கார்ல் ஜூங்கும் லிபிடோ ஆய்வும்


ளவியல் வரலாறுகள் எல்லாம் கிறிஸ்து பிறப்பிற்கு முன்பு வரை கிரேக்க மற்றும் இலத்தீனிய தத்துவ ஞானிகளின் யூகங்களின்  அடிப்படையில் தான் சொல்லப்பட்டது. மனித மூளையைப் பற்றி முதன் முதலில் ஆராய்ச்சி செய்தவர் அரிஸ்டாட்டில். கி.மு.350ல் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கிரேக்க தத்துவங்களின் அடிப்படையில் ஆன்மா உருவமற்ற ஒன்று என்றும், கிரேக்கர்கள் இறந்தாலும் அவர்களது ஆன்மாவின் ஆசீர்வாதத்துடன், உயிருடன் இருப்பதாக நம்பினார்கள். இந்த அடிப்படையை வைத்து  அரிஸ்டாட்டில் ஆன்மாவின் இயல்புகள் (டி அனிமா), (Latin, Dr anima) என்ற தலைப்பில் உயிர் மற்றும் ஆன்மா பற்றி உளவியலில் முதல் நூலை தனிப் புத்தகமாக எழுதினார். இந்த புத்தகத்தை அவர் தொடங்கும் விதம் தான் அனைவரையும் ஈர்த்தது. ” உலகில் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளிலேயே மிகவும் கடினமானது உயிர்/ஆன்மா என்றால் என்ன? என்ற கேள்வி தான். இந்த கேள்வியின் தாக்கம் தான் இன்று வரை மனித ஆன்மாவை பல வரலாற்று ஆசிரியர்கள், உளவியல் நிபுணர்கள் எல்லாரும் மனித மனதின் மூலம் ஆராய ஆரம்பிக்கின்றனர். கி.பி. 18 மற்றும் கி.பி 19 ஆம் நூற்றாண்டுகளில் மனித மனதைப் பற்றிய ஆய்வுகள் மிக வேகமாக நடைபெற்றது. உளவியல் வார்த்தையை விட  சைக்காலஜி என்ற வார்த்தை தான் மனிதனின் ஆன்மா மற்றும் ஆவியின் இயல்பு அதன் செயல்பாடுகளை விளக்கும் உண்மையான சொல்லாக அறிவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1749ல் சைக்காலஜி (Psychology) என்ற வார்த்தையை டேவிட் ஹார்ட்லி (David Hartley) என்பவர், அவர் எழுதிய Observations of Man என்ற ஆங்கில நூலில் முதன் முதலில் பயன்படுத்தினார். இவ்வாறாக சைக்காலஜி பல விதத்தில் தன்னை உருமாற்றி ஒவ்வொரு உளவியல் நிபுணர்கள் கையில் கிடைத்த தகவல்கள் வைத்து நம்மை வந்தடைந்தது. அப்படி பல விதங்களில் மாறினாலும் ஆன்மாவின் அடிப்படையையும், அறிவியலின் கோட்பாட்டையும்  சேர்த்துத் தனி மனித வாழ்க்கையை மாற்றி அமைக்க முடியும் என்பதை முழு நம்பிக்கையுடன் கார்ல் ஜுங் மருத்துவத் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது தியரி அப்படி என்ன தான் நம் மனதை ஆராய்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கார்ல் ஜங்: 

1875-1961 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கார்ல் ஜங் சுவிட்சர்லாந்து நாட்டினை சேர்ந்த மனநல மருத்துவராவார். பகுப்பாய்வு கோட்பாட்டினை (Analytical Theory) இவர் தான் கொண்டு வந்தார். இவரது கருத்துக்கள் உளவியல் துறையில் மட்டுமின்றி தத்துவம், மானிடவியல், தொல்லியல், இலக்கியம் மற்றும் சமயம் ஆகியவற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்கங்கள் அனைத்தும் அவரது குடும்பம் மற்றும் குழந்தைப்பருவ சம்பவங்கள் தான் காரணம் எனக் கூறுகிறார். ஜங் அவரது குடும்பத்தில் இரண்டாவது குழந்தை. ஜங் வீட்டைப் பொறுத்தவரை உயிர் உடலை விட்டுப் போனாலும் ஆன்மா அந்த குடும்பத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றும் என்றும், அதன் மூலம் பல அதிசயங்கள் நடந்துவிடும் எனவும் நம்பினார்கள். அதனால் அவர்கள் வீட்டில் சாப்பிடும்போது அவர்கள் வீட்டில் இறந்த பாட்டி நினைவாக டைனிங் டேபிளில் ஒரு சேர் போட்டு அவர்களுக்கு என்று உணவு எடுத்து வைத்த பின் தான் சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு அவரின் குடும்பம் ஆன்மீகம் மற்றும் மரணத்தையும் வழிபட்டார்கள். அதனால் தான் அவர் இயற்கையோடும், ஆன்மாவோடும் தன்னை இணைத்து அதன் மூலம் உளவியலில் பல வார்த்தைகள் மற்றும் கருத்துக்களை உருவாக்கினார். அட்லாண்டிக்பத்திரிக்கையில் ஆசிரியராக இருந்த பார்பரா வால்ஃராப்  சொல் அரங்கம் என ஒரு கட்டுரை எழுதினார். அதாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டிய சொற்கள் (வேர்டு ஃப்யூஜிடிவ்ஸ்) சொல்லி  மக்களிடையே விவாதம் செய்து பல சொற்கள் உபயோகத்தில் கொண்டு வந்தார். அவர் சொன்னது உளவியலில் (Collective, Unconscious, archetype, extrovert, introvert, persona, anima, Symbol, Theme, Setting, Character) இது போல் பல புதிய வார்த்தைகளை மக்களிடம் கொண்டு வந்தவர் கார்ல் ஜுங் என்று கூறினார்.

கார்ல் ஜுங் தியரி :

உயிரினங்களின் மிக அடிப்படையான பண்புகள் மரபணுக்களில் ஏற்கனவே குறிக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் சில, சமூக வாழ்க்கையின் மூலம் உயிரினங்களுக்கு கற்றுத் தரப்படுகின்றன என்பது தெரியும். யாரும் எதுவும் சொல்லாமல் மரபியல் ரீதியாககூட்டு நனவிலியில்’ (Collective Unconscious) இருக்கும்தொல் படிமங்கள்’ (Archetypes) எண்ணங்கள், செயல்கள் மூலம் கடத்தப்படுகின்றன எனவும், இது போல நம் அறிவும், அறிவார்ந்த செயல்களும்  (Collective Intelligence) கூட்டாக பல தலைமுறைகளிடம் இருந்து நமக்குக்  கடத்தப்பட்டு வருகிறது என ஜுங் கூறுகிறார்

நனவு மனம், நனவிலி மனம் (Collective Unconscious):

கல்லின் ஆறு ஆயினும் 

பூமியின் தளம் ஆனமண்ணில்தான் பாயும், 

தளம் மண்ணே ஆனாலும் 

சிலரை மட்டும் 

பூமித்தாய் அதில் வைரவரிகளாய் பதிவாக்கும்.

கவிப்பேராசான் கார்ல் ஜுங் பற்றிச் சொல்கிறார். இந்த வரிகள் மூலம் தான் எந்த ஆன்மா உலகை வெல்லும், இல்லை எந்த ஆன்மா மண்ணோடு போகும் என்பதையும் சொல்கிறார்.

நனவு மனம், நனவிலி மனம் இதில் எது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது என்பதைத் தான் கார்ல் ஜுங் கூறுகிறார். கருப்பையில் கரு சூழ்ந்த உடனே அது ஒரு உயிருள்ள பொருளாக மாறி அது தனக்கான நடவடிக்கைகளைச் செய்ய ஆரம்பிக்கிறது. கரு செயல்படும் விதமே நம்முடைய நனவிலி மனம் மூலம் தான் ஆரம்பமாகிறது. தாய் சாப்பிடும் பொருட்களால் கை, கால், கண் என நம் உடல் உறுப்புகள் எல்லாம் வளர்கிறது. அதன் பின் தான் தண்ணீர்க் குடத்தில் உட்கார்ந்துகொண்டு கை, காலை அசைத்து, உதைத்து  விளையாடுகிறது. அப்படி விளையாட, சிந்திக்கும் திறன் அனைத்தையும் நனவிலி மனம் தான் செய்கிறது. கருவிலிருந்தே நம் நனவிலி மனம் செயல்பட ஆரம்பித்து விடுகிறது. இப்படியாக உருவாகும் கருவை வைத்துத் தான் நமக்கு என்ன மாதிரி குழந்தை வேண்டும் என்பதையும், என்ன மாதிரி வளர வேண்டும் என்பதையும், நனவு மனம் மூலம் அந்தக் கருவை என்ன மாதிரி மாற்ற முடியும் என்பதையும் சொல்கிறார்.

அனிமா & அனிமேஸ்: 

நம்மால் நேரடியாக விவரிக்க முடியாததைத்தான் தொன்மங்கள் மூலம் விளக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிறார் கார்ல் ஜுங். எல்லைகள் கடந்து, தேசம் கடந்து, மொழி, கலாச்சாரம் கடந்து நம்மை வந்தடைந்துள்ள இந்தத் தொன்மக்கதைகளில் பெரும்பாலானவை ஒன்றுபோல இருப்பதற்குக் காரணம் ஆதி மனிதர்கள் கண்டடைந்த உண்மைகள் ஒன்றே என்பது தான். ஆண் ஆத்மாவில் ஒரு பெண்ணின் உருவமும், மற்றும் ஆணுறுப்பில் பெண் ஆன்மாவின் ஆண் உருவமும் உள்ளதாகக் கூறுகிறார். பாலின பாத்திரங்கள், பாலின அடையாளங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் நாம் நம்பும் விஷயத்தை விட ஆத்மாவும், ஆன்மீகமும் உண்மையான சுயத்தை தொல்படிமங்கள் மூலம் செயல்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகின்றது. இதை வைத்துத் தான் ஆண்மையில் பெண்மை வேண்டும் என்றும், பெண்மையில் ஆண்மை வேண்டும் என்றும் கூறுகின்றனர். ஜெயகாந்தன் அவர்கள் எழுதி, பீம்சிங் டைரகட் பண்ண ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படத்தில் ஹீரோ, ஹீரோயின் காதலை அனிமா &அனிமேஸ் முறையில் தான் சொல்லி இருப்பார். ஹீரோயின் வெளி உலகத்துடன் தொடர்பில் இருப்பேன் என்பதும், ஹீரோவை சரியான முறையில் கவனித்து சமையல் செய்து கொடுப்பதாக இருந்தாலும், அவளது ஆத்ம திருப்திக்காக செய்யும் செயலுக்காக சண்டை போடுவதையும், காதலை ரொமான்ட்டிஸைஸ் பண்ணாமல் மிக இயல்பாக, யதார்த்தமாகப் பெண்மையில் ஆண்மை கலந்து குடும்பம் நடத்துவாள். ஹீரோவின் குணமோ ஒரு எழுத்தாளராகக் கம்பீரமாக ஆண்மையின் அதிகாரத்தில் இருந்துகொண்டு, பெண்மையின் இயல்பை காதலில் வெளிப்படுத்தி விடுவார். மனைவியைப் பார்த்து என்னைக் காதலிக்கிறாயா என அடிக்கடி கேட்டுகொள்வதும், எனக்காகத் தியாகம் செய், உயிரை விடுவது என பேச்சுக்காக என்றாலும் செண்டிமெண்ட் கலந்து பேசு எனக் கெஞ்சுவதும், பிடிவாதம் பிடிப்பதும் அழகாகச் செய்து இருப்பார். இருவரும்  விலகி விடலாம் என யோசிக்கும் போது அட்வகேட் சொல்லுவார் நீங்கள் பிரியமாட்டீங்க, நீங்க இருவரும் மிக அழகான ஆத்மார்த்தமான உறவோடு இருக்கீங்க எனச் சொல்லுவார். இது தான் உண்மையான திருமண உறவு என எழுத்தாளர் ஜெயகாந்தன் சொல்லி இருப்பார். ஒரு பெண்ணிடம் வெறும் பெண்மை குணம் மட்டும் இருந்தாலும், ஆணிடம் வெறும் ஆண்மை குணம் மட்டும் இருந்தாலும் மனிதர்களுக்கு எளிதாகச் சலித்து விடும். அந்த அம்சத்தைத் தான் அனிமா, அனிமேஸ் எனப் பிரித்து கார்ல் ஜுங்ம் சொல்கிறார். இதிலிருந்து ஒவ்வொரு மனிதர்களையும் பெர்ஸனாலிட்டியாக ஜுங் பிரிக்கிறார்.

பெர்ஸனாலிட்டிவகைகள்: 

ஜுங் தன் வாழ்க்கையின் அனுபவத்தை வைத்துத் தான் இந்த வகையினை சொல்கிறார். ஜுங் தான் இரண்டு வகையான பெர்ஸனாலிட்டியாகப் பிரிவதை உன்னிப்பாகக் கவனித்தார். அந்த செயலை அகம், புறம் எனப் பிரித்து அதன் மூலம் தன் செய்கைகளை, நடவடிக்கைகளைப் பார்த்தார். அதை தான் அவர் இண்ட்ரோவேர்ட் (Introvert)எக்ஸ்ட்ரோவேர்ட் (Extrovert)  எனப் பிரித்தார். இந்த கருத்துக்கள் எல்லாம் அவர் அனுபவித்தவையாக இருந்தது.

எக்ஸ்ட்ரோவேர்ட் (Extrovert) : 

உலகில் 70% சதவீதம் மக்கள் எக்ஸ்ட்ரோவேர்ட் களாக தான் இருக்கின்றனர் என புள்ளி விவரம் கூறுகிறது. இவர்களது உலகம் ஒரு சொர்க்கம் மாதிரியானது. அனைத்திற்கும் ஆசைப்படு என்பதாகும். அனைவரையும் மிக ஆழமாக நேசிப்பார்கள், மற்றவர்களின் நலன்களில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். தலைமை பதவி வேண்டும் என பம்பரமாய் சுற்றக்கூடியவர்கள். மிகச்சிறந்த தகவல்களைத் (Factual) தருவார்கள். அதற்காக இரவு, பகல் என பாராமல்  உழைப்பவர்கள். காதல் மன்னன் போல் இருப்பார்கள். பல நண்பர்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்வார்கள். எந்த அளவிற்குச் சம்பாதிக்கிறார்களோ அதே அளவிற்கு அதைச் செலவும் செய்வார்கள். விருதுகள், புகழ், பாராட்டு இது எல்லாம் இவர்களின் ஆகச் சிறந்த போதையாக இருக்கும். அதனால் உறவுகளை  இழக்க மாட்டார்கள். மிகவும் செண்டிமெண்ட்டாக (Emotional) இருப்பார்கள். ஒரே ரூட்டில் போகாமல் வித விதமாக யோசித்து, அந்த பாதையில் செல்பவர்கள். உதாரணமாக நாம் பிரமிக்கும் சிலர் பில் கிளிண்டன், மார்கரெட் தாட்சர், ஸ்டீவ் ஜாப்ஸ், முகம்மது அலி இவர்கள் எல்லோரும் எக்ஸ்ட்ரோவேர்ட் வகையினர் தான்.

இண்ட்ரோவேர்ட் (Introvert) :

இவர்கள் எல்லாரும் தனிமை விரும்பிகள். தனிமை மூலமாக தங்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் மிகச்சிறந்த கலைஞர்களாக, மிகச்சிறந்த படைப்பாளிகளாக, இசை ஞானிகளாக இருப்பார்கள். மிகச்சிறந்த நேர்மறையான எண்ணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் பேசும் போது அத்தனை வலிகளும் மறந்து போகும். அடுத்தவர்களின் கருத்துக்களை இவர்களிடம் திணிக்க முடியாது. புதிய விஷயங்கள், புதிய பிசினஸ் தாரக மந்திரங்கள் எல்லாம் இவர்கள் மூலம் வந்தது தான். உதாரணமாக மகாத்மா காந்தியின் தாரக மந்திரம் ‘அகிம்சை’, அதே போல் சுந்தர் பிச்சை அவர்களின் தாரக மந்திரம் ‘கம்பார்ட் ஜோனை உடைத்து வெளியே வா’ என்பது போன்ற புதிய வார்த்தைகள் மூலம் மக்களுக்கு நம்பிக்கையினைத் தரக்கூடியவர்கள். இவர்கள் வார்த்தைகள் எல்லாம் வேத வாக்காக மாறி வரலாற்றில் இடம் பெறும். இவர்கள் அனைவரும் கர்வம் மிக்க, சுறுசுறுப்பான மனிதர்களைத் தான் இவர்கள் கூட வைத்து இருப்பார்கள். இவர்களைக் கையாளுவது மிகவும் கடினம்.  இவர்களைத் தான் இண்ட்ரோவேர்ட் வகையினர் எனக் கூறுகிறார்.

இப்படி மனிதர்கள் தாங்கள் என்ன மாதிரி பெர்சனாலிட்டி என்பதையும், அதை சமூகத்தில் என்ன மாதிரி பிரதிபலிக்கிறார்கள் என்பதையும் கார்ல் ஜுங் பிரித்துச் சொல்லிவிடுகிறார்என்ன மாதிரி பெர்சனாலிட்டி எனத் தெரிந்தாலும் அதன் மூலம் என்ன மாதிரி உளவியல் தாக்கத்தை, நாம் சமூகத்தில் வெளிப்படுத்துகிறோம் என்பதையும் பிரித்துக் காண்பிக்கிறார்.

ஜுங்கின் உளவியல் வகைகள்: 

ஒவ்வொரு நபரையும் உளவியல் வகைகளில் ஏதோ ஒன்றை அடிப்படையாக வைத்துத் தான் விவரித்துச் சொல்ல முடியும். உலகில் உள்ள அனைவரும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்கள், பேச்சு மற்றும் நடத்தை ஆகியவற்றில் ஒற்றுமையாக இருப்பார்கள். ஆனால் இதைக் கடந்து ஒவ்வொரு நபரும் அறிவுசார் மற்றும் கலாச்சாரம், சொந்த வாழ்க்கை அனுபவம், அவரது சொந்த எண்ணங்கள், உணர்வுகள், சுவைகள் மூலம் தான் மாறுபட்டு இருப்பார்கள். இதை வைத்துத் தான் கார்ல் ஜுங் நான்கு வகையாக உளவியலில் மனிதர்களைப்  பிரித்துச் சொல்கிறார்.

சிந்தனை(Thinking) :

இவர்களது பார்வை சமூகப் பார்வையுடன், கற்பனை கலந்து இருக்கும். யார் எல்லாம் தன்னுடைய சிறுவயதில் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அவதிப்படுகிறார்களோ, பெற்றோரால் மட்டம் தட்டப்பட்டு நடத்தப்படுகிறார்களோ அவர்கள் எல்லாம் தன்னுடைய சொந்த சிந்தனையைக் கற்பனை கலந்து வெளிப்படுத்துவார்கள். மிகச்சிறந்த பழி (Revenge) வாங்குபவர்களாக இருப்பார்கள். அதற்கு அதிகாரத்தைக் கையில் எடுப்பார்கள். அதாவது தன்னுடைய சொந்த முயற்சி மூலம் மிகப்பெரிய இடத்தை அடைந்து அவர்களுடைய கொள்கைகள், கட்டுப்பாடுகள், நம்பிக்கைகளைக் கூட இருக்கும் மக்களிடம் திணிப்பார்கள். இவர்களுடைய கருத்துகளுக்கு முழு உலகமும் கீழ்ப்படிய வேண்டும் என நம்புவார்கள். உதாரணமாக ஹிட்லர் மற்றும் நெப்போலியன் போன்றோர் அவர்களுக்குப் பிடித்த சமூகத்தைத் தான் உருவாக்குவார்கள். அவர்களின் பார்வை வழியாக தான் மக்கள் சமூகத்தைப் பார்க்க வேண்டும் எனக் கட்டாயப் படுத்துவார்கள். 70 கோடி மக்களின் பார்வையாக முதல் உலகப்போரில் ஹிட்லர் இருந்தார். நான் சரியாக இருக்கிறேன், நீங்கள் தான் தவறாக இருக்கிறீர்கள் எனக் கூறுவார்கள். இவர்கள் சொல்லும் கருத்துக்கு எதிர்க் கருத்து வைக்கும் போது அனைத்தும் தவறானவை என வாதிட்டு, அதிகாரத்தின் மூலம் வெல்லவும் செய்வார்கள்.

உணர்வு (Sensation) : 

இவர்களைப் பொறுத்தவரை ஐம்புலன்களை நம்புபவர்கள். அவர்களால் எதை உணர முடிகிறதோ அதை மட்டும் தான் ஏற்றுக் கொள்வார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக ஓவியர்களை எடுத்து கொள்ளலாம். நெதர்லாந்தில் வாழ்ந்த மிகச்சிறந்த ஓவியர் வின்சென்ட் வான்கோ அவர்கள் இந்த வகையான உணர்வினை கொண்டு செயல்பட்டவர். இவர்கள் மிகவும் நேர்மையாக இருப்பார்கள். தன் எண்ணங்களை ஒரு ஓவியத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும் என நம்புவார்கள். அந்த கலையின் மூலம் அவர்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுக்க முடியும் என முழுமையாகச் செயல்படுவார்கள். அதனால் நேசிப்பவர்களுக்காக எந்த எல்லைக்கும் போகக் கூடியவர்கள். அதனால் தான் இவரை நேசித்த பெண் அவரது காது மிக அழகாக இருக்கிறது என சொல்லும் போது காதை அறுத்துக் கொடுத்து விட்டு வந்தார்.  வெளி உலகைப் பற்றி யோசிக்க மாட்டார்கள். அதனால் மிகுந்த அலட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்வார்கள்.

உணர்வு (Feeling):

தன்னுடைய சிந்தனை (Cognitive Process) மூலம் செயல்பட்டு உயர்ந்த இடத்தை அடைபவர்களாக இருப்பார்கள். தன்னை மிகச்சிறந்த வெற்றியாளர்களாகப் பார்ப்பார்கள். அந்த அளவிற்கு வெற்றியும் அடைவார்கள். நிறைய விஷயங்களை எளிதாகக் கற்றுக்கொள்வார்கள். ஜாதி, மதம், கொள்கை சார்ந்த விஷயங்களை எளிதாக இவர்களால் மக்களிடம் கொண்டு செல்ல முடியும். தான் சொல்லும் விஷயத்தின் மீது ஒரு பற்றை உருவாக்க வைக்க முடியும். இவர்களிடம் பெருமாளை நேசிக்கும் ஒருத்தரைக் கொண்டுபோய் நிறுத்தி ஜீசஸை வழிபட வைக்க முடியுமா எனக் கேட்டால், மிக அழகாக பெருமாளை நேசிக்கும் சிந்தனையை (Cognitive Process) மாற்றி ஜீசஸை நம்ப வைத்து விடுவார்கள். எளிதாக கட்சி விட்டு கட்சி மாறியும் விடுவார்கள். எதிர்மறையான கருத்துக்கள் மூலம் எளிதாகத் தன்னை வெளிப்படுத்துவார்கள். குறைகளை மட்டும் எளிதாக சொல்லக் கூடியவர்கள். தன்னை மட்டுமே மையமாக வைத்துப் பேசுவார்கள். இவர்களிடம் நாம் எளிதாக பாராட்டு வாங்க முடியாது. ஆனால் மிக எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். அதனால் என்ன மாதிரியான உணர்ச்சியினை என்ன நேரத்தில் வெளிப்படுத்துவார்கள் என நாம் கணிக்க முடியாது. எந்த அளவிற்கு சமூகத்துடன் ஒன்றி பிணைந்து இருப்பார்களோ அதே அளவிற்கு சமூகத்தை விட்டு விலகியும் இருப்பார்கள்.

உள்ளுணர்வு (Intution): 

இவர்களைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தை, இயற்கையை நம்புவார்கள். ஏதோ ஒன்றின் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்து அதை நோக்கி கவனம் செலுத்துவார்கள். இவர்களது கனவுகளுக்கு உருவம் கொடுத்து அதை எதிர்காலத்தில் செயல்படுத்தப் பார்ப்பார்கள். அதனால் இவர்கள் செய்யும் வேலை எல்லாம் மிகவும் வினோதமாக இருக்கும். அந்த வினோதமான கருத்துக்களைச் சொல்ல சிறந்த கலைஞர்களாக, எழுத்தாளர்களாக இருப்பார்கள். இவர்களைக் கையாளுவது மிகவும் சிரமமாக இருக்கும். இவர்கள் ஒரு விஷயத்தின் மீது மனதை ஒருங்கே குவித்து வேலை செய்வதால் இவர்களுடைய எண்ணங்களும், கருத்துக்களும் மிகத் தெளிவாக இருக்கும். அதனால் மிக நேர்மையாக இருப்பார்கள். தன் ஆன்மா மீது கொண்ட அபார நம்பிக்கை தான் இவர்கள் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணமாகப் பார்ப்பார்கள். தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களில், சமூகம் சொல்லும் கருத்துக்களில் பெரிதாக ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தன்னைத்தானே கையாளுவதில் சிறந்த கில்லாடிகள். அதனால்  இவர்கள் மிகவும் அமைதியாகவும், கருணை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். அதனால் தங்களுடைய உணர்ச்சிகளை மிக எளிதாக மறைத்து விடுவார்கள்.

இவ்வாறாக மனிதர்களை உளவியல் ரீதியாகப் பிரித்து, இந்த ஆராய்ச்சியின் முடிவில் கார்ல் ஜுங் தனக்கென ஒரு சூத்திரத்தை உருவாக்கி உளவியல் உலகில் இணைத்து விட்டார். இந்த ஆராய்ச்சி மிகப்பெரிய தாக்கத்தை மருத்துவ உளவியல் உலகில் ஏற்படுத்தியது. இந்த தியரி வைத்து தான் கடந்த  100 ஆண்டுகளாக உளவியல் உலகில் ஆதரிக்கப்பட்டு வருகிறது.


  • காயத்ரி

(மனநல ஆலோசகர்)

2 COMMENTS

  1. சிக்மண்ட் பராய்ட் போன்று சம கால உளவியாளர் கார்ல் ஜுங் .. இவர் குறித்து நல்ல தொகுப்பை உள்ளடக்கியுள்ளது தங்கள் கட்டுரை… நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.