சின்ன சின்ன பூகம்பங்கள்

 

கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை பயத்துடன் அவளைப்பற்றி பேசுகிறார்கள். எனக்கு எப்போதுமே அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள்  என்று புரியாது…..இருந்தாலும் நானும் சிலசமயம் அவர்களை நம்புவேன்.

“அவள் தனது தம்ஷ்த்ராவால்(கோரைப்பற்களால்) உன்னைக் கிழித்துவிடுவாள்.பிறகு உன் இரத்தத்தை ஒரே மூச்சில் குடித்துவிடுவாள். அப்புறம் உன் எலும்புகள்? அவற்றை அவள் தனது இராட்சத கடைவாய் பற்களால் மென்று, துப்பிவிடுவாள்”.

ஆம். யார் அவள்? பரிதாபமான குஞ்சாத்தாள்தான் அந்த யக்க்ஷி! அவள் தினமும் இரண்டு வேளை வருவதாகக் கூறுகிறார்கள். உச்சக்கானத்தில் ஒருமுறை, பின்பு நடுநிசியில் ஒருமுறை. “பரம்பின் மேல் சரிவில் அவள் நடப்பதை பார்க்கலாம்” என்று அவர்கள் கூறுவார்கள். உச்சக்கானம் என்பது என் அம்மா வேலைக்காரர்களுக்கு அரிசி கஞ்சியை வழங்கிவிட்டு சிறிய பகல் தூக்கத்திற்காக படுக்கும்போது துவங்கி, வல்லியம்மா –என் அம்மாவின் மூத்த சகோதரி-டீ தயாரிக்க எழுந்திருக்கும்போது முடிவடையும் நேரம். இதுதான் உச்சக்கான பொழுது. அது என்ன மொழி என்று கடவுளுக்குத்தான் வெளிச்சம். அந்த நேரத்தில்தான் _ அக்கார முத்தச்சி தன் வயதான காலத்தில் எங்களுடன் இருப்பதற்காக சிறிய கிராமம் ஒன்றிலிருந்து ஆற்றைக் கடந்து வந்திருந்தாள். _பரம்பில் உலாவச்செல்வாள். அவள் இலைகளையும் வேர்களையும் பறிக்கச் செல்வாள். எதுவெல்லாம் மருத்துவகுணம் கொண்டது என முத்தச்சிக்கு மட்டுமே தெரியும். அவள் இறந்து போவதற்குள் அந்த இரகசியங்களை எல்லாம் இந்த குடும்பத்திலிருக்கும் அவளுக்கு மிகவும் பிடித்த ஒரு சிறிய பெண்ணிற்கு சொல்லிக் கொடுத்துவிட வேண்டும் என்பாள். அது வேறு யாருமல்ல நான்தான்.!

முத்தச்சி படுத்த படுக்கையான பின்பு ,என்னை எவரும் தடுத்து நிறுத்தாத பொழுது நான் பரம்பிற்கு தனியாக செல்ல ஆரம்பித்தேன். அந்த சமயத்தில்தான் என்னைக் கெட்ட ஆவி பிடித்து விட்டதாக அம்மாவும் ,வல்லியம்மாவும்  சொல்கிறார்கள். 

அப்புறம் அந்த தேக்குக்காரன் ராவுன்னி நாயர் இருக்கிறானே தூபம் போடுவதற்கு! அவன் , “ அந்த கிழட்டு சூனியக்காரி இங்கு வந்த பிறகுதான் எல்லா வினையும் வர ஆரம்பித்தது” என்று முத்தச்சி மீது கூசாமல் பழிபோடுகிறான்.

ஆனால் நான் போகும் போதெல்லாம் , கள்ளத்தனமாக பரம்பில் நடக்கும் இன்னொரு சூனியக்காரியைத்தான் பார்க்கிறேன். அது வேறு யாருமல்ல, வல்லியம்மாவின் அருமை மகள் சரோஜினி ஏடத்திதான்! யாருக்கும் அவளைப் பற்றி தெரியாது, என்னைத் தவிர! ஊராருக்கு அவளது  தெய்வீகக் காதலைப் பற்றியும் தெரியாது. நம்பூதிரி குளக்கரை படிக்கட்டில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டு காத்திருக்கும் அவளது தெய்வீகக் காதலன் கந்தர்வனையும் தெரியாது.

உச்சிப்பொழுதில் வீட்டின் மேற்குப் பகுதியில் மர ஜன்னலருகே நின்றுகொண்டு பரபரப்புடன் , ஆடுகளை மேய்க்கின்ற சாக்கில் பரம்பில் அலைந்துக்கொண்டிருக்கும் நாணிக்குட்டியைப் பார்த்து சைகை காட்டிக் கொண்டு நிற்கும் ஒருவனையும் தினமும் நான் பார்க்கிறேன். அவன் என் சகோதரன் ஏட்டன்தான். உண்மையில் ஆவி அவனைத்தான் பிடித்திருக்கிறது என்பேன். ஆனால் என்னை யார் நம்புவார்கள்?

அப்புறம் உள் முற்றத்தில் அமர்ந்து தலையை ஆற்றிக் கொண்டிருக்கிறாளே…அவள் என்னைப் பார்த்தாலே துரத்துவாள். அவள் பேராவலுடன் உற்றுப் பார்க்கும் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் இருக்கும் அந்தப் பெரிய பெரிய புத்தகங்களை எட்டிப் பார்க்கக்கூட என்னை விட மாட்டாள். அந்த பொம்பளைக்கு தான் பெரிய கொம்பு என்ற நினைப்பு. என்னை விட மூன்று வயதுதான் பெரியவள். என் சொந்த சகோதரி வேறு. ஆனால் என்ன பிரயோஜனம்? எனக்காக நேரம் ஒதுக்கக் கூட அவளால் முடியவில்லை.

ஒரு நாள் உச்சிப் பொழுதில் நான் பரம்பில் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது ….. மாமரத்தடியில் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். பார்த்தவுடன் தெரிந்துவிட்டது. அவள்தான்  எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்த யக்க்ஷி என்று! நான் ஓடிப்போக நினைத்தேன், ஆனால் என் கால்கள் அசையவில்லை. நான் கண்களை மூடிக்கொண்டு “அர்ஜுனா, அர்ஜுனா”, என்று ஜபித்தேன்.

“ஜானகிக்குட்டி” – மென்மையானக் குரலொன்றைக் கேட்டேன். அதில் அமைதியானதொரு வாஞ்சை இருந்தது. என் முழுப்பெயரைச் சொல்லி அவள் அழைத்தவிதம் எனக்குப் பிடித்திருந்தது. மற்றவர்கள் என்னை “ஜாட்டி” என்றுதான் கூப்பிடுவார்கள்.

நான் மெல்லக் கண்களைத் திறந்தேன். என்னருகே குஞ்சாத்தாள் நின்று கொண்டிருந்தாள். குன்னங்குளம் மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொண்டாளே அத்தெம்மார் பொண்ணு , பார்த்திருக்கீங்க இல்ல, அவளை மாதிரியே இருந்தாள் குஞ்சாத்தாள். பாரம்பரிய வெள்ளை ரவிக்கை , தோளைச் சுற்றி வெள்ளைத்துணி, நெற்றியில் சாந்து வைத்திருந்தாள். காதில் கம்மல்கள் அணிந்திருந்தாள். தங்க நெக்லஸ் கழுத்தில் போட்டிருந்தாள். 

ஏன் ஜானகிக்குட்டி தனியா வந்திருக்கா? எனக் கேட்டாள்.

நான் பேசாமல் மௌனமாய் இருந்தேன்.

“ஜானகிக்குட்டியின் முத்தச்சி ஏன் இப்போதெல்லாம் வருவதில்லை?” அவள் பேசும்போது அவளது வாயிலிருந்து கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன் நான். “எங்கே உனது தம்ஷ்த்ரா?”” என்று பயமே இல்லாதது போல் கேட்டேன். 

அத்தெம்மார்க்குட்டி வெடித்து சிரித்தாள். ஆ! என்ன அழகான பற்கள்! “தம்ஷ்த்ரா, நாங்கள் இரையை விழுங்கும் போது மட்டும்தான் பெரிதாக வளரும்.” என்றாள். ஆனால் அது எல்லோரையும் பயமுறுத்திவிடும். அதனால்தான் எங்களுடன் விளையாட யாருமில்லை”

பரம்பின் பின்பக்க சரிவுகளில் ஒரு இடிந்த அவுட்ஹவுஸ் இருந்தது. ஒரு வேலைக்காரன் அங்கே  வசிப்பது வழக்கம். அதனைச் சுற்றி பனைமரங்கள் அடர்ந்து இருந்தன. யக்‌ஷி அங்கே சென்று அமர்ந்து கொண்டு, முண்டிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து கடைவாயில் வைத்து மெல்லத் துவங்கினாள்.

நான் ஏக்கத்துடன் அவளைப் பார்த்தேன். யக்‌ஷி என்னை மேலோட்டமாய் பார்த்து விட்டு, சிறு குழந்தைகள் வெற்றிலை சாப்பிடக்கூடாது என்றாள். நான் ஏழு சிறு கூழாங்கற்களை சேகரித்தேன். நாங்களிருவரும் அங்கேயே அமர்ந்து எனக்கு மிகப்பிடித்த “கொத்தங்கல்லு” விளையாடினோம். யக்‌ஷி விளையாடுவதைப் பார்க்க வேண்டுமே நீங்கள்! எத்தனை சுலபமாக நாலு, ஐந்து கற்களை ஒவ்வொரு வீச்சிலும் அள்ளுகிறாள். எதிர்பார்த்தபடி குஞ்சாத்தாள்தான் ஜெயித்தாள். அப்படி கூப்பிடுவதைத்தான் அவள் விரும்பினாள்.

“நாளைக்கு நீ ஜெயிப்பாய் ஜானகிக்குட்டி.” அவள் புன்னகைத்தாள். நான் தோற்றால் என்ன? குறைந்தபட்சம் என்னுடன் விளையாடுவதற்கு யாராவது இருக்கிறார்களே!                                         யக்‌ஷிகள் அவர்களது வார்த்தைக்கு உண்மையாக இருகிறார்கள். இதுவே என் ஏடத்தி “நான் நாளைக்கு தருகிறேன்”” என்றால் , என்னை ஏமாற்றுகிறாள் என்று அர்த்தம். அதை எனக்கு தரவே மாட்டார்கள். ஆனால் யக்‌ஷிகள் அப்படி இல்லை. அப்புறம் அடுத்த நாள் நான்தான் ஜெயித்தேன். தினமும் மாலை முத்தச்சி எனது வழிபாடுகளை கற்றுத் தருவாள்.. அம்மா “இந்த உதவாக்கரைக் கிழவியால் இந்த ஒரு உபயோகமாவது இருக்கிறதே” என்று சொன்னதைக் கேட்டதிலிருந்துதான், இது ஆரம்பித்தது. நான் என்னுடைய உண்மையான முத்தச்சியை, அதாவது அம்மா மற்றும் வல்லியம்மாவின் அம்மாவைப் பார்த்ததில்லை. அவள் பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டாள். இந்த அக்கார முத்தச்சி என்னுடைய முத்தச்சியின் இளைய சகோதரி. அம்மாவும், வல்லியம்மாவும் இந்த முத்தச்சியைப் பற்றி  பேசும்போது, ”இந்த பேயின் குணத்தினால்தான் அவளுடைய சொந்தக்குழந்தைகள் அவளை வைத்துக்கொள்ளவில்லை எட்டா!” என்று எப்பொழுதும் கூறுகிறார்கள். எட்டா என்றால் கெட்ட வார்த்தை, அவர்களது சொந்த மொழியில். முத்தச்சி படுத்த படுக்கையான போது அம்மா, “என்ன தொல்லை! நான் இப்போ இந்த பாழாய் போன கிழட்டு பிசாசுக்காக காத்திருக்க வேண்டும்”என முனகினாள்.

அன்று மாலை நான் முத்தச்சியிடம் யக்‌ஷியைப் பற்றியும், நான் எப்படி அவளுடன் “கொத்தங்கல்லு” விளையாடினோம் என்பதையும் கூறினேன்.

“ஷ்… யாரிடமும் இதைப்பற்றிச் சொல்லாதே.” முத்தச்சி என்னை எச்சரித்தாள். “இந்த யக்‌ஷிகளை எனக்குத் தெரியும். யாரும் உனக்கு கெடுதல் செய்ய மாட்டார்கள் குட்டி” என்று என் காதுகளில் கிசுகிசுத்தாள்.

கொத்தங்கல்லு போரடித்தபோது நானும் யக்‌ஷியும் பரம்பில் திரிவோம். அப்போதுதான் நான் கரிநீலியைப் பார்த்தேன். வேளக்காரிக் கோயில் திருவிழாவில் ஆடிக்கொண்டு வரும் பரபூதத்தை உங்களுக்குத் தெரியும் அல்லவா? நீங்கள் எங்கள் வீட்டு முற்றத்தை பெருக்கி சாணி வாரும் காளியை பார்த்திருப்பீர்கள். காளி அப்படியே அச்சாக பரபூதம் மாதிரியே இருப்பாள். இந்த கரிநீலி காளியின் இளஉருவம். கரிநீலி ரவிக்கை அணியவில்லை. முத்தும் கற்களும் பதித்த தங்க நெக்லஸ் மட்டும் அணிந்திருந்தாள். அவளது பற்கள் கருப்பாக இருந்தன. வெற்றிலையை மெல்லுவதால் அப்படி ஆகி இருக்கலாம்.

யக்‌ஷியும், கரிநீலியும் நின்று ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டார்கள். அம்மாவும், வல்லியம்மாவும் இது போல ஒருவரை ஒருவர் முறைப்பதைப் பார்த்திருக்கிறேன். இது அதைவிட பயங்கரமாக இருந்தது. சண்டை வரும் என்று பயந்தேன். ஆனால் எதுவும் நிகழவில்லை.

”தம்புராட்டி ஏன் தன்னோட விளையாட்டில் என்னை சேர்த்துக்கிறதில்லை?” என்று நீலி கேட்டாள். என் தோழி குஞ்சாத்தாள் முகத்தை சுழித்துவிட்டு, பிறகு தலையை ஆட்டி “சரி வா” என்றாள். 

கரிநீலி தரையில் தாயக்கட்டம் வரைந்தாள். உடைந்த சலவைக் கற்களைக் கொண்டு வந்தாள். அப்புறம் நாங்கள்  மூவரும் அங்கேயே உட்கார்ந்து வட்டு விளையாடினோம்.

அன்று மாலை இதையெல்லாம் நான் முத்தச்சியிடம் சொன்னபோது அவள் என்னைத் தட்டிக் கொடுத்துவிட்டு, “ஒன்றும் தவறில்லை குட்டி. உன்னிடம் எந்தத் தீங்கும் அண்டாது” என்றாள்.

ஒரு நாள் நாங்கள் மதில்சுவர் பக்கமாக நடந்து கொண்டிருந்த போது குஞ்சாத்தாள் எனக்கு பிரம்மராக்‌ஷஸர்களைக் காட்டினாள். அது நாங்கள் கொத்தங்கல்லு விளையாடிய அந்த பாழடைந்த திண்ணை மீது நின்று கொண்டிருந்தது. செத்துப்போன குஞ்சு நம்பூதிரியை நீங்கள் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அவரே மூன்று மடங்கு உயரமாகி விட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். பிரம்மராக்‌ஷஸர்கள் அப்படியே இருந்தார்கள்.

நாம் அதனருகில் சும்மா பேசுவதற்காக கூட  போகக்கூடாது. அப்போது அவை நம்மை ஒன்றும் செய்யாது என்றாள் குஞ்சாத்தாள்.

உண்மையில் அது எங்களை பார்க்ககூட இல்லை. மற்ற நண்பர்கள்  நீலி, பராகுட்டி, கரிக்குட்டி அப்புறம் கல்லடி முட்டன் போல புதருக்கருகில் ஒளிந்து கொண்டு எங்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. சிலசமயம் அவர்கள் எங்களை நோக்கி இம்மியளவு முன்னேறி வந்தாலும் ,குஞ்சாத்தாளின் ஒரு முறைப்புக்கு விரைந்து தங்களது பொந்துக்கு திரும்பிவிடும்.

ஒரு நாள் ஒரு விஷமுள் எனது பாதத்தை கிழித்துவிட்டது. காயம் ஆழமாக இருந்தது. நீலி கோபம் வந்து கல்லடி முட்டனை தூற்ற ஆரம்பித்துவிட்டாள். “இந்தக் காயம் மட்டும் புரையோடி குட்டி கஷ்டப்பட்டால்…… உன்னை…..நான்……”

அடுத்த நாள் எறும்புக் கடித்த அளவிற்கு கூட வலியில்லை. இந்த பிசாசுகள் எல்லாம் ரொம்பவும் உண்மையானவர்களாக இருக்கிறார்கள்.

நான் வழக்கமாக முத்தச்சியுடன் படுத்துத் தூங்குவேன், ஆனால் இப்போது அம்மாவின் கட்டிலருகே என் சகோதரிக்கு அருகில் தூங்குகிறேன். ஏடத்திக்கு இது பிடிக்கவில்லை. அவள் சரோஜினி ஏடத்தி எங்களுடன் வந்து தூங்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களிலெல்லாம் சீக்கிரமே தூங்கச் சென்று விடுவாள். அந்த நாட்களில் அம்மா வரும் வரை அவர்கள் ஏதோ பிதற்றிக் கொண்டிருப்பார்கள். நான் சரியாகவே தூங்க முடியாது. அது இவர்கள் கூறுவது போல் உடல் சுகவீனம் இல்லை. அதன் காரணம் ரகசியமானது. நான் உங்களுக்கு ஏனென்று சொல்லட்டுமா? அது பொறாமை. குஞ்சாத்தாளூம், நீலியும் இரவில் கூட சுற்றித் திரிந்து விளையாடிகிறார்களே என்ற பொறாமை.

ஒரு முறை அவர்கள் இருவரும் ஏதோ மென்றுகொண்டு வாழைத்தோப்பு வழியாக நடந்து செல்வதைப் பார்த்தேன். நான் ஜன்னலருகே சென்று மெதுவாகக் கூப்பிட்டேன். ”குஞ்சாத்தாள்…..நீலி…..!”ஆனால் அவர்களுக்கு கேட்கவேயில்லை. என்ன தோழிகளோ?”

அந்தச் சமயத்தில்தான் அம்மா விழித்துக்கொண்டாள். ஐயோ! எப்பேர்பட்ட பூகம்பம் அங்கு நிகழ்ந்தது. அவள் விளக்கை போட்டாள். எல்லோரும் ஓடி வந்துவிட்டார்கள். முத்தச்சி கூட தன் நலிந்த உடலை இழுத்துக்கொண்டுச் சுவரை ஆதாரமாகப் பற்றிக்கொண்டு வந்தாள். அம்மா, “எங்களுக்கு இருக்கும் தொல்லை எல்லாம் போதும் ஏய் கிழவி! நீ வேறு கீழே விழுந்தாயானால் எலும்பு முறிந்து…..சாவாய்” என்று அலறினாள்.

பணிக்கர் அழைத்து வரப்பட்டார். அவர் ஒரு புத்திசாலியான மனிதர். அவர் சோழிகளை தரையில் அடுக்கிவிட்டு, அறிகுறிகளை கணித்துவிட்டு நான் குஞ்சாத்தாள், நீலியுடன் விளையாடுவதையெல்லாம் அவர்களிடம் சொன்னாராம். அவ்வளவுதான் என்னிடம் கூறினார்கள். ஆனால் அவர் இவர்களையெல்லாம் எப்படி முட்டாளாக்கியிருக்கிறார் என்று நான் சொல்லட்டுமா? எங்கள் மூவருடன், தெக்கன்கோவாவும் இருந்ததாக அவர் கூறிய போது இந்த ஜனங்கள் உடனே நம்பிவிட்டது. அங்குதான் பணிக்கர் தவறு செய்துவிட்டார்.

பணிக்கர் ராவுன்னி நாயர் மூலமாக நூத்தியோரு ரூபாய் கொடுத்து அனுப்பினார், அனக்கார பகவதிக்கு தட்சணையாக. சரி பகவதி இந்த தட்சணையால் மகிழ்ச்சி அடையட்டும்.

ஆனால் நான் கூறுவதை நம்புங்கள். தெக்கன்கோவாவோ அல்லது வடக்கன் கோவாவோ எங்களுடன் வந்து எப்போதும் விளையாடியதே இல்லை. அப்படியே வந்தாலும், நாங்கள் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டோம். அவர்கள்  எப்படிப்பட்டவர்கள் என்று எங்களுக்கு எப்படி தெரியும்?

சமயங்களில் அம்மா வருத்தமாக இருப்பாள். சில சமயம் கோபமாக இருப்பாள். அவள் முனகுவதை பல நேரம் கேட்டிருக்கிறேன். “யாருக்கு உடம்பு சரியில்லை என்றால் என்ன? யார் செத்தால் என்ன? இந்த குழந்தைகளோட தகப்பனுக்கு என்ன அக்கறை? ”.ஆனால் அச்சன் வால்பாறையில் டீ எஸ்டேட் வேலையை விட்டுவிட்டு ஒவ்வொன்னுக்கும் எப்படி வரமுடியும்? எட்டன் ஒருமுறை அங்கு சென்றிருக்கின்றான். அவன் சொல்வான் ஒரு கூடை தேயிலை கூட இளசாக இல்லாமலிருந்தால் அச்சன் மொத்தத்தையும் திருப்பி விடுவாராம். தேயிலைகளை பதப்படுத்தும் போதும் அச்சன் அங்கேயே இருக்க வேண்டுமாம். அச்சன் இதையெல்லாம் கவனிக்காவிட்டால், கடைக்காரர்களிடமிருந்து- “இது டீயா அல்லது தூசா? “ என்று  குற்றச்சாட்டு வரும். அப்புறம் வாடிக்கையாளர்கள் “ இந்த டீ புளியந்தண்ணியாட்டம் இருக்கு” என்று முனகுவார்கள்.

இந்த நேரத்தில்தான் உதவிக்கு ஒரு ஆள் தேவையென்ற சாக்கில் அப்பா எஸ்டேட்டில் ஒரு பெண்ணை வேலைக்கு வைத்து உருப்படாமல் போனார். அம்மா அப்படித்தான் சொல்கிறார்கள். இந்த மோகினி அப்பா மீது ஏதாவது  தந்திரம் செய்தால் நான் குஞ்சாத்தாளிடம் சொல்லிவிடுவேன். ஆனால் கோபம் வந்தால் குஞ்சாத்தாளுக்கு “தம்ஷ்த்ரா” வெளிவரும் அப்புறம் தண்டனை அடைவது அவள் மட்டுமல்ல என் அச்சனும்தான். அதனால்தான் இதுவரை குஞ்சாத்தாளிடம்  எதுவும் சொல்லவில்லை.

நான் சும்மா இருக்கும் போது கூட ஏடத்தியும் சரோஜினியும் என்னைப் பார்த்து முறைக்கிறார்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை. நான் திரும்ப முறைத்தால் அவர்கள் ஓடிவிடுவார்கள். என்னை பார்த்து கொஞ்சம் பயப்டுகிறார்கள் அல்லவா?

இப்பொழுதும் தினமும் தலைக்குளித்த பிறகு முத்தச்சியிடம் செல்கிறேன். முத்தச்சி என் தலையில் ரஸ்நதி மாவைத் தேய்ப்பாள். வலிக்குமளவுகு அழுத்தித் தேய்ப்பாள். பின்பு எனக்கு சளி பிடிக்காதிருக்க மாவின் மணம் மூக்கில் ஏறும் வரை விரலை அழுத்துவாள்.

என் பள்ளி, வீட்டிலிருந்து ஒரு மணி நேர நடை தூரத்தில் இருந்தது. நான் பள்ளிக்கு நடந்து போகக்கூடாது என்று அப்பா கடிதம் போட்டிருப்பதாகத் தெரிகிறது. அம்மாவும், ஏடத்தியும் அதை ஒப்புக் கொண்டிருப்பதாகப்படுகிறது. ஏன் எப்போதும் மக்கள் என்மீது வியாதி என பொய்யாக வீண்பழி சுமத்துகிறார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இப்போது வீட்டிற்கு வந்து சொல்லிக் கொடுப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுகிறார்கள். அப்புறம் இப்போது புதிய தடையொன்றை எனக்கு விதித்திருக்கிறார்கள். பகலிலோ அல்லது மற்ற சமயங்களிலோ பரம்பிற்கு நான் செல்லவே கூடாது என்று.

குஞ்சாத்தாள் புழக்கமில்லாத பாம்பு புற்றனருகே வந்த போது இதை அவளிடம் சொன்னேன். எனவே குஞ்சாத்தாளும், நீலியும் உச்சகானத்தில் எல்லோரும் உறங்கிய பிறகு வீட்டிற்குள்ளேயே வர ஆரம்பித்தனர். நாங்கள் எல்லா அறைகள் வழியாகவும் நடப்போம். எல்லோரும் கேனத்தனமாக தூங்கும் நிலையைப் பார்த்து நாங்கள் சிரிப்போம். ஒரு நாள் வழக்கம் போல் மேற்கு பக்க ஜன்னலுருகே நின்று கொண்டு நாணிக்குட்டியைப் பார்த்து கையை ஆட்டிக் கொண்டிருக்கும் ஏட்டன் என்னைப் பார்த்துவிட்டு, கையை உயர்த்தி கொண்டு என்னை நோக்கி வந்தான். குஞ்சாத்தாளின் தம்ஷ்த்ரா அபாயகரமாக நீள ஆரம்பித்தது. “எதுவும் செய்துவிடாதே” நான் அவளை எச்சரித்தேன். அதனால் அவள் பின்னடைந்தாள். நீலி யாராவது அவளை கோபப்டுத்தினால் எச்சில் உமிழ ஆரம்பித்துவிடுவாள். அப்புறம் அவர்களது உடம்பு திடீரென்று எரிமலை போல் குமிழ்களாக வெடிக்கும். இப்பொது நீலி அப்படி செய்யாமல் இருப்பது நான் கேட்டுக் கொண்டதால்தான்.

நாங்கள் எப்பொழுதும் முத்தச்சியின் அறைக்குச் சென்று தாயம் விளையாடுவோம். ஏனென்றால் முத்தச்சி கண்டுகொள்ள மாட்டாள். ஒருமுறை அம்மாவோ, அல்லது வல்லியம்மாவோ நாங்கள் வீட்டில் அலைந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார்கள். உடனே….இன்னொரு பூகம்பம். பிறகு இன்னொரு ஜோதிட ஆலோசனை.

இம்முறை ஒரு பணிக்கரல்ல, பதிலாக இரண்டு குழு பணிக்கர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்புறம் இந்த தடவை என் ஜாதகத்தை மட்டும் ஆராயாமல் எல்லோரும் அவரவர் ஜாதகத்தைக் கொண்டுவந்தனர். பின் என்ன? பணிக்கர்கள் எல்லாம் எவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.

அம்மா, அச்சனுக்கு மந்திர விஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த ஊர்வசியைப் பற்றி எல்லாவற்றையும் கேட்டுவிட விரும்பினாள். எனவே தரையில் கட்டங்களை வரைவதும், சோழிகளை அடுக்குவதும் பிறகு மந்திர உச்சாடனமும் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவருக்கும் வரிசையாக நடந்து கொண்டே இருந்தது. வீட்டின் தெற்கு பகுதியில் மேலும், கீழும் ஏற இறங்க நடந்து கொண்டு பணிக்கர் தன் ஜாதகத்தைப் பார்த்து கல்யாணத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று காதுகளைத் தீட்டி கொண்டு கவனித்துக் கொண்டிருந்தாள்…..வேறு யார்? சரோஜினி ஏடத்திதான்.

இப்போது கல்லாடிகொட்டு அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலிருந்து புகழ்பெற்ற மந்திரவாதியை அவர்கள் அழைத்து வருவது என முடிவெடுக்கப்பட்டது. தெக்குகாரன் ராவுன்னி நாயர் அந்த மந்திரவாதியை சென்று பார்த்து அவரை அழைத்து வர மங்களகரமான நாளை முடிவு செய்து கொண்டு திரும்பினான். அந்த மந்திரவாதியைப் பற்றி அவர் சொன்னதையெல்லாம் நான் ஒட்டுக் கேட்டேன்.

உடனடியாக நான் குஞ்சாத்தாளை அழைத்தேன். அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என அவள் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? கத்தி ஒன்று கரியடுப்பில் பழுக்கக் காய்ச்சப்படும், கஞ்சிரா மரத்தின் கட்டையில் ஆணிகள் அடிக்கப்படும். நெருப்பு, வெப்பம், ஆவியின் சூடு மற்றும் ஆணி அடித்தல் ஆகியவை கெட்ட ஆவிகளை மனிதர்களிடமிருந்து மட்டுமல்லாமல் கிராமத்திலிருந்தே விரட்டிவிடுமாம்.

குஞ்சாத்தாள்  இதைக் கேட்டுவிட்டு “பூ…. இவ்வளவுதானா?” என்று கெக்கெளித்தாள். ஆகவே நான் முத்தச்சியிடம் சொன்னேன். அவளும் வெறுமனே சிரித்தாள்.

கல்லடிக் கொட்டிலிருந்து மந்திரவாதி வந்து விரிவான சடங்குகளை துவக்கினார். தரையில் வட்டவடிவத்தில் புனிதமான கோலம் இடப்பட்டு, நிறைய தீபங்கள்  ஏற்றப்பட்டன.

முதலில் நான் சிறிது பயந்தேன். குஞ்சாத்தாளும் , நீலியும் என் பின்னால் வந்து நின்று கொண்ட போது நான் நிம்மதியடைந்தேன். பிறகு முத்தச்சி தனது வயதான தேகத்தை சுமந்து கொண்டு வந்தாள். அவள் எனக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தவுடன், மிச்சமிருந்த பயமும் காணாமல் போனது.

அந்த மந்திரவாதி கஞ்சிரா மரத்தில் ஆணிகளை அடித்தான்.

நான் மெல்லத் திரும்பி குஞ்சாத்தாளை இரகசியமாகப் பார்தேன். அவள் கடுங்கோபத்திலிருந்தாள். ஆனால் நீலி அவளைப் பார்த்து கண்ணை சிமிட்டிவிட்டு இளித்தாள். பிறகு அந்த மரத்தை தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

ஓ என்ன சூடு! எவ்வளவு புகை! நான் பின்னால் விழுந்தேன். குஞ்ச்சாத்தாள் என்னைப் பிடித்துக் கொண்டாள். பிறகு நான் உடனடியாக ஆழ்ந்த உறக்கத்திற்குப்  போய்விட்டேன்.

”கெட்ட ஆவிகள் எல்லாம் போய்விட்டன. ஒழிந்தது. இனி இங்கே எந்தவிதத்திலும் தொல்லை இருக்காது” இதை மந்திரவாதி சொன்ன போது நான் குஞ்சாத்தாள் மடிமீது தலைவைத்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தேன்.

நான் சிரித்தேன்.(எனக்கு சிரிப்பு வந்தது) குஞ்சாத்தாள் என் காதுகளில் கிசுகிசுத்தாள், “தூங்கு ஜானகிக்குட்டி, தூங்கு” அவளிடமிருந்து புது வாசமும், சந்தனத்தின் நறுமணமும் வீசியது.

அடுத்த நாள் சரோஜினி ஏடத்தியின் அச்சன், வல்லியச்சன் வந்தார். என் அச்சன் வரவில்லை. “ம். இரண்டு மாதம்தான் லீவு. அதுக்குள்ளாகவே சரோஜினி குட்டியின் கல்யாணத்தை முடிச்சாகணும். நல்ல வேளை, மாப்பிள்ளை கிடைச்சாச்சு” என்று பெருமூச்செறிந்தார். அது யாரோ சங்கர நாராயணன் என்று ஒருத்தர். அவர் வல்லியச்சனோடு வேலை செய்கிறவர்.

அன்று மாலை குஞ்சாத்தாளும் நீலியும் ஓசையின்றி வீட்டிற்குள் ஊர்ந்து வந்தனர். மந்திரவாதியின் சடங்கினால் அவர்களிருவரும் கிராமத்தைவிட்டே சென்று விட்டதாக நம்பிக்கொண்டிருந்தனர் எல்லோரும்.

முத்தச்சி குஞ்சாத்தாளிடம், “ஜானகிகுட்டியின் கல்யாணத்தையும் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிட்டுமோ?” என்று கேட்டாள். குஞ்சாத்தாள் ஏதோ நினைவில் மூழ்கியிருப்பதாத் தெரிந்தது.

இது இன்னொரு கதை. நானும் ஏடத்தியும் குளிப்பதற்காக சென்ற போது, மீன் பிடித்துக் கொண்டு இருப்பானே, அந்த பாஸ்கரன், சரோஜினி ஏடத்தியிடம் கத்திக் கொண்டிருந்தான். சரோஜினி ஏடத்தியின் கண்களில் நீர் நிரம்பியிருந்தன. அவர்கள், எங்களைப் பார்த்தவுடன் தலையை குனிந்து கொண்டே நகர்ந்து சென்றுவிட்டார்கள்.

திருமணம், பகவதி கோயிலில் நடக்கும். விருந்து வீட்டில். நானும் , குஞ்சாத்தாள், நீலியும் ஒரே நிறத்தில் ஒரேவிதமாக பாவாடையும், சட்டையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் எத்தனை ஆசையாக இருந்தேன்! வல்லியச்சன் வந்த பிறகு பரபரப்பு ஆரம்பமாகியது. மனிதர்கள் வந்து போய் கொண்டிருந்தார்கள். நிச்சயதார்தத்திற்கே நாற்பது பேர் வந்து விட்டார்கள். முத்தச்சிக்கு, இடிச்சு பிழிஞ்ச பாயாசமும்- நிறைய வெல்லம் போட்டு,தேங்காய் பாலில் செய்த தின்பண்டமும் அரிசிக் கஞ்சியும் கொடுத்தார்கள். நான்தான் அதை எடுத்துக் கொண்டு போய் கொடுத்ததாக்கும்!

முத்தச்சி எழுந்து, உடைமாற்றிக் கொள்ள விரும்பினாள். “இருட்டினால் கூட பரவாயில்லை நான் கோயிலுக்கு வந்து கல்யாணத்தைப் பார்க்க வேண்டும்” என்றாள்.

“ஒண்ணும்  தேவையில்லை,” என்றாள் அம்மா மரியாதையில்லாமல். “உங்களை ரெண்டு ஆள் பிடிச்சுக்கணும். கோயிலுக்கு இவங்க போய் சேர்வதற்குள் சரோஜினியே வந்து நமஸ்காரம் பண்ணிவிடுவாள். அரிசி அட்சதைப் போட்டு ஆசிர்வாதம் மட்டும் பண்ணினால் போதுமாக்கும்.”

அன்றைக்கு முத்தச்சி பாத்ரூம் போகும் வழியில் விழுந்துவிட்டாள்.

ஓ! ஈயாளூ மலையேறி பகவதிக்கோயிலுக்கு வரணம்னு இஷ்டப்பட்டது” அவர்கள் பெருமூச்சு விட்டனர். “இது நமக்குத் தேவையா?” என்று வல்லியம்மா வல்லியச்சனிடம் முணு முணுத்துக் கொண்டேயிருக்க அவர்கள் முத்தச்சியை தூக்கி அவளது கட்டிலில் கிடத்தினர்.

“இந்த வயசில விழறது அப்புறம் எழுந்திருக்கவே விடாது” இதை யார் சொல்லியிருப்பார்கள்? எல்லாம் தெரிஞ்ச ராவுன்னி நாயரைத் தவிர வேறு யார்?

அன்று இரவு முத்தச்சிக்கு கடுமையான ஜுரமும், வாந்தியும் வந்தது. பண்டிஞ்சரங்கடியிலிருந்து மருத்துவர் வரவழைக்கப் பட்டார். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு வைத்திருக்கும் வைத்தியர்.

முத்தச்சி அமைதியின்றி இருந்தாள்.

நான் அவள் அறைக்குள் சத்தமின்றி நுழைந்தேன்.

“ஒன்றும் இல்லை. கவலைப்படாதே” என்றாள் என்னிடம். யாரும் இல்லாத சமயத்தில் என் தோழிகள் குஞ்சாத்தாளும் நீலியும் கூட முத்தச்சியைப் பார்க்க வந்தனர்.

வல்லியச்சன் தோட்டத்தில் மேலும் கீழும் உலாத்திக் கொண்டே சபித்தபடி, பிரசங்கம் செய்துக் கொண்டிருந்தார்.

“இந்த துரதிருஷ்ட பொம்பளை! எல்லாவற்றையும் வித்து தீர்த்துட்டு, சொந்த பிள்ளைகளையும் துரத்திட்டு, சுடுகாட்டில் ஒரு காலை வைத்துக் கொண்டு, எல்லா இடத்திலேயும் அடைக்கலம் தேடிக்கிட்டு வந்திருக்கு”

“இது மஹோத்திரமாம்,” ராவுன்னி நாயர் சொன்னார்.

”டாக்டர் இவளை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடச் சொன்னார்.”

ஆ! ஆஸ்பத்திரியா! சாதாரண சளி என்றால் கூட இந்த டாக்டர்கள் “ஆஸ்பத்திரியில் சேரு” என்று சொல்லிவிடுவார்கள். கமிஷன் கிடைக்கும் போல. ஒவ்வொரு முறையும் வல்லியம்மா “ ஐயோ கடவுளே! இந்தக் கிழவி இப்போ செத்துட்டா என்னாகிறது?” என புலம்பினாள்.

“அது சரி. அது நல்ல விடுதலை. இவள் நம்முடைய சொந்த முத்தச்சி இல்லையே.”

ராவுன்னி நாயர்,” உனக்கு பிடிக்கிறதோ இல்லையோ அவள் இந்த தரவாடுவின் மூத்தவள். நம்ம சொந்த முத்தச்சியாக இல்லாவிட்டால் என்ன? அவள் இறந்தால் துக்கம் அனுஷ்ட்டிக்க வேண்டும்” என்று வல்லியச்சனிடம் கூறினார். பாம்பேயிலேயே வாழ்ந்து விட்டதால் வல்லியச்சனுக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியவில்லை.

இதற்கெல்லாம் நடுவில், வல்லியம்மாவும், வல்லியச்சனும் திருச்சூருக்கு சென்று கல்யாணத்திற்காக துணிமணிகள் , பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்களும் வாங்கிவந்தனர். திருச்சூர் ஜனங்களுக்குதான் நாகரீகம் தெரியும். ஏடத்தி புது நகைகளை போட்டுக் கொண்டு வாங்கிவந்த பொருளெல்லாம் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் அறையில் கண்ணாடி முன் நின்று கொண்டு தன்னை அழகுப் படுத்திக்கொண்டிருந்தாள்.

குஞ்சாத்தாளும், நீலியும் வரவேண்டுமென்று நான் பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தேன்.  அன்று இரவு, நான் எல்லாப் பொருட்களின் அழகையும் புகழ்ந்து கொண்டிருந்த பொழுது அவர்கள் வந்தனர். குஞ்சாத்தாள்  ஒரு யக்‌ஷி என்பதால் அவள் ஈர்க்கப்படவில்லை. அவளுக்கு வேண்டுமென்றால் எல்லாவிதமான அழகிய நகைகளையும் மாயஜாலம் மூலம் காற்றிலிருந்தே பெறமுடியும்.

அப்புறம் நீலியைப் பொறுத்தவரை அவளுக்கு தங்கத்தில் விருப்பமே இல்லை. அவள் நடக்கும்போது சலசலக்கும் கற்கள் பதித்த நெக்லஸ் அணிந்திருப்பதே அவளுக்கு சந்தோஷம். இது மட்டும்தான் போட்டுக் கொள்ள எங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்று நீலி ஒரு முறை கூறியிருக்கிறாள். “யார் அப்படிச் சொன்னது?” என்றால் “அதுதான் சட்டம்” என்றாள் மொட்டையாக.

டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால் முத்தச்சி அவற்றில் எதையும் சாப்பிடவில்லை. ஏட்டன்தான் இதை கண்டுபிடித்தது. பிறகு குஞ்சன் வைத்தியர் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டார்.

கல்யாணத்திற்கு வந்த விருந்தாளிகள் எல்லோரும் முத்தச்சியின் அறை வாசலில் நின்று கொண்டு, எட்டிப் பார்த்தனர்.

பட்டம்பியிலிருந்து வரும் ஒரு அம்மாவும், பெண்ணும் முத்தச்சியிடம், “ஏன் இவங்களுக்கு இவ்வளவு தொல்லை கொடுக்கிறீங்க? உங்களை அழைச்சுக்க சொல்லி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்தக் குழந்தைகள் அவர்களால் முடிந்தவரை உங்களை நல்லாத்தானே பார்த்து கொள்கிறார்கள்” என்றனர். அவர்கள் வெளியே வந்தபோது நான் கதவருகே நின்று கொண்டிருந்தேன். அந்த அம்மாள் என்னை உற்றுப் பார்த்தாள். ”இது குஞ்சுக்குட்டி அம்மாளின் இரண்டாவது பெண்ணில்லையா?”

அவர்களுடனிருந்த பெண் “ம்ம்” என்றாள்.

“இப்பொழுது எப்படி இருக்கிறாள்?”

“இப்போ பரவாயில்லை என்று சொல்கிறார்கள்”

நான் கையில் புடைத்துக் கொண்டிருந்த அரிசியுடன் முத்தச்சியின் கட்டிலருகே சென்று உட்கார்ந்து கொண்டேன். கல்யாணத்திற்கு எக்கச்சக்க வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் எனக்கு நிறைய பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. மாடி அறையிலுள்ள விளக்குகளையெல்லாம் சுத்தப்படுத்த வேண்டும். அரிசி, பருப்பு எல்ல்லாவற்றையும் சுத்தப்படுத்த வேண்டும். ஒரு நாள் நான் இதை செய்து கொண்டிருந்தபோது குஞ்சாத்தாளும், நீலியும் வீட்டிற்குள் வந்தனர். நான் அவர்களுடன் பேசவில்லை. எப்படி பேசுவது? நான் செய்வதற்கு இத்தனை வேலைகள் இருக்கும்போது. கல்யாணத்திற்கு பிறகு சரோஜினி ஏடத்தி பாம்பேயில் இருக்க வேண்டியிருப்பதால் என்னுடய அக்கா அவளுக்கு ஆரம்ப ஹிந்தி சொல்லிக் கொடுக்கிறாள். அவள் கற்றுக் கொண்டதையெல்லாம் என் மீதுதான் பிரயோகித்துப் பார்ப்பாள்.

“ஜாட்டி பாஹர் ஜாவவோ!”

“ஜாட்டி இதர் ஆவோ!”

நான் அதை அப்படியே குஞ்சாத்தாளிடமும் நீலியிடமும் பிரயோகிப்பேன். என்ன வேடிக்கை!

“குஞ்சாத்தாள் இதர் ஆவோ!”

”நீலி இதர் ஆவோ!”

இது போன்று செய்துகொண்டிருந்த போது ஒருநாள் யாரோ திடீரென்று கூப்பிட்டார்கள். நான் திரும்பினேன். ஏட்டன் நின்று கொண்டிருந்தான். “எடி! இந்த பைத்தியக்காரத்தனத்தையெல்லாம் திரும்பவும் செய்தாயானால் பார், உன்னை அடித்து நொறுக்கிவிடுவேன்.”

“என்ன ஆச்சு?” என்று அம்மா ஓடி வந்தாள். என்னைப் பார்த்தவுடன் “ஏதோ இந்த வீட்டில் வசதி இருக்குன்னு யாராவது நினைத்தால் கூட அதை ஒழிக்கறதுக்குன்னே வந்திருக்கு இந்த சனியன் பிடித்த பெண், போ உள்ளே” என்று முணுமுணுக்க ஆரம்பித்தாள். “ கண்ட வேளையில் வெளியில் அலையாதே.”

”கவலைப்படாதே” என்று குஞ்சாத்தாளுக்கு இரகசியமாக சைகை செய்து விட்டு உள்ளே சென்றேன்.

அன்று இரவு அச்சன் வரவேண்டியது. ஆனால் வரவில்லை. அது சிறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பொழுதுதான் அவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அவருக்கு குறைவான விடுமுறைதான் இருக்கிறதாம். எனவே கல்யாணத்தன்று வந்துவிட்டு அன்றே திரும்பிச் சென்றுவிடுவாராம். பூகம்பம்!

விருந்தாளிகள் நிரம்பி வழியத் தொடங்கினர். அவர்கள் வரவேற்கப்பட்டனர். நகை, புடவை மற்றும் சரிகை நெய்த ஆடைகளும் காண்பிக்கப்பட்டன. நீண்ட கதைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

முத்தச்சியோ, நானோ சாப்பிட்டோமா என்று பார்க்க யாருக்கு நேரமிருந்தது? கடுங்கோபத்தில் எனக்கு பைத்தியம் பிடித்திருந்தது. அன்று இரவு குஞ்சாத்தாள் தனது வழக்கமான உலாத்தலுக்கு வந்த போது, வீட்டின் தெற்கு பகுதியின் மர ஜன்னலினூடாக பார்த்தாள். நான், “உனது தம்ஷ்த்ரா எங்கே? இந்த உருப்படாதவர்களின் இரத்ததை உறிஞ்சினால் தேவலை!” என்றேன்.

”உண்மையாகவா? நிஜமாகவா நீ அப்படி விரும்புகிறாய்?” என்றாள் குஞ்சாத்தாள். “கொன்றுவிடாதே” என்றேன். “சும்மா அவர்களை பயமுறுத்து.” அவள் தலைமுடியை சிலுப்பியதிலிருந்து எனது கோரிக்கையை தீவிரமாக யோசனை செய்வது போலிருந்தது. அவள் யக்‌ஷியாக மாறி தூங்குபவர்களை பார்த்தாள். சிரித்தாள். அவர்கள் எல்லோரும் புதியவர்கள். ஜாதி ஜனங்கள் கல்யாணத்திற்கு முழுதாக மூன்று நாள் முன்னமையே வந்து விடுவார்கள்.

வல்லியச்சன் வந்த பிறகு, சரோஜினி ஏடத்தி அம்மாவின் அறையில்தான் தூங்குகிறாள். என்னுடைய படுக்கை வெளியே மாற்றப்பட்டது. என் மேல் அக்கறை உள்ளது போல். அவள் தன் ஹிந்தியை அம்மாவுடன் பழகிக் கொள்ளட்டும். நான் விரும்பினால் ம்….உம்….வேண்டாம் அதைச் செய்ய மாட்டேன்.

அன்று இரவு, ஓர் ஓசை என்னை எழுப்பியது. ஜனங்கள் எல்லா இடத்திலும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நிஜமான பூகம்பம்!

“சீக்கிரம்! அவளுடைய மூச்சை சீராக்கும் அந்த மாத்திரையை எடுத்து வா” யாரோ ஆனையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

“கல்யாணத்திற்கு முன் எதுவும் நடக்கக்கூடாது” – இது வல்லியம்மாவின் பிரார்த்தனை.

முத்தச்சியின் நிலை மீண்டும் கவலைக்கிடமாகியது. அந்த சத்தத்திற்கும், குழப்பத்திற்கும் நடுவேயும் சிலர் கட்டை போல தூங்கிக் கொண்டிருந்தனர்.

நான் எழுந்து முத்தச்சியின் அறைக்குச் சென்றேன். நான் அறையை அடைந்த போது அம்மா என்னைப் பார்த்தாள். “வெளியே போ. போய் விடு. யார் உன்னை இங்கு வரச்சொன்னது” என்று அலறினாள்.

அடுத்தநாள் தோட்டத்தில் பந்தல் போடப்பட்டது. சமையலறைக்குப் பின் பக்கமாக நீளமான குறுகலான ஷெட் சமையல்காரர்களுக்காக கட்டப்பட்டது. கோயில் ஸ்டோர் ரூமிலிருந்து பெரிய பாத்திரங்களும், கரண்டிகளும் வந்திறங்கின. வல்லியம்மா, தையல்காரரிடமிருந்து எனது புதிய பாவாடையையும், ரவிக்கையையும் வாங்கி வந்தாள். நான் விரும்பிய நிறம் இல்லை. ஆனால் துணி நன்றாக இருந்தது, பட்டு!

“இதையெல்லாம் உனக்காக  வாங்கியிருக்கிறோம். ஏன் தெரியுமா? நீ நல்ல பெண்ணாக நடந்துக்கணும். அதுக்காகத்தான். உன்னைப் பற்றி மற்றவர்கள் கதை பேசும்படி வைத்துக் கொள்ளாதே. புரிகிறதா? வல்லியம்மா என் தலை முடியைக் கோதிவிட்டாள்.

இப்பொழுதிலிருந்து ஒரு வார்த்தைக் கூட பேசப்போவதில்லை. அது நிச்சயம்.

ஆனால் நான் இல்லாமல் குஞ்சாத்தாளும், நீலியும் புதிதாக என்ன விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் இந்தப் பக்கம் கண்ணில் படவேயில்லை. பின் என்ன, இந்த அடித்தல் பிடித்தலையும், குழப்பத்தையும் பார்க்கும் போது யாருக்குதான் இங்கு வரப்பிடிக்கும்?

முத்தச்சியின் அறை மூத்திர நாற்றம் அடித்தது. முத்தச்சி மூச்சுவிடும் போது ஒரு விசித்திர சப்தம் வந்தது. என்னைப்பார்த்தால் தலையை அசைத்து சைகை செய்வாள். நான் அருகில் சென்று நிற்பேன். வல்லியச்சனும், ராவுன்னி நாயரும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பந்தல் அலங்கார வேலை முடிந்தவுடன், இரண்டு லவுட் ஸ்பீக்கர்கள் கட்டப்பட்டு, ரெகார்டு போட ஆரம்பித்தனர். ஒரு லவுட் ஸ்பீக்கர் வயலை நோக்கியும் மற்றது மலைப்பக்கமாகவும் இருந்தன. என் யக்‌ஷியும் பாட்டு கேட்கட்டும். மாப்பிள்ளை வீட்டார் இரண்டு பஸ்களிலும், மூன்று கார்களிலும் வரவேண்டியிருந்தது. ஏட்டன் அவர்களை வரவேற்க வேண்டும். அவர்களை நேராக கோயிலுக்கு அழைத்துப் போக வேண்டும். நாதஸ்வரம் வாசிப்பவர்கள் ஆல மரத்தடியில் காத்திருப்பார்கள்.

சமையல்காரர்களிடம் ராவுன்னி நாயர், “அவர்கள் ஒன்பது முப்பதுக்கெல்லாம் இங்கே திரும்பிவிடுவார்கள். பத்து மணிக்கு முதல் பந்திக்கு இலை போடணும். நீங்கள் தயாராக இருப்பீர்களா?”

இரவு சமையல்காரர்களின் நடவடிகைகளை எதிரொலித்தது. உள்ளே படுக்கக் கூட இடமில்லாமல் இருந்தது. 

முத்தச்சி கல்யாணத்திற்கு வருவது போல் தெரியவில்லை.

“கிளம்புமுன் அவள் காலைத்தொட்டுக் கும்பிடு- என்ன இருந்தாலும் முத்தச்சியின் இடத்தில் அவள்தான் இருக்கிறாள். புது முண்டு ஒன்றையும் அவள் காலடியில் வை. அதானால் எந்த பிரயோஜனமும் இல்லை, இருந்தாலும்………….” அம்மா, சரோஜினி ஏடத்திக்கு புத்திமதி கூறினாள். மேலும் ராவுன்னி நாயர், “ஆம், புதுத்துணிகள் சீக்கிரமே துக்கத்திற்கு பயன்படும்” என்றார் ஏளனமான உள்சிரிப்புடன்.

நான் சீக்கிரமாகவே எழுந்து, குளித்துவிட்டு, புதுப் பாவாடையும், சட்டையும் போட்டுக் கொண்டு, குஞ்சாத்தாளிடம் காட்ட வேண்டும் என திட்டமிட்டேன். ஆனால் நான் எழுந்தபோது, ராவுன்னி நாயர் அம்மாவிடம் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தார், “அவள் எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டாள், குஞ்சுக்குட்டி அம்மா.”

அநேகமாக எல்லொரும் முத்தச்சியின் அறையில் இருந்தனர். வல்லியச்சனும் ஓடி வந்தார்.

“எல்லாம் முடிந்துவிட்டது” “ எல்லாம்  முடிந்துவிட்டது.”

“மூச்சு விடாதீர்கள்! விருந்து முடிந்து மாப்பிள்ளை வீட்டார் கிளம்பும்வரை நம்மை தவிர ஒருத்தருக்கும் தெரியக்கூடாது. புரிந்ததா? “அவர் நிமிர்ந்தபோது என்னைப் பார்த்துவிட்டார். நான் கதவருகே நின்றிருந்தேன். வல்லியச்சன் கோபமடைந்தது தெரிந்தது.

வல்லியம்மா என்னை அவளிடம் கூப்பிட்டாள். “ஜாட்டி, இங்கே வா. நான் உன்னிடம் ஒன்று சொல்கிறேன். முத்தச்சி உடம்பு மிக மோசமாகிவிட்டது. நீ அவள் அறைக்கு போகவேக்கூடாது. போ குளித்துவிட்டு ரெடியாகு. அச்சன் இப்போது எந்த நேரத்திலும் வந்துவிடுவார். உம். போ.”

“கடவுளே! நல்லவேளை, குழந்தைக்கு எதுவும் தெரியவில்லை.”

“ராவுன்னி! ஜாக்கிரதை. ஒரு அங்குலம் கூட நகராதே. யாருக்காவது தெரிந்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்தவேண்டும் என்று சொல்வதற்கு நிறைய வெட்டியாட்கள் இருக்கிறார்கள். அப்புறம் சாஸ்திரத்தை சொல்வார்கள். உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்.”

நான் உடையணிந்து கொண்டேன். ஏடத்தி எனது தலையை அழகான நீல ரிப்பன் வைத்துப் பின்னிவிட்டாள்.

நள்ளிரவிலிருந்தே சரோஜினி ஏடத்தியின் அலங்காரம் ஆரம்பித்துவிட்டது. அவள் கூந்தலை சிங்காரிக்கவே நான்கு பேர் தேவையாயிருந்தது. அவள் என்றுமே அழகாக இருந்ததில்லை. அனால் இப்போது கனமான புடவையும், மின்னும் ஆபரண்ங்களின் அலங்காரத்தில் இன்னும் மோசமாக இருந்தாள்.

“எதற்கு இன்னும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் கிளம்புங்கள் பெண்களா சீக்கிரம்!”

பெண்கள் கிளம்ப ஆரம்பித்தனர்.

“சரோஜினி ஏடத்தி, நீ முத்தச்சிக்கு நமஸ்காரம் செய்யவில்லையா? “ என்று கேட்டேன்.

“குட்டி! வாயை மூடிக்கொண்டு போ!” அம்மாவிற்கு அப்பா கல்யாணத்திற்கு வராத கோபமெல்லாம் என் மீது திரும்பிவிட்டது.

யாரும் முத்தச்சியின் அறை அருகே நிற்ககூட இல்லை. நான் வராண்டாவில் தயங்கி நின்றேன். “எடி என்ன அங்கேயே எதுக்கு வட்டம் போட்டுகிட்டு இருக்க? சீக்கிரம் வா” வல்லியம்மா என்னைத் திட்டினாள்.

நான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சமையலறைப் பக்கமாகச் சென்றேன். நான் பின்பக்கமாக வெளியே வந்து பரம்பிற்கு ஓடினேன். என் புதுப் பாவாடையின் சரசரப்பு சங்கீதம் போலிருந்தது. அவுட் ஹவுஸ் அருகே குஞ்சாத்தாள் தலைசீவிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். “சரோஜினி ஏடத்தி என்ன செய்தாள் தெரியுமா?” என்று வெடித்தேன். “ அவள் முத்தச்சிக்கு நமஸ்காரம் பண்ணாமலேயே கோயிலுக்கு சென்று விட்டாள்.”

குஞ்சாத்தாள் எதுவும் கூறவில்லை. எனக்கு கோபம் வந்தது.

“உன்னை பெரிய மனுஷி என்று கூறிக்கொள்கிறாயே? என்ன பிரயோஜனம்? உன்னால் முத்தச்சிக்கு உதவ முடியாதா? அவள் கல்யாணத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.”

குஞ்சாத்தாள் சிரித்தாள்.

“நீ சொன்னாய், பலாமரத்தின் உச்சி வரை உன்னால் பறக்க முடியும் என்று. அதுகூட புளுகுதானா?”

குஞ்சாத்தாள் என்னைப்பார்த்தாள்.

“உம். நானும் கல்யாணத்திற்கு வருகிறேன். நீ முத்தச்சியை அழைத்து வா. நானும் நீலியும் வாசல் அருகே காத்திருக்கிறோம்.”

அவள் விளையாடுகிறாளா என்று நிச்சயமாக எனக்கு புரியவில்லை. நான் தயங்கினேன். குஞ்சாத்தாள் , “நான் சொல்கிறேன். முத்தச்சி வருவாள். நீ அவளை கூப்பிடு.”

நான் வீட்டிற்கு திரும்பி ஓடினேன். நான் முத்தச்சி அறைக்குள் நுழைந்து கொண்டிருந்த போது, ராவுன்னி நாயர், “குட்டி ஏன் இங்கே இருக்கு?” என்று கேட்டார்.

”முத்தச்சி……………”

”நீ உள்ளே போகக்கூடாது. நீ இப்போது கோயிலில் இருக்கவேண்டும்”

“முத்தச்சியும் வரவேண்டும்.”

“முத்தச்சி இறந்துவிட்டாள், குட்டி. விருந்து வரை நாம் யாரிடமும் சொல்லப் போவதில்லை. குட்டியும் இதை தம்பட்டம் அடிக்ககூடாது. உள்ளே போகாதே. நீ பயந்துவிடுவாய்…….”

நான் அவர் சொன்னதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. கதவின் மீது சாய்ந்துக் கொண்டேன். அது கொஞ்சம் திறந்தது. அவர் கோபமாக என்னைப் பார்த்தார்.

“போ……போ!! உள்ளே போ! எனக்கு என்ன வந்தது?” என்றார்.

நான் உள்ளே சென்றேன்.

முத்தச்சி அசையாதிருந்தாள். கழுத்துவரை அவள் தன்னைப் போர்த்தியிருந்தாள். அவள் கோபமாக இருப்பாள். அதனால்தான் இறந்ததுபோல் பாசாங்கு செய்கிறாள். சில சமயம் அம்மாவோ, வல்லியம்மாவோ சண்டைப் போட்டால், சாப்பாட்டை தொடாமல் இப்படித்தான் பொய் சொல்லுவாள். முத்தச்சி இது போன்ற தந்திரங்களைக் கைவசம் வைத்திருக்கிறாள்.

முத்தச்சி கல்யாணத்தைப் பார்க்காமல் சாகக்கூடாது. நான் அதை அனுமதிக்க மாட்டேன்.

“முத்தச்சி வரவில்லையா? நான்தான்……..”

கதவருகே நின்றுகொண்டு ராவுன்னி நாயர் கேலியாக இளித்தார்.

முத்தச்சி கண்களைத் திறந்தாள். நான் எதிர்பார்த்தபடியே.

“முகூர்த்ததிற்கு நேரமாகிவிட்டது. வா போகலாம். நாம் ஓடவேண்டும்.”

முத்தச்சி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள்.

“நீ உனது முண்டை மாற்றிக்கொள்ள விரும்புகிறாயா?”

முத்தச்சி முண்டை அவிழ்த்து கசங்கல் போக நீவிவிட்டு மீண்டும் அணிந்து கொண்டாள். அவள் தலையைச் சுற்றி லூசாக துணியைக் கட்டிக்கொண்டாள். சட்டென்ற ஒரு அசைவில் கட்டிலைவிட்டு இறங்கி என் கையைப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். இன்னமும் கிண்டலான தோரணையுடன் இருந்த ராவுன்னி நாயரை வெற்றிகரமாகப் பார்த்துக் கொண்டே, நானும் முத்தச்சியும் வெளியேறினோம். குஞ்சாத்தாளும் , நீலியும் வாசலுருகே இருந்தனர். கையோடு கை கோர்த்துக்கொண்டு நாங்கள்  நால்வரும் ஓடினோம். முத்தச்சி எங்களை விட வேகமாக சென்றாள். நங்கள் தெருவைக் கடந்து ஆலமரத்தடியை அடைந்தபோது நாதஸ்வரத்தைக் கேடக முடிந்தது.

கோயிலின் வெளிக்கொல்லை வழியாகச் சென்றோம். கூட்டம் நெரித்துத் தள்ளியது. யாரும் எங்களை கவனிக்கவில்லை. சரியான நேரத்திற்கு  வந்துவிட்டோம். மாப்பிள்ளையும், பெண்ணும் மாலையிடத் தயாராக இருந்தனர்.

எல்லா மூத்த உறவுக்காரர்களும், நண்பர்களும் மணமக்கள் மீது அரிசி அட்சதையிட கலயாணம் முழுவதும் முத்தச்சி ஒரு முகமலர்ச்சியுடன் உட்கார்ந்திருந்தாள். சடங்கு முடிந்தபோது எல்லா மூத்த உறவினர்களும்,நண்பர்களும் மணமக்கள் மீது அரிசி அட்சதையிட முன்னோக்கி வந்தனர். முத்தச்சி என்னைப் பார்த்தாள். நான் ஒரு கைப்பிடி அளவு அட்சதையை அள்ளி அவளிடம் கொடுத்தேன்.

“உனக்கும் கொஞ்சம் வேண்டுமா?” குஞ்சாத்தாளிடம் கேட்டேன்.

குஞ்சாத்தாள் மணமகனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளது கண்கள் அணலை உமிழ்ந்தன. தம்ஷ்த்ரா மெல்ல நீண்டு வளர்ந்தது. இன்னும் நீளமாக.

மணமகன், சரோஜினி ஏடத்தியுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்த போது, குஞ்சாத்தாள், அவனை நோக்கித் தாவியதை நான் கவனித்து விட்டேன். நான் பெரிய அலறலுடன் வீறிட்டேன். அதன்பிறகு என்னவாயிற்று என்று எனக்குத் தெரியாது. சரோஜினி ஏடத்தியை அவளது கணவனான புதிய ஏட்டனுடன் பார்த்தப்பொழுதுதான் நான் நிம்மதியடைந்தேன். அப்படி என்றால் குஞ்சாத்தாள் எந்தக்கெடுதலும் செய்யவில்லை. எனக்கு சரியானதும் வீட்டிற்கு வரச்சொல்லி அழைத்தார்கள். “உனக்கு உடம்பு சரியில்லை என்றால் ஏன் கோயிலுக்கு இப்படி ஓடி வந்தாய் தனியாக?”

“தனியாக இல்லை. முத்தச்சியும் என்னுடன் வந்தாள்.”

“பகவானே, பகவானே! “ அம்மா ஜபிக்க ஆரம்பித்தாள்.

“ராவுன்னி நாயரைக் கேள். அவர் எங்களைப் பார்த்தார்”

”என் குட்டிக்கு ஒரு பிரமை முடிந்தால் இன்னொன்று வருகிறது!” அம்மா கவலைப் பட்டாள். இது அவர்கள் வழக்கமாகி விட்டது. அவர்கள் எப்பொழுதும் தானாக எதையாவது கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்று காட்டுவதற்காக, எப்படி முத்தச்சி அட்சதை இடுவதற்கு கோயிலுக்கு வந்தாள் என்பதை விளக்கமாக விவரித்தேன். அவர்கள் செய்ததெல்லாம், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதும், கிசுகிசுத்துக் கொண்டதும்தான்.

சரோஜினி ஏடத்தியும் அவளது கணவன் குடும்பமும் கிளம்பிய பிறகு, முத்தச்சி இறந்துவிட்டதாக எல்லோருக்கும் அறிவித்தார்கள்.

“இப்பொழுது அவள் இறந்துவிட்டால் என்ன, கல்யாணத்தைத்தான் பார்த்துவிட்டாளே” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்ய வந்த வேலைக்காரப் பெண்கள், “கல்யாணம் முடிகிறவரையில் இவள் சாகவில்லை என்றால் அதற்குக் காரணம், இந்த சூனியக்கிழவி இந்தக் குடும்பத்தை அந்த அளவுக்கு விரும்பியிருகிறாள் என்று அர்த்தம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராவுன்னி நாயர் முத்தச்சியின் அறையை விட்டு அலறிக் கொண்டே வெளியே வந்தார்.

நான் படுத்திருந்த  இடத்திலிருந்தே அந்த அலறலைக் கேட்கமுடிந்தது.

”நான்தான் அவளுக்கு குளிப்பாட்டும் சடங்கைச் செய்தவன். கடவுளே! இப்பொழுது என்ன இருக்கு தெரியுமா? அவள் கைகளில் அரிசியும் பூவும் இருக்கு!”

“அப்போ! நான் அப்படி சொன்ன போது யாரும் என்னை நம்பவில்லை.”

“முத்தச்சியின் ஆவி குட்டி மீது இறங்கிவிட்டது. கேட்டீர்களா அவள் பேசியதை?”

“யாரும் யாரையும் பிடித்துக் கொள்ளவும் இல்லை. யார்மீதும் இறங்கவில்லை. நாங்கள் நாலுபேரும் கோயிலுக்குப் போனோம். அதுதான் உண்மை.”

”செத்துப் போன பிறகு கூட நம்மை நிம்மதியா விடமாட்டாள்.”

இறுதிச் சடங்குகளை செய்வதற்கு மன்னானை அழைத்து வருவதைப் பற்றி பேசத் தொடங்கினார் ராவுன்னி நாயர். “இதைச் செய்யாவிட்டால் அவளுடைய ஆவி நம்மை எப்பொழுதுமே சுற்றும்.”

நான் கண்களை மூடிப் படுத்திருந்தேன். குஞ்சாத்தாளும், நீலியும் என் அறைக்குள் வந்தனர். அவர்களது வாசனையிலிருந்தே கண்டுபிடித்து விட்டேன். நான் அவர்களுடன் பேசமாட்டேன். நேரம் கெட்ட வேளையில் தம்ஷ்த்ராவினால் எல்லோரையும் பயமுறுத்த வேண்டியது!

“என்கிட்ட வராதே.” என்றேன். “இனி உங்களுடன் விளையாடப் போவதில்லை. வெளியே போங்கள்”

நான் கண்களை மூடிகொண்டிருந்தாலும் அவர்கள் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு செல்வதை என்னால் பார்க்கமுடிந்தது.

உடம்பை மாமரக் கட்டையில் எரிக்க வேண்டும் தெரியுமா? முத்தச்சிக்காக  ஒரு சிறிய ”மாங்கட்டையை எடுத்து வந்தனர் எங்கள் உறவினர்கள். “கல்யாணத்தில் நிறைய விறகுகள் மீந்து விட்டன. அது போதும்.” என்றார்கள். நான் படுத்துக் கொண்டிருந்த இடத்திலிருந்தே முத்தச்சியை தூக்கிச் செல்வதைப் பார்த்தேன். 

முத்தச்சி போகமாட்டாள் அவள் இங்கேயே இருப்பாள். அப்படித்தான் ராவுன்னி நாயர் சொன்னார். நான் எழுந்தேன்.

நான் தோட்டத்தைப் பார்க்கமுடிந்தது. முன் ஹாலின் மர ஜன்னல் வழியாக, முந்திரி மரத்தைத் தாண்டி, ஈமச்சடங்குக்குரிய சிதையை பார்க்க முடிந்தது. நாலைந்து பேர் முத்தச்சியைத் தூக்கி, சிதையில் கிடத்தி மரக்கட்டைகளை அவளுக்கு பக்கவாட்டிலும், அவள் மீதும்  அடுக்கினர். நெருப்பு வைக்கபட்டது.

ஓ! எவ்வளவு உஷ்ணத்தை முத்தச்சி உணர்வாள்! வேண்டாம்…….அய்யோ! வேண்டாம்!

எல்லா இடங்களிலும் புகை. எதையும் காண முடியவில்லை. ஆனால், பாருங்கள்! புகையிலிருந்து யார் வருவது? நான் பார்க்கிறேன்…………ஆம்! அது முத்தச்சியைத் தவிர வேறு யாருமல்ல!

முத்தச்சி இறந்து போகமாட்டாள். இந்த வீட்டைவிட்டுச் செல்ல மாட்டாள். இங்கே இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. முத்தச்சி இன்னும் எனக்கு மூலிகைகளையும், வேரையும் எப்படி சேகரிப்பது அப்புறம் எப்படி அதன் விழுதை, காயங்கள், வெடிப்புகள், வீக்கங்களில் கட்டவேண்டும் என்றெல்லாம் சொல்லித்தர வேண்டும்.

முத்தச்சியைப் போர்த்தியிருந்த வெள்ளைத் துணி சிறகுகளாக மாறியது. முத்தச்சி என்னை நோக்கி பறந்து வந்தாள். நான் தோட்டத்திலிருந்து கண்ணை எடுப்பதற்குள் என் படுக்கை மீது வந்து நின்றாள். எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் முத்தச்சியை இறுக அணைத்துக் கொண்டேன்.

“நீ செத்துப்போன மாதிரி பாசாங்கு செய்து இந்த ஜனங்களையெல்லாம் முட்டாளாக்கி விட்டாய், இல்லையா?” என்று கேட்டேன்.

முத்தச்சி மென்மையாக சிரித்தாள்.

“சேச்சி? சேச்சி உனக்கு முத்தச்சி எங்கே என்று தெரியுமா? சேச்சி நீ நர்ஸ்தானே? அப்புறம் ஏன் நர்ஸூகள் எப்போதும் போடும் வெள்ளைக் கோட்டு நீ போட்டுக் கொள்ளவில்லை?.”

”எல்லோரும் வெளியே போகலாம்” என்றாள் நர்ஸ். கடைசியாய் வந்தவள் மட்டும் போகவில்லை. அவள் எனக்கு நேர்பின்னால் உட்கார்ந்திருந்தாள். ஒரு சின்னப் பெண். அவள் எனது பாவாடையை போட்டிருந்தாள். அவளுடைய தலைமுடி குட்டையாக கிராப் செய்யப் பட்டிருந்தது.

ஆம், அது முத்தச்சி.

சேச்சி விளையாடலாம்.

”சேச்சி! ஏன் ஓடுகிறாய்? ஏன் கத்திக்கொண்டே வெளியே ஓடி எல்லோரையும் கூப்பிடுகிறாய்? இன்னொரு பூகம்பம் வந்துவிட்டதா இங்கேயும்?”

முத்தச்சி ! முத்தச்சி அவள் கூட போய்விட்டாளா?

”இல்லை. முத்தச்சி ஜன்னல் மாடத்தில் உட்கார்ந்திருக்கிறாள். அங்கே எப்படி போனாள்?”

ஆம்! அங்கே அவள் கையைப் பிடித்து முத்தச்சி இறங்க உதவிக்கொண்டிருந்தார்கள். ஆமாம். அது “அவர்கள்தான்”. ஆக அவர்களும் வந்துவிட்டாரகள்.

“முட்டாள் நீயும் உன் துவேஷமும். நாங்கள் எங்கேயும் போகவில்லை” குஞ்சாத்தாள் எனது காதுகளில் கிசுகிசுத்தாள்.

இப்பொழுது என் கொத்தங்கல்லு, வட்டு இன்னும் எல்லா விளையாட்டுகளுக்கும் நாலு பேர் இருக்கிறோம். நானும் முத்தச்சிக்குட்டியும் ஒரு ஜோடி. குஞ்சாத்தாளும் நீலியும் ஒரு ஜோடி. எப்படி பொருத்தமாயிருக்கிறோம் நாங்கள்?

ஆஹா! இதைவிட வேறு என்ன வேண்டும்?


எம்.டி.வாசுதேவன்நாயர்

தமிழில்: நர்மதாகுப்புசாமி

 

Previous articleபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
Next articleச.துரை கவிதைகள்
Avatar
கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். கவிதைகளும் கதைகளும் நூல் விமர்சனங்களும் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. நவீன உலக சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு 'சின்ட்ரல்லா நடனம் ' மற்றும் தஸ்தயேவ்ஸ்கியின் நிரந்தர கணவன் என்கிற மொழிபெயர்ப்பு குறு நாவலும் பாதரசம் பதிப்பக வெளியீடாக  வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.