எலுமிச்சங்கனியின் சுயசரிதையிலிருந்து சில குறிப்புகள்.

1.

துர வடிவப் பானையாய் மெல்ல அசைந்துகொண்டிருந்தது வீடு.

கையறு பாடல்களின் புளிப்பு

ஊறிப் பெருகி

பழங்கஞ்சியாயிருந்தது.

சோற்றுப் பருக்கைகளைப்போல

குழந்தைகள் நீந்திக் களித்தனர்.

 

வெளுத்தத் துணிகளின்மேல்

எச்சமிடும் காகங்கள்

மீன் செவுள்களையும்

கோழிக் குடலையும்

பானையின் தூரில் மறைத்துச் சென்றன.

 

மரத்தடி தெய்வங்கள்

கனிந்தனுப்பிய

எலுமிச்சம் பழங்களால்

பனங்கிழங்கு அலகுடைய செங்கால்

நாரைகள்

ஆடும் வீட்டினை

அடை கொடுத்து நிறுத்திய போழ்து

முற்றத்து வெளியில்

ஊறுகாயாய் நறுமணமெழ

பிறைநிலா தோன்றியது.

 

கன்னத்தில் உலர்ந்துறைந்த

ஊறுகாய் சாறோடு

விடிலியிலிருந்து வெளிச்சாடிய

சிறார்களின்

செருப்பற்ற பாதங்கள்

அழுந்திக் கடந்ததில்

கன்னங்குழி விழ

நகைத்தது நிலம்.

 

2.

ஊருக்கு வெளியே பனைமரத்தைத்

துரத்திய பின்பு

எங்கோ பனங்காட்டில்

மனித முகத்தோடு

காய்கள் காய்ப்பதைக்

காணச்சென்றவர்கள்

தரை துளைத்து பீறிட்டெழும் சுட்டுவிரலாய்

பனங்கன்றுகள் பார்த்தனர்.

 

பிளவடிகளின் உடலிலேற்றி

ஊருக்குள் சூடிவிட்ட ஒட்டத்தியில் காட்டின் மணம்.

 

அந்தி வெளிச்சம் பரவும்

போதமற்ற விழிச்சடவு

தனது வசிய இழைப் பின்னலில்

அனாதைத் தனங்களின்

மென் கால்களைப் பற்றிப் பிடிக்க

கேவல்களாய் உறையும்

காவோலை சலசலப்பில்

பெருவெளி கலய வடிவெடுத்தது.

 

கரும்பனைக் கூட்டத்தின்

முரடேறிய பொருக்கினில்

தேய்த்துச் சொறிந்தவனின்

முதுகுத் தொலியுரிந்த சிவப்பினில்

தண்டனைக் கருவிகளும்

போர்க் கருவிகளும்

தோன்றி மறைந்தன.

 

பிறகு

பனைஉயரம்

அகலத்து கமுகின் உயரத்தை

அண்ணார்ந்து பார்க்கப் பழகியது.

 

நறுக்கிய கமுகம் பாளையில்

மடித்த ஊறுகாய் விரித்து

நாவோரங்களில் இழுத்து

உமிழ்நீர் உறிஞ்சி

உதடு குவித்தபோது

புளிப்புச் சுவையில்

குவிந்திருந்த உலகம்

மீண்டும் உடைந்தது.

 

3.

தலைவாழைத் தளிரிலைபோல

பரந்து மினுங்குகிறது பெருநகரம்

ஓநாய் வயிற்றோடு

விருந்துண்பவர்களின்

கூசுகின்ற பற்களுக்கு

இலையின்

இடதுபுறத் தொலைவிலிருக்கும்

ஊறுகாயின் மீது

விமர்சனம் ஏதுமில்லை

விரல் வைப்பதுமில்லை.

 

4.

தீவினையைக் கூடுமாற்றி நாற்சந்தியில்

விட்டுச் செல்பவரின் முகங்களில்

நீர்க்கடுப்பின் ரேகைகள் மாறித் தெளிவுறுகிறது.

அம்மஞ்சள் பிசாசைத் தூற்றி கால்மாற்றி

நடப்பவர்கள்

ஆளுக்கொரு எலுமிச்சையை

வீடு சேர்க்கிறார்கள்.

 

5.

அம்மன்

நான்குபேர்

எலுமிச்சைகளிரண்டை பூடகவெளியில்

முடிவின்றி உருட்டி விளையாடுகின்றனர்.

பூமியின் எல்லா திசைகளிலும் இழுபட்டு நைகிறது ஆண்குறி.

 

6.

வழுக்கி வழுக்கிப் பற்றிப் பிடித்து

அறையிலிருந்த கனியில் ஏறிநின்று

முன்கால்கள் தூக்கி நிமிர்கிறது

சிற்றெறும்பு.

உலகம் ஒரு

எலுமிச்சையளவில்

சுருங்கிவிட்டது.

மறைந்திருக்கும் எலியின்

முகத்திலிருக்கும்

கடவுளின் கண்கள்

பளிச்சென்று ஒரு முறை பூமியை

படமெடுத்தது.

 

7.

சைனாக் களிமண் சீசாவிலிருந்து பூஞ்சை படர்ந்த ஊறுகாயை

தெருவோரத்தில் கொட்டிக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி

பிளாஸ்டிக் எலுமிச்சையை

நசுக்கியபடி

வாகனத்தைப் புறப்படுத்துகிறான் ஒருவன்.

 

8.

மூலைகள் நேர்த்தியாய் பின்னியிருக்கக்

கவிழ்ந்திருக்கும்

நெருப்புக் கடவத்தில்

நரங்கும் வேனலை

எலுமிச்சையெறிந்து விலக்குபவன்

உப்பளத்தில் நெளிந்து வரும்

போஞ்சியாற்றில் நீச்சலறிந்தவன்.

 

9.

நெஞ்சைப் பிழிந்து

தோலாய் புறமெறியும்

வணிக வெளி நோக்கி சூழ்பவரின்

மறு திசையில்

தோலை உட்குழித்து

தீபமேற்றும் அதிகாலை நேர்ச்சைகள்.

 

10.

ஊறுகாயின் ஒரு கீற்றை

தோணியாக்கி

கள்ளின் பட்டைகளையும்

கலயமும் கடந்து

பிராந்திக் குப்பியை

சென்று சேர்ந்த ஒரு எலுமிச்சங்கனியை

இடமிருந்துவலம் மூன்று முறை

தலையைச்சுற்றி

இருட்டில் எறிந்து

திரும்பிப் பாராமல் வீடடைகிறான்

மஞ்சளொளிரும்

உபகிரகமொன்று

வீட்டைச் சுற்றத் துவங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.