செந்துவர் வாய்

அந்த நகரம் வாய்களால் நிறைந்திருந்தது. தடித்த உதடுகளுடைய வாய்கள், தலை குனிந்தபடி மேய்ந்து கொண்டிருக்கும் பசுமாட்டிலிருந்து அறுத்துப் போட்ட சூடான மாமிசத்தைச் சிறிய கூர்கத்தியால் கீறி முகத்தின்மீது ஒட்டவைத்தது போன்ற மெல்லிய சிவந்த வாய்கள், துருவங்களின் வேற்றுமையாய் ஒரு பக்கம் உயர்ந்தும் மறுபக்கம் தாழ்ந்தும் நிரந்திரமாக வெறுப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் நகர பாணியிலான வாய்கள். 

நகரத்தின் வீதிகளில் வாய்கள் மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்கும் கயிறருந்த பட்டங்களாக நகர்ந்தன. வாய்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட போது பெரும்பாலும் தரையைப் பார்த்தபடியே ஓரடி இடதோ வலதோ நகர்ந்து ஒன்றும் பேசிக் கொள்ளாமல் கடந்து போயின. சில வாய்கள் தெரிந்த வாயைப் பார்த்த ஆனந்தத்தில் எம்பிக் குதித்து ஒன்றுக்கொன்று முத்தம் வைத்துக் கொண்டன. மேலும் சில வாய்கள் புரளும் சிவந்த நாக்குகளின் பிரகாசம் உதடுகளில் டாலடிக்க எதிர் எதிரே நின்றபடி உரக்கக் கத்திப் பேசின.  நாக்குகள் எச்சில் தேக்கித் தேக்கி பல வகையாகப் புரண்டாலும் அங்கு நாக்குகள் பிரதானமான இல்லாமல் வாய்களே பிரதானமாக இருந்தன.

வாய்களின் நகர்வுகள் சிறு சிறு நாட்டிய அசைவுகளாக அரங்கேறிக் கொண்டிருந்த நகரத்தின் வீதிகளிலிருந்து சந்திரமௌலி ரசமில்லாமல் வறண்டதும் ஆமையின் ஓட்டைப்போல் புடைத்திருப்பதுமான ஒரு சிறிய வாயைத் தேர்ந்தெடுத்து தன் முகத்தில் பூட்டிக் கொண்டார். இப்படித்தான் இந்த கதை தொடங்குகிறது.

சந்திரமௌலியும் சட்டநாதனும் சிறிய குன்றுகளும் மிகப் பழமையான கிழட்டு மரங்களும் பச்சை நிறமாய்க் கிடக்கும் குளம் ஒன்றும் உள்ள பூங்கா பெஞ்சு ஒன்றில் அருகருகே அமர்ந்திருந்தார்கள்.  அவர்கள் தொடைகள் உரசியபடி இருந்தன. சட்டநாதனின் தொடை மீது சந்திரமௌலி தன் கையை வைத்துச் சட்டநாதனின் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தார். 

அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நேர்க்கோட்டில் மரங்களைத் தாண்டி சிறிய முக்கோணமாக மருத்துவமனை கட்டடத்தின் வெள்ளை நிற நுனி மட்டும் தெரிந்தது. அந்த திசையிலிருந்து கடலலைச் சத்தமாய் தூரத்து வாகனங்களின் இரைச்சல், ஓயாமல் அசையும் ஆடைகளின் சரசரப்பாய், பசியெடுத்து அலையும் ஓநாய்களாய்.

“உறுதியா சொல்லிட்டாங்களா?” சந்திரமௌலி கேட்டார்.  நனைந்த சாக்குப்பைகளாட்டம் கரகரப்பான, கனமான குரல் சற்றே கம்மியிருந்தது. முகத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ள அவர் செய்து கொண்டிருந்த பெரு முயற்சியின் பலனாகக் கழுத்தின் ஓரமாக இருந்த தடித்த நரம்பு வெகுவாகப் புடைத்திருந்தது.

“ஆமாம், கடைசி கட்டத்தையும் தாண்டிருச்சாம்.” தழுதழுத்த குரலில் சட்டநாதன் சொன்னார். கனமான மூக்குக்கண்ணாடிக்குப் பின்னாலிருந்த அவருடைய விசாலமான கண்கள் சந்திரமௌலியின் முகத்தின் மீது அலைந்தன. தொண்டைக் குழி ஏறி ஏறி இறங்கியது. நரைத்த புருவங்களின் நுனிகளில் சிக்கிய சின்னச் சின்ன மஞ்சள் மலர்களாய் முன்காலை வெயில் அதிர்ந்து கொண்டிருந்தது.

“என்னம்மா சொல்றே?” என்று சந்திரமௌலி கேட்டார். “நான் நம்ப மாட்டேன்.  டாக்டர் கொடுத்த சோதனை முடிவுகளைக் காட்டு.”

“சரஸ்வதி வீட்டுக்கு எடுத்துகிட்டுப் போயிருக்கா.”

“அப்படினா உறுதியாயிடுச்சாம்மா? சரஸ்வதி என்ன சொல்றா? உம் பிள்ளைங்க என்ன சொல்றாங்க? வேற எதாவது பெரிய டாக்டர்கிட்ட போயி அபிப்பிராயம் கேட்டா என்ன?”

கைக்குள் பிடித்திருக்கும் சிறிய ஸ்படிக மணிகளைப் பலமாகக் குலுக்கியதுபோல் சட்டநாதன் சிரித்தார். கூடவே மார்பின் ஆழத்திலிருந்து சில கணங்கள் ஒரு வகையான வறட்டு இருமலும் பொங்கி அடங்கியது. 

“இவருதானே ஊருலேயே பெரிய நுரையீரல் டாக்டர்னு பார்க்கப் போனது. மத்த எல்லாரையும் பார்த்துகிட்டுத்தான இவர்கிட்ட போனேன். பிள்ளைங்க என்ன சொல்லுவாங்க. சிகரெட்டுப் பிடிக்காம இருந்திருந்தா இந்த சீக்கு வந்திருக்குமானு கேக்குறாங்க.”

மீண்டும் கைக்குள் அடக்கிய ஸ்படிக மணிகளின் சத்த்ம். மணிகள் உரச உரச தீப்பற்றிக் கொண்டதுபோல் இருமல். இந்த முறை கொஞ்சம் பெரியதாக இருந்தது. 

சந்திரமௌலி சட்டநாதனின் முதுகைத் தடவிக் கொடுத்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.

“அப்படினா ஒண்ணுமே செய்யப் போறதில்லையா? அக்குபங்சர், ஆயுர்வேதம்னு ஏதாச்சும் முயற்சி பண்ணலாம் இல்லையா? எனக்குத் தெரிஞ்ச சீனன் ஒருத்தன்…”

சட்டநாதன் உள்ளங்கையை உயர்த்திக் காட்டினார்.

“போதும். அறுபத்திரண்டு வயசாச்சு. போற நேரம்தானே. வாழற காலத்துலதான் அவளுக்கும் பிள்ளைங்களுக்கும் ஒண்ணுமே சரியா பண்ணல. போற காலத்துல போயி செலவு வைப்பானேன்?”

“போற வயசா உனக்கு? அப்படியே போனாலும் உன்னைவிட ஒரு வயசு மூத்தவன். நான்தானே முதல்ல போகணும்?”

முஷ்டியால் சட்டநாதனின் முதுகைத் மேலிருந்து கீழாய்ச் சந்திரமௌலி தேய்த்தார். அவர் குரல் பிரார்த்தனையாக, யாருக்கும் கேட்காத பெரும் கூக்குரலாக ஒலித்தது.

“டாக்டர் என்ன சொன்னாருனு கேட்டா அதையும் ஒழுங்கா சொல்லித் தொலைக்க மாட்டேங்குற. வேற எடத்துல போயி சிகிச்சை முயற்சி பண்ணலாம்னு சொன்னா அதுவும் வேண்டாங்குற. ஏன் இப்படி எங்க உயிரை வாங்குற. இதுக்காகத்தான் சொன்னேன். நானும் உங்கூட டாக்டரைப் பார்க்க வரேன்னு.”

“நீ யாருனு கேட்டிருந்தா என்ன சொல்லியிருப்பே?”

“யாரு கேட்டிருப்பா?”

“யாரு வேணாலும். டாக்டர், டாக்டரோட வரவேற்பறையில வேலை பார்க்குற சின்ன வயசுப் பொண்ணுங்க, டாய்லெட் சுத்தம் பண்ற சீனாக்காரன், பரிசோதனைக்காக ரத்தம் எடுக்குற பிலிபைன்ஸ்காரன், என் பிள்ளைங்க, என் மனைவி.”

“பிரெண்டுனு…”

முதுகின் நடுவில் சட்டைக்கடியில் இருபுறமும் தசைமடிப்புக்கள் விம்மி நிற்கும் சிறு பள்ளம். சந்திரமௌலியின் கை அந்த இடத்திலேயே நின்று விட்டிருந்தது.

“எல்லாரும் சிரிச்சிருப்பாங்க. டாக்டர்கிட்ட பிரெண்ட கூட்டிகிட்டுப் போற வயசா இது? அதுவும் தடிப்பயல்களாட்டம் ரெண்டு பிள்ளைங்களும் பொண்டாட்டியும் கூடவே வரும்போது?”

“வேற பொம்பளையைக் கூட்டிகிட்டுப் போனாத்தான தப்பு. ஆம்பிளையைக் கூட்டிகிட்டுப் போனா யார் என்ன சொல்ல போறாங்க?”

“இதுல ஆம்பிளை பொம்பளைனு வித்தியாசம் கிடையாது சந்திரா.  எல்லாத்துக்கும் இங்க எல்லை இருக்கு. வளர்ந்த பெண் குழந்தையை அப்பா தொட்டுப் பேசத் தயங்குவான். வீட்டுக்குள்ள நைட்டில சமைக்குற அம்மா பிள்ளை வீட்டுக்குள்ள நொழையுறான்னு தெரிஞ்சதும் துண்டை எடுத்து மார்ப்புக்கு மேல போட்டுக்குவா. அக்கா சின்ன வயசுல தூக்கி வெளையாடுன தம்பியை ஒரு கை தள்ளியே வச்சிருப்பா. கல்யாணமானதுக்கு அப்புறம் ஆம்பிளைகளுக்குப் பொம்பளைங்களோ பொம்பளைகளுக்கு ஆம்பிளைகளோ தொட்டுப் பேசக் கூடிய அளவுக்கு நட்பா இருக்க மாட்டாங்க. இருக்கவும் முடியாது.”

“உன்னைத் தொடுறதுக்காகத்தான் டாக்டர்கிட்ட வரேன்னு நினைக்குறியா நாதன். நீ எவ்வளவு கீழ்த்தரமா யோசிக்கிறனு உனக்கே தெரியுமா?”

“இல்ல, நான் அப்படி சொல்லல. நாம ரெண்டு பேரும் தொட்டுக்கிட்டதாலதான் உனக்கு எம்மேல இவ்வளவு அக்கறை இருக்குனு சொல்றேன். அதே சமயம் தொடுறதுக்கு அனுமதி உள்ளவங்களுக்குத்தான் டாக்டரைப் பார்க்கும்போது கூட வர அனுமதியைச் சமுதாயம் கொடுத்திருக்குன்னும் சொல்றேன். இந்த உடம்புதான் பெரிய எல்லை சந்திரமௌலி. இதைத் தொட அனுமதி இல்லாத எதுவும் அத்துமீறல்தான்.”

குன்றுகள், பண்டைய மரங்கள், அன்னங்கள் நீந்தும் குளம் நிறைந்திருக்கும் பூங்காவின் அளவிற்குப் பேரமைதி ஒன்று அவர்கள் இருவருக்கிடையே கட்டித் தயிராய், கைகள் வைக்கப் பிசுபிசுப்பாய். கையில்லாத பனியனும் கால்சட்டையும் அணிந்திருந்த குள்ளமான ஜப்பான்காரி ஒருத்தி கன்னங் கரேல் என்று பெரிய விரைகளையுடைய நாயுடன் அவர்களைக் கடந்து போனாள். இருவரும் நாயின் விரைகளும் ஆண்குறியும் அசைவதைக் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“அந்த நாய்க்கு அந்த பொம்பளையோட உடம்பு மேல இருக்குற உரிமைகூட எனக்கு இல்ல, இல்லையா?” என்று ஆதங்கத்துடன் சொன்னார் சந்திரமௌலி.  அவர் கண்கள் குளத்தில் திறந்திருக்கும் கனமான நீலோத்பலங்களாய் மின்னுகின்றன.

“ஆமாம் அவ உடுப்பு மாத்தும்போதும் அது கூடவே இருக்கும். அவ வீட்டுக்காரன் அவகூட தனியா இருக்க ஆசைப்பட்டாலும் அது அவங்க காலடியிலேயே படுத்துக்கும். குடும்பமே சேர்ந்து பண்டிகையோ பிறந்த நாளோ கொண்டாடுனாக்கூட நாய் ஏன் இங்க நிக்குதுனு யாரும் கேட்க மாட்டாங்க. ஆனா ரெண்டு மூணு தலைமுறைக்கு முன்னால உன் தாத்தனும் என் தாத்தனும் நாயை வீட்டுக்குள்ளயே சேர்க்காதேனு சொல்லி விரட்டியிருப்பான். ஆனா இப்ப எந்த தாத்தனாவது நாயை விரட்டுவானா? சமுதாயம்ங்கிறது பெரிய மாய யந்திரம் மௌலி.”

இருவரும் மீண்டும் கைகளைக் கோர்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். நீளமான ஏணியைத் தோள்மீது சுமந்து கொண்டு அவர்களைக் கடந்து போன இந்திய ஊழியர் ஒருவன் அவர்களை விநோதமாகப் பார்த்துக் கொண்டு போனான்.

“அப்படினா நீ அடுத்த பிறவியில நாயாப் பொறந்தாதான் நாம ரெண்டு பேரும் வெளிப்படையா தொட்டு அன்பைப் பரிமாறிக்க முடியுங்கிறயா?” 

“அடுத்த பிறவியில நாயாப் பொறந்தா நான் ஏன் உன்னை மாதிரி கெழவனைத் தேடிகிட்டு வரேன் மௌலி. நல்ல எள நாயாப் பார்த்து அது பின்னாலயே வாலாட்டிகிட்டுப் போக மாட்டன்?”

இருவரும் பள்ளிக்குப் போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில் பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்துவிட்ட பள்ளி மாணவர்களைப் போல் சட்டநாதனை இருமல் உலுக்கும்வரை குதூகலத்துடன் சிரித்தார்கள். சட்டநாதனுக்கு இருமல் பெரிதானவுடன் குதூகலம் தானாய் அறுந்தது.

சந்திரமௌலி சட்டநாதனின் கையைத் தன் கைக்குள் மிக இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார்.

“உண்மையச் சொல்லு, டாக்டர் என்ன சொன்னார்?”

சட்டநாதன் வானத்தைப் பார்த்துத் தன் கையைப் புரட்டிக் காண்பித்தார்.

“ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ.”

சந்திரமௌலி கண்களை மூடிக் கொண்டார். அவர் நெற்றியில் ஏற்பட்ட சுருக்கங்கள் அவருடைய சிந்தனையின் உக்கிரத்தைக் காட்டின. எதையோ விரல்விட்டு எண்ணிக் கொண்டிருந்தார். 

“தயவு செய்து எனக்குத் தெரிஞ்ச சீன வைத்தியனைப் பாரு நாதன். அவன் கொடுக்குற சிகிச்சையால சில பேருக்குக் கடைசி கட்டத்துல இருந்த புற்றுநோய்கூட குணமாயிருக்காம். அப்புறம் நெல்லிக்காய் ஜூஸ்…”

“வேண்டாம் மௌலி. இதையெல்லாம் செய்ய எனக்கு இப்ப சக்தி இல்ல. எனக்கு இப்ப ஒரே ஒரு ஆசைதான் இருக்கு. சாகுறதுக்கு முன்னால எங்கயாவது உட்கார்ந்து ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு எந்த விதமான தொந்தரவும் இல்லாம ஆழமா மூச்சு விடணும். அப்படி மூச்சு விடுற நேரத்துல இந்த உலகத்த, நீலமா விரிஞ்சிருக்க இந்த வானத்த, சுத்திப் பறந்துகிட்டிருக்குற பூச்சிகள, எல்லாத் தெசையிலேயும் பரவிக் கெடக்குற இந்த ஊர, நாம மொதல் மொதலா சந்திச்சுக்கிட்ட பள்ளிக்கூடத்த, என் சாக்ஸஃபோன, பக்கம் பக்கமா நாம சேர்ந்து ரசிச்ச இசைய, எதுத்தாப்புல உட்கார்ந்திருக்குற உன்ன ஒரு தடவ ஆழமா உள்ளுக்கு இழுத்து மார்புக்குள்ள அடச்சு வச்சுக்கணும். அதுக்குப் பின்னால என் உயிர் போகணும்னா போகட்டும்.”

சட்டநாதன் முன்னால் குனிந்து அமர்ந்தபடி தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அவர் கண்களைப் பொத்திக் கொண்டு அழுத போது சின்ன மேடுகளாய் குவிந்திருந்த அவருடைய ஒல்லியான தோள்கள் கனமான இரும்புச் சங்கிலிகளாய் அதிர்ந்தன. சந்திரமௌலி சட்டநாதனின் தோள்களைச் சுற்றி தன் இரண்டு கைகளையும் கோர்த்து அவரை இறுக அணைத்துக் கொண்டிருந்தார். கண்ணீரும் சளியும் சேர்ந்து சட்டநாதனின் மூச்சை அடைக்க ஆரம்பித்தது. முஷ்டியை முகத்துக்கு முன்னால் வைத்துக் கொண்டு சட்டநாதன் ஓரிரண்டு நிமிடங்களுக்குத் தொடர்ந்து இருமினார். 

தன் நெஞ்சை அடைத்திருக்கும் கனமான இரும்புக் குழம்பை அகற்றுவதற்காகச் சட்டநாதன் பட்ட பிரயாசை பெருங்குரலெடுத்துக் கத்தும் சிறிய கறுப்புப் பறவைகளாய் ஹக் ஹக் என்று கனைக்கும் யந்திர அகவலாய் அவரைச் சுற்றிச் சுழன்று வந்தது. சட்டநாதன் தன் இரண்டு உள்ளங்கைகளையும் முழங்கால்களின் மீது அழுந்த வைத்துக் கொண்டு சுதாரித்துக் கொண்டார். 

சட்டைப் பையில் வைத்திருந்த கைத்தொலைபேசி ஓயாமல் அதிர்ந்து கொண்டிருந்தது. சட்டநாதன் அதை எடுத்து அலட்சியமாக யார் அழைக்கிறார்கள் என்று பார்த்தார். பிறகு இடது கையை வளைத்துக் கைக்கடிகாரத்தில் மணி  பார்த்துக் கொண்டார். அதுவரை திடமாய் இருந்த அவர் கைகள் லேசாய் நடுங்கின. நிமிர்ந்து உட்கார்ந்து தன் முகத்தை நன்றாகத் துடைத்துக் கொண்டார்.

“சரஸ்வதிதான் கூப்புடுறா. நான் வீட்டுக்குக் கிளம்பி ஆகணும்.”

சட்டையைச் சரி செய்தபடி எழுந்தார். 

அதுவரை சட்டநாதனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சந்திரமௌலியின் உடம்பு சொடுக்கிய சாட்டையாய் அதிர்ந்து அடங்கியது. கணகள் பளபளக்க நின்று கொண்டிருந்த சட்டநாதனைத் தன்னிடம் இழுத்து அவர் வாயில் கனமாக ஒரு முத்தம் வைத்தார். அந்த செயலின் வேகத்திலும் உக்கிரத்திலும் சட்டநாதனின் தடித்த மூக்குக் கண்ணாடி தன் இடத்திலிருந்து நகர்ந்து முகத்தில் மேல் கீழாய்க் கோணலாகி நின்றது

அழுததால் எச்சிலும் கோழையும் தடவியிருந்த சட்டநாதனின் உதடுகள் மிகவும் துவர்ப்பாக இருந்தன.

சட்டநாதன் ஒரு கணம் சந்திரமௌலியை கண்கள் விரிய வியப்போடு பார்த்தார். பின்பு தனக்குள் மெல்லிய குரலெடுத்துச் சிரித்தபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். 

முன்னால் கொஞ்ச தூரம் நடந்த சட்டநாதன் திரும்பி முகம் சிவந்து லேசாய் மூச்சு வாங்கியபடி அமர்ந்திருந்த சந்திரமௌலியை ஆதுரத்துடன் பார்த்தார்.

“மௌலி நாம மொதல் மொதலா சந்திச்சுப் பழகுன காலத்துல நீ எனக்கு நெறைய கதைகளைச் சொல்லுவியே ஞாபகம் இருக்கா?”

இருவரும் ஆசிரியர்களாக வேலை பார்த்த பள்ளியில் பாடவேளை இல்லாத நேரத்தில் பள்ளியை விட்டுத் திருட்டுத்தனமாக வெளியேறி அருகிலிருந்த பேரங்காடியின் பின்னால் நின்றுகொண்டு சிகரெட் குடித்தபடி நிறைய பேசியிருக்கிறார்கள். அவர்கள் இசை ஆசிரியர்களாக வேலை பார்த்த தனியார் பள்ளியில் பாட நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற ஆசிரியர்களுக்குக் கூட அனுமதியில்லை. 

“ஆமாம் அந்த வாத்து மூஞ்சி பிரின்ஸிபால் ஒரு நாள் நம்ம ரெண்டு பேரையும் பள்ளிக்கூடத்துல காணாம கத்தோ கத்துனு கத்துனாளே. அப்புறம் நீயும் நானும் மாத்தி மாத்தி ஏதேதோ கதை சொல்ல அவ துண்டக் காணோம் துணியக் காணோம்னு…”

“உன்னோட அப்படியே நின்னு உன் கதைகளக் கேட்டிருந்தாலாவது நான் இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருப்பேனோ என்னவோ?”

பரீக்ஷீத் என்றொரு அரசன். அவனுக்கு  ஏழே நாட்களில் பாம்புகளால் மரணம் சம்பவிக்கும் என்று சாபம் ஏற்படுகிறது. தன் உயிரைக் காக்கப் பரீக்ஷீத் மன்னன் பாம்புகளின் கடியிலிருந்து தன்னைக் காக்கக் கூடிய மந்திரங்களை அறிந்திருக்கும் பிராமணர்களைக் கொண்டு கங்கைக்கரையில் மாபெரும் மண்டபம் ஒன்றை அமைத்து யாகம் நடத்தினானாம்.  அந்த யாகம் முடியும்வரை தூங்காமல் இருக்க சுக மகரிஷி கதைகளைச் சொல்ல விடிய விடியக் கேட்டுக் கொண்டிருந்தான் என்று மகாபாரதத்தில் கதை வருகிறது. ஆனால் சுகர் சொன்ன கதைகளால்கூட பரீக்ஷீத் மன்னனுக்குச் சாவே வராமல் காப்பாற்ற முடியவில்லை. பரீக்ஷீத் தியானத்தில் இருக்கும்போது பழக்கூடையில் அவனிடம் வந்து சேர்ந்த் பூநாகம் கடைசியில் அவனைக் கொத்திக் கொன்றது.

“இப்ப மட்டும் என்ன? உனக்குச் சாவ வராம காப்பாத்தும்னா உனக்கு தினமும் ஆயிரம் கதைகளச் சொல்ல நான் தயாரா இருக்கேன்.”

இப்படித்தான் சந்திரமௌலி சட்டநாதனுக்கு பல கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.  சட்டநாதன் மரணமடைந்த நாளுக்குச் சில தினங்கள் முன்னால் வரையிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பூங்காக்களிலும், கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டும், காபிக் கடைகளிலும், கடைசி நாட்களில் மருத்துவமனை தீவிரச் சிகிச்சை அறையில் முகத்தில் பிராணவாயு குழாய்களோடு மூச்சுவிடச் சிரமப்படும் சட்டநாதனின் முகத்தைப் பார்த்தபடியும் சந்திரமௌலி அவருக்குக் கதைகளைச் சொன்னார். 

ஆனால் புற்றுநோய்க்குக் காதுகள் இருக்கின்றனவா என்ன? சந்திரமௌலி சொன்ன கதைகள் சட்டநாதனின் உள்ளிருந்து அரிக்கும் நுரையீரல் புற்றுநோய்க்குக் கேட்கவில்லை.

கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சட்டநாதனின் கவனம் யாகத்தீப்போல் பற்றி எரியும் தன் புற்றுநோயின்மீது சிதறியது. சாவுக்காகக் காத்திருந்த சட்டநாதனுக்குச் சந்திரமௌலி சொன்ன கதைகள் யாவும் ஏனோ மலரிலிருந்து புறப்படும் பூநாகத்தின் விஷம்போல் துவர்ப்பாகவே இருந்தன.

 

-சித்துராஜ் பொன்ராஜ்

3 COMMENTS

    • இரு நண்பர்களுக்கும் இடையிலான அபரிமிதமான உணர்வுகளை வெளிக்கொணர்ந்த வித்தியாசமான கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.