கவிதை: அன்று முதல் இன்று வரை

ஜெ. பிரான்சிஸ் கிருபா

பிரான்சிஸ் கிருபாவின் கவிதைகளில் அபாரமான கற்பனையும், புனைவும் மண்டிக் கிடக்கின்றன. பல இடங்களில் யதார்த்தமும் புனைவும் பிணைந்து திடீர் திடீரென்று படிமங்களாக வெளிப்படுகின்றன. இவரது கவிதைகளில் காதல்வயப்பட்ட கவியின் மனம் வேதனைகளில் அல்லாடுகிறது. அவரது கவிமொழியினால் நடப்புலகு, கனவுலகம் போல், சல்லாத் துணியினால் மூடப்பட்டது போல் காட்சி தருகிறது. பனி மூட்டத்திற்குள் தென்படும் புறவுலகெனத் தோற்றம் தருகிறது. இந்த மாயத்தை இவரது மொழி கவிதைக்குள் நிகழ்த்துகிறது. தனக்கென எவ்விதத் தனித்துவமான, இறுகிய விவரிப்புச் சட்டகத்தை பிரான்ஸிஸ் கிருபா கொண்டிருக்கவில்லை.

‘தேவ மாதா திருநாள்

தூரத்து ஊர் மதினிகளை

இழுத்து வருகிறது

ஜோடித்து தேருக்கு இணையாய்…’

என்று தொடங்கும் ஒரு கவிதை ஒரு திருவிழாக் கொண்டாட்டத்தை விவரிக்கிறது.

‘பழைய திருவிழா வளையல் கதைகளைத்

தழையத் தழைய பேசுகிறார்கள்…’

என்கிறார். இவ்வளவு மன நெருக்கத்துடன் திருவிழாவைப் பற்றி எந்தக் கவிதையும் எழுதப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஒரு கவிதையில் ‘பிறை செழிக்காத இரவுகளில்’ என்ற சொல்லாட்சி தானே வந்து விழுகிறது. இன்னொரு கவிதையில், ‘ஒளிச் சூளையின் மையத்தில் / துருவேறிய மோகத்தோடு…’ என்றெல்லாம் படிமங்கள் விழுகின்றன. மோகத்தை ‘துருவேறிய மோகம்’ என்கிறார். என்ன சொற்சேர்க்கை. இன்னொரு கவிதையின் இறுதிவரிகள்,

‘…நினைவுக்கொடி நுனியில்

அடுத்த வரிக்காக

தலைகீழாய்த் தொங்கும் மௌனம்’

என்று முடிந்து வாசகனின் மனதைக் கிளர்ந்தெழச் செய்கின்றன. ‘நினைவுக்கொடி நுனி’, தலைகீழாய்த் தொங்கும் மௌனம்’… அபாரமான மொழி நெசவு. பிரமாதமான கற்பனை.

இன்னொரு கவிதையில்,

‘ஊர்வலத்தில் புகுந்து

கலவரம் கழற்றி எறிந்த காலணிகளாய்

எங்கும் சிதறிக் கிடந்தன

மோகத் தானிய மணிகள்…’

என்கிறார். கலவரம் நடந்த சாலையில் செருப்புகள் சிதறிக் கிடக்கும். இதை ‘கலவரம் கழற்றி எறிந்த காலணிகள்’ என்று யதார்த்தத்தையும் புனைவையும் இணைத்துச் சொல்லும்போது படிமம் மொட்டவிழ்க்கிறது. கலவரம் கழற்றி எறிந்த காலணிகளைப் போல மோகத்தின் தானிய மணிகள் சிதறிக் கிடக்கின்றன பிரான்சிஸ் கிருபாவுக்கு. ஒரு கவிதை காதலுணர்வை விவரிக்கிறது. கவிதையின் இடையே ‘சலவைக்கிட்டுத் திரும்பிய கனவுகளை / மடிப்புக்கலையாமல் கையிலடுக்கி…’ என்கிற வரிகளில் புனைவும், நடப்புலகும் எவ்வளவு இயல்பாகப் பொருந்தி நிற்கின்றன. வியக்காமலிருக்க முடியவில்லை.

பேருந்தின் பயணத்தை விவரிக்கும் கவிதையில் நடுவே, பயணித்துக்கொண்டே பூக்கட்டும் பூக்காரியைப் பற்றிய காட்சியை பிரான்ஸிஸ் கிருபா இப்படி விவரிக்கிறார்: ‘பூக்கட்டும் விரல்களில் காட்டுமான்கள் / கொம்பைச் சிலும்புகின்றன…’ என்கிறார் கவி. பூவை நூலிலோ, வாழை நாரிலோ வைத்துக் கோர்க்கும் விரல்கள், கவிஞருக்கு மானின் கொம்புகளாகக் காட்சி தருகின்றன. பிரமாதமான கற்பனை கவிதையாகிறது.

‘குரலின் விரல்களால்

உன்னை

வருடவேண்டும் போலிருக்கிறது

எங்கிருக்கிறாய்

இப்போது

என்னிடமிருக்கும் தொலைபேசிப்

பசியை

எண்களால் பிசைகிறேன்’

என்று முடிகிறது இன்னொரு கவிதை ‘குரலின் விரல்கள்’… குரலுக்கு விரல் இருக்கிறது கவிஞருக்கு. மொழியில் படிமம் எப்படியெல்லாம்தான் கூடி வருகிறது. ‘தொலைபேசிப் பசியை எண்களால் பிசைகிறேன்’ என்கிறார். போன் போடுவதை இப்படி மொழியால் அழகுபடுத்துகிறார் பிரான்சிஸ் கிருபா.

அழகையும், எழிலையும் மொழியினால் நெய்துகொண்டே இருக்கிறார் பிரான்சிஸ் கிருபா.

 

சுகிர்தராணி

2002-ல் இவரது முதல் தொகுப்பான ‘கைப் பற்றி என் கனவு கேள்’ வெளிவந்தது. இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சுகிர்தராணி தற்காலத் தமிழிலக்கியப் பரப்பில் மிக முக்கியமான கவிஞராக அறியப்படுகிறார். இவரது கவிதைகள் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கிறது. ஒடுக்கப்படுகிற பெண்கள், ஒடுக்கப்படுகிற சமூகத்தினரின் குரல்களை கவிதையின் சகல சாத்தியங்களுடனும் இவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன. இதுவே சுகிர்தராணியின், அவரது கவிதைகளின் தனித்துவம்.

கவிஞரின் ஆரம்பகாலக் கவிதைகளைக் கொண்டுள்ள ‘கைப்பற்றி என் கனவு கேள்’ தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள், எல்லா வகை மாதிரிகளுடன் கூடிய கருக்களையும் கொண்டிருக்கின்றன. இக்கவிதைகளில் அகம் – புறமென்று மாறி மாறிச் சஞ்சரிக்கிறார். ‘இலையுதிர்காலம்’ என்ற கவிதை இதற்கு ஒரு உதாரணம். சில கவிதைகளில் காதலுணர்வுகள் மண்டிக் கிடக்கின்றன. இதர தொகுப்புகளில் பெண்ணுடல் சிதைக்கப்படுவதைச் சன்னதத்தோடு வெளிப்படுத்துகிறார்.

இவரது கவிதைகளைப் படிக்கும்போது, ‘மாதவிக்குட்டி’ என்ற பெயரில் எழுதிய மலையாள எழுத்தாளரும் – கவிஞருமான கமலாதாஸ் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால், மாதவிக்குட்டியை விடவும் சுகிர்தராணி, தனது சமூகச் செயல்பாட்டை தனது கவிதைகளினூடாக வெளிப்படுத்துகிறார் என்பதே உண்மை.

உடம்பைப் பற்றிய விவரிப்பும், பெண்ணுடலின் அவதியும் கவிஞரால் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. இதுவே இவரது பிரதான பாடுபொருளாக இருக்கிறது. பெண்மையக் கவிதைகளை வாசகன் இப்படித்தான் பழகிக் கொள்ள வேண்டியதிருக்கிறது. இவரது எல்லாக் கவிதைகளையும் இந்த ஒற்றை வகைமைக்குள் அடக்கிவிடவும் முடியாது. ‘தழும்புகள்’ (இரவு மிருகம்) என்ற கவிதை பயிரிடலைப் பற்றிய கவிதை போல் தோன்றினாலும், இறுதியில் ‘அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம் பிரசவத் தழும்புகள்’ என்று பெண்ணுடல் சார்ந்தே கவிதையை முடிக்கிறார்.

‘இரவு மிருகம்’ என்று குறிப்பால் உணர்த்துவது ஆண்களைத்தான் என்று கொள்ளவேண்டும். இத்தொகுப்பின் பின் அட்டையில் ‘… காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டுவிட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு, அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார்..’ என்று கூறப்பட்டுள்ளது சுகிர்தராணியின் கவியுலகைப் புலப்படுத்துகிறது.

இத்தொகுப்பிலுள்ள ‘ஒருவழிப் பாதை’யும் 29,32-ஆம் பக்கக் கவிதைகளும், ‘பறக் கடவு’ளும் விளிம்புநிலை மனிதர்கள் குறித்து உரத்துக் கூறுகின்றன. ‘பழஞ்சொற்களின் மரணம்’ குறிப்பிடத்தக்க கவிதை. ‘தீண்டப்படாத முத்தம்’ தொகுப்பில் ஈழத் தமிழர்களின் நிலையைப் பற்றி பல கவிதைகள் உள்ளன.

மேலெழுந்தவாரியாக அவதானிக்கும்போது சுகிர்தராணி உடலின் இச்சைகளையும், பெண்ணுடலையுமே அதிகமும் புனைகிறார் என்று தோன்றும். ஆனால், இவரது எல்லாத் தொகுதிகளையும் படித்த பின், இவரது புழங்குமொழியே இதுவெனப் படுகிறது. இச்சைகளின் மொழியிலும், பெண்ணுடல் குறித்த வெளிப்படைத் தன்மையிலும், தாழ்த்தப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கைப் பாடுகளைப் பொதிந்து தருகிறார். தன் மனவுலகை சுகிர்தராணி இப்படித்தான் வெளிப்படுத்துகிறார். கவிஞரின் சமூக – அரசியல் செயல்பாடு எல்லாமே முத்தமென்றும், புணர்வென்றும் உடலிச்சையின் சங்கேத மொழிகளாக வெளிப்படுகின்றன.

கவிப்பொருளுக்காக இவர் மெனக்கிடுவதே இல்லை. ‘ஆட்டுக்குட்டியின் மயிர்’ (இப்படிக்கு ஏவாள்) என்ற கவிதை ஆட்டுக்குட்டியின் மயிரிலிருந்து தொடங்கி அதிலேயே நிறைவுபெறுகிறது. ஆட்டுக்குட்டியின் மயிரை முன்வைத்து சுகிர்தராணி தன் பாடுகளை விவரிக்கிறார். ‘முதுகின் மேலொரு சேரி’ என்ற கவிதையில் ‘மரத்தின் தசையைப் பரப்பிச் செய்த மேசையில்’ என்று புதுப்படிமம் வந்து விழுகிறது.

சுகிர்தராணி தன்னைத் தவிர்க்கவியலாத கவிஞராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டுமென்பதில்லை. அவரது கவிதைகளே இதை மெய்ப்பிக்கின்றன.

 

வெய்யில்

சூரியனின் இன்னொரு பெயர் ‘வெய்யோன்’. சென்ற நூற்றாண்டுக்காரர்கள் ‘வெயில்’ என்றுதான் எழுதினார்கள். நானும் அப்படித்தான் எழுதினேன். ஆனால், இந்தத் தலைமுறை ‘வெய்யில்’ என்றே எழுதுகிறது. இது இலக்கணப் பிழையாகாது. கவிஞர் வெய்யில் கவிதையாக்கும் கணங்கள் பெரும்பாலும் அகவுலகு சார்ந்தது. என்றாலும், அதில் புறவுலக மெய்மைகளும் கண்ணிகளாகக் கட்டப்பட்டுள்ளன. கிராமிய உலகமும், அப்பா – அம்மா – அக்கா முதலான குடும்ப உறவுகளும் பெரிதும் கவிதைகளாகின்றன. குற்றத்தின் நறுமணம், கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ஃப்ராய்ட், மகிழ்ச்சியான பன்றிக்குட்டி, அக்காளின் எலும்புகள் ஆகிய தொகுப்புகளிலுள்ள கவிதைகளே போதும்; இவரொரு நவீன கவி என்பதைச் சொல்ல.

நிலம், மாடுகள் சார்ந்த கடந்தகால கிராமிய வாழ்வை இழந்த சோகம் இவரது கவிதைகளெங்கும் சிந்திக் கிடக்கின்றன. யதார்த்தத்தை சதாவும் புனைவினால் நெய்துகொண்டே இருக்கின்றன.

‘…. அழுது தீர்த்த இப்பாழிரவில்

சர்பத்தின் பாதியுடல்

சிக்கிக் கொண்டிருக்கிறது

அம்மாவின் வயிற்றுக்குள்

விரல்களின் ரத்தப் பிசுபிசுப்பை நக்கும்

தாய்ப்பூனையின் வைரக் கண்களுதவும்

இனியான ராப்பயணங்களில்’

(வேட்டை)

யதார்த்தத்தின் புள்ளியும், புனைவின் புள்ளியும் அழிகின்றன.

‘… கண்களை வாசித்துவிடும் நள்ளிரவு நாய்கள்

வெறிகொண்டு துரத்துகிறது இரவு தீர…’

(தீரா இரவு)

உணர்வுகளையும், காட்சிகளையும் வெய்யிலும் பல இக்காலக் கவிஞர்களைப் போல மோதவிடுகிறார். இது தற்காலக் கவிதைகளின் உள்ளுறை.

‘தவறி பெருந்திணைக்குள் நுழைகிறது

ஒரு டூவிலர்

அதன் பின்னிருக்கையில் என் ரோசாப்பூ

எனது ஆட்டைக் கொன்று, குடலைப் பிடுங்கி

சூரியனில் பதம் செய்கிறேன்…’

(எங்கோ ஏங்கும் கீதம்)

அறம் தவறிய உலகம் கவிஞரைப் பெரிதும் பாதிக்கிறது. ‘ஆறுகள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகின்றன’ என்ற நிகழ்கால அவலத்தை ‘அறத்தடி நீர்’ என்ற கவிதையில் கூறுகிறார்.

‘நீர் விலையேறிவிட்டது

ஏன் எதற்கென்றெல்லாம் கேட்கக்கூடாது

ஆத்திரத்தில் ஒருவன் நாக்கைப் பிடுங்கி

மேகத்தை நோக்கி வீசுகிறான்

மொத்த ஊரையும் நின்றபடி புதைத்துக் கொண்டிருக்கிறோம்

ஒரு நீள மண்புழுவாக பூமியினாழத்தில்

நீர் தேடிப் போகிறோம்…’

‘நான் மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ கவிதை வாசகனின் கவிதை குறித்த அவதானிப்புகளை நொறுக்குகிறது. இக்கவிதையில் குரூரம் இருக்கிறது; ஆனால் அது உலகிலுள்ள குரூரமே. விருந்தினர்களுக்காக வெட்டப்படும் பன்றி, தானாகவே வந்து வெட்டு மேசையில் வந்து படுத்து, வெட்டச் சொல்கிறது. ஆனால் அதன் எதிர்ப்புணர்வு அடுத்தத் தலைமுறைப் பன்றியிடம் வெளிப்படுகிறது.

‘அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது

‘கேரட் என்று நினைத்தேன்’ என்றபடி தலைகுனிந்து நின்றது

நானதன் விழிகளில்

எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்’

என்று கவிதை நிறைவுறுகிறது.

‘அக்காளின் எலும்புகள்’ தொகுப்பு முற்றிலும் புதிய விஷயங்களையும், கவிமொழியையும் கொண்டிருக்கிறது. ‘ன்’ என்ற கவிதை ‘வெய்யில்’ படித்த தமிழ்க் கல்வியை நினைவுபடுத்துகிறது. எனக்குப் பிடித்த பல கவிதைகளில் இதுவும் ஒன்று. வெய்யில் தனது நூதனமான நடையினால் ஒரு தனித்த பாணியைத் தோற்றுவிப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை அவரது கவிதைகள் உறுதிப்படுத்துகின்றன. பல நவீன, அதி நவீன கவிஞர்களைப் போல எடுத்ததெற்கெல்லாம் ‘யோனி, யோனி’ என்று எழுதாத வெய்யிலை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.