சிக்குவின் கவலை

“அம்மா அம்மா..” என கூப்பிட்டது சிக்கு

“சொல்லுடா செல்லம்! என்ன வேணும்?” வாஞ்சையோடு கேட்டது தாய் ரிங்கு.

“அம்மா நாம இப்போ எங்க போறோம்?” மிக ஆர்வமாய் சிக்கு.

“நாம நதிக்கரை வழியா வேறொரு காட்டுக்குப் போறோம்டா..” என்றது ரிங்கு.

அவர்களது மொத்தக் கூட்டமும் நதிக்கரை வழியாக நடந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் வழிகாட்டியாக ரிங்குவின் தாய் ரங்கு சென்று கொண்டிருந்தது.

கூட்டத்திலேயே மூத்த, அதிக குட்டிகளைப் பெற்ற, அனுபவ அறிவு கொண்ட யானை ரங்கு.

ரங்குவிற்கு அடுத்து அக்கூட்டத்தை தலைமை தாங்கப் போவது ரிங்கு தான் என மொத்தக் கூட்டத்திற்கும் தெரியும்.

ஏனென்றால் ரிங்குவிற்கு தான் அத்தனை பாதைகளும், திசைகளும் நன்றாகத் தெரியும், அதுவே ரங்குவிற்கு அடுத்து இக்கூட்டத்தை வழிநடத்த பழக்கப்பட்டுள்ளது.

“அம்மா அம்மா.” என ரிங்குவின் மறுபுறம் வந்து தும்பிக்கையை பிடித்தது புக்கு. சிக்குவின் அண்ணன்.

“சொல்லு புக்கு என்ன வேணும்?” எனக் கேட்டது ரிங்கு.

“அம்மா நான் பிறந்த போதும் இப்டித்தான் நாம நடந்துக்கிட்டிருந்தோம். ஏன் நாம ஒரே இடத்திலேயே தங்குறதில்ல? நதில கூட இன்னும் நீர் இருக்குதே? பின் ஏன் நாம நகர்ந்துட்டே இருக்கோம்?” எனக் கேட்டது புக்கு.

“நாம தான் நிலவாழ் உயிரினத்திலேயே மிகவும் பெரியவர்கள், வலுவானவர்கள்.. நாம நடப்பதால் தான் காட்டில் சமநிலை பேணப்படுது” என்றது ரிங்கு.

“அதெப்டி நாம நடக்குறதுக்கும் காட்டின் சமநிலைக்கும் என்ன சம்மந்தம்?” எனக்கேட்டது புக்கு.

“இந்தக் கேள்விய போய் பாட்டி ரங்கு கிட்ட கேளு” என அனுப்பி வைத்தது ரிங்கு.

கூட்டத்தின் முதலில் நகர்ந்து கொண்டிருந்த ரங்குவிடம் சென்றது புக்கு.

“பாட்டி! பாட்டி! நாம நடந்துட்டே இருக்கறதுக்கும் காட்டின் சமநிலைக்கும் என்ன சம்மந்தம்?” எனக் கேட்டது.

“நிலவாழ் உயிரினத்துலயே நாம தான் ரொம்ப பெரிய உருவம் உள்ளவங்க.. நாம ஒரே இடத்தில இருந்தா அங்க இருக்கிற உணவெல்லாம் சிலநாட்கள்லயே காலியாகிடும். மற்ற உயிரினங்களுக்கு உணவிருக்காது. மரங்கள்லாம் பட்டுப் போகும், வனம் அழிஞ்சிடும். அதனால தான் ஒரே இடத்தில் இல்லாம நகர்ந்துட்டே இருக்கோம்.” என்றது ரங்கு.

“பாட்டி! நாம நகர்வதில் வேறென்ன நன்மை இருக்கு?” எனக்கேட்டது புக்கு.

“உயர வளரும் மரங்கள் பெரிதாக கிளை பரப்பி, அதன் நிழல்ல வேற செடி கொடிகள் வளர இயலாமல் போய்டும். ஆனா நாம போற பாதைகளில் இருக்கற பெருமரங்களோட கிளைகள அப்புறப்படுத்துறதால சூரிய ஒளி காட்டுக்குள் ஊடுருவும். பல்லுயிர்களும் பல்கிப் பெருகும்” அப்டின்னு சொன்னது ரங்கு பாட்டி.

பின் யானைக் கூட்டம் நதிக்கரையில் இளைப்பாறி மெதுவா மனிதர்களோட குடியிருப்புகள் வழியாக கடக்க ஆரம்பிச்சது.

“உண்மைல அதெல்லாம் காடுகளா, யானைகளோட வழித்தடங்களாக இருந்தவை தான். மனிதர்கள் தான் அத ஆக்கிரமிச்சு வீடுகளும் தோட்டங்களும் கட்டிக்கிட்டு இப்போ தன் பூர்வீக வழி வழியாக செல்லும் யானைகள தடுக்குறாங்க.”

“தன் மூளையில் பதிந்த பாதையில் செல்ல இயலாமல் தடை ஏற்படும் போது குழம்பிப் போகும் யானைகள் மனிதர்களோட உடைமைகளை சேதமாக்குது.”

போன வருடம் கூட இப்படி மின்வேலி போட்டு நம்ம பெரியம்மா டிங்கு இறந்துட்டாங்க தெரியுமா” அப்டின்னு சிக்குகிட்ட சொல்லி வருத்தப்பட்டது புக்கு.

ஆனா, இப்போ இவங்க போற வழில ஒரு மனித நடமாட்டத்தயும் காணோம். ஏன் அவர்களோட விநோத வாகனங்களைக் கூட காணோம்.

சிக்கு குடுகுடுன்னு ஓடி, தன் பாட்டி ரங்கு கிட்ட கேட்டது.. “பாட்டி! பாட்டி! மனுசங்கள காட்றேன்னு சொன்னீங்களே எங்க பாட்டி?”

“அதான்டா.. அவங்களுக்கெல்லாம் என்ன ஆச்சின்னே தெரியலையே. நடமாட்டமே இல்லாமல்ல இருக்கு. ஆனா, மனுசங்க இப்டி அமைதியா இருந்தா பூமி நிம்மதியா, செழிப்பா இருக்கும். அவங்களுக்கு தங்களுக்கு மட்டும் தான் அறிவிருக்கறதா நினைப்பு.” அப்டின்னு கவலையோட சொன்ன ரங்கு தன் முன்னோர் நடந்த பாதையில், முதல்முறையாக எந்த தொந்தரவும் இல்லாம நிம்மதியா நடை போட்டது.

பாவம் சிக்கு, மனிதர்கள பாக்க ஆசை ஆசையா வந்தது. ஆனால் இந்த மனிதர்கள் ஒரு நுண்ணுயிருக்கு பயந்து முடங்கிட்டாங்கன்னு அதுக்குத் தெரியல. மனுசங்கள பாக்க முடியலயேன்னு ஒரே கவலை ஆகிடுச்சி அதுக்கு.

 

தாம் தான் உலகத்துக்கே ராஜான்னு வலம் வந்த மனிதன.., இல்ல.. இல்ல.. இந்த உலகம் எப்பவும் எங்களைப் போன்ற நுண்ணுயிர்களோடது. அணுக்களால் ஆனது. நீ விருந்தாளின்னு சொல்லிக் கொடுத்திருக்கு கோவிட்-19.

குழந்தைகளா! நீங்க இயற்கைக்கு தீங்கு செய்யாம விருந்தாளிகளாவே நல்ல முறைல வாழ்வீங்க தானே?


  • ராஜலட்சுமி

4 COMMENTS

  1. மிக அருமை… இப்போது கேரளாவில் நடந்த செயல் மற்றும் கொரானா இரண்டையும் தோலுரிக்கும் சமூக கதை.

  2. எளிய கதை அதே சமயத்தில் ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கதை.
    வாழ்த்துக்கள்

  3. அர்த்தமும் ஆழமும் கொண்ட கதை. சிறார்களின் மனதில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைத்தமைக்கு மனம் நெகிழ்ந்த பாராட்டுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.