புத்த மணியோசை

பேங்காக்கின் புத்த தேவாலயங்கள் இடைவிடாமல் மணியோசையை எழுப்பிக் கொண்டிருந்தன, ‘நீ வெளியேறு, நீ வெளியேறு’ என்று. பேங்காக் என்ற புத்த நாட்டில் அவனால் வெகு நேரம் நிற்க முடியவில்லை. அலைந்து திரிந்து பட்டாங் பீச்சுக்கு வந்திருந்தான்.
பட்டாங்-இன் நீலக்கடல் அவனுக்கு நஞ்சுபோலத் தெரிந்தது. பாவங்களும் அதன் உணர்வுகளும் அவனை ஒவ்வொரு நொடியும் வதைத்தனவே! ஆன்காங்க் என்ற அந்தப் பெண் வேசியா, தத்துவ ஞானியா, சிந்தனையாளரா? அசைந்தாடும் பொன் வண்ண நெல் வயல்களின் ஊரிலிருந்து வந்த அவளும் கூட தங்க நிற முடியை உடையவள். பட்டாங் கடற்கரை எல்லாம் நீல வண்ணமாக இருந்ததால், அங்கே பிரதிபலனுக்கு அது தடையாக இருந்ததால் பட்டாங்-கை பிரதிபலன் இல்லாத நாடு என்கிறார்கள் என்று கூறியிருந்தாள் ஆன்காங்க். ஆனால் மனக் கண்ணாடியின் அரூபம் அது, விஷ விஷயங்கள் பிரதிபலிப்பின் இரைச்சலான நீர்வீழ்ச்சி. அங்கே பேங்காக்-இல் சாந்தி தேவனின் முன்னால் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் போது என்னென்ன வேண்டிக்கொண்டேன். எனக்கு நல்ல வியாபாரம் நடக்க வேண்டும் என்றா? வியாபாரம் என்றால் என்ன? இன்னும் இந்த விவசாயிகளைக் கொல்லும் கிருமி நாசினிகள் அதிக விற்பனையாக வேண்டும் என்றா அல்லது வேறென்ன? புத்தன் முன்னால் வேண்டிக்கொள்ள மட்டுமல்ல, அமரக்கூட உரிமை தனக்கில்லை. அப்போது புத்த மணி ஓசை.

அவனுக்கு பேங்காக் விருப்பமாகவில்லை. அங்கே அமைதி தூதனின் விக்கிரகங்களின் கண்ணில் கண் வைத்து பிரார்த்தனை செய்ய முடியவே இல்லை. பிரார்த்தனைக்கு அமர்ந்தால் வியாபாரம், டார்கெட் பெயரில் இலக்குகள், விவசாயியின் வாழ்க்கை மீது சமாதி கட்டும் காட்சிகள், பக்கத்தில் இருப்பவனை மீறி வெல்லும் ஆசைகள், இந்தக் காலனின் தேர் ஓட்டத்திற்கு இம்சை சக்கரங்கள். அந்த சக்கரம் முன்னால் உருள கட்டிடங்கள், கார்கள், பூமியின் பரப்பளவும் வளருமல்லவா? அந்த புத்தனும் கூட அரசன், பணக்காரன். அதை எல்லாம் துறந்து ஐந்து வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்ந்தானே? அப்படியான வாழ்க்கையின் சிறிய நோக்கமும் தனக்குக் கிட்டாமல் போனதே? ஆசை துயரமாகும் காலம் மற்றும் செல்வத்தைச் சேர்க்கும் நேரங்கள் இந்த எதிர்மறைகள் இரண்டும் இன்று நேருக்கு நேர் நின்றது ஏன்? ஆசை துன்பத்திற்குக் காரணம் என்ற மந்திரத்தைச் சொல்பவர்கள் இன்று உலகத்தில் யார் இருக்கிறார்கள்? புத்தனின் புன்னகையைப் பற்றிப் பேசுபவர்கள் யார்? அவன் சொல்கிறான் – “நீ இவ்வளவு கிருமி நாசினி திராவகம் விற்றால், உனக்கு ஒரு வெளிநாட்டுக் கார்!” இவன் வருகிறான்-“நீங்கள் இவ்வளவு விற்றால் உங்களுக்காக வெளிநாட்டுப் பயணம்”. மற்றொருவன்- “அதே திராவகம் அரை விலையில்” என்கிறான். இவன் விற்றால் மற்றொருவன் விற்கிறான். இன்னொருவன் விற்காவிட்டால் மற்றொருவன். எல்லோரும் சந்தையைப் பற்றியே பேசுபவர்கள். யாரும் ஆசை துன்பத்தின் காரணம் என்று பேசுபவர்கள் இல்லை. தன்னையும் சேர்த்து. அதுபோல முதலீடும் வெள்ளத்தைப்போல ஆசையே துன்பத்தின் காரணம் என்பது வாழ்க்கையின் பகுதியாகவே இல்லை என்று நினைத்தான். கனிஷ்கன் கட்டினான் என்று சொல்லப்படும் கோவிலில் மலர்ந்து நின்ற புத்த சிலையின் சிரிப்பு. இவனைப் பார்த்துச் சிரித்ததா அல்லது இவனுடைய பச்சோந்தி நிறத்தைப் பார்த்துச் சிரித்ததா? தெரியவில்லை.

புத்தனின் தூய தத்துவங்கள் இவனுக்கு முன்பே அறிமுகமாகாமலிருந்தால் இவ்வளவு சிந்தனையும் கிடைத்திருக்காது. முதலீடு ஈட்டும் தனிப்பட்ட சொத்துக்களின் முதலாளித்துவத்திற்கு எதிரான இயக்கங்களில் சில காலம் போராடியதால் தனக்கு ஒரு நேர்மறை அல்லது எதிர்மறை கருத்துக்களோ தெரியாமல் போனது. முதலீடு விரிவாக்கம் எதையும் பொருட்படுத்தாது. அது மனிதர்களின் இரத்தக் கால்வாய் வழியாகப் பாயும் என்று பெரியவர்கள் சொன்னார்களே. அந்தப் பட்டறையிலேயே பழகி அதைக் கையில் ஏந்தி வந்திருக்கிறான் அவன். என்றால் எல்லாம் புரிந்தாலும் முடிவில் வெற்றி பெற்றது முதலீடு. அந்த சில கால ஆய்வால் பின்தொடர்ந்து அவனை வாட்டுவது அந்த குற்ற உணர்வுகளே என்று அவன் உணர்ந்தான்.

பேங்காக் புத்த ஆலயங்கள் இவனுக்கு நிரந்தர எச்சரிக்கை மணிகளை ஒலித்தன. நீ வெளியேறு, உனக்கு இங்கே இடமில்லை. இரவு படுத்தால் அந்த இரு இடதுசாரி வாரிசுகள் மேனிபெஸ்ட்டோவின் ஒவ்வொரு வரியின் பொருளையும் காதில் ஊதி ஊதி தூக்கத்தை அனாமத்துக் கணக்கில் வைத்தார்கள்.
அப்படிச் சொன்னவர் யார்?

வியாபாரம் செய்யும் பகுதியின் ஒவ்வொரு கிராமத்திற்கும் போய் கேளுங்கள், தன்னைப் பற்றி அவர்கள் சொல்லுவார்கள் – இவன் எங்களுக்குக் கடன் கொடுக்கும் கடவுள் என்பார்கள். ஆனால், புத்த ஆலயங்களின் அலாரங்கள், இடது சாரிகளின் அந்தப் பெரியவர்கள், ”பேங்காக்கில் உங்களுக்கு இடமில்லை வெளியே போ” என்கிறார்கள்.
உண்மை எனக்கும் தெரியும். என்ன மறைக்கும் ஆலோசனை. எதிரி முன்னால் இருக்கிறானா, பின்னால் இருக்கிறானா என்று யாருக்கும் தெரியாது. என்னை எதிரி என்றால் அவர்களே சிரிக்கிறார்கள். எதிரியும் இப்படி அருவுருவமாகி கண்கட்டுபோல இருப்பான் என்று இன்று தெரிந்த உண்மையல்ல. வியாபாரத்தை ஏற்றுக்கொண்ட பிறகு அறிந்த உண்மை. அந்த விவசாயிகளுக்கும் வெகுளிகளுக்கும் அந்த மனிதர்களுக்கும் முன்னால் நின்று சண்டை போடுபவர்கள் மட்டுமே எதிரிகள். நல்ல விளைச்சல் வரும் விதைகள் என்று விதைக்கக் கொடுத்த விதைகள் எல்லாம் முளை விடாமல் சுருண்டு போயின. விதைகளுடன் நொடிந்துபோயின அந்த ஜீவன்கள். அது தன் மீது எழுதிய குற்றமாகி, அது அவரவர் தலை எழுத்து என்ற விளக்கம் பெற்று அந்தத் தலையெழுத்துக்களே என்னைப் போன்றவனைக் காப்பாற்றியது.

ஆம், கோவில் மணி அலாரங்கள் அடிக்கடி சொல்லி இருந்தன- நீ தொலைந்து போ.. நீ வெளியேறு…. என்று.

பேங்காக் ஏனோ தீர்வு காணாத நாடு என்று அவனுக்குப் புரியத் தொடங்கியது. உலகில் போதுமான அளவு திருடர்கள் இருக்கிறார்கள். மோசமானவர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் சுகமாக இருக்கிறார்கள். ஆனால், புத்தனின் மணியோசை ஒருமுறையாவது அவர்களுக்குக் கேட்டிருக்கிறதா? என்று நினைத்தான்.

பேங்காக் என்றால் சொர்க்கம் என்று பலருடைய கருத்து அவன் பார்வையில் இன்று தலைகீழ் நிலைமைக்கு மாறியிருக்கிறது.

ஆம், தாய்லாந்தில் இந்த பேங்காக்-கை விடவேண்டும். இல்லாவிட்டால் அந்த மணியின் அலாரங்கள் அவன் செவிப்பறையை கிழிப்பதன் வழியாகத் தன்னைக் கொன்றுவிடும் என்று நினைத்தான்.

பத்துநாள் இந்த பேக்கேஜ் பயணத்தில் முக்கியமாக பேங்காக், பட்டாங், மை கர்டி, ஹுயா ஹின், புகெட்டான், கஹோல்லாக், கரோன் என்ற அழகான இடங்களைப் பார்க்க ஜார்கிபாஷின் என்ற நிறுவனம் இங்கே அழைத்து வந்தது. ஜார்கிபாஷின் கிருமிநாசினி மற்றும் உரம் தயாரிக்கும் உலகின் முக்கிய 25 நிறுவனங்களில் ஒன்று என்று பெயர்பெற்றது. உலகம் முழுவதும் இதன் கிளைகள் பரவி இருக்கின்றன. அதன் முக்கிய உற்பத்திப் பொருளான “சாகேன்” என்ற கிருமி நாசினியை விற்பது நிறுவனத்தின் முக்கிய செயல்பாடு. நிரந்தரமாக பத்து ஆண்டுகள் சந்தையை அலங்கரிக்கும் இந்த “சாகேன்” உலகத்தின் நம்பர் ஒன் விற்பனையாகும் திராவணம் என்ற இடத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடத் தொடங்கியது. முதல் எட்டு ஆண்டுகள் கிருமி நாசினி விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எந்த பேக்கேஜ்-ம் இருக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க, அதன் இலாபமும் கூடச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை. வெறும் 8 சதவிகிதம் மார்ஜினில் வியாபாரம் செய்யவேண்டி இருந்தது. ஆனால் பல ஆண்டுகளாகச் சந்தையை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த ஏகபோக சக்ரவர்த்தியாக ஜார்கிபாஷின் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கியமாக “லோகோஆன்” நிறுவனம் மிக நெருக்கமான போட்டியாளராக வளர்ந்தது. அதற்குக் காரணம், தரமான அம்சங்களாலும், அதிகமான சந்தைத் தேவைகளுக்கு அதிக அழுத்தம் கொடுத்ததாலும், ஜார்கிபாஷின் – லோகோஆன் நிறுவனங்கள் சரி சமனாக இருந்தன. ஜார்கிபாஷின் பழைய நிறுவனமானாலும் இன்னும் சில நாட்களில் லோகோஆன்-க்கு முதல் இடத்தை விட்டுக்கொடுக்கத் தவிர்க்கமுடியாமல் மானசீகமாகத் தயாராக இருந்தது. ஆனாலும் முந்தைய காரிய தந்திரங்களில் சிறிய மாற்றங்களைச் செய்து உற்பத்தித் தரத்திலும் சந்தை வளர்ச்சியின் பக்கம் அதிக கவனம் செலுத்தும் தந்திரத்தின் பகுதியாகவும் “சாகேன்”- பொருளைச் சந்தையின் பின்னணியில் மறு நிலைநாட்ட முக்கியமானது. என்றால் கார்கள், வெளிநாட்டுப் பயணங்கள், ஹை டெக் வேசிகள் என்று வியாபாரிகளை எடுத்துச் செல்வதன் வழியாகத் திரும்பவும் சந்தையின் தலைமையை நிலைநாட்ட ஏதுவாக இருந்தது. அதன் தேவைக்குத் தக்கபடி நிறுவனத்தில் கட்டாய விற்பனை கருத்து நடைமுறைக்கு வந்தது.

அதற்காக கர்நாடகா முழுவதும் இருக்கும் அதிக விற்பனை செய்த 15 வியாபரிகளை தாய்லாந்துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அந்தப் பின்னணியில் அவன் இங்கே வந்திருந்தான்.

சந்தை என்னும் மாயாவி தன்னுடைய வலுவான கரங்கள் வழியாகப் பலருடைய இரத்தம், மாமிசம், சதைகளை வாங்குகிறது. பெண்களை எங்கெங்கோ தள்ளுகிறது என்ற பெரியவரின் சிந்தனைகள் இன்று உண்மையாக உள்ளதே! சந்தையின் பாகமாக இருக்கும் இங்குள்ள பெண்களுக்கு ஜீவன் இருக்கிறதா, இல்லையா அல்லது அது ஒரு கற்பாறையா என்று எண்ணும் போதே தப்பித்துக் கொள்ளுவதிலேயே வாழ்க்கை கழிந்தன. எவ்வளவு தப்பித்துக்கொள்வது? தப்பித்துக்கொண்டு பட்டாங் வந்து சேர்ந்ததும் ஆனது. இங்கே எல்லாம் இருக்கின்றது – கடல், மது, மாமிசம், அவளும்….
ஆனாலும் அது அழகாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பேங்காக்–இன் அந்த மணிகளின் ஓசையால் தற்காலிகமாக நிம்மதி என்னமோ கிடைத்தது. இரண்டு நாள் முடிந்திருந்தது. மனதின் சங்கடங்களுக்குப் பரிகார வழியாக ஆன் காங்கும் கிடத்தாளே? இரண்டு நாட்களாக அவளுடன் பேசிப் பேசி, பேங்காக்-இன் மணியோசை மறந்துபோனது. ஆன்காங்க் என்ற அந்தப் பெண்ணை வியாக்கியானம் செய்யவேண்டும் என்பதே பிரச்சினையாக இருந்தது. இவள் வெறும் வேசியா? இவள் பேங்காக் பல்கலைக் கழகத்தில் தத்துவம் கற்ற பெண்ணோ அல்லது விவசாயத்தைப் பற்றிப் பேசும் விவசாய விஞ்ஞானியா? இரண்டு நாள் அனுபவத்தில் நான் எல்லாம் மறந்துவிட்டேனா? ஆம், மனிதனின் அடிப்படை குணங்களில் ஒரு மாறுதலைத் தேடுவது ஒரு முக்கியமான குணம். ஆன்காங்க் துயரத்திற்கு எதிரான மாறுதலாக மகிழ்ச்சியாகவே கிடைத்திருக்கிறாள் என்று நினைத்தால் அவள் பொருளாகத்தானே கிடைத்தது – commodity-யாகத்தானே? நான் இவ்வளவு விற்பனை செய்ததற்கு நீ இவ்வளவு சுகங்களைக் கொடுத்தாய்- என்ற கொடுக்கல், வாங்கல் பரிமாற்றத்தால் தானே? என்றால், அவள் சொல்லும் “தாய்” என்றால் ஃப்ரீடம், சுதந்திரம் என்ற பொருள். அவள் உண்மையாகவும் சுதந்திரமாக இருக்கிறாளா? தாய் என்றால் ஃப்ரீடம், ஃப்ரீடம்…. என்று சொல்லும் ஆன்காங்க் என்ற செல்ல முகத்து அழகிக்கு தான் எதற்காக வந்திருக்கிறேன், அவள் பாட்டுகள் பேச்சுக்கள் தன் ஒருவனுக்காகவா அல்லது தன்னைப்போல தின வாடிக்கையாளர்களுக்காகவும் இருக்கலாமோ…. யோசித்தான். அவள் தொழிலே அப்படிப்பட்டது. தினமும் வாடிக்கையாளர்களிடம் அவள் செயல் இப்படித்தான் இருக்கவேண்டும்.

கனஷியாம் என்ற மனித வள அதிகாரி இந்தப் பயணத்தின் தலைமையை வகித்திருந்தார். அவர் கேட்டுக்கொண்டே இருந்தார். நீங்கள் ஏன் பயணத்தின் மகிழ்ச்சியைப் பெறவில்லை. எதற்காக வருத்தமாக இருக்கிறீர்கள்? இந்தியாவின் 15 டாப் விற்பனையாளர்களில் ஒருவர் நீங்கள் என்ற பெருமை உங்களுக்கு உண்டு. ஒரு வெளிநாட்டுக் கார் மற்றும் இந்த அற்புதமான பயணப் பரிசை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். அடுத்த ஆண்டிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு உல்லாசப் பயணம் இருக்கிறது. ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் அடுத்த ஆண்டு இதைவிட இரண்டு மடங்கு விற்பனை செய்யவேண்டும். உங்களுடைய தற்காலிக கம்பானியன் ஆன்காங்க் என்றார்.
தாய்லாந்தின் ஒரு பெருமை என்றால் வேசித் தொழிலைச் சட்டமாக்கி இருக்கிறார்கள். “நாம் ஃப்ரஷ் வெஜிடபல் என்று சொல்வோமே, அதே போல இங்கே பெண்கள். அடுத்த ஆண்டு ஐரோப்பா பயணத்திற்கு தற்காலிக கம்பானியன் ஆக உங்களுக்கு ரஷ்யப் பெண்கள் கிடைப்பார்கள். அதன் சுகமே தனி. ஒரு பழமொழி இருக்கிறது, நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? என்று சிரித்தார். “கடவுள் வோட்காவுடன் ரஷ்ய அழகிகளையும் கொடுத்தால் நான் சொர்க்கத்தை நிராகரிக்கவும் தயார்” என்று. ரஷ்ய அழகி, வோட்கா, ஆரஞ்சு இவை நன்றாகப் பொருந்தும். இவற்றை ருசிக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு உங்களுக்கு அந்த அதிருஷ்டம் வரும். அதற்காக நீங்கள் உங்கள் டார்கெட்டை அடையவேண்டும். இந்தப் பெண் இருக்கிறாளே, ஆன்காங்க் அவளை ரஷ்யப் பெண்களுக்கு முன்னால் திருஷ்டி சுத்திப் போடவேண்டும். எப்படிப்பட்ட அழகிகள் அவர்கள்!” என்றார் கனஷியாம். இருக்கட்டும், உங்கள் மூட் சரியாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் பேங்காக் இருக்கலாம். உங்களுக்காகவே நாங்கள் பட்டாங் வந்திருக்கிறோம். “பட்டாங்” துறைமுகங்களின் நாடு, இன்பமாக இருக்க அழகான நகரம் என்றார். கேர்புல் அபௌட் யுவர் சேஃப்டி என்று கூறி தன் அறைக்குச் சென்றார். உண்மையாகவும் பட்டாங் அவர் கூறியது போல அப்படி பயப்படக்கூடிய நகரமல்ல. இடதுசாரி பெரியவர்கள் கூறிய வார்த்தை சந்தையின் ஏகபோக உரிமைக்கான போராட்டம் வெறும் போராட்டமாகாமல், முழுமையாக அங்கே இருக்கும் ஏழைப் பெண்களை கமாடிடியாக பயன்படுத்துகின்றன என்பது திடீர் என்று நினைவிற்கு வந்தது.
தான் இதன் நுகர்பவனா அல்லது உற்பத்தியாளனா? என்ற கேள்விகளுடன் அதன் உற்பத்தியாளனாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இது தவறு என்று தெரிந்திருக்கிறது. ஆனாலும் அந்த வாளைப் பிடித்து நின்றிருக்கிறேன். எல்லோரைவிடவும் தான் மிகவும் அபாயகரமான மனிதன் என்ற ஆலோசனை வரும்போது சன்னலுக்கு வெளியே நின்றான்.
கடல் ஆர்ப்பரிக்கிறது.

ஒரு நொடி சிந்தனைகளின் ஓடை நின்றதுபோல இருக்கிறது.
மீள, மீள கடலின் ஆர்ப்பரிப்பு.
புத்தனின் நிலையற்ற தத்துவம், பெரியவர்களின் கமாடிடி பற்றிய வியாக்கியானங்கள் உண்மையாகவும் அவனைப் பிழிந்து சக்கையாக்கி விட்டது. முதலீடு வெட்கமற்ற குற்ற உணர்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குகிறது என்று முணங்கினான். அவள் புன்னகை செய்து மௌனமானாள். பிறகு இவன் பக்கம் பார்த்து –
“என் அப்பா கொள்ளைக்காரனாக இருந்தார்” என்றாள்.
அவனுக்குப் பயமானது.

“பயப்படவேண்டாம், இருந்தான், இப்போது இல்லை. அது மட்டுமல்ல, அவன் இந்த பூமி மீதே இல்லை” என்றாள். “தர்மகுரு ஒருவர் அவனை மாற்றுகிறேன் என்று அழைத்துச்சென்று தினமும் புத்தனின் ஜாதகக் கதைகள், திரிபிடகத்தின் வரிகளைச் சொன்னார். வாழ்க்கை என்றால் திருடுவது என்றே தெரிந்திருந்த அவன், திருடுவதை நிறுத்தியவுடன் தனிமையானான், வாழ்க்கையில் ஒன்றுமே இல்லை என்பதுபோல உணவை விட்டான், பேச்சை விட்டான், ஒருநாள் கடலில் குதித்து இறந்து விட்டான்” என்று கண்ணீரானாள். என்றால் கொள்ளையடிப்பதற்கும் வெளியே, வாழ்க்கை?

இது தன் கதை போலவும் தோன்றியது அவனுக்கு. கொள்ளைக்காரனின் மாற்றத்திற்கு மாற்று இருக்கவில்லையா? என்று நினைத்துக்கொண்டு அந்தப் பின்னணியில் தன்னைத்தான் நினைத்து அச்சமானது அவனுக்கு. அவள் சும்மா இருப்பவளே அல்ல. இவனுக்காக சைனீஸ் டிஷ் தயார் செய்தாள். மீனுக்கு மசாலா தடவி வறுத்து உணவு மேசை மீது வைத்தாள்.
சிரித்துக்கொண்டே சொன்னாள்

“இந்தியர்கள் இங்கே உல்லாசமாக இருக்க வருகிறீர்களே, உங்கள் மனைவிகள் சரியாக இல்லையோ அல்லது அவர்களுக்குத் தெரியாதோ?”

என்றதும் உடனே நாக்கைக் கடித்து, “இல்லை, சும்மா கேட்டேன், நீ தவறாக எண்ண வேண்டாம்” என்றாள். “ஒருவேளை அவர்கள் உங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டால் எங்களைக் காப்பாற்றுபவர்கள் யார்?” என்று மறுபடியும் சிரித்தாள். இருட்டு சூழத் தொடங்கியது. பேங்காக்கில் புத்த ஆலயங்கள் செய்த காயங்களுக்கு அவள் பேச்சு மருந்துபோல என்று நினைத்தான். உண்மையோ இல்லையோ தெரியவில்லை.
“நாளை நீங்கள் புறப்படுகிறீர்களா?” என்று கைகூப்பினாள்.
“நான் சில விஷயங்களை உங்களுக்குச் சொல்லட்டுமா?” என்று மேலே தொடர்ந்தாள். “வருடத்திற்கு நான்கு இலட்சம் தாய் பாத் சம்பாதிக்கிறேன். அதில் இருபது பர்சன்ட் அரசாங்கத்திற்கு வரி கொடுக்கிறேன். இருபது சதவிகிதம் ஏழை விவசாயிகளுக்காக ஒதுக்கிவைக்கிறேன். பத்து சதவிகிதம் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்கிறேன்” என்றாள். “இது நான் மட்டுமல்ல. தாய்லாந்தின் அநேக வேசிகளின் சாதாரண பொருளாதார அஜெண்டா இவை. மற்றொரு விஷயம், எனக்குச் சாப்பாடு போடுபவர்களே இந்தியர்கள். அதனால் எனக்கு இந்தியர்கள் என்றால் மரியாதை. அது புத்தனின் கர்ம பூமியும் கூட” என்றாள். “வி லீட் அ கம்ஃபர்டபல் லைஃப் ஃப்ரம் யூ” என்றாள். “இல்லாவிட்டால் என் அம்மா, இரண்டு தங்கைகள் இதே கடலில் விழுந்து இறந்து போயிருப்பார்கள். இந்தியர்கள் தங்கள் வருடாந்திரக் கணக்கை முடித்த கையோடு இந்தப் பக்கம் அடி எடுத்து வைக்கிறார்கள். அவர்கள் ஈட்டிய இலாபப் பணத்தை தாய்லாந்தின் பீச்களுக்களில் செலவு செய்கிறார்கள். நான் இதைத் தவறு என்று சொல்லவில்லை. இது எங்களைப் போன்றவர்களின் வயிற்றுப் பிழைப்பிற்கு வழியாகிறது” என்று சூடான தேநீர் கொண்டுவந்து கொடுத்தாள். தேநீர் அருந்திக்கொண்டே வானத்தைப் பார்த்தான். நீல வானம் மற்றும் கடல் ஒன்றானதுபோல தெரிந்தது. அவள் மீள பேசத் தொடங்கினாள். “அதில் உங்கள் பெஸ்டிசைட் கிருமிநாசினி உர நிறுவனங்களால் தாய் டூரிசம் செழிப்படைந்திருக்கிறது” என்றாள். அவளிடம் இடதுசாரி பெரியவர்களைப் பற்றிக் கேட்டேன், அவர்கள் அவளுக்குத் தெரிந்திருப்பதாகத் தெரியவில்லை. புத்தன் மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரிந்திருந்தான். “தர்மமல்லாத, சங்கமல்லாத வழிகள் அவன் விரும்புவதே இல்லை. தவறு செய்தால் புத்த மணி ஓசை எச்சரிக்கும்” என்றாள் அவள். “அதற்காக நான் எப்போதும் ஆன் டிராக் மீதே இருக்கிறேன்” என்று கைக்கு உறை அணிந்து காண்டோம்களின் உறைகளை கிழித்து, ஓகே உங்களுக்கு மசாஜ் செய்யலாம் வாருங்கள் என்று அழைத்தாள்.

“முதலீடு செயல்பாட்டுத் தன்மைக்குப் போகாமல், சேகரிப்பின் அளவுக்கு வந்தால் கமாடிடியாக மனிதத் தன்மையே நாசமாகிவிடும்” என்றான். அவளுக்குப் புரியாமல், “படு, தண்ணீர் சூடாக இருக்கிறது, அதில் ஒரு பௌடர் கலந்திருக்கிறேன். அது உன் ஆசைகளை இருமடங்காக்கும்” என்று சொன்னாலும் அவன் அசையவில்லை. “இருக்கட்டும் நீ அந்த நாற்காலியின் மீது உட்கார். நான் இங்கே அமர்கிறேன். பேங்காக்கின் அந்த மணிகள் செய்த காயத்தின் அடையாளங்களை நிவர்த்தி செய்யும் வலு உனக்கு மட்டும் இருக்கலாம். வா சும்மா பேசலாம்” என்றான். “இங்கே வந்திருக்கிறானே கனஷியாம் என்ற லோஃபர், இவன் பெரிய தரகன்” என்றான். அவள் கனஷியாம் என்றால் சோறு போடுபவன் என்று எண்ணியிருந்தாள். “ஏன் என்ன ஆனது?” என்றாள். “தரகர்கள் இல்லாதவர்கள் மற்றும் இருப்பவர்களின் இடையே இணைப்பாக வேலை செய்தாலும் கூட அவர்கள் செயல்பாடு இருப்பவனின் பெருமையையே காக்கிறது” என்றான். அவளுக்குப் புரியாமல், “ஐ டோன்ட் நோ” என்றாள்.

மற்றவர்களைப் பற்றிப் பேசுவதை விட நான், என்றான். நானும் அவன் தானே? ஆம் நானும் அவன்தான் என்று நினைத்தான். பிறகு அவள் வேசித் தொழில் பாவமா என்று சிரித்தாள். உங்கள் விவசாயிகளின் சேவையில் புண்ணியப் பணமும் பாவத்தைக் கழுவ உதவி செய்யலாம் என்றாள்.
“நீங்கள் விவசாயிகளைக் காப்பாற்றுபவர்கள். அவர்களுடைய விளைச்சலைக் காப்பாற்றுபவர்கள். அந்தப் புண்ணியமும் எங்களுடன் இருக்கிறது” என்றாள் ஆன்காங்க்.
அவள் கண்ணீர் அணை உடைந்தது.

“ஒவ்வொரு பன்னிரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அங்கே ஒரு விவசாயி சாகிறான். அவனைக் கொல்பவர்களே நாங்கள். அவனுக்குப் பொய்யான கிருமிநாசினி கொடுத்திருக்கிறோம். அவனிடமிருந்து மூன்று மடங்கு அதிகம் பணம் கறந்திருக்கிறோம். அவன் வாழ்க்கையைத் துவம்சம் செய்திருக்கிறோம் நாங்கள் இங்கே வந்தது அவன் பணத்தால்தான். உல்லாசமாக இருந்ததும் அவன் பணத்தில்” என்று கன்னடத்தில் சொன்னான்.

இவனுடைய கன்னடத்தைக் கேட்டு, அவளுக்கு அதிர்ச்சியானது. “வாட்” என்றாள். “நத்திங்க்” என்றான். மாலை இருளாகத் தொடங்கியது. நீலக் கடல் நஞ்சாகத் தெரிந்தது. நான் தியானத்திற்காக இங்கே பூயி என்ற ஊருக்குப் போய் வருகிறேன். நீங்கள் அந்த இரண்டு மணி நேரம் ஓய்வெடுங்கள் என்றாலும் அவளை இரண்டு மணி நேரம் விட்டிருக்க முடியவில்லை. “இங்கேயே தியானம் செய்யலாமே? ப்ளீஸ் நீ போகவேண்டாம். நான் தனியாக இருக்க முடியாது” என்றான். சரி, இங்கேயே செய்கிறேன் என்று சிரித்தாள். சூட்கேசைத் திறந்து அதிலிருந்த புத்த விக்கிரகத்தை எடுத்து மேசை மீது வைத்து தியான நிலையில் அமர்ந்தாள். அவன் அந்த விக்கிரகத்தைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். மறுபடியும் சூட்கேசிலிருந்து இரண்டு சின்ன மணிகளைக் கையில் பிடித்து அசைத்தாள். பேங்காக்-இன் ஆலயங்களை விடவும் அதி பயங்கரமாக ஓசை எழுப்பியது அந்த சிறு மணிகளின் ஒலி. அவனுக்கு மரண மிருதங்கத்தைப் போல கேட்டது. உடனே சன்னலுக்கு அருகே ஓடினான். சன்னலைத் திறந்தான். நீலக் கடல் எதிரே உடலை விரித்துப் படுத்திருந்தது.

“கொள்ளைக்காரர்களுக்கு வாழ மாற்று வழிகள் இல்லை. அவர்கள் தேர்வு கடல் ஒன்றே”

என்ற ஆன்காங்க் கூறிய வார்த்தை அந்த இருட்டு உடலிலிருந்து வெடித்தது.


2013- பிரஜாவாணி சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை.

கன்னடத்தில்: மஹந்தேஷ் நவல்கல்

தமிழில்: கே,நல்லதம்பி   


மஹந்தேஷ் நவல்கல் :24 நவம்பர் 1970-இல் கர்நாடகா ராயச்சூர் மாவட்ட மானவி தலூகாவின் நவல்கல் என்ற கிறாமத்தைல பிறந்தவர். விவசாயக் குடும்பப் பின்னணியில் அவர் கதைகள் விவசாயிகளின் பிரச்சினைகளையும், உலகமயமானலின்  விளைவுகளின் உள்ளோட்டங்களை சிறப்பாகப் பார்க்கின்றன. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும், ஒரு நாடகத்தையும், 30 வயதுக்குள்ளான எழுத்தாளர்களின் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். தற்போது கல்புர்கி என்ற ஊரில் வசிக்கிறார்.

 

                                                           

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.