்லாம் நான் நிதானமாய் சொல்வேன். ஆனாலும் டிமித்ரி எனக்கு விருப்பமானவன் தான். அவனைத் துரத்திக் கொண்டேயிருக்கும் கொடுமையான சாத்தான்களின் கரங்களுக்குள் அகப்பட்டு விட்டாலும் தான் செய்த செயல்கள் அவனை உலுக்குகின்றன. சாக்குபோக்குக்காக அல்ல, தன்னைத் தானே வருத்திக் கொள்கிறான்.” நிதானமாய் சொல்லிவிட்டு உடுத்தியிருந்த உடைகளை ஒருமுறை சரிப் படுத்திக்கொண்டான். “ஏன் வேறெங்காவது போக உத்தேசமா? ஆடைகளை ஒழுங்கு படுத்துகிறாய். சுவிட்சர்லாந்தில் நீ வாங்கிய மேலாடை அல்லவா இது? எப்படி நம் பிரதேசத்தின் குளிரைத் தாங்குகிறதா?”. ஆமாம் என்பது போல, நமுட்டுச் சிரிப்புடன் தலையசைத்தான்.

முதல்முறை ராணுவப் பள்ளியில் அவனைப் பார்த்தபொழுது நாகரீகமான முறையில் கைகளைக் குலுக்கி பரஸ்பரம் இருவரும் அறிமுகப் படுத்திக் கொண்டோம். என்னிடம் மெதுவாக “இதில் எனக்கு விருப்பமேயில்லை” எனக் காதில் கிசுகிசுத்தான். பின்னர் பல வருடங்கள் கழித்து பீட்டர்ஸ்பெர்க்கில் சந்தித்தபொழுது நகரையே உலுக்கிய கொலையைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். “உனக்குத் தெரியுமா? அந்த கொலையாளியை நான் அறிவேன்” சட்டென்று சொல்லி ஒரு விரலால் உதடுகளை மூடி அமைதியாக இரு என்று சமிக்கை செய்தான். நான் அமைதியாகவே வழக்கம் போலத் தோள்களில் கைபோட்டு “சொல்லப் போனால் இங்கே பீட்டர்ஸ்பெக்கில் பலரும் கொலை செய்யப்பட்ட நபரைக் கொல்லத் துடித்தார்கள். அவர் வட்டிக்கு விட்டு தன் மிச்ச வாழ்க்கையை வாழ்ந்தவர். நம்முடைய இப்போதைய சமுதாயம் மீறுவதை ஏற்றுக்கொண்ட ஒன்று. நாம் பழக்கப்பட்ட விஷயங்களில் இதெல்லாம் தவறு என நினைக்கும் கருத்துக்களை மீறி முன்னகர்ந்து செல்ல விரும்புகின்றது. இது ஒரு தனிமனிதனாய் இல்லாமல் மொத்த சமூகமாய் முயல்கிறது. இவர்கள் ஒரு குழுவாய் மறைவிலிருந்து விவாதிக்கிறார்கள். அங்கே சரி எது? தவறு எது? என்பதை முடிவு செய்கிறார்கள். அங்கே தனக்குள்ளே சத்தியம் செய்கிறார்கள், தன்னை அலெக்சாண்டர் போன்றவர்களோடு தன்னை ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். சமூகம் முழுதும் இந்த மாற்றத்தை உருவாக்கும் சந்தியில் தானும் ஒரு புள்ளி ஆக விரும்புகிறார்கள். முதலில் வர்க்க பேதம் அவர்களைப் பாதிக்கிறது. அதற்கான எளிய இலக்குகளை முதலில் கண்டு பிடிக்கிறார்கள். கொலை செய்யப்பட்டவர் எளிய இலக்கில் ஒருவர். கொன்றவன் அந்த சந்தியில் ஒரு புள்ளி. அந்த கொலைகாரன் சுயநலம் பிடித்தவனாகவும் இருப்பான்.” அன்றைக்கு பியோதர் அதிகம் பேசினான். அப்போது ரஷியன் மெஸ்சேன்ஜ்ரில் ஒரு தொடர் ஒன்றை எழுதுவதைப் பற்றியும் அதற்காக அதிக நேரம் தேவைப்படுவதாகவும் சொல்லி சீக்கிரம் விடை பெற்றுத் திரும்பினான்.

சதுக்கத்தின் ஒதுங்கி இருளடைந்து கிடக்கும் மதுக்கடைக்கு நான் வர மர்மலதோவும் ஒரு காரணம். மர்மலதோவ், அவனை முதல்முறை பியோதர் சந்திக்கும் போது ஒரு கழிவுநீர் ஓடையில் விழுந்து புரண்ட அழகான பூனைக்குட்டியைக் கையில் வைத்திருந்தான். “சமுதாயம் ஒரு சாக்கடை போல எல்லா கழிவுகளும் அங்கே தான் சேருகின்றன. நன்றாகப் பார்! இதில் தூய்மையான நீரும் இருக்கிறது, எது கண்களில் முதலில் புலப்படுகிறது. நான் குடிக்கிறேன், அது ஒரு தண்டனை. பாவங்களால் மட்டுமே நிரம்பிய உலகம் வாய்க்கப்பட்டவன். தள்ளி நின்று பார்க்கும் மேன்மை பொருந்தியவரே, நீங்கள் சற்றேனும் நின்று என்னைக் கவனிக்கிறீர்கள். அதுவே அதிசயம் அல்லவா? யார் தன்னை விட பள்ளத்தில் நிற்பவரைக் கவனிப்பது. உலகம் ஒரே அளவில் மேடாகிப் போய்விடக் கூடாதா? அங்கே எல்லோரும் சரிசமமான உயரத்தில் இருக்கலாம். சாத்தியமில்லை” அவன் நிறுத்தினான். அதன் பின்னர் இருவரும் பலமுறை இதே மதுக்கடையில் அமர்ந்து பேசியிருக்கிறார்கள்.

“என்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திப்பதில் எந்தப் பயனும் இல்லை பியோதர். நான் செய்த காரியங்கள் உண்டாக்கிய பாவத்தை யார் மேல் திணிக்க முடியும். இறந்த காலம் மரணித்து விட்டது. சாதாரண குமஸ்தா என்னுள் இருந்தான். குழந்தைகளோடு மனைவியோடு இரவுணவை உண்டு, அமைதியான வாழ்க்கையை அளித்த இறைவனுக்கு நன்றி கூறி நிம்மதியான இரவுகளைக் கடந்திருக்கிறான். முதல் மனைவி இறக்கவும், மறுமணம் செய்தது பிழையா? அதுவும் ஒரு பிரபு வீட்டுப் பெண்ணை. அவளோடு மகிழ்ச்சியாகத் தொடங்கிய நாட்கள் போகப் போக எனக்குப் புளித்துவிட்டது. இந்த இடைவெளியில் எங்களுக்கு மூன்று பிள்ளைகள். சாதாரண குடியானவன் போல வேலைக்குச் சென்றேன். பணத்தை அதிகம் என் கைகளின் இடுக்குக்குள் வைத்துக்கொண்டு இந்த நகரத்தின் சாலைகளில் எல்லாம் நடந்திருக்கிறேன். அதன் தேவை எல்லாம் வீட்டுக்கு சில பொருட்கள், மனைவி பிள்ளைக்கு சில பரிசுகள் என முடிந்துவிட்டன. அப்போதும் நான் குடிப்பேன். என் மனைவி என்னைத் திட்டியதுமில்லை. ஆனால் எனக்குப் போகப் போக இந்த வாழ்க்கை முறை கசப்பைக் கொடுப்பது போன்ற உணர்வு. எப்போதெல்லாம் நான் குடிக்கிறேனோ, அப்போதெல்லாம் அதிகம் களிவுருவதாய்த் தோன்றும். சோம்பேறித்தனமாய் பல மணி நேரம் ஒரேயிடத்தில் அமர்ந்திருப்பது கடினமாகயில்லை. அந்தக் களிக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டேன். முழுவதுமாய் அர்ப்பணித்தேன். குடும்பம், பிள்ளைகள், மனைவி எல்லா உறவுகளும் தூரமாகப் போய்விட்ட உணர்வு. இப்படி ஆரம்பித்து பின்னர் குடிப்பது மட்டுமே குறிக்கோளாய் ஆகி விட்டது. சதாசர்வ நேரமும் அதைப் பற்றிய சிந்தனைகள் தேனீக்கள் தேன்கூட்டைச் சுற்றி ரீங்காரம் இடுவதைப் போல மூளையை மொய்த்தன. என் மனைவி பிரபு வீட்டுப் பெண், தினமும் புலம்புகிறாள், அவளின் இறந்த காலத்தை எண்ணி பெருமூச்சு விடுகிறாள். இப்போது பாழாய்ப் போன நோயும் அவளைப் பிடித்துக் கொண்டது. என் மூத்த மகள் சோன்யா. தெய்வகுமாரன் எப்படி உலக மக்கள் செய்த பாவத்திற்காகச் சிலுவையைச் சுமந்தாரோ, அது போலவே என் பாவத்தின் சிலுவையை அவள் சுமக்கிறாள். நான் ஓரிருமுறை செத்து விடலாம் என்று ஆற்றங்கரை ஓரம் போய் நின்றிருக்கிறேன். செத்து விட்டால், மூச்சை நிறுத்திவிட்டால், என் தண்டனை முடிந்து விட்டதா? இல்லவே இல்லை. தினம் தினம் ஒவ்வொரு நொடியும் நான் சாக வேண்டும். அதுதான் எனக்கான சரியான தண்டனை. முட்டாள்தனமாய் தோன்றும் உடலை அமிலம் கொண்டு எரிக்க வேண்டும். ஒவ்வொரு இரவும் கொடுமையான சாவு, அடுத்த நாள் மீண்டும் எழும்பி அன்றைய சாவுக்கு என்னைத் தயார்ப்படுத்த வேண்டும். அதற்கு நான் குடிக்கவேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அதையும் சோன்யாவிடம் தான் கேட்கிறேன். பாருங்கள்! கேவலமான இந்த அப்பனுக்குப் பிறந்தவள் எங்கோ ஓடிப் போயிருக்கலாம், அவளுக்கென்று ஒரு அழகான பாதை இருந்தது, முட்களுக்கு இடமில்லாமல் பூக்கள் மட்டுமே நிறைந்த பாதை. அதை விட்டு இந்தக் கேவலமான அப்பாவிற்கு உதவிக் கொண்டிருக்கிறாள். அவளை நகரத்தின் சிகப்பு விளக்கு சதுக்கத்தில் கண்ட அன்றைக்கே நான் செத்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை, மாறாக அங்கேயே சென்று குடிக்க அவளிடம் பணத்தைக் கேட்கிறேன். கொடுக்கும் போது என்னைத் திட்டியிருந்தால் கூட நான் வருத்தப்பட்டிருக்க வேண்டும், ஒருவகையில் அது எனக்கு உதவியிருக்கும். ஆனால், கருணைமிகுந்த விழியால் ஒரு குழந்தையைப் போலப் பார்க்கும் போது, என் மொத்த சரீரமே வெடித்துச் சிதற வேண்டும் என்பது போலவிருக்கும். அப்படியிருந்தும் பணத்தை வாங்கிக்கொண்டு மதுக்கடையில் நுழைந்து சாராயத்தில் என்னை மூழ்கச் செய்கிறேன். எண்ணங்களை விட்டு மேலெழும்ப ஒரு வழிமுறை, எதையோ சிந்திக்க வைத்து நடந்ததற்கெல்லாம் நான் காரணமில்லை என என்னையே நம்ப வைக்கும் முயற்சி அது. போகட்டும், ஆனால் சித்தி வழி வந்த என் பிள்ளைகளின் மேல் என்ன அக்கறை. எல்லாமே சாக்குப் போக்காய் தெரிகிறதா? உனக்கு. ஆமாம் உன் பெயர் பியோதர் தானே? உன்னைப் பார்க்கும்போது பரிசுத்தமான ஒளியை உணர்கிறேன். இந்த குடியில்லையேல் நான் ஒரு சராசரி மனிதன். என்னை நானே கேட்டுக் கொள்வேன் ‘நாளை குடிக்காதே’ என. நினைத்த படியே வாழப் பழகுகிறோமா? சோன்யா என்னோடு வந்து விட வேண்டும். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்வோம், குடும்பத் தேவையை நான் பூர்த்திசெய்வேன். ஆனாலும் அழுகிய ஆத்மா தூய்மையடைய எனக்குச் சாராயம் வேண்டுமே? இப்படித்தான் புலம்பிக்கொண்டு தவறுகளைத் தெரிந்தே செய்து பின் வருத்தப்பட்டு, பார், வருத்தத்தில் இன்னும் இரண்டு குவளை சாராயம் குடிப்பேன்.” பியோதர் அன்றைக்கு அதையெல்லாம் குறிப்பு எடுத்துக்கொண்டான். என்னிடம் அதை வாசிக்கவும் கொடுத்தான்.

ராணுவப் பள்ளியில் அவனோடு பழகிய நாட்களில் ஒரு மழைக் காலத்தில் அந்தக் கதையைச் சொன்னான். என்னை எப்போதுமே உலுக்கும் அந்தக் கதை இப்படித்தான் ஆரம்பித்தது “அப்பா அன்றைக்கு வீட்டில் இல்லை. நாங்கள் அண்ணன் தம்பிகள் எல்லோருமே விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்த அழுகுரல் என் காதில் கேட்டது, எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்றுதான் அப்பா மருத்துவராகையால் நோயாளிகள் வருவதும் அவர்களோடு வந்தவர்கள் அழுது புலம்புவதும் பரிச்சயமான ஒன்றுதான். ஆனாலும் அன்றைக்கு வித்தியாசமாக ஒரு தகப்பனுடைய குரல் என் காதில் விழுந்தது. மிகவும் ஆங்காரமான அதே சமயம், ஒரு பெண்ணின் கீச்சிடலைப் போல அந்தக் குரல் என்னை நிலைகுலையச் செய்தது. ஓடிப் போய் வாசலில் பார்த்தேன். அழகான ஒரு சிறுமியைக் கையில் ஏந்தியிருந்தார். அந்தக் குழந்தை பார்க்கும் போது கவலைகள் இன்றி நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தது போல ஒரு சித்திரம். அவர் தூக்கிக் கொண்டிருந்த வெள்ளை நிற துணியில் கால்களின் இடுக்கு வழியே இரத்தம் வழிந்தபடியிருந்தது. என் பார்வை அங்கேயே மையம் கொண்டிருக்கும் வேளையில் அவர் என் அப்பாவைத் தேடி வந்ததைச் சொன்னார். அவரின் பேச்சில் நிதானம் இல்லை. இருப்பினும் அப்பாவின் தேவை புரியவே அவரைக் காத்திருக்கச் சொல்லி அப்பாவை அழைத்து வர ஓடினேன். அப்பா அவசர சிகிச்சை ஒன்றில் இருந்தார், அப்போது இடைமறித்தால் சரமாரியான அடிகள் முதுகில் விழும். நான் வெளியே காத்திருந்த வேளையில் அந்த தகப்பனும் என் பின்னாலே வந்துவிட்டார். அவரின் அழுகுரல் கேட்டு வெளியே வந்த அப்பா, குழந்தையை அள்ளிக்கொண்டு அவர் அறைக்குள் திரும்பினார். நான் மெதுவாக அந்த தகப்பனை நோக்கி தலையைத் திருப்பினேன் ‘பார் தம்பி, இந்த பாதகச் செயலைச் செய்தவன் என் முதலாளி. அவனைக் கன்னத்தில் அறையத் தோன்றுகிறது. என் மகளுக்கு அவனின் பேத்தி வயதுதான் இருக்கும். உனக்குப் புரிகிறதா எனத் தெரியவில்லை! இதையெல்லாம் ஆண்டவன் ஒருவன் பார்த்துக்கொண்டுதான் இருப்பான். அதற்கான தண்டனையை அவன் வழங்குவான். எங்களால் என்ன செய்ய முடியும்? ஒரு ஏழைக்கு வாய் சாப்பிட மட்டுமே, அதுவும் சிலவேளைக்குத்தான். எங்கே முறையிட இயலும்? எங்களின் குரல் அந்த ஆண்டவனுக்கு மட்டும் தான் கேட்கும்’. அந்தக் குரல் இன்றும் எனக்குள் ஒலிக்கிறது”. மீண்டும் அந்தக் கதையின் தொடர்ச்சியை ஒரு குளிர்காலத்தில் அவன் வாயாலே கேட்க நேர்ந்தது. அது டிமித்ரி, மர்மலதோவுக்கு பின்னர் நானாக அவனிடம் கேட்ட கதைகளில் ஒன்று. “அந்த முதலாளியை நான் ஸ்விட்ரிலைகோவ் உருவில் மீண்டும் காண நேர்ந்தது. மர்மலதோவின் மகள் வசித்து வந்த அதே குடியிருப்பில் அவனும் வசித்தான். தேவாலயம் செல்கையில் அவனும் ஒரு நாள் வந்திருந்தான். உனக்கே தெரியுமே வித்தியாசமான மனிதர்களைக் கவனிப்பது எப்போதுமே என்னுடன் பயணிக்கிறது. அப்படி இருமுறை நாங்கள் சந்திக்க நேர்ந்தது. மேன்மையான மனிதனாகவே அவன் தோன்றினான். அதிகம் பேசாவிட்டாலும் எதையோ மறைக்கும் தொனி அவன் பேச்சிலிருந்தது. நான் என்னை ஒரு எழுத்தாளர் என்ற முறையில் அறிமுகம் செய்த நாள் அதிகம் என்னுடன் பேசினான். முதலில் தயங்கினாலும் பின்னர் மடை திறந்த வெள்ளம் போலப் பேசினான் ‘பியோதர் தன் தவறை உண்மையாகவே எண்ணி மனம் வருந்தும் மனிதனுக்கு சொர்க்கத்தில் இடமுண்டா? ஒருவேளை இருந்தாலும் அங்கே செல்வதில் எனக்கு விருப்பமில்லை. தன்னுடைய வாழ்க்கையின் எல்லா நாட்களும் தன்னைப் பற்றியே சிந்தித்து கையில் இருக்கும் பணம் மூலம் எல்லாமுமே கிடைக்கும் என்ற அகங்காரம் ஒருவனை எங்கே போய் நிறுத்தும் தெரியுமா? எதுவுமே இல்லாத ஒளி புகாத சூன்யத்தில். இப்போது நான் அங்கேதான் இருக்கிறேன். பார்! என் முகத்தில் பாவத்தின் ரேகை ஓடுகிறது. கைகளில் மட்டும் ரேகை கிடையாது, அவரவர் முகத்தில் அவர்கள் செய்த பாவத்தின் ரேகை ஓடும். உற்றுப் பார்! அதெல்லாம் நெளியும் புழுக்கள். அவை என்னைச் சித்திரவதை செய்கின்றன. இதே கைகளால் ஒரு அப்பாவி சிறுமியை நாசம் செய்தேன். அவளை நான் அழைக்கும் போது சிரித்துக்கொண்டே வந்தவளின் உள்ளம் எவ்வளவு தூய்மையானது, ஆனால் நானோ நயவஞ்சகமாக அதை உபயோகித்துக் கொண்டேன். அதற்குப் பின்னர் வெளியே கூற முடியாத கழிவான காரியங்களைச் செய்து விட்டேன். ஆனாலும் அந்த முதல் சிறுமி தினமும் இப்போது என் கண் முன்னே தெரிகிறாள், இப்போது கூட வெள்ளுடை தரித்து உன் பின்னாலே நின்றுகொண்டு கைகளால் சைகை காட்டுகிறாள். அவள் என்னை அழைக்கிறாள். நானும் போயாக வேண்டும். ஆனால் இப்போது என் கையில் சில ரூபிள்கள் இருக்கின்றன. அதற்கென ஒரு தேவையும் இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு நான் சென்றுவிடுவேன். தினமும் விவிலிய வசனங்கள் ஒரு தூய ஆத்மாவின் குரலின் வழியே தினமும் கேட்கிறேன். அது என்னைத் துண்டு துண்டாக நறுக்குகிறது. இருண்மை நிறைந்த என் இதய அறைக்குள் ஒரு சிறிய வெளிச்சம் அதன் மூலம் ஒளிர்கிறது. அங்கே நானில்லை, ஒரு சிறுவன் இருக்கிறான். அவனுக்கு விளையாடப் பிடிக்கும், அம்மாவின் உடல்சூடு பிடிக்கும், அப்பாவின் மடி பிடிக்கும். அவனாக நான் மீண்டும் மாறிவிட முடியாது. ஆனால் நான் அப்படியிருந்தேன். உன்னிடம் பேசிக் கொண்டிருப்பது ஒருவகையில் பாவமன்னிப்பை ஒத்தது. தேவாலயம் சென்று அதைக் கேட்க எனக்குத் திராணியில்லை. நான் சொல்லியவற்றைக் கேட்டு என்னை நீங்கள் வெறுத்தாலும் அதற்கு நான் தகுதியானவன் தான்’.” பியோதர் சொல்லிமுடிக்கும் வரையிலும் எனக்குப் பொறுமையில்லை. “பதிலுக்கு என்ன சொன்னாய் பியோதர்? நானாய் இருந்திருந்தால் அவன் முகத்தில் காரி உமிழ்ந்திருப்பேன்”. “நீ நினைத்தாலும் இப்போது அது இயலாது, அவன் உயிரோடில்லை. இறப்பு அவன் கையாலே நிகழ்ந்தது. அன்றைக்கு அவனிடம் எதுவுமே பதில் பேசத் தோன்றவில்லை. பிறகு அவனே எழுந்து சென்று விட்டான். எல்லோருமே வெறுக்கும் ஒரு மனிதன் தான் அதில் தவறில்லை. அவனைப் போன்றவர்கள் எப்படி உருவாகிறார்கள் அதைப் பற்றியே சிந்தித்தும் அதற்கு விடையில்லை. கடைசி வரையிலும் அவனுக்கு அன்பென்பதே கிடைக்கவில்லையா? ஒரு தூய அன்பைக் காணக் கிடைக்காத துரதிருஷ்டசாலி. இறப்பிலாவது அவன் நிம்மதி அடையட்டும். அந்த பாவத்தின் கறைகள் அழிக்க முடியாத வடு, அவனோடு போகட்டும்”. பியோதர் அன்றைக்கு அதிகம் பேசவில்லை. ஆனாலும் அவன் கல்லறைக்குச் சென்று வந்ததைச் சொன்னான்.

பனி வெளியே பொழிந்து கொண்டிருந்தது. பியோதர் உள்ளே வந்ததும் வழக்கமான புன்னகையோடு அருகில் அமர்ந்தான். “என்ன பியோதர்? நாவல் வேலையெல்லாம் எப்படிப் போகிறது?”, “நல்லபடியாக எனச் சொல்ல விருப்பம் தான். சூதாட்டம் பற்றி ஒரு நாவல் எழுதிக் கொடுக்கிறேன் எனச் சொல்லியிருந்தேன் ஆனால் அதைத் தொடங்கவேயில்லை”, “மர்மலதோவின் மரணம் விபத்து என நம்பமுடியவில்லை பியோதர்”, “இருக்கலாம் அது அவனுடைய தெரிவு. சொல்ல மறந்து விட்டேன். டிமித்ரியின் கடிதங்கள் கிடைத்தது, குருஷென்காவிற்கு இன்றும் நம்பிக்கை இருக்கிறது எப்படியும் விடுதலை கிடைத்து விடுமென. அதற்கென எத்தனை எத்தனங்கள். மிஷ்கின் இளவரசன் ஒருவரைச் சந்தித்தேன், கான்ஸ்டன்டீன்” நான் வோட்கா குப்பியின் மூடியைத் திறந்தேன். இனி மிஷ்கினையும் நான் அறிவேன். பியோதரின் உலகில் மனிதர்கள் குற்றம் செய்வார்கள், பேராசைப் படுவார்கள். பின்னர் அதற்காக வருந்துவார்கள். குற்றங்கள் செய்யாத மனிதர்களே இல்லை. அவை அதன் வடிவில் சிறியதா? பெரியதா? யார் செய்தார்? பாதிக்கப் பட்டவர் யார்? என்பதைப் பொறுத்தே சமூகத்தால் கணக்கில் கொள்ளப்படும். பொறுங்கள்! அவன் மிஷ்கின் கதையைச் சொல்ல ஆரம்பித்துவிட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.